Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜூலை 2009

“யாதும் ஊரே” நா.வை.சொக்கலிங்கம் மறைந்தார்

“யாரும் ஊரே” மாத இதழின் ஆசிரியர் திரு.நா.வை.சொக்கலிங்கம் அவர்கள் 2.6.2009 அன்று காலை 6 மணியளவில் சென்னை ஸ்டான்லி மருத்தவமனையில் காலமானார். சென்னைத் துறைமுகத்தில் பணியாற்றிய போது அங்கு இலக்கியமன்றம் நிறுவினார்.

பெரியார் கொள்கையாளராகச் செயல்பட்ட நா.வையார் பின்னர் தமிழ்த் தேசியக் கருத்தியலில் ஊன்றி நின்றார். “யாதும் ஊரே” மாத இதழை மிகச் செப்பமாக சிறப்பாக, பயனுள்ள வகையில் தொடர்ந்து நடத்தி வந்தார். அதில் அவர் எழுதிய கட்டுரைகளுக்காகவும் அவர் வெளியிட்ட கருத்துப்படங்களுக்காகவும் பொடாக்காலத்தில் காவல்துறை அவருக்குத் தொல்லை கொடுத்தது. ஆனால் துவண்டு விடாமலும், பின்வாங்காமலும் இதழைத் தொடர்ந்து அதே வீச்சுடன் கொண்டு வந்தார்.

தாம் வாழ்ந்த பம்மல் பேரூரில் ‘திருவள்ளுவர் பொது நல மன்றம்’ நிறுவ அரும்பாடுபட்டார். “யாதும் ஊரே” நா.வை.சொக்கலிங்கம் காலமானார் பம்மல் - நாகல்கேணி தமிழ்ச் சங்கத்தை நிறுவி, கூட்டங்கள் நடத்தினார். த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், தோழர் பாலா ஆகியோர் நாவையார் இல்லம் சென்று இரங்கல் தெரிவித்து அவர் துணைவியாருக்கு ஆறுதல் கூறினர்.

த.தே.தமிழர் கண்ணோட்டம் நாவையார் மறைவுக்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

முனைவர் இரா.திருமுருகனார் காலமானார்

இலக்கணச் சுடர், முனைவர் இரா.திருமுருகன் அவர்கள் நம்மை அதிர்ச்சியிலும் துன்பத்திலும் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டார்.

தில்லி அரசியல் கயவர்கள், நயவஞ்சகர்கள், தமிழகத்துக் குள்ளிருந்தே தமிழை அழித்துவரும் தமிழினப் பகைவர்கள், சொந்த இனத்தையே விற்றுத் தின்று கூட்டு மொத்தமாய்க் குடும்பத்தொப்பை வளர்க்கும் காட்டிக் கொடுப்பான்கள், கீழறுப்பான்கள் ஆகியோரின் சூழ்ச்சித் திறத்தாலும், புரிந்துகொள்ளாப் பழிவாங்குதல் உணர்வாலும் ஈழத்தமிழர்க்கு ஏற்பட்டுள்ள அவலத்தையும், அழிவுக் கொடுமைகளையும் எண்ணி எண்ணிக் கடந்த சில மாதங்களாகவே உள்ளம் நொந்து நொந்து, நெஞ்சாங்குலை நொய்மைப்பட்டு அதனாலேயே துடிப்படங்கிச் சாய்ந்துவிட்டார்.

தமிழ்ப்பகைவர்கள் ஈழத்தை வெறுமைப்படுத்தியது மட்டுமல்லாமல் நம் நெஞ்சங்களையும் வெறுமைப்படுத்தி விட்டனர். செய்வதறியாது தியங்கி நிற்கின்றோம். திருமுருகன் அவர்கள் பன்முக ஆற்றல் பெற்ற பைந்தமிழ் அறிஞராய்க் கலைஞராய் விளங்கினார். தலைசிறந்த இலக்கிய, இலக்கண அறிஞர், ஆய்வாளர், குரலிசை, குழலிசைக் கலைஞர், படைப்பாற்றல் மிக்க பாவன்மையர், வினைத்திறமும், வினையாண்மையும் படைத்தவர், தலைமைப் பண்பு சான்றவர் என இவர்தம் திறங்களை விரித்துக் கொண்டே செல்லலாம்.

தொடக்கப்பள்ளி முதல் மேனிலைப்பள்ளிவரை அனைவரும் பாராட்டும்படி ஆசிரியப் பணிபுரிந்து அனைத்திந்திய நல்லாசிரியர் விருதுபெற்ற இவர் பணி ஓய்வுக்குப்பின் பிற பலர் போல் ஆடி அடங்கிப்போய் விடவில்லை. அதன்பிறகே தொடங்கிற்று இவர்தம் தமிழ்ப்பணிகள் எனலாம்.

திரு ந.மணிமாறன் அவர்கள் கல்வி அமைச்சராய் இருந்த பொழுது, ஆட்சித்தமிழ் செயற்பாடு கருதி அவரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் வளர்ச்சிச் சிறகத்தின் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட திருமுருகன் அவர்கள் தமிழே ஆட்சி மொழி என்ற புதுவை அரசின் சட்டத்தின் பல்வேறு உட்கூறுகள் நடைமுறைக்கு வரப்படாதபாடுபட்டார்.

பின்பு, தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக் குழுவைத் தோற்றுவித்துப் புதுவை மண்ணில், ஆட்சியிலும், கல்வியிலும் தமிழ் உரிய இடம்பெறப் போராடினார், இன்று, பாண்டிச்சேரி என்ற பிழையான பெயர் நீக்கப்பட்டுப் புதுச்சேரி என்ற சரியான பெயர் மீட்கப்பட்டுள்ளது. மிகப் பல ஆண்டுகட்கு முன்பே ‘பாண்டிச்சேரியுடன் புதுச்சேரி போராடுகிறது’ என்ற சிறியதொரு நூலினை எழுதி இவர் தந்த விளக்கங்களே இச்சிக்கலை அனைவரும் புரிந்து கொள்ளவும், புதுவை அரசு இது குறித்துத் தில்லிக்கு வேண்டுகோள் விடுக்கவும் தூண்டுகோள் ஆயின.

புதுவை அரசின் தமிழ்நலம் கருதாப்போக்கினை எதிர்த்துத், தமக்கு அவ்வரசு வழங்கிய “தமிழ்மாமணி” விருதினையும் திருப்பியளித்த கொள்கைக் குன்றம் அவர். புதுவைத் திருமுருகன் அவர்களும் அவர்தம் அன்பராகிய புதுவைத் தமிழன்பர்களும் முன்னெடுத்துச் சென்ற தமிழ் உரிமைப் போராட்டத்தில் ஒரு கைக் கருவியாகத் திழந்ததே தெளிதமிழ் இதழாகும்.

சமய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் தூசென்று தள்ளித்தம் உடலை உடலை மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கியது எவ்வளவு பெரிய அருஞ்செயல்.

மேற்கண்டப் பகுதி 15.6.2009 தெளிதமிழ் ஆசிரியவுரையில் உள்ளது. மேற்படி இரங்கல் செய்தியைத் தனதாகவும் த.தே.தமிழர் கண்ணோட்டம் தெரிவித்துக் கொள்கிறது. திருச்சியில் 12.7.2009 அன்று த.தே.பொ.க. நடத்தும் “தமிழ்த்தேசியம் - சிறப்பு மாநாட்டி”ல் முனைவர் இரா.திருமுருகனார் திருவுருவப்படம் திறக்கப்படுகிறது. ஐயா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.

- ஆசிரியர்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com