Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜூலை 2009

வீழவில்லை விடுதலைப்புலிகள்
ம.செந்தமிழன்

“தமிழின அழிப்பு விடயத்தில் உலகின் கண்டனங்களையும் அரசியல் அழுத்தங்களையும் மகிந்த அரசு ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. வன்னி மீதான ஒரு பெரும் போருக்காக சிங்கள அரசு அனைத்துலகத் தயார்ப்படுத்தல்களையும் செய்து வருகிறது என்பதுதான் உண்மையாகும்.

சிங்கள அரசின் இந்தப் பெரும்போரைத் துணிவுடன் எதிர் கொள்வதைத் தவிர தமிழ் மக்களுக்கு மாற்று வழிகள் ஏதுமில்லை.

“....வரப்போகும் போர்க்காலத்தையும் அதன் நெருக்கடிகளையும் சவாலாக எதிர் கொண்டு போரை வென்று புதிய வரலாறு படைக்கத் தயாராவோம்”.

- தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரப்புர்வ இதழான ‘விடுதலைப்புலிகள்’ இதழில் முகப்புக் கட்டுரையின் இறுதிப் பத்திகள் இவை. எழுதப்பட்டது 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்!

2008 ஆம் ஆண்டின் இறுதிக் காலகட்ட்தில் தொடங்கிய நான்காம் ஈழப்போர் 2009 மே 19 ஆம் நாள்வரை நீடித்தது. இப்போரில் விடுதலைப்புலிகள் ‘ஒழிக்கப்பட்டுவிட்டதாக’ சிங்கள அரசும், இந்திய அரசுத் தலைமையும் தம்பட்டம் அடித்து வருகின்றன. மறுபுறம், ‘விடுதலைப்புலிகள் தோல்வியைத் தழுவியதாகவும் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது’ என்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ‘அடையாளத்துடன்’ சிலர் அறிக்கைகள் வெளியிடுகின்றனர்.

தமிழகத்திலும் ஈழத்திலும் வெளிநாடுகளிலும் இயங்கும் பிழைப்புவாத ஒட்டுக்குழுக்கள், ‘புலிகள் அரசியல் மீது நம்பிக்கையற்ற’ செயல்பாட்டால் தான் அழிந்து போனார்கள்; அவர்கள் அழிவிற்கு அவர்களே காரணம்’ என்று காகிதக் கிறுக்கர்களாக உளறிக் கொண்டிருக்கின்றனர்.

இம்மூன்று தரப்புகளுமே, சிங்கள் இந்திய கூட்டுச் சதிகாரர்களின் மூன்று முகங்கள் என்பதே உண்மை! நான்காம் ஈழப்போர் குறித்த நேர்மையான திறனாய்வை முன் வைத்து அப்போர் குறித்த நான்காவது கோணத்தை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், சிங்களப் பேரினவாதம் கற்றுக் கொண்ட பாடம் ஒன்று உண்டு. ‘தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ அடிப்படையில் வெல்ல இயலாது’ என்பதே அப்பாடம்.

இதே பாடத்தை இந்தியா 1987 முதல் 1989வரை வெகு சிறப்பாக கற்றிருந்தது. சிங்களப் பேரினவாதத் தலைமை 1989 முதல் 2005 வரையிலான பதினாறு ஆண்டுகளும் தொடர்ச்சியான இராணுவப் பின்னடைவுகளை மட்டுமே சந்தித்து வந்தது. இதே காலகட்டத்தில், விடுதலைப்புலிகள் தமிழீழ நிலப்பரப்பின் பெரும்பகுதியைத் தமது ஆளுகைக்குள் கொண்டு வந்து, ஒரு தேசிய அரசையே நடத்தத் தொடங்கிவிட்டார்கள்.

‘தமிழீழ தேசத்தைச் சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை முழக்கத்தைத் தமிழகத்தில் நாம் முன் நிறுத்திப் போராடினோம். புலிகளும் இக்கோரிக்கையை மையமாகக் கொண்டே புலம்பெயர் தமிழர் அரசியலை முன்னேடுத்தனர். இதே பதினாறு ஆண்டு காலத்தில், இந்தியா தனது சதி வலையைத் தமிழீழத்தைச் சுற்றி விரிக்கத் தொடங்கியது. தமிழீழ விடுதலைப் போரை இயக்கும் காரணிகளாக இருந்தவை;

களம் : தமிழீழம் - விடுதலைப்புலிகள்
பின்களம் 1 : தமிழ்நாடு - தமிழ்த் தேசிய கட்சிகள், திராவிடக் கட்சிகள், உதிரி உணர்வாளர்கள்
பின்களம் 2 : புலம் பெயர் நாடுகள் - புலிகள் இயக்கத்தின் பல்வேறு கிளை அமைப்புகள்.

களத்தில் புலிகள் வலுவாக நிற்பதற்கு, பின்களங்கள் இரண்டின் உறுதுணையும் அவசியமாக இருந்தது. இந்தியச் சதிகாரர்கள் களத்தில் கண்ட தோல்வியிலிருந்து படிப்பினை பெற்றவர்கள். ஆகவே, அவர்கள் மீண்டும் களத்தில் மோத விரும்பவில்லை.

பின்களம் 1
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, போலி இடதுசாரிகள் மற்றும் பிழைப்புவாத ஒட்டுக்குழுக்கள் தவிர பிற அனைத்துக் கட்சிகளும் தமிழீழ விடுதலையைக் கோட்பாட்டளவில் ஏற்றுக் கொண்டிருந்தன.

ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, புலிகளை எதிர்க்கும் நிலையை எடுத்த கட்சிகள் கூட, வெளிப்படையாக தமிழீழ விடுதலையை ஆதரிப்பதாகவே காட்டிக் கொண்டன. இதற்கான புறநிலைத் தேவை, தமிழர்களிடமிருந்து வந்தது இதன் காரணம். தமிழ்த் தேசிய அரசியலை முன் வைக்கும் கட்சிகள் எவ்வித சமரசமுமின்றி புலிகள் ஆதரவு நிலையைத் தொடர்ந்து கடைபிடித்தன.

ஈழப் போராட்டத்தின் முதல் பின் களம் என்ற வகையில், தமிழகம் இந்தியச் சதிக் கும்பலின் முதல் இலக்கானாது. இலங்கை இனச்சிக்கலில் தமிழினப் பகைமையை முதன்மைப்படுத்தியே இந்தியா தனது நிலைபாட்டை வகுத்தது. தமிழ் ஈழம் அமையவிடக்கூடாது, தமிழகத்தில் இன உணர்ச்சி எழுச்சி கொள்ளவிடக்கூடாது என்பதே இந்திய அரசு எடுத்த நிலைபாடு.

1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட ‘உலகமயப் பொருளாதாரம்’ ஈழவிடுதலைப் போரை எதிர்க்க உலகநாடுகளின் ஆதரவைத் திரட்ட வாய்ப்பளித்தது.

• தேசிய இன அடையாளங் களை ஒழிப்பதே உலகமயத்தின் அடிப்படையென்பதால், பிற முதலாளிய நாடு கள் இந்தியாவின் திட்டத்தை ஏற்றன.

• உலகமயமாக்கலின்போது பெரு நிறுவனங்களால், பணம் வாரியிறைக்கப்பட்டது. இதன் விளைவாக, தமிழகத் தேர்தல் கட்சிகள் பெரு நிறுவனங்கள் போல வளர்ந்தன.

• 1991ஆம் ஆண்டுக்கு முன்புவரை, தமிழின எதிர்ப்பு மண்டல ஆதிக்க நலன் என்ற வகைகளில் மட்டுமே தமிழீழக் கோரிக்கையை இந்தியா எதிர்த்து வந்தது. உலகமயத்தின் வருகை இச்சிக்கலை ‘உலக ஆதிக்க நாடுகளின் நலன் சார்ந்ததாக’ மாற்றியது. அதாவது இந்திய நலனும் பிற வல்லாதிக்க நாடுகளின் நலன்களும் ‘உலகமயம்’ எனும் கண்ணியால் இணைக்கப்பட்டன.

• பயங்கரவாதம், பிரிவினை வாதம் ஆகியவற்றிற் கெதிராக என்று சொல்லி தடா, பொடா உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்கள் இக்காலத்தில் ஏவிவிடப்பட்டன.

மேற்கண்ட காரணிகள் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக இயங்கும் தமிழகத்தின் செயல் வேகத்தை வெகுவாகக் குறைத்தன. உலகமய ஆதிக்கம் - தேசிய இன ஒடுக்குமுறை, இவையிரண்டும் இணைந்து செயல்படத் துவங்கியதால் தான், தமிழகத் தேர்தல் கட்சிகள் ‘தீவிர இந்திய தேசபக்த’ நிலையை எடுத்தன.

இக்கட்சிகள் தமிழக எல்லையைக் கடந்து, இந்திய அளவில் சுரண்டிக் கொழுக்கும் நிறுவனங்களாக வளர்ந்தது இக்காலத்தில் தான் என்பதைக் கவனிக்க வேண்டும். தமிழின உணர்வை அரசியல் முழக்கமாகக் கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள், தேர்தல் கட்சியாக மாற்றப்பட்டு கடந்த தேர்தலில் ஈழ இன அழிப்பை ஆதரிக்கும் நிலையை எடுத்த வரலாற்றைப் பொருத்திப் பார்த்தால், மேற்கண்ட கூற்று எளிதில் விளங்கும். இன உணர்வை முன்வைத்த பா.ம.க. இத்திசையில் ஏற்கெனவே வளர்ந்துவிட்ட பெரிய அரசியல் கம்பெனியாகும். இவற்றுக்கெல்லாம் முன்னதாக அனைத்திந்திய அரசியல் சந்தையில் கலந்துவிட்டது ம.தி.மு.க.

தமிழ்த் தேசிய இன நலன்களை முன்னிறுத்துவதைக் கைவிட்டு, இந்திய ஏகாதிபத்தியத்தின் அங்கத் தினராகவோ, அடிவருடிகளாகவோ அவரவர் தகுதிக்கேற்ப மாறினால் பெருமளவு சுரண்டிக் கொள்ளலாம் என்பதே இந்தியா தமிழகத்திற்கு வழங்கிய வாய்ப்பு.

இவ்வாய்ப்பை நிராகரித்த உறுதியான தமிழ்த் தேசியர்கள் கடந்த 16 ஆண்டுகளில் எண்ணற்ற வழக்குகளில் தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வித நடவடிக்கைகளின் வழி, தமிழீழ விடுதலைப் போருக்கான ஆதரவு, அதன் முதன்மைப் பின்களமான தமிழகத்தில் கணிசமாகக் குறைக்கப்பட்டது. இது இந்தியாவின் திட்டமிட்ட நீண்டகால வேலைத்திட்டத்தின் வெற்றியாகும்!

பின்களம் 2

புலம் பெயர் தமிழர்களின் இணையற்ற ஆதரவு, புலிகள் இயக்கத்தின் விரைவு வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தின. தொழில்நுட்பம், நிதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பல்வேறு நாடுகளிலிருந்து இயங்கிய புலிகளின் துணை அமைப்புகள் நிறைவேற்றி வந்தன. உலகமயத்தின் பெயரால் கைகுலுக்கிய இந்திய – அமெரிக்க ஏகாதிபத்தியங்கள், தமது தமிழீழ எதிர்ப்பு நிரலை அரங்கேற்றத் தொடங்கின.

1997 ஆம் ஆண்டு - அமெரிக்கா
2001 ஆம் ஆண்டு - பிரிட்டன்
2006 ஆம் ஆண்டு - ஐரோப்பிய யு+னியன்
2006 ஆம் ஆண்டு - கனடா

என ‘உலகமய’ ஏகாதிபத்தியங்கள் விடுதலைப ;புலிகள் இயக்கத்தைத் தத்தம் நாடுகளில் தடை செய்தன. இந்நாடுகள் புலிகள் மீது தடை விதிப்பதற்குக் காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்தன. கனடா விதித்த தடைக்குப் பின்வரும் காரணம் கூறியது: ‘விடுதலைப்புலிகள் இயக்கம் கனடா வாழ் தமிழரிடையே நிதி சேகரிப்பதற்காக வன்முறையில் ஈடுபடும் அபாயம் உள்ளது’. எள்ளளவும் நியாயமற்ற காரணங்களைக் கூறி, இந்திய – அமெரிக்க சிங்கள கூட்டணி நாடுகள் புலிகளின் சர்வதேச நடவடிக்கைகளை முடக்கின. இதே காலகட்டத்தில் மொத்தம் 32 நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தன என்பது கவனிக்கத்தக்கது.

இந்நடவடிக்கைகள் அனைத்தும், தமிழீழ தேசிய இன விடுதலைக்கு எதிரான ஏகாதிபத்திய கூட்டுச் சதியின் விளைவுகளே. இரண்டாம் பின் தளம் இவ்வாறாக பலவீனப்படுத்தப்பட்டது. வல்லாதிக்க நாடுகளின் நலன்களுக்கு இலங்கைத் தீவைப் பலி கொடுத்துதான் சிங்களம் இவ்வளவையும் சாதித்தது. இதே வேளை, தமிழீழ விடுதலைப்புலிகள் எந்த வல்லாதிக் நிர்பந்தத்திற்கும் பணியாமல் நிமிர்ந்து நின்றனர். இதற்குக் கிடைத்த பதிலடியே மேற்கண்ட தடைகளும் நெருக்கடிகளும்!

1989 முதல் 2005 வரையிலான பதினாறு ஆண்டுகளும் இந்திய – சிங்கள கூட்டுச் சதிகாரர்கள் தந்திரமாக, நேர்மையற்ற வழிகளில் செயல்பட்டு, தமிழீழ விடுதலைப் போரின் பின்களங்கள் இரண்டையும் பலவீனப்படுத்தின! இதற்குப் பிறகே, தமது இறுதி இலக்கான தமிழீழக் களத்தில் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடங்கியது சிங்களம். இப்பெரும் போரில் சிங்களத்தின் முதன்மைப் பின்களமாக இந்தியாவும், இரண்டாம் பின்களமாக பிற வல்லாதிக்க நாடுகளும் செயல்பட்டு, தமிழீழத்தின் மீதான பெரும் போரை நடத்தின! இவ்வளவு சீர்குலைவு களைச் செய்த பிறகும், விடுதலைப்புலிகளை அவர்களது களத்தில், சந்திக்க அஞ்சிய சிங்கள - இந்திய வல்லாதிக்க சதிகாரக் கூட்டு நாடுகள், தமது நோக்கத்தை நிறைவேற்ற ஓர் கொடூரத் திட்டத்தை தீட்டின. ‘பீக்கான் திட்டம்’ (Project Beacon) என்பது அத்திட்டத்தின் பெயர்.

பீக்கான் திட்டம்

பீக்கான்(Beacon) என்றால்,‘திக்குத்தெரியா இடத்தில் வழிகாட்டி அழைத்துச் செல்லுதல்’ என்று பொருள். 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பீக்கான் திட்டம் இறுதிப்படுத்தப்பட்டது. சிறீலங்கா, இந்தியா உள்ளிட்ட இருபது இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் கூடி சதியாலோசனை செய்து இத்திட்டத்தை தீட்டினர்.

பீக்கான் திட்டத்தின் சாரம் இதுதான்:

• இத்திட்டத்தின் நோக்கம் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ இயக்கத்தை முற்றிலும் ஒழித்துக் கட்டுவது.

• 2006 மே மாதம் இத்தட்டம் துவக்கப்பட வேண்டும்

• 2009 மே மாதம் திட்டம் முடிக்கப்பட வேண்டும்

• புலிகள் இயக்கத்தில் எஞ்சியுள்ளோரைத் துடைத்து அழிப்பதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, 2011 மே மாதம் இதன் கால எல்லை.

• பீக்கான் திட்டம் 2005 திசம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

• புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பு மூன்று கடலோரப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு ஆண்டுக்கு ஒரு பிரிவு வீதம் மூன்று ஆண்டுகளில் (2006-2009) மொத்த நிலப்பரப்பையும் கைப்பற்ற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

• முதல் பிரிவு (2006-2007) திருகோணமலையில் உள்ள சம்பு+ர் முதல் மட்டக்களப்பு பனிச்சங்கேணி வரையிலான கரையோரப் பகுதிகளும் இவற்றோடு இணைந்த நிலப்பகுதிகளும்.

• இரண்டாம் பிரிவு (2007-2008) மன்னார் முதல் பு+நகரி வரையிலான கரையோரப் பகுதிகளும், இவற்றோடு இணைந்த நிலப்பகுதிகளும்..

• மூன்றாம் பிரிவு (2008-2009) ஆணையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதிகளும் இவற்றோடு இணைந்த நிலப்பரப்பும்.

பீக்கான் திட்டத்தின்படியே கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழீழக்களம் இயங்கியது என்பதை மேலேயுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 2006 ஏப்ரல் 25 ஆம் நாள் சம்பு+ரில் முதல் விமானக் குண்டு வீச்சில் சிங்கள இராணுவம் ஈடுபட்டது. நான்காம் ஈழப்போர் துவங்கிய நாள் இதுவே.

விடுதலைப்புலிகள் பீக்கான் திட்டத்தைத் தொடக்கத்திலேயே அறிந்திருந்தனர். புலிகளின் ஆதரவு இணையதளமான (தமிழ் எடிட்டர்ஸ்.காம் - tamileditors.com) பீக்கான் திட்டம் குறித்த விரிவான கட்டுரையை 2007 ஆம் ஆண்டிலேயே எழுதியிருந்தது. ‘இராணுவத்துடன் எதிர்த் தாக்குதல் நடத்தாமல், தற்காப்புச் சமர் புரிந்து கொண்டே பின்வாங்குவது’ என்பதே புலிகளின் போர்த்தந்திரமாக இருந்தது.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25- ல் சம்பு+ரில் முதல் குண்டு விழுந்தபோது, சர்வதேச நாடுகள் சிங்கள அரசைக் கண்டித்து வாய் திறக்கவே இல்லை. அது ‘சமாதானக் காலம்’. புலிகளும் சிங்கள அரசும் நார்வே தலையீட்டுடன் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்த காலம். இருந்தபோதிலும், சிங்கள இனவெறி அரசின் அத்துமீறுலை உலகம் கண்டும் காணாதிருந்தது. காரணம் - சம்பு+ரில் விழுந்த குண்டு சிங்கள இராணுவத்திற்கு மட்டும் சொந்தமல்ல் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கும் சொந்தமானது.

பீக்கான் திட்டத்தின் நோக்கம் ‘விடுதலைப்புலிகளை அழிப்பது’ என்று சொல்லப்ப்டாலும், அதன் முதன்மை நோக்கம் தமிழீழத் தேசிய இனத்தையே அழிப்பது தான்!

பீக்கான் திட்டத்தின் முதன்மையான அம்சம் என்னவெனில், ‘தாக்குதலின் போது, அதிகப்படியிலான விமானக் குண்டு வீச்சிலும், பல்குழல் எறிகணை வீச்சிலும் ஈடுபடுவது அவசியம்’ என்பதாகும். இத்தாக்குதல்களின் நோக்கம் பேரளவில் பொதுமக்களைப் படுகொலை செய்வது என்பதே! இதன் வழி சிங்கள - இந்திய வல்லாதிக்கக் கூட்டுநாடுகள் அடைய விரும்பிய நலன்கள்:

1. ஆயிரக்கணக்கில் படுகொலைகள் செய்வதன் வழி, தமிழீழ இனத்தின் எண்ணிக்கையைக் குறைத் தல்.

2. படுகொலைகள் கட்டற்றுப் போகும் நிலையில், மக்கள் பீதியடைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு.

3. தொடர்குண்டு வீச்சுகளால் தமிழீழத்தின் வாழ் வாதாரங்களைச் சிதைத்து, மக்களை உள்நாட்டு ஏதிலிகளாக்குவது.

4. போரின்போது, விடுதலைப் புலிகள் தற்காப்பு நிலை எடுத்து பதுங்கிக் கொண்டால், பெருமளவு மக்களைப் பலி வாங்குவதன் வழி புலிகளைக் களத்திற்கு வரச் செய்து வழிப்பது.

பீக்கான் திட்டத்தின் வடிவமைப்பில் ‘இனப்படுகொலை’ இடம் பெற்ற போது, இதற்கு உலகத் தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று அஞ்சப்பட்டது. பீக்கான் திட்டத்தின் வடிவமைப்பாளர்கள் தமிழர் போராட்டம் வெடிக்கும் அபாயமுள்ள 12 நாடுகளைப் பட்டியலிட்டனர். இந்நாடுகளில் உள்ள தமிழர் தலைவர்கள் "பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தனர்’ என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட வேண்டும்’ என்று பீக்கான் திட்டம் வழிகாட்டியது.

கடந்த ஓராண்டாக இன அழிப்புக்கு எதிராக மேடையில் பேசிய குற்றத்தறிகாக தோழர்கள் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், பெ.மணியரசன் உள்ளிட்டோர் பலமுறை கைது செய்யப்பட்டதை பீக்கான் திட்டத்தின் மேற்கண்ட விதியோடு பொருத்திப் பார்க்க வேண்டுகிறேன்.

ஆகவே அனைத்தையும் சிங்கள இந்தியக் கூட்டுப்படையினர் ‘திட்டப்படியே’ நடத்தினர்!

‘பீக்கான் திட்டம்’ குறித்த அடிப்படைகளை அறிந்து கொண்டால் மட்டுமே நடந்து முடிந்த நான்காம் ஈழப் போரின் விளைவுகளை மதிப்பிட முடியும். இத்திட்டத்தின் அடிப்படைத் தந்திரோபாயங்களாக.

• பேரளவு இன அழிப்பை மேற்கொள்ளுதல், எதிர்க்க வரும் புலிகளை அழித்தல்

• சாரத்தில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக இராணுவத்தினர் முன்னே வைத்து, புலிகளின் போர்த் திறனைக் குறைத்தல்.

• இவற்றைச் சாதிப்பதற்காக சிங்கள ராணுவத்தின் பெருமளவு திறனையும் பயன்படுத்தல்.

• சிங்கள இராணுவத்திற்கு ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கவலைப்படாதிருத்தல்

• சிங்கள அரசின் நிதியாதரங்களை மட்டுமே நம்பி இவ்வளவு பெரிய திட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் சிங்கள அரசின் பேரளவு நிதி ஒதுக்கீட்டைப் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது. சிங்களர் வாழும் பகுதிகளுக்கான நிர்வாக நிதியுதவிகளை இணைத ;தலைமை நாடுகள் கவனித்துக் கொள்வது.

தமிழீழ விடுதலைப் புலிகள் 2007ஆம் ஆண்டிலிருந்தே இப்பெரும் போருக்குத் தயாராகிவிட்டனர். 2007ஆம் ஆண்டு அனுராதபுரம் இராணுவத் தலைமையகம் மீது புலிகள் நடத்திய தாக்குதல் பீக்கான் திட்டத்தின் விளைவுகளைக் குறைப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையே என்பதை இப்போது உணர முடிகிறது.

‘நான்காம் போரை இராணுவ ரீதியில் வெல்ல இயலாது’ என்பதைப் புலிகள் உணர்ந்திருக்கக் கூடும். ஏனெனில், ‘நான்காம் போர்’ உண்மையில் ‘போர்’ அல்ல. அது ஒரு இன அழிப்பு நடவடிக்கை என்பதை பீக்கான் திட்டம் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது. இந்த அடிப்படையில் புலிகள் தமது தந்திரோ பாயங்களாகப் பின்வருவனவற்றை வகுத்தனர் எனக் கருதலாம்.

• இராணுவத்தினரை முன்னேறித் தாக்கி விரட்டுவது சாத்தியமல்ல. எனவே, தற்காப்புத் தாக்குதல்கள் மட்டும் நடத்துவது.

• இராணுவம் இன அழிப்பைத் தமது தந்திரோபாய நடவடிக்கையாகவும் கோட்பாட்டு இலக்காகவும் கொண்டுள்ளது என்பதால், நிலப்பகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ளப் போரிட்டால், பொதுமக்கள் உயிரிழப்பு அபாயகரமாக அதிகரிக்கும். எனவே, நிலப் பகுதிகளை விட்டு பின்வாங்கிச் செல்வது.

• ஏதிரிகளின் நோக்கம் புலிகளுடன் போரிடுவது மட்டுமல்ல. பொதுமக்களைப் பெரும் எண்ணிக்கையில், அழிப்பதும்தான் என்ற நிலையில், பொதுமக்களை ஆதரவற்றோராக விட்டுச் செல்லாமல், அவர்களையும் தம்மோடு அழைத்துச் சென்று பாதுகாப்பது.

• இலட்சக்கணக்கான பொதுமக்களோடு காடுகளுக்குள் சென்று சர்வதேச சமூகத்தின் மனச்சான்றை உலுக்கிப் போரை நிறுத்தச் செய்வது.

• முன்னேறி வரும் படையினரின் எண்ணிக் கையையும், தளவாட ஆற்றலையும் கணிசமான அளவில் குறைத்து விடுதல்.

பீக்கான் திட்டத்திற்கான எதிர்த் திட்ட வடிவம் என்றளவில் மேற்கண்ட தந்திரோபாயங்களைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர முடிகிறது. புலிகள் ‘மனிதக் கேடயங்களாக’ பொதுமக்களைப் பயன்படுத்தினர் என்று சிங்கள இந்திய கூட்டுச் சதி நாடுகள் கூக்குரலிட்டதன் உண்மையான பொருள் வேறு.

தமிழீழப் பகுதி முழுதும் வான் தாக்குதல்களாலும், பல்குழல் எறிகணைத்தாக்குதல்களாலும் இலட்சக்கணக்கான தமிழரைப் படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்த இச்சதிகார நாடுகள், மூன்றரை இலட்சம் மக்களும் புலிகளின் பின்னால், பாதுகாப்பாகச் சென்றதைக் கண்டு ஏமாற்றமடைந்தன. மேலும், கிளிநொச்சி, பரந்தன் போன்ற சமவெளிக் களங்களில் புலிகளை எதிர்கொள்ளலாம் என்ற அவர்களது கனவும் கலைந்தது. புலிகளும் மக்களும் வன்னிக் காடுகளுக்குள் சென்றது, பீக்கான் திட்டத்தின் அடிப்படைத் தந்திரோபாயங்களை வலுவிழக்க வைத்தது.

2008 நவம்பர் முதல் 2009 ஏப்ரல் வரையிலான ஆறு மாதங்களும் தற்காப்புத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு, பொதுமக்களையும் பேரழிவு களிலிருந்து பாதுகாப்பதில் புலிகள் வெற்றியடைந்தனர். ஏப்ரல் முதல் வாரத்தில் புலிகளின் எதிர்த்தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத சிங்கள-இந்திய கூட்டு;ப்படை மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியது.

இந்நெருக்கடியிலிருந்து மீளுவதற்காகவே புலிகள் மீது இரசாயண குண்டுகள் வீசப்பட்டன. இத்தாக்குதலில் விதுஷா, கடாஃபி, தீபன் உள்ளிட்ட ஏழு முன்னிலைத் தளபதிகளும் இருநூறுக்கும் மேற்பட்ட புலிகளும் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குப் பிறகுதான், பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சிங்களப் படையினருடன் விடுதலைப் புலிகள் பெரியளவிலான தாக்குதல்கள் எதையும் மேற்கொள்ளவில்லை.

முதலாவது பின்களமான தமிழகத்தில் இன அழிப்பிற்கு எதிராக இந்தியாவை மிரட்டும் விதத்திலான எந்தப் போராட்டமும் நடக்க வில்லை. இரண்டாம் பின்களமான, புலம் பெயர் தமிழர் சமூகம் எழுச்சி கொண்டு போராடியது. இவ்வெழுச்சியைக் கண்ட மேற்குலக நாடுகள் தந்திரமாக, ‘விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைய வேண்டும். இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும்’ என்று அறிவித்தன. இரண்டு பின்களங்களும் ஒத்துழைக்காத நிலையில், களம் பலவீனப் பட்டது. பீக்கான் திட்டத்தின் படியே 2009 மே மாதம் போர் ‘முடிவுக்கு’ வந்தது. வீழவில்லை புலிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் நேர்ந்த கொடூர அனுபவத்திற்குப் பிறகும், புலிகள் தமது படையணி களையும், தலைவர்களையும், முதன்மைத் தளபதிகளையும் கள முனையிலேயே நிறுத்தி வைத்திருக்க வாய்ப்பில்லை.

மே 19ஆம் நாள் போர் ‘நிறுத்தப்பட்டதாக’ ராஜபக்சே அறிவிக்கும் வரை, புலிகளின் ;எந்தப் படையணியும் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் இல்லை. பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களை முறியடிக்க ஆங்காங்கு சில ‘முறியடிப்புத் தாக்குதல்கள்’ மட்டுமே நடத்தப்பட்டன.

இதே வேளை, விடுதலைப் புலிகளின் படையணிகள் தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில், ‘ஆயுதங்களை ஒப்படைக்கவும் தயார்’ என்று புலிகள் இயக்கம் அறிவித்தது. இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் பா. நடேசன் சமாதானச் செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்டோர் வௌ;ளைக் கொடியுடன் சென்றபோது, சிங்கள வெறியர்கள் அவர்களைப் படுகொலை செய்தனர். பிறகு, மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களும் இடைநிறுத்தாது கனரக ஆயுதத் தாக்குதல்களை பாவித்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோரைக் கொன்று குவித்தனர். இதே மூன்று நாட்களும் மூன்று வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சம்பவங்களில் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.

புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், கடற்புலிகள் தலைவர் சூசை உள்ளிட்ட புலிகளின் ஒட்டு மொத்தத் தலைமையும் அழிக்கப்பட்டதாக இராணுவம் மார்தட்டிக் கொண்டது. பகுத்தறிவு கொண்டு ஆய்வு செய்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டார்கள் என்ற அறிவிப்பு ஒரு கட்டுக் கதை என்பதை உணரமுடியும். பீக்கான் திட்டத்தை நன்கு உணர்ந்து, தொடக்கம்; முதலே செயற்பட்ட புலிகள் தமது படைத் திறனை இறுதிவரை காத்து வைத்தனர் என்பதையும் மிகக் குறைந்த வலுவைக் கொண்டுதான் எதிரிகளுக்குப் பேரிழப்புகளை ஏற்படுத்தினர் என்பதையும் அனுராதபுரம் தாக்குதல் தொடங்கி இறுதித் தாக்குதல்கள் வரை காண முடிகிறது.

புலிகள் தமது ஆற்றல் வளங்களைக் கணிசமாகத் தக்க வைத்துக் கொண்டு, பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டனர். இதற்கேற்றவாறு புலிகளின் போர்த்தந்திரங்கள் அனைத்தும் அறிவார்ந்த முறையிலும் மிகுந்த நுட்பத்துடனும் வடிவமைக்கப்பட்டன. (புதிய தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியான சிங்களத்தின் இறுதிப்போர் - முதல் கட்டம், இரண்டாம் கட்டம் கட்டுரைகளைப் பார்க்க) ‘பீக்கான் திட்டம் மே மாதம் முடிவடையும்’ என்பது ஏற்கெனவே தெளிவான செய்தி. ஆகவே ‘மே மாதம் வரை போரில் நீடிப்பது, பிறகு பாதுகாப்பான நிலைகளுக்குத் திரும்பி விடுவது’ என்ற செயல் திட்டம் புலிகளால் வகுக்கப்பட்டிருக்கும் என்று நம்பலாம்.

மே 15 முதல் 19 வரை யிலான தாக்குதல் சம்பவங்களில் பொதுமக்களும், புலிகளின் படையினருமே பேரளவில் படுகொலை செய்யப்பட்டனர். புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்கள் பா. நடேசன், புலித்தேவன் வஞ்சகமாகக் கொல்லப்பட்டனர். சில அரசியல் பிரிவுத் தளபதிகள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகளின் முக்கியப் படையணிகள் முக்கியத் தளபதிகள் குறித்த எதிர்மறைத் தகவல்கள் ஏதும் ஆதாரப் பு+ர்வமாக இதுவரை வெளியாகவில்லை. எனவே, அவர்களனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நம்பலாம்.

இந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் சான்றுகள்:

• தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள இராணுவம் மட்டுமே அறிவித்துள்ளது. சிங்கள அரசின் தலைவர் என்ற முறையில் ராஜபக்சே இதுவரை (இக்கட்டுரை எழுதப் படும் நாள் 27.6.09) அறிவிக்கவில்லை.

• சிங்கள இராணுவத் திற்குப் புதிதாக ஒரு இலட்சம் பேரைச் சேர்க்கவுள்ளதாக சிங்களத் தளபதி பொன்சேகா அறிவித்துள்ளார்.

• ஆஸ்திரேலிய அரசு புலிகள் இயக்கத்தின் மீது தடைவிதிக்க மறுத்தபோது, சிங்கள அரசு ‘விடுதலைப் புலிகள் இன்னும் ஒழிக்கப்படவில்லை. அவர்கள் மீண்டும் வளரும் அபாயம் உள்ளது’ என்று வாதிட்டது.

• ‘முல்லைத் தீவில் புதிய படைத் தளம் அமைக்கப்படும் என்று சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட நிலையில் புதிய தளம் எதற்கு? எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படவில்லை. அவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து நாடு முழுதும் பரவியுள்ளனர்’ என்றார் சிங்கள இராணுவ செய்தித் தொடர்பாளர் உதயநாணயக்காரா.

‘பீக்கான் திட்டத்தின்’ நோக்கத்தை முழுமையாகச் செயல்படுத்தவிடாமல், தமிழீழ விடுதலைப் புலிகள் தீரமிகுப் போரை நடத்தி முடித்திருக்கிறார்கள். கோழி இறக்கைகளுக்குள் குஞ்சுகளை வைத்துப் பாதுகாப்பது போல் மூன்றரை இலட்சம் மக்களை ஏழு மாதங்களாகக் காத்தனர்.

இந்திய வல்லாதிக்க அரசின் செயல்வேகத்தைக் குறைக்கும் அளவுக்கான போராட்டங் களையாவது தமிழகத்திலிருந்து எதிர்பார்த்தனர். அவர்களது எதிர்பார்ப்பாற்றலை நாம் நிறைவேற்றவில்லை. இந்திய வல்லாதிக்கத்தின் குரல்வளையை இறுக்குமளவு போராடினால் மட்டுமே, தமிழீழ விடுதலையின் களம் வலுப்பெறும். நாம் முதன்மைப் பின் களத்தில் நிற்கிறோம் என்ற உணர்வு நமக்கு வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் தமது களத்தில் சந்தித்திருப்பது பின்னடைவு மட்டுமே! தோல்வி அல்ல! அவர்கள் வீழவில்லை! அவர்கள் மீண்டும் வருவார்கள். தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுப்பார்கள். இதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்.

இதே வேளை, களத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டம் வெற்றிபெறுவதற்கு முதன்மைப் பின்களமான தமிழகத்தில், தமிழ்த் தேசிய விடுதலை உணர்வு வலுப்பெற வேண்டும். பின்களப் போராட்டம் களத்திற்கு வலுவு+ட்ட வேண்டும். இது நம் தேசியக் கடமை. இதைச் செய்வதை விடுத்து, தமிழீழ விடுதலைப் போர் முடிந்துவிட்டதாகவும், புலிகள் வீழ்ந்து விட்டதாகவும் சிங்கள -இந்தியக் கூட்டுப் படை மேற்கொள்ளும் பொய்ப் பரப்புரைகளை நம்பினால், நாம் பிழை செய்தோர் ஆவோம்.

வீழவில்லை விடுதலைப் புலிகள்! ஓயவில்லை தமிழீழ விடுதலைப் போர்!

சான்றுகள் :

• www.tamilcanadian.com –World Democracies Wake up: Stop Sri-Lankan terror - By: Dr C P Thiagarajah, TamilCanadian - November 1, 2007.2007.
• www.thesamnet.co.uk (இந்த இணையதளம் தமிழீழ விடுதலைக்கு எதிரான, சிங்கள அரசுக்கு ஆதரவான ஒட்டுக்குழக்களால் நடத்தப்படுவது.; பீக்கான் திட்டம் மே மாதத்தோடு முடியப் போகிறது என்றும், புலிகள் இயக்கத்தின் தலைமைக்கு ஆபத்து என்றும் இந்த இணையதளம் ஏப்ரல் 2009ல விரிவான கட்டுரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது)
Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP