Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜூலை 2009

இந்திய தருக்கவியலில் தமிழின் கொடை
முனைவர் க.நெடுஞ்செழியன்

ஜி-20 மாநாடு

இந்திய மெய்யியலுக்கும், அறிவு ஆராய்ச்சி இயலுக்கும் தருக்கவியலே அடிப்படை. மாறுபடுதல், அருதாவது ஒருவர் கருத்திலிருந்து மற்றவர் மாறுபாடு கொள்ளுதல் எனும் பொருளில் உருவான தமிழ்ச் சொல்லே தருக்கம் என்பதாகும். வாதத்தில் பெற்ற வெற்றியினால் ஏறபடும் பெருமிதமும் சிறப்பும் கருதி இச்சொல் ‘தருக்கம்’ (பெருமிதம்) எனக் காரணப்பெயராகவும் அமைந்தது என்பார் ர.கா.முருகவேள். வாதமேடையில் சொற்களை அளந்து பேசும் முறையினை விளக்கியதால் இதற்கு ‘அளவை’ என்றும் பெயர் உண்டு.

உலகத்துப் பொருள்களையெல்லாம் எண்ணல். எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகை அளவினால் அளந்தறியுமாறுபோல, உயரிய நுண்பொருள்கள் பலவற்றையும் மனத்தின் எண்ணி, மாசற அளந்துணர்ந்து கொள்ளுதற்குக் கருவியாதல் பற்றித் தருக்கநூல் ‘அளவைநூல்’ எனவும் வழங்கப்பெறும். அளவைகளும் பொருந்துமாறுகளும் ஆகிய நல்லாற்றான் நாடி அவையஞ்சா மாற்றங் கொடுத்து, வெல்லுஞ்சொல் இன்மையறிந்து சொல்லி, அவையத்து முந்தியிருந்து, தோலா நாவின் மேலோராகத் தருக்கு (பெருமிதம்) மிக்க நிலையில் வீற்றிருக்கச் செய்யும் மாட்சிமை உடையதாகலின் அளவைநூலைத் தருக்கநூல் எனப் பண்டைச் சான்றோர்கள் சிறப்பித்து வழங்குவோராயினர் (ப.5)

எனும் விளக்கங்கள் மேற்கூறிய கருத்தினை விளக்கும்.

எண்ணூல்

அளவைநூல், தருக்கநூல் என்பவற்றைப்போலவே தருக்கத்தைக் குறிக்கும் மற்ற தமிழ்ச் சொற்கள் ‘ஏரணமும்’ ஆகும். ‘எண் என்பது தருக்க நூல்களுக்கும் எழுத்தென்பது இலக்கண நூலுக்கும் பெயர்........’ எனும் கூற்றும் எண்ணத்தகும். சொல்லை அழகும் அணியும் பெறப் பயன்படுத்தும் இலக்கணமாதலின் தருக்கம், அழகு எனும் பொருளில் ஏரணம் எனவும் வழங்கலாயிற்று. அளவை, தருக்கம், ஏரணம் எனப்பல சொற்கள் தமிழில் வழக்காறு பெற்றிருந்தமை, தமிழுக்கும் தருக்கத்திற்கும் இருந்த தொடர்பினைப் புலப்படுத்தக் காணலாம். இவ்வாறு தமிழில் பெருவழக்காறு பெற்றிருந்த தருக்கம் வடமொழியில் செல்வாக்குப் பெறத்தொடங்கியது எப்போது? எப்படி? என்பது குறித்து இனிக் காணலாம்.

இந்தியத் தருக்கவியல்

இந்தியத்தருக்கவியல் வரலாற்றை விரிவாக ஆராய்ந்தவர் கல்கத்தா சமஸ்கிருதக் கல்லூரியின் முதல்வராக இருந்த சதீசுசந்த்திரா ஆவார். விரிவான புலமையும் நடுநிலைதவறாத ஆய்வுப் போக்கும் கொண்ட அறிஞராகவும் அவர் திகழ்ந்துள்ளார். அவர் ‘இந்திய அளவையியல் வரலாற்றை’ (History of Indian Logic) வேதங்களை அடுத்துத் தோன்றிய உபநிடதங்களில் இருந்து தொடங்குவார். உயிர்(ஆன்மா - ஆத்மா) பற்றிய ஆய்வாகத் தருக்கவியல் தொடங்கியது என்பது அவரின் கூற்றாகும்

இதனை,

சதபத பிராமணமும் மற்ற பிற்கால வேதநூல்களும் ஆத்மாவைப் பற்றிப் பேசுகின்றன. ஆத்மா, தான்செய்யும் நல்ல செயல்களைப் பொருத்தே இறப்பிற்குப்பின் எல்லையற்ற இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ துய்க்கின்றது என அவை வற்புறுத்தின. அதனால் கருமக் கோட்பாட்டிற்குப் பெரிதும் அழுத்தம் கொடுத்தன.(பக் 2-3)

என அவர் கூறுவதால் அறியலாம்.

வேதக்கோட்பாட்டின் அடிப்படையில் உயிர் என்பது அழியாத ஒன்றாகும். அருதாவது என்றைக்கும் நிலைபேறு கொண்டதாகும். அதன் காரணமாகவே உயிரைச் ‘சனாதனம்’ என்றனர். சனாதனம் என்ற சொல்லிற்கு அழிவற்றது என்பது பொருளாகும். இவ் அழிவற்ற பொருளாகிய உயிர் பற்றிய ஆய்வே தருக்கவியலாகப் பின்னாளில் வளர்ச்சியடைந்தது என்பது அவரின் துணிபாகும்.

ஆத்மவித்தை பின்னாளில் உண்மைகாணும் அறிவியல் எனும் பொருளில் ‘ஆன்வீக்சிகீ’ என அழைக்கப்பட்டது மனு, ‘ஆன்வீக்சிகீ’ எனும் சொல்லை ‘ஆத்மவித்தை’ என்பதற்கு மாற்றாகப் பயன்படுத்துவார். மனுவைப் பின்பற்றியோர் உபநிடதங்களைக்குறிக்கும் ஒரு மாற்றுப்பெயராக ஆன்வீக்சிகீயைப் பயன்படுத்தினர். ஆன்வீக்சிகீ உயிர் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்தபோதும் அது உயிர்பற்றிய ஆய்விற்கும் மாறானது. ஏன்? உபநிடதங்களுக்கும் கூட மாறுபட்டது. கி.மு.நான்காம் நூற்றாண்டினதாகக் (கி.மு.327) கருதப்படும் கௌடில்யர், ஆன்வீக்சிகீயைத் ‘திரைஇ’ எனச்சொல்லப்படும் வேதங்களுக்கு மாறுபட்டதாகவும், அவற்றைவிட உயர்வானதாகவும் கருதுகின்றார்..........

ஆன்வீக்சிகீ உண்மையில் இரண்டு கூறுகளைக் கொண்டது. ஒன்று உயிர்பற்றிய ஆய்வு . இரண்டு, உயிர்பற்றிய ஆய்வைக்காரண காரியமுறையில் ஆய்வுக்கு உட்படுத்தியது. காரண - காரிய ஆய்வு முறையை ஆன்வீக்சிகீ கைகழுவி இருந்தால் அதுவும் உபநிடதங்களைப் போல வெறும் ஆன்மாவைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிந்திருக்கும் என வாத்சாயனர் கூறுவதையும் கருத்தில் கொள்ளவேண்டும். காரண காரிய ஆய்வுமுறையாக இருப்பதால்தான் ஆன்வீக்சிகீ உபநிடதங்களினின்றும் வேறுபட்டு ஒளிர்கிறது. எண்ணியம் ( சாக்கியம்), ஓகம். உலகாய்தம் ஆகிய மூன்றும் உயிர்பற்றி காரண - காரிய முறையில் ஆய்வை மேற்கொண்ட காரணத்தால் அவற்றை ஆன்வீக்சிகீயாகக் கௌடில்யர் கருதினார். (பக்.4-5) என விவரிப்பார்.

ஆன்வீக்சிகீ வேதங்களைவிட உயர்வாகவும் சிறப்பாகவும் மதிப்பட்டுள்ளது. இது எண்ணியம், ஓகம், உலகாய்தம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது எனக்கூறும் சதீசுசந்திரா அதன் காலம் பற்றியும் வரையறை செய்கின்றார். இதனை, “ஆன்வீக்சிகீ உபநிடதங்களின் காலத்திலேயே ஒரு வடிவிற்கு வந்துவிட்டது. அக்காலத்திலேயே அதற்குரிய சில கலைச்சொற்களும் உருவாக்கப்பட்டுவிட்டன. எனினும் கி.மு.650க்கு முன் அவை முழுமையான வடிவத்தைப் பெறவில்லை. அந்த நூற்றாண்டில்தான் ஆன்வீக்சிகீ கற்கத்தகுந்த துறைகளுள் ஒன்றாக ஏற்கப்பட்டது”. எனும் அவரின் விளக்கத்தால் அறியலாம்.

சதீசுசந்திரா ஆன்வீக்சிகீ முறைப்படுத்தப்பட்டது. கி.மு.650 என மதிப்பிடுவதற்குக் காரணம் அந்த காலக்கட்டத்தில்தான் எண்ணியம் எனும் சாங்கியம் தோன்றியதாகும். இதனை நிறுவியவர் கபிலர் என்பவராவார். இந்திய ஆய்வாளர்கள் இவரை வழக்கம் போலவே வடநாட்டைச் சார்ந்தவர் என்றே சித்தரித்தனர். ஆனால் அக்கோட்பாட்டை ஆராய்ந்த கார்Nபே அக்கருத்துக்களுக்கு மாறான சரியான முடிவைத் தந்தார். பிராமணர்கள் மற்றும் பிராமணத்தன்மைஆகியவற்றின் செல்வாக்கும் பாதிப்பும் மிகக்குறைவாகவே இருந்த இந்தியப் பகுதியில்தான் முதன் முதலாக இந்த உலகம், இதில் நம் வாழ்வு என்பவை நமக்குப்புரியாத புதிராய் இருப்பதைப் புரிந்து கொள்ளப் பகுத்தறிவை அடிப்படையாகக்கொண்டு விடைகாண்பதற்கான முயற்சி செய்யப்பட்டது. இதைப் புரிந்துகொண்டால்தான் எண்ணியத்தின் மூலத்தொடக்கம் உரிய வகையில் விளங்கும். எண்ணியம் அடிப்படையில் நாத்திகமானது மட்டுமில்லை. அது வேதத்திற்கு எதிரானது (பக் 324- 25) என்று தெளிவுப்படுத்தினார்.

வேதத்திற்கு எதிரான நாத்திகத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட எண்ணப்போக்கு இந்தியத்துணைக் கண்டத்தில் செழித்திருந்த இடம் தமிழகம் மட்டுமே. இந்த எண்ணப்போக்கில் தொடக்கத்தில் வேத எதிர்ப்புக்கு இடம் இல்லை. ஏனெனில் அந்த எண்ணம் வளர்ந்து செழித்து நின்ற காலகட்டத்தில் வேதங்கள் தொகுக்கப்படவே இல்லை. அதனால் தொகுக்கப்படாத அந்த வேதத்தை மறுக்க வேண்டிய தேவையும் அச்சிந்தனையாளர்கட்கு ஏற்படவில்லை. அச்சிந்தனைப் பள்ளியே ஐந்திரம் என்பதாகும்.

நிலம், நீர, தீ, வளி, விசும்பு எனும் ஐம்பெரும் பூதங்களின் இயல்புகளை அறிவியல் நோக்கில் ஆராய்ந்த சிந்தனைப் பள்ளியே ஐந்திரம் என்பதாகும். தொல்காப்பியர் ஐந்த்திரம் நிறைந்தவர். இதனை பனம்பாரனார்.

“மல்குநீர் வரைப்பின் ஐந்திரம்
நிறைந்த தொல்காப்பியன்.........”

எனப் பாராட்டுவார் ‘மல்குநீர் வரைப்பின் ஐந்திரம்’ எனும் அடிக்கு உரை எழுதிய இளம்பூரணர்.

‘மிக்க நீரையுடைய கடலாகிய
எல்லையையுடைய உலகின் கண்ணே
இந்திரனாற் செய்யப்பட்ட ஐந்திர
வியாகரணத்தினை..............’

என விளக்குவார்.

இவ்விளக்கம் குறித்து, நூல்கள் அனைத்தும் உலகில் உள்ள மக்களுக்காக உலகில் உள்ளோரால் மட்டுமே இயற்றப்படுபவைதான். அப்படியாயின், ‘உலகின்கணணே இந்திரனாற் செய்யப்பட்ட’ என்ற இளம்பூரணரின் பொருள்விளக்கம் முரண்போலத் தோன்றுகின்றது. ஆனால் ‘மல்குநீர் வரைப்பின்’ என்ற தொடருக்குக் ‘கடலால் சூழப்பட்ட உலகினது ஐந்து திரங்கள் ’ என்று ‘அது’ வெனும் ஆறன் உருபைப் பயன்படுத்தும்போது பொருள் சிறக்கின்றது.ஆறாம் வேற்றுமையை,

ஆறாகுவதேஅதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும் அன்ன கிளவிக் கிழமைத் ததுவே

என விளக்குவார் தொல்காப்பியர். சேனாவரையர், எனவே, ஆறாவது கிழமைப் பொருட்டென்றும், அக்கிழமை தன்னான் வந்த தற்கிழமையும் பிறிதான் வந்த பிறிதின் கிழமையும் என இரண்டென்றும் கூறியவராம். தன்னென்றது தன்னோ டொற்றுமையுடைய பொருளை, பிறிதென்றது தன்னின் வேறாகிய பொருளை என்று உரை விளக்கம் தருவார்.

இவ்வாறு மல்குநீர் வரைப்பினது ஐந்திரம் எனப் பொருள்காணின், ‘கடலால் சூழப்பட்டது உலகம் அவ்வுலகம் ஐந்து கூறுகளால் அருதாவது ஐந்தன் திரங்களால் அமைந்துள்ளது என்ற விளக்கம் கிடைக்கின்றது. எனும் ஆய்வுரை கருதத் தக்கதாய் உள்ளது. நிலம், நீர்,தீ, வளி, விசும்பு எனும் ஐந்து பூதங்களால் ஆனது இவ்வுலகம் என்பதே தொல்காப்பியரின் கோட்பாடு ஆகும். இதனைத் தொல்காப்பியர், நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்க முலக மாதலின் எனக் கூறுவதால் உணரலாம். இத்தகைய ஐந்திரக்கோட்பாடு கற்றறிந்த அறிஞர்களால் போற்றப்பட்ட பெருமைக்குரியதாக இருந்தது என்பதைப் பாரதமும் பதிவு செய்துள்ளது. சஞ்சயன், திருதராட்டினரிடம் இதுபற்றிக் கூறுவது இங்கே குறிக்கத் தக்கதாகும்.

மகாராசரே! கற்றறிந்தவர்கள் உலகத்தில் உள்ள எல்லாப் பொருட்களும் இந்த மகா பூதங்கள் என்றும், சமமாயிருப்பவைகள் என்றும் சுருக்கமாகச் சொல்கிறார்கள். ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் இவையெல்லாம் மேன்மேல் ஒன்றுக்கொன்று ஒவ்வொரு குணத்தால் மேம்பட்டிருக்கின்றன. அவைகளுள் பூமியே தலைமைப் பெற்றுள்ளது. (உ.ல.ப.136)

என ஐம்பூதக் கோட்பாட்டின் பரவலையும் சிறப்பையும் கூறக்காணலாம்.

இந்திய மெய்யியல் வரலாற்றிற்கு மட்டுமின்றி உலக மெய்யியல் வரலாற்றிக்கும் ஐம்பூதக்கோட்டை வழங்கியவர்கள் தமிழர்களே. இதற்கான மிகவும் தொன்மையான சான்றாகத் திகழ்வது புறநானூற்றில் இரண்டாம் பாடலாகும்.

மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரு மென்றாங்
கைம்பெறும் பூதத் தியற்கை போல (பாடல் 2:1-6)

எனும் பாடற்பகுதி ஐம்பெரும் பூதத்து இயற்கையை விவரிக்கும் இவ் ஐம்பெரும் பூதங்களின் இயல்பினை ‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் எனும்’ தொல்காப்பிய நூற்பாவின் உரையில்.

‘நிலம் வலிது, தீ வெய்து, நீர் தண்ணென்றது, வளி யெறிந்தது, விசும்பு அகலியது’. எனச் சேனாவரையர் விளக்குவார்.

அறிவியல், தருக்கவியல் ஆகிய இரண்டன் அடிப்படையில் உருவான இவ் ஐந்திர மெய்யியலைக் கற்கவேண்டி கி.மு.7 ஆம் நூற்றாண்டளவில் வடநாட்டிலிருந்து பலரும் தென்னாடு வந்துள்ளனர் எனப் தைப பௌதத் நூலான அவதான சாதகம் குறித்துள்ளது. கி.மு.7 ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய கபிலர், இவ் ஐந்திரக் கோட்பாட்டில் வேத எதிர்ப்பையும் கடவுள் மறுப்பையும் இணைத்துள்ளார். அதனால் ஐந்திரம் மூன்று கிளைகளாகப் பிரிகிறது. அவை எண்ணியம் - ஓகம்- உலகாய்தம் என்பன.

இந்தக் காலக்கட்டத்தில் உருவான நூல்களே திருக்குறளும் மருத்துவ நூலான சரக சம்கிதையும் ஆகும். தமிழ் மருத்துவ நூலைச் சரகர் எனும் மருத்துவ அறிஞர் வடமொழியில் சுலோக வடிவில் இயற்றியதாகவும், இந்தச் சுலோகங்களை வகைப்படுத்தி கி.பி.முதல் நூற்றாண்டளவில்தான் எழுத்து வடிவமாக்கினார் என்றும் அந்நூலின் வரலாறு வருகிறது. வாய்மொழியாக வழங்கப்பட்ட அந்நூலில் எழுத்து வடிவம் பெற்ற நூலுக்குரிய இலக்கணங்கள்- தருக்கமுறைக்கான வரையறைகள் யாவும் விளக்கமாகக் கூறப்பட்டிருப்பதால் , சரக சம்கிதையின் மூலவடிவம் எழுத்துக்களைக் கொண்ட ஓர் இந்திய மொழிக்கு உரியதாக இருந்துள்ளது என்பது உறுதியாகிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்திய மொழிகளில் எழுத்துவடிவம் பெற்றிருந்த ஒரே மொழி தமிழே என்பதால் சரக சம்கிதையின் மூலவடிவம் தமிழுக்குரியது என்பது தெளிவாகிறது. சரகசம்கிதையையும் - தொல் காப்பியத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது, தொல்காப்பியம் மூலநூலாகவும் சரக சம்கிதை வழிநூலாகவும் அமைந்துள்ளமை புலனாயிற்று.

சரக சம்கிதை, எண்ணியத்தின் (சாங்கியத்தின்) பெயரைச் சுட்டியும் சுட்டாமலும் எண்ணியக் கோட்பாட்டை விரிவாகக் கூறிச்செல்கிறது. ஆனால் தொல்காப்பியமோ ஓரிடத்தில் கூட எண்ணியத்தையோ, அல்லது ஓக - உலகாய்தத்தையோ பெயர் சொல்லி சுட்டவில்லை. ஆனாலும் இந்திய மெய்யியல் ஆராய்ச்சி அறிஞர்கள் குறிப்பாக பொருள்முதற் சிந்தனையாளர்கள் எண்ணியத்தின் மூலவடிவத்திற்கு அதாவது (வடமொழியாளர் நிரீச்சுரசாங்கியம் என்பர்) கடவுள் மறுப்புச் சாங்கியத்திற்கு உரியன என்றும், ஓக, உலகாய்த மெய்யியல்களைச் சார்ந்தவை என்றும் எவற்றையெல்லாம் வகைப் படுத்தியுள்ளனரோ அவற்றையெல்லாம் தொல்காப்பியம் விரிவாகவும் செறிவாகவும் குறித்துள்ளது.

• படிமுறைக்கோட்பாடு (Theory of Evolution)
• ஐம்பூதக்கோட்பாடு (Theory of Universe)
• அளவையியல் கோட்பாடு (Theory of Logic)
• காரண - காரியக் கோட்பாடு (Theory of Cause and Effect)
• இன்பியல் கோட்பாடு (Theory of Hedonism)

ஆகிய அறிவுசார் துறைகளைக் குறிப்பிடும் இடங்கள் எல்லாம்,

‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’
‘என்ப’
‘என்மனார் புலவர்’
‘நுனித்தகு புலவர் கூறிய நூலே’

எனத் தொல்காப்பியம் சுட்டுவது மேலே குறிப்பிட்ட ஐந்திர மரபைச் சார்ந்த மூலவர்களை எனலாம். எண்ணிய, ஓக, உலகாய்த மெய்யியல்கள் தனித்தனி பெயரால் தனித்தனி அமைப்புகளாகச் செயல்பட்டுள்ளன. அப்படி அவர்கள் தனி அமைப்புகளாகச் செயல்பட்ட போதும் மூலக்போட்பாடுகள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றன. உயிர் பற்றிய கருத்தில்தான் எண்ணியம் - ஓகம் இரண்டும் உலகாய்தத்தோடு மாறுபட்டுள்ளன. மற்றபடி அவற்றுள் வேறுபாடுகள் இல்லை. அம்மூன்று கோட்பாடுகளும், வேதங்களையும், வேத வழிப்பட்ட சடங்குமுறைகளையும் கடவுளையும் மிகக் கடுமையாகச் சாடியுள்ளன. ஆனால் தொல்காப்பியத்தில் வேத - வைதிககடவுள் மறுப்புக்கான அடிப்படைக் கருத்துக்கள் இருந்தும் அவற்றைப் பெயர் குறித்து மறுக்கவில்லை. இதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது, தொல்காப்பியர் காலத்தில் வேதப்பண்பாடு தனித்துச் சுட்டும் தகுதியைப் பெறவில்லை.

வேதங்கள் மூன்றாகவோ நான்காகவோ வகுக்கப்படாமல் இருக்கு (ரிக்) வேதம் ஒன்று மட்டும் தொகுக்கப்பட்டிருந்தது. அப்படித் தொகுக்கப்பட்டதும் தமிழ்நாட்டில்தான். இருக்குவேதம் தொகுக்கப்பட்டபோது அதனை எழுத்து வடிவில் கொணரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அம்முயற்சியில் ஈடுபட்டவர் அதங்கோட்டாசான். துணை நின்றவர் தொல்காப்பியர். வேதமொழிக்கு எழுத்தை அறிமுகப்படுத்தவும், அமைத்துக் கொள்ளவும் மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடே தொல்காப்பியம். அதனால்தான் பனம்பாரனார் ‘மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி’ என அந்த வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கி.மு. 14-ம் நூற்றாண்டு என்பதால், தொல்காப்பியர் காலமும் கி.மு. 14- ஆம் நூற்றாண்டு என்பது உறுதி.

அந்நூற்றாண்டில் வேதப்பண்பாடு என ஒன்று உருவாகவில்லை என்பதாலும், வைதிகர்களே தமிழைச் சார்ந்து நின்றதாலும், தொல்காப்பியருக்கு அவர்களையோ அவர்களின் பண்பாட்டையோ எதிர்க்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. எனும் உண்மைகள் புலனாயின. மேலும், பிற்காலத்தில் இந்தியா முழுமையிலும் பரவிய எண்ணிய - ஓக- உலகாய்தம் உள்ளிட்ட வைதிக எதிர்ப்பிற்கான மூலநீருற்றே தொல்காப்பியமாக உள்ளது. இதனால் இந்தியாவில் மட்டுமன்றி உலக மொழிகள் என்ற அடிப்படையிலும் எழுதப்பட்ட முதல் நூல் தொல்காப்பியம் என்ற பெருமிதம் ஏற்படுகிறது.

இந்தியத் தருக்கவியல் மூன்று கூறுகளைக் கொண்டது அவை, 1. காரியாபினி விருத்தி 2. பரிக்சா 3. வாதவிதி என வகைப்படுத்துவார் சதீசு சந்திரா. இந்த மூன்றையும் தொல்காப்பியம்,

1. தொழில் முதல்நிலை
2. தேர்வு
3. தந்திர உத்தி

எனக் குறிப்பார். இம்மூன்றனுள், தொல்காப்பியர் குறிப்பிடும் தொழில் முதலந் pலை எனப் து சிறபப்ப் pயம் எனும் மெய்யியலின் அடிப்படையாக அமைந்துள்ளது.

காரியாபினிவிருத்தி செல்லாடல் கலையை விளக்கும் ஆன்வீக்சிகீக்கு இது உரியதன்று. ஒரு வேளை வைசேடிக மெய்யியலின் தொடக்க காலத்தில் அம் மெய்யியலுக்கு உரியதாக அது இருந்திருக்கலாம். என்பது சதீசு சந்திராவின் கூற்று. வடமொழியில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் சைசேடிகம் எனும் மெய்யியலை உருவாக்கியதுடன் அதற்கான நூலை இயற்றியவராகவும் போற்றப்படுவர் கணாதர் ஆவார். இக் கணாதர் எனும் வடமொழிப்பெயர் கணி +ஆதன்- எனும் தமிழ்ப் பெயரின் வடமொழிச் சிதைவாரும். கனி - கணியர் எனும் சொற்கள் தொடக்கத்தில் தமிழ் வானியல் அறிஞர்களைக் குறித்த ஒரு பொதுப் பெயராகும். பின்னாளில் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் ஆசீவகம் தோன்றிய பின்னர் ஆசீவக வானியல் அறிஞர்களைச் சுட்டும் சிறப்புப் பெயராக மாறியது.

கணி ஆதனின் இச்சிறப்பியம், பக்குடுக்கை நன்கணியாரின் இயல்புக் கோட்பாட்டிலிருந்து உருவானதாகும். தருக்கத்தையும் அணுவியலையும் உள்ளடக்கிய இச்சிறப்பியமே வடமொழியில் “சிறப்பானது” எனும் பொருளில் வைசேடிகமாக மொழிமாற்றம் பெற்றுள்ளது. இச்சிறப்பியத்தை ஆசீவக மெய்யியலாகவே கருதுவார் குணா. வைசேடியமாக மொழிமாற்றம் பெற்ற சிறப்பியத்திற்குரிய இக் காரியாபினிவிருத்தியைச் சரக சம்கிதை மருத்துவர்களின் இலக்கணமாக வரையறுக்கின்றது. தொல்காப்பியத்தின் “தொழில் முதல்நிலை” என்பது எட்டுக் கூறுகளை உள்ளடக்கியதாகும் . இதனை,

“வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே காலம் கருவி யென்றா
இன்னதற் கிதுபய னாக வென்னும்
அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ
ஆயெட் டென்ப தொழில்முதல் நிலையே”

எனச் சொல்லதிகாரம் வேற்றுமை இயலில் விளக்குவார் தொல்காப்பியர். இத்தொழில் முதல்நிலையைச் சரகசம்கிதை, மருத்துவர்கள் அறிந்துகொள்ளவேண்டியவை எனும் தலைப்பில் விளக்குகின்றது. தொல்காப்பியம், சரகசம்கிதை ஆகிய இருநூல்களில் இடம்பெற்றுள்ள இத்தொழில் முதல்நிலை பற்றிய ஒப்பாய்வு குறிக்கத்தக்கதாகும்.

செயல்களின் முதல்நிலைகளைத் தொல்காப்பியர் எட்டாக வகைப்படுத்த, சரகசம்கிதை ஆசிரியரோ அவ் எட்டோடும் முயற்சி, துணைக்கருவி ஆகிய இரண்டையும் சேர்த்து பத்தாகக் குறித்துள்ளார். எந்த ஒரு செயலுக்கும் மனித முயற்சி இருந்தாக வேண்டும். முயற்சியின் வெளிப்பாடுதான் இயக்கம். எனவே ஒரு செயல், வடிவம் கொள்ளுதல் என்பதே முயற்சியின் வெளிப்பாட்டினால்தான் என்பது வெளிப்படை. அத்துடன் கருவி என்று கூறிய பின்னர் துணைக்கருவி என்ற ஒன்று தேவையில்லை. ஆகத் தொல்காப்பியர் குறிப்பிடும்,

• வினை
• செய்து
• செயப்படு பொருள்
• நிலன்
• காலம்
• கருவி
• இன்னதற்காக
• இதுபயன்
ஆகிய எட்டும் மூலவடிவமாக (Original source) அமைந்து நிற்றல் வெளிப்படை. சம்கிதை ஆசிரியர் குறிப்பிடும் முயற்சியும், துணைக்கருவியும்கூட அவ்வெட்டனுள் அடங்கிவிடுதல் தெளிவு. அத்துடன் ‘ஆயெட் டென்ப’ என்பதால் இவ்வரையறை தொல்காப்பியரால் அமைக்கப்பட்டதன்று என்பதும் அவருக்கு முன்பே வரையறுக்கப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. எனும் விளக்கம் இந்திய அறிவு மரபிற்கெல்லாம் மூலவடிவமாக விளங்குவது தொல்காப்பியம் என்பதை உறுதிப்படுத்தக் காணலாம். தேர்வு தருக்கத்தின் அடிப்படை நோக்கம் உண்மை காணுதல் ஆகும். மாறுபட்ட கருத்துக்களைக்கொண்ட இருவர் வாதிடும்போது மாறுபாடுகளுக்கான காரணங்களைக் களைந்து உண்மையை நிலைநாட்ட மேற்கொள்ளும்

வழிமுறைகளைத் ‘தேர்வு’ என்பர். தேர்வின் வாயிலாக உண்மைப் பொருளைத் துணிந்து கண்டறிவதால் தொல்காப்பியர் இதனை ‘துணிவு’ என்பர்.

மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்
தன்னூ லானும் முடிந்த நூலானும்
ஐயமும் மருட்கையுஞ் செவ்விதின் நீக்கித்
தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇத்
துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்

என்பது நூற்பா.

பேராசிரியர்,இளம்பூரணர் முதலான உரையாசிரியர்கள் இந்நூற்பாவிற்கு உரையின் இலக்கணம் என்ற நிலையில் பொருள் கண்டனர். எனினும் இவையாவும் பேச்சுக்கலைக்கான இலக்கணமாக இருந்து பின்னர் உரைக்கான இலக்கணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதே உண்மை. மேற்காட்டிய நூற்பாவுக்கு,

உரையாவது, மறுதலைக்கடாஅ மாற்றமும் உடைத்தாக, ஐயப்பட்டு நிற்றலும் மருண்டு நிற்றலும் நீக்கி, தன்னூலானாதல், அப்பொருண் முடிவுறக் கூறின நூலானாதல் தெளிய ஒரு பொருளை ஒற்றுமைப்படுத்துதல், இதுவே பொருளெனத் துணிதல்.......

என இளம்பூரணர் தரும் விளக்கம் எண்ணத்தக்கது. இதனால்

• எதிரி வினா எழுப்புதல்
• அவ்வினாவிற்கு உரிய விடைகளைத் தனது நூல், அல்லது அப்பொருள் குறித்த பிறநூல்களில் இருந்து மேற்கோள் காட்டி விடைகூறல்.
• ஐயம் மருட்கை இவற்றை முற்றாகக் களைதல்.
• பின்னர் இதுவே முடிந்த முடிபெனத் துணிதல்.
எனும் நான்கு கூறுகளைக் கொண்டது துணிவு என்பது தெளிவாகும். இந்நான்கையும் வடமொழியாளர், ஆப்தோபதேசம் - மேற்கோள் (அல்லது) முதல்நூல் பிரத்தியட்சம் - காட்சி அனுமானம் - உய்த்தறிவு யுக்தி - தொடர் ஆய்வு - உத்தி என வகைப்படுத்தி இந்நான்கு கூறுகளையும் கொண்டதே ‘தேர்வு’ என்பர்.

தந்திர உத்தி

இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூலவடிவங்கள் அனைத்தும் தமிழுக்கு மட்டுமே உரியன என்பதை உணர்த்தும் சான்றுகளில் தலையாயது ‘தந்திர உத்தி’ ஆகும். தந்திரம் என்ற தமிழ்ச் சொல்லிற்கு “நூல” என்பது பொருள”. “உத்தி” என்ற தமிழ்ச் சொல்லிற்கு முறை என்பது பொருள். இரு தமிழ்ச் சொற்களும் நூல் எழுதும் முறை எனப்பொருள் தந்தாலும் அவையும் கூட பேச்சுக்கலைக்கான வரைவிலக்கணம் என்பதே உண்மை. இத்தகைய வரைவிலக்கணத்தைக் கொண்டதே தந்திர உத்தி தமிழ்ச்சொற்களான இவற்றை வடமொழியாளர் தந்திர யுக்தி என்று அழைத்தனர். இத்தந்திர உத்தியின் வரலாற்றை உபநிடதங்களில் இருந்தும். ஆரண்யங்களில் இருந்தும் தொடங்குவார் சதீசுசந்திரா. கி.மு.900- த்திலிருந்து கி.மு.500 வரையிலான காலகட்டத்தில் தோன்றியதாகக் கருதப்படும் தைத்ரேய ஆரண்யம் எனும் நூலில் காணப்படும்

• சுமிர்தி
• பிரத்தியட்சம்
• ஐதிகம்
• அனுமானம்

முதலான சொற்கள் தருக்கவியலுக்குரியனவாகக் குறிக்கப்படுவதை அவர் எடுத்துக் காட்டுவார். அத்துடன் கி.மு.நான்காம் நூற்றாண்டிற்கு உரியது என நம்பப்படும் கௌடில்யரின் பொருள்நூலில் குறிக்கப்பட்டுள்ள 32 தந்திர உத்தியையும் எடுத்துக்காட்டி விரிவாக ஆராய்கின்றார்.

அரசியல் நெறிகளைக் கூறும் பொருள்நூலின் இறுதி அத்தியாயத்தில் 32 வகையான கலைச்சொற்களைத் ‘தந்திரஉத்தி’ அல்லது அறிவியல் அடிப்படையிலான ‘வாதமுறைகளின் அமைப்பு’ எனக் குறித்துள்ளார். இதே பட்டியல் சரக சம்கிதை, சுசுருத சம்கிதை என்ற இரண்டு மருத்துவ நூல்களிலும் காணப்படுகிறது. இத்தந்திர உத்தி கௌடில்யராலோ அல்லது அவ்விரு சம்கிதைகளின் ஆசிரியர்களாலோ தொகுக்கப்பட்டிருக்க முடியாது என்பது உறுதி. மாறாக இவை பட்டி மன்றங்களில் தமது கருத்துக்களை அறிவின் அடிப்படையில் நிலைநாட்ட யார் விரும்பி இருப்பாரோ அவர் அல்லது அவர்களால்தான் இது தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்(ப.11)

என்பது அவரின் முடிவாகும்.

தருக்கம் தொடர்பான அடிப்படையான சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களைக் கொண்டே அமைந்துள்ளன என்பதும் இங்கே கவனிக்க வேண்டியதாக உள்ளது. தருக்கம் பற்றிய நூல்களை ஏது சாத்திரம் என்பர். தமிழ்ச் சொல்லான ஏது என்பது வடமொழியில் N‘து என்றானது. காரண- காரிய முறையினை உணர்த்தும் இச்சொல் தொல்காப்பியரால் பல இடங்களில் ஆளப்பட்ட பெருமைக்குரியதாகும் இன்னான் ஏது ஈங்கென வரூஉம் எனவும், ஏது நடையினும் எடுத்துக்காட்டினும் எனவும் வரும் இடங்கள் அதற்கான சான்றுகளில் சில இத்தந்திரஉத்தி யாவும் தருக்கவியலுக்குரியவை என்பதைத் சிசுருத சம்கிதையின் வழியாக விளக்குவார் சதீசு சந்திரா. சிசுருத சம்கிதை, ‘தந்திர உத்தி’யின் வாயிலாகப் பட்டி மன்றத்தில் ஒரு வாதி, தன் எதிரிகளை மிக எளிதாக வீழ்த்தித் தன் பெருமைகளை நிலைநாட்ட முடியும் என்று தெளிவாக வரையறை செய்கின்றது. ஏது சாத்திரம் என்னும் அளவைஇயல் துறையில் வாதத் தன்மைகளையும், பட்டிமன்ற நெறிமுறைகளையும் வகைப்படுத்தி அமைந்த நூல்களில் ‘தந்திர உத்திக்கு’ ஈடான பழமையான நூல் எதுவும் இல்லை.என்பது அவரின் முடிவாகும்.

இவ்வாறு பட்டிமன்ற நெறிமுறைகளை விளக்கும் தந்திர உத்தியைத் தொல்காப்பியர் நூலுக்குரிய இலக்கணமாகக் கூறுகின்றார். அவ்விலக்கணமும் தமிழர்மரபின்படி முன்னோர்களால் தொகுக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பால் உணர்த்துகின்றார். அந்நூற்பா. ஒத்த காட்சி உத்திவகை விரிவிப்பின் எனத் தொடங்கி, இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும். நுனித்தகு புலவர் கூறிய நூலே என அமையும். தொல்காப்பியர் 32 என வரையறை செய்த தந்திர உத்தியைச் சரக சம்கிதை அவற்றுடன் இரண்டைக் கூடுதலாகக் சேர்த்துக் கொண்டு 34 எனக் குறித்துள்ளது. இத்தந்திர உத்தியைச் சரக சம்கிதை, சிசுருதசம்கிதை முதலான மருத்துவ நூல்களும் கௌடில்யரின், பொருள் நூலும் எடுத்துக்காட்டியுள்ள போதிலும், அத்தந்திர உத்தி அவர்களுக்கு - வட மொழியாருக்கு உரியன அல்ல எனச் சதீசு சந்திரா உறுதி செய்கிறார். அதே நேரத்தில் தமிழ்கூறு நல்லுலகத்தின் வாழ்வையும் செய்யுளையும் ஆராய்ந்து தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியரோ, அதனைத் தமிழ் ‘நூலுக்குரிய இலக்கணமாக’ வரையறை செய்கின்றார். மேலும் சரக சம்கிதை கி.மு.6- ஆம் நூற்றாண்டில் பாடல் வடிவில் தொகுக்கப்பட்டு ஏறத்தாழ கி.பி.முதல் நூற்றாண்டில்தான் எழுத்து வடிவம் பெற்றது. வாய்மொழிப்பாடல்களால் அமைந்திருந்த நிலையில், எழுதப்படும் குறிப்பிடும் மெய்யியல் கோட்பாட்டிற்குரிய பல செய்திகள், எண்ணியம்,ஓகம், உலகாய்தம் ஆகிய கோட்பாடுகளுக்குரியனவாகச் சரக சம்கிதை குறிப்பிடுகின்றது.

இம்மூன்றுகோட்பாடுகளும் ஐந்திர மரபின் சிந்தனை மரபிலிருந்து கிளைத்தவை. அதனாலும் தொல்காப்பியத்தின் காலம் சரக சம்கிதைக்கு மிகவும் முந்தியது என்பது தெளிவு. தொல்காப்பியர் நூலுக்குரிய குற்றங்களாக, 1. கூறியது கூறல் 2. மாறுகொளக் கூறல் 3. குன்றக் கூறல் 4. மிகைபடக் கூறல் 5. பொருளின்றிப் பேசுதல் 6. தெளிவின்றிப் பேசுதல் 7. கேட்போர்க்கு இனிமை பயக்காது கூறல் 8. முடிவில்லாமல் சொற்களைக் கூறிச் செல்லுதல். 9. தானே ஒரு பொருளைக் கருதிக்கொண்டு பேசுதல். 10. பொருள் அறியமுடியாதபடி பேசுதல். என வரையறை செய்வார். இவற்றைச் ‘சிதைவு’ என்பார் தொல்காப்பியர. வாதில் எதிரியை வீழ்த்த முனையும் ஒருவர், இத்தகைய குற்றங்கள் இல்லாமல் பேச வேண்டும் அப்படியில்லாமல் குற்றம் ஏற்படுமாறு பேசினால் வாதில் தோற்பதுடன் மீளாப்பழியும் ஏற்படும் என்றும் எச்சரிப்பதே அந்நூற்பாவின் நோக்கம். தொல்காப்பியர் குறிப்பிடும் இச் சிதைவை வள்ளுவர் ‘சோர்வு’ என்பார். ஆக்கமும் கேடும் அதனான் வருதலால் காத்தோம்பற் சொல்லின்கட் சோர்வு என்பது குறள். இவ்வாறு தமிழ் மரபில் சிதைவு, சோர்வு என்பவற்றை வடமொழியாளர் தோ‘ம் என்றும் நிக்கிரகஸ்தானம் என்றும் மொழியாக்கம் செய்துகொண்டனர். இதனை நியூனம் எனவும் குறிப்பர். தமிழ்மரபில் குற்றங்களைப் பத்தாகக்கூற, வடமொழியாளர் அவற்றை ஐந்தாகக் சுருக்கிக்கொள்கின்றனர். தமிழில் இருப்பவற்றைக் கூட்டியும் குறைத்தும் கொள்வது அவற்றின் மூலவடிவத்தை அடையாளம் காணமுடியாதபடிச் செய்வதற்கேயாம்.

தமிழரின் தருக்கவியல் மட்டுமின்றி, தமிழர் உருவாக்கிய அறிவுசார் நெறிகள் அனைத்தும் வடமொழியில் உள்வாங்கப்பட்டுள்ளன. தமிழின் ‘மயங்கா மரபின் எழுத்து முறையே’ வடமொழிக்கும் அதன் வழியாக, அதன் கிளை மொழிகளுக்கும் உரிய எழுத்து வடிவமாக மாறியது. தமிழன் வகுத்தளித்த எண்ணியம் வடமொழியில் சாங்கியமானது உலகாய்தம் லோகாயதமாயிற்று சிறப்பியம் வைசேடிகமாயிற்று, ஓகம், நியாய சாஸ்திரமாயிற்று. இவ்வாறு வடமொழி வடிவம் கண்ட அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் தமிழின் கொடையை வெளி உலகிற்கு அடையாளம் காட்ட முடியும். அத்துறையில் அறிஞர்கள் முனைவார்களாக.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com