Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜூலை 2009
தலையங்கம்
இன்றையத் தேவை இரட்டை முழக்கம்

வன்னி மண்ணைப் பிணக்காடாக மாற்றிய இலங்கை-இந்தியப் பகைவர்கள், அப்பிணங்களைக் கடித்துக் குதறித் துப்புவது போல், வதந்திகளையும் குழப்பங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

ஏற்கெனவே இந்திய-இலங்கை ஆளும் வர்க்கங்களின் ஊதுகுழல்களாக மாறி, ஈழவிடுதலைப்போருக்கு எதிராக எழுதி வந்த புலம் யெர்ந்த இனத்துரோகிகள் சிலர் இப்பொழுது அதிகமாகவே ஊளையிடுகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்கள் போல் செய்திகள் வெளியிட்டு வந்த வெளிநாட்டு இணையத் தளங்கள் சிலத் திறனாய்வு என்ற பெயரில் இப்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மீது சேற்றை வாரி இறைக்கின்றன.


ஆசிரியர் குழு

ஆசிரியர்
பெ.மணியரசன்
இணை ஆசிரியர்
கி.வெங்கட்ராமன்

குழு உறுப்பினர்கள்
கவிபாஸ்கர்
க.அருணாபாரதி

புதிய தமிழர் கண்ணோட்டம்,
44-1, பஜனை கோயில் தெரு,
(முத்துரங்கம் சாலை அருகில்),
கண்ணம்மாபேட்டை,
தியாகராயர் நகர்,
சென்னை - 600 017.

தொலைப்பேசி: 044- 2434 8911

[email protected]
tamizhdesiyam.blogspot.com

ஆண்டுக் கட்டணம்: ரூ.120 மூன்றாண்டுக் கட்டணம்: ரூ.300 வாழ்நாள் கட்டணம்: ரூ.1200
இப்பொழுதும் அவரை உச்சி மோந்து உயரத்தில் வைத்துப் பாராட்டுவது போல் பாவனை செய்துகொண்டு, அவரைப் பற்றி அவதூறு பரப்புகின்றன.

இந்திய உளவுத்துறையின் தமிழக ஒட்டுக்குழுக்கள் இடதுசாரி முகமூடி அணிந்துள்ளன. அவை தமிழினம் அழிந்ததைக் கெக்கலிகொட்டிக் கொண்டாடுகின்றன. இந்திய அரசையும் பார்பனியத்தையும் கண்டிப்பது போன்ற வழமையான நயவஞ்சக நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டே விடுதலைப்புலிகளையும், பிரபாகரனையும் கொச்சைச் சொற்களால் “திறனாய்வு” செய்து “இந்திய தேசியத்திற்கு” சேவை செய்கின்றன.

வெவ்வேறு வண்ணங்களில் சேற்றை வாரிவீசும் மேற்படி வகையறாக்களின் “திறனாய்வுகள்” யாவை? பிரபாகரனின் இராணுவ உத்திகள் தவறானவை; அவரது அரசியல் உத்திகள் தவறானவை: விடுதலைப்புலிகள் சொகுசு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு போனார்கள். இனிமேல் ஆயுதப் போராட்டம் கூடாது: அரசியல் நடவடிக்கைகள் தாம் தேவை; அனைத்துக் குழுக்களையும் ஐக்கியப்படுத்தவேண்டும்.

மேற்கண்ட திறனாய்வுகள் புலம் பெயர் இணைய தளங்களில் வளையவருகின்றன. தமிழக ஓட்டுக் குழுக்களும் உதிரி “அறிவாளிகளும்” பிரபாகரனைப் பாசிஸ்ட்டு என்று இழித்துப் பேசுகின்றனர். அரசியலுக்கு முதன்மை தரவில்லை, இராணுவக் குழுவாகவே செயல்பட்டார், மக்களை இணைக்கவில்லை என்று நெஞ்சாரப்பொய் பேசுகின்றனர்.

ஒரு புரட்சியில் தோல்வி ஏற்படுவதுண்டு. அதனால் புரட்சி முடிந்துபோனதாகிவிடாது. தோற்றதனாலேயே புரட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் தவறு என்றும் ஆகிவிடாது.

பொலிவியாவில் சேகுவேரோவுக்குத் தோல்வி ஏற்பட்டது. பிடிபட்டார். பொலிவியப் படை அவரை ஒரு கிரிமினல் குற்றவாளிபோல் இழிவுபடுத்தித்தான் சுட்டுக் கொன்றது.

பின்னர் இந்நிகழ்வு பற்றி செய்தியாளர்கள் பிடல் காஸ்ட்ரோவிடம் “சேகுவேரா பெரிய தவறு செய்து விட்டார் அல்லவா” என்று கேட்டனர். அதனை உடனடியாக மறுத்து காஸ்ட்ரோ கூறினார், “ஒரு நடவடிக்கை தோல்வியடைந்து விட்டதாலேயே அதற்கான நோக்கம். முயற்சி, செயல்முறை அனைத்தும் தவறு என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. கியூபப் புரட்சியில் கூட முதலில் எங்களுக்குத் தோல்விகள் ஏற்பட்டன” என்றார்.

1905-இல் ரசியப்புரட்சி குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. மீண்டும் புத்துயிர் பெற்று 1917-இல் அப்புரட்சி வெற்றி பெற்றது.

ஒரு தோல்வி வந்தவுடன், நடந்த அனைத்துமே தப்பாக நடந்து விட்டன என்று பேசுவோர் இரு வகையினராகத்தான் இருப்பர். ஒரு வகையினர் சந்தர்ப்பவாதிகள், இன்னொரு வகையினர் எதிரியின் கையாட்கள். ஒரு தோல்வி குறித்துத் திறனாய்வு செய்ய வேண்டாமா எனில், கட்டாயம் திறனாய்வு செய்யவேண்டும். அத்திறனாய்வுத் தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்த பாய்ச்சலுக்கு அணியமாவோரால் செய்யப்படவேண்டும்.

புரட்சிக்கு எந்த வகையிலும் ஆதரவாகச் செயல்படாமல், வேடிக்கை பார்த்தவர்கள் திறனாய்வு செய்யக்கூடாது. பகைவனின் பக்கச் சார்பாளர்கள் திறனாய்வு செய்யக்கூடாது. அப்படிப்பட்ட ஆட்களின் திறனாய்வை தமிழீழ விடுதலைப் புரட்சியின் ஆதரவாளர்கள் பொருட்படுத்தக் கூடாது, புறந்தள்ள வேண்டும்.

உலகின் மிகச் சிறந்த புரட்சிப் படைகளில் தலைசிறந்தது விடுதலைப்புலிகள் படை. படைத்தந்திரமும் அரசியல் தந்திரமும் ஒருங்கே இணைந்த ஆற்றல் மிகு தலைமை விடுதலைப் புலிகளின் தலைமை. அத்தலைமையின் சிகரம் பிரபாகரன். புரட்சியாளர்களும் மக்களும் ஒன்றுகலந்திருந்தது ஈழத்தில் இருந்த அளவிற்கு மற்ற நாட்டுப் புரட்சிகளில் இருந்திருக்குமா என்பது ஆராயவேண்டிய ஒன்று. அந்த அளவு மக்களும் புலிகளும் ஒன்று கலந்திருந்தார்கள்.

இப்பொழுது ஏற்பட்ட தோல்வி, இனப்பேரழிவு போன்றவை குறித்து விடுதலைப் புலிகள் திறனாய்வு செய்வார்கள். அத்திறனாய்வில், அவர்கள் கண்டறியும் தவறுகளைக் களைவார்கள். வையகம் வியக்க, பகைவர்கள் மருள மீண்டும் மண்ணுக்கும் விண்ணுக்குமாய்ப் புலிகள் எழுவார்கள். தமிழீழம் பிறக்கும்; தழைக்கும்!

தமிழகத் தமிழர்களும், புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும், வேடிக்கை பார்த்த திறனாய்வாளர்கள், விலை போய்விட்ட திறனாய்வாளர்கள் ஆகியோர் பரப்பும் நச்சுக் கருத்துகளால் குழம்பவேண்டாம்.

அதே வேளை, ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் புதிய நிலைமைகள் தோன்றியுள்ளதைக் கவனிக்க வேண்டும். புதிய பாடங்களை நாம் படித்திருக்கிறோம்.

ஞாயம், மனிதஉரிமை, தேசிய விடுதலைக்கு ஐ.நா. மன்றத்தின் அட்டவணை வழங்கும் உரிமை என்ற அடிப்படையில் உலக சமூகம் இயங்கவில்லை. ஐ.நா. மன்றம் வல்லரசுகளின் கைப்பாவை! சொந்த அரசற்ற இனம், சர்வதேச அனாதைகள் தாம். முதலாளிய சனநாயகம் ஆள்கின்ற நாடானாலும், பாட்டாளிவர்க்க சனநாயகம் ஆள்கின்ற நாடானாலும், அவரவர் சொந்தத் தேசிய நலனுக்காக பிற மக்களின் மனிதஉரிமை, தேச உரிமை ஆகியவற்றைப் பலியிடத் தயங்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டோம்.

நிலக்கோளத்தில் பத்து கோடித் தமிழர்கள் வாழ்ந்தும் நமக்கொரு நாடில்லை என்பதற்காக, நம்மை நாமே உடன் குற்றஞ்சாட்டிக் கொள்ளவேண்டும். குறிப்பாகத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களின் விழிப்புணர்வின்மை, அறியாமை, இந்தியாவைத் தங்கள் நாடாகக் கற்பித்துக்கொண்ட ஏமாளித்தனம் போன்றவற்றிற்காகத் தன்திறனாய்வு செய்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டைக் காலனியாகக் கருதி ஒடுக்கி வரும் இந்திய ஏகாதிபத்தியத்திற்குக் கங்காணி வேலை பார்த்து பதவிச்சுகம் அனுபவிக்கும் கட்சிகளை நம்பி, அவற்றின் பின்னால் திரண்டு நிற்கும் ஏமாளித்தனத்திற்காகத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களைத் தாங்களே குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களுக்கானாலும், தமிழகத் தமிழர்களுக்கானாலும் தங்களின் அடுத்தகட்ட நகர்வுக்கு முதன்மைத் துணையாய் வரப்போவது உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களே!

ஆறரைக் கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாடு இறையாண்மையுள்ள தேசமாக இருந்திருந்தால் ஈழம் எப்போதோ விடுதலை பெற்றிருக்கும். இப்பொழுதாவது ஈழத் தமிர்கள் இது குறித்து சிந்திக்கவேண்டும்.

இந்தியக் கூட்டாட்சியில், மாநிலத் தன்னாட்சியுடன் தமிழகத் தமிழர்கள் அரசியல் உரிமை பெற்று அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள் என்ற பிழையான கருத்தை ஈழத்தமிழர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

“தமிழ் இனத்திற்கு ஒரு நாடு வேண்டும் அது ஈழ தேசம் மட்டுமே” என்ற வரையறுப்பை ஈழத் தமிழர்கள் மட்டுமின்றித் தமிழ்நாட்டுத் தமிழர்களும் மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு, இந்தியாவில் ஒரு காலனியாகத் தான் இருக்கிறது என்ற நடப்பியல் உண்மையைக் கண்திறந்து காண வேண்டும்.

காவிரி,முல்லைப்பெரியாறு, பாலாறு ஆகியவற்றின் உரிமைகள் பறிக்கப்பட்டன் கடல் உரிமை பறிக்கப்பட்டது. கச்சத்தீவு, தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டு சிங்கள அரசுக்குக் கொடுக்கப்பட்டது. தென்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழர்கள் இந்திய அரசின் மறைமுக ஒப்புதலோடு சிங்களப் படையால் அன்றாடம் கொல்லப்படுகின்றனர்; அடித்து அவமானப்படுத்துகின்றனர், சிறைப்படுத்துப்படுகின்றனர்.

தமிழக இயற்கை வளங்கள், வரிவருவாய்கள் அனைத்தும் தில்லி ஏகாதிபத்தியத்தின் கருவூலத்திற்குச் சொந்தம். வௌ;ளைக்காரனின் கிழக்கிந்தியக் கம்பெனி சுரண்டியதை விடப் பலமடங்கு அதிகமாக, வடநாட்டு மார்வாரி-குசராத்தி சேட்டுகளும் இந்திய அரசும் தமிழ்நாட்டைச் சுரண்டுகின்றனர்.

குன்றளவு சுரண்டிக் கொள்கிறார்கள். குன்றிமணி அளவு திருப்பித் தருகிறார்கள். அதுவும் மானியம் என்ற இழி பெயருடன்.இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் அரசமைப்புச்சட்ட அதிகாரத்துடன் தமிழை நாளும் நசுக்கி நலிவடையச் செய்கின்றன. ஒரு தேசிய மொழி என்ற ஏற்பிசைவுகூட தமிழுக்கு இல்லை. அதேபோல் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற ஏற்பிசைவு, எந்த நிலையிலும் இல்லை. தனக்கான அடையாளமற்ற முணடங்களாகத் தமிழினம் அல்லற்படுகிறது. எதிரி கொடுத்த “இந்தியர்” என்ற அடையாளத்தைச் சுமந்து தன்னை இழந்து உழல்கறது தமிழினம்.

மாநில அரசு என்பது புகழ் சூட்டப்பட்ட நகராட்சி தான் என்று ஒரு காலத்தில் இராசாசி கூறினார். 1950-இல் வழங்கப்பட்ட கொஞ்ச நஞ்ச மாநில அதிகாரங்களையும் நடுவண் அரசு ஒவ்வொன்றாகப் பிடுங்கிவருகிறது. “இந்தியர்” என்ற போர்வையில் வடநாட்டாரும், மலையாளிகளும் மற்றுமுள்ள பிறமொழியினரும் தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகளைத் தட்டிப் பறித்து, மண்ணின் மக்களைத் தெருவில் விட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் அடிமைத் தனத்தைப் பட்டியலிட்டு மாளாது. இந்தச் சுரண்டல், ஒடுக்குமுறை, உரிமைப்பறிப்பு ஆகியவற்றை எதிர்த்து, உரியவாறு தமிழர்கள் போராடவில்லை. எனவே இங்கு ஈழத்தில் நடந்ததுபோல் எதிரியின் தாக்குதலுக்கு மக்கள் ஆளாகவில்லை.

தமிழ்நாட்டில் கூட்டாட்சிப்படி தன்னாட்சி உள்ளது; குறையொன்றுமில்லை என்று ஈழத்தமிழர்கள் கருதிவிடக்கூடாது. முல்லைத் தீவில் சிக்கித் தவித்த ஈழத்தமிழர்களும் விடுதலைப்புலிகளும், தமிழகத்தில் ஏற்படும் எழுச்சி உலகின் கவனத்தை ஈர்க்கும், பன்னாட்டுத் தலையீட்டைக் கொண்டு வந்து சேர்க்கும்: போர்நிறுத்தம் ஏற்படும் என்று கடைசிநேரத்தில் எதிர்பார்த்திருப்பார்கள். அவ்வாறு எதிர்பார்க்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

ஆனால் அவ்வாறான பேரெழுச்சி தமிழகத்தில் ஏற்படவில்லை. போராட்டங்கள் நடந்தன. பதினாறு தமிழர்கள் தீக்குளித்து மாண்டனர். இந்திய அரசை முடக்கும் அளவுக்கோ, வெளிநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கோ மாபெரும் கொந்தளிப்பு தமிழகத்தில் உருவாகவில்லை. காரணம் என்ன?

தமிழகத்தில் தமிழ்த்தேசிய இயக்கமொன்று பெரிதாக இல்லாததுதான் காரணம். இயல்பாகவே தமது விடுதலைக்காகத் தமிழகத் தமிழர்கள் இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு கோரவேண்டியுள்ளது. முற்றி நிற்கும் ஈழத்தமிழர் விடுதலைப்போரில் ஏற்பட்டுள்ள பின்னடைவை முறித்து, புரட்சி முன்னேறிச் செல்ல உந்துவிசை அளிக்கத் தமிழ்நாட்டில் புரட்சிகரத் தமிழ்த் தேசிய இயக்கம் வலுப்படவேண்டிய தேவை உள்ளது.

ஈழவிடுதலையை ஆதரிக்கும் எல்லாத் தேர்தல்கட்சிகளும் ஒரு வரம்புக்குமேல் செயல்படமாட்டா. அவற்றின் கயிறு தில்லிக் கட்டுத்தறியில் கட்டப்பட்டுள்ளது. கயிற்றின் நீளத்திற்கேற்ப ஈழ விடுதலையை ஆதரித்து அக்கட்சிகள் பேசும், போராட்டம் நடத்தும் அவ்வளவே. தேர்தல் வந்துவிட்டால் இனப்பகைவர்கள் மற்றும் இனத்துரோகிகள் தலைமையில் இக்கட்சிகள் கூட்டணி சேரும். இந்த நடப்பியல் உண்மையை ஈழத்தமிழர்களும் உலகெங்கும் பரவி வாழும் தமிழ்ச் சமூகமும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, இனிமேல் நம்முன் இருக்க வேண்டியது “தமிழ்ஈழம்” என்ற ஒற்றை முழக்கம் மட்டுமல்ல, “தமிழ்த் தேசக் குடியரசு” என்ற இன்னொரு முழக்கமும் ஆகும்.

தமிழீழீழம் வெல்லட்டும்
தமிழ்த்தேசம் மலரட்டும்

என்ற இரட்டை முழக்கம் தான் தமிழர்களுக்கு இரண்டு தாயகங்களை உருவாக்கும். இதற்கான செயல்முறைப் போக்கு ஒன்றை யொன்று வலுப்படுத்தும். தமிழகத் தமிழர்கள் தங்களின் தாயகப்போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டே ஈழவிடுதலைப் போரை ஆதரிக்கவேண்டும். ஈழத்தமிழர்கள் தங்கள் தயாகப் போரை முன்னெடுத்துக் கொண்டே தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.

இந்த நிலைபாடு எடுக்க இருநாட்டுத் தமிழர்களும் இந்திய அரசு குறித்த ஒற்றைப் புரிதலுக்கு வரவேண்டும். தமிழர்களுக்கு நாடு அமைவதை இந்திய அரசு இங்கேயும் ஏற்காது, அங்கேயும் ஏற்காது. இந்திய அரசு தமிழ் இனத்தின் பகை சக்தியாக உள்ளது என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளவேண்டும்.

இந்திய அரசுக்கு நட்புக்கை நீட்டும் அரசியல் உத்தி ஈழத்தில் தோல்வியடைந்துள்ளதைக் கணக்கில் கொள்ள வேண்டும். இந்திய அரசுக்கு நல்லது கூறுவதுபோல் கூறி, அதனை நம்பக்கம் இழுத்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாட்டில் ஈழ ஆதரவாளர்களில் சிலர் கருவது ஏமாளித்தனம் அன்றி வேறல்ல.

ஈழத்தில் நம் இனத்தை அழிப்பதில் பெரும் பங்கு வகித்தது இநதிய அரசுதான். இந்த இன அழிப்பில் சிங்களவர்களுக்கு இந்த அளவு இந்தியா துணைபோனதற்குக் காரணம், சீனாவிடம் இலங்கை நெருங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளும் உத்தி என்று கருதினால் அது பிழையாகும். சிங்களவர்களுக்கு இவ்வளவு துணைபோன பின்னரும், இலங்கை அரசு இந்தியாவை விட சீனாவிடம் கூடுதல் நெருக்கம் கொண்டுள்ளது. இதனால் இந்தியா தான் வகுத்துள்ள இலங்கைக் கொள்கையில் அரசியல் தோல்வி கண்டு விட்டது என்று பொருளல்ல. இந்திய அதிகார வர்க்கத்திற்கு நமக்குத் தெரிந்ததை விட மிக அதிகமாகவே சிங்களவர்களைப் பற்றியும், சீனர்களைப் பற்றியும் தெரியும்.

இந்தியப் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முதலில் ஒழித்துக்கட்ட வேண்டியவர்கள் தமிழர்களா அல்லது சீனாகளா, என்ற ஒரு நிலை வரும்போது தமிழர்களையே இந்தியா முதலில் ஒழிக்கும். சீனர்களைவிட, தமிழர்கள் ஆபத்தானவர்கள் என்பது தான் இந்திய அரசின் கணக்கு. இந்த நடப்பியல் உண்மையை இருநாட்டுத் தமிழர்களும், உலகத் தமிழர்களும பார்க்கத் தவறக் கூடாது.

எனவே இன்று உலகத் தமிழர்கள் முன் இருக்க வேண்டியது ஒற்றை முழக்கமல்ல இரட்டை முழக்கம்!

தமிழீழம் வெல்லட்டும்! தமிழ்த்தேசம் மலரட்டும்!Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com