Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜனவரி 2009

நீதிபதிகளை அமர்த்த - நீக்க புதிய அமைப்பு முறை வேண்டும்
கி.வெங்கட்ராமன்

நீதித்துறையின் சுதந்திரம் என்பது மக்களாட்சியின் நிலைத்தன்மைக்கு மிக இன்றியமையாத ஒன்றாகும். ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சி நிலை, அரசமைப்புச் சட்டம் ஆகிய வரம்புக்குள்தான் அந்நாட்டின் நீதித்துறை செயல்படமுடியும் என்றாலும், அதற்குள் நீதித்துறையின் தற்சார்பு நிலை நாட்டப்படுவது அவசியம். அதே நேரம் நீதித்துறை முனைப்புவாதம் (Judicial Activism) என்ற பெயரால் நீதித்துறை மேலாதிக்கம் தலை தூக்கினால் அதுவும் மக்களாட்சியை சீர்குலைத்துவிடும். சட்டமியற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற அதிகாரத்தையோ, நிர்வாகத் துறையின் அதிகாரத்தையோ நீதிமன்றங்கள் ஆக்கிரமிப்பது மக்களாட்சிக்குக் கேடு பயக்கும்.

முதலாளிய அமைப்போ, நிகரமை அமைப்போ, ஒரு நாட்டின் சமூக அமைப்பு எதுவாக இருந்தாலும் அங்கு நீதி வழங்கல் முறை வெளிப்படையாகவும், பக்கச் சார்பற்று புறநிலை உண்மைகளுக்கு எதிர்வினை ஆற்றக் கூடியதாகவும் இருத்தல் அவசியம். இதற்கு நீதிபதிகள் நியமனம் தொடங்கி நீதித்துறையின் அனைத்துச் செயல்பாடுகளும் வெளிப்படையானதாக இருக்கவேண்டும். ஒருபுறம் ஆட்சியாளர்களின் குறுக்கீடு இன்றியும், மறுபுறம் மக்களாட்சியின் கண்காணிப்புக்கு உட்பட்டதாகவும் இருக்கவேண்டும்.

நீதித்துறை சுதந்திரம் என்ற பெயரால் நீதிபதிகள் தன்கட்டுபாட்டுக்கு மட்டுமே உட்பட்டவர்கள், எந்தவகைக் கண்காணிப்புக்கும் அப்பாற்பட்ட வர்கள் என்று வைப்பது நீதித்துறை சர்வாதிகாரத்திற்கும், ஊழலுக்கு வழிவகுக்கும். நீதிமன்றங்களின் நடுவுநிலை குலைந்துவிழும். மக்கள் தங்களுக்குள் எழும் சிக்கலுக்கு மட்டுமின்றி, ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம் ஆகியோரின் அத்துமீறலுக்கு எதிராகத் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கும் நீதிமன்றங்களையே இறுதிப் பாதுகாப்பு நிறுவனமாக நம்புகிறார்கள். நீதித்துறை பிறழுமானால், அது சமூக அமைதியைக் குலைத்து, அடியாள ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும்.

கடந்த சில ஆண்டு காலமாக இந்தியாவில் தலைதூக்கிவரும் நீதிமன்ற முனைப்புவாதமும், நீதிபதிகள் ஊழலும் தீவிரமான மறு சீரமைப்பைக் கோருகின்றன.

அண்மையில் ஒரு நிகழ்வு....

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஆதரவாக சேலம் நீதிபதி அமுதா வழக்குரைஞர் அரிபாபுவை நிர்ப்பந்தப்படுத்தியது கமுக்கமாகப் பதிவு செய்யப்பட்டு 'மக்கள் தொலைக்காட்சி'-யில் 29, 30.11.08-ல் ஒளிபரப்பானது. அதனைப் பார்த்து பலரும் அதிர்ந்து போனார்கள்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அடாவடி நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட 31 குடும்பத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சார்பில் வழக்குரைஞர் அரிபாபு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அரிபாபு மீது ஏற்கெனவே ஒரு 'கொலை முயற்சி வழக்கு' நடந்து வருகிறது. அதுபற்றிப் பேசுவதற்காக என்று தமது நீதிமன்றத்தின் நீதிபதி அறைக்கு (சேம்பர்) அரிபாபுவை அழைத்தார் அமுதா. ”உங்கள் மீதான கொலை முயற்சி வழக்கை வாபஸ் பெற ஏற்பாடு செய்கிறேன். அமைச்சர் மீதான பொதுநல வழக்கைத் திரும்பப்பெறுங்கள்”; என்று அரிபாபுவை வலியுறுத்தினார். இந்த உரையாடல் கமுக்கமாக பதிவு செய்யப்பட்டது.

ஒளிப்படக் குறுந்தகடுகளை அரிபாபு செய்தியாளர்களிடம் போட்டுக் காட்டினார். மக்கள் தொலைக்காட்சியிலும் அது ஒளிபரப்பானது. இதைப் பார்த்த பலர் ”நீதிபதியே இப்படியா? ” என்று அதிர்ச்சி தெரிவித்தனர். ஆயினும் நீதித்துறை ஊழலை உற்று நோக்கி வருபவர்களுக்கு இது பெரிய வியப்பை ஏற்படுத்தாது. கீழமை நீதிமன்றத்திலிருந்து, உச்சநீதிமன்றம் வரை நீதித்துறையானது ஊழலில் உலுத்து வருகிறது.

இந்த ஊழல் சீர்கேட்டிற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பலரும் உள்ளானவர்கள்தாம். தலைமை நீதிபதிகளாக இருந்த கே.என்.சிங், ஏ.எஸ். ஆனந்த், எம்.எம். பூஞ்சி, ஒய்.கே. சபர்வால் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வலுவாக முன் வைக்கப்பட்டன. பணம் அல்லது பொருள் பெற்றுக்கொண்டு ஒரு தலைச்சார்பாக தீர்ப்பு வழங்கியது, தமது உறவினர் அல்லது வேண்டியவர் வழக்குரைஞராக வாதாடும் வழக்கை வேண்டுமென்றே தன் முன்னால் விசாரணைக்கு வரவழைத்து, நீதியை வளைப்பது என்பன போன்ற குற்றச்சாட்டுகளும், வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது எழுந்தன.

கடந்த 2008 ஆகஸ்ட் 13 அன்று பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் அம்மையாருக்கு தூதஞ்சலில் (கூரியர்) கட்டுக்கட்டாக பணம் வந்தது. மொத்தம் 15 இலட்சரூபாய் நீதிபதி கவுர் உடனே காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்து, புகார் செய்தார். அடுத்த நாள் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் இன்னொரு நீதிபதி நிர்மல் யாதவுக்கு இதேபோல் தூதஞ்சலில் 15 இலட்சம் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அவர் அதைப் பெற்றுக்கொண்டு கமுக்கமாக இருந்துவிட்டார்.

இரவீந்தர்சிங்பாசின் என்ற விடுதி உரிமையாளர் இந்தத் தொகையை அனுப்பியிருக்கிறார். நிர்மல் யாதவுக்கு அனுப்ப வேண்டிய கையூட்டுத் தொகையைத்தான் முதல் நாள் 'தவறுதலாக' நிர்மல் கவுருக்கு அனுப்பியிருக்கிறார். இவற்றையெல்லாம்விட 'காசியாபாத்'; வழக்கு நீதித்துறை எவ்வாறு ஊழலில் புழுத்துவிட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றிய நான்காம் நிலை, மூன்றாம் நிலை ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (பிராவிடன்ட் பண்ட்) யிலிருந்து பொய்க் கையெழுத்திட்டு பணத்தைக் களவாடுவது பல ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிறது. நீதிமன்றத்தின் கீழ்நிலைப் பணியாளாிடமிருந்து, நீதிபதிகள் வரை இந்த திருட்டுக் கும்பலில் அடக்கம். இவ்வாறு களவாடப்பட்ட தொகை 23 கோடி ரூபாய் ஆகும். இதனைப் பங்கு போட்டுக் கொண்டவர்களில் 34 பேர் நீதிபதிகள் ஆவர்.

”ஒருவர் தற்போது பணியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி, ஒருவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியிலிருக்கும் நீதிபதி, 8பேர் ஏற்கெனவே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். ஒருவர் கல்கத்தா உயர்நீதிமன்றத்திலும், ஒருவர் உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்றத்திலும் நீதிபதிகளாக இருந்தவர்கள். 22 பேர் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருந்தவர்கள்”; (ஆதாரம்: தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு - 17.09.2008)

இந்தக் கையாடலில் ஈடுபட்டு பிடிபட்ட அசுதோஷ் அஸ்தானா என்பவர் யார் யாருக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது, யார் யாருக்கு வீடுகட்ட கட்டுமானப் பொருள்களாகக் கொடுக்கப்பட்டது, யார் யாருக்கு மின்னணுப் பொருள்களாகக் கொடுக்கப்பட்டது, யார் யாருக்கு வெளிநாட்டு மது பானங்களாகத் தரப்பட்டது என்பதை லாரி ரசீது உட்பட காவல்துறையிடம் ஒப்படைத்தார். இதற்கானக் குற்றப்பட்டியலை 2008, ஜனவாி 21-ல் அலகாபாத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் காவல்துறை ஒப்படைத்து, வழக்கு தொடுக்க அனுமதி கேட்டது. 2008 பிப்ரவரி 15-ல் அலகாபாத் தலைமை நீதிபதி வழக்குப் பதிய இசைவு அளித்து ஆணையிட்டார்.

மற்றவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவாகி, கைது உள்ளிட்ட வழக்கு நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. ஆனால் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி வேண்டும்.

கடந்த ஜூன் மாதம் (2008) இதற்கான மனுவை அலகாபாத் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முன் வைத்தார். அதன் மீது தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மேற்கொண்ட அணுகுமுறை மிகவும் கொடுமையானது. தலைமை நீதிபதியின் அறிவுறுத்தல்படி உச்சநீதிமன்றப் பதிவாளர் அலகாபாத் காவல்துறைக் கண்காணிப் பாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

”உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் தாங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை எழுத்துப் பூர்வமாக அளியுங்கள். அத்துடன் தங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதரவான ஆவணங்களையும் அனுப்பி வையுங்கள்”; என அக்கடிதம் கோரியது. கண்காணிப்பாளரும் அவ்வாறே அனுப்பி வைத்தார்.

அதன்மீது தொடர்புடைய நீதிபதிகளிடம் எழுத்துவழி விசாரணை தலைமை நீதிபதியின் அறையில் (சேம்பரில்) கமுக்கமாக நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த பதில் மீது வாய்மொழி நேரடி விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த விசாரணை முறையை எதிர்த்து அலகாபாத் வழக்கறிஞர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி அதை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பினர். பல்வேறு மனித உரிமை அமைப்பினர் கண்டனக் குரல் எழுப்பினர்.

'அஸ்தானாவின் வாக்குமூலம் மற்றும் அவர் சமர்ப்பித்த ரசீதுகள் மற்றும் அளிக்கப்பட்டுள்ள சான்றாவணங்கள் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப் போதுமானவை. அதன்மீது வழக்குத்தொடுக்க வேண்டும்'; என வலியுறுத்தினர்.

காசியாபாத் ஊழலில் தொடர்புடைய நீதிபதிகள் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த அஜித் பசாயத், சிர்புர்கர், ஜி.எஸ்.சிங் ஆகியோர் அடங்கிய ஆயம் கடந்த செப்டம்பர் 23(2008) அன்று சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ விசாரணை நடத்தி, பதவியில் உள்ள உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் குற்றவாளிகள்தாம் என்று கண்டறிந்தாலும், நேரடியாக அவர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடுத்துவிட முடியாது. முதலில் அவர் தமது பதவியிலிருந்து விலகவேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற நீதிபதிகள் எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும் அவர்களைப் பதவி விலக்குவது அவ்வளவு எளிதான செயல் அன்று. ஏழு கடல்தாண்டி, ஏழு மலைதாண்டி, எட்டாவது மலையின் உச்சி மரத்தின் பொந்துக்குள் இருக்கும் ஆந்தையின் கழுத்தைத் திருகினால்தான் கெட்டவனான அரக்கனைக் கொல்ல முடியும் என்று பாட்டி கதையில் சொல்வதுபோல் பல தடைகளைக் கடந்துதான் குற்றம் செய்கிற உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது 'கை வைக்க' முடியும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதி 124(4) கூறும் நிபந்தனைகள் அவ்வளவு கடுமையானவை. இதற்கு மேலும் 1991-ஆம் ஆண்டில் இந்திய உச்சநீதிமன்ற ஆயம் அளித்த தீர்ப்பு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டது. 'நீதிபதி வீராசாமி-எதிர்- இந்திய ஒன்றியம்' என்ற வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட ஆயம் 3-க்கு 2 என்ற சிறிய பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் உயர்மன்ற நீதிபதிகள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) தாக்கல் செய்வதையே அரிதாக்கியது. (K. Veerasami Vs Union of India(1991) 3 sec 655)

உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றத்துக்காக குற்றவியல் வழக்குத் தொடுக்க வேண்டுமென்றால், வழக்கு குறித்த விவரங்களையும், ஆதாரங்களையும் முன்வைத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இந்தியக் குடியரசுத் தலைவர் விண்ணப்பித்து ஆலோசனை கோர வேண்டும். தலைமை நீதிபதி அனுமதித்தால் வழக்கு நடவடிக்கையைத் தொடங்கலாம். இல்லையென்றால் தொடங்கக்கூடாது. ஊழல் குற்றச்சாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதே எழுந்தால் உச்சநீதிமன்றத்தின் வேறு நீதிபதியை அல்லது நீதிபதிகளைக் கொண்டு குடியரசுத் தலைவர் இதே வகை ஆலோசனை நடத்தவேண்டும். அவர்கள் அனுமதித்தால் மட்டுமே குற்ற வழக்கு நடவடிக்கைகளைத் தொடங்கலாம்' என்பதே தீர்ப்பின் சாரம்.

உயர் பதவி வகிப்போர் மீது ஊழல் வழக்குத் தொடரும்போது, அவர்களின் மேல் அதிகார மட்டத்தில் முதல்நிலை ஆதாரங்களை (Prbma Facie) வைத்து அனுமதி பெற்றால் போதுமானது என்ற நிபந்தனை ஊழல் தடுப்புச் சட்டத்தில் உள்ளது. ஆனால் மேற்கண்ட தீர்ப்பு அதையும் தாண்டி கடும் நிபந்தனை விதித்து, உயர்மன்ற நீதிபதிகளைச் சட்டத்தின் ஆட்சிக்கு அப்பால் நிறுத்தி 'பாதுகாக்கிறது'.

இவ்வாறு அனுமதி பெற்று விசாரணை நடத்தினாலும், கீழமை நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடுப்பதில் சிக்கல் இருக்கிறது. முதலில் அவரைப் பதவி விலக்க வேண்டும். மற்ற பதவிகளில் உள்ளதுபோல் உயர்மன்ற நீதிபதிகளை இடைநீக்கம் (தற்காலிகப் பணி நீக்கம்) செய்வதற்கு சட்ட ஏற்பாடு ஏதுமில்லை. பதவியில் வைத்துக்கொண்டே கீழமை நீதிமன்றத்தில் வழக்கைத் தொடருவது நியாயமான விசாரணையை சீர்குலைக்கும். மேலும் ஊழல் குற்றச்சாட்டில் விசாரணையில் உள்ள ஒருவர் உயர்மன்ற நீதிபதியாகத் தொடர்வது நீதித்துறையின் கண்ணியத்தையே குலைக்கும்; நடுவுநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும். கீழமை மன்றத்தில் உயர்நிலை நீதிமன்ற நீதிபதியை விசாரணைக்கு நேர் நிறுத்துவதும், சட்டப்படி ஆகிற செயல் அன்று.

எனவே அவரை பதவி விலக்கிய பிறகே வழக்கைத் தொடர முடியும். உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற நீதிபதிகளை பதவி விலக்க வேண்டும் என்றால் அதைக் குடியரசுத் தலைவர்தான், அதாவது நடுவண் அரசுதான் செய்யமுடியும். அதற்கு மூன்று கட்டங்களைத் தாண்ட வேண்டும். இதனை அரசமைப்புச் சட்ட விதி 124 (4) விளக்குகிறது.

முதலில் நீதிபதியைப் பதவி விலக்கக் கோரும் தீர்மான மனுவில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் குறைந்தது 100 பேர் அல்லது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் குறைந்தது 50 பேர் கையெழுத்திட்டு தொடர்புடைய அவைத் தலைவருக்கு அனுப்பவேண்டும்.

அவைத் தலைவர் அத்தீர்மானத்தைத் தொடரலாம் என்று முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு அவைத் தலைவர் முடிவெடுத்தால் அதற்கு மூன்றுபேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமிக்கவேண்டும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது அம்மன்றத்தில் பதவியில் உள்ள ஒரு நீதிபதி, ஏதாவதொரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ஒரு நீதியாளர் (Jurist) ஆகிய மூவர் கொண்டதாக அக்குழு இருக்கும்.

இரண்டாவதாக இக்குழு உயர்மன்ற நீதிபதி மீதான குற்றச்சாட்டை முழுமையாக விசாரிக்கும். குற்றமுள்ளவர்தான் என அக்குழு அறிக்கை அளித்தால், அவைத்தலைவர் நீதிபதி பதவி விலக்கத் தீர்மானத்தை அவையில் அனுமதிப்பார். விசாரணைக்குழு நீதிபதி மீது பதவி விலக்கத் தீர்மானத்தைத் தொடரும் அளவுக்கு குற்றச்சாட்டு வலுவாக இல்லை என்று தீர்மானித்தால் அவைத்தலைவர் அத்தீர்மானத்தை விவாதத்திற்கு அனுமதிக்கமாட்டார்.

அடுத்து மூன்றாவது கட்டம். அவைத் தலைவர் அனுமதித்தால் நாடாளுமன்றத்தில் நீதிபதி பதவி விலக்கல் தீர்மானம் விவாதிக்கப்படும். ஒரு அவை மட்டும் விவாதித்தால் போதாது. மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளும் விவாதிக்க வேண்டும். இரண்டு அவைகளிலும் பதவியில் உள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவோடு அத்தீர்மானம் நிறைவேறவேண்டும். மேலும், அப்பெரும்பான்மை என்பது அவையில் வந்திருந்து வாக்களித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையாக இருக்கவேண்டும்.

இவ்வாறு நிறைவேற்றப்படும் நீதிபதி பதவி விலக்கத் தீர்மானத்தை, அக்கூட்டத்தொடர் முடிவதற்குள்ளாகவே குடியரசுத் தலைவருக்கு அவைத்தலைவர் அனுப்பி வைக்கவேண்டும். அதன் பிறகே நடுவண் அமைச்சரவை பாிந்துரை அடிப்படையில் இந்தியக் குடியரசுத் தலைவர் குற்றச்சாட்டுக்கு உள்ளான உயர்மன்ற நீதிபதியைப் பதவியிலிருந்து விலக்கமுடியும். இவ்வாறு பதவியிழந்த நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு நடந்து, பிறகு அவர் தண்டிக்கப்படவேண்டும்.

இந்திய நீதித்துறை வரலாற்றில் இப்போதுதான் சௌமித்ரா சென் என்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யுமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் குடியரசுத் தலைவர்க்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார். இந்த சௌமித்ரா சென் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி. இவர் கீழமை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்தபோது, ஒரு வழக்கில் தற்காலிகமாக நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் (ரிசீவர்) இவரை அந்நீதிமன்றம் நியமித்து, அவாிடம் 32 இலட்சம் ரூபாயை ஒப்படைத்தது. நீதிமன்றத்திற்கு உரிய அத்தொகையை அவர் கையாடல் செய்துவிட்டார்.

இந்த வழக்கில்தான் சௌமித்ரா சென் மீது இவ்வாறு தலைமை நீதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். ஊழல் நிகழ்வு நடந்தது 1993-ஆம் ஆண்டு. 15 ஆண்டுகள் கழித்து இனிதான் அவர் மீதான வழக்கு தொடங்கவேண்டும். இதுகூட அரிதான நிகழ்வுதான். ஏனெனில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் உள்ளிட்ட பலர் ஊழல் செய்துவிட்டு தப்பிவிட்டனர்.

எனவே நீதிபதிகள் குறித்து எழும் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதும், அவ்வாறான நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்குவதும் எளிதாக்கப்படவேண்டும். இதற்கான சட்ட ஏற்பாடுகள் உருவாக வேண்டியது அவசியம். இச்சிக்கலுடன் தொடர்பு டைய அடுத்த முக்கியப் பிரச்சினை உயர்மன்ற நீதிபதிகள் நியமனம் குறித்தது.

எடுத்துக்காட்டாக, மேலே சுட்டிக்காட்டிய சௌமித்ரா சென் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பே கையாடல் செய்தவர். அவர் எப்படி நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுகிறது. அதேபோல் இப்போது ஏ.கே. கங்குலி, ஆர்.எம். லோடா, எச்.எல்.தத்து ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருப்பதும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏ.பி. ‘h, ஏ.கே. பட்நாயக், வி.கே. குப்தா ஆகிய உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதித் தேர்வில் புறக்கணிக்கப்பட்டதாக திறனாய்வு எழுந்துள்ளது.

இச்சிக்கலுக்கு உயர்மன்ற நீதிபதிகள் நியமன முறை ஒரு முக்கியக் காரணம். அரசமைப்புச் சட்டத்தின் விதி 124 (2) உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன முறையை வரையறுக்கிறது. அதேபோல்; விதி 217, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்துப் பேசுகிறது. இரண்டும் ஒத்த தன்மையான வாசகங்களைக் கொண்டவை.

விதி 124(2) கூறுவதாவது :

”உச்சநீதிமன்றத்தின் ஒவ்வொரு நீதிபதியும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். அவ்வாறு நியமிப்பதற்கு முன் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திலும், மாநில உயர்நீதிமன்றங்களிலும் உள்ள நீதிபதிகளில் தாம் தேவை என்று கருதுகிற நீதிபதிகளிடம் ஆலோசனை கலப்பார். ஆயினும், இந்தியத் தலைமை நீதிபதி நியமனம் தவிர மற்ற நீதிபதிகள் நியமனத்தின் போது, இந்தியத் தலைமை நீதிபதியிடம் குடியரசுத் தலைவர் கட்டாயம் ஆலோசனை கலக்கவேண்டும்”.

குடியரசுத் தலைவர் இறுதியில் நடுவண் அமைச்சரவையின் பாிந்துரைக்குக் கட்டுப்பட்டவர் என்பதை அரசமைப்புச் சட்டம் தெளிவாக வலியுறுத்துகிறது. எனவே உயர்மன்ற நீதிபதிகளை இந்திய அமைச்சரவை நியமிக்கிறது என்பதே உண்மைநிலை. இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் இந்த முறையில் ஒரு சிக்கல் தலை தூக்கியது.1975-ல் அவசரநிலை அறிவித்து பேயாட்சி நடத்தினார் இந்திராகாந்தி. பணிமூப்பு அடிப்படையில் மூத்த நீதிபதிகளாக இருந்த மூவரைப் புறக்கணித்து ஏ.என். ரேயை தலைமை நீதிபதியாக நியமித்தார். ஒரே அடியில் 56 உயர்நீதிமன்ற நீதிபதிகளை மூலைக்கு மூலை இடமாற்றம் செய்து அறிவித்தார். தமது ஆட்சிக்குக் கட்டுப்பட்ட பொம்மை நீதித்துறையை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் இவை.

இது நீதித்துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1977-ல் இந்திராகாந்தி தேர்தலில் தோற்று, அவசரநிலை விலக்கிக் கொள்ளப்பட்டாலும், ஆட்சியாளர்களின் அத்துமீறலிலிருந்து நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எச்சாிக்கை உணர்வு நீதிபதிகளிடத்தில் ஏற்பட்டது. இந்நிலையில் உயர்நீதி மன்ற நீதிபதிகள் பணி இடமாற்றம் குறித்த வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. ”சங்கல்சந்த் வழக்கு” எனப்பெயர் பெற்ற அவ்வழக்கில் (Union of India-Vs- S.H. Seth-(1978) 1, SCR 423) உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியமானது.

உயர்மன்ற நீதிபதிகள் நியமனத்தில் தலைமை நீதிபதியிடம் குடியரசுத் தலைவர் ஆலோசனை கலப்பது கட்டாயம் என அரசமைப்பு விதி 124 (2) கூறுவதை எடுத்துக்காட்டியிருக்கிறோம்.

இந்த ஆலோசனை கலப்பின் போக்கில் தலைமை நீதிபதியின் கருத்துக்கு என்ன பாத்திரம் என்பதை சங்கல்சந்த் வழக்குத் தீர்ப்பு வரையறுத்தது. உயர்மன்ற நீதிபதிகள் நியமனத்திலும், இடமாற்றத்திலும் இந்தியத் தலைமை நீதிபதியின் கருத்துக்குக் குடியரசுத் தலைவர் முதன்மை (Supremacy) கொடுக்கவேண்டும் என அத்தீர்ப்பு வலியுறுத்தியது. தலைமை நீதிபதியின் கருத்துக்கு மாறான முடிவைக் குடியரசுத் தலைவர் மேற்கொள்வதற்கு தகுந்த காரணங்கள் முன் வைக்கப்படவில்லை என்றால், அம்முடிவு உள்நோக்கம் உடையது என்றே கருதப்படும் எனவும் எச்சாித்தது. இது குறித்த வழக்கு ஏதேனும் எழுந்தால், தலைமை நீதிபதியின் கருத்து தவறானது என்று மெய்ப்பிக்கப்படும் வரை குடியரசுத் தலைவாின் முடிவு உள்நோக்கம் உடையது என்ற பார்வையிலேயே நீதிமன்றம் இப்பிரச்சினையை அணுகவேண்டும் என்றும் வழிகாட்டியது.

உச்சநீதிமன்ற ஆயத்தின் சார்பில் இத்தீர்ப்பை முன் வைத்தவர் மக்களியக்கங்களின் போற்றுதலுக்கு உரிய நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் ஆவார். ஆட்சியாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக நீதித்துறையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வி.ஆர். கிருஷ்ணய்யர் இத்தீர்ப்பை வழங்கினாலும், இது நீதித்துறை சர்வாதிகாரத்திற்கு வழிகோலியது.

நீதிபதிகள் நியமனத்தில் தலைமை நீதிபதிக்கு கிருஷ்ணய்யர் தீர்ப்பு ரத்து அதிகாரத்தை (Veto) தந்துவிடவில்லை. முதன்மை (Supremacy) தான் வழங்கியது என்றாலும், அது வைத்த நிபந்தனைகள் தலைமை நீதிபதியின் கருத்தை மீறவொண்ணாததாக மாற்றியது. இதற்கு அடுத்து 1993-ல் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு தலைமை நீதிபதியை நீதிபதிகளை நியமிக்கும் முற்றதிகாரம் கொண்டவராக மாற்றியது. நீதிபதிகள் நியமனத்தில் அரசை முற்றிலும் நீக்கி வைத்தது. நீதிபதிகள் நியமனம் குறித்து முடிவெடுக்க தலைமை நீதிபதி தலைமையில் மொத்தம் 3 நீதிபதிகள் கொண்ட நியமன மன்றத்தை (Collegium) நிறுவவேண்டும் என்றது. இம்மன்றத்தைத் தலைமை நீதிபதி நியமித்துக்கொள்வார் என்று கூறியது. நியமன ஆணை வழங்குவது மட்டுமே குடியரசுத் தலைவாின் அதாவது அரசின் பணி. தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையிலான ஆயமே இத்தீர்ப்பு வழங்கியது. (Supreme Court Advocates Record-Vs- Union of India-1993, 4 SCC 441).

பின்னால் 1998-ல் இன்னொரு தீர்ப்பின் வழி இந்த நியமன மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தலைமை நீதிபதி உள்ளிட்டு 5 பேர் என விரிவடைய வைத்தது உச்சநீதிமன்றம். இது இப்போது நடப்பில் உள்ளது.

ஏ.கே. கங்குலி, ஆர்.எம். லோடா, எச்.எல். தத்து ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதில் குறைபாடு இருப்பதைச் சுட்டிக்காட்டி இந்திய அரசு அப்பட்டியலை மீளாய்வுக்காக தலைமை நீதிபதியிடம் அனுப்பியது. மீளாய்வு செய்ய ஒன்றுமில்லை எனக்கூறி தனது முடிவையே மீண்டும் அரசுக்கு அனுப்பிவைத்தார் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்.

அந்த மூவருக்கும் நியமன உத்தரவு வழங்குவதைத் தவிர அரசுக்கு வேறுவழியில்லை. நீதிமன்ற மேலாண்மை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் நியமன மன்றத்தைக் கலக்காமலேயே தலைமை நீதிபதிகள் தன்னிச்சையாக நியமன முடிவை எடுக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் நீதிபதியாக இருந்த அசோக்குமார் உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டது குறித்த வழக்கில் அரசு முன் வைத்த ஆவணம் இதனைக் கூறியது.

”1999 சனவாி 1 முதல் 2007 ஜுலை 1 வரை 351 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஒருமுறை கூட நீதிபதி நியமன மன்றத்தை (Collegium) அவ்வப்போதிருந்த தலைமை நீதிபதிகள் கலந்து ஆலோசிக்கவில்லை”. (தி இந்து 24.10.2008)

அதாவது நீதிபதிகள் நியமனத்தில் தலைமை நீதிபதிகள் சர்வாதிகாரமாகத்தான் செயல்பட்டு வருகிறார்கள். இவ்வாறு எந்தவகைக் கலந்தாய்வும் இல்லாமல் தலைமை நீதிபதிகள் தன்னிச்சையாக முடிவெடுப்பதால் சௌமித்ரா சென்கள் நீதிபதிகளாக வரமுடிகிறது. நியமன அதிகாரம் பெற்றவர்களாக இருப்பதால் தலைமை நீதிபதிகளே ஊழல் கறை படிந்தவர்களாக மாறுவதைத் தடுக்க முடியவில்லை.

நீதிபதி நியமன முறை வெளிப்படையானதாகவும், யாருடைய செல்வாக்கிற்கும் உட்படாததாகவும் இருக்கவேண்டும். முற்றிலும் அரசின் கையிலோ, அல்லது தலைமை நீதிபதியின் கையிலோ இந்த அதிகாரத்தை விட்டு வைக்கமுடியாது; அது நல்லதல்ல. பிரிட்டனில் அரசுதான் நீதிபதிகளை நியமிக்கிறது.

வடஅமொிக்காவில் செனட்டின் ஒப்புதலுக்கு உட்பட்டு குடியரசுத் தலைவர் உயர்நிலை நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கிறார். அங்கு இறுதி அதிகாரம் செனட்டுக்கே உரியது. இந்திய அரசமைப்புச் சட்டம் வரைகிற போது இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டது. இது குறித்து வரைவுக் குழுத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் கூறியது கவனிக்கத் தக்கது.

இந்திய அரசமைப்பு, ”குடியரசுத் தலைவரை நீதிபதி நியமனத்தில் உச்சபட்ச அல்லது முழுமையான அதிகாரம் உடையவராக ஆக்கவில்லை. அதேநேரம் நாடாளுமன்றத்தின் செல்வாக்கிற்கும் இப்பணியை உட்படுத்தவில்லை. . . . . . . .

தலைமை நீதிபதியின் ஒப்புதலை நிபந்தனையாக்கும்படி சிலர் யோசனை கூறுகின்றனர். இவ்வாறு கூறுகிறவர்கள் தலைமை நீதிபதியின் நடுவு நிலையின் மீதும், அவரது முடிவின் தெளிவுத்தன்மை மீதும் நம்பிக்கை வைக்கின்றனர் என்பது புரிகிறது. தலைமை நீதிபதி என்பவர் சான்றோராக இருப்பவர் என்பதில் எனக்கும் ஐயம் ஏதுமில்லை. ஆயினும் தலைமை நீதிபதி என்பவர் மனிதர்தான். சாதாரண மனிதர்களுக்கு இருக்கிற தவறுகள், உணர்வுகள், அனுமானங்கள் ஆகியவை அவருக்கும் இருப்பது இயல்புதான். நீதிபதிகள் நியமனத்தில் தலைமை நீதிபதியிடம் நடைமுறையில் ரத்து அதிகாரத்தை அளிப்பது நியமன அதிகாரத்தை அவாிடம் ஒப்படைப்பது என்பதே ஆகும். குடியரசுத் தலைவாிடமிருந்து அல்லது அரசாங்கத்திடமிருந்து அந்த அதிகாரத்தை இவாிடம் மாற்றித்தருவது என்பதாகும். இது ஆபத்தான ஆலோசனை. இதனை ஏற்பதற்கில்லை”. (மே 24, , 1949- Constituent Assembly Debates - III ; 258).

நீதிபதிகள் நியமன அதிகாரத்தை ஆட்சியாளர்களிடத்திலோ, தலைமை நீதிபதியிடத்திலோ முற்றிலும் விட்டுவிடுவது ஆபத்தானது என்பதே பட்டறிவு காட்டும் உண்மை. சில நாடுகளில் உள்ளதுபோல் நீதிபதிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதும் இன்றைய நிலையில் இந்தியாவிற்கு பொருந்தி வராது. ஏனெனில் பல வண்ண ஊழல்களின் உறைவிடமாக தேர்தல் அரசியல் இந்தியாவி;ல் இருப்பது உலகறிந்த ஒன்று. கட்சிகளின் தலைமைக்குக் கட்டுப்பட்ட நீதித்துறையாக மாற்றப்பட்டுவிடும். மேலும் கட்சி மோதல்களின் இன்னொரு அரங்கமாக நீதிமன்றங்கள் மாறிப்போகும்.

அண்மைக் காலமாக நீதித்துறை ஊழல் பெருத்து வருவது இன்னொரு ஆபத்தான போக்கு. இவற்றைப் போக்க - இப்போதுள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைக் கடக்கும் வகையில் புதிய சட்ட ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. நீதித் துறையின் தற்சார்புத்தன்மையில் குறுக்கிடாதவாறு அந்த ஏற்பாடுகள் இருக்கவேண்டும்.

நீதிபதிகள் - தலைமை நீதிபதி வரை- பொது ஊழியர் (Public servant) என்ற வகையினரே என்பதை உறுதி செய்யவேண்டும். 'அரசமைப்புச் செயல்பாட்டாளர்' (Constitutional Functionary) என்று தப்பிப்பதை அனுமதிக்கக் கூடாது. நியமனத்தின் போதும், அதன்பிறகு பதவியில் இருக்கும் வரை ஆண்டுதோறும் நீதிபதிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் சொத்துக் கணக்கு வெளிப்படையாக வைக்கப்படவேண்டும். அரசின் நெருக்கமான கண்காணிப்புக்கு உட்பட்டதாக அக்கணக்குகள் இருக்கவேண்டும். உயர்மன்ற நீதிபதிகள் நியமனம் வெளிப்படையானதாகவும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் திறன், நேர்மை சார்ந்ததாகவும் இருக்கவேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக மனித உரிமை ஆர்வலர்கள் கோரி வருகிற ”நீதித்துறை ஆணையம்”; (Judicial Commission) நிறுவப்படவேண்டும். இது அரசமைப்பின் தகு நிலையை உடைய உறுப்பாக இருக்கவேண்டும். தலைமை நீதிபதி, சட்ட அமைச்சர், மூத்த நீதிபதிகள் முன்னாள் நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை அமைப்பினர் போன்றோரைக் கொண்டதாக அவ்வாணையம் இருக்கலாம்.

இவ்வாணையமே உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கவேண்டும். நியமன முறை வெளிப்படையாக இருக்கவேண்டும். நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப் படுவது போல் காரண-காரிய விளக்கங்களுடன் அந்த நியமன அறிவிப்பு வெளியிடப்படவேண்டும். நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரமும் இந்த ஆணையத்திற்கு இருக்க வேண்டும். இதற்கான விசாரணை வெளிப்படையாக நடக்கவேண்டும்.

நீதிபதிகள் மீதான முறைகேடுகள், ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளின் முதல்நிலை ஆதாரத்தை விசாரித்து அறிகிற அதிகாரமும் இவ்வாணையத்திற்கு இருக்கவேண்டும். முதல்நிலை ஆதாரம் இருந்தால் குற்றவியல் நடவடிக்கைக்கு அனுமதிக்க வேண்டும். இவ்வாறான மாற்று ஏற்பாடுதான் நீதித்துறையின் அலங்கோலத்தை ஓரளவுக்காவது சரி செய்யும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com