Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜனவரி 2009

ஊடகப் பார்வையில் தமிழ்த்தேசியம்

தமிழகத்துக் கங்காணிக் கட்சிகளைக் கையில் வைத்துக்கொண்டு தமிழின உரிமைக் குரலை ஒடுக்கிவிடலாம் என்று கருதிய ஆட்சியாளர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். தேர்தல் கட்சிகளைத் தாண்டி, திராவிடம் பேசிய பழந்தலைவர்களைத் தாண்டி தமிழ்த்தேசியம் தற்சார்போடு பீறிட்டு எழுகிறது. இந்த அதிர்வை இதுவரையிலும் உணராது வந்த வடநாட்டு ஏடுகளும் தமிழ்நாட்டு முன்னணி ஊடகங்களும் இப்போது இதனை உணரத் தொடங்கியிருக்கின்றன.

எடுத்துக்காட்டாக மாதம் இருமுறை வெளிவரும் வடநாட்டு ஏடான ”டெகல்கா” கடந்த 2008 நவம்பர் 22-ஆம் நாள் இதழில் இதனைத் தெளிவாக எடுத்துக்கூறியது அவ்விதழின் சிறப்புச் செய்தியாளர் பி.ஜி. வினோஜ்குமார். ”தமிழ்நாட்டின் விடுதலை வீரர்கள்’’ என்ற தலைப்பில்; தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ. மணியரசன் அவர்களையும் பல்வேறு தமிழ் அமைப்பு முன்னோடிகளையும் சந்தித்து உரையாடியதின் அடிப்படையில் கட்டுரை எழுதியிருந்தார்.

தந்தை பெரியார், பாவலேறு பெருஞ்சித்திரனார், சி.பா.ஆதித்தனார் ஆகிய முன்னோடிகள் ஊட்டிய இன உணர்வு தமிழ்த் தேசியத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்பதை குறிப்பிடும் கட்டுரையாளர், தற்போது இயங்கிவரும் தமிழ்த் தேசிய அமைப்புகளின் முன்னோடிகள் பெரும்பாலும், சி.பி.எம். , திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளிலிருந்து வெளியேறியவர்களே என்பதைப் பதிவு செய்கிறார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி குறித்து அக்கட்டுரை கூறுவது: ”இந்திய அரசு என்பது பெருமுதலாளிகள் தலைமையிலான முதலாளிய பார்ப்பனிய இந்தி ஆதிக்க அரசு என்று வரையறுக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் பெ. மணியரசன் இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு நிறுவுவதுதான் எங்கள் இலக்கு என்று ஆணித்தரமாகக் கூறினார். இவரது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழ்நாட்டின் 20-மாவட்டங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. இக்கட்சி ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு வழிமுறைப்படி இயங்குகின்ற ஒன்றாகும். கட்சி உறுப்பினர்கள் மாதந்தோறும் நிர்ணயத் தொகை வழங்குவது, கட்சியின் வழிகாட்டுதலில் இயங்கும் மாணவர், இளைஞர், உழவர் அமைப்புகளில் பணியாற்றுவதை உறுப்பினர்களின் கடமையாக வலியுறுத்துவது, மக்கள் திரள் அமைப்புகளில் பணியாற்றும் செயல்வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முதலில் கட்சியின் பயிற்சி உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டு பிறகு பணி ஆய்வுகளின் தணிக்கைக்குப் பிறகு கட்சி உறுப்பினராக உயர்த்தப்படுவது ஆகிய கம்யூனிஸ்ட் அமைப்பு முறைகள் த.தே.பொ.க.வில் கடைபிடிக்கப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உறுதியாக ஆதரிக்கிற பெ. மணியரசன் அதே நேரம் தமிழீழமும், தமிழ்நாடும் வெவ்வேறு தேசங்கள் என்று வலியுறுத்துகிறார். த.தே.பொ.க. உள்ளிட்ட அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கும் மூவாயிரம் ஆண்டு இலக்கியப் பழமைவாய்ந்த தமிழ்மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக ஏற்கபடாதது குறித்து கடும் கோபம் இருக்கிறது. அது மட்டுமின்றி தமிழர்களின் தாயக நிலப் பகுதிகளான மூணாறு, தேவிகுளம் பீர்மேடு, சித்தூர், புத்தூர், நகரி , கொள்ளே காலம், கோலார் தங்கவயல் போன்ற இழந்த பகுதிகளையும் 1974-ல் இந்திய அரசால் இலங்கைக்கு அளிக்கப்பட்ட கச்சத்தீவையும் திரும்ப பெறவேண்டும் என்பதில் தமிழ்த் தேசிய வாதிகள் உறுதியுடன் இருக்கிறார்கள்.

இந்திய அரசின் ஒடுக்கு முறைகள் தமிழ்த் தேசிய உணர்ச்சி வளரவே துணை செய்யும் என்று த.தே.பொ.க. உள்ளிட்ட தமிழ்த் தேசிய வாதிகள் நம்புகிறார்கள். ஆயினும் இக்கருத்தோடு மாறுபடுகிறவர்களும் உண்டு. எடுத்துக்காட்டாக சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனப் பேராசிரியரும், திராவிட அரசியல் ஆய்வாளருமான ஏ.ஆர். வெங்கடாசலபதி கூறுவது கவனிக்க தக்கது. தமிழ்த் தேசியம் என்பது பொருளியல், அரசியல், பண்பியல், தளங்களில் புறக்கணிக்கப்படும். தமிழ்நாட்டு மக்களின் மனக்குமுறலின்; வெளிப்பாடுதான் என்பது அவரது கருத்து. இந்திய அரசு உண்மையான கூட்டாட்சியாக இல்லை, நடுவணரசுதான் அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்துள்ளது என்று திறனாய்வு செய்யும் வெங்கடாசலபதி, அதே நேரத்தில் தமிழ்த் தேசியம் என்பது ஒரு கனவாகத்தான் இருக்கும் என்று மதிப்பிடுகிறார். ஆயினும் இந்த ”கனவு” தோற்றுவிக்கும் தீவிரவாதம் தமிழ்நாட்டு மக்களின் உண்மையான குறைகளைத் தீர்ப்பதற்கு நடுவண் அரசின் கவனத்தை ஈர்க்க உதவும் என்று கூறுகிறார்’’.

கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக தமிழ்த் தேசியப் புரட்சி என்ற இலக்கு நோக்கி பல்வேறு தளங்களில் போர்க்குணமுள்ள கண்டனப் போராட்டங்களை த.தே.பொ.க. நடத்தியிருந்தாலும், ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக இக்கட்சி இயங்கி வந்தாலும் தமிழ்நாட்டின் முன்னணி ஊடகங்கள் தற்போதுதான் த.தே.பொ.க.வை கவனிக்கத் தொடங்கி உள்ளன. ஈரோட்டில் ”தமிழர் எழுச்சி உரை வீச்சு” என்ற தலைப்பில் த.தே.பொ.க. நடத்திய பொதுக்கூட்டம் சில காங்கிரஸ்காரர்களையும், ஆட்சியாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கட்டவிழ்த்துவிடப்பட்டு உள்ள அடக்குமுறை த.தே.பொ.க. மீதும் அது முன் வைக்கும் புரட்சிகர தமிழ்த் தேசியத்தின் மீதும் முன்னோடி ஏடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எடுத்துக்காட்டாக குமுதம் ரிப்போர்ட்டர் வாரம் இருமுறை ஏடு 28.12.2008 இதழில் வெளியிட்டுள்ள தோழர் பெ. மணியரசனின் சிறப்புப் பேட்டி அரசின் அடக்கு முறைகள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியையோ, தமிழ்த் தேசிய எழுச்சியையோ ஒடுக்கிவிட முடியாது என்பதை உலகுக்கு எடுத்துக்கூறியது அவ்வேட்டின் செய்தியாளர் வெ. வெற்றிவேல் கடந்த 19.12.2008 மாலை புதிய தமிழர் கண்ணோட்டம் அலுவலகத்தில் பெ.ம. கைதாவதற்கு சற்று முன் கண்டு வெளியிட்ட நேர்காணல் வெளிப்படுத்தும் செய்தியின் சுருக்கம் வருமாறு:

”ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆய்தமும் நிதியும் அளித்து வருகிறது. இத்தாலியர்கள் கொல்லப்பட்டால் அவர்களை கொல்லுகிற அரசுக்கு இந்திய அரசு ஆய்தம் தருமா? மலையாளிகளைக் கொல்லுகிற வெளிநாட்டு அரசு ஒன்றுக்கு இந்திய அரசு ஆய்தம் தருமா? தராது. ஆனால் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர் களையும், 406-தமிழக மீனவர்களையும் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு ஆய்தம் தருகிறதே இந்திய அரசு. இவ்வரசை தமிழின விரோத அரசு என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரிநீர் தராத கர்நாடகத்தையோ, முல்லைப் பொியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுக்கிற கேரளத்தையோ, இந்திய அரசு தட்டிக் கேட்கவில்லையே. இது குறித்து உரிமை இழந்தவன் ஒப்பாரி வைத்தால் கூட இலக்கணப்பிழை பார்த்து இறையாண்மைக்கு ஆபத்து என்று குதிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

தமிழகக் காங்கிரஸ் காரர்களில் குறிப்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தமிழ் இன விரோதக் கூச்சல் இந்த கைதுக்கு முக்கிய காரணம். உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காட உரிமை வேண்டுமென்றாலும் எதிர்த்தவர் இளங்கோவன். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர், மறைந்த சுப. தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிப்பதே இறையாண்மைக்கு ஆபத்து என்று போலிக் கூச்சல் எழுப்பியவர் இவர். ஈரோடு கூட்டத்தில் பேசியவர்களை கைது செய்யச்சொல்லி இப்போது கூக்குரல் எழுப்புகிறார். அவருக்கு ராஜீவ்காந்தி மீதிருக்கும் பற்றைவிட தமிழினத்தின் மீதான பகையுணர்ச்சியே அதிகம்.

ஈழப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகிறவர் கருணாநிதி. தமிழினத்திற்கு எதிராக ஓடும் சாக்கடை ஆற்றின் இரு கரைகளாக கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருக்கிறார்கள். தமிழினத்திற்கு எதிரான இவர்களின் வெறிக் கூச்சலாலும் அடக்கு முறையாலும் தமிழினத்தின் எழுச்சியைத் தடுத்துவிட முடியாது. அடிக்க அடிக்க எழும் பந்துபோல தமிழ்த் தேசியம் வீறுகொண்டு எழும்’’.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com