Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
டிசம்பர் 2008

காவி பயங்கரவாதமும் காவித் தேசியமும்
கி.வெங்கட்ராமன்

கடைசியில் காவி பயங்கரவாதிகள் கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டார்கள். எங்காவது குண்டு வெடித்தால், அதையே சாக்கிட்டு, தாடி வைத்தவரெல்லாம் பயங்கரவாதி, தமிழ் பேசுபவரெல்லாம் தீவிரவாதி என முத்திரை குத்தி ‘பொடாவில் போடு’ என்று கூச்சலிட்டு வந்த அத்வானி வகையறாக்கள் இன்று “ஆதாரமில்லாமல் யாரையும் குற்றவாளி எனக் கூறக்கூடாது” எனக் குரல் மாற்றிப் பேசுகிறார்கள். விசாரணை என்ற பெயரால் இசுலாமிய இளைஞர்கள் பலர் கேள்வி முறையின்றி சித்திரவதை செய்யப்பட்டபோது, “இசுலாமியப் பயங்கரவாதிகளிடம் இரக்கம் காட்டாதீர்கள். மனிதர்களிடம் தான் மனித நேயம் காட்ட வேண்டும். இந்த பயங்கரவாதி மனிதர்களே அல்லா”; என்று கொக்கரித்து வந்த பா.ஜ.க. பரிவாரங்கள் “சன்னியாசினி பிரக்யா சிங் தாகூரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தாதீர்கள்” என்று இப்போது பேசுகிறார்கள்.

kavi மராட்டிய மாநிலம் மாலேகான் பிகூ சதுக்கம் பகுதியில் ஒரு மசூதிக்கு அருகில் கடந்த 2008 செப்டம்பர் 29 அன்று குண்டு வெடித்தது. அதில் 6 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயம் அடைந்தனர். அதே நாளில் குஜராத் மாநிலம் மோடசா நகரிலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஒருவர் கொல்லப்பட்டார். உடனே உளவுத் துறையினரும், ஊடகங்களும் இது இசுலாமியப் பயங்கரவாத அமைப்பான தடைசெய்யப்பட்ட ‘சிமி’ யின் கைவரிசை என்று பரபரப்பு கதை சொல்லத் தொடங்கிவிட்டன.

இதே மாலேகான் நகரில் 2006 செப்டம்பரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 30 பேர் கொல்லப்பட்ட போது, இது ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் சதி வேலையாக இருக்கலாம் என்று சில மனித உரிமை ஆர்வலர்கள் ஐயம் எழுப்பினர். அப்போது மகாராட்டிரக் காவல்துறை, அதனைப் புறக்கணித்தாலும், இப்போது மீண்டும் மாலேகானில் குண்டு வெடித்த போது தெளிவான முறையில் விசாரணை மேற்கொண்டது.

மகாராட்டிரக் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இக்குண்டு வெடிப்பு தொடர்பாக 36 வயதான பிரக்யாசிங் தாகூர் என்ற பெண் சாமியாரைக் கைது செய்தது. அவரோடு அவரது கூட்டாளிகள் சிவ நாராயண கல்சங்கரா, சியாம் பவர்லால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அடுத்தடுத்து சுவாமி அமிர்தானந்த் என்ற சாமியாரும், ரமேஷ் உபாத்யாயா என்ற இந்திய இராணுவ முன்னாள் மேஜரும், ராஜ்கர், ராஜன் கெய்த்தான் என்ற இரு இராணுவ உளவுப்பிரிவு அதிகாரிகளும், இன்னும் சிலரும் மகாராட்டிராவில் மட்டுமின்றி மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 5 அன்று இந்திய இராணுவத்தில் இன்றும் பணியிலிருக்கும் லெப்டின்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித் கைது செய்யப்பட்டார்.

சன்னியாசினி பிரக்யாசிங் தாகூர் மாலேகான் குண்டு வெடிப்பில் முக்கியப் புள்ளியாக இருப்பது விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. அவருடைய மோட்டார் சைக்கிள் தான் இக்குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி குண்டு வெடிப்பு நடந்து முடிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு,அதில் ஈடுபட்ட பவர்லால் சாகுவிடம் தொலைபேசியில் பேசிய பிரக்யா “ஏன் கொஞ்சம் பேர்தான் செத்துப் போயிருக்கிறார்கள்? இன்னும் கூட்டம் அதிகமான இடத்தில் (குண்டு சுமந்த) பைக்கை நிறுத்தியிருக்கவேண்டியது தானே ?” என்று கடிந்து கொண்டாராம். இதற்கான ஒலிநாடா ஆதாரங்களை காவல் துறையினர் நீதி மன்றத்தில் போட்டுக் காட்டியுள்ளனர்.

இராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோகித் இன்னும் தேடப்பட்டுவரும் ராம்ஜி மற்றும் சுவாமி அசிமானந்த் என்ற ஜதின் சாட்டர்ஜி ஆகியோருடன் சேர்ந்து இந்தியா முழுவதும் பல குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியிருப்பது தெரியவந்துள்ளது. இவர்களோடு ‘சார்’ என்ற குறியால் அறியப்படுகிற மிதுன் சக்கரவர்த்தி என்ற நபரும் இச்சதிக்கூட்டத்தில் முக்கியப் புள்ளியாக அறியப்படுகிறார். இவரையும் காவல்துறை தேடி வருகிறது. இந்து ஜனஜாக்ரன் மஞ்ச், சனாதன ஆஸ்ரமம், இந்து ஜனக்ருதி சமிதி, வந்தே மாதரம் ஜன்கல்யாண் சமிதி... என்று பல பெயர்களில் பல்வேறு மாநிலங்களில் இவர்கள் அமைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் அரசியல் வழியிலும், அமைப்பு வகையிலும் பார்ப்பனபாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சால் வழி நடத்தப்படுகிறவர்கள்.

மலேகான் குண்டு வெடிப்பை நடத்திய ‘அபினவ் பாரத்’; அமைப்பை நிறுவியவர்க ளில் முக்கியமானவர் ஸ்ரீகாந்த் புரோகித். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவராகவும், பார்ப்பனியபாசிசத் தின் மூலவராகவும் விளங்கிய சவர்க்கார் 1904-ஆம் ஆண்டு நிறுவிய அமைப்புக்குப் பெயரும் ‘அபினவ் பாரத்’; என்பதுதான். அதன் நினைவாகவே 2003-ல் புரோகித் வகையறாக்கள் இந்த அமைப்பை நிறுவியுள்ளனர். நாசிக் நகரில் உள்ள போன்கலா இராணுவத்தினர் பள்ளி என்பது இந்துத்துவ பயங்கரவாதத்தின் பயிற்சிப் பாசறையாக உள்ளது என்பது இப்போது அம்பலமாகி உள்ளது. இந்து இராணுவத்தினர் மையக் கல்விக் கழகம் என்ற அமைப்பே இப்பள்ளியை நடத்தி வருகிறது. இந்தக் கல்விக் கழகத்தை 1935- ல் நிறுவியவர் இந்து மகா சபையின் நிறுவனத் தலைவர் பி.எஸ். மூஞ்சே. இது தொடக்கத்திலிருந்தே ஆ.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கான ஆயுதப் பயிற்சிக் களமாகவே விளங்கி வருகிறது. ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் பலரும் இதில் பணியாற்றுகின்றனர். போன்சலா பள்ளியில் ஆயுதப் பயிற்சிகளும், குண்டு தயாரிக்கும் பயிற்சிகளும் தரப்பட்டு வருவதை இப்போது கைதாகி உள்ள சமீர் குல்கர்னி, உபாத்யாயா ஆகியோர் ஒத்துக் கொண்டுள்ளனர்.

இந்திய இராணுவத்தின் ஆயுதக் கிடங்குகளிலிருந்து ஆர்.டி.எக்ஸ் வெடி பொருள்கள் கடத்தப்பட்டு, இந்த காவி பயங்கரவாதிகளிடம் தரப்படுகின் றன. ஸ்ரீகாந்த் புரோகித் இக்கடத்தலில் மையப்புள்ளியாக செயல்பட்டு வந்திருக்கிறார். கடந்த 2006 செப்டம்பரிலேயே 195 கிலோ இந்திய ராணுவ வெடி மருந்துகளோடு சங்கர் செல்கே என்ற பழைய இரும்பு வியாபாரி மராட்டியத்தின் அகமத் நகரில் சிக்கினார். செல்கேயின் கைக்கு இந்திய இராணுவ கிட்டங்கியிலிருந்து வெடி மருந்துகள் கிடைத்தது எப்படி என்று அப்போதே ஏடுகள் வினா எழுப்பின. ஆனால் அதற்குமேல் அதனை விசாரிக்க விடாமல் இந்திய அரசின் மத்திய புலனாய்வுக் கழகம் அமுக்கிவிட்டது.

இதற்கு சில மாதங்களின் முன்பு 2006 ஏப்ரலில் மராட்டிய மாநிலம் நான்டேட் நகரில், அம்மாநிலப் பொதுப் பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் லெட்சுமண் ராஜ் கோண்ட்வார் என்பவர் வீட்டில் குண்டு வெடித்து இருவர் இறந்தனர். நரேஷ் கோண்ட்வார், இமான்சூஃபான்சே ஆகிய அந்த இருவரும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள். அவுரங்காபாத் மசூதியில் வெடிக்கச் செய்வதற்காக அவர்கள் குண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது, தவறுதலாக வெடித்து, இருவரும் மரணம் அடைந்தனர் என்பது தெரிய வந்தது. இதற்கு முன்னர் நடந்த சில குண்டு வெடிப்புகளில் இவர்கள் இருவரும் ஈடுபட்டவர்கள். குண்டு வெடித்த இடத்தில் இசுலாமியர்கள் அணியும் குல்லாய்களும், சில ஒட்டுத்தாடிகளும் கைப்பற்றப்பட்டன.

குண்டு வெடித்த அந்த வீட்டு உரிமையாளர் லெட்சுமன் ராஜ் கோண்ட்வார் தீவிர ஆர்.எஸ்.எஸ். ஊழியர். அவரையும், மற்றும் 6 பேரையும் இது தொடர்பாக மகாராட்டிர தீவிரவாத எதிர்ப்பு அதிரடிப்படை கைது செய்தது. ஆனால் அதிலும் சி.பி.ஐ தலையிட்டு கோண்ட்வாரை விடுவித்தது. “சக்தி வாய்ந்த பட்டாசு வெடித்து இரண்டு பேரும் இறந்தனர்” என்று வழக்கை திசை திருப்பியது. ஒட்டுத்தாடிகளும், குல்லாய்களும் கிடைத்ததை மறைத்தது. இதேபோல் கடந்த அக்டோபர், 2008-ல் கான்பூரில் ராஜுவ் மிஸ்ரா, புபேந்தர் சிங் ஆகிய இரண்டு பஜ்ரங் தள உறுப்பினர்கள் குண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது தவறுதலாக வெடித்து மரணமடைந்தனர். இந்த காவி பயங்கரவாத வலைப்பின்னல் 2003 முதலே குண்டு வெடிப்புகள் நிகழ்த்தி வருவது தெரிய வந்திருக்கிறது.

மராட்டிய மாநிலம் பர்பானி நகரில் 2003 நவம்பரில் நடந்த மகமதிபா மசூதி குண்டு வெடிப்பு, பூர்ணா மதரசாவில் 2004 ஆகஸ்ட்டில் நடந்த குண்டுவெடிப்பு, 2007, பிப்ரவரியில் சம்ஜவ்தா விரைவுத் தொடர்வண்டி குண்டுவெடிப்பு, 2007, மே மாதம் ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு, அஜ்மீர் நகரின் புகழ்பெற்ற க்வாஜா மொய்தீன் சிஸ்தி பள்ளி வாசலில் 2007 அக்டோபரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு, தானே நகரத் திரையரங்கில் சனவரி, 2008- ல் நடந்த குண்டு வெடிப்பு ஆகியவை இந்த பார்ப்பனப் பயங்கரவாதிகள் நடத்திய வெறிச்செயல்கள் ஆகும்.

இந்த குண்டு வெடிப்புகளுக்கு இசுலாமிய பயங்கரவாதிகளே காரணம் என்று கதை கட்டி விடுவதிலே ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இதுவரை வெற்றி கண்டன. ஆனால் இப்போது உண்மை வெளிவந்துவிட்டது. ஏற்கனவே தென்காசியில் 2007, சனவரியில் நடந்த குண்டு வெடிப்பு, இந்து முன்னணி அலுவலகம் மீது தாக்குதல் ஆகியவற்றை ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களே நடத்திவிட்டு, இசுலாமியர்கள் மீது பழி போட்டது அம்பலமானது (விரிவிற்கு காண்க : தமிழர் கண்ணோட்டம், ஏப்ரல், 2008)

தொடக்கத்தில், ‘பயங்கர வாதம் எங்கிருந்து வந்தாலும் எதிர்க்க வேண்டியதுதான், பிரக்யாசிங்குக்கும் பா.ஜ.க. பரிவாரங்களுக்கும் தொடர்பேதும் இல்லை’ என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறினர். ஆனால் பிரக்யாசிங்குடன் பாரதிய ஜனதா தலைவர் ராஜ் நாத் சிங் ஒரு நிகழ்ச்சியில் உடனிருந்த புகைப்படங்கள் ஏடுகளில் வெளியாயின. சன்னியாசினி பிரக்யா பா.ஜ.க.விலும் அதன் மாணவர் அமைப்பிலும் முன்னணியில் செயல்பட்டவர் என்பதும் அம்பலத்துக்கு வந்தது. இன்னொருபுறம், ஆர்.எஸ்.எஸ். தலைமைப்பீடம் இந்த விசாரணையை சீர்குலைக்க இந்துத்துவா வெறிக் கூச்சல் கிளப்ப முடிவு செய்து அறிவித்தது. இதற்கேற்ப பா.ஜ.க.தலைவர்களும் மாற்றிப் பேசத் தொடங்கினர்.

“இந்து சாமியார்களை குண்டு வெடிப்பில் தொடர்புப்படுத்தி இழிவுபடுத்துவது இந்துக்கள் மனதைப் புண்படுத்துகிறது. இராணுவ அதிகாரிகளைக் கைது செய்திருப்பது மக்கள் மனதில் இந்திய இராணுவத்தின் மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தும்” என்று கூச்சலிடுகின்றனர். பிரக்யாசிங் தாகூர் காவல்துறை விசாரணையில் சித்திரவதை செய்யப்பட்டார் என்று பா.ஜ.க. தலைவர் அத்வானி அறிக்கை வெளியிட்டார். சாமியார்களைக் கைது செய்வதும், படைத் தளபதிகளைக் கைது செய்வதும் தேசத்துக்கு அடுக்குமா? என்று தேசபக்தக் கூச்சலை மூன்று மாநிலத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் அனைத்திலும் அத்வானி எழுப்பி வருகிறார்.

இதன் பிறகு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அத்வானியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, குண்டு வெடிப்பு விசாரணையின் விவரங்களைக் கூறியதோடு, இதுபற்றி விளக்கம் அளிக்க தமது பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணனை அனுப்பி வைத்தார். நாராயணனும், உளவுத்துறை உயர் அதிகாரிகளும் அத்வானியைச் சந்தித்து விசாரணை விவரங்களை விளக்கி, பிரக்யாசிங் சித்திரவதை செய்யப்படவில்லை எனக் கூறினர். இருப்பினும் இதுபற்றி உண்மைகளை மேலும் விசாரிப்பதாகக் கூறிச் சென்றனர்.

இனி குண்டு வெடிப்பு குறித்த விசாரணை உருப்படியாகத் தொடருமா அல்லது ஏற்கெனவே சி.பி.ஐ. தலையிட்டு குண்டு வெடிப்பு விசாரணைகளை சீர்குலைத்ததுபோல் இப்போதும் நிகழுமா என்ற ஐயம் எழுந்துள்ளது. ஏனெனில் ஆர்.எஸ்.எஸ் சின் செல்வாக்கு பா.ஜ.க.வில் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியிலும் உண்டு. உயர்மட்;ட அதிகார வர்க்கத்திலும் உண்டு. பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும், இராணுவத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் திட்டமிட்ட வகையில் நிகழ்த்தப்பட்டது. எனினும் இதற்கு முன்பிருந்தே இந்திய சுதந்திரத்திலிருந்தே இந்த அபாயம் திறந்து விடப்பட்டது

ஏனெனில் இந்திய அரசமைப்பின் அடிப்படைத் தன்மையே அவ்வாறானது. இந்திய அரசு மதசார்பற்ற அரசு என்று அறிவிக்கப்பட்டாலும் சாரத்தில் அது ஆரிய - இந்து சார்பு அரசுதான். இந்திய அரசமைப்பின் கோட்பாட்டு அடிப்படையாகத் திகழும் இந்தியத் தேசியம் என்பதே பார்ப்பனியத் தத்துவத்தின் அடியாகப் பிறந்த அரசியல் புனைவுதான். பா.ஜ.க. பரிவாரங்கள் முன் வைக்கும் இந்துத்துவமும், காங்கிரசு, இடதுசாரிகள் மற்றும் பிற கட்சிகள் பேசும் இந்தியத் தேசியமும் ஒரே தத்துவ அடித்தளத்தைக் கொண்டவைதான்.

இந்துத்துவம் என்பது தீவிரவாத இந்தியத் தேசியம். இந்தியத் தேசியம் என்பது மிதவாத இந்துத்துவம். இரண்டுக்கும் பார்ப்பனியத் தத்துவமும், ஆரியப் பெருமிதமும்தான் அடிப்படையானவை. மதச் சார்பற்ற இந்தியத் தேசியம் என்பதாக எதுவுமில்லை. புராணப் புனைவையே 'பாரதம்' என்று இந்த நாட்டுக்குப் பெயராக சூட்டியிருப்பது, 'பாரத மாதா' என்ற ஆரிய - இந்துத் தெய்வக் குறியீட்டை இந்தியாவின் குறியீடாக வைப்பது, ஏவுகணைக்கு 'அக்னி' என்றும், விருதுகளுக்கு பத்மஸ்ரீ, அர்ச்சுனா, பரம்வீர் சக்ரா என்றும் பெயர் வைப்பது எனப்பல வழிகளில் அது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

அமர்நாத் சிக்கல் அண்மையில் நடந்தபோது விசுவ இந்து பரிசத் ஆட்கள் ஒரு கையில் திரிசூலமும், மறுகையில் இந்தியக்கொடியும் பிடித்துக் கொண்டே கலவரத்தில் ஈடுபட்டதை உலகம் கண்டது. பாகிஸ்தானையும், இஸ்லாமியர்களையும் எதிரியாகக் காட்டியே இந்திய இராணுவத்தினரின் உளவியல் கட்டமைக்கப்படுவது நாடறிந்த ஒன்று. இவ்வாறான சூழலில் ஆர்.எஸ்.எஸ் இந்திய இராணுவத்துக்குள் ஊடுருவது எளிதாக நிகழ்கிறது. லெப்டினன்ட கர்னல் புரோகித் மூலம் இராணுவக் கிடங்கிலிருந்து ஆர்.டி.எக்ஸ் வெடிப் பொருள்கள் கடத்தப்பட்டு, குண்டுகள் தயாரிப்பது நிகழ்ந்ததன் பின்னணி இதுதான்.

குண்டு தயாரிக்கவும், தாக்குதல் நடத்தவும் படை அதிகாரிகள் பஜ்ரங்தள் உறுப்பினர்களுக்குப் பயிற்சி தந்திருப்பது, இந்திய இராணுவத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ராய்கர், ராஜன் கெய்த்தான் போன்றவர்கள் உளவுப் பணிகளில் காவி பயங்கரவாதிகளுக்குப் பயன்பட்டிருப்பது போன்றவற்றிற்கு இவ்வாறான அரசியல் சூழலே வாய்ப்பு வழங்கியது. அண்மையில் சென்னையில் அத்வானியின் தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலின் முதல்படியைப் பெற்றுக் கொண்டவர் இந்திய விமானப் படையின் முன்னாள் தலைமைத் தளபதி கிருஷ்ணசாமி. விழாவின் முக்கிய விருந்தினர் இடது சாரியான இந்து என். ராம்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புக்குள்ளும் அரசியல் மற்றும் ஊடக அரங்கிலும் பார்ப்பனியம் பரவி நிற்பதன் அடையாளமே அந்த நூல் வெளியீட்டு விழா மேடை. எனவே காவி தேசியத்தில் நின்றுகொண்டு காவி பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாது. அரசியலை மதம் வழி நடத்தினால் ஒழுக்கமும், நேர்மையும் அரசியலில் நிலைக்கும் என்று சிலர் அப்பாவித்தனமாகக் கருதுகிறார்கள். இது எவ்வளவு தவறானது என்பது பா.ஜ.க. வைப் பார்த்தாலே தெரியும்.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கக் கையூட்டு பெற்றது, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பல கோடி பெற்றுக் கொண்டு கட்சிமாறி வாக்களித்தது அல்லது அவைக்கு வராமல் நின்று கொண்டது. வெளிநாட்டுக்குப் பெண்களைக் கடத்தியது என்று பல முறைகேடுகளில் சிக்கிய அரசியல் புள்ளிகளில் அதிகம்பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்தாம். கொலைகார காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இருவரின் திருவிளையாடல்கள் உலகமே நாறியவை. திருவாவடுதுறை ஆதீனத்திற்குள் பெண்ணை சாக்கிட்டு ஆதீன பீடத்திற்குள் நடந்த கொலை முயற்சியை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. சர்வதேச ஆயுதக் கடத்தல் கும்பலில் முக்கியப் புள்ளியாக இருந்த சந்திரா சாமி, ராஜீவ் காந்தி கொலையிலும் ஐயத்திற்கு இடமானவர்.

பல பாதிரியார்களின் கேளிக்கை விளையாட்டுகள் ஒழுக்கக் கேட்டிற்கு சான்று கூறுபவை. அண்மையில் வேளாங்கண்ணி விடுதியில் காதலியால் கத்தோலிக்கப் பாதிரியார் கொல்லப்பட்டது இதற்கொரு எடுத்துக்காட்டு. எல்லா மதங்களிலும் அறச்சிந்தனை சொல்லப்பட்டிருப்பது உண்மை தான். எல்லாரும் கடவுளின் பிள்ளைகள் என்று சொல்லாத மதமில்லை. ஆயினும் “மதம்” என்ற நிறுவனம் மோதலையே ஊக்குவிக்கிறது.

எனவே 'மதம்' என்பது தானாகவே ஒழுக்கத்தையும், சகிப்புத் தன்மையையும் கொணருவதில்லை. மதச் சிந்தனை சார்ந்தும், சாராமலும் அந்தந்த மண்ணில் தோன்றிய அறச் சிந்தனைகளே ஒழுக்கத்திற்கும், சகிப்புத் தன்மைக்கும் அடிப்படை. தனிச் சொத்துடைமையை ஊக்குவிக்காத, தனி சமூக அந்தஸ்தை அனுமதிக்காத தனித்த அதிகார மையத்தை நிலைப்படுத்தாத சமத்துவச் சமூக அமைப்பே இவ்வாறான அறச் சிந்தனைகள் நீடித்து நிலைப்பெற வழி சமைக்கும்.

மதம் சார்ந்த அரசியல் மோதலுக்கும், ஒழுக்கமின்மைக்கும் வழி ஏற்படுத்தும். இந்தியத் தேசியம் என்பது மதம் சார்ந்தது என்பதால் அதற்குள் அறம்சார்ந்த அரசியலைப் படைக்க முடியாது. தமிழ்த் தேசியம் என்பதில் தான் மதச் சார்பின்மை சாத்தியம் ஆகும். தமிழ் மண்ணின் அறச் சிந்தனைகளும், நவீன கால சமத்துவக் கோட்பாடுகளும் அதற்கு உரம் ஆகும். மண்ணிற்கேற்ற மார்க்சியம் என்பதே அது. மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட காவி பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலுவாக அழுத்தம் தருவது அனைத்து மனித நேயர்களின் கடமை. அதே நேரம் இது தொடர்பான மேற்கண்ட அடிப்படைச் செய்திகளையும் சிந்திப்பது காலத்தின் கட்டாயம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com