Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
டிசம்பர் 2008

சட்டக்கல்லூரி சாதிமோதல் தமிழ்ச் சமூக அவலத்தின் உரைகல்
பெ.மணியரசன்

சாதி வளரும் நாற்றங்கால்களாக இப்பொழுது கல்வி நிலையங்கள், வழக்கறிஞர் சங்கங்கள், உயர் சம்பளம் பெறுவோர் தொழிற்சங்கங்கள், படித்தவர் குழுக்கள், அதிகாரிகள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவையே இருக்கின்றன. கிராமங்களை விட மேற்கண்ட இடங்களில்தான் அதிகமான சாதிப்புகைச்சல், சாதி அணிவகுப்பு, சாதி மோதல்கள் நடக்கின்றன. கிராமங்களில் சாதி மோதல்களை இறக்குமதி செய்பவர்கள் பெரும்பாலும் மேற்கண்ட பிரிவினரே.

lawcollege மேற்கண்ட பிரிவினர் பாமர மக்களை உறிஞ்சி, தாங்கள் சமூகத்தின் மீது மிதக்கும் பீப்பாய்களாக விளங்க ஆசைப்படுகின்றனர். எப்படிப்பட்ட வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும் அதில் மூழ்காமல் தாங்கள் மட்டும் மிதக்கவேண்டும் என்பதே இவர்களின் விருப்பம். இந்த ஆசையை நிறைவேற்ற சாதி கைமுதலாக அவர்களுக்குப் பயன்படுகிறது. மூலதனத்திற்கு மாற்றாக சாதி பயன்படுகிறது.

கணிசமான மக்கள் தொகை கொண்ட சாதிகளில் உள்ள தன்னலவாதிகள் தங்களின் சாதி பலத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என்று நம்புகின்றனர். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களிடையே சாதிப் பூசல் என்பது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் தொற்று நோய். அதுவும் அந்த மாணவர்களின் புரசைவாக்கம் விடுதி குழுச் சண்டைகளின் குகை, வெளி அரம்பர்களின் விருந்து மாளிகை.

1990 களில் சாதிச் சங்கங்கள் அரசியல் கட்சிகளாக மாறிய பின், மாணவர்களிடையே ஏற்கெனவே இருந்த சாதிப்பிளவு மேலும் ஆழப்பட்டது., விரிவடைந்தது. சட்டக்கல்லூரி மாணவர்களிடையே சாதிப் பேரவைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சாதிப் பேரவைகளையும் சாதிக் கட்சிக் கிளைகளையும் நடத்துகின்றனர்.

மற்ற கல்லூரிகளில் சாதிக் குழுக்கள் உண்டென்றாலும் சட்டக் கல்லூரிகளில் மிக விகாரமாக சாதிக் குழுக்கள் செயல்படுகின்றன. இந்த விகாரம் 12.11.2008 அன்று சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்குள் தலித் மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் மோதிக் கொண்டபோது மிகக் கொடூரமாக வெளிப்பட்டது. அன்றையத் தாக்குதலில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள். ஆயினும் இதற்கான முன் தொடர்ச்சி இருக்கிறது.

இந்த இரு பிரிவு மாணவர்களில் யார் கூடுதல் குற்றவாளிகள் என்ற புலனாய்வு நோக்கில் இக்கட்டுரையை எழுதவில்லை. சமூக நோக்கில் தான் பார்க்கிறோம். எந்தப் பிரிவினராக இருந்தாலும் மாணவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் கருதி மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்ற மன நிலையில்தான் இச்சிக்கலை அணுகுகிறோம்.

மாணவர் விடுதியைப் பொறுத்தவரை தலித் மாணவர்கள் மிகை எண்ணிக்கையில் உள்ளனர். மொத்தமுள்ள 160 மாணவர்களில் 149 பேர் தலித்துகள். 11 பேர் மற்றவர்கள். இதில் ஏழு பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிறார்கள். எனவே விடுதியில் தலித் மாணவர் ஆதிக்கம் உள்ளது. தலித் மாணவர்களுக்குள்ளேயே குழுச் சண்டை போட்டுக் கொள்வதும் உண்டு. சென்னை சட்டக் கல்லூரியில் முக்குலத்தோர் மாணவர் பேரவையினர் பிற்படுத்தப்பட்ட மாணவர்களில் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களையும் திரட்டிக் கொண்டு ஆதிக்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

முக்குலத்தோர் மாணவர் பேரவை சட்டக்கல்லூரியில் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழா கொண்டாடியிருக்கிறது. அதற்கான சுவரொட்டியில் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்று போடாமல் சென்னை சட்டக்கல்லூரி என்று போட்டு, தலித் எதிர்ப்பைக் காட்டியுள்ளது. இதனை எதிர்த்துக் கேட்டுள்ளனர் தலித் மாணவர்கள். இவ்விரு பிரிவினரிடையே ஏற்கெனவே அடிக்கடி மோதல்கள் நடந்துள்ளன. வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான குழு விசாரித்துக் கொடுத்துள்ள அறிக்கையின்படி 7.11.2008 அன்று தேர்வெழுதிவிட்டு வந்த தலித் மாணவர் சிலரை, முக்குலத்தோர் மாணவர் பேரவையினர் சிலர் பாரிமுனையில் தாக்கியுள்ளனர். தேர்வெழுதப் போகக்கூடாது என்று மிரட்டி தலித் மாணவர்களை அடித்ததாக அவ்வறிக்கை கூறுகிறது. இதை ஒட்டிய தொடர் நிகழ்வுகளின் உச்சமாக, 12.11.2008 அன்று நடந்த கொடூரத் தாக்குதல் அரங்கேறியது.

கீழே விழுந்து கிடக்கும் மாணவர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாக மாணவர் சிலர் விடாமல் தாக்குகிறார்கள்.அருகிலேயே காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டும், முகத்தைத் திருப்பிக்கொண்டும் நிற்கின்றனர். அரிவாள், தடி, மண்வெட்டி, என பலவகை ஆய்தங்களுடன் மாணவர்கள் சுற்றிச் சுற்றி வருகின்றனர். காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. ஊடகக்காரர்களும் படம் எடுக்க போட்டி போட்டார்களே தவிர, கலகத்தைத் தடுக்க முயன்றதாகத் தெரியவில்லை.

இந்தக் காட்சியைப் பார்த்த மக்களுக்குப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீது இரக்கமும், வேடிக்கை பார்த்த காவல்துறையினர் மீது ஆத்திரமும் பீறிட்டது. காலொடிந்து, நடக்க முயன்று, மரக்கொம்பை பிடித்து, அப்படியும் நிற்க முடியாமல் விழுந்த மாணவனை அடித்த மாணவர்களின் வன்மத்தைக் கண்டு, மக்கள் சினந்தனர். கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. காவல்துறையின் பொறுப்பற்ற தன்மைக்கு நடவடிக்கை கோரின. முதலமைச்சர், அக்கல்லூரி முதல்வரையும் காவல்துறை அதிகாரிகள் சிலரையும் இடை நீக்கம் செய்துள்ளார். மாநகர ஆணையரை இடம் மாற்றியுள்ளார். வேறு சிலரையும் இடம் மாற்றியுள்ளார். ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவும் அமைத்துள்ளார். விடை தெரிந்தாக வேண்டிய சில வினாக்கள் நமக்கு எழுகின்றன.

தொடர்ந்து சாதி அடிப்படையில் மாணவர்களிடையே மோதல்கள் நடந்து வருகின்றன. வழக்குகளும் பதிவாகியுள்ளன. பதற்றம் தொடர்கிறது. இந்தக் கலவரச் சூழல் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு போனாரா கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ்? அரசுத் தரப்பில் மாவட்ட ஆட்சியர் அல்லது அடுத்த நிலை அதிகாரி தலைமையில், பொறுப்பான காவல்துறை அதிகாரி முன்னிலையில், அமைதிப் பேச்சு நடத்த முயற்சி செய்யப்பட்டதா? 12.11.2008 அன்று கலவரம் வரப்போகிறது. மாணவர்கள் ஆய்தங்களுடன் தாக்கிக் கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தியை முன் கூட்டியே கல்லூரி முதல்வர்க்கும், மாநகரக் காவல்துறை ஆணையர்க்கும் உளவுத்துறையினர் முறையாகத் தெரிவித்து விட்டதாக உளவுத் துறைக்குத் தலைமை தாங்கும் அதிகாரி ஜாபர்சேட் அறிக்கை கொடுத்துள்ளார்.

பிறகு, ஏன் தமிழக அரசு கலவரத்தைத் தடுக்க உரியவாறு தலையிடவில்லை? ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்துத் தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால் தமிழ் இன உணர்ச்சி கொழுந்துவிட்டு எரியும்., சிங்களப் படை போர் நிறுத்தம் செய்ய வேண்டிய நெருக்கடி உருவாகும். அவ்வாறு போர் நிறுத்தம் நடந்தால் அது விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாக அமைந்து விடும். எனவே, இந்த இன எழுச்சியை மடைமாற்றி தமிழர்களுக்குள்ளேயே தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் மோதிக் கொள்ளட்டும் என்று கருதி இந்திய அரசும், தமிழக அரசும் மாணவர் கலவரத்தைப் பயன்படுத்திக் கொண்டனவா?

தமிழ்நாட்டில் தமிழர்கள் சாதிகளாலும், கட்சிகளாலும் பிளவுபட்டுக் கிடந்தால் தங்களின் தன்னல அரசியலுக்கு வாய்ப்புகள் தொடரும், ஈழச்சிக்கலை முன்னிட்டுத் தமிழர்கள் தமிழ்நாட்டில் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது என்று தமிழக ஆட்சியாளர்கள் கருதினார்களா?

அரசும், காவல்துறையும் தலையிடாத நிலையில் கல்லூரி முதல்வர், தலித் மாணவர்களை அமைதிப்படுத்த பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங்கையும், இளம் வழக்குரைஞர் ரஜினிகாந்தையும் அழைத்தது எந்த வகையில் தகுந்த தடுப்பு நடவடிக்கை ஆகும்? ஒவ்வொரு முறையும் முதல்வர் இந்த வழி முறையைத்தான் கடை பிடித்திருக்கிறார் என்று ரஜினிகாந்த் நேர்காணல் (ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர்) கூறுகிறது. சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் சங்கத்தலைவர் பால் கனகராசு அவர்களை அழைத்திருக்கிறார். அவர் வரவில்லை.

இவ்வளவு பெரிய கலவரம் நடக்கப் போகிறது என்று முன்கூட்டியே தெரிந்து, முதல்வர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதை வாங்க மறுத்துள்ளனர் காவல்துறையினர். கல்லூரி முதல்வர் வலியுறுத்திய பின்னரே, காவல்துறையினர் அப்புகாரை வாங்கியுள்ளனர் என்று அ. மார்க்ஸ் குழு அறிக்கை கூறுகிறது. அதன்பிறகும், மாணவர்களை அமைதிப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவர் பால் கனகராசையும் பகுசன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங்கையும் அழைக்குமாறு காவல்துறை உதவி ஆணையர் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். கல்லூரி முதல்வரும் அவ்வாறே அழைத்துள்ளார்.

கல்லூரி முதல்வர் கலவரத்தைத் தடுக்க காவல்துறையினரை, தமது வளாகத்துக்குள் அனுமதிக்கத் தயாராக இருந்துள்ளார் என்பது இதிலிருந்து தெரிகிறது. கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் இல்லை. பொறுப்பு முதல்வராக ஸ்ரீதேவ் இருக்கிறார். ஆயுதங்களைக் கொண்டு இரு கும்பல் தாக்கிக் கொள்ளும் போது, அதில் தலையிட சட்டப்படி நடவடிக்கை எடுக்க யாருடைய அனுமதியும் காவல்துறைக்குத் தேவை இல்லை என்பது சட்ட நிலையாகும்.

எனவே கல்லூரி முதல்வர் அனுமதிக்காமல் உள்ளே போக விரும்பவில்லை என்று காவல்துறையினர் கூறுவது ஏமாற்றுப் பேச்சு. அரசுக்கு வெளியே உள்ள, தனி நபர்களை சமரசத்துக்கு அழைக்குமாறு முதல்வர்க்கு காவல்துறை பரிந்துரை செய்தது ஏன்? அது சரியான அணுகு முறையா? இவை அனைத்திற்கும் விசாரணை ஆணையம் விடை தேடுமா? ஐயம் தான். அதன் விசாரணைக் கூறுகளை அரசு தீர்மானித்து வழிகாட்டும். நடந்த உண்மைகளை வைத்து மக்கள் தாம் விடை காணவேண்டும்.

வழக்குரைஞர்களில் கணிசமானோர், சாதியையும் தேர்தல் கட்சிகளையும் அதிகம் சார்ந்திருக்க விரும்புகின்றனர். தொழில் நடத்த, பதவி பெற சாதி மற்றும் கட்சிச் சார்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. வழக்குரைஞர் தொழிலுக்கு மட்டுமல்ல, எந்தத் தொழிலுக்கும் ஒருவர் மனவிருப்பத்தின் காரணமாகவும் அத்துறையில் தமக்குள்ள திறன் காரணமாகவும் போக வேண்டுமே தவிர, வேறு வேலை கிடைக்காததால், அந்த வேலைக்குப் போகக்கூடாது. அவ்வாறு தேர்வு செய்யும் நிலை நாட்டில் இப்பொழுது இல்லை.

வழக்குரைஞர் கல்வி, எவ்வளவு ஆழமானது; எவ்வளவு பரந்து கிடக்கிறது. தாகத்தோடு தண்ணீர் குடிப்பதைப் போல் அக்கல்வியைப் பருக வேண்டியவர்களில் பலர் குறுக்கு வழிகளில் பொருளீட்டும் நோக்கத்தோடும், பதவி பெறும் ஆசையோடும் அப்பட்டத்தை மாட்டிக்கொள்ள விரும்புகின்றனர்.

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு படிக்கும் போதே நோயாளிகளைக் கவனிக்கும் செய்முறைக் கல்வி வழங்கப்படுகிறது. அது போல், சட்டக் கல்லூரியில் மூன்றாண்டு படிப்போர், இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டுகளில் மூத்த வழக்குரைஞர்கள நீதிமன்றங்கள் ஆகிய இடங்களில் செய்முறைக் கல்வி கற்க வழி செய்ய வேண்டும். ஐந்தாண்டு மாணவர்கள் 4 ஆம் ஆண்டு 5 ஆம் ஆண்டு படிக்கும் போது அதே போல் செய்முறைக் கல்விக்கு அனுப்பப்பட வேண்டும்.

தமிழக சட்டக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்கள் 55 காலியாக இருப்பதாக அ.மார்க்ஸ் குழு அறிக்கை கூறுகிறது. அப்படி எனில் ஒரு நாளுக்குரிய எல்லாப் பாட வேளைகளிலும் வகுப்பு நடக்காது. வகுப்பு நடக்காத போது, கும்பல் போட்டுக் கொண்டு, ஊர்வம்பு பேசுவது மாணவர்களுக்கு வாய்ப்பாகிவிட்டது. பேராசியர்கள், விரிவுரையாளர்கள் காலி இடங்கள் நிரப்பப்பட வேண்டும். உரிய கட்டட வசதிகள் வேண்டும்.

நீதிபதி பக்தவத்சலம் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாகப் புரசைவாக்கம் மாணவர் விடுதிக்கு முழுநேர காப்பாளர்(வார்டன்) அமர்த்தப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சாதி உயர்வு தாழ்வு பார்க்கும் கீழ்மைக் குணம் தலித் அல்லாத மக்களிடம் ஒழிய வேண்டும். இளம் தலைமுறையினரிடம் சாதி ஏற்றத் தாழ்வு பார்க்காத உயர் பண்பு வளர்க்கப்பட வேண்டும். சாதி சங்கங்கள், சாதி அரசியல் ஆகியவை இப்பொழுது பெற்றுள்ள பகட்டுக்கவர்ச்சி மறைய வேண்டும். வீடு, கல்விக்கூடம், அரசியல் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இப்பண்பு வளர்க்கப்பட வேண்டும். சட்டக்கல்லூரி மாணவர்களின் சாதி மோதலில் இருந்து இந்தப் படிப்பினைகளை தமிழ் மக்கள் கற்கவேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com