Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
டிசம்பர் 2008

முதலாளிய நெருக்கடியும் தற்கொலைச்சாவும்.
க.அருணபாரதி

அமெரிக்க நாட்டில், கடந்த 1930களில் முதலாளிகளின் மூலதனக் குவிப்பின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் ஏறக்குறைய 20,000 நிறுவனங்கள் மூடப்பட்டன. 1616 வங்கிகள் திவாலாகின. இதன் காரணமாக சுமார் 12 மில்லியன் மக்கள் வேலையிழந்து நடுத்தெருவிற்கு வந்தனர். முதலாளியச் சுரண்டலால் அனைத்தையும் இழந்ததால் வாழ வழியின்றி விரக்தி ஏற்பட்டு சுமார் 23,000 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் மதிப்பிடப்பட்டது. அமெரிக்க வல்லரசோ இப்பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் காட்டி, அவ்வீழ்ச்சியை சரிகட்டுகிறோம் என்ற பெயரில், ஏழை நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்காக அந்நாடுகளின் மீது போரிட்டு அவற்றின் இயற்கை கனிம வளங்களைக் கைப்பற்றுவது, நாடுகளுக்குள் பகையை மூட்டிவிட்டு இருவருக்குமே ஆய்தங்கள் விற்று பணம் சம்பாதித்துக் கொழுப்பது என மனிதகுல அழிவுக் கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்தியது.

aruna_bharathi இரண்டு உலகப்போர்களை நடத்தி கோடிக்கணக்கில் மனித உயிர்களைப் பலிவாங்கிய குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல், இன்றும் பல்வேறு நாடுகளின் மீது படையெடுக்க நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு அலையும் அமெரிக்க வல்லரசிற்குத் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் பலத்த அடி கிடைத்திருக்கிறது. உலகமய சந்தைப் பொருளாதாரத்தின் இந்த வீழ்ச்சி முதலாளிகளை விட, அவர்களது சந்தையாக கருதப்பட்டு சுரண்டப்பட்ட நடுத்தர வர்க்க மக்களையே அதிகம் பாதித்திருக்கிறது.

உலகமயத்தின் நுகர்வுப் பண்பாடு, ‘பணமே உலகம்’ என்ற கோட்பாட்டை போதித்து, மக்களை பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களாக மாற்றிக் கட்டமைத்தது. உலகமயக் கொள்ளைக்காரர்களின் உழைப்புச் சுரண்டல்கள் போக எஞ்சியதையே ஊதியமாகப் பெற்று வந்த நடுத்தர வர்க்க உழைக்கும் மக்கள், நுகர்வுவெறியால் உந்தப்பட்டு பொருட்கள் வாங்கியும், முதலீடு என்ற பெயரில் பங்குச்சந்தை சூதாட்டத்தில் ஈடுபட்டும் அந்தச் சிறுத்தொகையையும் அம்முதலாளிகளிடமே திரும்பக் கொடுத்து வந்தனர்.

தற்பொழுது உலகமயப் பொருளாதாரம் ஆட்டம் கண்டதனால், ஊதிப் பெரிதாக்கப்பட்ட பங்குச்சந்தைகள் நொடித்து சிறுத்து போயின. உலகமயப் பொருளாதாரத்துடன் தொடர்;பு கொண்டிருந்த எல்லா நாடுகளிலும் இது உணரப்பட்டு பல மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். தனியார் வங்கிக் கடன்களால் வீடுகளை இழந்தனர்; வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டனர்.

இந்நிலையில், பணி, வீடு உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் தற்கொலை செய்து கொள்வது உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த அக்டோபர் மாதம் உலக சுகாதார நிறுவனம், இப்பொருளாதார வீழ்ச்சி தற்கொலை முயற்சிகளை அதிகப்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்தது. அதனைக் கருத்தில் கொண்டு பங்குச்சந்தைப் புள்ளிகள் குறையத் தொடங்கியதும், தற்கொலைத் தடுப்பு ஆலோசனை மய்யங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடுக்கி விடப்பட்டிருந்தன.

நம் வீட்டுச் சமையலறைக் கத்தி போல அமெரிக்க நாட்டில் துப்பாக்கிகள் மிகவும் மலிவான பொருள்கள் என்பதால் அங்கு நிகழ்ந்த பல தற்கொலைகள் துப்பாக்கியின் துணைக் கொண்டே நிகழ்த்தப்பட்டன. பொருளாதார வீழ்ச்சியால் பணியிலிருந்து தூக்கியெறியப்பட்ட கார்த்திக் இராசாராம் என்பவர் தன் மனைவியையும் குழந்தைகளையும் சுட்டுக் கொன்றுவிட்டு தானும்தற்கொலை செய்து கொண்டார். அடுத்த சில நாட்களில், அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் லட்சுமிநிவாச ராவ் என்பவர் பணியிழப்பு காரணமாக விரக்தி ஏற்பட்டு தமது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். அவரது இச்செயலுக்கு பொருளாதார சிக்கலே காரணம் என அமெரிக்க காவல்துறை தெரிவித்தது.

அமெரிக்காவின் கலிபோர் னியா மாநிலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட சீன ஊழியர் ஒருவர், அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரியை சுட்டுக் கொன்றார். இந்நிகழ்வுகளில் கொல்லப்பட்ட நிறுவனத் தலைமை அதிகாரி மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டவர்கள் அனைவரும் இந்திய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட மேலாண்மைக் கல்லூரிகளில் படித்துவிட்டு, அங்கு நடந்த வளாக நேர்முகத் தேர்வுகளின் மூலம் பல லட்சம் சம்பளங்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்களால் பணிக்கு எடுக்கப்பட்டவர்களாவர். இதே போல, தனது வீடு ஏலம் எடுக்கப்படும் இந்நேரத்தில் தான் உயிருடன் இருக்கப் போவதில்லை என ஏல நிறுவனத்திற்குக் கடிதம் எழுதிவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண், வீட்டை ஜப்தி செய்ய வந்தக் குழவினரை காத்திருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். மற்றும் பணி இடத்தின் பல அடுக்கு மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டவர்கள் எனத் தற்கொலைப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களின் உருக்கமான கதைகளை பல இணையதளங்கள் நாள்தோறும் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களும் வங்கிக் கடன்களால் வீடுகள் இழந்தவர்களுமே அதிகம்.

இதற்கிடையே தற்கொலைத் தடுப்பு ஆலோசனை மய்யங்களுக்கு வரும் அழைப்புகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணப்படுகின்றன. அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தற்கொலை தடுப்பு மய்யத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 400 தொலைபேசி அழைப்புகள் இவ்வாறு வருவதாகவும் அதனை சமாளிக்கப் போதிய ஆட்கள் இல்லாததால் தன்னார்வளர்கள் பெருமளவு தேவைப்படுவதாகவும் அந்நிறுவ னம் தெரிவித்துள்ளது புளொரிடாவில் அமைந்து உள்ள தற்கொலைத் தடுப்பு மய்யம் ஒன்றின் நிர்வாக இயக்குநர் தங்கள் மய்யத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் பேசுபவர்கள் பலரும் வீடு, வேலை உள்ளிட்ட எல்லாவற்றையும் தாங்கள் இழந்து விட்டதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிகவும் மன வேதனையுடன் தெரிவித்து வருவதாகவும் தெரிவித்தார். ‘தி சமாரிட்டன் ஆப் நியூயார்க்’ என்கிற தற்கொலைத் தடுப்பு மய்யத்திற்கு வரும் அழைப்புகள் கடந்த வருடத்தை விட சுமார் 16 விழுக்காடு வரை அதிகரித்திருப்பதாகவும் அவ்வழைப்புகளில் பொருளாதார வீழ்ச்சியால் மனமுடைந்தவர்கள் தான் அதிகம் என்றும் கூறப்படுகிறது. பிரிட்டனில் உள்ள அவ்வமைப்பின் கிளைக்கு சுமார் 25மூ சதவிகிதம் அழைப்புகள் அதிகரித்துள்ளதாக அவ்வமைப்பின் இணையதளம் தகவல் தெரிவிக்கிறது.

உலகிலேயே வேலை யின்மையாலும் வேலைப் பளுவாலும் அதிகம் தற்கொலைகள் செய்து கொள்பவர்கள் ஜப்பானியர்கள் தான். இவ்வகையில் ஆண்டுக்கு சுமார் 30,000 பேர் ஜப்பானில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியால் ஜப்பானில் அது மேலும் அதிகரிக்கும் என்று மனநல வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்;ளனர். ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருக்கும் தென் கொரியாவின் பொருளாதாரம் இவ்வீழ்ச்சியால் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி யிருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டின் தற்கொலை விகிதம் மேலும் அதிகரித்துள்ளது. உலகிலேயே தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம் உள்ள நாடாக தென் கொரியா மாறிவிடும் அபாயம் இருப்பதாக தென் கொரியாவின் மனநல வல்லுநர் ஒருவர் தெரிவிக்கிறார்.

உலகமயத்துடன் முற்றிலும் இணைக்கப்படாத காரணத்தால் இந்தியாவில் இப்பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்திய பாதிப்புகள் குறைவு என்று கூடச் சொல்லலாம். ஆனால் அந்தக் குறைவான பாதிப்புகளின் விளைவுகளை மட்டும் கணக்கிட்டால் மன்மோகன் - சிதம்பரம் - அலுவாலியா கும்பலால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் விரைவுபடுத்தப்படவிருக்கும் தனியார்மய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் லட்சணங்களை புரிந்து கொள்ளலாம். ஏற்கெனவே கடந்த ஆண்டில் இந்தியப் பங்குச்சந்தை கடுமையாக சரிந்த பொழுது முதலீட்டாளர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் என்பதால் அகமதாபாத் நகரில் உள்ள ஒரு ஏரிக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டது நினைவிருக்கலாம். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி இந்தியத் துணைக் கண்டமெங்கும் பல இடங்களில் தற்கொலைகளைத் தோற்றுவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 17 அன்று, மேற்கு வங்கத் தலைநகரம் கொல்கத்தாவில் 33 வயதான ஒருவர் பங்குச் சந்தையில் பெரும் இழப்புகளை சந்தித்ததால் நஞ்சு அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டார்.

செப்டம்பர் 19, அன்று, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த பங்குச்சந்தைத் தரகர் ஒருவர் அவரை நம்பி முதலீடு செய்தவர்கள் பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தொடர்ந்து கேள்விகள் எழுப்பியதால் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

அதே நாளில் செப்டம்பர் 19), ஐதராபாத்தில் வசித்து வந்த ஒருவர் தமது இரண்டு வயது மகனையும் மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு சமையல் எரிவாயுவைத் திறந்து விட்டு தீ வைத்துக் கொண்டதில் மூவரும் கருகி உயிரிழந்தனர்

அக்டோபர் 12 அன்று, இந்தியாவின் பங்குச்சந்தைத் தலைநகரான மும்பை நகரில் 4 பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். பொருளாதார வீழ்ச்சி இதற்குக் காரணமாக இருக்கலாம் என மும்பை காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

அக்டோபர் 17 அன்று அரியானா மாநிலத்தில் கூர்கான் நகரில் ஏற்றுமதி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

அக்டோபர் 21 அன்று, திரிபுரா மாநிலத் தலைநகரான அகர்தலாவில் பங்குச்சந்தையில் 18 லட்ச ரூபாயை இழந்ததால் 26 வயதான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அக்டோபர் 27 அன்று, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் பங்குச்சந்தையில் கணவர் பணத்தை இழந்ததால் விரக்தியுற்று அவர் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அக்டோபர் 30 அன்று, ஆந்திர மாநிலத்தின் ஐதராபாத் நகரில் 24 வயதான இளைஞர் ஒருவர் பங்குச்சந்தை சரிவால் பணத்தையெல்லாம் இழந்து விரக்தியுற்று மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

நவம்பர் 5 அன்று, குஜராத்தில் நரன்புர நகரத்தைச் சேர்ந்த 42 வயதான ஒருவர் பங்குச் சந்தையில் பணத்தை இழந்துவிட்டதால் குடும்பத்தை நடத்த முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

உலகமய ஊக வணிகச் சூதாட்டத்திற்கு இது போன்ற தற்கொலைகள் குறித்தச் செய்திகள் பின்னடைவு ஏற்படுத்தும் என்பதால் முதலாளிய ஊடகங்கள் இச்செய்திகளை குறைவாகவே வெளியிட்டிருக்க வேண்டும். அப்படியெனில் நமக்குக் கிடைத்த பட்டியலே இவ்வளவு என்றால் உண்மையில் எவ்வளவு பேர் என்று நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியது தான்.

இப்பொருளாதார வீழச்சி காரணமாக ஏற்பட்டுள்ள பங்குச்சந்தை சரிவால் பங்குசந்தை தரகர்கள், முதலீட்டாளர்கள் என பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மனநல மருத்துவர்களை அதிகளவு நாடி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த அக்டோபர் 13, 2008 அன்று இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் 30 லட்சம் பேர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகமயத்தின் விளைவால் பணிப் பாதுகாப்பற்ற சூழல், பணியில் ஏற்படும் மன அழுத்தம், குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்டுள்ள விரிசல் எனப் பலவகை காரணங்களால் மன அழுத்தம் வளர்ந்து வருவதாக அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது. உலக சுகாதார அமைப்பு, வளர்ந்த நாடுகளில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 75மூ சதவிகித பேருக்கு அதற்குரிய சிகிச்சை வசதிகள் கிடைப்பதே இல்லை என்று தெரிவிக்கிறது. உலகம் முழவதும் சுமார் 500 மில்லியன் பேர் மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும், இந்திய மக்கள் தொகையில் சுமார் 15மூ விழுக்காட்டினர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் விம்ஹன்ஸ் மனநல வல்லுநர் ஜித்தேந்திர நாக்பால் தெரிவித்தார்.

பிரிட்டனில் இப்பொருளாதார வீழ்ச்சியால் மனநலம் தொடர்பான நோய்கள் சுமார் 26மூ விழுக்காடு அதிகரிக்கும் எனவும், 1.5 மில்லியன் மக்கள் அதனால் பாதிக்கப்படுவர் எனவும் அந்நாட்டு அரசைத் தன்னார்வ நிறுவனங்கள் எச்சரித்தன. தற்பொழுது ஏற்பட்டு இருக்கும் பொருளாதார வீழ்ச்சியை சரிகட்ட புதிய போரை தொடங்குக என அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறைச் செயலகமான பென்டகனுக்கு, ராண்ட் கார்ப்பரேசன்(Rand corporation) நிறுவனம் கூறியுள்ளதாக பிரஞ்சு மற்றும் சீன இணையதள ஊடகங்கள் சில தகவல்கள் வெளியிட்டுள்ளன. இந்த ராண்ட் நிறுவனம் அமெரிக்க அரசிற்கு ஆலோசனைகள் மட்டுமல்லாமல் ஆய்தங்கள் விற்பதிலும் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசின் கடந்த கால வரலாற்றை அறிந்தவர்ளுக்கு இச்செய்தி வெறும் ஊகத்தகவல் அல்ல. எச்சரிக்கையே ஆகும்.

ஒருபுறம், தேசிய இனங்களின் சொத்துக்களைச் சூறையாடி வரும் உலகமயத்தின் விளைவால் வாழ வழியின்றி பல லட்சக்கணக்கான விவசாயிகள், சிறு தொழிலில் ஈடுபட்டவர்கள் என தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியல்நீள்கிறது. மற்றொருபுறம் அதிக ஊதியம் கொடுத்து அதற்கும் அதிகமான வேலைகளையும் கொடுத்து உழைப்புச் சுரண்டல் மூலம் மனஅழுத்தம் ஏற்படுத்தி தொழிலாளிகளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவதும் போதாதென்று ஊக வணிகச்சூதாட்டத்தில் ஈடுபடுத்தி கோடானு கோடி மக்களின் வாழ்வாதாரங்களை பறித்துக் கொண்டு அவர்களைத் தற்கொலை மனநிலைக்குத் தள்ளிவிடுகின்றது உலகமயம். இந்தத் தற்கொலைகள் உலகமயம் நிகழ்த்திய மறைமுகப் படுகொலைகளாகவே வரலாற்றில் பதிக்கப்படும். கடந்த காலங்களில் அணுகுண்டுகளால் மனித குலத்தை அழித்த முதலாளியம் இன்று மறைமுகமாக பொருளாதாரத்தால் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. உலகமயப் பொருளாதாரத்தின் வன்முறை வெறியாட்டங்களில் இருந்து தப்பிக்க மண்ணுக்கே உரிய பண்பாட்டுடனும் அந்தந்த மக்களுக்கே உரிய பொருளியல் கொள்கையுடனுமே அதனை எதிர்கொள்ள வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com