Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஏப்ரல் 2009

பொருளாதாரம் மந்தம் தரும் படிப்பிணைகள்
கி.வெங்கட்ராமன்

“உலக நாடுகளே திறந்த பொருளாதாரத்தைக் கடைபிடியுங்கள். அமெரிக்கர்களே, அமெரிக்கப் பொருள்களையே வாங்குங்கள்’ - இதுதான் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமாவின் இன்றைய பொருளியல் முழக்கம்.

இதனைச் செயல்படுத்துவதற்காக அவரும், அவரது ஓடும் பிள்ளையான பிரித்தானிய பிரதமர் கார்டன் பிரவுனும் இணைந்து வருகிற 2009 ஏப்ரல் 2-ஆம் நாள் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்துகிறார்கள். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இலண்டனில் நடைபெறும் இம்மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப்போகிறது என்றும், இதில் “உலகு தழுவிய புதிய ஒப்பந்தம்” (Global New Deal) உருவாகப்போகிறதென்றும் கார்டன் பிரவுன் பரப்புரை செய்து வருகிறார்.

ஆனால் உருப்படியான உடன்பாடு ஏதும் காணப்படாமலேயே சில கூட்டறிக்கைகளை வெளியிட்டுவிட்டு கலைகிற கூட்டமாக இந்த உச்சி மாநாடு அமைந்தால் வியப்பதற்கு இல்லை. “உலக நெருக்கடியை உலகின் ஒன்றுபட்ட முயற்சியால்தான் வெல்லமுடியும்” என்று ஒபாமா உபதேசிப்பதை கேட்பதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் எதுவும் தயாராக இல்லை. உலகம் முழுவதற்கும் ஒற்றைத் தீர்வு என்பது சாத்தியமில்லை என்பதை பொருளியல் வல்லுனர்கள் பலரும் உணர்ந்து வருகிறார்கள்.

ஏனெனில் இவர்கள் எதிர்பார்த்ததைவிடவும் உலகப் பொருளியல் நெருக்கடி ஆழமானதாகவும், விரிந்து பரந்தும் தொற்றியுள்ளது. ஒவ்வொரு நாளும் ஆலைகள் மூடப்படுவதும், நிதி நிறுவனங்கள் ஓட்டாண்டியாவதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 17ஆயிரம் பேர் வேலை இழப்பது உலகப் போக்காக இருக்கிறது. இந்த உலக நெருக்கடி இந்தியாவை பெருமளவு பாதிக்கவில்லை என்று மன்மோகன் சிங் கூறிவந்தாலும் உண்மை நிலவரம் இதற்கு நேர் மாறாக உள்ளது.

இந்திய அரசின் தொழிலாளர் கழக ஆய்வு அறிக்கையின்படி கடந்த 2008 செப்டம்பர் முதல் 2009 மார்ச் முடிய 20 இலட்சம் பேர் இந்தியாவில் வேலை இழந்துள்ளனர். அதாவது சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் நான்கு பேர் வேலை இழக்கிறார்கள் என்று பொருள்.

துணி ஆலைகள், தானியங்கி வாகனத் தொழிலகங்கள், பல்வேறு துறைசார்ந்த சிறு நடுத்தர தொழில்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தொழிலகங்கள் தமிழ்நாட்டில் அதிகம் என்பதால் தமிழ்நாட்டிற்கு இதன் பாதிப்பு அதிகம். இந்தியா முழுவதும் மொத்தம் உள்ள 3,070 பெரிய துணி ஆலைகளில் 1912 ஆலைகள் தமிழ்நாட்டில் உள்ளன.

இவை வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கி உள்ளன. 40% முதல் 50% வரை இவற்றின் உற்பத்தி குறைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர். புகழ்பெற்ற திருப்பூர் பின்னலாடை தொழில் தள்ளாடி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 1000 கோடி ஏற்றுமதி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 1.5 இலட்சம் தொழிலாளர்கள் வீதியில் வீசி எறியப்பட்டுள்ளனர்.

கோவை லெட்சுமி மிசின் ஒர்க்ஸ் இப்போது ஒரு பிரிவேளை (சிப்ட்) மட்டுமே இயங்குகிறது. இதைச்சார்ந்து கோவையிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் இயங்கி வந்த சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், லூக்காஸ் டிவிஎஸ் போன்ற பெரிய தானியங்கி வாகனத் தொழிலகங்கள் வாரத்தில் மூன்று நாட்கள், நான்கு நாட்கள் மட்டுமே இயங்குகின்றன. இனி ஒருவாரம் விட்டு ஒருவாரம் நான்கு நாட்கள் இயங்குவது குறித்தும் இந்த நிர்வாகங்கள் யோசித்து வருகின்றன.

தமிழகத்திலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொடிகட்டிப் பறந்த மனை விற்பனை தொழில், கட்டுமான தொழில் ஆகியவை கிட்டத்தட்ட முற்றிலும் முடங்கிப்போய் உள்ளன. சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைச் சார்ந்து வான் உயர்ந்த கட்டடங்களை கட்டிப்போட்ட நிறுவனங்கள் வாடகைக்குக் குடியமர யாரும் வராமல் தத்தளிக்கின்றன. இவற்றை நம்பி இருந்த பல இலட்சம் கட்டடத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். ஏற்கெனவே நீண்ட நாளாக கை நெசவு பெரும் சிக்கலில் ஆழ்ந்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒப்பீட்டளவில் இத்துறையில் நூல் நெசவைவிட பட்டு நெசவுத் தொழிலாவது தப்பிப் பிழைத்து வந்தது. அண்மைக்காலமாக சீன செயற்கைப் பட்டின் படையெடுப்பு பட்டு நெசவுத்தொழிலை பெருமளவு தாக்கி வருகிறது. 2000-01-ஆம் ஆண்டில் 14.48 இலட்சம் மீட்டர் சீனப்பட்டு இந்தியாவிற்குள் இறக்குமதி ஆனது. ஆனால் அதுவே 2004-05-ஆம் ஆண்டில் 9 கோடியே 7 இலட்சம் மீட்டராக - அதாவது ஏறத்தாழ ஏழு மடங்கு அதிகரித்தது. காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் உள்ளிட்ட பல்வேறு பட்டு கைநெசவு மையங்கள் சிறுநீரக விற்பனையில் முக்கிய மையங்களாக மாறிப்போயின. இப்போது ஏற்பட்டுள்ள தொழில் மந்தம் இத்துறையை இன்னும் கடுமையாகத் தாக்கிவருகிறது.

நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண் உற்பத்தி இலாபகரமாக இல்லாததால் ஏற்றுமதிக்குரிய மூலிகைகளையும், வாசனைப் பொருட்களையும் உற்பத்தி செய்யுமாறு உழவர்களை அரசாங்கம் வலியுறுத்தியது. இப்போது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தொழில் ;மந்தம் காரணமாக வேளாண் ஏற்றுமதி வாய்ப்பும் பறிபோய்விட்டன. மனிதவள வளர்ச்சிக்குறியீட்டு வரிசையில் (Human Development Index-HDI) மொத்தம் உள்ள 179 நாடுகளில் 132-வது இடத்தில் இந்தியா இருக்கிறதாம். சிசு மரணம், கல்வியின்மை, வாங்கும் சக்தியின்மை, ஆரோக்கியக் குறைவு போன்றவற்றில் உலகின் வறிய நாடுகளைவிட இந்தியா மோசமான இடத்தில் இருப்பதையே இக்குறியீட்டு எண் காட்டுகிறது.

நாள்தோறும் வான் தாக்குதல்களையும், பொருளாதார முற்றுகையையும் சந்தித்து வரும் பாலஸ்தீன காசா பகுதியைவிட இந்தியா கீழே இருக்கிறது என்றால் இச்சிக்கலின் தீவிரத்தை உணர்ந்துகொள்ளலாம். திறந்த பொருளாதாரம், உலகமயம் ஆகியவை செயலுக்குவந்த 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் இப்பிரச்சினை தீவிரமாக ஆழப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொருளியல் நெருக்கடியை சந்தித்துவரும் இத்தருணத்தில் ஒவ்வொரு நாடும் தமது சந்தையை பூட்டிவைத்துக்கொள்ளும் தற்காப்பு முயற்சிலேயே கவனம் செலுத்தி வருகின்றன. திறந்த பொருளாதாரத்திற்கு தலைமை தாங்குகிற அமெரிக்கா இப்போது தற்காப்பு வாதத்தில் (Protectionism) இறங்கியுள்ளது. திவாலாகிப் போன அமெரிக்க வங்கிகளையும், காப்பீட்டு நிறுவனங்களையும் தூக்கி நிறுத்துவதற்காக ஒபாமா அரசு பல்லாயிரம் கோடி டாலர் மானியமாக வாரிவழங்கியது. அவ்வாறு வழங்கும்போது பயன்பெறும் நிறுவனங்களுக்கு ஒபாமா அரசு சில நிபந்தனைகளை விதித்தது. தங்கள் பணிகளை வெளிநாடுகளுக்கு வெளிப்பணி வாய்ப்பில் (அவுட் சோர்சிங்) வழங்கக்கூடாது, வெளிநாட்டு பணியாளர்களை தங்கள் தொழிலகங்களிலிருந்து பெருமளவு குறைக்கவேண்டும், வெளிநாட்டு பொருள்களையும், உதிரி உறுப்புகளையும் வாங்குவதை பெருமளவு குறைக்கவேண்டும் போன்றவையே இந்நிபந்தனைகள். ”அமெரிக்கப் பொருள்களையே வாங்குங்கள்” என்பது பாரக் ஒபாமா அமெரிக்கர்களுக்கு வழங்கியுள்ள தாரக மந்திரம். ஆனால் இதே ஒபாமாவின் ஆட்சி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு திறந்த பொருளாதாரத்தை இப்போதும் வலியுறுத்துகிறது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப துறை பெரிதும் அமெரிக்க வெளிப்பணி வாய்ப்புகளை சார்ந்து உள்ளது. ஆனால் ஒபாமா ஆட்சியில் அமெரிக்கா மூடிய கொள்கையை கடைப்பிடிப்பதால் இந்திய பி.பி.ஓ. நிறுவனங்கள் பெருமளவு பணி வாய்ப்பை இழந்துள்ளன. இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் கூட பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளன. பல்லாயிரம் பேர் சூன் மாதத்திற்குப் பிறகு வேலை இழப்போர் பட்டியலில் உள்ளனர். இதிலிருந்து மீள்வதற்காக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சங்கமான நாஸ்காமின் (NASSCOM) தலைவர் கணேஸ் நடராசன், பொதுச்செயலாளர் சாம் மிட்டல் ஆகியோர் அமெரிக்கா சென்று அங்குள்ள உயர்மட்டத் தலைவர்களை சந்தித்து இந்தியாவிற்கு தொடர்ந்து வெளிப்பணி வாய்ப்புகளை வழங்குமாறும், இந்தியத் தொழில்நுட்ப பணியாளர்களை அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துவிட்டு வந்துள்ளனர். ஆனால் அமெரிக்க அரசு இவர்கள் கோரிக்கைக்கு இணங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதே நேரம் இந்திய ஆட்சியாளர்கள் தங்களது திறந்த பொருளாதாரக் கொள்கையை மாற்றிக்கொள்வதாக இல்லை. அமெரிக்க வல்லரசு சொல்கிற திசையிலேயே மன்மோகன் சிங் ஆட்சி பொருளாதாரக் கொள்கையை வகுத்துள்ளது.

கடந்த பிப்ரவரி 16-ஆம் நாள் இடைக்கால நிதிநிலை அறிக்கையை முன்வைத்த - நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் பிரணாப் முகர்ஜி நிறைவேற்றியுள்ள மசோதாக்களே இதற்குச் சான்று. வங்கி, காப்பீட்டுத்துறை ஆகியவற்றில் வெளிநாட்டு முதலீட்டின் வரம்புகள் உயர்த்தப்பட்டுள்ளன. நேரடி வெளிநாட்டு மூலதனத்தை வரவேற்பதற்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்கடியைக் கண்டபின்னும் உலகமயப் பாதையிலிருந்து இந்திய அரசு மாறுவதாக இல்லை. அமெரிக்கா காட்டுகிற திசைவழியிலேயே இதன் கொள்கை தொடர்கிறது. இடைக்கால பட்ஜெட், தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உற்பத்தி வரி, இறக்குமதி வரி, வருமான வரி ஆகியவற்றில் சலுகைகள் வழங்குகிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தொழில் மந்தத்திலிருந்து மீள்வதற்கான ஊக்குவிப்பு வழிமுறையாக (Stimulus Package) இதனை பிரணாப் முகர்ஜி கூறுகிறார்.

ஆனால் இந்த முயற்சிகள் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவப் போவதில்லை. ஏனெனில் வருமான வரிச்சலுகை, தானியங்கி வாகனங்களின் ;வரிக்குறைப்பு ஆகியவற்றால் உயர் நடுத்தர வர்க்கத்தினர் பொருள் வாங்குவது அதிகரிக்கப்போவதில்லை. அதிகம்போனால் அவர்கள் சேமிப்பை, தங்கம் போன்ற வழிகளில் அதிகரிக்கக்கூடும். அவர்கள் நுகர்வுப் பொருள்களை ஏற்கெனவே அதிகம் வாங்கியிருப்பவர்கள்தாம் மறைமுக வரிகளில் சில இனங்களைக் குறைப்பதால், அதற்கேற்ப அத்தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருள்களின் விற்பனை விலையைக் குறைத்துவிடுவார்கள் என்று உறுதி கூற முடியாது. உண்மையில் ஏழை, எளிய மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்வதன் வழியாகத்தான் தொழில் மந்தத்தை நீக்க முடியும். அதற்கு இந்திய அரசு கீழ்வரும் முயற்சிகளில் இறங்கவேண்டும்.
* வேளாண்மையில் அரசு முதலீட்டை அதிகரிக்கவேண்டும். வேளாண் விளை பொருள்களுக்கு இலாபகரமான விலை வழங்கி அனைத்து வேளாண் பொருள்களையும் அரசு கொள்முதல் செய்யவேண்டும்.
* ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி வேளாண் மண்டலங்களாக சந்தைப் பாதுகாப்பு பெறவேண்டும்.
* உற்பத்தியில் ஈடுபடும் உழவர்களுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்வதற்கு மேலை நாடுகளில் உள்ளதுபோல் தாராள மானியம் வழங்குவது அல்லது முனைவர் தேவேந்திர சர்மா போன்றவர்கள் முன்மொழிந்துள்ளதுபோல் உழவர்களுக்கு வருமான ஆணையம் அமைத்து (Income Commission) நேரடியாக உழவர் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வாழ்வு+தியத்தை வழங்குவது போன்ற மாற்று வழிகளை கைக் கொள்ளவேண்டும்.
* இயற்கை வேளாண் வழிமுறைகள், சிக்கன நீர்ப் பயன்பாடு, போன்றவற்றிற்கு சிறப்பு நிதி உதவி, தனித்த சந்தை வசதி ஆகியவற்றிற்கு அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
* சிறுதொழில் துறையைப் பாதுகாக்க குறிப்பான பொருளியல் நடவடிக்கைகளில் அரசு முனைப்பாக இறங்கவேண்டும்.
* சிறு, குறு தொழில்களுக்கு மிகக்குறைந்த வட்டிக்கு அல்லது வட்டியில்லாக் கடன்கள் வழங்கவேண்டும். சிறுதொழில் உற்பத்தியில் பெரு நிறுவனங்கள் நுழைந்துவிடாமல் வரம்புக்கட்டி பாதுகாக்கவேண்டும். ஏற்றுமதி உள்ளிட்ட சந்தை வாய்ப்புகளை அரசு செய்துதரவேண்டும்.
* பொதுப்பணித் துறையின் மூலம் கிராமப்புறங்களின் சாலை, நீர்நிலைப் பாதுகாப்பு, நகர்ப்புறங்களில் குறை வருமான உள்ளவர்களுக்கு குடியிருப்புகள் கட்டிக்கொடுத்தல் போன்ற பணிகளில் அரசின் ;முதலீடு அதிகரிக்கவேண்டும்.

இவை போன்ற மாற்றுத் திட்டங்கள் தாம் ஏழை, எளிய மக்களிடத்தில் பணப்புழக்கத்தை அதிகரித்து சந்தையை விரிவாக்கித்தரும். ஏனெனில் இப்பிரிவு மக்கள் தாம் தங்களுடைய வருமானத்தில் மிகப்பெரும் பகுதியை நுகர்ப்பொருள் வாங்குவதற்கு செலவிடக்கூடியவர்கள் ஆவர். நிலவும் முதலாளிய அமைப்புக்குள்ளேயே செய்யக்கூடிய உடனடி மாற்றுப்பணிகளே இவை. இத்திசையில் இந்திய அரசு கவனம் செலுத்துவதின் மூலமாக மட்டுமே இப்போது நிலவும் தொழில் மந்தத்திலிருந்து மீளமுடியும். மாறாக உலகமயம், திறந்த பொருளாதாரம் ஆகியவை தொடருமேயானால் மிகப்பெரும் நெருக்கடியில் இந்தியப் பொருளியல் மீள முடியாமல் சிக்கிக்கொள்ளும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com