Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஏப்ரல் 2009

பா.ம.க.வின் “சனநாயகம்“
தமிழ்த்தேசியன்

பாட்டாளி மக்கள் கட்சி தனது பொதுக் குழுவில் கருத்து வாக்கெடுப்பு நடத்தி, அதில் கூறப்பட்ட பெரும்பான்மை அடிப்படையில் செயலலிதா அணியில் சேர்வதாக அறிவித்துள்ளது. 2453 பேர் செயலலிதா அணியில் சேர்ந்திட வாக்களித்தனராம். 117 பேர் மட்டும் கருணாநிதி அணியில் சேர வாக்களித்தனராம். 10 பேர் நடுநிலை வகித்தனராம். தி.மு.க. அணியில் சேர பெரும்பான்மை கிடைத்திருந்தால் பா.ம.க. தி.மு.க. அணிக்குப் போயிருக்கும் என்பது இதன் பொருள்.

சென்னைக்கருகில் உள்ள வானகரம் திருமண மண்டபமொன்றில் 26.3.2009 அன்று நடந்த பொதுக்குழுவில் சனநாயக அடிப்படையில் பெரும்பான்மையோர் கருத்து தெரிவிக்கும் வரை, மருத்துவர் இராமதாசு உள்ளிட்ட பா.ம.க. தலைமையினர் தி.மு.க. அணியில் சேர்வதா அ.தி.மு.க. அணியில் சேர்வதா என்பது பற்றி ஒரு முடிவு எடுக்காமல் காத்திருந்ததாக இதற்குப் பொருள். அந்த அளவுக்கு பொதுக்குழு சனநாயகம் பா.ம.க.வில் மேலாதிக்கம் செலுத்துகிறது என்று பொருள். ஆனால் 24.3.2009 அன்றே அ.தி.மு.க. அணியில் பா.ம.க. சேரப்போகிறது என்றும், மக்களவைத் தொகுதிகள் ஏழும், மாநிலங்களவை உறுப்பினர் ஒன்றும் ஒதுக்குவதாக செயலலிதா ஒப்புக் கொண்டு இரு கட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்தன. அச்செய்திகளை பா.ம.க. மறுக்கவில்லை. பொத்தாம் பொதுவில் பொதுக்குழு முடிவு செய்யும் என்று மட்டுமே மருத்துவர் இராமதாசு அறிவித்துக் கொண்டிருந்தார்.

வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் பேசிய மருத்துவர் இராமதாசு தி.மு.க. தமது கட்சிக்கு இழைத்த “துரோகங்களைப்” பட்டியலிட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார். “இந்த நிலையில் தான் என்ன முடிவு செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கப் பொதுக்குழு இங்கு நடத்தப்படுகிறது. இந்தப் பொதுக்குழுவில் (அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான தொண்டர்களின் முடிவு. நான் எதிர்பார்த்தது என்றாலும் வாக்கெடுப்பு மூலம்தான் முடிவு எடுக்கப்பட்டது.” (தமிழ் ஓசை 27.3.09) ஏற்கெனவே அ.இ.அ.தி.மு.க.வுடன் பல நாட்கள் பேரம் நடத்தி பேசி முடித்து, தொகுதி ஒதுக்கீடுகள் முடிந்துவிட்டன. ஆனால் பொதுக் குழுவைக் கூட்டி அதில் வந்த கருத்து வாக்கெடுப்பின் அடிப்படையில் தான் செயலலிதாவுடன் கூட்டணி தீர்மானிக்கப்பட்டது என்று ஒரு போலித்தோற்றம் கொடுத்தனர்.

இது எந்தக் கட்சியும் வழங்காத மாபெரும் உள்கட்சி சனநாயகம் என்று பா.ம.க. தலைமை பேசுவது, அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்களை அசிங்கப்படுத்துவது மட்டுமல்ல, சனநாயகம் என்ற கருத்தியலையே அசிங்கப்படுத்துவதாகும்.

வாக்கெடுப்பு முடிவு அறிவிக்கப்பட்டவுடன் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வது என்று அச்சிடப்பட்ட நீண்ட தீர்மானத் தாள்களை மண்டபத்தில் அனைவர்க்கும் வழங்கினர். இது எப்படி சில நிமிடங்களில் அச்சிட இயலும்?

பா.ம.க. தலைமை அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர முடிவெடுத்து, அதற்கான ஒப்புதல் பெறப் பொதுக்குழுவில் கருத்து வாக்கெடுப்பு நடத்தியிருந்தால், அது சனநாயக செயல்பாடுகளில் ஒன்றாக மதிக்கப்படும். ஆனால் தலைமை தானாக எந்த முடிவும் எடுக்காமல், திரை மறைவு பேரங்கள் நடத்தாமல், பொதுக் குழுவில் கருத்து வாக்கெடுப்பு நடத்தி, அதில் கிடைத்த பெரும்பான்மைப்படி, அணி சேர்வது பற்றி முடிவெடுத்ததாகக் கூறுவது எவ்வளவு பெரிய பாசாங்கு. வித்தியாசமான கட்சி என்று காட்டிக் கொள்வதற்காக வித்தியாசமான நாடகங்களை அரங்கேற்றினால் அது எடுபடாது. மக்களை முற்றிலும் ஏமாளிகளாகக் கருதக்கூடாது.

பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் தி.மு.க.வைக் குறை கூறுகிறார்கள். குற்றம் சாட்டுகிறார்கள். இந்திய அரசின் மீதோ, அதற்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி மீதோ குறிப்பான குற்றச்சாட்டு எதையும் கூறவில்லை. மருத்துவர் இராமதாசு அங்கு ஆற்றிய உரை தி.மு.க.வையும், தமிழக அரசையும் சாடுகின்றதே அன்றி காங்கிரசையும், இந்திய அரசையும் திறனாய்வு செய்யவில்லை. தி.மு.க.வை விட்டு காங்கிரஸ் விலகி அதன் தலைமையில் ஒரு கூட்டணி அமைந்தால் அதில் சேர அணியமாக இருந்தது பா.ம.க. அதை வெளிப்படையாகவும் அவ்வப்போது மருத்துவர் இராமதாசு அறிவித்தார்.

இந்திய நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவக்கூட்டில் இணைக்கும் ஒப்பந்தம் ஒன்றில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கையொப்பமிட்டபோதும் (2006), அதன்பிறகு பிரதமர் மன்மோகன் சிங் அந்த ஒப்பந்த அடிப்படையில், இராணுவக்கூட்டையும் இணைத்து அணு ஆற்றல் ஒப்பந்தம் பு‘;‘{டன் செய்த போதும் (2008) பா.ம.க. அவற்றை ஆதரித்தது. எதிர்க்கவில்லை. நட்பு அடிப்படையில் திறனாய்வு கூடச் செய்யவில்லை.

தாராளமயம், உலகமயம் எனப்படும் பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக் கொள்கைகளை இந்தியாவில் செயல்படுத்தும் வகையில் அமெரிக்கக் கைத்தடியான சோனியா - மன்மோகன் கும்பல் எடுத்த எந்த நடவடிக்கையையும் பா.ம.க. எதிர்க்கவில்லை. அதற்கான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டபோது பா.ம.க. அவற்றை நாடாளுமன்றத்தில் எதிர்க்கவில்லை.

பன்னாட்டு நிறுவனங்களின் மரபீனி மாற்று விதைகளை இறக்குமதி செய்ய இந்திய நாடாளுமன்றம் விதைச் சட்டம் இயற்றியது. பசுமைத் தாயகம் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தும் பா.ம.க. அந்த விதைச் சட்டத்தைக் கூட எதிர்க்கவில்லை. அந்த விதைச்சட்டம் இந்திய வேளாண்மையை அழிக்கிறது.

இந்திய அரசு வடித்துக் கொடுத்த தாராளமய, உலகமயச் சட்டங்களில் ஒன்று தான் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கான சட்டம். அதை நாடாளுமன்றத்தில் பா.ம.க. எதிர்க்கவில்லை. சிறப்புப் பொருளியல் மண்டலக் கொள்கையைக் கடைபிடிப்பதற்காக காங்கிரஸ் தலைமையிலான நடுவணரசை ஒரு தடவை கூட இராமதாசு கண்டிக்கவில்லை. ஆனால் கருணாநிதி சிறப்புப் பொருளியல் மண்டலங்களைக் கொண்டு வந்தால், அதைப் பாய்ந்து பாய்ந்து எதிர்ப்பார். அவர் தி.மு.க. மீது பாயும் பாய்ச்சல், சிறப்புப் பொருளியல் மண்டலக் கொள்கையையே அவர் எதிர்க்கிறார் என்பது போன்ற தோற்றம் கொடுக்கும். உலகமயம், தாராளமயம் என்னும் பன்னாட்டு முதலாளியக் கொள்ளையையே எதிர்க்கிறார் என்பது போன்ற போலித் தோற்றம் கொடுக்கும். சிறப்புப் பொருளியல் மண்டலம் தில்லி அரசால் திணிக்கப்பட்டால் அதை ஏற்பது; அதைத் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி செயல்படுத்தினால் எதிர்ப்பது என்ற இந்த இரட்டை நிலையை ஏன் பா.ம.க எடுத்தது?

தில்லி ஆட்சியில் பா.ம.க.வுக்குப் பங்கு இருக்கிறது. அதனால் அனைத்திலும் பங்கு வருகிறது. தமிழக ஆட்சியில் பா.ம.க.வுக்குப் பங்கில்லை. அதனால் சிறப்புப் பொருளியல் மண்டலங்களால் கிடைக்கும் எல்லா வருமானத்தையும் தி.மு.க.வே சுருட்டிக் கொள்கிறது. சுருக்கமாகச் சொன்னால் கருணாநிதி குடும்பங்களே சுருட்டிக் கொள்கின்றன. பா.ம.க. தலைமைக்கு அதில் பங்கு வருவதில்லை. இந்த ஆத்திரத்தில்தான், தி.மு.க. செயல்படுத்தும் பன்னாட்டு முதலாளிகளுக்கான கொள்ளைத் திட்டங்களை மருத்துவர் இராமதாசு எதிர்த்துச் சீறுகிறார் என்று பாமரர்களும் புரிந்து கொண்டார்கள்.

இப்பொழுது பா.ம.க. பொதுக்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், தில்லிக் காங்கிரஸ் ஆட்சியைப் பற்றி எந்தத் திறனாய்வும் இல்லை. ஈழத்தில் தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொல்கிறது சிங்களப்படை; அப்போரை இயக்குவதே இந்திய அரசுதான். சிங்களப் படைக்கு ரேடார்கள் கொடுத்ததையும், ஆய்தங்கள் கொடுப்பதையும் பிரதமர் மன்மோகன் சிங்கே ஒப்புக் கொண்டுள்ளார். வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியே ஒப்புக் கொண்டுள்ளார். ஈழத்தில் நடைபெறும் தமிழ் இன ஒழிப்புப் போரை வன்மத்தோடு சோனியாகாந்தி தான் இயக்குகிறார். இந்தியப் படையாட்களும் நேரடியாகப் போர்களத்திற்கு அனுப்பப்பட்டு, தமிழ் இனத்திற்கு எதிராகப் போர்புரிகிறார்கள். பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பண உதவி செய்து சிங்களப்படையை ஊக்கப்படுத்து கிறார்கள் சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும். அன்றாடம் செய்தித் தாள் படிக்கும் அனைவருக்கும் தெரிந்த உண்மை இது. மருத்துவர் இராமதாசுக்கும் இந்திய அமைச்சரவையில் உள்ள நலத்துறை அமைச்சர் அன்புமணி இராமதாசுக்கும் மட்டும் இந்த உண்மை தெரியவில்லையா?

நடுவண் அமைச்சரவையில் உறுப்பு வகித்த பா.ம.க.வுக்குத் தெரியாமல் மன்மோகன் ஆட்சி ஈழத்தமிழர்களை அழிக்க, இவ்வளவு உதவிகளையும் சிங்களப்படைக்குச் செய்து விட முடியுமா? முடியாது. இப்பொழுது நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானத்தில் கூட, ஈழத் தமிழர்களைக் காக்கத் தவறியதற்காக தமிழக அரசையும் முதலமைச்சரையும் குற்றம் சாட்டுகிறது பா.ம.க. ஆனால், இந்திய அரசைக் கண்டனம் செய்யாமல் அதன் வெளியுறவுத் துறை “தோல்வி” அடைந்து விட்டது என்று மென்மையாக கருத்துத் தெரிவிக்கிறது. “இலங்கை அரசின் மனித குலத்திற்கு எதிரான இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்குத் தனது சக்திக்கு இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் 7 கோடி தமிழர்கள் வாழுகின்ற இந்தியாவுக்கு இருக்கின்றது.

அவசரகால அடிப்படையில் செயல்பட்டு இச்சிக்கலை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு மன்றத்திற்கு எடுத்துச் சென்று உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியா கோரியிருக்க வேண்டும். இதைச் செய்யாமல் போனது தமிழினத்திற்கு எதிராகக் குறுகிய
நோக்கத்திலும், தப்பெண்ணத்திலும் இயக்கப்படுகிற வெளியுறவுக் கொள்கையின் முழுத் தோல்வி எனப் பொதுக் குழு கருதுகிறது.” (தமிழ் ஓசை 27.3.2009) ஒட்டு மொத்த நடுவண் அரசுக்கோ, சோனியாகாந்தி - மன்மோகன்சிங் கும்பலுக்கோ, ஈழத் தமிழர் இன அழிப்பில் எந்தப் பங்கும் இல்லையாம். வெளியுறவுத் துறையில் தமிழினத்திற்கு எதிராக உள்ள குறுகிய நோக்கங்கொண்ட, தப்பெண்ணம் கொண்ட சிலர்தாம் இதில் தவறு இழைத்துவிட்டனர். அவர்களால் தான், இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு ஈழச் சிக்கலில் தோல்வி ஏற்பட்டுவிட்டது. அதாவது குட்டி குரைத்து நாய் தலையில் விழுந்தது போல், வெளியுறவுத் துறையில் சிலர் செய்த தவறு, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்குத் தோல்வியாக முடிந்து விட்டது. இந்த இடத்தில் கூட வெளியுறவுத் துறையில் உள்ள தவறான பேர்வழிகளால், ஈழத்தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டது பெரிதாகப்படவில்லை. இதனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட தோல்விதான் பா.ம.க.வுக்குக் கவலை அளிக்கிறது. தமிழகக் காங்கிரஸ்காரர்களால் கூட இவ்வளவு திறமையாக சோனியா - மன்மோகன் கும்பல் நடத்தும் ஈழத் தமிழர் இனப்படுகொலையை மூடிமறைக்க முடியாது; திசை திருப்ப முடியாது. பொதுக்குழு தீர்மானத்தின் அடுத்த பத்தி, ஈழத் தமிழர்களைக் காப்பாற்றாத கருணாநிதி மீது பாய்கிறது.

“மக்களின் உணர்வுக்கும், மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கிற வகையில் செயல்படும் நடைமுறைக்கு மிகவும் பொருந்தக் கூடிய வெளியுறவுக் கொள்கையை இந்திய அரசு பின்பற்ற வேண்டும். இத்தகைய கொள்கையை வகுத்து இலங்கையில் அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களைக் காக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் கடமையும், பொறுப்பும் உள்ள தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் அந்தக் கடமையை முழுமையாகவும், முறையாகவும் ஆற்றத் தவறியிருக்கிறார்கள் என்று பொதுக்குழு குற்றம் சாற்றுகிறது.” முதல் பத்தியில் நடுவண் அரசு பற்றிக் கூறும் போது “முழுத் தோல்வி என்று கருதுகிறது”, என்று மென்மையாக கூறுகிறது தீர்மானம். அடுத்த பத்தியில் தமிழக அரசையும் முதல்வரையும் பற்றிக் கூறும்போது “குற்றம் சாற்றுகிறது” என்று கடுமையாகச் சாடுகிறது. ஈழத்தமிழர் இனப்படுகொலை செய்யப்படுவதில் தமிழக அரசும் கருணாநிதியும் இந்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்த்து இனத்துரோகம் செய்கிறார்கள் என்பது த.தே.பொ.க. நிலைபாடு.

இங்கே நாம் சுட்டிக்காட்ட முனைவது பா.ம.க.வின் இரட்டை அணுகுமுறையை மட்டுமே. தமிழக அரசையும், முதல்வர் கருணாநிதியையும் ஈழச் சிக்கலில் கடுமையாகச் சாடுவதையும் குற்றம் சாட்டுவதையும் த.தே.பொ.க. வரவேற்கிறது. ஆனால், ஆய்தங்கள் தந்து ஈழத் தமிழர் இன அழிப்பில் பங்கு கொள்ளும் நடுவண் அரசைக் குறை கூறும்போது, அதன் வெளியுறவுத் துறையில் உள்ள சிலரை மட்டும் குறை சொல்லி, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி என்று கருதுவதன் சூட்சுமம் என்ன? அது பங்கு போட்டு¢க் கொண்ட அரசு; இது பங்குதராத அரசு என்பது தானா? அரசியல் சந்தர்ப்பவாதங்கள், வண்ண வண்ணமாய் வளர்ந்து கொண்டுள்ளன் வகை வகையாய்க் குட்டி போடுகின்றன. அவற்றுள் ஒருவகைதான் பா.ம.க.வின் சந்தர்ப்பவாதம். தேர்தல் கட்சிகள் எல்லாமே சந்தர்ப்பவாதக் கட்சிகள் தான் என்று அவ்வப்போது தங்களை அம்பலப்படுத்திக் கொள்கின்றன. இக்கட்சிகள் ஒருநாளும் திருந்தமாட்டா. இவற்றிற்கு அறிவுரை கூறுவதும், திருந்திக் கொள்ளுமாறு வேண்டுவதும், காளை மாட்டில் பால் கறக்கும் முயற்சி போன்றது.

சுவை கண்ட பூனைகள் ஒருபோதும் சைவமாக மாறா! பதவி, பணம், புகழ் ஆகியவற்றிற்கு ஆசைப்படாத இளைஞர்கள் உள்ளிட்ட தமிழர்கள் அனைவரும் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு வெளியே புரட்சிகரத் தமிழ்த்தேசிய அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com