Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஏப்ரல் 2009

பொருளாதார நெருக்கடி வெளிக்கொணர்ந்த மோசடிகள்
க.அருணபாரதி

முதலாளியப் பொருளாதாரத்தின் நெருக்கடியின் விளைவாக முதலாளிகள் செய்த பல்வேறு மோசடிகள் அம்பலமாகி வருகின்றன. இந்தியாவின் சத்யம் நிறுவன மோசடி அம்பலமானதும் அப்படித்தான். அந்நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ மேலும் பல மோசடிகளில் ஈடுபட்டிருப்பார் என நம்பப்படுவதால் அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப் போவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இவ்வகை முதலாளிகள் செய்து வந்த மோசடிகளுக்கு அங்கீகாரமும் சலுகைகளும் வழங்கி விட்டு பின்னர் உண்மை வெளிப்பட்டதும் தன்னை நேர்மையாளனாக காட்டிக் கொள்கிறது அரசாங்கம்.

வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி பல கோடிகளை மோசடி செய்து குவித்த அம்பானியின் ரிலையன்சு நிறுவனத்திற்கு சிறிய தொகையை அபராதமாக விதித்துவிட்டு அவர்கள் தப்பித்துக் கொள்ள வழி செய்ததும் இதே இந்திய அரசு தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மனித உழைப்பை முதலாளிகள் திருடுவதற்கான களம் அமைத்துக் கொடுத்து விட்டு பின்னர் திருட்டு அம்பலமானதும் ‘நல்லவன்’ போல் நடிக்கும் நரித்தந்திரங்களை அரசியல்வாதிகளுக்கும் அரசுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறது முதலாளியம்.

அமெரிக்கப் புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ.யின் கூடுதல் இயக்குநர் ஜான் பிஸ்டோல் என்பவர் மார்ச்சு 20, 2009 அமெரிக்க நாடாளுமன்றத்தில் பொருளாதார மோசடிகள் குறித்து தெரிவித்துள்ள விவரங்கள் எப்.பி.ஐ.யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையின் படி, பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான 43 நிறுவனங்கள் உட்பட 566 நிறுவனங்கள் நிதி மோசடி செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். (பார்க்க : எப்.பி.ஐ. இணையதளம், http://www.fbi.gov/congress/congress09/pistole032009.htm)). பொருளாதார நெருக்கடியின் விளைவாகவே இவ்வகை மோசடிகள் வெளிப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடத்தக்க மோசடி மேட்ஆப் நடத்திய மோசடி என்றும் அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக இந்தியாவில் அம்பலப்பட்ட சத்யம் நிறுவன மோசடி போல அமெரிக்காவில் அம்பலப்பட்டது தான் மேட்ஆப் என்பவர் நடத்தி வந்த ‘பெர்னாட் எல். மேட்ஆப் இன்வெஸ்ட்மென்ட் செக்யு+ரிட்டீஸ்’ நிறுவனத்தின் மோசடியாகும். மக்களைக் காக்க வந்த முதலீட்டு இரட்சகனாக இவரைப் போற்றிப் பாதுகாத்து வந்த ஊடகங்கள், இன்றோ ஒரு தனிமனிதனால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் முதலீட்டு மோசடியை செய்தவர் இவர் என இவரை அடையாளப்படுத்துகின்றது.

தற்பொழுது அமெரிக்க சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டிருக்கும் 70 வயதான மேட்ஆப் சாதாரண மனிதரல்ல. 1990களில் அமெரிக்க நாட்டின் பங்குச்சந்தைச் சூதாட்டத் தலைமை நிறுவனமான ‘நாஸ்டாக்’கின் தலைவராக அதனை வழி நடத்தியவர் ஆவார். இவர் மோசடி செய்ததாக கணிக்கப்பட்டுள்ள தொகை சுமார் 65 மில்லியன் டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல். நிதி மோசடி மட்டுமல்லாமல், மின்னணு இயந்திரங்கள் வழியாக செய்த மோசடிகள், தபால் வழியில் செய்த மோசடிகள், பணம் கடத்தியது, தவறான தகவல்கள் அளித்தது உள்ளிட்ட 11 வகை குற்றங்களைப் பதிவு செய்துள்ளது அமெரிக்க அரசு. விசாரணைகளில் இக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், 150 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 170 பில்லியன் டாலர்கள் அபராதத் தொகையும் இவருக்கு தண்டனையாக விதிக்கப்படலாம் என கணிக்கப்படுகின்றது.

உலகமயத்தின் ஊக்கத்தால் உலகம் முழுவதும் நடத்திய இவரது சூதாட்டத்தில் உலகெங்கும் பல நிறுவனங்கள் மேலும் இழப்பைச் சந்தித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் பல வங்கிகளும் முதலீட்டு நிறுவனங்களும் பல பில்லியன் யு+ரோக்களை இம்மோசடியால் இழந்துள்ளனர். 90களில் தமிழகத்தில், மக்களின் சேமிப்புகளை அபகரித்து ஏமாற்றி விட்டு ஓடிய பல “சீட்டுக் கம்பெனி” நிறுவனங்களைப் போலவே மேட் ஆப்பும் தனது 22வது வயதிலேயே முதலீட்டு நிறுவனம் நடத்த ஆரம்பித்துப் பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் கொடி கட்டிப் பறந்தார். குடும்பத்தினர், நண்பர்கள் என பலரும் தமது பணத்தைக் குட்டிப் போட்டுப் பெருக்கி விடலாம் என இவரிடம் கொடுத்தனர். முதலாளிய நெருக்கடியின் முற்றுகை நிலையால், முதலீடு செய்த பலரும் மேட்ஆப் நிறுவனத்திடம் பணத்தை திரும்பக் கேட்ட போது இவரது குட்டு வெளிப்பட்டது. இவ்வளவு நாட்கள் தாம் நடத்தியது போலி நிறுவனம் தான் என்றும் நிறுவனம் திவாலாகி பல மாதங்களாகியிருப்பதாகவும் உண்மை யைப் போட்டு உடைத்தார், மேட் ஆப். பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறிப் பலரிடமும் பணத்தை பெற்றுவிட்டு, பின்னர் கொடுப்பவர்களிடம் வாங்கிக் கொண்டும் கேட்பவர்களிடம் வாங்கியப் பணத்தைக் கொடுத்துக் கொண்டும் சூழற்சி முறையில் பணத்தை கையாண்டிருக்கிறார் இவர். திரும்பக் கொடுத்தப் பணம் பங்குச்சந்தையால் ஈட்டியது தான் என்று இவர் சொன்னதை அப்படியே நம்பி இவரிடம் மேலும் பணத்தைக் கொட்டினர் முதலீட்டளாளர்கள்.

இம்மோசடியை உலகறியாமல் நடத்தி வந்ததாகவும் முதலாளிய நெருக்கடியால் இதனைச் சமாளிக்க இயலவில்லை என்றும் கூறி குற்றத்தை வெளிப்படையாகவே அவர் ஏற்றுக் கொண்டபின் தான் அவரது மோசடி உலகறியப்;பட்டது. உற்பத்தியில் ஈடுபடாத நிதி மூலதனம் மோசடிகளால் மட்டுமே தன்னை பெருக்கிக் கொண்டு நிலைநிறுத்திக் கொள்ளும் என்பதனை மேட்ஆப்பின் மோசடி உலகறிய அறிவித்தது.

மேட் ஆப் போன்ற முதலாளிகள் லாபவெறியுடன் செய்யும் மோசடிகளால் நிலைக்குலைந்து போகும் மக்களின் பொருளாதாரத்தைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் அவரது மோசடியால் பாதிக்கப்பட்ட ஏனைய முதலாளிகளின் நிறுவனங்கள் மீதே அரசுகள் அக்கறை கொள்கின்றன. முதலாளியப் பொருளாதார நெரக்கடியால் திவாலாகிப் போன பல பெரு முதலாளிய நிறுவனங்களை மீட்டெடுப்பதற்காக மக்கள் வரிப்பணத்தை அரசுகள் பகிர்ந்தளித்தது இவ்வகை அக்கறையால் தான். தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இவ்வகை மீட்டெடுப்பு நிதிச் சலுகைகள், மோசடிகளை மேலும் ஊக்குவிக்கும் என அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் அமெரிக்க நாடாளுமன்றத்திலேயே எச்சரிக்கை செய்திருக்கிறார். (பார்க்க : ராய்டர்ஸ் இணையதளம், மார்ச் 25 - 09 )

பொருளாதார நெருக்கடியால் திவாலாகிய நிறுவனமான “அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் - (ஏ.ஐ.ஜி)” நிறுவனத்திற்கு இவ்வாறு அரசு வழங்கிய மீட்டெடுப்பு நிதி பயன்படுத்தப்பட்ட விதம் பல கண்டனங்களை எழுப்பியது. முன்னதாக, ஏ.ஐ.ஜி. நிறுவனம் திவாலானதும் துடிதுடித்துப் போன அமெரிக்க அரசு அந்நிறுவனத்தை மீட்டெடுக்க சுமார் 170 பில்லியன் டாலர்கள் வழங்கியது. பின்னர் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி அந்நிதியிலிருந்து சுமார் 165 மில்லியன் டாலர் தொகையை போனசாக அதன் தலைமை அதிகாரிகள் 71 பேருக்கும் மற்ற பிற பணியாளர்களுக்கும் வழங்கினார். இப்பணத்தைக் கொண்டு சொகுசான விருந்துகளும் கூட நடத்தப்பட்டது. இது அமெரிக்க மக்களுக்கு அதிருப்தியும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. வேலை இழந்து, வீடிழந்து நாளுக்கொருவர் அவதிக்குள்ளாகிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், மீட்டெடுப்பு என்ற பெயரில் அந்நிறுவனத்திற்கு வழங்கிய மக்களின் வரிப்பணம் இவ்வாறான ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கு செலவிடப்படுவது பல்வேறு கண்டனக் குரல்களை எழுப்பியது.

போனஸ் வழங்கப்பட்ட பல அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்கள் கூட விடப்பட்டன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டனக் குரல்கள் எழும்பின. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இதனைக் கண்டித்தார். முதலாளிகளின் பணத் தாசையால் பிறந்த இப்பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுவது முதலாளிகள் மட்டுமல்ல, ஏற்கெனவே இம்முதலாளிகளால் சுரண்டப்பட்டு வந்த உழைக்கும் மக்களும் தான். இதனை உணர்ந்தும் கூட அரசாங்கங்கள் முதலாளிகளுக்கு மட்டும் சலுகைகளையும், கடன்களையும் வாரி வழங்கி வருவதைக் காண்கிறோம்.

அரசிடம் சலுகை பெற்றுக் கொண்ட முதலாளிகள் அரசிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்ததில்லை என்றாலும் அவர்களுக்கு வரிந்து கட்டி உதவுகிறது முதலாளிய அரசு. மனித உழைப்பை புதிய பெயர்களிட்டுத் திருடும் முதலாளிகளுக்கு அங்கீகாரமும் உத்தரவாதமும் அளிக்கும் அரசுகள், மக்களின் வாழ்நிலைக்கு உத்திரவாதம் அளிக்க முன் வருவதில்லை. முன்பெல்லாம் அரசியல்வாதிகளைப் பணம் கொடுத்து வாங்கிய முதலாளிகள், இன்று அரசையே விலைபேச வரிந்து கட்டி நிற்கிறார்கள். இது தான் ‘பொருளாதார வளர்ச்சி’ என்று வெட்கமின்றிக் கூறுகிறது அரசாங்கம். முதலாளிய நெருக்கடியால், மக்கள் வாழ்வாதாரங்களை மட்டும் இழக்கவில்லை. முதலாளியப் பொருளாதாரத்தின் மீதுள்ள நம்பிக்கையையும் இழக்கிறார்கள். முதலாளிகள் வீழ்கிற போதெல்லாம் மக்களின் வரிப்பணத்தை வெட்கமின்றி முதலாளிகளுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும் முதலாளிய அரசுகளின் இந்த அவல நிலை, மாற்றுப் பொருளாதாரத்தின் தேவையை மக்களுக்கு மறைமுகமாக எடுத்துரைத்து வருகின்றது. முதலாளிகளுக்காக அரசுகள் கட்டிக் காக்கும் இப்பொருளாதாரத்தை அம்பலப்படுத்தி மக்களுக்கான மாற்றுப் பொருளாதாரமாக மார்க்சியப் பொருளாதாரத்தை முன்னிறுத்தி செயல்பட வேண்டியது மார்க்சியர்களின் கடமையாகும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com