Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஏப்ரல் 2008

தமிழர் எதிர்ப்பு: இந்திய அரசின் நிரந்தர அரசியல்

வெளிநாட்டுக்கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கையின் விரிவாக்கமே. இந்திய அரசு தமிழகத் தமிழர்கள் பால் என்ன அணுகுமுறை கொண்டிருக்கிறதோ அதே அணுகுமுறையைத்தான் ஈழத்தமிழர்கள் பாலும் கொண்டிருக்கிறது.


ஆசிரியர் குழு

ஆசிரியர்
பெ.மணியரசன்
இணை ஆசிரியர்
கி.வெங்கட்ராமன்

குழு உறுப்பினர்கள்
நெய்வேலி பாலு
கவிபாஸ்கர்
க.அருணாபாரதி

தமிழர் கண்ணோட்டம்,
2ம் தளம்,
20/7, முத்துரங்கம் சாலை,
தியாகராயர் நகர்,
சென்னை - 600 017.

தொலைப்பேசி: 044- 2433 7251

[email protected]

ஆண்டுக் கட்டணம்: ரூ.120 மூன்றாண்டுக் கட்டணம்: ரூ.300 வாழ்நாள் கட்டணம்: ரூ.1200
தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.

இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்? இந்தியாவின் கடலோரக் காவல்படை சுழன்று சுழன்று சுற்றி வந்தபோதும் தமிழக மீனவர்களைச் சிங்களர் சுட்டுக் கொல்வதும் கடத்திச் செல்வதும் தடுக்கப்படவில்லையே ஏன்? தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போய் மீன்பிடித்தால் அவர்களைத் தளைப்படுத்தலாம். அதைவிடுத்து அவர்களை சுட்டுக் கொல்வது என்ன ஞாயம்?

தமிழகத்திற்குரிய கச்சத்தீவை இந்திராகாந்தி சிங்கள அரசுக்குக் கொடுத்ததால்தானே, எல்லை தாண்டித் தமிழக மீனவர்கள் வந்துவிட்டார்கள் என்ற குற்றசாட்டே வருகிறது. சாகின்றவர்கள் தமிழர்கள்; எனவே, சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான்.

இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள்.

தமிழகத் தேர்தல் கட்சிகள் இந்திய அரசின் கங்காணிக் கட்சிகளாகவே செயல்படுகின்றன. தமிழகக் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளானாலும், இடதுசாரிக் கட்சிகளானாலும், மாநிலக் கட்சிகளானாலும் இந்திய அரசுக்குக் கங்காணிகளாகவே சேவை செய்கின்றன. இவை எதிரெச்திர்க் கூட்டணிகளில் இருப்பதும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்வதும் தேர்தல் ஆதாயங்களுக்கான போட்டி தவிர, தமிழ் இன உரிமை சார்ந்த கொள்கைச் சிக்கல் காரணமாக அல்ல. தமிழ் இனத்தைத் தில்லிக்கு, அடமானம் வைத்துப் பெறும் பணம், பதவி, ஆகியவற்றைப் பங்கிட்டுக் கொள்வதில் இக்கட்சிகளுக்கிடையே போட்டி, பொறாமை, சண்டை ஆகியவை ஏற்படுகின்றன. புரட்சிகரத் தமிழ்த் தேசியர்களுக்கு மேற்கண்ட புரிதல் அரசியல் அரிச்சுவடி போல் அத்துப்படியாக வேண்டும்.

தமிழகத்தில் உள்ள தேர்தல் கட்சிகள், தமிழர் உரிமைக்கும் நலனுக்கும், ஈழத் தமிழர் நலனுக்கும் குரல் கொடுக்கவே மாட்டா என்பதல்ல இதன் பொருள். தமிழகத் தமிழர் மற்றும் ஈழத் தமிழர் உரிமைக்காதரவாக எந்தப் போராட்டமும் நடத்த மாட்டா என்பதல்ல. அவற்றின் தமிழ் இன ஆதரவுக் குரலும் போராட்டமும் தில்லி ஏகாதிபத்தியம் அனுமதிக்கும் வரம்புக்கு உட்பட்டவைதாம். அந்த வரம்பைப் புரிந்து கொண்டு அக்கட்சிகள் சிலவற்றுடன் குறிப்பிட்ட ஒரு சிக்கலில் கூட்டுப்போராட்டம் நடத்தலாம். அதற்கு மேல் அக்கட்சிகளைத் திருத்திவிடலாம் என்று சிலர் பேசுவதும், அவற்றை நாம் ஆதரித்து ஆதரித்துத் திசைமாற்றிவிடலாம் என்று நம்புவதும் குழப்பவாதம் தவிர வேறல்ல. அதேபோல் இந்திராகாந்தி தமிழ் ஈழவிடுதலைக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று கருதுவதும் குழப்பவாதமே!

கருப்பை வெளுப்பென்று தீர்மானித்தால் எவ்வளவு பிழையோ அவ்வளவு பிழையானது இந்திரா காந்தி தனிஈழம் அமைக்க ஆதரவு தந்தார் என்று கருதுவது. கச்சத்தீவைக் கொடுத்த பின்னும், தன்னுடன் நட்பு பாராட்டாத இலங்கையைக் கீழப்படியச் செய்யவே இந்திரா ஈழவிடுதலைப் போராளிக் குழுக்களைப் பயன்படுத்தினார். அந்த உத்தியின் ஒரு பகுதியாகவே, ஈழவிடுதலைப் போராளிக்குழுக்களுக்கு இந்தியாவில் படைப்பயிற்சியும் படைக்கருவிகளும் தந்தார். அக்குழுக்களில் விடுதலைப் புலிகள் அமைப்பு, தம் கட்டுப்பாட்டில் வராது என்று தெரிந்ததும், அவ்வமைப்பை எட்டித் தள்ளி வைத்தே பார்த்தார். விடுதலைப்புலிகள் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவே இந்திரா காந்தி விரும்பினார். இவ்வரையறுப்பு ஏற்கெனவே விடுதலைப் புலிகளின் ஆவணங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழ்நாதம் இணைய தளத்தில் வந்துள்ள சபேசன் கட்டுரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியத் தமிழ் வானொலியான "தமிழ்க்குரலில்'' 17.3.2008 அன்று ஒலிபரப்பான சபேசன் உரையை அவ்விணையத் தளம் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் சிங்கள இராணுவத் தளபதி பொன்சேகாவிற்குத் தில்லியில் சிவப்புக்கம்பள வரவேற்புக் கொடுத்து அவரைப் பாராட்டிச் சிறப்பித்தது இந்திய அரசு. பாராட்டும்படி, பொன்சேகா அப்படி என்ன இந்தியாவுக்குச் சாதித்தார்? ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறார். கருங்காலிக் கருணாவின் இரண்டகக் குழுவைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தில் பெரும்பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியுள்ளார். இதற்காகவே இந்திய ஆட்சியாளர்கள் பொன்சேகாவைப் பாராட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, ஈழத் தமிழர்களைக் கொல்ல, விடுதலைப் புலிகளை வீழ்த்த, ஏராளமான ஆயுதங்களை இந்திய அரசு சிங்களப் படைக்கு வழங்கி வருகிறது. அத்துடன் சிங்களப் படையாட்களுக்குத் தமிழகத்தில் குன்னூரில் வைத்துப் போர்ப்பயிற்சி தந்தது. தமிழகத்தில் எதிர்ப்புக் கிளம்பவே, இப்பொழுது ஐதராபாத்தில் வைத்து அவர்களுக்குப் பயிற்சி தருகிறது. இவையனைத்தும் இந்திராகாந்தி காலத்திலிருந்து இந்திய அரசு கடைபிடிக்கும் ஈழத் தமிழ் இன எதிர்ப்புக் கொள்கையின் நீட்சி தவிர வேறல்ல. தில்லி வந்த பொன்சேகா இந்திய அரசிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்ததாகச் செய்தியறிந்த வட்டராங்கள் கூறுகின்றன.

1. வரும் சூன் மாத வாக்கில் விடுதலைப் புலிகள் நிர்வாகத்தில் உள்ள வன்னிப் பெருநிலத்தைக் கைப்பற்ற சிங்களப் படை போர் தொடுக்கும். அப்போரை இந்திய அரசு எதிர்க்கக் கூடாது.

2. அப்போரில் சிங்களப் படைக்கு இந்தியக் கப்பற்படை வழியாக ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை இந்தியா வழங்க வேண்டும்.

3. ஒரு வேளை ஆனைஇறவில் சிங்களப் படை தோற்று சிக்கிக் கொண்டது போல், வன்னிப் போரில் விடுதலைப் புலிகளின் முற்றுகைக்குச்ள் சிக்கிக் கொண்டால், அப்படையினர்க்கு உயிர்ச்சேதம் இல்லாமல் அவர்களை மீட்டுக் கொணரும் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இதுதான் சிங்களத் தளபதி பொன்சேகா இந்திய ஆட்சியாளர்களுடன் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு என்று சொல்லப்படுகிறது. இது உண்மையாக இருக்கும். இந்திய அரசும் சிங்கள அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு உறுதி வழங்கியிருக்கும். தமிழ்நாட்டின் ஆறரைக் கோடித் தமிழர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள் என்ற ஓர் அத்து கூட இல்லாமல் இந்திய sஅரசு அதே தமிழ் இனத்தை ஈழத்தில் அழிக்க சிங்கள அரசுக்குத் துணை புரிகிறதென்றால் அதன் பொருள் என்ன?

தமிழக மக்கள், இந்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழாமல் ஒரு கட்டுக்குள் வைக்கும் பொறுப்பை இங்குள்ள தேர்தல் கட்சிகள் கவனித்துக் கொள்ளும் என்று பொருள். தமிழர்கள் இந்தியாவில் இருந்தாலும் ஈழத்தில் இருந்தாலும் இந்திய ஆளும் வர்க்கம் அவர்களைப் பகைவர்களாகவே கருதுகிறது. விடுதலைப் புலிகள் இந்திய அரசுக்குத் திரும்பத் திரும்ப நேசக்கரம் நீட்டுகிறார்கள். இந்திய அரசு ஒரு பிராந்திய வல்லரசாகச் செயல்படத் துணைபுரிவோம், இந்திய தேசிய இறையாண்மைக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று கூட உறுதி தருகிறார்ச்கள். ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளை வீழ்த்தவே முனைகிறார்கள். இது தீராத இனப்பகையின் வெளிப்பாடு.

கடந்த மார்ச்சு 10 அன்று விடுதலைப் புலிகள் தலைமையகம் இந்திய அரசை எச்சரித்து வெளியிட்ட அறிக்கையை இந்திய ஏடுகள் பரவலாகப் பதிவு செய்தன. "இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சிங்களப் படைகள் மேற்கொள்ளப் போகும் தமிழின அழிப்பிற்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்தியா செய்வது வரலாற்றுத் தவறு'' என்றும் அவ்வறிக்கை எச்சரித்தது. இந்த எச்சரிக்கை சரியானது; தேவையானது. அதேவேளை, இந்தியா பிராந்திய வல்லரசாகச் செயல்படத் தமிழ் ஈழம் துணைநிற்கும் என்று கூறுவது சரியல்ல.

தமிழகத் தமிழ்த் தேசியர்கள், விடுதலைப் புலிகளின் இவ்வாறான நிலைபாட்டை ஏற்க வேண்டியதில்லை. தேச விடுதலைப் போரின் நெருக்கடியில் அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள் என்று நாம் கருதலாம். நம்மைப் பொறுத்தவரை உலக வல்லரசையும் ஏற்க முடியாது; பிராந்திய வல்லரசுக் கொள்கையையும் ஏற்க முடியாது. இந்திய அரசு ஈழத் தமிழினத்தை அழிக்க சிங்களப் படைக்கு எல்லா உதவியும் செய்வதைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் தமிழகத் தமிழர்களின் எழுச்சியில்தான் அடங்கியிருக்கிறது. தமிழ்த் தேசியத்தின் உள்நாட்டுக் கொள்கை அதன் வெளிநாட்டுக் கொள்கைக்கு வலுச் சேர்க்கும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com