Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஏப்ரல் 2008

தாய்மொழிக் கல்வி: தீர்ப்புகளும் தீர்வுகளும்
நெய்வேலி பாலு

தமிழக அரசின் “தமிழ் கற்பித்தல் சட்டம் 2006”ஐ எதிர்த்தும், அச்சட்டம் செல்லும் என்று அறிவித்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்தும் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இச்சட்டம் எந்தவகையிலும் மொழிச் சிறுபான்மையினரின் அடையாளங்களைப் பறித்ததாகவோ, ஊறு செய்வதாகவோ ஆகாது என்று கூறிய உச்சநீதிமன்றம் மாநிலத்தின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாதென்றும், ஏற்கெனவே கர்நாடகம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பத்தாம் வகுப்புவரை முறையே கன்னடம் மற்றும் மராட்டிய மொழி கற்றல் கட்டாயம் என்று அரசு ஆணைகள் நடைமுறையிலிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள தமிழக அரசின் ஆணை செல்லும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட மலையாளிகள் சமாஜம் சார்பில் மதுரையிலுள்ள சென்னை உயர்நீதி மன்றப் பிரிவில் 2006 செப்டம்பரில் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து இவ்வழக்கு தொடரப்பட்டது. 23.08.2007 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் திரு.ஏ.பி.ஷா மற்றும் ஜெ.டி.முருகேசன் அடங்கிய ஆயம் வழங்கிய தீர்ப்பு முதல் வகுப்பு முதல் தமிழ் கட்டாயம் கற்கச் செய்யும் இச்சட்டம் அரசியல் சட்டப் பிரிவு 29 மற்றும் 30ன் வழியிலான அடிப்படை உரிமைகளை தடுக்கவில்லை என்று உறுதியாகக் கூறியது.

இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டில்தான் உச்சநீதிமன்றம் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. வழிகாட்டும் முன்மாதிரிகள் இரு ஆண்டுகளுக்கு முன் மராட்டியத்தில் இதேபோன்ற ஒரு வழக்கில் தீர்ப்புரைத்த நீதிபதிகள் மாநிலத்தின் தாய்மொழியைக் கற்க வேண்டும் என்ற ஒரு அரசின் கொள்கை முடிவைப் பின்பற்றி அம்மாநிலத்தில் பிழைக்க வந்துள்ள பிறமொழியின மக்களும் படிப்பது தான் நியாயமென்றும் அதை விரும்பாவிடில் அத்தகையோர் அம் மாநிலத்திலிருந்து வெளியேறுவது தான் வழி என்றும் கூறியுள்ளதை நினைவுகூரலாம்.

அதுபோன்றே 1982-83களில் கர்நாடகத்தில் மொழிப் போராட்டத்தில் கர்நாடக அரசு கன்னடத் தையே பயிற்று மொழியாகவும் நிர்வாக மொழியாகவும் அறிவிக்க வேண்டுமெனக் கூறியதை கர்நாடக அரசு ஏற்றுச் செயல்படுத்தியுள்ளது. 1994 கர்நாடக அரசின் மொழிக் கொள்கையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இக்கொள்கை பற்றி சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும் தாய்மொழிக் கல்விக்கான ஆதரவாளருமான திரு.யூ.ஆர். ஆனந்தமூர்த்தி கூறுகையில் கன்னடமே 10ஆம் வகுப்பு வரை பயிற்று மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலத்தை தேர்வுக்குள் வராத மொழிப்பாடமாக வேண்டுமானால் படிக்கட்டும் என்று கூறியுள்ளார். மார்ச் 2008இல் கன்னடத்தை மொழிப்பாடமாக கொண்டிராத கன்னடத்திற்குப் பதில் ஆங்கிலத்தை கொண்டுள்ள 2000க்கும் மேற்பட்ட பள்ளிகளின் ஏற்பிசைவை ரத்து செய்யுமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டது.

நெருக்கடியில் கல்வித்துறை

நெருக்கடி நிலைக் காலத்தில் மாநிலங்களின் பொறுப்பிலிருந்து கல்வித்துறையை அரசியல் சட்டத்தின் பொதுப் பட்டியலுக்கு மாற்றிவிட்டது தில்லி அரசு. அதன் விளைவாக கல்வித்துறைச் சீர்திருத்தங்கள் குறிப்பாக தாய்மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்த இயலாத "இரட்டை நிலை” உருவாகியுள்ளது. அதை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மீட்பதுதான் முதற் பணியாக இருக்க வேண்டும். அது இல்லாதவரை எத்தனை கல்விக் குழுக்கள் முடிவுகள் இருப்பினும் உண்மையான தாய்மொழிக் கல்வி வர வாய்ப்பில்லை.

இராசாசி தந்த ஆங்கில மோகம்

மேலும் இரõசாசி முன்மொழிந்த “என்றென்றும் ஆங்கிலம் இந்தி ஒரு போதுமில்லை'' என்ற ஆங்கில மோகக் கோட்பாடு தொடர்ந்து வரும் திராவிடக் கட்சி ஆட்சிகளின் உளவியல் கட்டமைப்பாய் மாறி விட்டது. எனவேதான் தெளிவான முடிவெடுக்க இயலாமல் தமிழ், ஆங்கிலம் என்ற இரட்டைக் குதிரைச் சவாரியில் தமிழக மாணவர்களின் தாய் மொழிக் கல்வி தடுமாடுகிறது. அதன் விளைவே பயிற்றுமொழி தமிழ் என்பது கட்டாயம் என்று அறிவிக்க இயலாமல் தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006 கொண்டு வரப்பட்டுள்ளது.

பயிற்று மொழியாக தாய் மொழியான தமிழ் இல்லாமல் ஆங்கிலத்தையோ, அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களையோ படிப்பது இயலாது. மாணவர்களின் கற்கும் திறனும் அறிவுத் திறனும் வலுப்பெற முடியாத அவலம் தொடரும். இருமொழிக் கொள்கையும் மும்மொழிக் கொள்கையும் தமிழகத்தின் கல்வி மேம்பாட்டை உருவாக்காது.

எடுத்துக்காட்டாக 1960க்கு முன் தமிழ் வழியில் பயின்று ஆங்கிலத்தை முதன் முதல் ஆறாம் வகுப்பிலிருந்து ஒரு மொழிப்பாடமாக கற்ற தலை முறையினர் இன்று சமூகத்தின் பல பகுதிகளிலும் துறைகளிலும் தாய்மொழி ஊற்றமும் ஆங்கிலமொழி ஆற்றலும் பெற்று சிறந்து விளங்குகின்றனர். அப்போது புற்றீசல் போன்று ஆங்கில மழலையர் பள்ளி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆதிக்கம் தொடங்கவில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலிருந்து ஆங்கில வழிப் பள்ளிகள் பெருகி கல்வித் துறையில் ஆங்கில ஆதிக்கம் நிலைபெற்றது. இதைப் பயன்படுத்தி சமூகத்தின் ஆதிக்க சாதிகளும், அதிகார வர்க்கமும் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வி தந்து சமூகத்தின் வளமை மிக்க பகுதிகளில் பணியமர்த்திவிட்டனர். மாறாக, அத்தகைய சூழல் அற்ற கிரõமப்புற ஏழை, மற்றும் பின்தங்கிய, சமூக நீதி மறுக்கப்பட்ட, ஆனால் உயர் மதிப்பெண் பெற்ற ஆங்கிலப் புலமை குறைந்த மாணவர்கள் இப்போட்டியில் தோற்று தற்கொலை முடிவுக்கும் தள்ளப்பட்டனர்.

சிக்கல்தீர ஒரே வழி

தமிழக அரசு கொண்டுவந்த அரைவேக்காட்டுச் சட்டத்தின்படி ஆண்டுக்கொரு வகுப்பில் தமிழ் மொழிப்பாடம் அறிமுகம் எனத்தொடங்கி 10ஆம் வகுப்பிற்குப் பத்தாண்டுகள் என்ற நிலையில் 2017இல் தான் உயர் நிலைப் பள்ளியில் தமிழ் கற்றல் நிறைவுறும். எனவே சமூக நீதி நிலைத்திட அனைவருக்கும் ஒ÷ர கல்வி என்ற முறையில் சமச்சீர்கல்வி முறை செயலுக்கு வரவேண்டும். தமிழே பயிற்று மொழியாகவும் பயில் மொழியாகவும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இல்லையெனில் உலகமயத்தால் கட்டமைக்கப்பட்ட உலக வர்த்தக நிறுவனத் (WTO) தளைகளில் இந்திய அரசு தன்னைப் பிணைத்துக் கொண்டுள்ளதால் கல்வியிலும் அமெரிக்கக்கல்வி வணிகர்கள் படையெடுக்கவும் தாய்மொழிக் கல்வி சீரழிவதும் தடுக்க இயலாததாகி விடும்.

அறிவு சான்ற மாணவர்கள் முற்றாதிக்க அமெரிக்காவுக்கு செல்வது மாறி அக்கல்வி நிறுவனங்கள் இங்கு புகுந்து கல்வியை வணிகமாக்கும் நாள் தொலைவில் இல்லை. அமெரிக்காவிற்கு ஆண்டுதோறும் செல்லும் லட்சத்திற்கும் மேற்பட்ட நமது மாணவர்கள் மொத்தம் ரூ.50,000 கோடியை உயர் கல்விக்காக செலவிடுகின்றனர். அமெரிக்காவின் பண்ட வணிகத்தை விட கல்வி வணிகம் ஒரு கொள்ளை இலாபம் தரும் தொழிலாக உள்ளது. அண்மையில் இந்தியாவுக்குள் அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் நுழைந்து பட்டங்களை வழங்கிட தில்லி அரசு அழைக்கிறது. இதன் வழி கல்வியிலும் இந்தியத் துணைக் கண்டத்தின் தற்சார்புநிலையை இழக்கவுள்ளோம். தொழில் மூலதனம் மட்டுமின்றி கல்வி, பண்பாட்டுமூலதனமும் நம் மண்ணில் காலூன்ற விடாது தடுக்க கடுமையான முயற்சிகளும் ஒருங்கிணைந்த இயக்கங்களை கட்ட வேண்டுவதும் வரலாற்றுக் கடமை.

முன்னுரிமை எதற்கு?

ஐ.நா.பேரவை அமைப்புகளே பாரட்டிச் சான்றுரைக்கும் மாற்றுக் கல்வி முறை உள்ளது. பேராதிக்க அமெரிக்காவில் கூட இல்லாத வகையில் மழலைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைத்துக் கல்வியும் தாய் மொழியாகிய ஸ்பானிய மொழியில் இலவசமாய்த் தரும் கியூபக் குடியரசை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும். இராணுவச் செலவினங்களுக்காக இந்திய அரசு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால் கல்வித் துறைக்கு 34,650 கோடி ரூபாய்களே ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையும் பெரும்பாலும் உயர் மட்டக் கல்வி நிறுவனங்களுக்குச் செலவிடப்படும்.

தொடக்கக் கல்விக்கு மிஞ்சும் தொகை சிறிதளவே இருக்கும். நாட்டின் மொத்த உற்பத்தியில் (GDP) 0.6% மட்டுமே கல்விக்காக தற்போது செலவிடப்படுகிறது. இதை 0.76%உயர்த்தினாலே தொடக்க நிலைக் கல்வி அதாவது 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவசக் கல்வியைத் தரமுடியும் என அரசே நியமித்த தபஸ்ஜும்தார் குழு மற்றும் நோபல் அறிஞர் அமர்த்யா சென் போன்ற அறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர்.

தொடக்க நிலைக் கல்வி முதல் உயர் கல்விவரை இலவசமாக அளிக்க வேண்டியது அரசின் கடமை என்பது 1992, 1997ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் 93ஆவது பிரிவு 6 வயது முதல் 14 வயது வரை இலவசக் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. இதில் தனியார் பள்ளிகளுக்கும் விலக்கு கிடையாது. ஆனால் இந்த உரிமை "வழிகாட்டு நெறிகள்” பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளதால் அரசு இலவசக் கல்வியளிப்பது ஒரு கோட்பாடேயன்றி கட்டாயமில்லை என்று ஆகிவிட்டது. எனவே அதைப் பெறத் தேவையான அரசியல் திட்பமும் உறுதிமிக்க செயல்பாடுகளும் அரசுகள் பெற கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூக அறிவியலாளர்கள், சமூக நீதிப் போராளிகள், அரசியல் கட்சிகள் நெருக்குதலை உருவாக்க வேண்டும். அதற்கிசைய இந்த நீதிமன்ற தீர்ப்புகளை பாலமாக்கி பயணத்தை விரைவுபடுத்த வேண்டும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com