Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஏப்ரல் 2008

தண்டோரா அறிவிப்புக்கு தடை - த.தே.பொ.க. கோரிக்கை வெற்றி

அரசுத் துறைகள், உள்ளாட்சி மன்றங்கள் நீதிமன்றங்கள் வழிபாட்டு நிறுவனங்கள் போன்றவை தமது அறிவிப்புகளை தண்டோரா போட்டு (பறையடித்து) தெரிவிக்கும் முறையைக் கைவிடுவது என தமிழக அரசு முடிவு செய்ய உள்ளது. இவ்வாறு பறையடித்து அறிவிக்கும் முறை தீண்டாமைக்கு உள்ளாகும் குறிப்பிட்ட சாதியினர் செய்யும் பணியாக காலங்காலமாகத் தொடர்கிறது. பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும் அரசே இத்தீண்டாமைப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது கொடுமையானது என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சுட்டிக்காட்டியது. இப்பழக்கத்தைக் கைவிடவேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

த.தே.பொ.க. 1997 பிப்.22 அன்று திருத்துறைப் பூண்டியில் நடத்திய தீண்டாமை ஒழிப்பு தமிழர் ஒற்றுமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கத் தீர்மானங்களில் இக்கோரிக்கையும் முக்கியமானது. இதற்கு முன்னர் த.தே.பொ.க. இரண்டாவது சிறப்பு பொதுக்குழு (பேராளர் மாநாடு) 1995ஆம் ஆகஸ்ட் 11, 12, 13 ஆகிய நாட்களில் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் நடந்தது. அதில் தீண்டாமைக்கு எதிரான தொடர் இயக்கங்கள் நடத்துவதற்கு சில அடிப்படை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கிணங்கவே திருத்துறைப்பூண்டி மாநாடு நடத்தப்பட்டது.

திருத்துறைப் பூண்டி தீர்மானம் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கும் தீண்டாமை ஒழிப்பிற்குமுள்ள இன்றியமையா உறவுகளைக் கோட்பாட்டு வகையில் நிறுவியதோடு, தமிழகத்தில் தீண்டாமை நிலவும் பல்வேறு வடிவங்களை ஆய்வு செய்து அவற்றைத் தீர்ப்பதற்கான நுணுக்கமான கோரிக்கைகளை வரையறுத்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசாங்கம் தனிக் குடியிருப்புகள் கட்டுவதைவிட அனைத்துச் சாதியினரும் கலந்து வாழும் கலப்புக் குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். "பெரியார் நினைவு சமத்துவபுரம்” என்ற பெயரில் அது அரசாங்கத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டது. அதேபோல் தலைவர்கள், அறிஞர்கள் பெயரை மாவட்டங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சூட்டக் கூடாது என்று வலியுறுத்தினோம்.

சாதி மோதல்களை உருவாக்கிய இந்தத் தவறான நடைமுறையைப் பின்னால் தமிழக அரசும் கைவிட்டது. பறையடித்து அறிவிக்கும் பழக்கத்தை அரசு கைவிட்டு துண்டறிக்கைகள், ஒலிபெருக்கிகள் வாயிலாக அறிவிக்கைகள் செய்ய வேண்டும் என்று திருத்துறைப்பூண்டி தீர்மானம் வலியுறுத்தியது. (தீர்மானம் எண்.11) தீண்டாமைக்கெதிரான திருத்துறைப்பூண்டித் தீர்மானத்தை வலியுறுத்தி த.தே.பொ.க.வும் தமிழக இளைஞர் முன்னணியும் தெருமுனைக் கூட்டங்கள், பரப்புரைப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் எனக் கடந்த பத்தாண்டுகளாகத் தொடர் இயக்கங்களை நடத்தி வருகின்றன.

தமிழக அரசு நியமித்த பேராசிரியர் நன்னன் குழு இப்போது தீண்டாமைக்கெதிராக அரசு செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இரட்டைக்குவளை ஒழிப்பு, தண்டோரா அறிவிப்புக்குத் தடை போன்றவை இப்பரிந்துரைகளில் அடங்கும். இவற்றை ஏற்று தமிழக அரசு செயல்படுத்தும் என செய்திகள் கூறுகின்றன.

திருத்துறைப்பூண்டி தீர்மானம் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோருக்கு இடஒதுக்கீடு, கிராமப் பொது சொத்துகளில் தாழ்த்தப்பட்டோருக்கு பங்கு, கல்லூரி பள்ளி நலத்துறை விடுதிகள் அனைத்திலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அனைத்து சாதியினரும் கலந்துறைதல் என்பன உள்ளிட்ட பலகோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இவைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்குத் தொடர்ந்து போராடுவோம்.

இந்திய அரசின் சூழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது நாகா விடுதலை இயக்கம்

இந்தியத் தலைமைத் தளபதி தீபக் கபூர் தங்களுடைய கையாள் அமைப்பான கப்ளாங் அமைப்பைக் கொண்டு நாகா விடுதலை இயக்கத் தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து நயவஞ்சகமாகக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என நாகா தேசிய சோசச்லிஸ்ட் கவுன்சில் தலைவர்கள் ஐசக், முய்வா ஆகியோர் குற்றம் சாட்டுகின்றனர்.

கபூரோடு இந்த சதித் திட்டத்தில் பங்கு பெற அழைக்கப்பட்டிருந்த விக்கி என்பவரை கடந்த மார்ச் 18-ஆம் நாள் திம்மப்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் நாகா இயக்கம் நிறுத்தியது. அப்போது இந்த உண்மையை அவர் போட்டு உடைத்தார். தலைக்கு ரூ.10 இலட்சம் வழங்குவதாக கடந்த 2005 நவம்பர் 21 ஆம் நாள் நடந்த இரகசிய சந்திப்பில் தீபக் கபூர் கூறினாராம். இந்திய அரசு நாகா மக்களின் பொறுமையைத் தவறாகப் பயன்படுத்தி நிலைமையைக் குழப்பப் பார்க்கிறது என நாகா தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இந்திய அரசமைப்புக்குள் நாகா சிக்கலைத் தீர்ப்பதற்கு ஏராளமான வாய்ப்பு உள்ளதாக கூறுவதும், இந்திய அரசமைப்புக்குள் கூடுதல் தொலைவு சென்று இச்சிக்கலைத் தீர்க்க தான் தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதும் அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அக்கறை கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் தான் நாகா சிக்கலுக்கே அடிப்படையாகும். இச்சட்டம் தீர்வுக்கு ஒருபோதும் வழி ஏற்படுத்தாது. இதனை பலமுறை இந்திய அரசுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இந்திய - நாகா பேச்சு வார்த்தைகள் அறுபது சுற்று நடந்து முடிந்ததற்குப் பிறகும் இந்திய அரசு இவ்வாறு பேசுவது ஐயத்தை ஏற்படுத்துகிறது. நாகர்களின் பொறுமையை இந்திய அரசு மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது என அவ்வறிக்கை கூறுகிறது.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com