Keetru Kanavu
Kanavu
மே 2009
யதார்த்தத்தின் தீவிரம்
சுப்ரபாரதிமணியன்

உச்சகட்ட வன்முறை அதிகபட்ச வெற்றி வாய்ப்பிற்கானது. அதிக வசூலைத் தரக்கூடியது. தமிழ்ச் சூழலில் வெற்றி பெறும் படங்களின் அடிப்படையாய் வன்முறை ஆழமாகக் காட்டப்படுவது அவை தீவிரமான சூழலை சரியாக வெளிக்காட்டினாலும் வன்முறையன்றி வாழ்க்கைப் பார்வையில்லை என்பது போலவும், திரையரங்கைவிட்டு வெளியே வரும்போது வன்முறையை நியாயப்படுத்துவதாகவும் அமைந்து விடுகின்றன. பருத்தி வீரனோ, சுப்பிரமணிபுரமோ, வெயிலோ தரும் வெற்றி இவ்வகைக் கேள்விகளை முன் வைக்கிறது. பூ, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு ஆகிறவை ஆறுதல் தருகின்றன.

கேரள திரைப்பட விழாவில் இவ்வாண்டின் சிறந்த படத்திற்கான 2008ன் பரிசைப் பெற்றிருக்கிற மெக்சிகோ நாட்டுப் படமான ரிவைரோவின் இயக்கத்திலான பார்க்கியூவியே படத்தின் வன்முறை சார்ந்த வெளிப்பாடும் இவ்வகைக் கேள்வியை முன்வைக்கிறது. பேட்டோ என்ற முதியவர் மெக்சிகன் நகரத்தில் ஒரு நவீன வீட்டைப் பராமரித்துவருகிறார். அவரின் தினசரி நடவடிக்கைகள் அனைத்தும் அந்த வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பவை. குளிப்பது, சாப்பிடுவது, அறைகளைச் சுத்தம் செய்வது, பொருட்களை சுத்தமாக வைத்திருப்பது, தேவை என்று உணரும்போது விலைமாது பெண்ணொருத்தியை வீட்டிற்கு அழைத்துக் கொள்வது என்று கழிகிறது அவனுக்கு. வெகு பாதுகாப்பாக உணர்கிறார். விற்கும் நிலையிலான அவ்வீட்டை பலரும் வந்து பார்த்துப் போகிறார்கள். அது விற்கப்படும் என்ற நிலையில் அவன் சற்றே சோர்வாகிறான்.

அவ்வீட்டின் சகல வசதிகளையும் அனுபவிக்க ஆசைப்படுகிறவனாக இருக்கிறான். வீடு விற்கப்படுகிறபோது அந்த வீட்டின் சொந்தக்காரப் பெண்மணி அவனுக்கு வேறு வேலைக்கு ஏற்பாடு செய்கிறாள். கணிசமான பணத்தையும் தருகிறாள். சற்றே மயக்கமடைந்து விழும் அவள்மீது அவனின் புதிதாக உருவாகும் சௌகரியமற்றச் சூழல் கோபமாய் வடிவெடுக்கிறது. அவளை அடித்துச் சாகடிக்கிறான். பெண்மணி கொடுத்த பணத்தையும், அவன் சேர்த்து வைத்த பணத்தையும் விலைமாது பெண்ணிடம் தந்து கொண்டுபோகச் சொல்கிறான். (விலைமாது பெண் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சூழலில் பணம் தந்து மீட்கவும் செய்கிறான்.) சிறையில் சகல வசதிகளுடன் இருக்கிறான். வழக்கமாய் புத்துணர்ச்சியாக்கிக்கொண்டு சிறை அறைக்கு விலை மாதுவை வரவழைக்கிறான்.

கிழவனின் கோபம் மயங்கிக் கிடக்கும் வீட்டுக்கார முதிய பெண்ணை அடித்துக் கொல்வதில் வெகு குரூரமாக வடிவமெடுக்கிறது. இந்தக் கோபத்தை அவன் வேறு வகையில் காட்டுவதாய் இயக்குனர் காட்டியிருக்கலாம். குரூரமான கொலை வன்முறையையும் கோபத்தையும் நியாயப்படுத்துகிறது. கேரள திரைப்பட விழா நடுவர் குழுவினர் மீது அதிருப்தியைத் தருகிறது. நடுவர் குழுவில் பாதிப்பேர் பெண்கள். அவர்கள் முதிய பெண்ணொருத்தியின் மீது திணிக்கப்படும் வன்முறையை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்பது விசனமளிக்கிறது. கிழவனின் தனிமை அவனுக்கு சௌகரியமானதாய் இருக்கிறது. பரபரபப்பான வெளிச்சூழலில் பெரும் ஆறுதல்தான். சமூகத்திற்குள் இயைந்து இயங்குவதுகூட அவனுக்குச் சற்றே சிரமம் தருகிறதுதான். (முதியவளோடு கடைவீதியில் அலைகிறவன் வயதின் மூப்பு காரணமாக மயங்கி விழவும் செய்கிறான்.) அவனின் தனிமை அவன் மீது திணிக்கப்பட்டதல்ல அவன் ஆறுதலாய் ஏற்றுக் கொண்டதுதான். தீவிரமான உள்ளடக்கம் என்பதை மீறி வித்யாசமாய் சொல்லப்படுவது என்ற காரணத்திற்காகவே கேரளத் திரைப்பட விருதுகள் அமைந்துவிடுவது தற்செயலானதா என்று தெரியவில்லை. போட்டிப் பிரிவின் பட்டியலில் இருந்தாலும் அங்கீகரிக்கப்படாத சில படங்களின் உயர்ந்த தரம் உறுத்தவே செய்கிறது. அவற்றில் சில :

1. போட்டோகிராப்

2. ட்ரீம்ஸ் ஆப் டஸ்ட்

3. ஹெப்பீஜ்

4. பேர்வெல் குலுஸாரி

வித்யாசம் என்ற காரணத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரு படங்க¬ள் போஸ்ட்கார்டுகள் லெனின் கிரேடிலிருந்து மற்று:ம் யெல்லோ ஹவுஸ். மஞ்சள் வீடு அல்ஜீரிய நாட்டுப் படமாகும். எளிமையான கிராமப்புறம் சார்ந்த ஒரு குடும்பத்தினர் பற்றிய கதை மஞ்சள் வீடு. அல்ஜீரியாவின் மலைப்பகுதியன்றில் வாழும் குடும்பத்தில் மூன்று பெண் குழந்தைகளும் பெற்றோர்களும் உள்ளனர். டிராக்டரினை வைத்துக் கொண்டு காய்கறி விற்பது வேலை. அவர்களின் ஒரே மகன் இறந்து போகிற செய்தி கிடைக்கிறது. மகனின் பிணத்தை வாங்க நகரத்திற்கு டிராக்டரில் போகிறார். பிணத்தைப் பெற்று வருகிறார். மகன் பேசிய வீடியே பிரதி ஒன்று கிடைக்கிறது. விரைவில் வீட்டிற்கு வருவதாக அதில் செய்தி இருக்கிறது. அதைப் போட்டுப் பார்க்க தொலைக்காட்சி இல்லை. எப்படியோ வாங்குகிறார். வீட்டில் மின்சாரம் இல்லை. மின்சாரம் பெற பயணங்கள் தொடர்கின்றன. கடைசியில் மின்சாரம் பெற்று மகனின் வீடியோ பிரதியில் அவனின் முகத்தைப் பார்க்கின்றனர்.

டரீம்ஸ் ஆப் த டஸ்ட் : அவன் நைஜீரியாவை விட்டு பாலைவனப் பகுதியன்றில் தங்கம் தோண்டும் பகுதி ஒன்றிற்கு பிழைப்பு தேடிச் செல்கிறான். வறுமையும், அவனின் இளைய மகளின் சாவும் அவனை அங்கு துரத்தி விட்டது. புழுதி படர்ந்த பாலைவனத்தைப் பார்க்கிறான். மக்கள் கூட்டம் கூட்டமாய் மண்ணை சலித்துக்கொண்டிருக்கிறார்கள். இருநூறு அடி குழிகளை வெட்டி உள்ளே போய் மண்ணை தோண்டி எடுத்துவந்து சலித்து தங்கத்தைத் தேடுகிறார்கள். மூச்சுத் திணறலில் இறந்து போகிறார்கள். அபூர்வமாய் தங்கத் துகளை கண்டு கொள்கிறார்கள். அது இருபது ஆண்டுகளுக்கு முன்பே தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்ட இடத்தில் சாதாரண மக்கள் தங்கம் பற்றியக் கனவுகளுடன் தோண்டிக் கொண்டேயிருக்கிறார்கள்.

பெரும்பாலும் பழக்க ரீதியான காரியமாகவே அது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அபூர்வமாய் கிடைக்கும் தங்கத்தில் மூன்றில் ஒரு பகுதி தோண்டுபவனுக்குக் கிடைக்கிறது. அவ்விடத்தை ஆக்கிரமித்திருப்பவனுக்கு மீதி போய் விடுகிறது. கைவிடப்பட்ட பெண்கள் மண்ணை சலித்து தங்கம் தேடுகிறார்கள். குழிகளில் கணவனை இழந்த பெண்களுக்கும் தங்கள் குழந்தைகளை வளர்க்க தங்க கனவுகளுக்குள் வாழ்கிறார்கள். தனிமையான வாழ்வில் பெண்களின் தொடர்பும், கேளிக்கைகளு:ம ஆசுவாசமாக ஆறுதல் தருகின்றன. ஆனால் எல்லோரும் கனவுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதை அறியாமல் தொடர்ந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பொய்மை அவனை திரும்பவும் நைஜீரியாவிற்கே திரும்பச் செய்கிறது.

ஜலிலியின் இயக்கத்திலான ஹெப்பீஜ் முஸ்லீம் மத சம்பிரதாயச் சூழலுக்குள் அலைக்கழியும் ஒரு இளைஞனைப் பற்றியதாக இருக்கிறது. ஷாம்ஸ் அல் தின் குரானை நன்கு கற்றுத் தேர்கிறான். அதன் மறு வாசிப்புகளுக்குள் அவனுள் எழும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறான். அது சம்பந்தமான மதத் தேர்வுகளிலும் வெற்றி பெறுகிறான். அவனின் பாண்டித்தியம் மத குருமார்களிடம் நம்பிக்கையையும், பொறாமையையும் ஒருசேர வளர்க்கிறது. 700 ஆண்டுகால பெர்ஷிய கவிஞன் ஒருவனின் பெயரால் ஹெப்பீஜ் என்று அழைக்கப்படுகிறான். ஊரின் மிக முக்யமான புள்ளியான முப்தியின் மகளுக்கு அவனின் அறிவை பகிர்ந்து கொள்ளவும், பாடம் சொல்லித்தரவும் ஆணையிடப்படுகிறான். தனியறைகளில் பெண்ணும் அவனும் பார்க்கக்கூடாதென்ற கட்டளைகள். கட்டளை மீறப்பட்டு பார்வை பரிமாற்றம் காதலாவதால் அவன் தண்டிக்கப்பட்டு துரத்தப்படுகிறான்.

அப்பெண்ணுக்கு வேறொரு திருமணமும் நடக்கிறது. அவனுக்கு வந்து சேரும் முகம் பார்க்கும் கண்ணாடி அவனை அழைக்கழிக்கிறது. அதை கன்னிப் பெண்ணாலேயே சுத்தம் செய்யப்படவேண்டும். கன்னியாக இருக்கும் கன்னியாக இருக்கும் கிழவியைக்கூட திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறான். தேல்வியில் முடிவடைகிறது. பெண்ணின் உடல் நிலைக் கோளாறு பல வைத்தியங்களுக்கு இட்டுச் செல்கிறது. அவன் பல்வேறு வேலைகளைச் செய்து பிழைக்கிறான். பார்வைக் குறைபாடு உடைய குழந்தைகளையும், பெண்களையும் நகரத்திற்கு அழைத்துப் போய் கண்ணாடி போட்ட காரணங்களுக்காக தண்டிக்கப்படுகிறான். அலைக்கழிகிறான். காதலி இன்னும் கன்னி கழியாதவளாகவே இருப்பதாகக் கூறி அவன் கணவன் அவளை ஒப்படைக்கிறான். மரபு ரீதியான மத நம்பிக்கையும், தற்போதைய வாழ்க்கையின் சிக்கல்களும் கற்றுத் தேர்ந்த இளைஞனை அலைக்கழிக்க வைக்கிறது. அந்த அலைக்கழிப்பு மத விஷயங்களை கேள்விக்குள்ளாக்கும் இளைஞனை துரத்திக் கொண்டேயிருக்கிறது.

ஒரு ஆண்டில் சுமார் பத்து படங்கள் மலையாளத்தில் குறிப்பிடும் வகையில் (பெரும் வெற்றிப் படங்களைத் தவிர்த்து) வெளிவருவது சாதனைதான். அவற்றில் ஆகாச கோபுரம், அடையாளங்கள் ஆகியவை போட்டிப் பிரிவில் இடம் பெற்றன. பிரிதிவ்ராஜ் நடித்த இரு படங்கள் திரக்கத, தலைப்பாவு, தலப்பாவின் மூலமான புத்தகம் மலையாளத்திலும் தமிழிலும் வெளி வந்துள்ளன. எழுபதுகளில் என்கௌன்டர் ஒன்றில் வர்க்கீஸ் என்ற புரட்சித் தலைவன் சுட்டுக் கொல்லப்படுகிறான். வர்க்கீஸை கொல்ல ராமச்சந்திரன் பிள்ளை என்ற போலீஸ்காரனுக்கு வேலை தரப்படுகிறது. ராமச்சந்திர பிள்ளையின் வாக்கு முலமாகவும் மனசாட்சியின் குரலாகவும் இப்படம் வெளிப்பட்டிருக்கிறது.

1926 79ல் வாழ்ந்த நந்தனார் என்ற மலையாள எழுத்தாளரின் இளமை கால வாழ்க்கையை மையமாகக் கொண்டிருக்கிறது அடையாளங்கள் என்ற எம்.ஜி.சசி இயக்கியிருக்கும் படம். கேரளாவின் வள்ளுவநாடன் கிராமத்தில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் வறுமையில் வாடிய இளைஞன் ஒருவன் ராணுவத்தில் சேர வேண்டியிருக்கிறது. அவனின் வறுமை வாழ்க்கை, உறவினர்களால் அவமானம், புராதன பாம்பு நடன பெண்ணின் காதல், இளைஞனை வழி காட்டும் பெரியவர்கள் என்று அவன் உலகம் படத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இளமையில் வறுமை, கதகளி நடனக் கலைஞனான தந்தை மறைவும் குடும்ப வறுமையும் 19 வயது இளைஞனை ராணுவத்திற்குத் துரத்தும் வரையிலான வாழ்க்கை இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. மலையாள கலாச்சாரம் சார்ந்த நாட்டுப்புறக் கலைகளின் ஒருங்கிணைப்பும், சூழலும் சாதாரண கதை அம்சம் கொண்ட இக்கதையை வேறு தளத்திற்கு இட்டுச் செல்வது இதைக் குறிப்பிடத்தக்க மலையாளத் திரைப்படமாக்கியிருக்கிறது.

ஆண்டுதோறும் அதிகரித்துவரும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை, அதிகபட்ச எண்ணிக்கையிலான திரையிடப்படும் படங்கள். படங்களின் தேர்வில் அக்கறை, ஆர்வத்துடன் இதை திருவிழாவாக்கும் கேரள ரசிகர்கள். ஆண்டுதோறும் கணிசமான எண்ணிக்கையில் போட்டி பிரிவிலும், மலையாளப் பிரிவிலும் இடம்பெறும் மலையாளப் படங்கள் இவையெல்லாம் ஆரோக்கியமான விஷயங்கள். இவ்வாண்டின் தலைப்பாவு போன்ற படங்கள் தமிழில் வர இப்போது முயற்சித்தாலே தமிழில் இன்னும் பத்தாண்டுகளாவது ஆகும் என்கிறார் விசுவாமித்திரன். இவ்வளவு அக்கறையோடு செயல்படும் மலையாள இயக்குனர்கள் ஏன் சோதனை முயற்சியில் படங்களும், வித்யாசமான படங்களை எடுக்காமல் ஒரே வடிவத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். வெகுஜன சூழலை தவிர்த்துவிட்டு கலை அம்சப் படங்கள் என்றாகிவிட்ட பின்பு ஏன் இந்தத் தயக்கம்.. வடிவத்திலும், மையத்திலும் வேறு திசைகளுக்கு பயணிக்க நிறைய வாய்ப்பிருந்தும் அதை உருவாக்கிக் கொள்ளாதது ஏன் என்ற கேள்வியையும் விசுவாமித்திரன் முன் வைக்கிறார்.

மலையாளத் திரைப்பட உலகம் புதுதிசை நோக்கும் என்ற அறிகுறிகளை முன் வைத்து தமிழ்ச் சூழலை பார்ப்பதில் சோர்வுதான் ஏற்படுகிறது. தமிழ்ப் படமான முதல் முதல் முதல் வரை படம் எப்படி இந்தியப் பிரிவில் இடம் பெற்றது என்பது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. கிருஷ்ணன் சேசாத்திரி கௌதமன் என்பவர் இயக்கி இருந்த படம். படம் எடுப்பது பற்றிய படமாகவும், வாழ்வு, சாவுக்கு பின் உள்ளதைப் பற்றியது என்ற ஒற்றைவரி கருத்து மலினமான முறையில் வெளிப்பட்டிருந்தது. பிரியதர்சன் இயக்கி இருந்த காஞ்சீவரம் படத்தின் திரைக்கதையில் அமைந்திருந்த குளறுபடிகளால் நல்ல படமாக அமையவில்லை மலையாள ரசிகர்கள் மத்தியில் பிரியதர்சனின் இயக்கம் என்ற அளவில் வரவேற்பு இருந்தாலும் படத்தின் குளறுபடிகள் பல தளங்களில் அதன் தொழில் நுட்ப அம்சங்களை மீறி விலக்கிவிடச் செய்தது. இதுபோன்றே வங்காள இயக்குனர் புத்ததேவ் தாஸ் குப்தாவின் அமி அசின் அர் அமர் மதுபாலா படத்தின் திரைக்கதை குளறுபடிகள் மாமேதை ஒருவரிடமிருந்து வந்த முந்தைய படங்களை பின்னோக்கிப் பார்க்கச் செய்து அதிர்ச்சியடையச் செய்தது.

கிராமத்திலிருந்து வேலை தேடி வரும் யாசின் திலிப் என்ற கணினி பொறியாளருடன் சேர்ந்து கல்கத்தாவில் இருக்கிறான். கல்கத்தா அரசு மருத்துவமனையில் தொல்லை கொடுக்கும் எலிகளை கண்காணிக்க ஒவ்வொரு அறையிலும் கேமரா பொருத்தும் வேலையில் படம் ஆரம்பிக்கிறது. ரேகா என்ற இளம் நடனமாது (வாரணம் ஆயிரம் கதாநாயகி சமீரா ரெட்டி) பக்கத்து அறையில் குடியேறுகிறாள். அவளின் அறையில் மறைமுகமாக காமிராவை வைத்து அவளின் நடவடிக்கையிலும் அழகிலும் திலீப் அமிழ்ந்து போகிறான். அவள் அதையறிந்து காவல் துறைக்கு புகார் செய்கிறாள். அந்த சமயத்தில் கல்கத்தாவில் நடக்கும் ஒரு வெடிகுண்டு விபத்தில் தேடப்படும் தீவிரவாதிகளாக இருவர் அடையாளம் காணப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள். யாசின் குண்டடிபட்டு இறந்து போகிறான்.

ரேகா திரைப்பட முயற்சிகளில் வெற்றியடையாமலும் காவல் துறை புகார் சிக்கலாலும் கல்கத்தாவிலிருந்து வெளியேறுகிறாள். அவளது அழகினை காவல்துறை கட்டுப்பாட்டு அறை காவலர்கள் ரசிக்கிறார்கள். கைபேசியால் அவளை ஒருவன் படம் பிடிப்பதை அவள் எரிச்சலுடன் தட்டிவிட்டு கடந்து போகிறாள். கிராமப்புற இளைஞன் சார்ந்த குடும்ப சூழலும், நகர சிரமங்களும் அவனை அழுத்துவதை சித்தரிக்கும் படத்தின் திரைக்கதையின் பலவீனங்கள் புத்ததேவ் குப்தாவின் படைப்பு என்பதை மறுக்க வைக்கிறது. சமீரா ரெட்டியின் அழகையும் உடலையும் காட்டுவதைத் தவிர அந்த கதாபாத்திரம் எந்த விதத்திலும் தீவிரமாக உருவாக்கப்படவில்லை. கல்கத்தா, வங்காள பிரதேசங்களின் பல்வேறு வகை பெண்களை முந்தின படங்களில் தீவிரமாக சித்தரித்த புத்ததேவ் தாஸ் குப்தா இதில் பெரும் சரிவை சந்தித்திருக்கிறார்.