Keetru Kanavu
Kanavu
மே 2009
புதையுண்ட வாழ்க்கையிலிருந்து மீண்டெழுதலின் ரகசியம்
மதுமிதா

“சொல்லத் தெரியாத பறவை
தன் சந்தோஷத்தை
பறந்து பறந்து நிரப்புகிறது வெளியில்”

என்ன ஒருவித மனதின் மகிழ்ச்சியின் வெளிப்பாடு இது. மனம் முழுக்க சந்தோசத்தை அள்ளித் தெளிக்கும் வரிகள். இதே கவிதை மனதால்தான்,

“முக்கியமாய் எதுவுமில்லை
என்னிடம் தனிமை தவிர” எனவும் எழுத முடிந்தது.

சுகந்தி சுப்ரமணியனை நேரில் சந்திக்க வேண்டுமென நினைத்திருந்தேன். நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவேயில்லை. அவருடைய அஞ்சலிக் கூட்டத்தில் புகைப் படத்தின் முன்னே மலர்களை இடும்போது உள்ளம் பனிக்க கைகள் நடுங்க மலர்களை வைத்தேன். சொல்லவெண்ணா ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டதை உணர முடிந் தது. வெளியே கூட்டத்தில் இருக்கிறோம் சரியாகு எனக் கட்டளை யிட்டு மனதை சரிசெய்யவேண்டியதாகி விட்டது. அண்மையில் மறைந்த கிருத்திகா, சுகந்தி சுப்ர மணியன் அஞ்சலிக்கூட்டம் அணங்கு சார்பில் 28.2.2009 அன்று பெசன்ட் நகரில், ஸ்பேசஸ் கல்சுரல் சென்டரில் நடைபெற்றது. இன்பா சுப்ரமணியன் அழைப்பு விடுத் திருந்தார். மாலதி மைத்ரி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி ஏற்பாடு செய்திருந்தனர்.

“தோல்விகள் தொடர்கையில்
என்னுடனே நான் நட்புக் கொண்டேன்” என்ற சுகந்தி மரணத்துடனும் நட்புகொண்டு பயணித்துவிட்டார்.

சுகந்தியின் இன்னும் சில வரிகள் :

“எதுவும் தேவையில்லை என
உதறித்தள்ள நானென்ன ஜடமா..
வீட்டிலிருக்கும் ஜடப்பொருளுக்கு
போட்டியாய் கிடந்து தவிக்கிறேன்
எதுவாகவும் நானில்லை.

நான் ஏன் இப்படியாகிப் போனேன்?
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்
அது;
நானாக இருக்க முடியாது போன வருத்தம்தான்.

வாழ்க்கை பூராவும் தியாகம் செய்வதா?
நான் கேட்டேன் அந்தப் பெண்களை
இதுதான் வாழ்க்கை என்றாள் ஒருத்தி
எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்
வாழ்கிறேன் என்றாள் மற்றவள்
ஜடமாய் உணர்கிறேன் என்றாள் இன்னொருத்தி
வெள்ளிக்கிழமையும் வியாழனும்
விரதமிருக்கிறேன் அம்மனுக்கு
தீரும் என் கவலைகள் என்றாள்
மற்றுமொருத்தி

கிருத்திகாவின் அஞ்சலிக்கூட்டம் சந்திரலேகாவின் வீட்டில் நடந்தது. என்ன ஒரு விசித்திரமான பொருத்த மாயிருக்க முடியும். வாசல் உள்ளே நுழைகையிலேயே வெளியே கடற்கரை யின் ஆரவாரம், மக்களின், வாகனங் களின் இரைச்சல் கடந்து ஒருவித அமைதியை உணர முடிந்தது. கிருத்திகா, சுகந்தி சுப்ரமணியன் படங்களுக்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி பூக்கள் வைத் திருந்தனர். வெளி ரங்கராஜனும் நானும் உள்ளே செல்லும்போது இளம்பிறை தனது உரையை முடித்துவிட்டுக் கிளம்பினார்.

அடுத்து மாலதி மைத்ரி அழைக்க அசோகமித்திரன் பேச வந்தார். ஹைதராபாத்தில் சுகந்தி சுப்ரமணியன் குடும்பத்தினருடன் தங்கியிருந்ததை நினைவு கூர்ந்தார். நல்ல பெண்மணி. அழகிய பெண்மணி. அழகிய மனமுடை யவர். இரண்டு பெண் குழந்தைகள். இந்த மரணம் அவரின் வலிகளிலிருந்து விடுதலையாக இருந்திருக்க வேண்டும் என்றார். லதா ராமகிருஷ்ணன் சுகந்தியுடன் மருத்துவமனையில் இருந்து கவனித்துக் கொண்டதை நினைவு கூர்ந்தார். கிருத்திகாவின் நாவல்கள் நேரடி நாவலாக வராமல் பத்திரிகைகள் மூலமாக வந்திருந்தால் இன்னும் இலக் கிய உலகில் கவனம் பெற்றிருப்பார் என்றார். பிரசன்னா ராமசாமி அழுது தான் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென்பதில்லை என்றார். நடிகை ரோகிணி இன்னும் இருவருடனான 17 நிமிட நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

அ.மங்கை தனது உரையில் கிருத்திகா, அவரின் மகள் மீனா சுவாமிநாதன் குறித்து பேசிய விதம் பெண் இருப்பியல் சார்ந்த பல கேள்விகளை முன்வைத்தது. தாய், மகள் என்னும் உறவின் இனிமை, புனிதம் கடந்து செல்லவியலா, வார்த்தைகளில் எழுதவியலா சின்ன உரசலின் ஆத்மார்த்த உணர்வுச் சிக்கலை எந்த குறை சொல்தலோ, உதாசீன உணர்வோ இன்றி தெளிந்த உரையில் எடுத்துரைத்தார். கிருத்திகாவின் நூல்கள் பாதுகாக் கப்பட வேண்டும் என்றார்.

பன்னீர் செல்வம் கிருத்திகாவின் வாசவேஸ்வரம் நாவல் குறித்து பேசுகை யில் வேறு எந்த பிற ஜாதியினரின் ஒரு காதாபாத்திரம் கூட அந்த நாவலில் இல்லை என எடுத்துக்கூறினார். இது குறித்து கிருத்திகாவிடம் கேட்க நேர்ந்த போது எனக்குத் தெரிந்ததைத்தானே எழுதமுடியுமென அவர் நேர்மையாக ஒத்துக் கொண்டதையும் கூறினார். அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்த இன்பா வந்தவர்களுக்கு நன்றி யுரைக்க கனக்கும் மனத்துடன் நிகழ்ச்சி முடிந்தது.

நிகழ்ச்சியில் நடிகை ரேவதி, வெளி ரங்கராஜன். கவிஞர்கள் அய்யப்ப மாதவன், நரன், தமிழ்நதி, நங்கை, உமா சக்தி, வித்யா, க்ருஷாங்கினி, விஜய லட்சுமி எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். படைப்பாளிகள் இருக்கும்போது சிறப்பு செய்யாமல் அவர்கள் மறைந்த பிறகு சிறப்பு செய்கி றோமே, இது என்ன வொரு நியாயத்தில் சேர்த்தி. அவர்கள் இருக்கும்போது படைப்பினைப் பாராட்டியிருந்தால் மகிழ்ந்திருப்பார்களே என்று வருத்தமாக வும் இருந்தது. அதே சமயம் மறைவுக்குப் பிறகும் கண்டுகொள்ளப்படாமல் ஒரே ஒரு நாளேனும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தியமைக்கு கொஞ்சம் ஆறுதலா கவும் இருந்தது.

புதையுண்ட வாழ்க்கையிலிருந்து மீண்டெழுந்து தன் சந்தோசத்தை சொல்லத் தெரியாத பறவை ஒன்று பறந்து பறந்து நிறப்புகிறது வெளியை.