Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
பிப்ரவரி 2008
திரைப்படத்தில் கனவுச் செயற்பாடுகள்
- அரூப் ரத்தன் கோஷ் (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: சு. கிருஷ்ணமூர்த்தி)

சில சமயங்களில் நாம் சிறிது நேரத்துக்குப் பகற்கனவுகளில் ஆழ்ந்துவிடுகிறோம். ஒருவகைத் திகிலளிக்கும் கற்பனைத் தோற்றம் சிறிது நேரம் மட்டும்: பிறகு மறுபடி நம் கடினமான அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிடுகிறோம். 'விருப்ப நிறைவேறல்கள்`, மாயக்கற்பனைகளின் சில கணங்கள் நமக்குப் புத்துணர்வு அளிக்கின்றன. சில சமயம் நம் நிறைவேறாத ஆசைகளை, அனுபவங்களை நினைவுக்குக் கொண்டுவருவதால் வருத்தமும் அளிக்கின்றன.

இத்தகைய சிலவகைக் கற்பனைத் தோற்றங்களும், உணர்ச்சிகளும் நகரும் திரைப்பட பிம்பங்கள் மூலம் திரையில் நம் பார்வைக்கு வருகின்றன. திரைப்படம், டீ.வி, வீடியோ எதுவாயிருந்தாலும் அது கொணரும் பிம்பங்களில் நாம் ஆழ்ந்துவிடுகிறோம். அரங்கில் இருட்டில் அமர்ந்துகொண்டு, கூட்டத்தின் நடுவே இருந்தாலும் தனியே இருப்பதாக நினைத்துக்கொள்ளும் சூழலில் இந்த பிம்பங்களின் தாக்கம் இன்னும் நிறைவளிக்கிறது. ஜனரஞ்சகம், கலைப்படைப்பு ஆகிய இருவகைத் திரைப்படங்களிலும் இத்தகைய கனவுக் காட்சிகள் சில சமயம் ரொமான்ட்டிக் தன்மையுடனும், சில சமயம் பிறர் அனுபவத்தைச் சுவைப்பதாகவும், சில சமயம் மூட நம்பிக்கைத் தன்மையுடனும் பரிமாறப்படுகின்றன. சாதாரணமாக இத்தகைய காட்சிகளின் விளைவுகள் உணர்ச்சிகளை வெளியேற்றி விடுதலையளிக்கும் தன்மை கொண்டவை.

கனவுக்காட்சிகள் நடப்பு நிகழ்ச்சிகளாகத் தோன்றும்போது சிக்கலாகிவிடுகின்றன. அப்போது இக்காட்சிகள் சாதாரணமாக, பெண்மையின் இளமையையும், அழகையும் பல்வகை பிம்பங்களாக மெதுவாக நகரும் காட்சிகளில் ஜனரஞ்சகத் திரைப்படங்களில் காட்டப்படுவது போலன்றி, வெறுங் கனவாகவோ, பகற்கனவாகவோ சித்தரிக்கப்படுவதில்லை. சில கலைப்படங்களில் கனவு சிக்கலாகவும், நுணுக்கமாகவும், ஆழ்ந்த குறிப்புணர்த்தலாகச் சித்தரிக்கப்படுகிறது.

சில சமயங்களில் திரைப்படங்களில் 'நடப்பு` அல்லது 'மிகை நடப்பு` திரைப்படப்பின்னலில் நெருக்கமாகப் பின்னப்பட்டு வெளிப்படுகிறது. அப்போது நம்மால் உண்மை அல்லது கனவு உண்மையின் விளிம்புப் பகுதிகளை இனங்காண முடிவதில்லை. 'முற்போக்கு' மற்றும் 'அறிவுக்கு முரண்பட்ட' நாடகங்கள் இயற்றியுள்ள அய்னஸ்கோ தம் நாடகத்தொகுப்பின் முன்னுரையில் 'வாழ்க்கையில் மிகை நடப்பியல் உண்டு` என்கிறார். "எந்த மனிதனாலும் கனவுகளின்றி வாழ இயலாது என்று நான் நினைக்கிறேன். நாம் நடப்பை அதன் இருமுறைகளிலிருந்தும் இழுத்தால், அதன் மையப் புள்ளியில் கனவு நிச்சயம் தோன்றும் என்று நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். ஆகவே நடப்பு கனவாகவும் கனவு நடப்பாகவும் இருக்கிறது. அல்லது இரண்டும் ஒரு கனவு நடப்பாகக் கலந்துவிடுகின்றன" என்று சொல்கிறார் புத்ததேவ் தாஸ்குப்தா. நாம் இந்தத் தன்மைகளை லூயி புனுவலிலும், வேறொரு வகையில் (இன்னும் இல்லை) அல்லது (டிரிம்ஸ்) போன்ற குரோஸாவாவின் பிற் காலத் திரைப்படங்களிலும் காண்கிறோம்.

கனவுக்கும் நடப்புக்குமிடையே செயற்பாடு சமகால இந்தியத் திரைப்படங்களில் சியாம் பெனகல் மற்றும் புத்ததேவ் தாஸ்குப்தாவின் படங்களிலும், ஓரளவு கௌதம் கோசின் படங்களிலும் சில அழகான காட்சிகளை அளித்திருக்கிறது. பெனகலின் "சுராஜ் கா சட்வன் கோரா"வின் பிற்பகுதியில் நாம் ஒரு சாதாரண நகரத்தெரு திடீரென்று ஒரு மங்கலான புகைப்படலத்தால் கொஞ்சங் கொஞ்சமாக சூழப்படுவதைக் காண்கிறோம். அந்தப் புகை ஒரு சேரியின் கரியடுப்புப்புகையாகவோ அல்லது வேறு ஏதாவதாகவோ இருக்கலாம். ஆனால் இந்தக் காட்சி ஒரு நினைவோ அல்லது சமரசத்துக்கான விழைவோ கன நேரத்துக்கு ஒரு பருண்மையான உருவம் பெற்றாற்போல் தோன்றகிறது. படத்தின் கதாநாயகனான மாணிக் மொல்லாவால் முன்பு காதலிக்கப்பட்ட ஒரு பெண் தன் முடமான கணவனை ஒரு சக்கர நாற்காலியில் வைத்துக்கொண்டு, தெரிந்த பொருள் கன்னியமாகத் தெரியும் சூழலில் ஒரு சுறுசுறுப்பான நேரத்துக்கு முன்னேறிவருகிறாள். சில திரைப்பட நேரத்துக்குப் பின் இந்த நடப்பு சாதாரணம் அல்லது சொஸ்தவமாகிவிடுகிறது. நடப்பியலுக்கும் மிகை நடப்பியலுக்குமிடையே இந்த பரஸ்பரச் செயற்பாடு நமக்கு லூயி புனுவலை மிகவும் நினைவுறுத்துகிறது.

கனவுக்கும், நனவுக்குமிடையே இந்தப் பின்னல் புத்ததேவ் தாஸ்குப்தாவுக்கு வெவ்வேறு உருவங்களையும் நுண்ணுணர்வுத் தன்மைகளையும் மேற்கொள்கிறது. 'சராசர்' (1995) படத்தைப் பா£ப்போம். மற்ற கிராமவாசிகள் போல, சுதந்திரமாகத் திரியும் பறவைகளைப் பிடித்து விற்கும் தொழில் செய்யும் ஒரு மனிதன் கொஞ்சங் கொஞ்சமாக அந்தத் தொழிலிலிருந்து விலகிக் கொள்கிறான்.

இப்படத்தில் சுற்றுச் சூழல் மற்றும் பெண்ணியம் சார்ந்த வாழ்க்கையணுகல் முறை சுட்டப்படுகிறது. ஆகையால் அந்த மனிதன் அவ்வப்போது மாய உருவங்களை அல்லது பகற் கனவைக் காண்கிறான். அல்லது கனவு போன்ற ஒன்றைத் தரிசிப்பதில் ஈடுபடுகிறான். நாமும் அவனோடு அவனது அறையிலும் அக்கம் பக்கத்திலும் ஏராளமான பறவைகள் தாவிக் குதித்துப் பறந்து திரிவதை வியப்போடு பார்க்கிறோம். அந்த மனிதனின் வீட்டில் அச்சமின்றி இருக்கலாமென்று அந்தப் பறவைகளுக்கு நிச்சயமாகத் தெரியும் என்று தோன்றுகிறது. அந்த மனிதனும் அப்பறவைகளின் அண்மையால் மகிழ்ச்சியடைகிறான். நாமுந்தான். அது ஒரு கனவாக இருக்கலாம் அல்லது வேறுவகையான ஒரு மனிதனின் வீட்டினுள்ளே எண்ணற்ற அழகான பறவைகளின் நளினமான நடமாட்டத்தைக் காட்டும் ஒரு வாஸ்தவக் காட்சியாக இருக்கலாம். எனினும் இந்தக் காட்சி நடப்புக்கு வேறுபட்டதாக, கனவுபோல் தோன்றுகிறது. இந்தக் காட்சி படத்தில் அடிக்கடி தோன்றி அதற்கு ஒரு மிகை நடப்பியல் தன்மையையும் விளைவையும் அளிக்கிறது.

அவரது பிந்தையப்படம் 'லால் தர்ஜா' (1996)விலும் நடப்பு மற்றும் வாஸ்தவமின்மை யின் இவ்வகைப் பின்னல் இடம் பெற்றுள்ளது. இப்படத்தில் கனவு நுண்மையான, உன்னத முறையில் வலுப்பெற்றுள்ளது. ஆனால் சில சமயங்களில் இது தன் அன்பற்ற வாழ்க்கையில் வேதனைக்குள்ளாகும் பல் மருத்துவர் டாக்டர் நபீன் தத்தாவின் உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற கவனத்தையும் நடத்தையையும் முற்றிலும் ஆட்கொள் கிறது. அவரோடு நாமும் நடப்பியல் தொனிகள் படர்ந்த கனவுக் கதைக்கு ஆட்படுகிறோம். அல்லது நாம் இந்த வரிசையை அப்படியே மாற்றி 'லால் தர்ஜா' நம் ஆத்மாவின் உள்ளார்ந்த கனவுச் செயல்களுடன் இணைந்து செயற்படும் நம் காலத்துப் பின் நவீனத்துவ வாஸ்தவத்தைச் சித்தரிப்பதாகச் சொல்லலாம், லால் தர்ஜா கனவு அல்லது கனவு போன்ற தன்மையில் மூழ்கியிருக்கிறது. நபீன் தத்தா சிவப்பு உடையணிந்த சிறுவன் நபின் டீ.வி திரையிலிருந்து வெளிப்படும் தன் பிள்ளைப் பருவ பிம்பத்தை அடிக்கடி பார்க்கிறார்.

சிறுவன் நபீன் "எழுந்திரு. நீயாக இரு!" என்ற கூறி அவருக்கு உந்துதல் அளிக்கிறான். அவனது இந்தத் தோற்றம் தனக்கு ஒரு நுண்மையான நீணீtலீணீக்ஷீsவீs ஆக இருப்பதை அவர் உணர்கிறார். இந்தக் கட்டமைப்பு முழுவதும் பிள்ளைப் பருவ பிம்பத்தோடு செரபுஞ்சியின் அழகிய இயற்கைக் காட்சிகள் வெளிப்படுகின்றன. டாக்டரும் பார்வையாளர்களில் பலரும் தங்கள் வாழ்விலிருந்து தொலைந்துவிட்ட குழந்தைப் பருவத்து வெகுளித்தன்மை, தூய அன்பு, எளிமை ஆகியவை இவ்வாறு வருகின்றன. காலம் தன் கபடமின்மையைத் தொலைத்திருக்கலாம். ஆனால் (தெளிவாக அடையாளங்கண்டு கொள்ளப்படாத) ஏதோ ஒன்றுக்காக ஏக்கத்தின் வேதனை தொடர்ந்த வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே, கடைசிக் காட்சியில், தவிர்க்கமுடியாதவாறு, டாக்டர் கனவு போன்ற , ஆனால் இயற்கையான நிலப்பரப்பான செரபுஞ்சியில் அநேகமாக அமிழ்ந்தேயாகிறார், நகரத்திலுள்ள அவரது வீடு திடீரென்று திறந்த வானத்துக்குக் கீழே பரந்த நிலமாக மாறுகிறது. அங்கே சிறுவன் நபீன் சிறிது தொலைவிலிருந்து அவரைச் சந்திக்க வருகிறான். அவரை நோக்கிக் கை நீட்டுகிறான். படம் கனவில் அல்லது வாஸ்தவத்தில் அல்லது இவ்விரண்டின் கலப்பில் முடிவுறுகிறது. நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. நாம் ஒருவேளை தெரிந்து கொள்ளவிரும்பாமலிருக்கலாம்.

கவிகள் கனவு காண்பவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். திரைப்படம் படைக்கும் கவிகள் கனவு காண்பவர்களுக்கும் மேற்பட்டவர்கள். அவர்கள் நமக்கு விழிப்பூட்டக் கனவுகளைக் காண்பிக்கிறார்கள். எங்கிருந்து விழிப்பூட்ட? 'வாழ்க்கை ஒரு கனவு அல்லது உறக்கம். மரணமே பதிலளிக்கும்' என்ற கவியின் சிந்தனையை ஒருவரும் புறக்கணிக்க இயலாது.

கௌதம்கோஹின் குறும்படம் 'பக்கீர்' (1998)இல் ஒரு மாயக்காட்சி அல்லது கனவு போன்ற சித்தரிப்பு படத்துக்கு ஒரு மனவியல் பரிமாணத்தை அளிக்கிறது. மறைபொருள் தன்மைவாய்ந்த வாழ்க்கை நோக்குக் கொண்ட ஒரு சாதாரணமான, நல்ல மனிதன் ஒரு கிராமத்தில் வசிக்கிறான். எல்லோரும் அவனை நேசிக்கிறார்கள். அவனுடைய அழகிய மனைவி அந்த வட்டாரத்தில் பலருடன் காதல் லீலைகளில் ஈடுபடுகிறாள். எல்லோருக்கும் அவளது நடத்தை பற்றித் தெரியும் ஒருநாளிரவில் அவள் அல்லல்படுகிறாள், கணவன் அதிர்ச்சியடைகிறான். ஆனால் அவளால் தன் சோகத்தைச் சரியாக வெளிப்படுத்த இயலவில்லை. ஒரு மாலை நேரத்தில் அவன் தன் மனைவி நளினமாகவும் உற்சாகமாகவும் நடனமாடுவதைப் பார்க்கிறான். இது ஒரு பொய்த் தோற்றமா அல்லது மறைபொருள் தன்மை கொண்ட காட்சியா? அவன் பார்க்கும் அழகிய காட்சியை மற்ற கிராமவாசிகளால் பார்க்க இயலவில்லை. ஆயினும் (இந்திராணி விஹால்தார் நடிக்கும்) இந்தப் பாத்திரம் நடப்பியல் கடந்த கனவுத் தன்மைகொண்ட அற்புதத்தைத் தோற்றுவிக்குமாறு நடனமாடுவதை பக்கீருடன் நாமும் பார்க்கிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com