Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
பிப்ரவரி 2008
குற்றத்தின் சம கால முகம்
கிம் கி டுக் என்றொரு விளிம்பு நிலை கலைஞன்

ஹவி

நமது சமூக மறதியில் தோய்ந்துவிட்ட பல்வேறு அடுக்குகளாலான மனித வன்முறையை சில சமயம் நாம் தினசரி எதிர் கொள்ள நேர்கையில் அது நம்முள் எந்த பேரதிர்வையும் நிகழ்த்த விடாமல், வழமையான உணர்ச்சியற்ற தன்மைக்குள் தள்ளி விடுவதற்கான பெரும் ஊடக வணிக சூழல் காலங்களில் வாழ நேர்ந்துவிட்ட நமக்கு அவ்வாழ்தலின் ஊடாக கலைப் படைப்பு கட்டி எழுப்பப்பட்டு நம்முன் திறந்து வைக்கப்படும் பொழுது கலையோடு மட்டுமல்லாமல் அது விரித்துக் காட்டும் யதார்த்த வன் உலகமும் நமது உணர்வுக்குள் விழிப்புப் பெறுகையில் மறதியுற்ற நமது தினசரி வாழ்வை குறித்த அனைத்து கண்ணோட்டங்களும் மாறி விடுவதுடன், நமது நிலைப்படுத்தப்பட்ட வாழ்வியல் திட்டங்களும் சிதறடிக்கப்பட்டு, ஒரு பெரும் பாதுகாப்பற்ற சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறோம் என்ற இரக்கமற்ற உண்மை சாவின் வன்பார்வையுடன் நம் மேல் பாய்கிறது.

அப்பொழுது நாம் செய்யத் தகுந்தவைகளும் தகாதவைகளும் கலந்து மறைந்து வாழ்வின் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் பொழுது செயலின் இயல்பு தன்மை என்பது குற்றம், வன்முறை, கொடுஞ்செயல் எனப் பிரித்தறியா வண்ணம் நிறம் கொள்கின்றன. ஒரு குழந்தைமையின் தட்டாம் பூச்சியின் வால் நூலென பட்டமிடப் படுகையில் வன்முறையின் காலடித் தடமெனத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்லும் மனிதப் பரிமாணம் பின் அறத்தின் கிள்ளலில் விழிப்புற்று விடை பிரிகையில் மேலேழும் கவிதையென செயல் மாற்றம் பெறுகிறது. ஆன போதிலும் இவற்றின் அடி நீரூற்றின் மென் கசிவாய் மனித இருப்பில் சலனமுறும் அன்பின், கருணையின் பேருவகை நம்மை எல்லா அநீதிகளிலிருந்தும் மீட்டு சென்று விடுவதான 'கலை நம்பிக்கையில்' வாழ்வை திரும்ப கையளிக்கிறோம்.

இப்படியான படைப்புக் கனவுகள் மிளிர நாம் கிம் கி டுக்ஐ அணுகினால் நாம் அடைவது ஏமாற்றம், வெறுப்பு, கசப்பு, வன்முறை,. அப்படியும் நாம் அறுதியிட்டுச் செல்ல முடியாது. ஒரு சமயம் அப்படைப்புக் கோரும் அம்மனநிலையே அதுவாக இருக்கும் பொழுது, அது நம்முள் கிளர்ந்தெழுகையில் மிகுந்த அச்சத்தோடும், அவநம்பிக்கையோடும் நம் அகத்தையே நாம் மீண்டும் பரிசீலித்துப் பார்க்க வேண்டியவர்களாக ஆகிவிடுகிறோம். 'மோசமான ஆள்' (Bad Guy) திரைப்படம் நம் அகத்துள் புதைந்துள்ள வன்முறையை காட்சிப்படுத்துகின்ற அதே வேளையில், மனித மனத்தின் உள் ஆழங்களில், குற்றத் தன்மைகளைத் தாண்டி பயணித்து பெருக்கெடுக்கும் காதலின் அற்புதத்தை, ஒரு மனித குல பரவசமென மௌன சலனமாய் நம்முள் ஊற்றுகிறது. இப்படி மனித அகத்தின் கசடின் அடி ஆழம் வரை இறங்கிச் சென்று யாதொரு அழகியல் வாத சமரசங்களும் இன்றி தன்னைத் தானே தோண்டியெடுத்து நம் முன் பச்சை ரத்த வாசனையுடன் நமக்கு கையளிக்கிறார்.

இப்படி வகைப்படுத்த இயலாத பிரச்னை என்று இப்பொழுது மட்டுமல்ல கிம் தான் துவக்கிய முதல் படைப்பிலிருந்தே அவருக்கு விமர்சகர்களால் தொல்லை ஏற்பட்டுவிட்டது. மேற்கத்திய தொழில் நுட்ப பிரமாண்டங்களை தனது படைப்பு பிரமாண்டத்தால் கேள்விக்கு உட்படுத்திய அகிரா குரொசவா மாதிரி மேற்கத்திய வன்முறை சுகிப்புத் திரைப்படங்களை தனது கச்சாவான வாழ்வை பிரதி செய்யும் படைப்பு ஆக்கத்தின் மூலம் கிம் எழுப்பிய கேள்வி மேற்கத்திய விமர்சகர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆனது. மாபெரும் ராணுவ கிட்டங்கி போல் காட்சியளிக்கும் மேற்கத்திய சினிமாத்தனங்களை தனது உருட்டுக் கட்டைகளால் எதிர் கொண்ட காட்டான் போன்ற ஒரு தோற்றத்தை ஆரம்ப கால விமர்சகர்கள் அவர் மேல் ஏற்ற முனைந்தார்கள்.

அவரின் அந்த யதேச்சையான கலைத் துணிச்சல் தான் மனித மனதின் ஆழம் வரை இறங்கிச் செல்லும் உத்வேகத்தையும், எவரைப் பற்றிய கவலையுமின்றி தன் படைப்பை உருவாக்கும் திறனையும் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. அவரது தீராத படைப்பின் உள்ளார்ந்த தீவிரம் அனைத்தையும் நொறுக்கி மேல் எழுந்தது, மேற்கத்திய மனதின் அகத்தை தனது முடிவற்ற காலத்தை கையகப்படுத்திய காட்சிக் கவிதையான 'வசந்தம், கோடை, இளவேனில், மீண்டும் வசந்தம்...' (Spring, Summer, Fall, Winter and Spring) என்கிற திரைப்படத்தின் மூலமாக வசியப்படுத்தினார். தனது பௌத்த மந்திர வாத சக்தியின் மூலமாக அவர் எழுப்பிய மனித மனத்தின் அறத்தினூடான அப்படைப்பின் திறந்த மன நிலை மேற்கத்திய வாசகர்களையும், விமர்சகர்களையும், ஏன் உலகம் முழுவதும் உள்ள திரை ஆர்வலர்கள் அனைவரையும் அவருடைய படைப்புக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.

கிம் மை கொண்டாடத் துவங்கினர். கவித்துவத்தின் ஆழமான செறிவும், மனித மனதின் தத்துவார்த்த தேடலுமாய் காட்சிகளின் அபூர்வ வண்ணங்களாய் மேல் எழும்பியதும் கிம் மின் படைப்பு. மேலும் "வசந்தம்..." படத்தில் அவரே கதாபாத்திரமாய் தோன்றி மனித குலத்திற்கான தீராத சாபமான வன்முறையின் குற்றவுணர்வின் பாறாங்கல்லை சுமந்து செல்லும் காட்சி உலகப் படங்களின் முடிவற்ற பயண சாட்சியாய் நம்முள் ஒளிர்கிறது. வன்முறையின் குரூர அழகியலை காட்சிப்படுத்த முயன்ற மேற்கத்திய படைப்பு மனங்களான பெசோலினி போன்றவர்களை தனது ஆழமான கிழக்கின் தேட்டமான பௌத்தத்தால் மிக எளிதாக தாண்டிச் சென்று, அனைவரையும் தனது வசியத்திற்கு ஆட்படுத்தினார் கிம். அப்படம் உலகின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

மழைக்காக பள்ளிக் கூடம் பக்கமாக ஒதுங்காத வாழ்வியலைக் கொண்ட கிம் முறையாகவோ, முறையற்றோ தனது பள்ளிக் கல்வியை தொடர முடியாமல் பாதியிலேயே கைவிட்டு வாழ்க்கைக்குள் கற்றுக் கொள்வதற்காக நேரடியாக நுழைந்தவர். தொழிற்சாலைகளில் அடிநிலை பணியாளராக பணிபுரிந்தார். கப்பல் தளங்களில் சுமைத் தொழிலாளியாக இருந்து, வாழ்வின் பல்வேறு பக்கங்களின் வழியாக நடந்து வந்து திரைத்துறைச் சேர்ந்தார். அவர் படிக்கும் பொழுதோ, பணிபுரியும் பொழுதோ அவர் ஒரு திரைக்கலைஞனாக மாறுவார் என்று அவர் கூட கனவில் கண்டதில்லை. அவருக்குள் இருக்கும் தீராத கலை ஆவேசம் அவரை ஓய்வுநேர ஓவியனாக அவர் வாழ்க்கையில் இருத்தியிருந்தது. அந்த வண்ணம் கூட்டி வந்த பாதைதான் திரைப் படைப்பென்னும் மாபெரும் விகாச வெளி.

பிரான்சில் ஓவியத்திற்கு சிறந்த சந்தை இருக்கிறது என்பதைக் கேள்விப்பட்ட அவர் தனது ஓவியங்களுடன் பிரான்சிற்கு வந்திறங்கினார். அங்கே மோண்ட்பில்லியர் கடற்பகுதியில் தங்கியிருந்தபடி இரண்டு ஆண்டுகள் பிரான்சின் தெருக்களில் தனது ஓவியங்களை விற்றபடி இருந்தவருக்கு, அங்கிருந்த அரங்குகள் தான் சிறந்த சினிமாக்களை அறிமுகப்படுத்தின. கிட்டத்தட்ட தொண்ணூறுகளின் ஆரம்பப் பகுதிகளில் நடந்த இவ்வனுபவம் அவரைத் திரைப்படம் எடுக்க வேண்டுமென்ற தீராத ஆவலை உண்டாக்கியது. 1996ல் அவர் கொரியாவுக்கு திரும்பி எடுத்த முதல் படம்தான் 'முதலை' (Crocodile). அப்படம் ஹான் நதியில் தற்கொலை செய்து கொள்ளும் மனிதப் பிணங்களை அகற்றும் ஒரு மனிதனைப் பற்றிய படமாகும். அதன் படைப்பாக்க சமரசமற்றத் தன்மையும், உருவாக்க முறைகளும் அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பினாலும் அது குறித்து எவரும் வாய் திறக்கவில்லை.

பிறகு தொடர்ச்சியாக 'காட்டு விலங்குகள்' (Wild Animals - 1997), மற்றும் 'பேர்ட்கேஜ் இன்' (Birdcage Inn 1998) எடுத்தபோதிலும் 2000மாவது ஆண்டு 'தி ஐஸில்' (The Isle) வெளியாகும் வரை அவை வெளிவரவில்லை. தி ஐஸில் வெளிவந்து உலகளாவிய வெற்றியை அவருக்கு ஈட்டித் தந்தது. பார்வையாளர்கள் அதன் காட்சி ரீதியான அழகியலைக் கண்டு திகைத்துப் போயினர். உலகப்படங்களில் அது ஒரு புதிய வழியை திறந்து விட்டதாகவே கருதினர். அந்த எண்ணம் வீண் போகவில்லை என்பதை அவரது தொடர்ந்த படைப்புகள் உறுதிப்படுத்தின. அப்படத்தின் தனித்துவமான கதைக் களம் ஆண் மற்றும் பெண் இருப்பின் உள்ளார்ந்த சிக்கல்களை அலசியது. தனது மனைவியையும், அவளது காதலனையும் கொன்ற ஒரு கொலையாளி, ஒரு சிசார்டின் சொந்தக்காரியான வாய் பேச முடியாத பெண்ணுடனான அவனது உறவு, அவளது வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகள், தவிர்க்க இயலாத இருவரின் இருப்பு, அவனின் சிக்கலுற்ற அகம் என்று பயணிக்கிற படைப்பானது பார்வையாளர்களை பெரிதும் சலனத்தை ஏற்படுத்தி தன் பக்கம் அவர்களை ஈர்த்தது. ஹிரோஷி தெஷிகாராவின் தலைசிறந்த படைப்பான 'தி விமன் ஆப் த டியூன்ஸ்' என்ற திரைக் காவியத்தை மீண்டும் நம்முள் எழுப்பிச் சென்றது.

கிம் மின் பெரும்பாலான படங்கள் குறிப்பாக மோசமான ஆள், தெரியாத முகவரி, சமாரிட்டன் கேர்ள் போன்ற படங்கள் பெண்ணிய விமர்சகர்களால் கடுமையாக எதிர் கொள்ளப்பட்டன. எதிர்மறையான விமர்சனங்களையே அவருக்கு அது ஈட்டித் தந்தது. ஒரு படைப்பாளி என்ற முறையில் திறந்த முறையில் தனது நம்பிக்கைகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்துகிற பொழுது அது ஏற்கனவே தரப்பட்ட மதிப்பீடுகளை அப்படியே முன் தருவதில்லை. எனவே அதன் தன்மையானது வேறு விதமானது என்றார் கிம். மிகவும் தீவிரமான படைப்பு எல்லைக்குள் சென்று கதாபாத்திரங்களை உருவாக்கும் பொழுது அதன் செயல் முடிவுகளும் வழக்கமான விமர்சக கண்ணோட்டங்களால் மதிப்பிடவும் முடியாததாக மாறிவிடுகிறது.

ஆன போதிலும், ஒரு படைப்பாளியின் பாத்திர தேர்வும், கதைக் களமும் அது கோரி நிற்கும் படைப்பு வெளியும், வாசக வெளிப்பாடும் விவாதத்திற்குரியது தான். ஆனால் மிகவும் பின் தங்கிய மக்கள் திரளில் இருந்து தனது கதாபாத்திரத்தை தேர்வு செய்கிற ஒரு படைப்பாளி அல்ல தான் நோக்கும் ஆழமான பிரச்னைகளை ஏற்கனவே செயல்தளங்களில் கோரி நிற்கின்ற அரசியல் பிரதிநிதித்துவத்தை அது நேரடியாக பிரதிபலிக்காது போனாலும் கூட அதன் வாழ்தளங்களில் இருந்து அது வெளிப்படுத்த விரும்பும் விமர்சன உணர்வானது அனைத்து மனித மனங்களோடும் உரையாட விரும்புகின்ற ஒரு படைப்பாளியின் தீராத வேட்கை என்றே நாம் காண வேண்டியிருக்கிறது. அவ்வாறு எழுந்த அறிவுணர்வின் வெளிப்பாடாகவே கிம் படைப்புகள் நம் முன் காட்சிப்படுத்தப்படுகின்றன என நாம் உறுதியாக சொல்லலாம்.

'மோசமான ஆள்' படம் விபச்சாரிகளை விற்பனைக்குக் கொண்டு தள்ளும், சிக்கலான மனநிலையை உடைய ஒரு 'மாமா' இளைஞனைப் பற்றிய படம். யதார்த்தமான காதலர்களை கொடூரமாக தாக்கி அப்பெண்ணை விபச்சாரத்திற்கு விற்று பின் அவளையே முதலீடாகக் கொண்டு வாழும் அவனது முடிவற்ற வாழ்வைப் பற்றிய அப்படம் வன்முறை மற்றும் மனித இருப்பு பற்றிய யாதொரும் கேள்வியற்ற திறந்த படம். ஏனெனில் எல்லா தத்துவங்களும் கையற்றுப் போன ஒரு வாழ்தலில் இருந்து உருவாகும் கதாபாத்திரம் தான் வாழ நேர்ந்த சமூக வெளியை மௌனமாக கடந்து செல்வதை காட்சிப்படுத்துவதன் வாயிலாக அவ்வாறான வாழ்வை கையளித்த சமூக வெளியின் மீது தனது படைப்புக் கேள்வியை முன்வைக்கிறான் படைப்பாளி என்றே நாம் கருதலாம். எங்காவது ரட்சிப்போ, விடுவிப்போ நேர்ந்துவிடும் என்ற பார்வையாளனின் தவிப்பை உடைத்து நொறுக்கி, அவலமாக காட்சிப்படுத்தி விடுகிற படைப்பே அதன் கலைத் தன்மையாக மாற்றம் அடைகிறது.

'மோசமான ஆள்' இவ்வாறான உணர்வை நம்முள் கிளர்த்துகிறது என்றால் '3 அயர்ன்' படமோ ஒரு மொழியற்ற காதல் உணர்வின் உள்ளார்ந்த பரவசத்தை கிளர்த்தி விடுகிறது. படத்தின் எந்தப் பகுதியிலும் பேசிவிடாத அந்த மைய ஜோடிகளின் மௌனக் கிளர்ச்சி இறுதிக் காட்சியில் இருவரும் இணைகிற போது நம்முள் கிளர்த்துவது தனி மனித உணர்வில் உருவாகிற எளிய காதல் என்பது விரிந்து மனித இருப்பையே கவர்ந்து கொள்கிற இயற்கையின் பெருங்காதலாய் நம்முள் விரிகிறது. அவ்வாறான புனிதக் காதலை தனது காட்சிகளின் நேர்த்தியான தொகுத்தலின் வழியாகவே பிடித்து விடுகிற புதிர் முடிச்சு தான் கிம் படைப்பாளுமையின் தனித்திறனாகும். யாதொரு பகுதியிலும் படைப்பாளியின் நேரடியான தலையீடும் இல்லாமல் படைப்பின் பேரவகையில் தன்னைத் தானே கரைத்துக் கொள்கிற மந்திர வித்தைகாரனாய் படைப்பை அதன் உச்ச சாத்தியம் வரை நடத்திச் செல்கிற தன்மையுடையது கிம்மின் படைப்புகள்.

'மோசமான ஆள்' படம் நேரடிப் பார்வையில் அது வன்முறை மற்றும் பாலியலைப் பேசுவதாகக் காணப்பட்டாலும் அது அடி ஆழத்தில் மனித மனதின் உணர்வுகளையே பேச முயல்கிறது. மேலும் ஆஸ்தரிய ஓவியக் கலைஞனான யுகான் சீலேயின் பால் உணர்வு ஓவியங்களையும், அதன் வண்ணங்களின் தாக்கத்தினாலும் தான் அப்படத்தை உருவாக்குவதற்கான உந்துதலைப் பெற்றதாக கூறுகிறார் கிம். மேலும் உண்மை பற்றிய தேடல் என்பது மனித மனத்தின் அழுக்கடைந்த உணர்வுகளின் வாயிலாகவும், பாவங்களின் வாயிலாகவும் கண்டறிய முயலும் ஒரு முயற்சி என்கிறார் கிம்.

2002ல் உருவாக்கிய அவரது அடுத்த படம் 'கடற் படை' (The Coast Guard). இதுவும் வன்முறையின் கொடூர அழகியலை அதன் அறியாமையிலிருந்தும், பைத்தியகாரத்தனத்திலும் பெற முயல்கிற அதே வேளையில், ராணுவத்தின் ஆயுத வன்முறையின் மூடுண்ட தன்மைகளையும், குடிமை வாழ்வில் அதன் தாக்குதல்களையும், மனித பாத்திரத்தின் வன்முறை செயல்பாடுகளையும், பொது வாழ்வின் மறதியுற்ற பொய்மைகளையும் அதன் நேரடியானத் தன்மையுடன் வெளிப்படுத்தியது. இவ்வாறான யதேச்சையான வெளிப்பாட்டுத் தன்மையும், வன்மமும் ஒரு படைப்பாளியின் தேக்க நிலையை சுட்டிக்காட்டுகிறது என்பதான விமர்சனங்கள் எழத் துவங்கின வேளையில் அதனை முடிவுக்கு கொண்டு வர விரும்பினார்.

தொடர்ந்து 2003ல் "தான் தனது வசந்தம், கோடை..." படத்தை வெளியிட்டதும் விமர்சகர்களின் அனைத்து அளவுகோல்களும் தகர்ந்தது. கவித்துவத்துடன் முழு முற்றான 'நிர்வாணா'வை நோக்கிய நகர்வாகத்தான் படைப்புகள் எழுச்சிப் பெற்றன என்பதை படைப்புலகம் கண்டுகொண்டது. ஒரு முதிய துறவியிடம் யாருமற்ற இடத்தில் வளர நேர்கிற ஒரு மனிதனின் வாழ்வியல் முழு நிர்வாணாவை நோக்கிய பயணத்தில் மனித தடத்தில் சந்திக்க நேர்கிற வன்முறையை அதன் அறத் தளத்தில் நிறுத்தி உள்ளார்ந்த விசாரணையைத் தொடங்கிய படைப்பாக மிளிர்ந்தது.

தனது 'சமாரிட்டன் கேர்ள்' படைப்புக்காக 2004ம் ஆண்டில் சிறந்த இயக்குநருக்கான விருதை பெர்லின் திரை விழாவில் வென்றார் கிம். தொடர்ச்சியாக அதே ஆண்டில் '3 அயர்ன்' என்கிற கவித்துவ படைப்புக்காக சிறந்த இயக்குநர் விருது வெனிசில் அவருக்கு வழங்கப்பட்டது. அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட '3 அயர்ன்' இழக்கப்பட்ட ஆன்மாக்களின் கண்டுகொள்ளப்படாத மனதின், ஆழமான ரகசியங்களை கொண்டியங்கும் மனித இருப்பின் காதலை கவித்துவமாக பேசிய படம் என்று அனைவராலும் பாராட்டப் பெற்றது. அவரது 'வசந்தம், கோடை' படம் மேற்கத்திய மனதின் கவித்துவ மௌனமாக அனைவரையும் ஈர்த்துக் கொண்ட படைப்பாகும்.

2005 வெளிவந்த 'தி போவ்' (The Bow) என்ற படம் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு அனைவரது கவனைத்தையும் ஈர்த்த படைப்பாகும். இந்தப் படத்தைக் குறித்து நாம் அவதானிக்கும் போது அவர் தனது படைப்பாக்க செயல்பாடு வழியாக தனது சமூகம் சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த, மனித வாழ்வு சார்ந்த சுயேச்சையான சிந்தனாமுறையைக் கண்டு கொண்டதன் வாயிலாக புதிய தளத்திற்கு தனது படைப்பாக்க மனத்தை நகர்த்தியிருப்பதையும் நாம் காண முடியும். அவரது ஆரம்பகால படங்களான மோசமான ஆள், கடற்படை போன்ற படைப்புகள் வாழ்வின் இருத்தலை அப்பட்டமாக கச்சாவாக காட்ட முயன்ற நேரடி வெளிப்பாட்டு முறையிலிருந்து 'வசந்தம், வில்' படம் வாயிலாக ஒரு குறியீட்டுத்தளத்தை வந்தடைந்திருப்பதையும் கடந்த பத்தாண்டுகளாக அவரது படைப்பு மனத்தின் பயணத்தையும் உணர முடிகிறது.

'வில்' படம் பாலியல், மத ஜாதீகம், சமூக ஆண்வெளி குறித்த முழுமையான குறியீட்டுத் தளத்தில் தனது சமூகம் சார்ந்த பௌத்த மத பெருவெளியின் வழியாக உருவான ஆண் மன இருப்பையும் வேட்கையையும் அதன் குறியீட்டுத் தளத்திற்கு உயர்த்தி தனக்கே உரித்தான தனித்துவமான படைப்பு வெளிப்பாட்டு முறையினூடாக பேச முயன்ற படமாக திகழ்கிறது.

அவரது படைப்பு மட்டுமின்றி அவரது வாழ்வும் ஒரு தீராத மனித அலைவின் சமரசமற்ற தேடலின் விசாரணைக் களமாகவும், அறவுணர்வின் முழு நிர்வாணாவை நோக்கிய பயணமாகவும், கிழக்கத்திய ஆன்மீக மனதின் அழுக்குகளிலிருந்தும், விலக்கப்பட்ட தீமைகளில் இருந்து உண்மையை தேடிய ஒரு கலை உபாசனையாகவும் விளங்குகிறது. மேலும் அவரது படைப்புகள் நம்முன் வைக்கும் தரிசனங்களாய் அனைத்து விலக்கப்பட்ட மனதின் குப்பைகளையும், தீமைகளையும், வன்முறைகளையும் தனது பிராந்திய வடிவத்தின் வழியாக யாதொரு கலை சமரசமும் இன்றி உண்மையை அதன் ரத்தப் பிசுக்கோடு பேச வேண்டும் என்பதாகும்.

கலையின் வாயிலாக வாழ்வின் முடிவற்ற உண்மையை கண்டடைவதற்கான ஒரு சிறிய முயற்சியாக அதுவே அமையும். ஒரு சிறிய முயற்சியாக மட்டுமே. ஏனெனில் உண்மை அதன் சாரத்திலிருந்தும், இருப்பிலிருந்தும் பிரம்மாண்டமானதும் அதே நேரத்தில் எளிமையானதுமாகும். அதைக் கண்டடைவதே ஒரு கலைஞனின் தீராத வேட்கையாகவும் இருக்கக் கூடும். முடிவில் கிம்மின் படைப்புகள் நமக்கு தருவது அப்படைப்புகளின் மீதான ஒரு வெறுப்பை அல்ல முடிவற்ற ஒரு நேசத்தை. ஆனால் ஒரு போதும் புறக்கணிக்க முடியாத ஒரு உறவை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com