Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
டிசம்பர் 2008
கண்காணிப்பு அரசியல்
சுப்ரபாரதிமணியன்

அதிகாரத்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் தன் பீடம் தகர்ந்து போகாமல் இருக்கவும் தன் கீழ் உள்ள மக்களைக் கண்காணிப்பதும் அதிகா ரத்தைக் கட்டமைத்து அழுத்துவதும் சாதாரணமாக நடந்து வருவதாகும். இந்தக் கண்காணிப்பின் கீழ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் சுலபமாக ஆட் பட்டுவிடுகிறார்கள். அவர்களிடமிருந்து கிளம்பும் எந்த சிறு பொறியையும் அதிகாரத்துவம் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இவ்வகை கண்காணிப்பின் அரசியலில் சிக்கிக் கொள்ளும் ஒரு எழுத்தாளனைச் சுற்றிய உலகைச் சித்தரிக்கும் " The lives of others" என்ற ஜெர்மானியப்படம் இவ்வாண்டின் ஆஸ்கார் பரிசு பெற்றிருக்கும் படங்களில் ஒன்றாகும்.

அரசாங்கமும், நிறுவனங்களும், கட்சிகளும் தங்களுக்கென்று கட்டமைக்கப் பட்டவை தவிர மற்றவற்றையெல்லாம் தங்கள் கட்டமைப்பை சீர்குலைக்கச் செய்யும் நடவடிக்கைகளாகக் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். எந்தக் கலைவடிவத்தின் மையமும் கவனமாகக் கண்காணிக்கப்படுகிறது. இந்தக் கண்காணிப்பின் தீவிரத்தை அடக்குமுறை தனமாக எடுத்துக் கொள்கிறார்கள். உளவாளிகளும், கண்காணிப்பும் பொதுமக்களை ஊடுருவிக் கொண்டே இருக்கின்றன. எல்லா வகை சூதாட்டங்களுக் குள்ளும் பகடைகளாக்கப்படுகிறார்கள்.

ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் ரகசிய போலீஸ் துறையின் கண்காணிப்பு அரசியலைப் பற்றி இப்படம் பேசுகிறது. கிழக்கு ஜெர்மனியின் அரசு கண்காணிப்புப் பிரிவு ஸ்டஸி ஒரு லட்சம் ஊழியர்களும், இரண்டு லட்சம் ஒற்றர்களையும் கொண்டிருக்கிறது. தங்கள் குடிமக்களின் நடவடிக்கைகளை வெவ்வேறு தளங்களில் கவனிக்கிறது. எல்லாவற்றையும் முழுமையாக அறிந்து கொள்வது அதன் நோக்கமாக இருக்கிறது. கட்சிக்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும் தேவைப்படுகிறார்கள். அதேபோல் எழுத்தாளர்களும் கலைஞர்களும் இன்னும் இன்னும் கட்சிக்காகவே தேவைப்படுகிறார்கள். அவர்கள் ஆன்மாவைச் செம்மைப்படுத்தும் பொறியாளர்கள் அல்லவா? என்கிறார் இப்படத்தின் ஆரம்பக் காட்சியன்றில் முக்ய மந்திரியாக இருக்கும் கட்சியைச் சார்ந்த ஒருவர். சோசலிசத்தின் எதிரிகளை அடையாளம் காட்டுவது இவர்களின் பணி என்றும் சொல்கிறார். கட்சி அவர்களுக்கான கேடயமாகவும், வாளாகவும் இருக்கும் என்கிறார்.

இப்படத்தின் ஆரம்ப காட்சியில் மேற்கு ஜெர்மனிக்கு தப்பி ஓட முயன்ற ஒருவருக்கு உதவிய கிழக்கு ஜெர்மானியர் ஒருவர் விசாரணைப்படுத்தப்படுவதை விவரிக்கிறது. விசாரணையே சித்ரவதையாகவும் அமைந்துவிடுகிறது. வீஸ்லர் என்ற விசாரணை அதிகாரி உண்மை சொல்பவன் எப்போதும் ஒரே மாதிரியாகத் தான் இருப்பான். விசாரணையில் பொய் சொல்பவன் அதனை மனனம் செய்து வைத்து அப்படியே ஒப்பிப்பான். அதிலிருந்து தப்பிப்பதற்காக அழுவான் என்கிறான். வீஸ்லருக்கு டிரைமேன் என்ற நாடக ஆசிரியரை கண்காணிக்கும் வேலை தரப்படுகிறது. டிரைமேனின் வீட்டில் ரகசிய ஒட்டுக் கேட்புக் கருவிகள் பொருத்தப்பட்டு ஒட்டுக் கேட்கப்படுகிறது. டிரைமேனின் பெண் சிநேகிதியான டிரிஸ்டா மரியா ஒரு நாடக நடிகை. அவள் மேல் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும், அமைச்சருமான ஒருவருக்கு கண். டிரைமேன் கைது செய்யப்பட்டால் மரியா தனக்கானவள் ஆவாள் என எதிர்பார்த்து டிரைமேனை முடக்க கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது. வீஸ்லர் இந்த காரணத்தை அறிகிற போது கண்காணிப்பை அவர் அலட்சியமாகவே எடுத்துக் கொள்கிறார்.

டிரைமேன் கலகக்காரர் இல்லையென்றாலும், கட்சியை விமர்சிப்பவர்கள் கையாளப்படும் விதம் பற்றி மாற்று கருத்து கொண்டவர். அதை வெளிப்படுத்தி விடுபவர் கூட. ஜெர்ஸ்கா எனும் இயக்குனர் ஒருவர் கண்காணிப்பு பட்டியலில் இருப்பதை அறிந்து தனது கருத்துக்களைத் தெரிவிக்கிறார். டிரைமேனின் பிறந்த நாளுக்கு வந்து பரிசளிக்கும் ஜெர்ஸ்கா பின்னொரு நாளில் தற்கொலை செய்து கொள்கிறார். மேற்கு ஜெர்மனியைச் சார்ந்த ஒரு பத்திரிக்கையில் டிரைமேன் 1970க்குப் பின்னால் கிழக்கு ஜெர்மனியில் தற்கொலை விகிதம் அதிகரித்திருப்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவது கண்காணிக்கப்படுகிறது. (இப்படம் 1984க்கு பிறகு தளம் கொண்டிருக்கிறது) அதை எழுதியவனின் டைப்ரைட்டரின்மூலம் எது என அலசப்படுகிறது. டிரைமேன் பயன்படுத்தும் டைப்ரைட்டரை அவர் வீட்டில் ஒளித்து வைத்து பாதுகாக்கிறார்.

வீஸ்லர் கிறிஸ்டா மரியா நாடகக் கலையில் சிறந்து விளங்குபவள், கட்சி மந்திரிக்கு பலியாகி அவள் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியமல்லை என்பதும் டிரைமேன் மீதுள்ள அபிமானமும் ஒட்டுக் கேட்பு விஷயத்தில் கட்சிக்கு சாதகமாக இருக்கும் வரையில் கண்காணிப்பு அறிக்கை தருவதில்லை. ஆனால் மரியாவின் மீது எரிச்சலடையும் மந்திரி அவளை போதைப் பொருள் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்து டிரைமேனின் நடவடிக்கைகள் குறித்து சித்ரவதை செய்கிறார். அவர் பயன்படுத்தும் டைப்ரைட்டர் எங்குள்ளது எனத் தெரிவித்து விடுகிறார். வீஸ்லர் அந்த டைப்ரட்டரை எடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் தேடும்போது இல்லாததாக்கி விடுகிறார். இது மரியாவை உறுத்த அவள் வாகனம் ஒன்றின் மீது விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள். வீஸ்லரின் மீது சந்தேகம் வந்து பதவியிறக்கம் செய்யப்படுகிறார். சோவியத்தின் புதிய செயலாளராக கார்பசேவ் நியமிக்கப்படுகிற நாளில் இது நடக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பெர்லீன் சுவர் தகர்ப்படுவது இன்னொரு செய்தியாகிறது.

ஸ்டஸி ஆய்வக அலுவலகத்தில் டிரைமேன் தன் மீது கண்காணிப்பு நிகழ்த்தப்பட்ட விபரங்களை அறிந்து கொண்டு வீஸ்லர் டைப்ரைட்டரை மறைத்தும், கண்காணிப்பு விடயங்கள் சரியாக கட்சிக்குத் தராமல் தன்னைக் காப்பாற்றியிருப்பதை உணர்கிறார். வீஸ்லரை தேடுகிறார். இரண்டாண்டுகள் கழித்து டிரைமேன் "செனட்டா பார் ஏ குட் மேன்" எனும் நாவலை வீஸ்லருக்கு சமர்பித்து வெளியிடுகிறார். அதை வீஸ்லர் பார்க்க நேரிடுகிறது.

வீஸ்லர் எழுத்தாளர்கள் கலைஞர்களை கண்காணித்ததில் அவருள் ஏற்படும் மாற்றமோ, எதிர் உணர்வோ வெளிப்படாமல் இருந்தாலும் அவர்களுக்கு எதிரானவராக உருவாவதில்லை. இந்த தார்மீக ஆதரவு எல்லா காலங்களிலும் எல்லா தரப்பு களிலிருந்தும் எழுத்தாளர்கள் பெற்றிருக்கிறார்கள். சமீபத்திய ரோமன் பொலன்ஸ்கியின் "பியானிஸ்ட்" படத்தில் போலீஷ் யூத இசைக்கலைஞன் ஒருவன் மீதான ஜெர்மானிய அதிகாரியின் பரிவை இப்படித்தான் எடுத்துக் கொள்ள முடிகிறது.

இப்படத்தின் காட்சியன்றில் டிரைமேன் பித்தோவானின் இசையைப்பற்றிச் சொல்கிறான்: "பித்தோவனின் இந்த இசையை முழுக்கக் கேட்டுக் கொண்டிருந்தால் நான் புரட்சியை நடத்தி முடிக்க மாட்டேன் என்று லெனின் சொல்லியிருக்கிறார்" இந்த இசையின் தாக்கம் வீஸ்லரை பெருமளவில் பாதித்திருக்க வேண்டும். எழுத்தாளர்களும் கலைஞர்களும் சமூக ஆன்மாவின் அடித்தளங்கள் என்பதையும் புரிந்திருக்க வேண்டும். வீஸ்லரிடம் ஒரு சிறு பையன் லிப்ட்டின் ஒரு நிமிட பயணத்தில் கேட்கும் கேள்வியும் அவரை வெகுவாக சிந்தனைகளுக்குள் செலுத்தியிருக்க வேண்டும்: "நீங்கள் ஸ்டஸி ஆளா. ஸ்டஸி ஆட்கள் சாதாரனவர்களை சித்ரவதை செய்வார்களா.." வீஸ்லர் பதில் சொல்ல இயலவில்லை. அந்த பதிலைத் தான் மரியாவின் மீதுள்ள இரக்கமாக்குகிறார்.

அவள் தனது மேம்பட்டக் கலையைக் காப்பாற்றிக் கொள்ள கட்சிக்காரர் ஒருவருக்கு பலியாகத் தேவையில்லை என்பதும் இப்படித்தான் இருக்க வேண்டும். டிரைமேனைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. டிரைமேனின் ஒரு நாவல் அவருக்கு சமர்ப்பிக்கப்படும் அளவு அவர் தன்னை உயர்த்திக் கொள்வது கட்சி, உத்யோகம், தனிமனித இழப்பு இவற்றையெல்லாம் மீறி நிகழ்வது தான். இதை எதிர்பார்த்து அவர் செய்ததில்லை. ஒடுக்கப்படும் நிலைகளில் சுதந்திரத்தை நாடும் தனிமனிதர்களின் விருப்பங்களின் குறியீடாக வீஸ்லர் தென்படுகிறார். தார்மீக ஊழலும் கறைபடிதலும் மீறி சிலர் நிற்க முடிகிறது. ஸ்பீல்பர்க்கின் "ஸ்சிண்ட்டலர்ஸ் லிஸ்ட்"டில் இடம் பெறும் மனிதனும் இவ்வகைச் சார்ந்தவன் தான். இவர்கள் கண்காணிப்பு அரசியலுக்கு எதிரானக் கலகக்காரர்களாகிறார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com