Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
டிசம்பர் 2008
மீன் தொட்டி
சத்யானந்தன்

‘உனக்கு காற்பந்தாட்டத்தில் ஆர்வமில்லையா?’ என்றான் ரமேஷ் ஆங்கிலத்தில்.

காரை ஓட்டியபடியே அவ்வப்போது தலைக்கு மேலே திரையில் ஓடும் யூரோ கப் ஆட்டத்தை அவன் அவதானித்து வந்த போதும் நான் வெளியே பார்த்தபடி இருந்ததே கேள்விக்குக் காரணம். ‘உன்னளவு ஆர்வமில்லை’ என்றேன்.

‘நான் கல்லூரியில் நான்கு வருடங்களும் விளையாடி பெயர் பெற்றேன். ரமேஷ் அகர்வால் பெயர் இல்லாத குழு இருந்ததேயில்லை’

அலுவலகத்தில் என்னைத் தவிர மற்ற எல்லோருமே அவனது அளப்புகளைப் புறக்கணிப்பார்கள். நானும் அவனும் ஒரே நாளில் வேலைக்கு சேர்ந்தோம். நான்கு சக்கர வாகனத்தை மாற்றி மாற்றி உபயோகிக்கும் எண்ணம் உதித்தது அவனுக்கு.

‘எங்கே போகவேண்டுமென்றாய், கஸ்தூரி நகரா?’

‘இல்லை சாஸ்திரி நகர்’

‘பழைய மகாபலிபுரம் சாலையில் இப்போது வாகனங்கள் மிகுந்துவிட்டன. இந்த ஒரு வருடத்திற்குள் நானே காண்கிறேன்’

பல தருணங்களில் நான் என்னுடைய நான்கு சக்கரத்தை எடுத்து வருவதே நல்லது என நினைத்திருக்கிறேன். மது அருந்தியபின் அவனுக்கு பெற்றோரை எதிர்கொள்ளும் அவசியமில்லை. எதிர்மாறாக அதனாலேயே இரவு வெகுநேரம் கழித்தே நான் செல்ல நேருகிறது. இன்று நான் முடிக்க வேண்டிய வேலை அவனுக்குப் பிடித்திருக்க வாய்ப்பில்லை.

‘நேராகவா? இல்லை இடது புறமா?’ என்றான். திருவான்மியூர் நாற்சந்தியில் வலது திருப்பம் தடை செய்யப்பட்டது. என் சைகையை ஒட்டி வண்டி நகர்ந்தது. சாஸ்திரி நகரில் அந்த குடியிருப்பு ஐந்தாவது குறுக்குத் தெருவா? ஆறாவதா? என் சட்டைப் பையில் துழாவி குறித்து வைத்திருந்த சீட்டை எடுத்தேன். வண்டியை ஓரமாக நிறுத்தி மொபைலில் யாரோடோ பேச ஆரம்பித்து விட்டான்.

சற்றே இருட்டியிருந்தது. நடந்து சென்று கைகாட்டியில் அது ஆறாவது குறுக்குத் தெருதான் என உறுதி செய்து கொண்டேன். கையசைத்து விடை சொல்ல எண்ணினால் அவன் என் பக்கம் திரும்பாமலேயே பேசிக்கொண்டிருந்தான்.

ஒரு இடத்துக்கு வேறு ஒருவர் நன்கு வழி தெரிந்தவருடன் முதல் முறை வந்திருந்தால் மறுபடி அங்கே வரும்போது தடுமாற வேண்டி வருகிறது. நான் தெருவின் இம்முனையில் அந்தக் குடியிருப்பைத் தேட வேண்டுமா அடுத்த முனையிலா? ரமேஷ் அடித்த ஹாரன் சத்தம் என்னை ஈர்த்தது. அருகில் வா என கையசைத்தான். ‘வண்டியில் ஏறு. உன்னை இறக்கிவிடும் இடத்தைப் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு உள்ளாடை வாங்க இந்த அளவு நேரம் தேவை. நான் வாங்கிவிட்டு உன்னை மொபைலில் அழைக்கிறேன்’

நான் மறுபடி அமர்ந்து இருமருங்கும் நோட்டம் விட்டபடி இருந்தேன். மஞ்சள் நிற இரண்டு மாடிக் கட்டடம். கண்ணில் பட்டுவிட்டது. ‘இதன் வாயிலில் நான் இறங்கிக் கொள்கிறேன்’

ரமேஷ் அந்தக் குடியிருப்பின் வாயிலைத் தாண்டி நிற்பதற்குள் அதிலிருந்து வெளியே வந்த லாரி நான் வந்த காரின் பின்பக்கத்தை உரசி பேரிரைச்சலுடன் நின்றது. கார் கதவைத் திறந்து இறங்கி அதை அறைந்து சார்த்திவிட்டு காரின் பின்பக்கம் ஓடினான் ரமேஷ். நானும் பரபரப்புடன் பின் தொடர்ந்தேன். காரின் பின்பகுதியில் பெரிய கீறல் விழுந்திருந்தது. லாரியின் டிரைவர் அருகிலுள்ள கதவை ஓங்கிக் குத்தியபடி ஆங்கிலத்தில் ‘இறங்கு கீழே’ எனக் கத்தினான் ரமேஷ்.

‘டேய் இன்னா? நான் ஹெட் லைட் சிக்னல் குடுத்துக்கீனு தானே வாறேன். அவ்ளோ அவசரமா ஓட்டி உசுரோட வர்றியே. அத்தே பெர்சு’ என டிரைவர் கத்தினான்.

ஐம்பது வயது மதிக்கத்தக்க சீருடை அணிந்த காவலாளி சட்டென ரமேஷின் தோளைத் திருப்பி ஹிந்தியில் ‘நகரு, லாரியைப் போகவிடு’ என்றார். அவர் கையை ஓங்கித் தள்ளிய ரமேஷ் அவருடைய சட்டையைப் பிடித்து ‘இந்தக் காரின் விலை என்ன தெரியுமா உனக்கு?’ என்று கத்தினான்.

‘நாயே மிலிட்டரிக்காரன் சட்டையையா பிடிக்கறே. உங்க அக்காலிலி’ ஹிந்தியில் அவர் பதிலுக்குக் கத்தினார்.

நான் சுதாரித்துக்கொண்டு அவனுடைய கையைப் பிடித்து இழுத்தேன். அவன் என்னை ஒதுக்கிவிட்டு லாரியின் முன்பு போய் நின்றான். அதன் வெளிச்சம் அவன் ஆக்ரோசத்தை அதிகப்படுத்திக் காட்டுவது போல இருந்தது. ‘வாட்ச்மேன்’ அவனைப் பிடித்துத் தள்ளிய வேகத்தில் அவன் காரின் மீது இடித்து சரிந்து விழுந்தான். லாரி முன் நகர்ந்து திரும்பியது. ஹிந்தியில் பல வசவுகளுடன் ரமேஷ் எழுந்தபோது கத்தியை உருவி எச்சரிக்கை செய்யும் விதமாய் அசைத்தார் காவலாளி. இரண்டு மூன்று பேர் ரமேஷை இழுத்தனர். நான் கார் கதவைத் திறந்து ‘தயவுசெய்து நீ கிளம்பு’ என்றேன். கிட்டத்தட்ட அவர்கள் அவனை உள்ளே தள்ளினர். வண்டியைக் கிளப்பி சற்று அதிக வேகத்துடன் அவன் ஓட்டிச் சென்றான்.

இப்போது ஒரு கும்பல் அவரைச் சூழ்ந்திருந்தது. ராணுவ வீரன் ரத்தம் பார்க்காத கத்தியை உறையில் வைப்பது குறித்து அவர் வருந்திப் பேசிக் கொண்டிருந்தார். அந்தக் குடியிருப்பில் சிலர் ஜன்னல் வழியேயும், சிலர் பால்கனியிலிருந்தும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். நான் செல்ல வேண்டிய இடம் முதல் மாடியில் இருந்தது. மெதுவே உள்ளே நகர்ந்தேன். என் மனம் சற்றே பதட்டம் அடைந்திருந்தது. ரமேஷ் இப்படி நடந்து கொள்வது முதல் தடவை அல்ல என்பதால்.

F2 என கதவு எண்ணைச் சரிபார்த்து சாவியைப் போட்டுத் திருப்பினேன். ‘மன்னிக்கவும்’ நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஒரு பெண்ணின் குரல். ஹவுஸ் கோட் அணிந்திருந்தார். ‘நேற்று என் தொலைபேசி அழைப்பை ஏற்றது நீங்களா?’

‘ஆமாம்’

‘ஏன் இடையிலேயே பேச்சை முறித்தீர்கள்?’

‘நான் ஒரு அவசரப் பணியிலிருந்தேன். அதான் நீங்கள் உடனடி வரச் சொன்னதைப் புரிந்துகொண்டு இன்றே வந்து விட்டேன். என்ன பிரச்சனை?’

‘நீங்களே கதவைத் திறந்து பாருங்கள்’ என அவர் தன் வீட்டுக் கதவை அறைந்து மூடிக்கொண்டார். கதவைத் திறந்த உடனேயே கடுமையான துர்நாற்றம் தாக்கியது. செத்த மீன் வாடை. ஒரு நிமிடம் வெளியே வந்து சுதாரித்து மீண்டும் உள்ளே நுழைந்தேன். மின் வெளிச்சத்தில் ஹால், சமையலறை, படுக்கையறை, குளியலறை எல்லா இடத்தையும் பார்த்தேன். பால்கனியில் இருந்தது அந்த மீன் தொட்டி. பல வண்ண மீன்கள் செத்து மிதந்தன. 3 X 3 X 3 என்னும் அளவில் பால்கனியில் பாதி இடத்தை அது அடைத்துக் கொண்டிருந்தது.

பக்கத்து வீட்டு பால்கனியில் நிழலாடியது. அதே அம்மாள். ‘உடனடியாக இதை எடுத்துச் செல்லுங்கள். மூன்று நாளாகத் தாங்க முடியவில்லை’. மறைந்தார். பால்கனிக்கு கிரில் இருந்தது. இல்லையேல் பல பறவைகள் இந்த மீன்களைத் தேடி வந்திருக்கும். தொட்டியை அசைத்துப் பார்த்தேன். மிகவும் கனமாக இருந்தது. வேறு ஒரு ஆளின் துணை வேண்டும். காவற்காரரிடம் சொல்லாமல் நான் உள்ளே வந்ததே தவறு. இதில் மற்றொருவனை அழைத்து வந்தால்? முதலில் காவற்காரரை சந்தித்து வந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும்.

தானே பூட்டிக்கொள்ளும் கதவை அறைந்து சார்த்தி விட்டு கீழே விரைந்தேன். என் அறிமுகம் முடியும் முன்பே ‘ஒரு வயசானவன், மிலிட்டரிக்காரன்னு கூட பாக்காம என்னல்லாம் பேசிட்டான். நாயி’ அவர் கண்கள் கலங்கின. நான் நிறையவே மன்னிப்புக் கேட்டேன். அவர் உதவினால் நாங்கள் இருவரும் தொட்டியை நகர்த்தலாம் என்றேன். கொஞ்சம் இருக்கும்படி சைகை காட்டிவிட்டு ஐந்து நிமிடத்தில் ஒரு ஆளுடன் வந்தார். மூவரும் மேலே சென்றோம். மீன் தொட்டி வீட்டு சொந்தக்காரர் மிகவும் பண்பான இளைஞர். அவர் மனைவி பேறுக்காகச் சென்றிருக்கும்போது அவசரமாய் காலி செய்து வெளிநாடு சென்ற சர்மா ஏனோ இதை மறந்துவிட்டார். சர்மாவோடு ரமேஷை ஒப்பிட்டு ரமேஷை சபித்தார் காவற்காரர். மீன் தொட்டியோடு நாங்கள் வெளியே வந்தபோது ‘ஒரு நிமிஷம்’ என்று வேறு ஒரு வீட்டுக் கதவிலிருந்து வெளியே வந்த பெரியவர், அரை டவுசர், டீ சர்ட். ‘என் மகளுக்கு இந்த வீடு தேவை. கிடைக்குமா?’

‘சர்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன்’

‘உங்கள் விசிட்டிங் கார்டு கிடைக்குமா?’ கொடுத்தேன்.

அதற்குள் மீன் தொட்டியுடன் ஏனைய இருவரும் கீழே போயிருந்தார்கள். பிரதான வாயிலருகே வந்தேன். ‘சர்மா தொட்டியை என்ன செய்யச் சொன்னார்?’ என்றார் காவற்காரர்.

‘யாருக்காவது கொடுத்து விடுங்கள். உங்கள் உதவிக்கு நன்றி’ என்று கூறிவிட்டு ஒரு நூறு ரூபாய் தாளை நீட்டினேன். வாங்கிக் கொண்டார். ‘பொறுங்கள் ஆட்டோவை அழைத்து வருகிறேன்’ என்று விரைந்தார். இரவு உணவு வரை ஏனோ ரமேஷை கூப்பிடத் தோன்றவில்லை. ‘நாளைக்கி நீ நம்ம கார்லதானே போறே’ என்று என் அப்பா கேட்டபோது ரமேஷின் நினைவு வந்தது.

அவன் குரலில் சற்றே போதை. ‘பயந்துவிட்டாயா? மட்டமான அந்த ஆட்களுக்கு இதெல்லாம் போதாது.’ தெருவில் சண்டை போடுமளவுக்கு இது ஒரு பெரிய விஷயமல்ல என்று நான் சொன்னதை அவன் ஏற்கவில்லை. ‘அதை விடு. நீ யார் வீட்டுக்குப் போனாய்?’ என்றான். விவரங்களைச் சொன்னேன்.

‘எந்த சர்மா?’ என்றான்.

‘அரவிந்த சர்மா’

‘உனக்கும் சிங்கபூரில் வேலை கிடைக்கும்படி உன் விபரங்களை நல்ல ஆங்கிலத்தில் ரெஸ்யூமேவாக எழுதித் தருவதாக உன்னை மயக்கினானா?’

‘ஏன் நான் இதை ஒரு உதவியாகச் செய்யமாட்டேனா?’

‘அவன் அவ்வாறு சொன்னானா இல்லையா?’

‘வேறு விஷயம் பேசுவோம்’ என்று பேச்சை திசை திருப்பினேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com