Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
டிசம்பர் 2008
எழுத்தின் திசைகள்
எம். முகுந்தன்

தமிழில் : தி.சு. சதாசிவம்

எழுத்தாளர்களின் கேள்விகள் ஒருபோதும் முடிவடையாதவை. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எழுத்தின் பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து நான் நிறைய சிந்தித்துக் கொண்டிருந்தேன். மனச்சோர்வும் குழப்பங்களும் கொண்டவனாகயிருந்தேன், பலரோடு வாத விதாத சர்ச்சைகள் செய்தும், சண்டையிட்டு முரண்படவும் செய்தேன். கல்லூரி யூனியன் துவக்க விழாக்களிலும் மாணவர்களுக்கான இலக்கியப் பயிற்சிப் பட்டறைகளிலும் பரிசுகள் அளிக்கும் சடங்குகளிலும் நூல் வெளியீட்டு மேடைகளிலும் அவை போன்ற மற்ற எழுத்தாளர் கூட்டங்களிலும் என் சொந்தக் கருத்துக்களை இலக்கிய ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தேன். பேசியும் சர்ச்சைகள் செய்தும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டும் மனம் நிறைவடையாமல் கலையையும் இலக்கியத்தையும் குறித்து நவீனத்துவம் என்றால் என்ன? என்று ஒரு சிறிய புத்தகமும் எழுதினேன். (என்.இ. பாலராமும் பி.ஸி.ஸ்ரீஜனும் அதைத் தக்கமுறையில் திறனாய்வு செய்திருந்தனர்)

இவையெல்லாம் எதற்காக? ஒவ்வொருவரையும் நன்றாகப் புரிந்து கொள்ளத்தான். அதனால் மற்றவர்களுக்கு ஏதேனும் பயன் ஏற்பட்டால் மகிழ்ச்சியடையவும் தான். அப்படியிருக்கும்போது நவீனத்துவத்திற்கு முன் ஒரு திரை விரிக்கப்பட்டது. கபட நல்லொழுக்கவாதிகள் மகிழ்ந்தனர். அவர்களைத் தவிர வேறு எவரும் ஒருபோதும் விரும்பத்தகாததாயிருந்தது அது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வரலாற்றை அதன் கடமையை நிறைவேற்றாமலிருக்கச் செய்ய முடியுமா? அதன் காரணமாக எருமையை அவிழ்த்துவிட்டு காலனை அதன்மேல் அமரவைத்து நவீனத்துவத்தைக் கொல்வதற்கு அனுப்பப்பட்டது.

அப்போது சிறிதும் நவீனத்துவமில்லாதததும் நூறு விழுக்காடு சமூகப்பொறுப்பும் அக்கறையும் கொண்டதுமான ‘தில்லி 81’ என்னும் ஒரு கதையை எழுதியிருந்தேன். அதனால் காலனின் சுருக்குக் கயிறு என் கழுத்தில் விழாமல் நான் தப்பித்தேன். நான் காலனைத் தோல்வியுறச் செய்தேன். நவீனத்துவத்தை அழிக்கவந்த காலனின் கையிலிருந்த சுருக்கிட்ட கயிற்றிலிருந்து பலரால் தப்பிக்க முடியவில்லை. என்னுடைய இருப்பைக் காப்பாற்றியது தில்லி 81 என்னும் அக்கதைதான். இல்லாவிட்டால் நவீனத்துவத்தோடு சேர்ந்து நானும் கழுத்தில் கயிறு சுருக்கு வீழ்ந்து மூச்சுத் திணறி இறந்து போயிருப்பேன்.

இந்த அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்ன? அவரவர் தங்களை மறந்து சமூகத்தின் அவலங்களை, துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டால் எப்படிப்பட்ட காலனையும் வீழ்த்தி உயிர்வாழ எழுத்தாளர்களால் இயலுமென்பதுதானே? ஆமாம், அப்படித்தான். சமூகத்தின் அவலங்கள், துன்ப துயரங்களை தம் சொந்த அவலங்களாகவும் துன்ப துயரங்களாகவும் மாற்றியமைக்கும்போது எழுத்தாளன் மரணத்தை வென்றவனாகிறான்.

எழுத்தில் ஆர்வமுள்ள, தெளிவாகவுள்ள, வளரும் புதிய தலைமுறைக்கு எதாவதொரு செய்தியை தரவேண்டுமென்று என்னைக் கேட்டால் நான் சொல்லப்போவது அதுவாகத்தான் இருக்கும். ஆமாம், அப்படித்தான் படிப்படியாக நவீனத்துவம் முழுவதுமாக மறைந்து போனது, எழுத்துக்களின் வீரியமும், ஆற்றல்களும், அக்கறைகளும் குளிர்ந்து போயின. பேனா முனையில் கனல் ஆறிப்போனது. எழுத்தாளர்களின் எதிர்ப்பாற்றல் காணாமல் போயிற்று.

நவீனத்துவத்தின் மரணத்தோடு எல்லாச் சிக்கல்களும் தீர்ந்து விட்டன என்றுதான் நான் எண்ணினேன். இனிமேலாவது எங்கேயாவது சிறிது அமைதியாக அமர்ந்து எந்தவிதத் தொல்லையும் துயரமும் இல்லாமல் கதையும் நாவலும், வேண்டும்பொழுது சில கட்டுரைகளும் எழுதி எஞ்சிய காலத்தை அமைதியாகக் கழிக்கவேண்டுமென்று எண்ணினேன். கருத்து மோதல்களையும் வாதவிவாதங்களை யும் கூடுமானவரையில் தவிர்த்து வந்தேன். ஆனால் எழுத்தாளன் அப்படி அமைதியாக இருந்துவிட முடியுமா? முடியாது என்று விரைவிலேயே புரிந்து கொண்டேன். நவீனத்துவம் உயிர்ப்போடு இருந்தாலும் அழிந்தாலும் எழுத்தாளர்களுக்கு மனக்கவலை தீராதுதான்.

இளைய தலைமுறை எழுத்தாளர்களுடன் பேசும்போது எனக்கு ஒன்று புரிந்தது. நவீனத்துவத்தின் மறைவோடு எழுதுவதின் பிரச்னைகள் முடிந்துபோய்விடவில்லை என்று. அதற்கு எதிர்மாறாகத்தான் எல்லாமே நிகழ்ந்திருக்கின்றன. எழுத்தாளர்களுடையதும் எழுத்தினுடையதுமான பிரச்சனை கள் அதிகக் கடுமையாகவும் சிக்கலாகவும் மாறியிருக்கின்றன. விடியற்காலையில் ஜன்னல் வழியாக கடந்து வரும் இளம் காற்றை அனுபவித்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்து இடையிடையே சூடான தேநீர் உறிஞ்சிக் குடித்துக்கொண்டு அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும், மனச் சாந்தியோடும் கதையும் நாவலும் எழுதலாமென்று இனி யாரும் கனவு காண வேண்டாம்.

இல்லை, எழுத்தாளர்களான நமக்கு மகிழ்ச்சியும் அமைதியும் விதிக்கப்படவில்லை. மகிழ்ச்சி வேண்டுமெனில் எழுதுவதை நிறுத்திவிட்டு பேனாவை குப்பைக்கூடையில் எறிந்துவிட்டு சந்தோஷ் மாதவனாக வேண்டும். தாடியும் முடியும் வளர்த்து ஈஸ்வரன் மட்டும் சிரிக்கக் கூடிய வரையில் மனோகரமாகவும் சந்தோஷத்தோடும் சிரித்து இரவில் பங்களாவில் அமர்ந்து விஸ்கி குடித்தும் நீலப்படங்களைப் பாத்துக்கொண்டும் வாழ்க்கையை அனுபவியுங்கள். எதற்காக எழுத்தாளனாகப் பின்நவீனத்துவம், சமூகப்பொறுப்பு, பெண்ணியம், தலித்தியம் முதலான பொல்லாப்புகளின் பின்சென்று தொல்லைகளை அனுபவிக்க வேண்டும்? சிறையும் காவல்துறையும் சந்தோஷ்மாதவன் போன்றவர்களுக்காக காத்திருக்கின்றன என்னும் தவறான எண்ணம் எதுவும் வேண்டாம். விஸ்கியும் நீலப்படமும் எவ்வளவு வேண்டுமானாலும் நம்முடைய சிறைகளிலும் கிடைக்கும்; யாருக்குத்தான் இது தெரியாது.

இலக்கியம் ஒரு பொல்லாத தொல்லை தரக்கூடியது தான். சிரமங்களும் வேதனைகளும் தான். இருந்தாலும் நாம் பேனாவை கைவிட்டு விடவில்லை. நாலு நீலப்படங்களைவிட ஆயிரம் குப்பி ஸ்காட்ச் விஸ்கியைவிட விலைமதிப்புள்ளது எழுத்தாளனின் கையிலுள்ள இரண்டு ரூபாய் விலையுள்ள பால்பாயிண்ட் பேனா என்று நமக்குத் தெரியும்; புரிந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் நாம் எழுத்தாளனாக இருப்பதும் மதிக்கப்படுவதும். எழுத்து பல்வேறு பிரச்னைகளை நம்முன் வைக்கின்றது. அதில் மிகவும் முதன்மையானது. எழுத்தாளனின் பார்வை செல்லும் போக்கு அல்லது திசை பற்றிய அறிவு.

இலக்கியப் பயிற்சிப் பட்டறைகளில் மட்டுமல்ல, கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் நான் இளைய தலைமுறை இலக்கியப்படைப்பாளிகளுடன் கலந்துரையாடியிருக்கின்றேன். அவர்களில் பெரும்பகுதியினர் இப்போதுதான் எழுதத் துவங்கியுள்ளனர். அரிதாக சிலருடைய படைப்புகள் மட்டும் தான் நூலாக வெளிவந்துள்ளன. நூலாக வெளிவரவில்லையென்றாலும் அவர்கள் நாளைய எழுத்தாளர்கள். நாளைய வார இதழ்களின் பொறுப்பாசிரியர்களும் நூல் வெளியீட்டாளர்களும் இவர்களின் கதைகளையும் நாவல்களையும் விரும்பிக்கேட்டு இவர்களின் பின்னால் வருவார்கள். பரிசுகளுக்காகவும் பணத்துக்காகவும் மோகம் கொள்ளவைக்கும் கதைகளில் இவர்களை முடக்கிப் போட முயல்வார்கள்.

எதைப்பற்றியும் சிந்திக்காமலிருங்கள். பயிற்சி முகாம்களிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பிள்ளைகளிடமும் முதுமையின் வாயிலில் நிற்கின்ற நான் கூறுகின்றேன், வார இதழ்களைக் குறித்தோ பதிப்பகங்களைப் பற்றியோ பணத்தைப் பற்றியோ, புகழ்பெறுவது பற்றியோ எதுவும் சிந்திக்காமலிருங்கள். சிந்திக்க வேண்டியது எழுத்தைப் பற்றி மட்டும் தான். படைப்புகளைப் பற்றி மட்டும் தான், சொற்களைப் பற்றி மட்டும் தான். கவனிக்க வேண்டியதோ? கவனிக்க வேண்டியது எழுத்தில், சொற்களில் தீ அணைந்து போகாமலிருப்பது பற்றி, ஒவ்வொரு சொல்லும் கனல்களாக எரிவதைப் பற்றி.

பிறகு, மேலே கூறியிருப்பதை நினைவு கொள்ளுங்கள்... மற்றவர்களின் துன்ப துயரங்களைச் சொந்தமாக அனுபவித்து உணருங்கள். சொந்த மனதிற்குள் கனிவும் கருணையும் கொண்டிருங்கள். சுரண்டப்படும் மக்களுடனும் நிந்திக்கப்படுபவர்களுடனும் சேர்ந்து நில்லுங்கள்... இத்தனையும் செய்தால் போதும்... அப்படியில்லாமல் எழுத்தாளன் என்ற நிலையில் அரும்பெரும் அற்புதங்களை செய்துகாட்ட முடியும் என்று கற்பனை கனவுகளை மனதிற்குள் காண வேண்டாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com