Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
டிசம்பர் 2008
மயூரா ரத்தினசாமி கவிதைகள்

காற்றின் அடையாளம்

காற்று பேசும், இருக்கும், பேசாமலும் இருக்கும்
சுழலும், தவழும், சும்மா கிடக்கும்
சுழிக்கும், கவிழ்க்கும், சுற்றித் திரியும்
மூச்சு வாங்கும், மூச்சிரைக்கும்
கொல்லும், தவிக்கும்

இலைகள் அசையும்போது மட்டுமே உங்களால்
காற்றை உணர்ந்துகொள்ள முடியுமெனில்
என்னையும் உங்களால்
அடையாளம் கண்டுகொள்ள
முடியாமல் போகலாம்.

சொல்

நாளங்களில் அடைபட்ட இரத்தம்
சதா ஓடிக்கொண்டேயிருக்கிறது
வெளியேறும் வழி நோக்கி.
பீய்ச்சியடித்த இரத்தம்
பாறையில் உறைந்து கிடக்கிறது
காக்கைகள் கொத்த
நாய் நக்க.

குருதி குடித்துச் சிவந்தவன்

பகலின் குருதியைக் குடித்த களிப்பில்
சிவந்துவிட்ட தன்னுடலை
அவசர அவசரமாக மேற்கில்
மறைத்துப் பின் அதிகாலையில்
செம்பிழம்பாய் எழுந்தவனைப் பார்த்து
கைகூப்பித் தொழுகிறவர்களுக்கு
சிவந்த தன்னுடல் வெளிப்பட்டுவிடக்கூடாதென்ற
பதைபதைப்பில்
இக்காலையிலேயே உக்கிரம் கூட்டி
கண்களை கூசச்செய்கிறான்.

இருப்பு

காய்ந்து உதிர்ந்த பூவிதழில்
சுற்றிக்கிடக்கும் நீள ஒற்றை வெளிர்முடி.
கூந்தல் வேறொரு பூச்சூடவும்
செடி வேறொரு பூப்பூக்கவும்
முனைகிற பொழுதில்.

ஹரணி

தினமும் ரயில் பயணம்
தஞ்சையிலிருந்து மயிலாடுதுறைக்கும்
மாலையில் மயிலாடுதுறையிலிருந்து
தஞ்சைக்கும் என வாய்த்திருக்கிறது

ஒவ்வொரு பயணியின் முகத்தையும்
பார்க்கையில் ஒவ்வொரு பயணமும்
சங்கடப்படுத்துகிறது...

குடியில் தகப்பன் இறந்துபோக
படிப்பை பாதியில் விட்டுவிட்டு
கவரிங் வியாபாரம் பார்க்கும் அந்த
பத்தாவது வரை படித்த பையன்...

பயணம் முழுக்க
அசைத்த வாயும் குடித்த தண்ணீருமாய்
இருக்கும் குடும்பங்கள்...

அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்கு
ஏறியவுடன் இடத்திற்காக சண்டையிடும்
அந்த விஏஓ...

அழுக்கு உடலோடும் உடைமையோடும்
காசற்ற வறுமைப் பயணத்தில் பயணிக்கும்
பெண், ஆண், கிழவி, கிழவன்...

அரட்டையும் பாட்டுமாய் அலுவலக அலுப்பை
மறக்கும் நண்பர்கள்... விரித்த புத்தகத்தில்
ஆழ்ந்திருக்கும் நரை துளிர்த்திருக்கிற
சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் பெண்கள்...

எல்லோர் வாழ்விலும் ஓடிக்கொண்டிருக்கிறது
யாருக்கும் உடன்படாத ஒரு பயணம்...

எல்லோரையும் உதிர்த்துவிட்ட ரயிலில்
ஏறி வருகையில் வெறுமையாய் கிடக்கும்
பெட்டிக்குள் உதிர்ந்து கிடக்கும் உணவுத்
துணுக்குகளுக்காக அலைந்துகொண்டிருக்கும்
கரப்புக் குஞ்சுகள் காலடி அரவத்திற்கு
ஓடி ஒளிதலும் மிதிபட்டுச் சாதலுமான வருத்தம்
ஒவ்வொரு நாளும் மிஞ்சுகிறது...
பயணத்தைத் தாண்டி மனசுக்குள்...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com