Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
டிசம்பர் 2008
மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்
தமிழில் : ரா. பாலகிருஷ்ணன்

ஒரு இல்லத்தை நோக்கி எமது பயணம்

எங்கள் தசைகளலிருந்து உருவாகாத ஒரு இல்லம்
அங்கு வளரும் செஸ்ட்நட் மரங்கள் எமது எலும்பால் ஆனதல்ல
குன்றுகளின் பாசுரங்களில் வடிவமைந்துள்ள ஆடுகளைப் போன்றனவல்ல
அங்கு காணப்படும் பாறைகள்.
கூழாங்கற்களின் விழிகளோ மல்லிகைகள் அல்ல.
இவ்வித இல்லம் எம் பின் மண்டையில் காணப்படும்
வட்டொளியைத் தோற்றுவிப்பதல்ல.
புராணிகப் பெண்கள் எமைப் போற்றுவர்.
ஒரு பெருங்கடல் எமை ஆதரிக்கும்; மற்றொன்று எதிர்க்கும்.
நீரும் கோதுமையும் இருப்பில் இல்லாதபோது
நீங்கள் எமது அன்பை உண்டு கண்ணீரைப் பருகலாம்
துக்கம் வெளியிட கவிஞர்களுக்கென்று அணிந்து கொள்ள
கழுத்தைச் சுற்றியுள்ள கைக்குட்டைகள் இங்கு கிட்டும்.
பளிங்கினால் உருவான சிலைகளின் வரிசை எமது குரலுடன் சேர்ந்திசைக்கும்.
எமது ஆன்மாவைக் காலம் அழித்த அனைத்துச் சாம்பலின் தொகுப்பும்
ஒரு முது மக்கள் தாழியில்; ரோஜாக்கள் எமை ஆதரிக்கும்; மற்றொன்று எதிர்க்கும்
உமது புகழ் உமக்கு; எமது எமக்கு. எங்கள் இல்லங்களிலிருந்து
நாங்கள் காண்பதோ மாயப் பிம்பங்களையே
பெரும்புகழ் எமக்கே. ஒவ்வொரு இல்லத்தையும் நோக்கிச்
சென்ற பாதைகளினால் கிழிக்கப்பட்ட பாதங்களால்
உயர்த்திச் செல்லப்பட்ட பல்லக்கு சுமந்த அக்கால்களோ எம்முடையவை!
ஆன்மா எனப்படுவது தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும்
அல்லது இங்கே கிடந்து சாகட்டும்.


இறுதித் தொடர் வண்டி நின்றுவிட்டது

இறுதித் தொடர்வண்டி இறுதி நிறுத்தத்தில் தன் பயணத்தை
முடித்துக் கொண்டது. ரோஜாக்களை பராமரிக்க அங்கு யாருமில்லை.
சொற்களால் உருவாக்கப்பட்ட பெண்ணொருத்தியின் மேலிறங்க
எந்தப் புறாவும் அங்கு இல்லை. காலம் முடிவுற்றது. பாடப்படும்
சிந்து நுரைபோல நொடியில் காணாமற்போகின்றது.
எங்கள் தொடர் வண்டிகளை நம்பாதீர்கள். அவை அன்பாக இருப்பினும்.
நெரிசலில் யாரையும் தேடாதீர்கள். இறுதித் தொடர்வண்டி
இறுதி நிறுத்தத்தில் நின்றுவிட்டது. யாராவது நார்சிசசின்
பிரதிபலிப்பை இருளின் கண்ணாடியில் காண இயலுமா?
எனது உடல் மறுபிறப்பெடுத்த இறுதி நிகழ்வை நான்
எதில் எழுதிச் செல்ல இயலும்.
இறுதி எனப்படுவது இறுதியடையத் தகுந்ததே. இந்த ஒன்றுதான்
இறுதியாவதென்று ஏதும் உள்ளதா?
எனதுடலிலுள்ள எனது தாய்நாட்டிலிருந்து என்னை
நான் எவ்வாறு அந்நியமாக்கிக் கொள்வேன்?
எமது தொடர் வண்டிகளில் நம்பிக்கை கொள்ளாதீர்;
அவற்றின் மீது அன்பு செலுத்துக; இறுதியான புறா
பறந்து சென்றுவிட்டது.
இறுதித் தொடர்வண்டி இறுதி நிறுத்தத்தில் நின்றுவிட்டது.
யாரும் அதில் பயணம் செய்ய அங்கு இல்லை.

(பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் மூன்று மாதங்களுக்கு முன் மறைந்தார். அவரது நினைவாகத் தரப்படும் கவிதைகள் இவை. இவரது கவிதைகளின் முழுத்தொகுப்பும் யமுனா ராஜேந்திரன் மற்றும் பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் வெளிவர உள்ளன.)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com