Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kanavu
Kanavu
டிசம்பர் 2008
பேராசிரியர் நா. வானமாமலை ஆராய்ச்சித்தடம்
ஆய்வு நூல் : ஆசிரியர் : முனைவர் இரா. காமராசு
எஸ்.ஏ.பாலகிருஷ்ணன்

பேராசான் நா. வானமாமலை என்கிற மார்க்சீய ஆய்வாளரின் படைப்புகளை ஆய்வு செய்கிற ஒரு இளம் ஆய்வாளர் இரா. காமராசு அவர்களின் நூல் இது. முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆய்வேடு இது. முனைவர் பட்டம் பெற மேம்போக்கான பொருளை தேர்ந்தெடுப் பவர்களும் உண்டு. முனைவர் காமராசு ஆழமிக்க ஒரு ஆய்வில் கரையில் நின்று கால் நனைக்காமல் கடலில் இறங்கி நீச்சலடித்திருக்கிறார். நா.வானமாமலை நூல்களை, கட்டுரைகளை காலவரிசையில் அட்ட வணைப்படுத்தி, உள்ளடக்கங்களை பகுப்பாய்வு செய்து பல தலைப்பு களில் முறைப்படுத்தியிருக்கிறார். நா.வா வை அருமையான சித்திரமாக தீட்டியிருக்கிறார் இந்நூலில். கலாநிதி கார்த்திகேசு க. சிவத்தம்பி, தனது ஆய்வு வழிகாட்டி பேராசிரியர் பெ. மாதையன், நா.வா வின் மாணவரும் மார்க்சீய தத்துவ ஆய்வாளருமான பேராசிரியர் ந. முத்துமோகன் ஆகிய மூன்று அறிஞர்களின் முன்னுரைகள் இந்நூலின் சிறப்பை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

ஒரு மார்க்சீய ஆய்வாளரின் ஒரு பொதுவுடைமை இயக்கத் தொண்டரின் பண்பாட்டுத் தளத்திலான போராட்டத்தின் முக்கியத்துவத்தை இந்நூல் உணர்த்துகிறது. பண்பாட்டுத் தளத்தில் போராட்டக் களங்களை தமிழகத்தில் தனிமனிதராய் அடையாளம் கண்டுகொண்டவர் நா.வா. ஆனால் அவர் ஒரு இயக்கம் சார்ந்தவர். தனிமனித சாதனையாளராய் திகழ பேராசைப்பாடாமல் சக போராளிகளை தனது பின் தொடர்ச்சியாய் உருவாக்கியவர். ஆய்வுச் சங்கிலியில் கள ஆய்வில் தகவலாளியையும் கண்ணிகளாகச் சேர்த்தவர். பெரும் கல்வித்தகுதி தேவை என்ற நிபந்தனைகளைத் தகர்த்தவர்.

சங்க இலக்கியங்களைப் பேசியும் எழுதியும் தமிழரின் பழம்பெருமை மிக்க வரலாற்றை மிகைப்படுத்திய திராவிட இயக்கத்தினரின் கூற்றை மறுத்து வரலாற்று ஆய்வில் கல்வெட்டுக்கள், அகழ்வாய்வு, சுவடுகள், கள ஆய்வு, இலக்கியத்துடன் நாட்டார் வழக்காறுகளையும் இணைத்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டவர். ‘நெல்லை ஆய்வுக்குழு’ என்ற தனது மாணவர் படையையும், ‘ஆராய்ச்சி’ என்ற பத்திரிகையை ஆய்வாளர்கள் எல்லோருக்குமானது என்ற நோக்கிலும் துவக்கியவர்.

பெரியாரை, கருத்து முதல்வாத நாத்திகராக வரையறை செய்தவர். பொருள் முதல்வாதக் கோட்பாட்டை தமிழகத்தில் உலகாயதமாக பல ஆயிரமாண்டாக இருந்ததை வெளிப்படுத்தியவர். மார்க்சீய கவிஞர்களே புதுக்கவிதையை ஒதுக்கியபோது புதுக்கவிதையின் உள்ளுறை வெப்பத்தை அடையாளம் கண்டு வரவேற்றவர். நடுகல், கதைப்பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள் என நாட்டுப்புற வழக்காறுகளை தொகுத்து ஆய்ந்ததன் மூலம் நாட்டார் வழக்காற்றியலை தமிழகத்தில் உருவாக்கியவர்.

முனைவர் இரா. காமராசு நா.வா வின் ஆய்வு நெறிமுறைகளை பகுத்தாய்ந்து வரும் தலைமுறை ஆய்வாளர்களுக்கு பாதையமைத்திருக்கிறார். பேராசான் நா. வானமாமலை எனும் பெரும் கடல்பரப்பின் உள் ஆழங்களை ஆராய்வதற்கான சில புள்ளிகளை அடையாளம் காட்டி யிருக்கிறார். சமூக அக்கறையுள்ள பண்பாட்டு ஆய்வில் ஆர்வமுள்ளவர்கள் இந்நூலைப் படிப்பது அவசியம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.