Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
ஆகஸ்டு 2008
சிக்கோ - ஆவணப்படம்
சுப்ரபாரதிமணியன்

அமெரிக்கா வலிமையான தேசம். பிச்சைக்காராகள் இல்லாத தேசம். செல்வம் கொழிக்கும் பூமியில் மருத்துவ வசதிக்குக் குறைவில்லை அமெரிக்கர்கள் சுபிட்சமாக வாழ்கிறவர்கள் என்ற வழக்கமான சாமான்ய கருத்துக்கள் பல ஆண்டுகளாக தகர்ந்து கொண்டிருக்கின்றன. சென்றாண்டில் வெளிவந்திருக்கும் மைக்கேல் மூரின் ‘சிக்கோ’ என்ற ஆவணப்படம் அமெரிக்காவில் இருக்கும் மருத்துவ பாதுகாப்பு இன்சூரன்ஸ் பற்றிய உண்மை நிலையை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது. வெற்றிப்படங்களின் வசூலின் தரத்தில் இந்த ஆவணப்படம் வசூலைத் திரட்டியிருக்கும் அளவு மக்கள் அப்படத்தைப் பாத்திருக்கிறார்கள்.

‘சிக்கோ’வின் ஆரம்ப காட்சியே அதிச்சி தர வைக்கும் ஒரு படிமமாகும். முழங்காலில் இருக்கும் காயப் பிளவை ஒரு அமெரிக்க சாமானியன் எவ்வித வைத்ய முன்னேற்பாடுகளும் இல்லாமல் தைத்துக் கொள்ளும் காட்சியாகும் அது. அமெரிக்காவில் 50 மில்லியன் மக்கள் இன்சூரன்ஸ் வசதியில்லாமல் இருக்கிறாகள். அவர்களில் ஒருவன்தான் காயத்திற்கு தானே தைத்துக் கொள்கிறவன். ஆனால் 250 மில்லியன் அமெரிக்கர்கள் இன்சூரன்ஸ் பாதுகாப்பிற்குள் இருந்தாலும் அவர்களும் இதே போல்தான் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பெரும்பான்மையோர் இருப்பதை இப்படம் காட்டுகிறது. இன்சூரன்ஸ் செய்து கொண்டவர்களை அந்த நிறுவனங்கள் மருத்துவ வசதிகள் தராமல் புறக்கணிப்பதும் நிராகரிப்பதும் வெகு சாதாரணம் என்பதை இப்படம் காட்டுகிறது.

அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட சிலர் இவ்வாறு கதறுகிறார்கள். ‘நான் இந்த உலகத்தை விட்டு எனக்குப் பிரியமான எல்லாவற்றையும் விட்டு போக வேண்டியிருக்கிறது. நான் இன்சூரன்ஸ் வளையத்திற்குள் இருந்தாலும் கைவிடப்பட்டவன்’. ‘எனக்கு ஏன் இது நிகழ்ந்தது. நான் நல்லவன் எனக்கு ஏன் இந்தப் புறக்கணிப்பு. நான் சாகத்தான் வேண்டுமா’ ‘எனக்கு சாவு காத்திருக்கிறது. வறுமையால் அல்ல, உடல்நலம் பாதுகாப்பு இல்லை என்பதால்’. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சிறுசிறு காரணங்களுக்காக அவர்களுக்கு மருத்துவ வசதியை நிராகரித்து தங்களின் லாபத்திலிருந்து எவ்வகையிலும் குறைவு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற திட்டத்தில் சாவின் விளிம்பிற்குத் தள்ளும் பல கடிதங்கள் அமெரிக்கர்களை வாய்விட்டு கதற வைக்கின்றன. வாழ வாய்ப்பு தரப்படுவதில்லை, சாக துரத்தப்படுகிறார்கள். மருத்துவ தயாரிப்பு நிறுவனங்களும் லாபம் சம்பாதிக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் அமெரிக்க சுகாதாரத் திட்டத்தினை ஆக்கிரமித்திருப்பதை இப்படம் சொல்கிறது.

ஆனால் இப்படம் அதே சமயம் இன்சூரன்ஸ் பாதுகாப்புத் திட்டங்கள் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், க்யூபா போன்ற நாடுகளில் அந்த நாட்டு மக்களுக்கு வாழ்க்கைப் பாதுகாப்பைத் தருவதை விளக்கமாகவே சொல்கிறது. அமெரிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணிபுரிந்த, ஓய்வு பெற்ற ஊழியர்களின் நேர்முகங்கள் அதிச்சி தரக்கூடிய வகையில் அமைந்துள்ளன. நிறுவனத்தின் செலவைக் குறைப்பதும் ஊழியர்களுக்கு அதிகப்படியான போனசு தொகை தரவும், இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தவர்களுக்கு இவ்வகையில் மருத்துவப் பாதுகாப்பு மறுக்கப்படுவதை அவர்கள் சொல்கிறார்கள். ஒரே மாதிரியான உடல்நலப் பாதுகாப்புத் திட்டம் கம்யூனிசத்திற்கு இட்டு செல்லும் என்று அறுபதுகளில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் கருத்துக்களை மொழிந்திருக்கிறார். இன்னொரு முன்னாள் ஜனாதிபதி நிக்சன் ஒரு உரையாடலில் உடல்நல பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்படும் போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிக பணம் சம்பாதிப்பதை ஒத்துக் கொள்கிறார்.

இதன் இயக்குனர் மைக்கல் மூர் இதற்கு முன்னால் எடுத்த ‘பாரன்ஹீட் 9/11’ படம் அமெரிக்க ஆட்சியாளர்களின் சுயநலத்தையும், ஒட்டு மொத்தமான வளைகுடா நாடுகளின் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பின்னே நடந்தவற்றையும் வெளிக்காட்டிய முக்கிய படமாகும்.

கனடா, இங்கிலாந்து, கியூபா போன்ற நாடுகளின் இன்சூரன்ஸ் பாதுகாப்புத் திட்டங்கள் அந்த மக்களுக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை கொள்ளவும், வியாதிகளைப் புறந்தள்ளவும் உதவுவதை ‘சிக்கோ’ படத்தின் இரண்டாம் பகுதி சொல்கிறது. (கனடா நாட்டைச் சாந்தவர்களை உடல் நல இன்சூரன்ஸ் பாதுகாப்பிற்காக மணந்து கொள்ளும் அமெரிக்கர்களைப் பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது). பிரசவம் முடிந்து சுகமாய் குழந்தைகளுடன் வெளிவருவோர் ‘பணமா எதுவும் தரவில்லை, எல்லாவற்றையும் அரசு பாத்துக் கொள்கிறதே. இந்த மருத்துவமனையில் இருக்கும் காசாளரின் வேலை நாங்கள் வீட்டிற்கு போக பணம் தேவைப்பட்டால் டாக்ஸிக்காக பணம் தருவது’ என்கிறார்கள். பிரசவம் ஆன புது தாய்மார்கள் சமைக்க, வீட்டை சுத்தம் செய்து கொள்ள, துணி துவைக்கவென்று அரசு தனியாக ஆள் அமைத்துத் தரும் வசதிகள் பற்றி பலர் பேசுகிறார்கள்.

அமெரிக்காவில் 9/11 இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்தில் உதவி புரிந்த தன்னார்வலர்கள் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, மனநல சிகிச்சைகளில் சிரமப்படுகிறபோது அவர்களைக் கூட அமெரிக்க அரசாங்கம் நிராகரிக்கிறது. அவர்களில் சிலரை இதன் இயக்குனர் மைக்கேல் மூர் கியூபா நாட்டிற்கு படகு மூலம் அழைத்துப் போகிறார். அங்கு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு திரும்புகிறார்கள். இச்சமயத்தில் கியூபாவில் இருக்கும் உடல்நல பாதுகாப்புத் திட்டங்கள் பற்றி விரிவாகச் சொல்லப்படுகிறது. சென்றாண்டில் இது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது இப்படம் பெற்ற வரவேற்பும் விவாதங்களும் மைக்கேல் மூருக்கு பல சங்கடங்களும் தந்தன. அவர் மீது க்யூபா நாட்டிற்கு படகுகள் மூலம் அமெரிக்கர்களை கூட்டிச் சென்றதற்காக வழக்குகளும் போடப்பட்டன. கியூபா நாட்டு மக்களின் அன்பும் ஆதரவும் இன்னொருபுறம் படத்தை ஆக்கிரமிக்கிறது.

குடிமக்களின் உடல்நல பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தராத அமெரிக்காவின் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றின கேள்வியை மைக்கேல் மூர் வெகு திடத்துடன் இப்படத்தில் முன் வைத்திருக்கிறார். இவ்வகை செயல்களுக்காக மன்னிப்பு கோருவது அவ்வப்போது நடந்தும் வருகிறது. ஆனால் வெறும் மன்னிப்பு இழந்த உயிரை மீட்டுத் தராதே. ஆனால் அமெரிக்காவில் உடல்நல பாதுகாப்புத் திட்டத்தைப் புறக்கணிக்கிறபோது இன்னொருபுறம் மருத்துவ பரிசோதனைகளுக்காக மனநலம் குன்றிய குழந்தைகள் உட்பட பலர் பலியாவதும் தொடர்கிறது. இந்தியாவில் சமீபமாய் கிளம்பியுள்ள பல தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பற்றின செய்திகள் சிக்கோ தரும் செய்திகளுக்குச் சற்றும் குறைந்தவையல்ல. மனித உயிர்களை அற்பமாகக் கருதி லாபத்தை நீண்ட ஆயுள்காலத் திட்டங்களாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com