Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
ஆகஸ்டு 2008
இந்தியாவை ஊடுருவும் பார்வைகள்
சுப்ரபாரதிமணியன்

அறுபதுகளில் இந்தியாவிற்கு வந்த இயக்குனர் பசோலினி இந்தியா பற்றின தனது பதிவுகளை புத்தகமாக்கியிருக்கிறார். அதுவே ஒரு படமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. Notes from a film about India. இந்திய சாமியார்கள், எழுத்தாளர்கள், பழைய மகாராஜாவின் குடும்பத்தினர் என்று பலரின் பேட்டிகள் அதில் உள்ளன. இந்திய சமூக நிலைகள், வறுமை, மதம், உழைக்கும் வர்க்கம் என்று அவர் மனம் துணுக்குறுகிறது. ஒருவகை அவநம்பிக்கைவாதியாக அவர் இதில் வெளிப்படாவிட்டாலும் இந்தியாவின் துயரங்களால் அவர் ஈக்கப்பட்டிருப்பது விரவும் பிம்பங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. எரியூட்டும் ஒரு பிணத்தின் காட்சியில் படம் முடிவடைகிறது. பின்னணியில் உடம்பை உலுக்கும் புல்லாங்குழல், பசோலினியின் பின்னணிக்குரல் அலைந்து தேய்வுறுகிறது. இந்தியாவிற்கு வந்து போகும் (எல்லாம் உள்ளவனான) ஒரு மேற்கத்திய உலகைச் சார்ந்தவன் எதையும் தருவதில்லை. ஆனால் இந்தியா (எதுவுமில்லாதது) எல்லாவற்றையும் தருகிறது என்கிறார் பசோலினி.

ஈரான் இயக்குனர் மொஹ்சன் மஹ்மல்பப்பின் சமீப படமான தி ஸ்கிரேம் ஆப் ஏண்ட்ஸ் (The Scream of Ants) என்ற படமும் இந்தியாவைப் பற்றி வெளிவரும் பல படங்களும் ஒரேவிதமான வெளிப்பாட்டையும் விபரங்களையும் ஏகதேசம் கொண்டிருப்பதாகச் சொல்லலாம். இந்திய சாமியாகள், எழுத்தாளாகள், பழைய மகாராஜா குடும்பத்தினர் வறுமை, மதம், ஏழைகள், மோட்சம் தரும் காசி போன்ற இடங்கள் என.

இந்தியாவிற்கு அவ்வப்போது வந்து போகும் மொஹ்சன் மஹ்மல்பப்பிற்கு இந்தியாவைப் பற்றி பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது கனவாக இருந்திருக்கிறது. ‘சத்யஜித்ரே போன்றவர்கள் விளிம்பு நிலை மக்களைப் பற்றி அழுத்தமானப் பதிவுகளைச் செய்யவில்லை. இந்தியத் திரைப்படங்களும் இந்திய ஆன்மாவை சரியாகத் தொடுவதில்லை. மேல்தட்டு அதிகார வர்க்க வன்முறையையும், ஊழலும், வறுமையும் இந்த நாட்டைப் பிடித்துள்ள நோய்கள்’ என்கிறார்.

ஆறு பாகங்கள் கொண்ட ‘பேண்டம் இந்தியா’ என்ற படத்தை 1967ல் பிரஞ்ச் இயக்குனர் லூயிஸ் மல்லே இந்தியாவைப் பற்றி குறிப்பிடத்தக்க படம் எடுத்திருக்கிறார். ‘ரிவர் இன் இண்டியா’ ரொனவரின் முக்கிய படங்களில் ஒன்றாகும். ரிச்சர்டு பர்டனின் ‘காந்தி’, தீபா மேத்தாவின் படங்கள், டேவிட் லீனின் ‘ஏ பாசேஸ் டு இந்தியா’, ‘இங்கிலீஷ் ஆகஸ்ட்’, நாகேஸின் ‘ஹைதராபாத் புளூஸ்’, ‘மிச்சிபி மசாலா’, கனீப் குரேசியின் ‘புத்தா ஆப் சபர்ப்பியா’, ஓம்புரியின் ‘ஈஸ்ட் ஈஸ் ஈஸ்ட்’, ‘குரு’, பாமிலாவின் ‘தி பாசேஜ் டு பாக்கிஸ்தான்’ போன்றவை அந்த வகையில் சில படங்கள்.

லூயிஸ் மல்லே ‘பேண்டம் இந்தியா’வை ஆறு பாகங்களாக்கி ஒவ்வொன்றையும் தனது இந்தியா பற்றி கருத்துக்களைச் சொல்லவும் இந்தியாவில் தான் பார்த்ததையெல்லாம் தொகுக்கவும் பயன்படுத்தப்பட்ட முறை போன்றே மொஹ்சன் மஹ்மல்பப் இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறார். தொழிலாளர்கள், கனவுகளும் யதாத்தமும், மதச் சீரழிவு, மாநகரங்கள் என்ற பிரிப்பில் அவை விரிந்திருக்கின்றன.

வெளிநாட்டைச் சாந்த ஒரு பெண்ணும் நாத்திகனான ஆணும் இந்தியாவிற்கு தேனிலவுக்காக வருகிறார்கள். அவர்களின் அலைவுறும் அனுபவங்களும், முழுமையான மனிதனைத் தேடுவதும், இன்னுமொரு மோட்சம் பற்றிய அக்கறையுமாக இப்படம் விரிகிறது.

முதல் காட்சியில் மனைவி நாற்காலியொன்றைப் போட்டு புகைவண்டித் தடத்தில் உட்காந்திருக்கிறாள். புகைவண்டிப் பாதையில் கணவன் நடந்து கொண்டிருக்கிறான். அவளின் முகத்தில் கையுறையொன்று அவளின் பார்வையை மறைத்திருக்கிறது. இந்தியாவைப் பற்றின அவனின் எண்ணங்களின் குறியீடாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம். (அட்டைப் படம்)

புகைவண்டியில் ஏறிக் கொள்ளும் அவர்களுக்குள் கடவுள் மதம் பற்றிய சர்ச்சை தொடர்கிறது. இந்திய பத்திரிக்கையாளர் ஒருவர் அவர்களின் உரையாடலில் கலந்து கொண்டு கண்களால் புகைவண்டியை நிறுத்தும் ஒரு சாமியாரைப் பார்க்கப் போவதாய் சொல்கிறார். அவர்களும் இணைகிறார்கள். அந்த சாமியார் ஒரு முறை தற்கொலை முயற்சிக்காக புகைவண்டிப் பாதையில் நடக்கிறார். புகைவண்டி நிறுத்தப்படுகிறது. தன் கண் பார்வையால் புகைவண்டியை நிறுத்தி விட்டார் என்ற செய்தி பரவுகிறது. தினமும் மக்கள் அந்தப் புகைவண்டிப் பாதையில் கூடுகிறார்கள். சாமியார் பாதையில் உட்கார்ந்து கொள்ள நிற்கும் புகைவண்டியிலிருக்கும் பயணிகளிடம் மக்கள் உணவுப் பொருள்களும், திண்பண்டங்களும், காசும் பிச்சையாகக் கேட்பது வாடிக்கையாகிவிட்டது. இதன் பின்னணி அறிந்த வெளிநாட்டுத் தம்பதிகள் சாமியாரை மீட்டுச் செல்ல முயல்கிறார்கள். ஆனால் கும்பல் தடுத்து வெளிநாட்டு தம்பதியை துரத்துகிறது.

வெளிநாட்டுத் தம்பதியினர் ராஜஸ்தானில் அலைந்து திரிகிறார்கள். மத நம்பிக்கை மீதான அவர்களின் சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த சர்ச்சையில் முரண்படுகிறாகள். விலைமாதுவை தேடிப்போகும் கணவன் பணத்தை இழக்கிறான்.

பாலைவனத்தில் 'முழுமையான மனிதனை'த் தேடிப் போகிறார்கள். மாடு மேய்க்கும் ஒருவன் முழுமையான மனிதனின் வீட்டைக் காட்டுகிறான். 'முழுமையான மனிதன்' அவனாகவே இருக்கிறான். அவன் ஒரு தாளில் எழுதியதை புனித நகரத்தின் தீயில் காட்டி அதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறான்.

புனித நகரமான காசிக்கு செல்கிறார்கள். ஜெர்மன் தேசத்திலிருந்து வந்த துறவியொருவரைச் சந்திக்கிறார்கள். எரியும் பிணங்கள், சிதைந்த உடம்புகள், பிச்சைக்காராகள், இவர்களை மீறி கங்கையும் அதன் அழகும் மோட்சம் தரும் என்ற எண்ணம் மனதிற்குள் வருகிறது.

நடைபாதை மனிதர்கள், வறுமையினர் என இந்தியாவில் எல்லோரும் இதை ஏற்றுக் கொண்டே வாழ்வதாக தம்பதிகள் சொல்கிறார்கள். கடவுள் இந்த உலகத்தைப் படைத்திருந்தால் இதையெல்லாம் ஜோக்காகத்தான் எடுத்துக் கொண்டிருப்பார். எதையாவது அடைவதற்கு எல்லாவற்றையும் இழக்க வேண்டியிருக்கிறது. எதையும் பெறுவதில்லை என்ற தீர்மானத்திற்கு வருகிறார்கள்.

‘முழுமையான மனிதனை’த் தேடிச் செல்லும் போது ஒவ்வொரு அடிக்கும் ஒரு எறும்பாவது சாகிறது. எறும்புகளைக் கொன்றுக் குவித்துதான் முழுமையான மனிதனைக் கண்டடைய முடியும். எறும்புகளின் ஓலங்களைக் கேட்க முடிகிறதா எனக் கேட்டுக் கொள்கிறார்கள். தேடலாயும், இரண்டு வகைப் பார்வையாயும் இப்பயணம் அவர்களுக்கு அமைகிறது.

இந்தப்படம் இந்தியாவில் பல்வேறு அரசியல் பிரிவினரிடம் பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. காந்தியின் பாலியல் வாழ்க்கை பற்றியும், குறிப்பாக காந்தியின் தந்தை மரணப் படுக்கையில் இருக்கும்போது அவரின் பாலியல் நடவடிக்கைகள் பற்றியும் வரும் உரையாடல்கள் காங்கிரஸ் கட்சியினரை எதிர்க்குரல் எழுப்பச் செய்திருக்கிறது. விலைமாதுவைத் தேடிச் செல்லும் கணவன் நந்தியைப் பாத்து மோகிக்கிறான். விலை மாதுவின் உடம்பில் மதுவை ஊற்றி ருசித்து குடிப்பது போல நந்தி உருவத்தின் மீது மதுவை ஊற்றி அதை நக்கி சுவையை உணர்கிறான். இது குறித்து பாரதிய ஜனதா கட்சியினர் பலத்த கண்டனத்தை எழுப்பியுள்ளனர். இந்தியாவைப் பற்றிய முஸ்லீம் ஒன்றின் பார்வையாகவே இதை அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியொன்றில் புகைவண்டிப் பாதையில் தண்டவாளங்களின் மீது காதுகளை வைத்து புகைவண்டியின் இயக்கம் பற்றிச் சிறுவர்கள் அறிந்து கொள்வதும் அவர்களின் ஆச்சர்யங்களும் இடம் பெற்றுள்ளன. வெளிநாட்டினர் இந்தியாவைப் பற்றிப் பார்க்கும் பார்வையில் இந்த வகை ஆச்சர்யங்கள் நிறைந்திருக்கின்றன. மொஹ்சன் மஹ்மல்பப்பின் பார்வையும் ஆச்சர்யங்களால் நிறைந்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com