கார்ல் மார்க்ஸ் இங்கிலாந்தின் பொருளாதார கொள்கை குறித்து குறிப்பிட்ட உண்மையை, இந்திய மண்ணிலும் காண முடியும். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நீண்ட காலம் அதிகாரம் செலுத்தியதால் ஏற்பட்ட தாக்கங்களில் ஒன்றாக பொருளாதார ஏற்றத் தாழ்வும் இருக்கிறது. உதாரணத்திற்கு கடந்த 2007ஆம் ஆண்டு இறுதியில், நாடாளுமன்றத்தில் டாக்டர். அர்ஜூன் சென் குப்தா தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கை முன்வைக்கப்பட்டது. இதில் 77.3 சதமான இந்திய மக்கள், நாளன்றுக்கு ரூ.20/ மட்டுமே செலவிடுவோராக உள்ள பரிதாப நிலையை சுட்டிக்காட்டி உள்ளார்.

நாளன்றுக்கு ரூ. 20/_ செலவிடும் மக்களால், இந்திய முதலாளித்துவமும், உலக முதலாளித்துவமும் குறி வைத்து செயல்படுகிற சந்தையில் இருந்து பொருள்களை விலைக்கு வாங்க இயலுமா? இயலாது என்ற நிலையில்தான் பொருள்கள் தேங்கி நிற்கிறது. சந்தைகளிலும் பெருமளவில் பொருட்கள் விற்பனையாவதில்லை. இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் குறிப்பிடுகிற 8சத வளர்ச்சி சந்தை தேக்கத்தை உடைக்க உதவிடவில்லை. தனிநபரின் வருமானமும், செலவிடும் தொகையும், மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரிக்காமல், சந்தை தேக்கம் தகர்ந்து புதிய உற்பத்தி பெருகாது. புதிய உற்பத்தி பெருகாமல் வேலை வாய்ப்பு அதிகரிக்காது.

இந்த பொருளாதார சுழற்சி முறையை, முதலாளித்துவம் தனது அடித்தளமாக கொண்டுள்ளது. அதே நேரத்தில் லாபவெறி தலைக்கு ஏறுகிற போது, முதலாளித்துவம் தனக்கு எதிராக தன்னையே முன்னிறுத்துகிறது. இந்த முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை தேவைக்கு ஏற்ப விநியோகம் என்ற முறையை பின்பற்றாமல், விநியோகத்திற்கு ஏற்ப தேவையை உருவாக்க முயற்சிக்கிறது. இதன் காரணமாக ஊக வணிகம், பங்கு சந்தையின் ஆதிக்கம், பணம், பொருள், பணம் என்ற பரிவர்த்தனை காலாவதியாகி, பணம் - பணம் - பணம் என்ற பரிவர்த்தனையை அடைகிறது. இது உற்பத்திக்கு மூடு விழா கொண்டாடுவதால், வேலை பறிப்புக் கொள்கை புதிதாக பிறந்திருக்கிறது.

இதற்கு மிக சிறந்த உதாரணம் அமெரிக்கப் பங்கு சந்தையின் வீழ்ச்சியும் அதைத் தொடர்ந்து உலகளவிலான தாக்கமும் ஆகும். அமெரிக்காவில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். வங்கிகள் திவால் கணக்கு காட்டி உள்ளன. வாரத்திற்கு 14 வங்கிகள் அமெரிக்காவில் திவாலாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது இன்றளவும் நீடிக்கிறது. அதன் காரணமாக பன்னாட்டு முதலாளிகளின் பணம் முடமாகி அவர்களின் தொழிலும் முடமாகியுள்ளது. அது வேலை இழைப்பையும், உலக ஏற்றுமதி _ இறக்குமதி கொள்கை மீதான பாதிப்பையும் உருவாக்குகிறது. துபாயில் கட்டடங்களை விட்டு விட்டு பொருள்களை அள்ளிக்கொண்டு ஓடியது மறக்க முடியாத தொலைக்காட்சி செய்தி. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய யூனியன் முழுவதும் பாதிப்பு அடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. கிரீஸ், பின்லாந்து போன்ற நாடுகள் பெரும் சரிவை சந்தித்ததன் காரணமாக அங்கே பெரிய அளவிலான கிளர்ச்சிகள் வெடித்துள்ளன.

இந்தியாவிலும் கூட குஜராத் மாநிலத்தில், நகைத் தொழில் பாதிப்பை சந்தித்து, 10 லட்சம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பாதித்துள்ளது. திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் உற்பத்தி தேக்கம் சுமார் 45 ஆயிரம் தொழிலாளர்களின் வேலையைப் பறித்துள்ளது. கட்டிடத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் போன்றவை, புதிய நடுத்தர வர்க்கத்தினரின் முதலீடு குறைந்ததால் தேங்கி நிற்கிறது. ஆட்டோ மொபைல் தொழில் சரிவை நோக்கி சென்று இப்போது தன்னை சமாளித்துக் கொள்ளும் நிலையை அடைந்திருக்கிறது. புதிய நடுத்தர வர்க்கமான, தகவல் தொழில் நுட்பத் திறனாளிகள், வேலையை இழப்பதற்கு பதிலாக சம்பளத்தைக் குறைத்துக் கொள்வது மேல் என முடிவு செய்து செயல்படுகின்றனர். இவை அனைத்தும் கடந்த 2009 துவக்கத்தில் இருந்து இறுதி வரை வெளிவந்த செய்திகள். இந்திய தொழிலாளர் துறை அமைச்சர் மேற்படி கொள்கை காரணமாக 10 லட்சம் பேர் வேலை இழந்ததாக குறிப்பிட்டார். இவை நம் சம காலத்து முதலாளித்துவத்தில் நெருக்கடிகள் ஆகும்.

இதே சமகாலத்தில், முதலாளித்துவம் தனது நலனையோ, வருமானத்தையோ குறைத்துக் கொள்ளவில்லை. உலகக் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அவர்களின் போட்டியாளர்களாக இந்திய முதலாளிகளும் உயர்ந்துள்ளனர். 2004இல் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 15க்குள் இருந்தது. தற்போது 52பேரின் சொத்து மதிப்பு 5000 கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ளது. தமிழகத்திலும் கூட அத்தகைய பெரும் பணக்காரர்கள் உயர்ந்து வருகின்றனர். கடந்த 2009இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில், இந்திய முதலாளிகள், வெளியுலகிற்கு தெரியப் படுத்தாமல் பதுக்கிய கறுப்புப் பணம், சுமார் 75 லட்சம் கோடி ரூபாய் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் இருப்பதாக எதிர்கட்சிகள் தெரிவித்தன. எனவே, முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆலை மூடலை, ஆட்குறைப்பை உருவாக்குகிற அதே நேரத்தில், முதலாளிகளை பாதிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். அமெரிக்காவில் வங்கிகள் திவாலானபோது, அமெரிக்க அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய் வாரி வழங்கியது. வேலை இழந்த தொழிலாளர்களுக்கு அது போன்ற கருணை அளிக்கப்பட்டதாக அறிய முடியவில்லை.

இன்னொரு புறம் முதலாளித்துவத்தின் நெருக்கடி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நாடாக சீனா இருந்தது குறிப்பிடத்தது. சீனாவிடம், அமெரிக்கா கடன் பெற எந்தவித தயக்கமும் காட்டவில்லை. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்,  சீனாவிற்கு நேரடியாகச் சென்று அமெரிக்காவிற்காக யாசகம் கேட்டார் என்றால் அது மிகையல்ல. சீனாவின் கொள்கை முதலாளித்துவ கொள்கையில் இருந்து மாறுபட்டதாக இருந்ததே இதற்கு காரணம்.

சீன அரசு தங்கள் கொள்கை சோசலிசத்தை நோக்கிச் செல்லும் தன்மையுடையது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக சொல்கிறார்கள். முழுமையாக சோசலிசக் கொள்கையை அமலாக்காத நிலையிலேயே சீன அரசு உலகின் வளர்ந்த நாடுகள் சந்தித்த சரிவை எதிர் கொள்ளாமல் முன்னேற முடிந்திருக்கிறது. சோசலிசக் கொள்கையை சென்றடையும் நிலைக்கு சீன அரசு சென்று விட்டால், அதன் பொருளாதார வலிமை, உலகில் யாரும் எட்ட முடியாத ஒன்றாக இருக்கும். இன்றைக்கு சீன அரசின் கொள்கை வேலைப் பறிப்பை உருவாக்கவில்லை. உலகில் சிறு தொழில்களை அழிப்பதையே உலகமயமாக்கல் கொள்கை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. ஆனால் சீனாவின் கொள்கை சிறு தொழில்களையும், சிறு உற்பத்தியாளர்களையும் பாதுகாக்கும் தன்மை கொண்டதாக இருப்பதன் விளைவே, அமெரிக்காவிற்கு கடன் கொடுக்கும் அளவிற்கு முன்னேற வழிவகை செய்துள்ளது.

மேற்படி நிகழ்வுகளில் இருந்து வேலையின்மை அல்லது வேலைப் பறிப்பதற்கு காரணம் முதலாளித்துவ லாபவெறி என முடிவுக்கு வரலாம். இதைக் குறிப்பிடுகிற போது முதளாளித்துவ சமூகத்திற்கு முந்தைய சமூதாய அமைப்புகளில் வேலையின்மை இல்லையா என கேட்கலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலேயோ அதற்கு முந்தைய அடிமைச் சமூதாய காலத்திலேயோ சுரண்டல் கொடூரமாக இருந்திருக்கிறது. வேலை பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்க நியாயம் இல்லை. ஆனால், மனிதர்களை கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக அடிமைகளாக்கி உழைக்கச் செய்து, சோற்றை மட்டும் கூலியாக கொடுத்தார்கள். மானத்தை மறைக்க கொஞ்சம் துணியும் கொடுத்தார்கள். வேலையில்லை என்ற பிரச்சனை எழுந்திருக்க வாய்ப்பில்லை. மாறாக, வேலை செய்ய முடியாமல் அடிமையாக இருக்க முடியாது, என்ற எதிர்ப்புகள் இருந்திருக்கிறது. ஒவ்வொரு கால எதிர்ப்புகளும் போராட்டங்களும் இருந்திருக்க கொடூரமான கொலைகளும், கொடுமைகளையும் ஆளும் வர்க்கங்கள் அரங்கேற்றி இருக்கின்றன.

எனவே தான் கார்ல் மார்க்ஸ “மனித குல வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறு’’ என கூறியுள்ளார்.

Pin It