இசைத்தமிழ்

முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் பற்றிய உணர்வு நம்மிடம் அறவே இல்லாத நிலையே நீடிக்கிறது.பள்ளி கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் இசைத்தமிழ் என்பது அறவே இல்லை. தொல்காப்பியம் தொடங்கி இடைக்கால இலக்கியங்கள் ஊடாக ஆய்வு மேற்கொண்டு தமிழிசை இயல் உருவாக்கப்பட வேண்டும்.இதன் தொடர்ச்சியாக முந்தைய முன்னோடி ஆய்வுகளை முன்வைத்தும் புதிய ஆய்வுகளை மேற்கொண்டும் இசைத்தமிழ் வரலாறு எழுதப்பட வேண்டும். கல்லூரி, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளில் தமிழிசைக்கான பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.பாடத்திட்டத்தில் இசைப்பாடல்கள் (பாடும் பயிற்சியும்) சேர்க்கப்பட வேண்டும்.

பாரதி கூறியது போல வித்வான்கள் பழைய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணி புராதன வழிகளைத் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.ஆனால் தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற மொழிகளில் பழம்பாட்டுக்களை மீட்டும் மீட்டும் சொல்லுதல் நியாயமில்லை.அதனால் நமது ஜாதி ஸங்கீத ரசனையை இழந்துபோகும்படி நேரிடும் என்பது நடந்து விட்டது.தமிழிசையையும் இசைத்தமிழையும் மீட்டெடுப்பதற்கான வளர்ப்பதற்கான ஒரு செயல்திட்டம் உடனடித் தேவையாகும்.அரசு செய்யக்கூடியதுகவிவாணர்கள் செய்யக்கூடியது எனப் பிரித்துக்கொண்டு இத்துறையில் பணிகள் நடைபெற வேண்டும். அரசு நடத்தும் இசைப்பள்ளிகள், இசைக்கல்லூரிகளில் அவ்வப்பகுதியைச்சேர்ந்த எல்லா நாட்டுப்புற இசை வடிவங்களும் சேர்க்கப்பட வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்கள் அங்கு வருகைதரு பேராசிரியர்களாகவேனும் நியமிக்கப்பட வேண்டும்.

நாடகத்தமிழ்

நீண்ட நெடிய கூத்து மரபுகொண்ட நம் தமிழ்மொழியில் முறையான ஒரு நாடகத்தமிழ் வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை.அதற்கான முயற்சிகளை அரசு துவக்க வேண்டும். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் தவிர தமிழகத்தில் வேறு எங்குமே நாடகத்துறை என்பது இல்லை.அங்கும் உருப்படியான பாடநூல்கள் இல்லை.நாடகப்பள்ளிகள் உருவாக்குவதும் எல்லாக்கல்லூரிகளிலும் தமிழ்த்துறையில் நாடகம் இணைக்கப் படுவதும் அவசியம்.கூத்து மற்றும் நாடகப்பயிலரங்குகள் தமிழ்ப் பாடத்தின் பகுதியாக மாற்றப்பட வேண்டும்.

வீதி நாடகங்கள் என்னும் புதிய மக்கள் கலை வடிவம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவும் புதிய நாடகங்கள் தயாரிப்பதற்கான ஆதரவை வழங்குவதற்குமான நிரந்தர ஏற்பாடு ஒன்றினை அரசு உருவாக்க வேண்டும்.ஒரு நாடகக்கலைஞன் நாடகத்தின் மூலமே வாழ முடியும் என்பதற்கான சமூக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

நாட்டுப்புறத்தமிழ்

நாட்டுப்புற இலக்கியங்கள் உண்மையில் உழைக்கும் மக்களின் படைப்பிலக்கியமாகும். இழிசனர் வழக்கென்று பன்னெடுங்காலமாகப் புறக்கணிக்கப்பட்ட வாய்மொழி இலக்கியங்களாக உள்ள நாட்டுப்புற இலக்கியங்கள் பள்ளி மற்றும் கல்லூரித் தமிழ்ப்பாடத்திட்டத்தின் பகுதியாக மாற்றப்பட வேண்டும். இதுவரை தொகுக்கப்படாத நிலப்பரப்புகளில் இவற்றைத் தொகுத்திட அரசின் செலவில் தமிழ் கற்ற ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுப் பணிகள் துவக்கப்பட வேண்டும்.ஏற்கனவே நாட்டுப்புறவியலில் முதுகலை மற்றும் ஆய்வறிஞர் பட்டம் பெற்று எவ்வித வேலை வாய்ப்புமின்றி வாடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இப்பணிகளில் வாய்ப்பும் முன்னுரிமையும் தர வேண்டும்.

அரண்மனைகளும் ஆடலரங்குகளும் புறக்கணித்த நாட்டுப்புறக்கலைகள் காலம் காலமாக உழைப்பாளி மக்களால் ஆதரித்து வளர்க்கப்பட்டவை. ஆதரிப்பார் யாருமின்றி அழிந்துபோன நாட்டுப்புறக்கலைகள் எத்தனையோ. நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் ஒன்றைத்துவக்கி இக்கலைகளும் இலக்கியங்களும் அழியாமல் பாதுகாக்க இம்மாநாட்டை ஒட்டியேனும் அரசு சிந்திக்க வேண்டும்.

கல்வியில் தமிழ்

தமிழ்வழிக்கல்வி என்பது நமது நெடுங்காலக்கோரிக்கையாக நீள்கிறது. உயர்கல்வியில் குறிப்பாக மருத்துவம் பொறியியல் கல்வியைத் தமிழ்வழியில் கொண்டுவராமல் ஆரம்பக்கல்வியில் தமிழ்வழியை வற்புறுத்துவதில் அர்த்தமில்லை என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் துவக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது.இது பற்றி 1994 இல் தமுஎகச நடத்திய தமிழ் வளர்ச்சிபண்பாட்டுப்பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மானம் இவ்வாறு கூறுகிறது: 1960 களிலேயே கலைக்கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி துவக்கப்பட்டுவிட்ட போதிலும் அது இன்னும் முழு வீச்சோடு நடைமுறைக்கு வரவில்லை. அறிவியல்தொழில்நுட்பத்துறையில் தமிழ்வழிப் படிப்பு வருவது தமிழ் வளர்ச்சிக்கு அடிப்படையானதொரு தேவையாகும்.தமிழ் வழிக்கல்வி வந்தால்தான் தமிழில் அறிவியல்தொழில்நுட்பச் சிந்தனை வளரும். புதிய சொற்கள் பிறக்கும். தமிழ் செழிக்கும் அம்மாநாட்டை நாம் நடத்திய நாட்களில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் மருத்துவம், பொறியியல் போன்றவற்றுக்குத் தமிழ்ப்பாட நூல்களை உருவாக்கியுள்ளதாகக் கூறப்பட்டது.அது என்னவாயிற்று என்று மக்களுக்குச் சொல்லப்படவில்லை.

1967 இல் தமிழை ஓர் அரசியல் அணிதிரட்டலுக்கான உபாயமாகக் கைக்கொண்ட திராவிட இயக்கத்தார் தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகுதான் ஆங்கில வழிக்கல்வி நிறுவனங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் புற்றீசல்கள் போலப் புறப்பட்டு இடறி விழுந்தால் ஒரு இங்கிலீசுப் பள்ளியில் விழும் நிலை தமிழகத்தில் உருவானது என்பது வேதனையான வரலாறாக நம் முன்னே நிற்கிறது.ஆகவேதான் நாம் தமிழ் வழிக்கல்வியைப் போலவே சமச்சீர் கல்விக்காகவும் போராட்டங்கள் நடத்தினோம்.

சமச்சீர் கல்வியின் முதல் படியாக எல்லோருக்கும் ஒரே பாடப்புத்தகம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஒரு சிறிய முற்போக்கான தப்படி என்பதால் இதனை வரவேற்றுள்ளோம்.ஆனால் முழுமையான தமிழ்வழிக்கல்வி அதிலும் அருகமைப்பள்ளியில் என்பதை நோக்கியும் தமிழைத்தாய் மொழியாகக்கொண்ட குழந்தைகள் தமிழே படிக்காமல் தமிழ்நாட்டில் கல்வியை முடிக்க இனி வாய்ப்பில்லை என்கிற நிலையை நோக்கியும் சென்றாக வேண்டும்.

பண்பாட்டுத் துறையில்

மொழி என்பது ஒரு சமூகத்தின் பண்பாட்டு வேர்களை, விழுமியங்களை, பண்பாட்டுச் செல்வத்தைத் தனக்குள் பொதிந்துவைத்துக்கொண்டுள்ள தலைமுறை தலைமுறைக்கு அவற்றைக் கடத்திச்செல்லுகின்ற வாழும் வளரும் உயிர்ச்சக்தியாகும். ஒரு சொல்லிலிருந்து பலகாலத்துக்கு முன்னர் மறைந்துபோன ஒரு பண்பாட்டு அசைவினை நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.பண்பாட்டு அசைவுகளின் வழி அச்சமூகம் வாழ்ந்த வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்திடவும் முடிகிறது.

தமிழ்ச்சமூகம் மிக நீண்ட ஆழமான பண்பாட்டு வரலாறு உடையது.மானிடவியல் ஆய்வுகள் மூலம் அவற்றை வெளிக்கொணர வேண்டும்.தமிழகத்தில் இன்று இயங்கும் மானுடவியல் ஆய்வறிஞர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இவ்வளவு நீண்ட வரலாறு கொண்ட தமிழ்ச்சமூகத்தில் மானுடவியல் அறிஞர்கள் போதிய அளவில் இல்லை என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் மானுடவியல்துறை உடனடியாகத் துவங்கப்பட வேண்டும்.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் கிடைத்துள்ள பூமியாக தமிழகம் இருக்கிறது. இன்னும் வாசிக்கப்படாமல் மைசூரில் மத்திய அரசு அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்பிராமி கல்வெட்டுகளும் பட்டயங்களும் குவிந்து கிடப்பதாகக் கூறப்படுகிறது. ஆடம்பரமான விளம்பரங்களுக்குச் செய்யப்படும் செலவில் ஒரு பகுதியை ஒதுக்கினாலே இக்கல்வெட்டுக்களை வாசித்து அச்சாக்கும் பணியை முடித்து விடலாம்.

வழிபாட்டு மொழியாகத் தமிழ் வரவேண்டும் என்பது நம் எல்லோரின் நெடுங்கனவாகும். வேண்டுகோள் அடிப்படையில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் நிலைதான் தமிழ் நாட்டில் தொடர்கிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதுவும் வெறும் அறிவிப்போடு நிற்கிறது. கோவில்களுக்கு வெளியே எங்கும் தமிழ் முழக்கம் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் சிதம்பரம் மட்டுமல்ல தமிழ் நாட்டின் எல்லாக் கோவில்களுக்கு உள்ளேயும் நடைமுறையில் இன்னும் தமிழ் நீசபாஷையாகவே தொடர்கிறது என்பதை வெட்கத்தோடும் வேதனையோடும் நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு வரலாறு இதுவரையிலும் எழுதப்படவே இல்லை. அதுகுறித்து எந்தப்பல்கலைக்கழகமோ உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமோ கவலைப்படவும் இல்லை.பன்முகப்பட்டபல்வேறு பண்பாடுகளின் கலப்பாகத் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிற (சிதைந்தும் கொண்டிருக்கிற) தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றை அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இப்போதுகூடச் செய்யவில்லையெனில் வரலாறு நம்மை மன்னிக்காது.நாம் சொல்லும் தமிழரின் பண்பாட்டு வரலாறு என்பது ஆரியதிராவிடப் போராட்டமாக மட்டுமே தமிழக வரலாறைச் சித்தரிக்கும் கதையை அல்ல. சமூக வரலாற்றின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் வாய்மொழி வரலாறுகளையும் இணைத்துக்கொண்ட ஒரு பண்பாட்டு வரலாறே நாம் கோருவது.

(அ)ஆங்கிலம்தமிழ் மற்றும் தமிழ்ஆங்கிலம் உள்ளிட்ட அகராதிகளின் நிலை குறித்து இந்த நேரத்தில் நினைத்துப்பார்ப்பது அவசியம். 1960களில் பல்கலைக்கழக மான்யக்குழுவின் நிதி உதவியோடு சென்னைப்பல்கலைக்கழகம் முனைவர் ஏ.சிதம்பரநாத செட்டியாரை முதன்மை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட ஆங்கிலம்தமிழ் அகராதிக்குப் பிறகு அரசு சார் நிறுவனரீதியாக எந்த முயற்சியும் இல்லை.அந்த ஒரு அகராதியும் இன்னும் தற்காலப்படுத்தப்படாமலே உள்ளது.தமிழக அரசு இது தொடர்பாக ஒரு அறிஞர் குழுவை போதிய நிதி ஆதாரத்துடன் நியமித்துப் பணிகளைத்துவக்க வேண்டும்.

(ஆ) வட்டார வழக்குச் சொல்லகராதிகள் தமிழின் மொழியியல் வளர்ச்சிக்கு மிக அடிப்படையான தேவையாகும். கி.ராஜநாராயணன், பெருமாள் முருகன், கண்மணி குணசேகரன் போன்ற சில தனிப்பட்ட ஆளுமைகளின் கடும் உழைப்பால் சில வட்டார வழக்குச் சொல்லகராதிகள் வந்துள்ளன. அரசு சார் நிறுவனங்களோ பல்கலைக்கழகங்களோ இதுபற்றிக் கிஞ்சித்தும் கவலை கொண்டதில்லை. உலகத்தமிழ் மாநாடு போன்ற பெரும் செலவிலான நிகழ்வுகள் நடக்கும் போதேனும் இதுபற்றிக் கவலை கொண்டு தமிழகம் முழுவதும் வட்டார வழக்குகளை அகராதிகளாகத் தொகுக்கும் பணிக்கு நிதி ஒதுக்கி ஏற்பாடு செய்வது மிகமிக அவசியமாகும்.

அறிவியல் தமிழ்

அறிவியல் தமிழ் குறித்த பேச்சுக்கள் சமீப காலமாக அதிகரித்து வருவது ஆரோக்கியமான ஒன்று. மணவை முஸ்தபா போன்ற தனிப்பட்ட ஆளுமைகள் உருவாக்கியுள்ள கலைச்சொல் அகராதிகளைப்பார்க்கிலும் ஒருங்கிணைந்த அறிவியல் அகராதிகள் அல்லது துறைவாரியான கலைச்சொல் அகராதிகளை அரசு முன்னின்று முயன்று வெளிக்கொணர வேண்டும். 1960இல் தமிழக அரசு வெளியிட்ட கலைக்களஞ்சியத்துக்குப் பிறகு எந்த முயற்சியும் இத்துறையில் செய்யப்படவில்லை. 60க்குப்பிறகு அதிவேகப்பாய்ச்சலில் அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆகவே தற்காலப்படுத்தப்பட்ட கலைக்களஞ்சியம் உடனடியான தேவையாகும்.

கணிணிக்கான பொதுவான எழுத்துரு என்பது இன்னும் கனவாகவே உள்ளது.கணிணிக்குப் பொருத்தமான மொழியாக நம் தமிழ் இருப்பது நமக்குப் பெருமைதான். ஆனால் ஒரு பொதுவான தமிழ் விசைப்பலகையைத் தயாரித்து சில ஆயிரம் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி இலவசமாக மக்களுக்கு வழங்கும் பணியை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும்.ஆரம்ப முயற்சிகள் சிலவற்றை அரசு சில ஆண்டுகளுக்கு முன் செய்தது.பிறகு அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. மருத்துவம், பொறியியல் போன்ற அறிவியல்துறை சார் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடமும் தமிழ் மொழியியல் பாடமும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.புதிய கலைச்சொல் ஆக்கங்களில் அவர்கள் ஈடுபட இது அவசியமல்லவா?இத்தகு கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியர்களை நியமிப்பதும் அவசியமாகும்.

ஊடகத்தமிழ்

ஏற்கனவே ஆங்கிலவழிக்கல்விக்கு வித்திட்டு மக்கள் மனங்களில் ஆங்கிலவழியே சிறந்தது பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்கான திறவுகோல் அதில்தான் இருக்கிறது என்கிற பொதுப்புத்தியை ஆட்சியாளர்கள் ஏற்படுத்திவிட்டார்கள். அது போதாதென்று இப்போது தொலைக்காட்சி ஊடகங்களில் அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் வாய்களில் தமிழ் நித்தம் செத்துக்கொண்டிருக்கிறது. உலகமயத்தின் தத்துப்பிள்ளைகளாகச் சேவகம் செய்துவரும் தமிழ்த் தொலைக்காட்சி ஊடகங்களின் உள்ளடக்கத்திலும் பேச்சு மொழியிலும் தமிழ்ப் பண்பாடும் இல்லை நல்லதமிழ்ச் சொற்களும் இல்லை.

தமிழ்த் தொலைக்காட்சி உலகின் முடி சூடா மன்னர்களாக முத்தமிழ் வேந்தர் டாக்டர் கலைஞரின் குடும்பத்தாரே திகழ்வதை வரலாற்றின் நகைச்சுவை என்றுதான் கொள்ள வேண்டும். திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர் வைத்தால் சலுகை வழங்கும் தமிழக அரசு அன்றாடம் 24 மணி நேரமும் தமிழர்தம் மூளைகளைச் செதுக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களிடமிருந்து தமிழ் வாழ்வையும் மொழியையும் மீட்க என்ன செய்யப்போகிறது?

Pin It