வரலாற்றுப் பூர்வமான நவம்பர் புரட்சியின் 92வது ஆண்டு தினத்தைப் பொருத்தமான விதத்தில் அனுஷ்டிப்பதற்காக இன்று நாம் இங்கே கூடியுள்ளோம். பொருத்தமான விதம் என்பது பகட்டாக அல்லது ஆரவாரத்தோடு என்று அர்த்தமல்ல. நவம்பர் புரட்சி தினக் கடமையை நிறைவேற்றுவதில் நமது பங்கை ஆற்றுவதற்கு நமக்கு உதவும் வகையில் அதன் முக்கியத்துவத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றியதொரு புரிதலுடன் அதை அனுஷ்டிப்பது என்பதே அதன் பொருள். மனித சமுதாய வளர்ச்சிப் போக்கில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் லெனினால் தலைமை தாங்கப்பட்ட ரஷ்யத் தொழிலாளிவர்க்கம் மற்றும் அந்நாட்டின் பிற சுரண்டப்பட்ட உழைக்கும் மக்களால் 1917ல் செய்து முடிக்கப்பட்ட நவம்பர் புரட்சி என்று அறியப்படும் புரட்சி, ஈடு இணையற்ற வரலாற்று முக்கியத்துவமுடையது. அது, உலகின் ஆறில் ஒரு பகுதியிலிருந்து வலிமை மிக்க ஜாரையும் முதலாளிகளையும் தூக்கியயறிந்தது என்பதனால் அல்ல. மாறாக அது மனித சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கில் குணாம்ச ரீதியில் முற்றிலும் புதியதொரு சகாப்தத்தைத் தொடங்கி வைத்தது.
மனித சமுதாயமானது, அதன் புராதன கம்யூனிசக் கட்டம் முடிவடைந்த பின்னர், முதன் முதலில் வர்க்கங்களாக பிளவுபட்டதிலிருந்து அடுத்தடுத்து பல கட்டங்களைக் கடந்து இன்றைய முதலாளித்துவ சமுதாயமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு கட்டம் மற்றொன்றால் மாற்றப்பட்ட நிகழ்வு ஒவ்வொன்றும் புரட்சியின் மூலமே நடந்தேறியுள்ளது. ஆனால் கடந்த காலப் புரட்சிகள் அனைத்தும், ஒரு வடிவத்திலான வர்க்கப் பிரிவினையை மற்றொரு வடிவத்திலான வர்க்கப்பிரிவினையால் இடம் பெயர்த்தன. ஒரு வடிவத்திலான சுரண்டலை மற்றொரு வடிவத்திலான சுரண்டலால் இடம் பெயர்த்தன. ஆனால் நவம்பர் புரட்சிதான், வர்க்கப் பிரிவினைக்கே முற்றாக முற்றுப்புள்ளி வைத்தது. வர்க்கங்களற்ற, மனிதனால் மனிதன் சுரண்டப்படும் கொடுமை இல்லாத கம்யூனிச சமுதாயத்தை அமைப்பதற்கான பாதையை திறந்துவிட்டது. கம்யூனிச சமுதாயத்தின் சகாப்தம் என்பது, உற்பத்தி சக்திகள் மற்றும் சொத்துக்களின் மீது தனி உரிமை இல்லாததும், அதன் காரணமாக ஒரு வர்க்கத்து மக்களின் உழைப்பின் பலனை மற்றொரு வர்க்கத்தினர் பறிக்கும் நிலை இல்லாததுமான புதியதொரு சகாப்தமாக இருக்கும். பலவந்தமாக இயற்கை வளங்களைச் சுரண்டி, அதன் மூலம் தனிநபர் லாபம் அடையும் வகுப்பென்று எவரும் இருக்கமாட்டார்கள். பொருட்களின் உற்பத்தி சக்திகள் அனைத்தும் சமுதாயத்திற்குச் சொந்தமானதாக இருக்கும். சமுதாயத்தின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே உற்பத்தி நடக்கும்.
கார்ல் மார்க்ஸ் எங்கெல்ஸ் தந்த பார்வை
இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தில் தோன்றும் அனைத்துப் பிரச்னைகளுக்கும், சுரண்டப்படும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் காணும் அனைத்து துன்பங்களுக்குமான ஒரே உண்மையான தீர்வு, உற்பத்தி சக்திகளின் உரிமையாளர்களான முதலாளிகளும் உற்பத்தி மற்றும் பகிர்ந்தளிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் இருக்கும் வணிகர்களும் லாபமென்று கொள்ளையடித்துச் செல்லும் இன்றைய முதலாளித்துவ முறையை தூக்கியயறிந்துவிட்டு, இந்த வர்க்கங்களற்ற கம்யூனிச சமுதாயத்தை ஏற்படுத்துவதில் தான் உள்ளது. மாபெரும் தத்துவாசிரியரும் சிந்தனையாளருமாகிய கார்ல் மார்க்ஸ்ம் பிரெடெரிக் எங்கெல்ஸ்சும் இந்தப் பார்வையை நமக்கு அளித்தனர். அந்த மாபெரும் ஆசான்களுக்கு இதற்காக மீண்டும் ஒரு முறை தலைவணங்குவோம்.
முன்மாதிரிப் புரட்சி
நவம்பர் புரட்சியானது, அனைத்து பார்வைக் கோணங்களில் இருந்தும் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிக்கான முன்மாதிரியை வழங்கியுள்ளது. தொழிலாளி வர்க்கம் தனது உண்மையான புரட்சிகரக் கட்சியின் தலைமையின் கீழ் அணிதிரண்டதுடன், சுரண்டப்படும் அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி, தனது ஆயுத எழுச்சியின் ஒரே வீச்சின் மூலம் முதலாளி வர்க்கத்திடமிருந்து அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி சோவியத்துக்களின் வடிவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டி, பொருளாதாரத்தில் மக்கள் சமூகத்திற்காக தங்கள் திறமைக்கேற்ப உழைக்கவும், தங்கள் உழைப்பிற்கேற்ப சமூகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவும் கூடிய இடைமாறுதல் சோசலிச சமுதாய அமைப்பு முறையை நிறுவியது.
உலகப் புரட்சி
லெனின் தலைமையில் ரஷ்யாவின் தொழிலாளி வர்க்கத்தால் அந்நாட்டில் நவம்பர் புரட்சி நடத்தி முடிக்கப்பட்டதிலிருந்து, பொதுவாக மக்கள் சாதாரணமாக ரஷ்யப் புரட்சி என்றே அதை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் அது ரஷ்யப் புரட்சி என்பது மட்டுமல்ல. முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் என்பது ஒரு உலகளாவிய அமைப்புமுறை. வளர்ச்சியடைந்த நவீன விஞ்ஞானம், குறிப்பாக அதன் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள், அதனை ஒரேயயாரு நாட்டில் மட்டும் தூக்கி எறிய முடியாத வகையில் நிதர்சனமாக அதனை ஓர் உலக அமைப்பாக ஆக்குவதில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளன. ஒரு உலகப் புரட்சியால் மட்டுமே உலக அளவில் அதனைத் தூக்கியயறிய முடியும். இதனாலேயே, முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சி என்பது ஓர் உலகப் புரட்சியாகும். இக் கோணத்திலிருந்து பார்த்தால் நவம்பர் புரட்சியானது உண்மையில் அந்த உலகப் புரட்சியின் ஆரம்பம் ஆகும்.
வடிவத்தில் தேசியத் தன்மை
உள்ளடக்கத்தில் சர்வதேசத் தன்மை
ஆனால் உலகமானது, ஒரே தேசம், ஒரே அரசு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த பல்வேறு தேச அரசுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அனைத்து அரசுகளும் தங்களது தேசிய வாழ்க்கையின் நான்கு சுவர் எல்லைகளுக்குள் செயல்படுகின்றன. அதன் காரணமாக, முதலாளித்துவவாதிகளால் நிலைபெறச் செய்யப்பட்ட சுரண்டல் மற்றும் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறைகளால் உருவாக்கப்பட்ட முதலாளித்துவ சமூக அமைப்பு புரட்சிகரமாக தூக்கியயறியப்பட வேண்டியதை அவசியமானதாக்குகின்ற சூழ்நிலைகளும் ஒவ்வொரு தேசத்திற்குத் தேசம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வழிகளில் தேசிய அளவிலேயே உருவாகின்றன முதிர்ச்சியடைகின்றன. இதனாலேயே புரட்சியும் ஒவ்வொரு தனிப்பட்ட நாட்டிலும் தனித்தனியாக நடைபெறவேண்டியுள்ளது.
உலகப் புரட்சியின் வடிவம் பற்றிய கேள்வியில், நவம்பர் புரட்சியின் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மத்தியிலேயே கருத்து மாறுபாடுகள் இருந்தன. லெனினின் கருத்துக்கு மாறுபட்டு ட்ராட்ஸ்கி இது உலகப்புரட்சி என்பதால், ஒரே வீச்சில் இல்லாவிட்டாலும் இடைவெளியில்லாத ஒரே தொடர்ச்சியில் உலகம் முழுவதும் இது நிறைவுசெய்யப்பட வேண்டும், இல்லாவிட்டால் புரட்சியின் வெற்றிகளைத் தக்க வைப்பது சாத்தியமில்லாமல் போய்விடும் என்று முடிவு செய்தார். ஆனால், வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்ட நவம்பர் புரட்சியும் சோவியத் யூனியன் என்ற பெயரில் வெற்றிகரமாக நிறுவப்பட்ட தொழிலாளி வர்க்க அரசு அதிகாரமும் வழங்கிய நிதர்சனமான உதாரணத்தின் மூலம் உலகப் புரட்சி பற்றிய கருத்தாக்கம் சார்ந்த லெனினது புரிதலே சரியானது என்பது நிரூபிக்கப்பட்டது. தொழிலாளி வர்க்கப் புரட்சி என்பது உள்ளடக்கத்தில் (தன்மையில்) சர்வதேசத் தன்மையுடையது, ஆனால் வடிவத்தில் (நடைமுறையில்) தேசிய அளவிலானது என்பதே லெனினது புரிதல்.
அதே நேரத்தில், தேசிய அளவில் செய்து முடிக்கப்பட்ட இப்புரட்சியானது, பொருளாதார, அரசியல் மற்றும் கல்வி கலாச்சாரத் தளங்களில் புரட்சியின் வெற்றிகளைத் தக்க வைப்பதில் ஒரு நாட்டின் எல்லைக்குள் எவ்வளவுதான் வெற்றியடைந்திருந்தாலும், அதுபோன்ற புரட்சிகள் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் அல்லது குறைந்தபட்சம் ஒரு உலக சக்தி என்ற வகையில் முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்தை முடமாக்கக் கூடியளவிற்கு அத்தனை நாடுகளில் நடந்தேறினால் அன்றி அல்லது அதுவரையில் வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயக் கட்டத்தை அடைவது சாத்தியமல்ல என்பதை லெனின் நன்கு அறிந்திருந்தார்.
இரண்டு பொறுப்புகள்
மிகச் சரியாக இதற்காகவே சோவியத் யூனியன் தான் உருவானது முதல் இரண்டு வகையான பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் எப்பொழுதும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. ஒன்று இறுதி இலக்காகிய வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயத்தை நோக்கி உந்தித் தள்ளி, சோசலிச அரசையும் அதன் பொருளாதாரத்தையும் ஒரு சேர முன்னேற்றுவது, இரண்டாவது, உலகிலுள்ள மற்ற அனைத்து நாடுகளிலும் உள்ள முதலாளித்துவ எதிர்ப்புப் புரட்சிகர சக்திகளான கம்யூனிஸ்டுகளுக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்க முயற்சிப்பது.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்டுகளுக்கும் காலனி மக்களின் விடுதலைப் போராட்டங்கள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களுக்கும் சோவியத் யூனியன் அளித்துவந்த உதவிகள் அனைத்தும், நவம்பர் புரட்சியினால் துவக்கிவைக்கப்பட்ட உலகத் தொழிலாளிவர்க்கப் புரட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய இப்பொறுப்புணர்வினால் உந்தப்பட்டவையே.
பலர் இந்த உதவிகளை, சோவியத்யூனியன் செல்வச் செழிப்பானதொரு நாடாக இருந்ததால் அதனிடமிருந்து பெறப்படுபவை என்று நினைத்தனர். மற்றவர் சிலரோ, குறிப்பாக ஏகாதிபத்திய ஆதரவாளர்கள், இந்த உதவிகள் மூலம் சோவியத் யூனியன் பல்வேறு நாடுகளில் தனது ஏஜென்டுகளை உருவாக்குகிறது என்று அவதூறு செய்தனர். ஆனால் உண்மை முற்றிலும் வேறானதாக இருந்தது. நவம்பர் புரட்சியானது உள்ளடக்கத்தில் சர்வதேசியத் தன்மைவாய்ந்ததொரு புரட்சி என்ற கருத்தாக்கத்திலிருந்து உருவான சோவியத்யூனியனின் கடமையாக அது இருந்தது.
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்
ரஷ்யாவில், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசைத் தூக்கியயறிந்த பின்னர் நவம்பர் புரட்சியின் மூலம் ஏற்படுத்தப்பட்ட சோவியத் அரசு அதிகாரம் என்பது ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக இருந்தது. கார்ல் மார்க்ஸ் தனது மாபெரும் படைப்பாகிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில், முதலாளித்துவம் தூக்கியயறியப்படுவதற்கும் வர்க்கமற்ற கம்யூனிசக் கட்டம் எனும் இலக்கை சமூகம் அடைவதற்கும் இடையிலுள்ள இடைப்பட்ட காலகட்டத்தின்போது அரசு அதிகாரம் என்பது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் தவிர வேறெதுவாகவும் இருக்க முடியாது என்று நீண்ட காலத்திற்கு முன்பே வெளிப்படையாக அறிவித்தார்.
பாரி கம்யூன் படிப்பினை
இப்பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்து மார்க்ஸின் எண்ணத்தில் ஒரு சூனியத்தில் இருந்து உதயமானதல்ல. மிகச் சரியாக இது, நவம்பர் புரட்சிக்கு வெகுகாலத்திற்கு முன்னர் பிரான்சில் நடந்த முதல் தொழிலாளிவர்க்கப் புரட்சியான பாரி கம்யூனின் தோல்வியின் வரலாற்றிலிருந்து பெற்ற கசப்பான படிப்பினையாகும். நடந்தது என்னவென்றால், தொழிலாளிவர்க்கம், முதலாளித்துவத்தில் உண்மையான ஜனநாயக உரிமைகளும் தங்களது குறைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளும் மறுக்கப்பட்டு முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் தங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறைகள் மற்றும் அடக்குமுறைகளில் இருந்து கசப்பான அனுபவத்தைப் பெற்றிருந்தனர். முதலாளித்துவவாதிகளை அதிகாரத்தில் இருந்து தூக்கியயறிந்துவிட்டு பாரி கம்யூன் மூலம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் வெற்றியடைந்திருந்த தொழிலாளி வர்க்கம், வர்க்க வேறுபாடோ பிற வேறுபாடுகளோ எதுவுமின்றி அனைவருக்கும் சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் வழங்கி உண்மையான ஜனநாயகத்தை இப்பொழுது தாம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதன் மூலம் முதலாளித்துவத்தின் கீழ் தாம் பட்ட துன்பங்களைச் சரிசெய்ய வேண்டும் என்றும் நினைத்தது.
அதன் முடிவு, தூக்கியயறியப்பட்ட முதலாளிகள், தொழிலாளி வர்க்கத்தின் இந்த நல்லெண்ணத்தை அதிகாரத்திலிருந்து தொழிலாளர்களை விரட்டுவதற்கு சமூகத்தின் பிற பிற்போக்கு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து சதி செய்வதற்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசு அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றி, முதலாளித்துவ அமைப்பு முறையை மீட்டுக் கொண்டனர். இதனால் பாரி கம்யூனின் மகத்தான வெற்றியாகிய முதல் தொழிலாளி வர்க்கப் புரட்சி, மூன்று மாத காலமே நிலைத்திருந்தது. ஆனால் அது கற்பித்த படிப்பினைகள் ஏராளம். இந்த அனுபவத்திலிருந்தே, முதலாளித்துவத்தைத் தூக்கியயறிந்த பின்னர், முதலாளித்துவத்தின் மிச்ச சொச்ச சக்திகளோடு பிற பிற்போக்கு சக்திகளும் முற்றாக ஒழிக்கப்படாதிருக்கும் வரை தொழிலாளிவர்க்கம், முதலாளிகள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சம உரிமையும் சம அந்தஸ்தும் வழங்கும் ஓர் அரசை ஏற்படுத்துவது பற்றி நினைக்கக் கூடாது; அது வரையிலும் அரசு, ஓர் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசாகவே இருக்க வேண்டும் என்று தொழிலாளி வர்க்கத்திற்குக் கற்றுக் கொடுத்த படிப்பினை பெறப்பட்டது.
இந்தப் படிப்பினையினால் முன்னேற்பாட்டோடு இருந்து கொண்ட நவம்பர் புரட்சியின் மூலம் பிறந்த சோவியத் யூனியனின் அரசு, ஏகாதிபத்தியம் மற்றும் பிற பிற்போக்கு சக்திகளின் அனைத்து விமப் பிரச்சாரங்களையும் தாண்டி மேலும் மேலும் வலிமையோடு வளர்ந்தது. ஏகாதிபத்திய வாதிகள் மற்றும் முதலாளித்துவவாதிகள் மற்றும் அவர்களைப் பின்பற்றித் தவறாக வழிநடத்தப்பட்டவர்களின் முகாமைச் சேர்ந்தவர்களும் இணைந்து, சோவியத் யூனியனின் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை, முதலாளி வர்க்கத்தின் பாசிச சர்வாதிகாரத்திற்குச் சமமானதாகக் காட்டுவதற்கு முயன்றனர். அவர்கள் தங்களது பிரச்சாரத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக அனைத்துவகையான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினர். ஆனால் ஏகாதிபத்தியவாதிகள் முதலாளித்துவவாதிகள் மற்றும் அவர்களது முகாமினைச் சேர்ந்தவர்கள் தவிர அவர்களின் பொய்யாகப் புனைந்துரைக்கப்பட்ட பிரச்சாரம் எதையும் எவரும் கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால், பொதுவாக மக்கள், குறிப்பாக உழைக்கும் மக்கள் அது பற்றிய உண்மை முற்றிலும் வேறானது என்பதை உறுதிபட அறிந்தவர்களாக இருந்தனர்.
பெரும்பான்மை மக்களுக்கு நடைமுறை ரீதியிலான கூடுதல் உரிமைகளை வழங்குவதே பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் உண்மை என்னவென்றால், அனைத்து முதலாளித்துவ ஜனநாயகங்களும், தீர்மானிக்கவும் தேர்ந்தெடுக்கவும் மக்களுக்கு இருக்கும் உரிமை, பெரும்பான்மையினரின் ஆட்சி, சட்டத்தின் ஆட்சி போன்ற பல வானுயர்ந்த முழக்கங்களின் கீழ் உண்மையில் சாராம்சத்தில் முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே இருக்கின்றன. அதன் பல்வேறு மட்டங்களில் இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் என்று சொல்லப்படுபவற்றின் அனைத்துச் செயல்பாடுகளிலும் முதலாளிவர்க்கம், இந்த அல்லது அந்த வழிகளில், வெளிப்படையாக அல்லது பல்வேறு ரகசியமான வழிமுறைகளில் தனது மேலாண்மையைத் தக்க வைத்துக் கொள்கிறது. இந்த முறையில் இந்த அனைத்து முதலாளித்துவ ஜனநாயகங்களிலும் இறுதி ஆய்வின்படி, முதலாளித்துவ வர்க்கமே உண்மையில் ஆள்கின்றது. ஆளும் இந்த முதலாளி வர்க்கம் சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினை, ஒரு மிகச் சிறுபான்மையினரை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது இப்படியிருக்க, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில், அது ஒரு வர்க்கத்தின் மீதான மற்றொரு வர்க்கத்தின் ஆட்சி என்று எடுத்துக் கொண்டோமானால், அது மிகப் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வர்க்கத்தின் ஆட்சியாகும். அந்த நோக்கிலிருந்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற வகையில், சமுதாயத்தின் மிகச் சிறு பகுதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வர்க்கத்தின் மீதான மிகப் பெரும்பான்மையான பகுதி மக்களின் ஆட்சியாகவே சோவியத் யூனியனின் சோசலிச ஆட்சி இருந்தது.
ஆனால் முதலாளித்துவம் மட்டுமல்ல கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மக்கள் கடந்து வந்த மற்ற வடிவிலான வர்க்க சமுதாயங்களினுடைய தீய ஒழுக்கங்கள் மற்றும் எதிர்மறையான தாக்கங்கள் அனைத்திலிருந்தும் அவர்களை விடுவிப்பதன் மூலம் முற்றிலும் புதியதொரு வர்க்கமற்ற சமுதாயத்தைக் கட்டியயழுப்ப வேண்டிய கம்யூனிஸ்டுகள், வரலாற்றிலிருந்து மேலும் பல படிப்பினைகளை இன்னமும் கற்கவேண்டியுள்ளது.
சோசலிச இடைமாறுதல் கட்டம் கடுமையான மற்றும் கூர்மையான வர்க்கப் போராட்டக் காலகட்டமே
நவம்பர் புரட்சியின் மாபெரும் தலைவராகிய லெனின், முதலாளித்துவத்தைப் புரட்சிகரமாகத் தூக்கியயறிந்ததன் மூலம் நிறுவப்பட்ட சோவியத் யூனியனின் அரசானது, புரட்சியின் இறுதி இலக்காக இருந்த வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயமாக இருக்கவில்லை என்பதை முழுமையாக அறிந்திருந்தார். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறிச் செல்லும் இடைமாறுதல் காலத்தின் சமுதாயமாகவும் அதன் அரசு வடிவமாகவும் மட்டுமே அது இருந்தது. வர்க்க மற்ற கம்யூனிச சமுதாயக் கட்டத்தை அடைவது என்பது மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்காக ஒரு வர்க்கத்தின் கையில் இருக்கும் ஒடுக்குமுறைக் கருவி என்ற வகையில் அரசு அதிகாரமானது எந்தத் தேவையுமற்றதாக ஏற்கனவே ஆகி, அதற்குள் உலர்ந்து உதிர்ந்துவிட்டது என்பதையே எப்போதும் குறிக்கும். சோவியத் யூனியனில் இது நடக்கவில்லை. இத் தெளிவான புரிதலுடன் லெனின், இந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் இடைமாறுதல் காலத்தில் அனைத்து அம்சங்களும் தழுவிய கடுமையான வர்க்கப் போராட்டம் தொடர வேண்டும் என்பதை பொதுவாகப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கமும் குறிப்பாகக் கம்யூனிஸ்டுகளும் ஒரு கணமும் மறக்கக் கூடாது என்று பலமுறை எச்சரித்தார். முதலாளித்துவக் கால கட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிராக அதிகாரத்தைப் பயன்படுத்துகின்ற முதலாளிகளின் கைகளில் அரசு அதிகாரம் இருந்திருக்க, இப்பொழுதோ பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ், முதலாளி வர்க்க சக்திகளுக்கு எதிராகவும் புரட்சியை அழிப்பதற்கான அவர்களது அனைத்து முயற்சிகளுக்கு எதிராகவும் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடிய தொழிலாளி வர்க்கத்தின் கைகளில் அரசு அதிகாரம் இருக்கிறது என்பது மட்டுமே, புரட்சிக்கு முந்தய முதலாளித்துவ சகாப்தத்துடன் அதற்கிருக்கும் வேறுபாடாகும். மேலும் தேவையேற்படும் போது அதனைச் செயல்முனைப்போடு பயன்படுத்தும் வகையில் இந்த முறையில் அதன் கூர்மை மற்றும் அதன் ஆற்றல் மங்கிவிடாமல் பராமரிக்கப்பட வேண்டும்.
(இந்த உரையின் இறுதிப்பகுதி அடுத்த இதழில்)