என்னுடன் அருகினில்

நீ சேர்ந்து நடப்பதாக எண்ணி

நிலத்திலிருந்து கால்கள் மிதக்க

தனியாகச் சத்தமாக

பேசிப் பேசி நடக்கிறேன்

திணறிப்போய்ப் பார்த்திருந்த

நடைபாதை வியாபாரிகள்

இன்றும் தம் தொழில் மறந்தனர்

உன்னாலே

 

ஓர் நாள் இதேபோல்

நாமிருவரும் மட்டும்

மஞ்சள் பூக்கள் உதிர்ந்திருக்கும்

இதே சாலைவழி கைகோர்த்து

ஒன்றாக வரும் நாளிலும்கூட

இதே மாந்தர் தம் முகங்களின்

பொறாமை பூத்த விழிகளை

நம் மேல் அலையவிட்டு

தம் தொழில் மறப்பரென

எண்ணிப் பார்க்கவும்

இதமாகத்தான் இருக்கிறது

- எம்.ரிஷான் ஷெரீப்

Pin It