சாதி அடிப்படையில், நிற அடிப்படையில், மொழி அடிப்படையில், இன அடிப்படையில் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இந்த மாறுபட்ட சமூகத்தின் ஒரு பிரிவு மற்ற பிரிவுகளை அடக்கி, அதன் மீது ஆதிக்கம் செலுத்தி, அதன் மூலம் அடக்கப்படும் பிரிவுகளின் பொருளாதார, சமூக நலன்களைத் தமதாக்கிக் கொள்ளும் போக்கு உலகெங்கும் விரவிக் கிடப்பதை எவரும் மறுக்க முடியாது. ஆதிக்கம் செலுத்தும் சமூகம் எதனடிப்படையில் அடக்குமுறைகளை உருவாக்குகிறதோ அதைப் பொறுத்தே அடிப்படைச் சமூகத்திலிருந்து உரிமைக் குரல்கள் ஒலிக்கின்றன.
 
விடுதலைக் குரல்கள்

 சாதி அடக்குமுறைகளையும் நிறப்பாகுபட்டு அடக்குமுறைகளையும் எதிர்த்து, சமூக விடுதலைக் குரல்களும், பொருளாதார ஒடுக்குமுறைகளை எதிர்த்து வர்க்க விடுதலைக் குரல்களும் எழுந்தது நாம் ஏற்கனவே அறிந்தவையே. இந்த வகையில், பன்னெடுங்காலமாகப் பல்வேறு வடிவங்களில் அறியப்பட்டு, கடந்த சில நூற்றாண்டுகளாக சரியான வடிவத்தை அடைந்திருக்கும் ஒரு முதன்மையான விடுதலைக் குரல்தான் தேசிய இன விடுதலைக் குரலாகும். அரசர்களின் ஆட்சி அதிகாரத்திற்கான நாற்காலிப் போர்களுக்கு இடையில் மக்களின் உரிமைக்கான கலகக் குரல்கள் வரலாற்றில் எப்போதும் எழுந்தவாறுதான் இருந்திருக்கின்றன.
 
புதிய விடுதலைக் குரல்கள்

 எல்லாவற்றிற்கும் அடிப்படை, உண்மையில் பொருளாதார விடுதலையாகவே இருந்தது. தாங்கொணாத அளவுக்கு நடந்த பொருளாதாரச் சுரண்டலைப் பொறுக்க முடியாத மக்களின் உரிமைக் குரல்கள், வர்க்கப் போராட்டாமாக வடிவெடுத்து இலெனின் காலத்தில் வெற்றியை எட்டிப் பிடித்தது. ஏறக்குறைய அதே காலகட்டத்தில் அரசரின் ஆட்சி முறை அகற்றப்பட்டு, மக்கள் அரசுகளின் ஆட்சி முறை நடைமுறையில் வரத் தொடங்கியது. அந்த அரசுகள் யாரால் அமைக்கப்பட்டன? அவை உண்மையில் மக்கள் அரசுகள்தாமா? அவை, தம் ஆளுகையில் இருந்த மக்கள் அனைவருக்காகவும் செயல்பட்டனவா என்ற கேள்விகளிலிருந்து புதிய விடுதலைக் குரல்கள் எழத் தொடங்கின.
 
 உலகின் அரசியல் வரலாற்றில் இவை போன்ற பல பதிவுகள் இருக்கின்றன. அவற்றுள் நம் கண் முன்னால் நடந்த ஓர் உரிமைப் போராட்டம்தான் இந்திய விடுதலைப் போராட்டம் ஆகும். இங்கிலாந்து உள்ளிட்ட பல மேலை நாடுகளின் காலனிய ஆதிக்கத்தையும், சுரண்டலையும் எதித்து, பல்வேறு நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் பல உரிமைக் குரல்கள் எழுந்தன. அனைத்துப் போராட்டங்களும் பெரும்பாலும் இனக்குழுக்களின் அடிப்படையிலேயே நடைபெற்றன. அந்தந்த இனங்களின் தலைவர்களாய் அப்போதிருந்த அரசர்களோ, குறுநில மன்னர்களோ அப்போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர். அவ்வரசர்களும் மன்னர்களும் வெற்றிகொள்ளப்பட்டு முற்றிலும் அழித்தொழிக்கப்பட்ட பின்னர், மக்கள் தாங்களாகவே அப்போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினர்.

 அரசியல் விடுதலைப் போராட்டம் என்று சொல்லப்பட்ட அப்போராட்டங்கள் அனைத்தும் உண்மையில் தேசிய இன உரிமைப் போராட்டங்களே. இந்தியா என்ற ஒரே நிலப்பரப்பாக இருந்த போதிலும் பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்து வந்த இந்தியாவில், விடுதலைப் போராட்டங்கள் ஆங்காங்ககே அந்தந்த இனக்குழுக்களால் நடத்தப்பட்டு வந்தது.
 
ஒருங்கிணைந்த இனக்குழுப் போராட்டம்

 பெரும்பாலும் மொழி அடிப்படையிலும், சமூகப் பழக்க வழக்கங்கள் அடிப்படையிலும் மிகக் குறைவாக மத அடிப்படையிலும் இனக் குழுக்கள் போராடத் தொடங்கின. ஆங்கிலேயரால் வெற்றி கொள்ளப்பட்ட அரசர்களின் ஆட்சி எல்லை என்ற புவியியல் அடிப்படையிலும் சில குழுக்கள் உரிமைக்குரல் எழுப்பின. மொழி வழி, மத வழி, நில வழித் தேசிய இனங்கள், தத்தமது இனங்களின் மீதான அடக்குமுறையை - சுரண்டலைத் தவிர்க்கத் தமக்கான உரிமைகளை மீட்பது இன்றியமையாததாக இருந்தது. எந்தவழி இனமாக இருந்தாலும் இனத்தின் ஒட்டுமொத்தக் குரல்களும் ஒரே விடுதலைக் குரலாகவே ஒலித்தன.
 
தமிழர்களின் போராட்டத் தலைவராக வ.உ. சிதம்பரனார்; மராத்தியர்களின் தலைவராகத் திலகர்; வங்காளிகளின் தலைவராக விபின் சந்திரபால்; வடமேற்குப் பகுதியின் தலைவராக லாலா வஜபதிராய்; இவர்களைப் போன்ற மக்கள் குழுக்களின் தலைவர்கள் மதத்தையும் இனத்தையும் பொருத்தமான கருவிகளாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னரே ஹைதர் அலி, திப்புசுல்தான், தமிழகத்தின் பல பாளையக்காரர்கள் நிலவழித் தேசியத்தைக் காக்கப் போராடினர். அந்தப் போர்தான் வெள்ளையர் எதிர்ப்புப் போர். பின்னர் வெற்றிக்கான உத்தியாக மத, இன, நிலவழித் தேசிய இனங்கள் ஒருங்கிணைத்து தங்களது போராட்டத்தைத் தொடர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.
 
அடக்கப்பட்ட இனங்கள் வெவ்வேறானவையாக இருந்த போதும் ஆதிக்கம் செலுத்தியது வெள்ளையர் என்ற ஒரே இனமாக இருந்ததால், அனைவரது போராட்டங்களும் ஒற்றை எதிரியை நோக்கியே இருந்தன. ஒற்றை எதிரியான வெள்ளையனும் மக்களின் போராட்ட வீச்சைக் குறைக்கச் சில உத்திகளை உருவாக்கினான். அதன் விளைவாக ஆங்கிலேயரான ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரால் காங்கிரசுக் கட்சி தொடங்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்தின் வீச்சைக் குறைப்பதும் நீர்த்துப் போகச் செய்வதும் அடிமை நிலையிலேயே மக்களை நிலை நிறுத்துவதுமே தொடக்கத்தில் காங்கிரசுக் கட்சியின் நோக்கமாக இருந்தது.

 ஆனால் மக்களின் நோக்கமோ வேறு மாதிரியாக இருந்தது. பிரித்தாளும் சூழ்ச்சி செய்து, இனக்குழுக்களிடேயே பகையை மூட்டி அடிமை கொண்ட பழைய வரலாற்றை அறிந்திருந்தால் எல்லா இனக்குழுக்களின் மக்களும் ஒற்றுமையாக வெள்ளையனை எதிர்க்கத் தொடங்கினர்.

 காந்தியாருக்குக் கிடைத்த மகாத்மா என்ற சிறப்பால், பிற தலைவர்களின் புகழ் மங்கியது. அவரையும் அவர் சார்ந்த காங்கிரசுக் கட்சியினரையுமே ஒட்டு மொத்தத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடி உருவாகியது.
 
விடுதலைக்குப் பிறகும் ஒரே இந்தியா

 பல்வேறு தேசிய இனங்களை அடிமைப்படுத்தி ஆண்டு வந்த வெள்ளையர் வெளியேறியபின், ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான விடுதலையைப் பெற வாய்ப்பாக, அந்தந்த இனத்தின் விருப்பம் கேட்டறியப்பட்டு அதற்கேற்ப இந்தியா என்ற செயற்கைத் தேசத்தில் பல அரசுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பல்வேறு தேசிய இனங்களும் தொடர்ந்து, ஒரே இந்தியா என்ற இணைப்பு அரசை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. தேசப்பற்று, தேச ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை முதலிய மயக்குச் சொற்களால் ஒரே இந்தியாவை ஏற்க வேண்டிய நெருக்கடியை மக்களுக்கு ஏற்படுத்தின. இந்திய விடுதலை என்பது, தன் இனத்திற்கான விடுதலையாகவும் இருக்கும் என ஒவ்வொரு தேசிய இனத்தவரும் நம்பினர்.

 ஆனாலும், வெள்ளையர் - இந்தியர் ஆட்சிக் கைமாற்றம் நேரு, இராசாசி போன்ற மேல்தட்டுப் பார்ப்பன, பனியா காங்கிரசுத் தலைவர்களிடம் வந்தபோது, அதை ஏற்கப் பல தேசிய இனத் தலைவர்கள் மறுத்தனர். தனித் திராவிட நாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தந்தை பெரியாரும், பாகிஸ்தான் கோரிய முகமதலி ஜின்னாவும் திருவிதாங்கூர், அய்தராபாத், ஜம்மு – காஷ்மீர், மணிப்பூர் அசாம் முதலான பகுதிகன் தலைவர்களும் ஒரே இந்தியாவை ஏற்க மறுத்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.

 மக்கள் விரும்பும் வண்ணமே வரலாறு நிகழ்ந்துவிடுவதில்லை. வலுவான ஒற்றை இந்தியா என்ற முழக்கத்தில் தேசிய இனங்களின் உரிமைக்குரல்கள் வலுவிழந்து போயின. காங்கிரசு என்ற பேரமைப்பு எழுப்பிய பெருங்குரலில் மொழிவழி, நிலவழித் தேசியர்களின் குரல்கள் அடங்கிப் போயின. ஆயினும் மதவழித் தேசியக் கோரிக்கை வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. ஜம்மு – காஷ்மீர், மணிப்பூர், இலங்கை ஆகியவை தனித்தனி நாடுகளாகவே இருந்து வந்தன.

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு

 கூட்டாட்சித் தத்துவம் கடைப்பிடிக்கப்படும் என்றும் விடுதலைக்குப்பின் நாட்டில் பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓடும் என்றும் மயக்கும் உறுதிமொழிகள் ஒருபக்கம் சொல்லப்பட்டன. அதே வேளையில், சூழ்ச்சிகளும் படைத்தாக்குதல்களும் அடக்குமுறைகளும் இன்னொரு பக்கம் மேற்கொள்ளப்பட்டன. அதனால் எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்பட்டுப் பல தேசிய இனங்களின் மரபுவழி நிலப் பகுதிகளை இணைத்து ஒற்றை இந்தியா உருவாக்கப்பட்டது.
 வெள்ளையர் வருவதற்கு முன் ஒருபோதும் இந்தியாவுடன் இணைந்திராத தமிழ்நாடு, இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. எனவே தான் தந்தை பெரியார், 1947-ஆகஸ்ட்டு 15-ஆம் நாள் தமிழர்களுக்குத் துக்க நாள் என அறிவித்தார்.

இணைந்து வாழ முடியாதா?

 பல்வேறு தேசிய இனங்கள் ஒரே நாடாக இணைந்து வாழ முடியாதா என்ற கேள்வி நம்முன் எழுகிறது. வாழ முடியும்: எந்தத் தனிப்பட்ட தேசிய இனமும் பிறதேசிய இனங்களை ஆதிக்கம் செலுத்தும் இனமாகவோ, பெரும்பான்மை என்பதைப் பயன்படுத்திச் சுரண்டுகின்ற – அதிகாரம் செலுத்துகின்ற இனமாகவோ மாறாத வரை இணைந்து வாழ முடியும். ஆனால், இந்தியாவில் நிலைமை அவ்வாறு இல்லை.

 இந்திய நிலப்பரப்பை ஒற்றை நாடாகக் காக்க வேண்டும்: அதன் எல்லைகளை விரிவாக்க வேண்டும் என்ற ஆசையுடன், மக்களின் விருப்பமின்றி இந்திய அரசு தன்னுடன் இணைந்துக்கெண்ட காசுமீர், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, அசாம் முதலான நிலப்பரப்புகளில் வாழும் மக்கள் இன்றளவும் இந்தியாவைப் பகை அரசாகவே கருதிப் போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டங்களை ஒடுக்கப் பெரும் இராணுவ நடவடிக்கைகளும் ஆதிக்க அச்சுறுத்தல்களும் இந்திய அரசால் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. போராடும் தேசிய இனங்களின் எளிய, இயல்பான உரிமைகள் கூட வழங்கப்படாமல், வல்லாதிக்கக் கால்களால் மக்கள் நசுக்கப்படுகின்றனர்.

 தேசிய இனத்திற்கான உரிமைகளைக் கோருவது தேசத் துரோகக் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்தி மொழி பேசும் தேசிய இனம் அல்லாத பிற தேசிய இனமக்கள் அனைவருமே இந்திய அரசின் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாகத் தமிழ்த் தேசிய இனம் கடுமையான அழுத்தங்களுக்கும் புறக்கணிப்பிற்கும் உள்ளாகியிருக்கிறது.

 இந்திய நடுவண் அரசு, பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான சட்டங்களை இயற்றியது. ஒரு மொழிவழித் தேசிய இனத்தை அழிப்பதற்கு, அவர்களது மொழியைச் சிதைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து, நாடு முழுவதற்குமான முதன்மை மொழி இந்தியே என்ற கொள்கை முடிவை அறிவித்தது: பிற தேசிய மொழிகள் அனைத்தும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இந்தி முதன்மையை எதிர்த்து அறுபதுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த உரிமைப் போராட்டமும் அப்போராட்டத்தில் தமிழ் இளையோரின் உயிர் ஈகங்களும் விடுதலை பெற்ற எந்த நாட்டிலும் நடந்ததில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, நடுவண் அரசும் மாநில அரசும் ஒரே தரமானவையே, ஆயினும் கடந்த அறுபது ஆண்டுகளில் மாநில அரசுகளின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டன: தில்லி அரசிடமிருந்து உதவித்தொகை வாங்கிப் பிழைக்கும் கீழ்நிலை அரசுகளாக மாநில அரசுகள் மாற்றப்பட்டுள்ளன. மாநில சுயாட்சி என்பதைக் கொள்கையாகக் கொண்ட கட்சிகள் மாநிலங்களில் ஆட்சியில் இருந்த போது கூட நடுவண் அரசின் கடுமையான இறுக்கத்திலிருந்து அவை தம்மைக் காத்துக்கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி நடுவணரசில் பங்கு வகித்த காலத்திலும் கூடத் தம் தேசிய இனத்தின் நலன்களுக்காகக் குரல் கொடுக்க முடியாத அழுத்தத்தை அக்கட்சிகள் எதிர்கொள்ள நேர்ந்தது.

தமிழரைக் கொல்ல உதவிய இந்தியா

 இந்தியாவில் வாழும் தமிழ்த் தேசிய இனத்தின் உறவுகளான ஈழத்தமிழர்கள், வெறும் 30கி.மீ. தொலைவில் மிகப் பெரிய வாழ்வியல் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்ட போது, அவர்களுக்கு எந்த உதவியும் இந்திய அரசு செய்யவில்லை. மாறாகத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்களத் தேசிய இன அரசுக்குப் படைக்கருவிகளையும் உளவுத் தகவல்களையும் வேறு உதவிகளையும் இந்திய அரசு செய்தது. ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கதறிய தமிழ்த் தேசிய இனத்தின் கதறலை இந்திய அரசு சிறிதும் பொருட்படுத்தவில்லை. மேலும், ஒட்டுமொத்த மானுட இனமே வெட்கித் தலைகுனியும்படி ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இராசபட்சேவைச் சிறப்பு விருந்தாளியாகத் தில்லிக்கு வரவழைத்து இந்திய அரசு சிறப்புச் செய்து மகிழ்ந்தது.

 இராசபட்சே மீதான போர்க்குற்ற விசாரணைக்கான நடவடிக்கைகளைத் தடுத்துப் பன்னாட்டு அரங்கத்தில் சிங்கள இனவெறி ஆதிக்க அரசை இந்தியா பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஓர் ஆதிக்க இனம் இன்னோர் ஆதிக்க இனத்துக்குத்தான் உதவும் என்ற உண்மை உறுதி செய்யப்பட்டது.

தேசிய இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் இந்திய அரசு

 மொழி, இன அடிப்படையில் மட்டுமல்லாமல், எல்லைச் சிக்கல்கள், ஆற்றுநீர்ப்பங்கீட்டுச் சிக்கல்கள் ஆகியவற்றில் கூட அருகருகே உள்ள தேசிய இனங்களுக்கு நடுவே பகையை ஏற்படுத்தி, அப்பகை தீராதவாறு இந்திய அரசு பார்த்துக் கொள்கிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக பாலாறு, காவிரி, முல்லைப் பெரியாறு தொடர்பான சிக்கல்கள் உள்ளது.
 இந்திய அரசால் தரப்படும் இத்தகைய அழுத்தங்கள் தமிழ்த் தேசிய இனத்திற்கு மட்டும்தான் உள்ளனவா என்றால் இல்லை. காசுமீரில் இந்தியப் படையினரின் கடும் அடக்குமுறை நடவடிக்கைகளால் அம்மண்ணின் மைந்தர்களில் குறிப்பிட்ட விழுக்காட்டினர் அழிக்கப்பட்டுள்ளனர். அசாம், மணிப்பூர் முதலிய பகுதிகளில் தேசிய இனங்களுக்கும் இதே நிலைதான்.

இந்தியாவில் இந்தித் தேசியம்

 காங்கிரசால் மட்டுமின்றிப் பாரதிய ஜனதாக் கட்சியாலும் பொதுவுடைமைக் கட்சிகளாலும் இந்தியத் தேசியம் விரிவாகப் பேசப்படுகிறது. பரப்புரை செய்யப்படுகிறது. இதற்கு எதிராக எழும் குரல்கள் அனைத்தும் தேசத்துரோகம் என்ற ஒற்றைச் சொல்லால் அடக்கப்படுகின்றன. உண்மையில் இந்தியத் தேசியம் என்பது இந்தித் தேசியம் மட்டுமே. பலதேசிய இனங்களின் சிறைக் கூடமே இந்தியா என்பது தான் உண்மை.

 இந்தியப்பண்பாடு என்று சிலர் பெருங்குரலெடுத்து முழங்குகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவுக்கென்று ஒரு பொதுவான பண்பாடு எப்பொழுதும் இருந்ததில்லை. இந்தியாவின் பொதுப்பண்பாடு எனச்சிலர் சொல்வது பார்ப்பனியப் பண்பாடே.

நாம் மேற்கொள்ள வேண்டிய முடிவு

 ஒரு தேசிய இனத்தின் மொழி, இன, நலன்கள் பாதிக்கப்படும் போது உரிமைக் குரல் எழுவது இயற்கையே. அவ்வாறு எழுப்பப்படும் குரல்கள், எந்த அளவு உலக மக்களால் பார்க்கப்படுகின்றன, அந்தக் குரல்களுக்கு எவ்வாறு பதிலளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் உரிமைக்குரல்கள் விடுதலை எழுச்சியாக வீச்சு பெறுகின்றன.

 இராசீவ் காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டுச் சிறையில் வாடும் மூன்று தமிழர்களின் உயிரைக் காப்பதற்காக அண்மையில் தமிழ்த் தேசிய இனம் உரிமைக் குரல் எழுப்பியது. அதற்கு இந்தியா எப்படிப் பதிலளித்தது என்பதை நாம் அறிவோம்.

 இனி, இந்தியாவில் அனைத்து உரிமையும் பெற்று வாழ முடிகின்ற ஒரே இனம் இந்தித் தேசிய இனம் மட்டுமே. இயல்பாகவே உரிமைக் குரல் எழுப்பும் தமிழ்த் தேசிய இனத்தை, இந்தியா பகையாளியாகவே பார்த்து வருகிறது.

ஒரே ஒரு முடிவுதான்

 இந்தியாவின் பொருளாதாரத் கொள்கைகள் நாட்டு மக்களையும் நாட்டின் வளத்தையும் வெளியாருக்கு விற்றுக் கொண்டிருக்கும் சூழலில், முற்று முழுதாகப் பணக்காரர்களுக்கு மட்டுமே இந்நாட்டில் வாழும் தகுதி இருக்கும் சூழலில், இன்றும் முழுதும் முன்னேறாத இனமாக இருக்கும நம் தமிழ்த் தேசிய இனம் தொடர்ந்து உயிர் பிழைத்திருக்கவும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லவும் வேண்டுமானால் ஒரே ஒரு முடிவு தான் இருக்கிறது.

 அது, இந்தியத் தேசியச் சிறையிலிருந்து வெளியேறுவது மட்டுமே. நம் இனத்திற்கான உரிமைகளைப் பெறவும், நலன்களை உருவாக்கிக் கொள்ளவும், முன்னேற்றத்தை அடையவும் நமக்கு வேறு வழியில்லை. அவற்றை நாமே உருவாக்கினால் தான் உண்டு. இந்தியத் தேசியம் நமக்குத் தருவதற்கு இனி வாய்ப்பே இல்லை. நம்மைப் பகை இனமாகக் கருதும் இந்தியத் தேசியம் எனப்படும் இந்தித் தேசியம், தமிழ்த் தேசிய இனத்திற்கான உரிமைகளை மதிப்பதற்கு இனி வாய்ப்பே இல்லை.

 நமக்கென ஒரு நாடு!
 நமக்கென ஓர் அரசு!
 நமக்கென ஓர் இறையாண்மை!

இப்படி நடந்தால் தான் தமிழர் வாழ்வில் விடியலைக் காணமுடியும்.

- சு.தளபதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It