இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் மணிமேகலை இந்தியத் தத்துவங்கள் குறித்த உரையாடலைக் காப்பிய வடிவில் மிக நேர்த்தியாக அமைத்துள்ளது என அறிஞர்கள் கூறுவர். சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக இக்காப்பியம் மாதவியை மையமாக வைத்து நகர்கின்றது. பஞ்சதந்திர கதைகளைப் போன்று பாத்திரங்கள் கதை சொல்வதாக தத்துவ உரையாடல்கள் அமைக்கப்பெற்றுள்ளன. ஏராளமான பழங்கதைகளும் முற்பிறவி வரலாறுகளும் தொன்மங்களும் இக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. அமுதசுரபி என்னும் தொன்மம் இக்காப்பியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றது. தொன்மவியல் அடிப்படையில் இத்தொன்மத்தின் பொருண்மையை இக்கட்டுரை விளக்க முயல்கின்றது.

அமுதசுரபி என்பது எடுக்க எடுக்க அன்னம் வளர்கின்ற சிறப்பு தன்மையைப் பெற்ற பாத்திரம் ஆகும். இது முதலில் ஆபுத்திரனால் பெறப்பெற்று பின்னர் மணிமேகலையின் கைக்கு வந்ததாக காப்பியம் குறிப்பிடுகிறது. இது அட்சயப்பாத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பாத்திரம் ஆபுத்திரனிடமும், மணிமேகலையிடமும் எவ்வாறு வந்தது என்பதை இருவேறு கதைகளின் மூலம் மணிமேகலை சுட்டிக் காட்டுகின்றது. வாரணாசி என்னும் ஊரில் வேதம் ஓதுவிப்பவனாகிய அபஞ்சிகன் என்னும் அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி சாலி என்பவள் தீய நடத்தை உடையவளாவாள். அவள் தனது தீய நடத்தையால் உண்டாகிய பாவத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டி தான் கர்பிணியாக இருந்தும் அதைப் பாராமல் குமரிமுனைக்கு நீராடச் சென்றாள். அப்போது அவள் வழியிலேயே ஒரு குழந்தையை ஈன்றாள். அக்குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டுச் சென்றாள். அக்குழந்தை உணவு இல்லாமல் பசியால் அழுதது. அவ்வழுகை யோசையைக் கேட்டு ஒரு பசு வந்து அந்தக் குழந்தைக்குப் பாலூட்டி ஏழு நாள்வரையில்; பாதுகாத்து வந்தது.

அப்பொழுது வயனங்கோடு என்னும் ஊரில் உள்ளவனாகிய பூதியென்னும் அந்தணன் ஒருவன் தன் மனைவியோடு அவ்வழியே வந்தான். அவன் அக்குழந்தை அழுத குரலைக் கேட்டு குழந்தையை அணுகி இவன் "ஆவின் மகனல்லன்: என் மகனே'என்று கூறி அக்குழந்தையை எடுத்து ஊர் சென்று வீடடைந்து மகிழ்ச்சியுடன் வளர்த்து வந்தான். அக்குழந்தை வளரவளர உரிய காலத்துத் தன் குலத்திற்குரிய கல்விகளை நன்கு அளித்து வந்தான். ஒருநாள் அச்சிறுவன் அவ்வூரில் ஓர் அந்தணர் வீட்டில் புகுந்து, யாகசாலையில் , ஒருபசு ,மாலையைச் சுற்றிய கொம்புகளை உடையதாய்ப் பின் தனக்கு உண்டாகும் துன்பத்திற்கு அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக் கதறுவதைக் கண்டான். உடனே மனம் நடுங்கிக் கண்ணீர் உகுத்து இவர்கள் அறியாத வண்ணம் இப்பசுவைக் கவர்ந்து கொண்டு இரவில் போய்விடுவோம் என்று தன்னுள் எண்ணிக்கொண்டு ஓரிடத்தில் பதுங்கியிருந்தான்.

அன்றிரவில் அப்பசுவைக் கையில் பற்றி ஊருக்கு வெளியில் சென்றுவிட்டான். பசுவைக் காணாத அந்தணர்கள் அதனைத் தேடிச் சென்று வழியில் பசுவையும் அதனைக் கவர்ந்து சென்ற அச்சிறுவனையும் கண்டு அகப்படுத்திக் கொண்டு, அவன் கருத்தை அறியாராய் "புலையா, அப்பசுவை ஏன் இரவில் கவர்ந்து சென்றாய்?' என்று கேட்டு அவனைக் குச்சியால் அடித்துத் தண்டனையளித்தனர். அப்பொழுது பசு அவர்களுள் மிகவும் வருந்திய ஆசிரியனை முட்டி வயிற்றைக் கிழித்துக் குடலைச் சரித்து காட்டிற்கு ஓடி விட்டது.

ஆபுத்திரன் அவர்களை நோக்கி, வருந்தாதீர்கள் நான் சொல்வனவற்றைக் கேளுங்கள்: நீங்கள் வருத்தும்படி இப்பசு என்ன குற்றம் செய்தது? என்று கேட்டான். அவர்கள் ""விதியை அறியாமல் வேள்வியை இகழ்கின்றாய்: ஆதலால் நீ ஆவின் மகன் என்பதற்குப் பொருத்தமுடையவன் ஆவாய்'' என்று இகழ்ந்து கூறினர். அவர்களுள் ஓர் அந்தணன், இவனுடைய பிறப்பின் வரலாற்றை நான் நன்கு அறிவேன். முன்பொரு நாள் குமரியில் விதிப்படி நீராடிவிட்டு வருத்தத்தோடு வந்த சாலியென்னும் ஒரு பார்பனியைக் கண்டு உன் ஊர் யாது? நீ எதற்காக இங்கே வந்தனை? ஏன்று நான் கேட்டேன் அவள், யான் வாரனாசியென்னும் ஊரிலுள்ள ஆரண உவாத்தியாயனாகிய ஓரந்தணனின் மனைவி. யானொளுகிய தீயவொழுக்கத்தால் கணவனைப் பிரிந்து கன்னியாகுமரிக்கு நீராடுவதற்குச் செல்லுகையில், கொற்கை நகரத்துக்கு அப்பால் காதவழி தூரத்திலுள்ள இடையர் சேரியில் ஆண்குழந்தை ஒன்றை ஈன்று இரக்கமின்றி, அதனை அங்குள்ள ஒரு தோட்டத்தில் இட்டு சென்றேன்.

இப்படிப்பட்ட தீவினையேனாகிய எனக்கு நற்கதியுண்டோ? என்று மிகவும் துன்புற்று அழுதாள். அங்ஙனம் அழுதவள் பெற்ற மகனே இவன். இதைச் சொல்லுதலால் யாது பயனென்று இதுகாறும் உங்களுக்குத் தெரிவிக்காதிருந்தேன். ஆகையால் இவனைத் தொடாதீர் என்று கூறினான்.

ஆபுத்திரன் "திலோத்தமையின் மகன்கள் பெரிய முனிவர்களாக இருந்தார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா? நீங்கள் சாலிக்குத் தவறு கூறத் துணிந்தீர்களே' எனச் சொல்லி அவர்களைப் பார்த்து நகைத்தான். வளர்த்த பூதியும் அவனை இழிந்தவனென்று எண்ணி உடனே கைவிட்டான். அதன்பிறகு ஆபுத்திரன் பிச்சையெடுத்து உண்டு பொழுது கழிக்க எண்ணினான். பசுவைத்திருடின கள்வனென்று இகழ்ந்து அந்தணர்களுடைய கிராமங்களிலுள்ளோர் அனைவரும் அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் கற்களைப் போட்டார்கள். அதனால் தங்குவதற்கு வேறு இடமின்றித் தென் மதுரையை அடைந்து சிந்தாதேவியின் கோவிலின் முன்னேயுள்ள அம்பலத்தை இருப்பிடமாகக் கொண்டு கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி வீடுதோறும் சென்று பிச்சை வாங்கினான். அவன் அந்த அம்பலத்தில் ஓர் இரவில் தூங்கும் பொழுது சிலர்வந்து "பெரும்பசி எங்களை வருத்துகின்றது' என்றார்கள். அதைக்கேட்ட ஆபுத்திரன் அத்துன்பத்தைத் தீர்க்க இயலாதவனாய் மிகவும் வருத்தமடைந்தான்.

அச்சமயத்தில் சிந்தாதேவி ஆபுத்திரன் முன்தோன்றி உணவை எடுக்க எடுக்க குறையாத அமுதசுரபியை அவன் கையில் கொடுத்தது. அதனால் ஆபுத்திரன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். பின்னர்ச் சிந்தாதேவியைப் பணிந்து வணங்கினான்.

சிந்தா தேவி! செழுங்கலை நியமித்து
நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!
வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி!
ஏனோ ருற்ற இடர்களை வாய்

அதன் பின்னர் அப்பாத்திரத்தைக் கொண்டு, பசியால் மிகவும் வருந்தி யாசித்த அவர்களுக்கு உணவளித்து மகிழ்வித்தான். அன்று முதல் அவ்வாறே எல்லா உயிர்களுக்கும் உணவளிப்பா னாயினன். உண்பதற்காக மனிதர்கள் பலர் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். விலங்குகளும் பறவைகளும் அவனைப் பிரியாமல் அன்புடன் சூழ்ந்து கொண்டன. ஆபுத்திரன் அவ்வாறு இருக்கையில், இந்திரன் ஒருநாள் அவனது புண்ணிய மிகுதியைத் தனது பாண்டுகம்பள நடுக்கத்தால் அறிந்தான். அதனால் அவனுக்கு வரங்கொடுக்க நினைத்து ஒரு முதிய வேதியனது வடிவுடன் வந்து நின்று, "நான் இந்திரன்: வரங் கொடுத்தற்கு வந்தேன் நீ விரும்பியது யாது? உன்னுடைய தானத்தின் பயனைப் பெற்றுக் கொள்வாயாக'' என்று கூறினான்.

ஆபுத்திரன் விலாவெலும்பு ஒடியும் வண்ணம் சிரித்து வறுமையால் வாடியவர்களின் பசியினைத் தீர்த்து அவர்களது இன்முகத்தை நான் காணும்படி செய்கின்ற வகை ஒன்றே எனக்கு போதுமானதாகும். வேறொன்றும் எனக்கு வேண்டுவதில்லை' என்று அவனை மதியாது சொன்னான். இந்திரன் கோபித்து பசித் துன்பத்தால் வருந்துவோர் இல்லையாகும்படி செய்யவேண்டுமென்று மனதில் நினைந்து எங்கும் மழை பெய்வித்து மிக்க செல்வத்தை உண்டாக்கினான். அதனால் பசித்து வருவோர் இலராயினர் அதுகண்டு ஆபுத்திரன் முன் இருந்த அம்பலத்தை நீங்கி ஊர்தோறும் சென்று யாருக்கேனும் உணவு வேண்டுமா என்று கேட்டான். அது கேட்ட யாவரும் செல்வ மிகையால் அவனை இகழந்தார்கள். உணவு யாசிப்போர் இல்லாமையால் அவன் பெருஞ்செல்வத்தை இழந்தோரைப் போன்று வருந்தித் தனியே எங்கும் சென்று கொண்டிருந்தான்.

அக்காலத்தில் கப்பலில் வந்த சிலர் அவனைக் கண்டு சாவகநாடு மழையில்லாமையால் மிகுந்த வறுமையுற்றதென்றும் அதிலுள்ள உயிர்கள் பெரும்பாலும் பசியால் இறந்தனவென்றும் கூறினர். அது கேட்டு அவன் அந்நாட்டிற்குச் செல்ல நினைத்து ஒரு கப்பலில் ஏறினான். அக்கப்பல் சென்று மணிபல்லவத்தினருகே ஒரு நாள் தங்கிற்று.

அவன் அத்தீவில் இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் ஏறிவிட்டானென்று மாலுமி எண்ணி இருளில் அக்கப்பலை வேற்றிடம் செலுத்திக் கொண்டு போயினான். அது தெரிந்த ஆபுத்திரன் மிகுந்த வருத்தமடைந்து, பலருக்கு உணவளிக்கும் இப்பாத்திரத்தை வைத்துக் கொண்டு யாரும் இல்லாத இத்தீவில் நான் மட்டும் இருக்கமாட்டேன் என்று கூறி அமுதசுரபி பாத்திரத்தைத் தொழுது ஆண்டுக்கு ஒரு நாள் நீ தோன்றுவாயாக'' என்று கூறி மணிபல்லவத் தீவிலிருந்த கோமுகிப் பொய்கையில் அதை விட்டு விட எண்ணி மிக்க கருணையோடு கூடித் தருமம் செய்தலையே மேற்கொண்டு எல்லா உயிர்களையும் பாதுகாப்போர் யாரேனும் இத்தீவுக்கு வந்தால் அவர் கையில் புகுவாயாக என்று சொல்லி அப்பொய்கையில் விட்டுவிட்டு தான் பட்டினி கிடந்து உயிர் துறந்தான்.

அப்பொழுது அத்தீவிற்குச் சென்ற நான் அவனைக் கண்டு நீ என்ன துன்பமடைந்தாய்? என்று கேட்டேன் , அவன் நிகழ்ந்தவற்றைச் சொல்லி மணிபல்லவத்தில் உடம்பை வீழ்த்திவிட்டு எல்லா உயிர்களையும் பாதுகாக்கும் எண்ணத்தோடு சென்று சாவகநாட்டு அரசனுடைய பசு வயிற்றில் பிறந்தான்.

இந்திரன் செய்த செயலால் அமுத சுரபிக்கு வேலையின்றிப் போக ஆபுத்திரன் மணிபல்லவத் தீவில் அமுதசுரபியை விட்டு உயிர்நீத்தான். உதயணன் பின் தொடர்ந்ததன் காரணமாக மணிபல்லவத் தீவிற்கு வந்த மணிமேகலை அமுதசுரபி பற்றி கேள்விப்பட்டு அதனை பெற முயன்று வெற்றி பெறுகிறாள். அப்போது அவளுக்கு ஆபுத்திரனின் வரலாறு எடுத்துரைக்கப்படுகிறது.

தருமபீடீகையைக் காத்துக் கொண்டிருக்கும் தீவதிலகை என்னும் பெண்மணி புத்தபீடீகையில் அமுதசுரபி இருக்கும் செய்தியை அறிவிக்கின்றாள். அந்தப் பீடீகைக்கு முன் கோமுகி என்னும் பொய்கை உள்ளது. அப்பொய்கையின் உள்ளிருந்து அமுதசுரபி என்னும் அட்சயப்பாத்திரம் ஒவ்வொரு ஆண்டும் புத்த பெருமான் பிறந்த நன்னாளாகிய வைகாசி மாதம் பௌர்ணமி நாளில் மேலே வந்து தோன்றும் இன்றும் அந்நாளே. தோன்றும் பொழுதும் இதுவே. பழம்பிறப்புணர்ச்சியை அடைந்தமையால் உன் கைக்கு அப்பாத்திரம் கிடைக்கும் என எண்ணுகின்றேன் என்று தீவதிலகை மணிமேகலைக்கு அறிவுறுத்தினாள்.

மகிழ்ச்சியுற்ற மணிமேகலை அமுதசுரபியைப் பெறுவதற்கு விரும்பி புத்த பீடீகையைத் தொழுது அவளுடன் சென்று கோமுகி பொய்கையை வலம்வந்து நின்றவுடன் அப்பாத்திரம் பொய்கையின் உள்ளிருந்து வந்து மணிமேகலையின் கையை அடைந்தது. அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை பூம்புகாருக்குச் சென்றாள். பூம்புகாரில் அறவணடிகளைச் சந்தித்து ஆபுத்திரனின் வரலாற்றையும் அமுதசுரபியின் வரலாற்றையும் கேட்டறிந்தாள். பின்னர் ஆதிரையிடம் முதலில் பிச்சைப் பெற்று அமுதசுரபியின் மூலம் பசிப்பிணி நீக்கி வந்தாள் என மணிமேகலை குறிப்பிடுகிறது.

ஆபுத்திரனுக்கும் அமுதசுரபிக்கும் இடையில் ஒரு நெருக்கமான உறவு இருக்கிறது. ஆபுத்திரன் என்றாலே ஆவின் மகன் எனப் பொருள்படும். ஆபுத்திரனின் வரலாறும் இப்பொருளை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஆபுத்திரன் சிந்தாதேவியின் கோவிலின் முன்பு அமைந்திருந்த அம்பலத்தில் தங்கியிருந்த போது பெரும்பசியால் வருந்தியவர்களுக்கு உணவளிக்க இயலாமல் வருத்தம் அடைந்தான்.

அவன் அவ்வாறு வருந்தியதால் சிந்தாதேவி ஆபுத்திரன் முன் தோன்றி உணவை எடுக்க எடுக்க குறையாத அமுதசுரபியை அவன் கையில் கொடுத்தது. ஆபுத்திரன் அமுதசுரபியைக் கேட்டுப் பெறவில்லை என்பதும் பெரும்பசியால் வருந்தியவர்களுக்கு உணவளிக்க வேண்டுமென அவன் மனத்தில் தோன்றிய வேட்கையே அமுதசுரபி கிடைக்க காரணமாயிற்று என்பதும் குறிப்பிடத்தக்கவை. ஆபுத்திரன் பிச்சை எடுத்து உண்டு சிந்தாதேவியின் கோயில் முன்னிருந்த அம்பலத்தை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்தான். சிந்தாதேவி பிச்சையெடுத்து உண்டு வாழ்ந்த ஆபுத்திரன் மற்றவர்களுக்கு உணவளிக்க வேண்டுமென்று விரும்பியதாலேயே அமுதசுரபி கிடைக்கச் செய்தாள்.

பெரும்பாலும் அமுதசுரபி போன்ற மீஆற்றல் கொண்ட பொருட்கள் அல்லது மீமனித ஆற்றல் பெருந்தவத்தின் மூலமேயே வழங்கப்படுவது இயல்பு. ஆனால் ஆபுத்திரன் அவ்வாறு எதுவும் செய்யவில்லை. அவன் பிறந்த உடனேயே தாயால் தூக்கி வீசப்பட்டவன். ஏழு நாட்கள் பசுவால் பாலூட்டப்பட்டு வளர்க்கப்பட்டவன். பூதி என்னும் அந்தணனால் வளர்க்கப்பட்டவன். யாகசாலையில் நின்ற பசுவைக் காப்பாற்றியதால் கள்வன் எனவும் புலையன் மகன் எனவும் பழிச்சுமத்தப்பட்டு துரத்தப்பட்டவன்.

இதன் காரணமாக அவன் வாழ்ந்த ஊரில் உணவு மறுக்கப்பட்டவன் என்பது ஆபுத்திரனின் புராணம் தரும் செய்திகளாகும். ஆபுத்திரன் பிறந்ததிலிருந்து அமுதசுரபி கையில் கிடைக்கும் வரை பசியின் கொடுமையை நன்கு அனுபவித்தவனாகக் காணப்படுகிறான். உயிர்கள் உணவின்றி வருந்துவதையும் அவற்றிற்கு உணவளிக்க வேண்டுமென்ற வேட்கையும் அவனது ஆழ்மன உணர்வுகள் என்பதை அவன் வரலாறு உணர்த்துகின்றது. இருப்பினும் தனது ஆழ்மன வேட்கைக்கு அமுதசுரபி உரிய வடிகால் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

அவ்வடிகால் சிந்தாதேவியின் முலம் தரப்படுகிறது. மணிமேகலையும் ஆபுத்திரனைப் போலவே அமுதசுரபிக்காக காத்திருந்து பெறவில்லை. அவளுக்கு அமுதசுரபி கிடைத்தது என்பது ஒரு தற்செயல் நிகழ்வாகும். அவள் மணிப்பல்லவத் தீவில் இருக்கும் போது தீபதிலகையின் மூலமாகவே அமுதசுரபி பற்றிக் கேள்விபட்டு அதனைப் பெறுகிறாள். அதன் வரலாற்றையும் தீபதிலகையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அறவண அடிகளின் மூலம் அறிந்து கொள்கிறாள். இதனைப் பெற்ற பின்னர் மணிமேகலைப் பசியால் வாடிய அனைவருக்கும் உணவளித்து மகிழ்ந்தாள். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதும் அவற்றிற்கு உணவளிப்பதும் பௌத்த சமய அறம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மணிமேகலை துறவுக் கோலம் பூண்டவள். எல்லாவற்றையும் துறந்து துறவறம் மேற்கொண்ட பின் பிற உயிர்களுக்கு உணவளித்தல் என்பது சாத்தியமற்றது. மிகுதியான உணவை வைத்திருப்பவர்கள், மிகுந்த செல்வர்களே உணவளிக்க இயலும். துறவறம் மேற்கொண்டவர்களிடம் இதனை எதிர்பார்க்க இயலாது. இருப்பினும் அவர்களுக்கு உணவளித்தல் என்பது இன்றியமையாத அறம் ஆகும். இதனால் துறவிகள் திருவோடு ஏந்தி பிச்சை எடுப்பதும், பிச்சை எடுத்ததைப் பகிர்ந்து உண்ணுதலும் மரபாகக் கொண்டிருந்தனர். மணிமேகலை தான் பெற்ற அமுதசுரபியை இயங்கச் செய்வதற்காக ஆதிரையிடம் ஒரே ஒருமுறை பிச்சை வாங்குகிறாள். அதன் பின்னர் அமுதசுரபி எடுக்க எடுக்க அன்னம் வளரும் பாத்திரமாக மாறுகின்றது. இதன் பின்னர் மணிமேகலை உணவளிப்பவளாக மாறுகிறாள். இப்போது மணிமேகலையிடம் மிகையான உணவு இருக்கிறது.

எல்லாவற்றையும் துறந்தவர்களிடம் மிகையான எதுவும் இருக்க இயலாது. உணவளித்தல் என்னும் அறத்தை மேற்கொள்ள வேண்டுமெனில் உணவு மிகுதியாக இருத்தல் வேண்டும். இல்லாதவன் கொடுக்க வேண்டுமென்பதே இதன் அடிப்படையாகும். இந்த முரண்பாடு எளிதில் எதிர்கொள்ளத் தக்கதல்ல. இந்த முரண்பாட்டை ஆபுத்திரனிடமும் காணலாம். பிச்சை எடுத்து உண்டு வந்த ஆபுத்திரன் அம்பலத்தில் தங்கியிருந்த போது பெரும்பசியால் வாடியவர்களுக்கு உணவளிக்க இயலாமல் வருந்தினான். தன்னிடம் உணவு இல்லை என அறிந்தும் கொடுக்க விரும்பினான் என்பதே மேற்குறித்த முரண்பாட்டின் வெளிப் பாடாகும். இந்த முரண்பாடு மணிமேகலையிடம் பசிப்பிணியால் வாடுபவர்களுக்கு உணவளிக்கும் விருப்பமாக வெளிப்படுகிறது. ஆபுத்திரனும் மணிமேகலையும் இம்முரண்பாட்டிற்கான தீர்வை நேரடியாக அறிந்திருக்கவில்லை. அதற்கான தீர்வைத் தேடிக் கண்டடையவும் முயலவில்லை. ஆனால் தீர்வு தற்செயல் நிகழ்வாக இருவருக்கும் வந்தமைகின்றது.

மனித குலத்தின் தீர்க்கமுடியாத சிக்கல்களுள் பசியும் சாவும் மிக இன்றியமையாதவை. இவை இரண்டையும் எதிர்கொள்ள மனித சமூகம் தொடர்ந்து போராடி வருகின்றது. இதன் வெளிப்பாடுகளைப் புராணங்களின் வழியாக காணமுடியும். தேவாமிர்தம், கற்பகவிருட்சம், காமதேனு, அமுதசுரபி ஆகியவை உணவுத் தேவையை எதிர்கொள்வதற்காக மனிதன் கண்டறிந்த புராணியத் தீர்வுகளாகும்.

இத்தீர்வுகள் அனைத்தும் உழைக்காமலேயே அல்லது உணவு உற்பத்தி செய்யாமலேயே உணவைப் பெறுவதற்கான வழிகளைத் தேடியதன் விளைவுகள் எனலாம். வீடுபேற்றை அடைய துறவறம் உரிய வழியென நெறிப்படுத்தும் போது உணவுத் தேவையை எதிர்கொள்வதற்கான மாற்றுவழி தேவைப்படுகிறது. விருந்தோம்பல் அன்னதானம் செய்தல் போன்றவை துறவிகளின் உணவுத் தேவைக்கான மாற்று வழிகளாக இருந்தாலும் அவை துறவிகள் உணவளிக்க வேண்டும் என்னும் அறத்திற்கு மாற்றாக இயலாது. இல்லாதவன் கொடுக்க வேண்டும் என்ற முரண்பாடு விருந்தோம்பலாலும் அன்னதானம் வழங்குதலாலும் சமன்செய்யப்பட இயலாது.

துறவிகளுக்குப் பசி என்பது அவர்களது வாழ்வியல் நெறிகளுக்குத் தடையாகும். அவர்களது ஆன்மீக நெறிகளை முழுமையாக எடுத்துச் செல்வதற்கு அது நெருக்கடியைத்தரும் சூழலை உருவாக்குகின்றது. உணவுக்கான வாழ்க்கை என்பது உலகியல் வாழ்க்கையாகும். துறவிகள் இவ்வாழ்க்கையைத் துறந்தவர்கள். எனவே அவர்கள் உணவுக்காக வாழ இயலாது. அதே வேளையில் உணவைத் தவிர்க்கவும் இயலாது. இதன் காரணமாகவே அவர்கள் பசியின்றி வாழும் மந்திரங்களைக் கண்டறிய முயன்றனர். ஒரேயொரு முறை உண்டால் 12 ஆண்டுகாலம் பசி இல்லாமல் இருக்கலாம்.

அத்தகைய ஆற்றல் பெற்ற கனிகளைத் தேடுவது போன்றவைத் தொடர்பான புராணக்கதைகள் நம்மிடம் உள்ளன. தேவாமிர்தம் என்பதும் பசியின்றி வாழ்வதற்கான மந்திரம் ஆகும். நாட்டார் மரபிலும் தானாக உணவளிக்கும் மேஜை, மந்திரப்பெட்டி போன்றவைத் தொடர்பான கதைகள் உள்ளன. இவை போன்ற கதைகள் உலகின் பெரும்பான்மையான பண்பாடுகளில் காணப்படுவதை ஸ்டித் தாம்சனின் கதைவகை அடைவின் மூலம் அறியலாம். அவரது அடைவில் அகூ 563, அகூ 565ஆகிய எண்களின் கீழ் அடைவுச் செய்யப்பட்டுள்ள கதைகளில் தானாக உணவளிக்கும் மாயாஜாலப் பொருட்கள் குறித்த கதைக்கூறுகள் இடம்பெற்றுள்ளன. அகூ 563 இல் தானாக உணவளிக்கும் மேஜையும் அகூ 565 தானாக சமைத்து உணவளிக்கும் பானையும் வந்தமைகின்றன. விரும்பும் போதெல்லாம் உணவு தானாக கிடைக்க வேண்டும் என்ற ஆசையே ஸ்டித் தாம்சனின் அடைவில் குறிப்பிட்டுள்ள கதைகளின் அடிப்படையாகும். இந்த விருப்பம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் விருப்பமாகும்.

மனித சமூகம் உணவுத் தேவைக்காக தொடர்ந்து இயற்கையோடு போராடி வருகின்றது. தொடக்ககால இனக்குழு வாழ்க்கையில் உணவை நேரடியாக இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்டான். தான் விரும்பும் போதெல்லாம் உணவு அவனுக்குக் கிடைத்தது. இயற்கை அப்போது அவனுக்கு உணவு வழங்கும் வளமாக இருந்தது. இயற்கையின் வளம் மிகையான உணவிற்கு அடையாளமாக அமைந்தது. சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் வெவ்வேறு சமூக அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும் மனித சமூகம் இயற்கையிலிருந்து விலக ஆரம்பித்தது. இயற்கையிலிருந்து நேரடியாகப் பெற்ற உணவு என்பதற்குப் பதிலாக உணவை உற்பத்தி செய்து உண்ண வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டான்.

உற்பத்தி முறையும், உணவு முறையும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறாக வளர்ச்சி அடைந்தது. இந்த வளர்ச்சிப் போக்கு இயற்கைக்கும், மனித சமூகத்திற்கும் இடையிலான இடைவெளியைப் பெருக்கியது அதாவது இயற்கையாக மிகையாக கிடைத்த உணவு இப்போது அவனுக்குக் கிடைக்காமல் போகிறது. எனவே அவன் பசிப்பிணிக்கு ஆட்படுகிறவனாக மாறுகிறான். எனவே அவன் இயற்கையாக உணவு கிடைக்கும் வழிமுறைகள் குறித்த புனைவுகளுக்கு ஆட்படுகிறான். இதன் வெளிப்பாடு அமுதசுரபி எனக் கருதலாம்.

நேரடியாக உழைக்காமல் அல்லது உணவு உற்பத்தி மேற்கொள்ளாமல் வற்றாமல் உணவைத் தருவது இயற்கையாகும். எடுக்க எடுக்க அது குறைவுப்படுவதில்லை. இந்த இயற்கை மனித குலத்தின் பசித் தேவையை எதிர் கொள்ளும் மாற்று என்பதை அவன் அறிந்திருந்தான். இயற்கையை விட்டு விலகிய நீண்ட இடைவெளிக்குப் பின்னரும் அவனது ஆழ்மனத்தில் இந்த எண்ணம் உறைந்திருக்கிறது. இயற்கையிலிருந்து விலகிய பின்னர் அதனால் தோன்றிய உணவு சிக்கல் தீர்க்கமுடியாத சவாலாக மாறியது.

எனவே இதற்கான தீர்வு தனது தொடக்ககால சமூகத்திலிருந்த இயற்கை என்பதை அவனது ஆழ்மனம் தொடர்ந்து வலியுறுத்தியது. அந்த இயற்கைக்கு மீண்டும் திரும்ப முடியாத மனிதன் அதனைப் புராணியப்படுத்திக் கொண்டான். அவ்வாறு புராணியப்படுத்தப்பட்ட தொடக்க கால மனித சமூகம் அனுபவித்த இயற்கையின் குறியீடு அமுதசுரபி ஆகும்.

மணிமேகலையும், ஆபுத்திரனும் எதிர்கொண்ட சிக்கல் இல்லாதவன் கொடுக்க வேண்டும் என்பதாகும். இந்தச் சிக்கலை உலகியல் வாழ்க்கையில் எதிர் கொள்ள இயலாது. இதனை எதிர்கொள்ள மீஆற்றல் கொண்ட அல்லது தெய்வீக அருள் கொண்ட ஏதேனும் ஒரு பொருள் அல்லது ஊடகம் தேவை. அதுவே அமுதசுரபியாக வடிவம் பெற்றது. அமுதசுரபி என்பது மிகை உணவின் அடையாளம் அதாவது இயற்கையின் குறியீடு ஆகும். அது உணவு இல்லாதவனுக்கு உணவளிக்கும் தன்மையுடையது. அதாவது உழைக்காமல், உணவு உற்பத்தி செய்யாமல் உணவைத் தரும் ஒரு பொருள். இந்தத் தன்மை இயற்கைக்கு மட்டுமே உரியது. இதனை அமுதசுரபி பெற்றுள்ளது. அவ்வாறாயின் அமுதசுரபி தொடக்ககால மனிதனை இயற்கைக்கு அழைத்துச் செல்லும் ஊடகமாக அமைகிறது.

ஆபுத்திரன் அமுதசுரபியின் பயன்பாடு இல்லாமல் போன போது மணிபல்லவ தீவிலுள்ள கோமுகிப் பொய்கையில் விட்டொழித்தான் என்பதும் மணிமேகலை கோமுகி பொய்கையிலிருந்து அமுதசுரபியைப் பெற்றாள் என்பதும் இந்திரன் ஆபுத்திரனின் அமுதசுரபி பயனற்று போகும் வகையில் மழையைப் பெய்வித்து வளமைப் பெற செய்தான் என்பதும் அமுதசுரபிக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவைச் சுட்டிக் காட்டுகின்றன.

அமுதசுரபியைத் தருவதும் இயற்கை அதனைப் பயனற்று போகச் செய்வதும் இயற்கை. அதன் உணவளிக்கும் தன்மையும் இயற்கையானது. எனவே அமுதசுரபியை இயற்கையின் குறியீடாகக் கொள்வதில் தவறில்லை. அவ்வாறாயின் அமுதசுரபி என்பது ஆதிமனிதன் உணவுத் தேவைக்காக இயற்கையோடு கொண்டிருந்த உறவை வெளிப்படுத்தும் குறியீட்டுத் தொன்மம் என்பதில் ஐயமில்லை.

துணைநின்ற நூற்கள்

1. வேங்கடாசலம் (உ.ஆ), 2007: மணிமேகலை, சென்னை. பாவை 
 பப்ளிகேஷன்ஸ்.
2. Thompson, Stith, 1981:The types of the Folktale, Helsinki: Academia Scientiarum Fennica.

Pin It