இலக்கு.  நிர்ணயித்துக் கொண்டு செயல்படுவது ஒவ்வொரு மனிதருக்கும் மிக முக்கியமானது. குரூப்2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நீங்கள் ஏதோ விண்ணப்பித்து விட்டோம் என்று கருதாமல் அதை ஒரு இலக்காக நிர்ணயித்துக் கொண்டு தயாரிப்பைத் துவங்குங்கள் என்பார்கள்.

இன்றிலிருந்தே இதைத் துவக்கலாம். ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு இன்னும் மூன்று மாத காலம் இருக்கிறது. நம்மால் இதை உறுதியாகச் சாதிக்க முடியும். இந்த மூன்று மாத காலமும் நமது நினைவுகள் தேர்வு பற்றியும், தேர்வுக்காக நாம் படித்துக் கொண்டிருப்பவை பற்றியுமானதாக இருந்தால் வெற்றி நிச்சயம். திட்டமிடல் எப்போது, எவ்வளவு நேரம் படிக்கலாம். எந்தப் பாடத்தைத் தனியாகப் படிக்கலாம். எதை மற்றவர்களுடன் சேர்ந்து படிக்கலாம் என்பதைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

விடுமுறை நாட்களில் கூடுதல் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம். பொதுவாக ஒரு அட்டவணையைத் தயார் செய்து கொண்டு படிப்பது மிகவும் பயன்தருவதாக அமையும். எதைப்படிக்கலாம்? பட்டப்படிப்புதான் குறைந்தபட்சத் தகுதி என்றாலும் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டட்திலிருந்துதான் அதிகக் கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். அனைத்து மாணவர்களும் இந்த வகுப்புவரைதான் பொதுவான பாடங்களைப் படிக்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம். ஆனால் தமிழ், வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம் ஆகியவற்றைத் தாண்டி இருக்கும் பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, வணிகவியல், சமூகவியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு +2 பாடப் புத்தகங்களிலிருந்து கேள்விகள் வரும். இந்தப் பாடங்களை முழுமையாக உள்வாங்கிக் கொண்டால் இவற்றைத் தாண்டியுள்ள பாடங்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.
 
தேவைப்படும் புத்தகங்கள்

1. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள்.
2. வழிகாட்டி கையேடு ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். முதன்முறையாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இந்தக் கையேடு ஓரளவு உதவும் என்பது உண்மையே. ஆனால் இது மட்டுமே போதும் என்பது சரியாக இருக்காது.
3. +2 வில் உள்ள அறிவியல், பொருளாதாரம், வணிகவியல் ஆகிய பாடப்புத்தகங்கள்.
4. ஏதாவது ஒரு நாளிதழ். அன்றாடம் தவறாது படிக்க வேண்டும்.
5. பொது அறிவு மாத இதழ்.
6. மனோரமா, தினமலர் ஆகியவை வெளியிடும் வருடாந்திர புத்தகங்களில் ஏதாவது ஒன்று.
7. அரசியலமைப்பு, சுற்றுச்சூழல், பண்பாடு ஆகியவை குறித்த புத்தகங்கள். பாடப்புத்தகங்களிலிருந்து இது குறித்து படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
8. பொதுத்தமிழ் தாளுக்கும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப்புத்தகங்கள்.

எப்படிப் படிக்கலாம்?

தேர்வு தேதி வரை ஒவ்வொரு நாளும் படிப்பது அவசியம். மூன்று மாத கால அவகாசம் மட்டுமே உள்ளதால் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஒதுக்குவது நல்லது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை ஒருமுறை நன்றாகப் படித்து புரிந்து கொள்வதுதான் படிப்பதற்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொள்ள முடியும்.

மனப்பாடம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இந்தத் தேர்வைப் பொறுத்தவரை இல்லை. கொள்குறி வகை  தேர்வு என்பதால் பாடப்புத்தகங்களை முழுமையாகப் படிப்பது பெரும் அளவில் உதவும். நிச்சயமாக பதில் கேள்வித்தாளில் இருக்கப்போகிறது. கேள்வியைப் படித்தவுடன் அதை அடையாளங்கண்டு கொள்வது சிரமமான வேலையாக உங்களுக்கு இருக்கப் போவதில்லை. ஒவ்வொரு நாளும் படிக்கும் விஷயங்களை இரவு படுக்கப்போகுமுன் ஒருமுறை நினைவுக்கு கொண்டு வாருங்கள். இதற்கு ஒரு பத்து நிமிடங்கள் ஒதுக்குங்கள்.

அதேபோல் காலையில் எழுந்தவுடன் முந்தைய நாள் என்னவெல்லாம் படித்தோம் என்று நினைத்துப் பாருங்கள். ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். அதேபோல் படிப்பதை எழுதிவைத்துப் பாருங்கள். குறிப்புகள் எடுத்துக் கொள்வது மிக அவசியம்.

வரலாறு போன்ற பாடங்களைப் படிக்கும்போது வரிசைப்படுத்திக் கொள்ள இந்தக் குறிப்புகள் மிகவும் உதவும். குறிப்புகளை பாட வாரியாக தனித்தனியே எழுதிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குழப்பம் ஏற்படும். அதைத் தீர்ப்பதிலேயே நமது நேரம் கழிந்துவிடும். கூட்டாகப் படிப்பது பெரிதும் பயன்தரும்.

பல்வேறு விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடியும். மற்றவர் சொல்லும்போது காதில் வாங்கிக் கொள்வது நேரத்தையும் மிச்சப்படுத்தும். மற்றவர்களுடன் சேர்ந்து படிப்பது பொறுப்புணர்ச்சியை அதிகப்படுத்தும். தேடுதல் தயாரிப்புக்காலத்தில் உங்கள் தேடுதலை அதிகப்படுத்துங்கள். ஒரு விஷயத்தைப் பற்றிப் படித்தால் அதோடு தொடர்புடைய விஷயங்களைத் தேடுங்கள். உதாரணமாக, முதல் பானிப்பட் போர் எப்போது நடந்தது என்ற கேள்வி உங்கள் முன் நின்றால், யார் யாருக்குமிடையில், எந்த வருசம் முடிவுக்கு வந்தது, எந்த வருசம் தோன்றியது, ஏதாவது சிறப்பம்சம் என்று ஒவ்வொன்றையும் தேடித் தேடிப் படியுங்கள்.

முதலாம் பானிப்பட் போர் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டு விட்டோம் என்று நினைக்கையில், இந்தியாவில் பீரங்கிப்படை முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட போர் எது என்பது கேள்வியாக இருக்கலாம். அது முதலாம் பானிப்பட் போர்தான். இத்தகைய அணுகுமுறை அனைத்துப் பாடங்களுக்கும் உதவியாக இருக்கும். முதலில் நேரம் அதிகமாக எடுப்பதாக நினைக்கலாம். ஆனால் சில நாட்களிலேயே அது சரியாகிவிடும்.

முழுமையாக படிப்பதற்கு இந்த அணுகுமுறை மிகவும் உதவியாக இருக்கும். கேள்விகளைத் தொகுத்தல் வெறும் கேள்விகளைப் பார்த்து, அதற்கான பதில்களைப் படித்துவிட்டு செல்வது ஒருபுறம். மறுபுறத்தில் நீங்களே கேள்விகளைத் தொகுக்கலாம். மற்றவர்கள் பதில் சொல்ல முடியாத கேள்விகள் என்று 50 கேள்விகளைத் தொகுத்துப் பாருங்கள். தொகுத்து முடித்திருக்கும்போது பெரிய அளவிலான தயாரிப்புப் பணி முடிந்திருக்கும் என்பதை உணர்வீர்கள்.

அதோடு இத்தகைய கேள்வித்தாள்கள் தொடர்ந்து தயாரிப்பதற்கு உதவியாக இருக்கும். பயிற்சி வகுப்புகள் வெறும் வழிகாட்டியே. வழிகாட்டுமே தவிர, தோளில் உட்கார வைத்துக் கொண்டு தேர்வு எழுத அழைத்துச் செல்லாது.

ஆனால் பாடங்களை நினைவுக்குக் கொண்டு வர, பலருடன் இணைந்து படிப்பதால் கிடைக்கும் புதிய விஷயங்கள் என்று பலன்களைப் பட்டியலிடலாம். படிப்பதைத் திட்டமிட்டுக் கொள்ள இது பயன்படும். அதோடு, இத்தகைய வகுப்புகளில் நடத்தப்படும் மாதிரித் தேர்வு, தேர்வு குறித்த அச்சத்தைப் போக்க உதவும். குடும்பச்சூழல் குடும்பத்தில் நிலவும் சூழ்நிலை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருந்துவிடப்போவதில்லை.

ஆனால் தேர்வுக்கான தயாரிப்பில் இருப்பதால் நாம் கூடுதல் நெளிவு சுளிவுடன் இருந்து கொண்டு தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முயலலாம். ஆனால் படிக்கிறோம் என்ற பெயரில் சாப்பிடாமல் இருப்பது, உறக்கத்தைத் தவிர்ப்பது ஆகியவை படிப்பை பாதிக்கவே செய்யும். குறித்த நேரத்தில் உறங்கி, விரைவாக எழுந்து காலையில் படிப்பது பெரிதும் உதவும். குடும்பச் சூழலுக்கு ஏற்றவாறு படிக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும். தேர்வில் வெற்றி பெற்று உங்கள் இலக்கை அடைய வாழ்த்துகள்...!

(டாக்டர். அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் தொடர்பு எண்கள்9442060775, 9442080800, 9442002005 தேர்வு எழுதுவோருக்கான குறிப்பு)

-இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழு

Pin It