கூடங்குள அணுஉலைகளின் கட்டுமானத்திற்காக 13,147 கோடி ரூபாயைச் செலவு செய்தபின், இயக்கவிருக்கின்ற நேரத்தில் மூடச்சொல்லிப் போராடுகிறார்களே! அணுஉலை கட்டுமானம் துவங்கும் முன்பே தடுத்து நிறுத்தியிருக்கலாமே! என்ற வாதங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படுகின்றன.

அணுஉலை வேண்டாம் என்று சொன்னால் மின்தேவை இருக்கிறது அணுஉலையே அதற்குத் தீர்வு அணுஉலைத் திட்டத்தை மறுக்கிறவர்கள் மாற்றுப் பற்றிக் கூறாதவரை தேச நலனுக்கு எதிரானவர்கள் என்ற பார்வையும் நிலவுகிறது.

 வழிதெரியா இந்தப் புதிர்ப்பாதையில் இருந்து நாம் எவ்வாறு தப்புவது? நம் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் நமக்குப் பிந்தைய தலைமுறையினரின் நலன் களையும் எப்படிக் காப்பது என்பது சமூக நலன் விரும்பிகளுக்கு முன்னுள்ள விழிபிதுங்கவைக்கும் சவாலாக உள்ளது!

இந்திய மின் நிலவரம்: மின்சாரம் நமக்கு இன்றியமையாத ஆற்றலாக இருந்து வருகிறது. இதே போன்று நமக்கு இன்றியமையாத ஆற்றல்களாக இருந்து வருபவை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருட்கள். தொழில்துறை, விவசாயம், போக்குவரத்து, வணிகம், வீட்டு உபயோகம், பொதுப்பயன்பாடு என எண்ணற்ற துறைகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட இந்தப் பல்வேறு ஆற்றல்கள் தேவைப்படுகின்றன.

energy_efficiency_300இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களில், நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்றவற்றை உள்ளடக்கிய அனல்மின் 65.09%, புனல்மின் 21.22%, சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றிலிருந்து 11.05% அணுமின் 2.62% என நிறுவுதிறன் விகிதம் உள்ளது. மொத்த நிறுவுதிறன் 1,82,344 மெகா வாட்டாக (மெ.வா.) உள்ளது.

அதிகளவில் மின்சாரம் தேவைப்படும் துறைகளாக தொழில்துறையும் விவசாயமும் இருந்து வருகின்றன. தொழில்துறையில் அதிகளவிலான ஆற்றல் தேவைப்படும் தொழில்கள் (Energy intensive industries) என அலுமினியத் தொழில், காரக் குளோரின் (Chlor – Alkali), இரும்புத் தொழில், சிமெண்ட் தொழில், உரத் தயாரிப்பு, நூற்புத் தொழில் போன்றவைகள் பல காலமாக அறியப்பட்டு வருகின்றன.

விவசாயத்துறையில், கணிசமான மின் பயன்பாடு இருக்கிறது. இந்தியாவில் 200 லட்சம் பம்ப் செட்டுகள் இயங்கிவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை திறம்பட மின்சக்தியைப் பயன்படுத்துவதில்லை.

இதையடுத்து பெருமளவில் ஆற்றலை உறிஞ்சுவது, மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சக்தியைப் பயன்படுத்துவோரின் இடத்திற்கு வந்துசேர்வதற்கு இடையில், மின்கடத்தல் மற்றும் பகிர்மானத்தில் (Transmission and distribution) நடத்தப்படுகிற செலவாகும். இதை ஒருங்கிணைந்த தொழில் நுட்ப மற்றும் வணிக மின் இழப்புகள் (Aggregate Transmission & Commercial losses) என்ற பெயரில் அழைக்கின்றனர். உலக நாடுகளில் தயாரிக்கப்படும் மின் ஆற்றலில் இது அதிகட்சமாக 15% என்று உள்ளது. நம் நாட்டில் இது சில மாநிலங்களில் 50% - ஐத் தாண்டுகிறது இந்திய சராசரியாக 2007-08 கணக்குப்படி இது 31.65%. அதாவது, நம் நாட்டில் சராசரியாக தயாரிக்கப்படும் மின்சார ஆற்றலில் 31%-க்கு மேல் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப, வணிக மின் இழப்பு!

மின் பற்றாக்குறை: தற்போது நமக்கு மின்தட்டுப்பாடு இருந்து வருவது உண்மைதான். இதற்குத் தீர்வு பற்றிச் சிந்திக்கும்போது, வழக்கமாக சூரியஒளி, காற்றாலை, Biomass போன்றவற்றை மூலங்கள் எனக் கண்டுணர்ந்து, அவற்றிலிருந்து பெறக்கூடிய மின்சக்தி பற்றிக் கணக்கில் எடுத்து வருகிறோம். இவை தற்போதைய மின் தேவையை நிறைவு செய்யப் போதுமானவையா என்ற கேள்வி எழும்போது சரியான மாற்று என்ன என்பது நம்முன் பெரும் சவாலாக நிற்கிறது!

விஷ‌யம் இந்தியாவில் இப்படி இருக்க, உலகநாடுகள் அனைத்திலும் என்ன நடக்கிறது? உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளாகக் கருதப்படுகிற அமெரிக்கா ஜப்பான், பிரான்சு என அனைத்திலும் பாதுகாப்புக் காரணங்களால் புதிய அணுஉலைகளைத் துவக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே இயங்கிவரும் அணுஉலைகளையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடச் சொல்லி வருகிறார்கள்.

ஆக, இன்று இந்தியா சந்திக்கிற மாதிரியான சிக்கலைத் தானே அந்நாடுகளும் சந்திக்கும்? அவர்கள் முற்றும் துறந்தவர்களாகக் காட்டிற்கு ஏதும் சென்றுவிடவில்லையே! அவர்கள் நம்மைக் காட்டிலும் அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஆயிற்றே! அந்நாடுகளில் காற்று, சூரியஒளி போன்ற மின் ஆற்றல் மூலங்கள் நம் நாட்டைக் காட்டிலும் குறைவு என்பது தானே உண்மை! அவர்கள் எப்படி ஆற்றல் தன்னிறைவை அடையமுடிகிறது? நமக்கு தெரியாத ரகசியமான ஆற்றல் திட்டங்கள் ஏதும் அவர்கள் வைத்திருக்கிறார்களா?

இப்போது நம் நாட்டிற்கும் அமெரிக்கா, ஜப்பான், பிரான்சு, ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்க்கலாம். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமெரிக்காவை எடுத்துக் கொள்வோம்.

தேவையே புதிய கண்டுபிடிப்புகளின் தாய்: அமெரிக்காவில் 1970களில் ஆற்றல் பிரச்சனையின் போது (Energy Crisis), பயனீட்டாளர்கள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் ஆற்றல் விலைகளைச் சமாளிக்க வேண்டி வந்தது. அப்போது அணு உள்ளிட்ட பல்வேறு ஆற்றல் மூலங்கள் (Energy Sources) சோதித்துப் பார்க்கப்பட்டன. 1979ல் மூன்று மைல் தீவில் அணு உலைப் பேரழிவு நிகழ்ந்தது. 1980களில் புதிய ஆற்றல் சேமிப்பு (Energy Conservation) முறை தோற்றுவிக்கப்பட்டது. அது அதிகரித்துவந்த ஆற்றல் விலைகளை, பயனீட்டாளர்கள் சமாளிப்பதற்கு உதவியது! அந்த முறை தான் “திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு (Energy Efficiency)”.

 அமெரிக்க ஆற்றல் விஞ்ஞானிகள், “திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகள் (Energy Efficiency Measures), 1970களில் துவங்கி அமெரிக்க ஆற்றல் தேவையைக் குறைக்க வழிசெய்து வந்திருக்கிறது. திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் ஆற்றலுக்கான எங்கள் முதன்மையான மூலம். பழைய தொழில்நுட்பமும், சந்தை நிலவரமும் மாற்றமில்லாது இருந்திருந்தால், அதிகரித்திருக்கக்கூடிய ஆற்றல் பயன்பாட்டின் 70 விழுக்காட்டிற்கு மேல் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் குறைத்தது” என்கின்றனர்.

திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான எங்கள் முதன்மையான மூலம் என்கிறார்களே? அதாவது அனல் மின், நீர் மின், சூரியசக்தி, காற்றாலை என எல்லா வகை மின் மூலங்களைக் காட்டிலும் இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான முதல் மூலம் என்று மிகப் பெருமையாகப் பறைசாற்றுகிறார்களே! அது என்ன?

திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு (Energy Efficiency): இந்த வகை ஆற்றல் சேமிப்பின்படி, ஒரே ஆற்றல் சேவைக்கு (உதாரணம்: ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வண்டியில் போவதற்கு ஆகும் ஆற்றலை) ஆற்றல் விரையத்தைக் குறைக்க சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆற்றல் செலவைக் குறைக்க முடியும்.

ஒரு புரிதலுக்காக இப்படிச் சொல்ல ஆரம்பிக்கலாம். தாயார் தினமும் சமைத்து வைத்த உணவை சாப்பிடும்போது விரையம் செய்து வந்தததால் நால்வர் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். அதே நேரத்தில் தாயார் தினமும் சமைத்து வைத்த உணவை சாப்பிடுகையில் விரையம் செய்யாதபோது, மீதம் இருந்த சாப்பாடு கூடுதலாக ஒருவருக்கு உணவிடும் அளவிற்கு இருந்தது. இந்த இரு நிகழ்வுகளிலும், அந்த நால்வரும் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவு குறையவில்லை. விரையம் செய்வதைத் தவிர்த்ததால் ஒருவர் கூடுதலாகச் சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு மிஞ்சுகிறது. விரையம் செய்து சாப்பிடுவதைக் காட்டிலும் விரையம் செய்யாமல் சாப்பிடும்போது கிடைத்த ஒருவருக்கான சாப்பாட்டை தாயார் அரூபமாக உருவாக்கியதாக (Virtual Generation) நினைத்துக் கொள்ளலாம் அல்லவா? இதையே திறன் உருவாக்கம் (Capacity Creation) என்று சொல்லி அழைக்கின்றனர். ஆக ஒரே ஆற்றல் சேவையை குறைந்த ஆற்றலைக் கொண்டு செய்வதே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுமுறை.

அதாவது ஒரு வண்டியில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயனிப்பவர்களுக்கு “எ” அளவு பெட்ரோல் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இம்முறையை மேற்கொண்டால், வண்டியில் சில மாற்றங்களைச் செய்து அதே நபர்கள் அதே பயணத்தூரத்தை “எ” அளவைக் காட்டிலும் குறைவான பெட்ரோல் செலவில் கடக்கமுடியும். இங்கு இரு நன்மைகள். ஒன்று பயணத்திற்கு ஆகும் பெட்ரோல் செலவை குறைக்கிறோம். அதே நேரத்தில் முன்னுள்ள நிலையை ஒப்பிடும்போது பெட்ரோல் அடுத்த பயணத்திற்கு செலவிடும் வகையில் மிச்சமாகிறது.

இதேபோல் ஒரு மின்மோட்டாரைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போது “அ” அளவு மின்சக்தி தேவையாகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த மோட்டாரில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதே வேலையை செய்வதற்கு “அ” அளவு மின்சக்தியைக் காட்டிலும் குறைவான மின்சக்தி செலவாகும். குறைகின்ற மின்சக்தியை கிலோவாட் என்ற அலகிலும், எவ்வளவு நேரம் நாம் மின்மோட்டாரைச் செலுத்துகிறோமோ அதை மணிநேரமாக மாற்றி இரண்டையும் பெருக்கல் கணக்கு செய்தால் நாம் எவ்வளவு குறைவாக மின் ஆற்றலைச் செலவு செய்திருக்கிறோம் என்பது தெரியவரும். அந்தளவிற்கு தகுந்தாற்போல் நம் மின் கட்டணம் குறையும். நாம் இப்போது பேசியது மின் ஆற்றலைப் (Electrical Energy அல்லது யூனிட் என நாம் அறிவோம்) பற்றியது. நாம் ஏற்கெனவே நமக்குத் தேவைப்படும் மின்சக்தி (Electrical Power அல்லது எத்தனை வாட் என்று அறிவோம்) குறைவதாகக் கூறினோமே அதை பக்கத்து வீட்டுக்காரர் புதிதாக வாங்கிய மோட்டாருக்கு கொடுக்கப் பயன்படும்.

இம்முறையைச் செயல்படுத்துவதற்குக் கூடுதலாக பண முதலீடு செய்ய வேண்டிவரும். கூடுதலாக முதலீடு செய்யும் பணமும் 1 முதல் 3 வருடங்களுக்குள் மின்சாரச் செலவு குறைவதால் திரும்பப் பெற்று விடுவர். ஆக இம்முறையில் நமக்குப் பயன். இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம் சேமிப்பது என்பது இரண்டு, இரண்டரை யூனிட் மின்சாரம் தயாரித்ததற்கு ஈடாகும். இதை மின்துறை பற்றி பரிச்சயமுள்ளவர்கள் அறிவர். அதேபோல் தான் பெட்ரோல், எரிவாயு செலவு குறைந்தாலும் நமக்கும், பிறருக்கும், புவிக்கும் நன்மை.

திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டில் அமெரிக்க அனுபவம்: 1980களிலேயே அமெரிக்க ஆற்றல் துறையின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள், “திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பொருளாதாரச் செழிப்பை, ஆற்றல் உத்தரவாத்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துகிறது இதுவே ஆற்றல் சிக்கலில் இருந்து மீள்வதற்கான மிகச் சிறந்த வழி” என்று அலசிப் பார்த்துக் கூறினர். அதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அந்த ஆற்றல் விஞ்ஞானிகள் 1980களிலேயே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் பொருளாதாரச் செழிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க சபை (American Council for Energy Efficient Economy) என்ற லாபநோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினர். பெயரைச் சற்று ஆழமாகச் சிந்திக்கவும்!

அமெரிக்க அரசின் ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு மற்றும் மரபுசாரா ஆற்றல் துறை என்ற அமைப்பு உள்ளது. இதிலும், பெயரில் உள்ள வரிசைக் கிரமம் மிக முக்கியமானது! ஆற்றல் சிக்கலுக்கான முதன்மையான மூலம் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் பின்னர் தான் மரபுசாரா ஆறறல்களான சூரியஒளி, காற்று போன்றவை. இதைப் பல பத்தாண்டுகளாக அமெரிக்க அரசு அறியும்.

2009-ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது செனட்டராக இருந்த ஒபாமா, ஆற்றல் பற்றி பேசிய இரண்டு கருத்துக்கள் முக்கியமானவை:

1. அணுமின்சாரம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அணுஎரிபொருளை (Spent Fuel) பாதுகாப்பாக கழிக்க (dispose) வழியில்லை. அதனால் நமக்கு அணுஉலைகள் மூலமான மின்சாரம் வேண்டாம்!

2. நாம் நம்முடைய தரைவழி வண்டிகளின் டயர்களில் வைக்கிற காற்றை ஒழுங்காக வைத்தாலே அமெரிக்க தேசிய அளவில் செலவாகும் எரிபொருளில் ஒரு சதவீதத்தை மிச்சப்படுத்த முடியும்!

மேற்சொன்ன அமெரிக்க சபை, திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது:

“இது பயனீட்டாளர் அமைப்பிலிருந்து உருவாகிற மூலமாக (Utility System Source) மதிக்கப்படுகிறது. இது புவி வெப்பம் அடையச் செய்யும் வாயுக்களைக் (Green House Gases)) குறைப்பதோடு பயனீட்டாளர்களின் செலவையும் குறைக்கிறது. புதிய தொழில்கள், வேலைக்கு வழிவகுக்கிறது. பொருளாதாரக் கவலைகள் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றங்களின் காரணமாக சட்டமன்றங்களும், கட்டுபாட்டாளர்களும் (Regulators) திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளுக்கு முன்னெப்போதும் இருந்திராதவகையில் துணை செய்கின்றனர்”.

இன்றளவும் அவர்கள் திட்டம் வகுத்து 2020-ல் தற்போது செலவழியக் கூடிய ஆற்றலில் 20% வரை சேமிக்க முடியும் என்கின்றனர்.

உலகில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் முக்கியத்துவம் (Energy Efficiency):

CFL_330நமக்கு மின்சேமிப்பு என்றால் குண்டு பல்ப்பை CFL பல்ப்பைக் கொண்டு மாற்றுவது பற்றித் தெரியும். மின் மோட்டர்கள்தான் மின்பளுவில் (Electrical Load) முக்கியமான பங்கு வகிப்பவை. தொழிற்சாலைகளில் 70மூ-க்கும் மேலான மின்பளு இவற்றினால்தான். விவசாயத்தில் கிட்டத்தட்ட முழுமையான மின்பளுவும் மின்மோட்டர்களால்தான்.

எப்படிப்பட்ட மின்மோட்டர்களை வாங்குவது, ஒரு பயன்பாட்டிற்கு அதன் சக்தி என்னவாக இருக்க வேண்டும், அதை எந்நேரத்தில் இயக்குவது, அதில் மின்சாரத்தைத் திறம்பட பயன்படுத்த வேறேதும் வழிகள் உண்டா? என்பவை போன்றவற்றை உள்ளடக்கியதுதான் இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகள்.

 மோட்டார்களில் ஒரு சிறிய அளவு சேமிப்பு செய்தாலே பெருமளவிலான மின் சக்தியைச் சேமிக்க முடியும். இதை நன்கறிந்து தான் அமெரிக்கா, ஐரோப்பா போன்றவை மின் மோட்டார்களுக்கான தரக்கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, பெருமளவில் ஆற்றலை சேமித்து வருகின்றன. நம் நாட்டில் இருக்கும் மோட்டார்கள் பயன்படுத்தும் மின்சக்தியைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே மின்சக்தியை எடுக்கிற மோட்டார்கள் அந்நாடுகளில் வடிவமைக்கப்படுகன்றன. 1980களில் துவங்கி அமெரிக்கா, ஐரோப்பாவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

 திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளில், மின் ஆற்றல் (Electrical Energy), வெம்மை ஆற்றல் (Thermal Energy), காற்றழுத்தத் தேவைகளுக்கான ஆற்றல்களின் (Air Compressor) தணிக்கை என நுண்மையாக பல ஆற்றல் தணிக்கைகளைச் (Energy Audit) செய்து திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கு வழிவகுக்க முடியும்!

 அமெரிக்காவில் State Policy, Federal Policy, Local Policy என பல்வேறு திட்டங்களை வகுத்து உள்ளூர் அளவிலிருந்து தேசிய அளவுவரை திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான வழிவகைகளைத் தேடி இன்றளவும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதில் பெரும் வெற்றியடைகின்றனர்! வீடுகள், சிறுதொழில், விவசாயம், தொழிற்சாலைகள், வணிகம் போக்குவரத்து என்று எல்லாத் துறைகளுக்கும் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள்.

அமெரிக்கர்களுடைய நெடுநாளைய அனுபவத்தைத் தங்கள் நாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள திட்டம் வகுத்து சீன அரசு பல்லாயிரம் மெகாவாட் மின் சக்தியைச் சேமித்துள்ளது. இப்படி இது பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்!

உலக நடவடிக்கைகள் இவ்வாறு இருக்க, இந்தியாவிற்கு திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றித் தெரியாதா?

இந்தியாவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவு: இந்தியாவில் Indian Institute of Science என்ற உயர்கல்வி நிறுவனம் உள்ளது. அதில் பேராசிரியராக இருந்த மறைந்த முனைவர். அமூல்யா ரெட்டி மற்றும் பிரேசில் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் சர்வதேச ஆற்றல் தேவைக்கான முன்முயற்சி (International Energy Initiative) என்ற அமைப்பைத் துவக்கினர். இன்றுவரை அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் ஆற்றலை எப்படித் திறம்பட பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றியும், இங்குள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்றவாறு ஆராய்ச்சிகளும் செய்து அவற்றை வெளியிட்டும் வருகின்றனர்.

 இந்தியாவின் தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் (National Productivity Council), அமெரிக்காவின் பிரின்சிடன் பல்கலைக் கழகத்தின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறையைச் சார்ந்த மையம் (Center for Energy and Environmental studies of Princeton University, USA) இரண்டும் இணைந்து இந்தியாவை மையமாக வைத்து அதிகளவில் ஆற்றல் செலவழியும், மோட்டார்களை ஒட்டிய அமைப்புகளில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான தொழில்நுட்ப பட்டியல் (Technology Menu for Efficient Energy use – Motor Drive System) என்ற பெரும் அறிவுப் பொக்கிஷ‌த்தை வெளியிட்டு உள்ளனர். அதை வெளியிட உதவி செய்த அமைப்புகள் புதுதில்லியைச் சேர்ந்த இந்திய அரசின் தொழில் நுட்பம், தகவல், வருங்கால நிலை மற்றும் அதை ஆராயும் கவுன்சில் (Technology. Information, Forecasting & Assessment council (TIFAC), New Delhi, India) மற்றும் நாம் முன்னர் சொன்ன சர்வதேச ஆற்றலுக்கான முன்முயற்சி (International Energy Initiative, Bangalore, India) ஆகியன.

 இந்த தொழில்நுட்ப பட்டியல் 1994 ஆம் ஆண்டிலேயே குறிப்பிடப்படுபவை மிகவும் முக்கியமானவை: “மின்சாரத்திற்கான அதிகரித்த தேவையை கணிசமாக ஈடுசெய்வதற்கு, புதிய மின்நிலையங்களை அமைப்பதைக் காட்டிலும் மின்சாரத்தைத் திறம்படச் செலவழிப்பதே சிறந்த வழி என்று பல்வேறு நாடுகள் கண்டுணர்ந்துள்ளன. அமெரிக்கா, பிரேசில், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடைநிலையில் (End use) மின்சார பயனீட்டாளர் இடத்தில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நுண்ணிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அநேக ஆய்வுகளில், தற்போதைய மின்சாரப் பயன்பாடு அல்லது பின்னாட்களில் நிறுவ வேண்டிவரக்கூடிய மின்நிலைத் திறனை குறைந்தபட்சம் 25 சதவீதம் குறைக்க முடியும் என்கின்றன. இவற்றில் மோட்டார் சார்ந்த அமைப்புகளில் மின் சேமிப்பிற்கான சாத்தியப்பாடு மிக அதிகளவு இருக்கிறது.”

 “இந்தியாவில் இவ்வாறான மின்மோட்டார் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களின் மின்பயன்பாட்டைத் திறம்பட உபயோகிப்பதற்கான சாத்தியத்தைக் கணக்கிட்ட முயற்சிகளே மிகமிகக்குறைவு. இதற்கான காரணம் நாட்டில் கடைநிலைப் பயனீட்டாளர்களை வகைப்படுத்திய தரவுகள் (Data) இல்லை என்பது தான்”.

 அவர்கள் சொன்னவை இன்றளவும் இந்தியாவிற்குப் பொருந்தும். வரவிருக்கும் 18வது இந்திய மின்சக்திக் கணக்கீட்டு அறிக்கையிலும் (Report on 18th Electric Power Survey of India) இதற்கான தரவுகள் இருக்காது என்பது நிச்சயம்!

 அமெரிக்காவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் முதன்மையான ஆற்றல் மூலம் என்று மதிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் பயனடைந்த விவரங்களைப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது! இவ்வளவு அதிமுக்கியமான ஒரு மூலம் (Energy Source) நம் நாட்டில் பொதுவெளிக்கு வராமல் போனது தற்செயல்தானா? இது பற்றி நம் விஞ்ஞானிகளுக்குத் தெரியாதா? அப்படி தெரியவில்லை என்றால் ஏன் ஆற்றல் விஞ்ஞானிகளாக (Energy Scientist) அணுவிஞ்ஞானிகள் காட்சி அளிக்க முயல்கின்றனர்? தங்களது ஆற்றல் மூலம் மட்டுமே சிறந்தது என்று ஏன் கூறுகின்றனர்?

நம் நாட்டில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவைப் பயன்படுத்திக் கொண்ட சில பெருந்தொழில் நிறுவனங்கள், 1999 முதல் 2010 வரையில் தன்னார்வமாக 2461 மெகா வாட் அளவு மின்சாரத்தை சேமித்திருக்கின்றன. இதை சொல்வது இந்திய அரசின் ஆற்றல் துறைதான்! அதாவது மக்கள் வரிப்பணச் செலவு எதுவுமே இல்லாமல் 2461 மெகாவாட் மின் சக்தி உபரியாக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூடங்குள அணு உலைகளின் மின்சக்தித்திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித்திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர்.

 இவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை கணக்கில் எடுக்காமல் எப்படி அணுஉலைதான் சிறந்தது அதுதான் நமக்குத் தேவை என்கின்றனர் அணுவிஞ்ஞானிகள்?

 பிரதமருக்கு இந்த மூலம் (Energy Source) பற்றி எல்லாம் சொல்லப்பட்டதா? Integrated Energy Policyயைத் தீட்டும் Planning Commissionம் முறையின் முக்கியத்துவம் பற்றி பிரதமருக்கு விளக்கியதா? அரசு கவிழ்ந்துவிடும் நிலையில் கூட இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்தை கையெழுத்திட முனைப்பாக இருந்தனரே!

திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு என்ற மூலத்தைப் பற்றி கணக்கிடக் கூட சரியான தரவுகளே இல்லை என்ற நிலையில், அதில் அரூபமாக ஆற்றல் உருவாக்கத்திற்கான (Virtual Energy Generation) பெருமளவு வாய்ப்பு உள்ள ஒன்றை கணக்கிலேயே எடுக்காமல், பொது வெளிக்குக் காட்டாமல் நம் முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான அப்துல்கலாமும், இந்நாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங்கும் அணுசக்தி இல்லாமல் வளர்ச்சிக்கு வழியே இல்லை என்கின்றனர். இதுவா விஞ்ஞானப்பூர்வமான விவாதம்?

- கோபால் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It