வரலாறு மொழிவழிப்பட்ட தேசியத்தை உருவாக்கிக் கொண்டு முன் நகர்ந்தது.
இந்தியத் துணைக் கண்டத்தின் துயரம் இங்கு பார்ப்பனியம் தனது சமக்கிருதத்தால் அனைத்துத் தேசிய இனமொழிகளையும் நீச மொழிகள் எனவும் அந்த மொழி பேசும் மக்களை நீசர்கள் எனவும் அடிமைப் படுத்தி இருந்தது.
மேலும் சாதிய சமூக அமைப்பை கடவுளின் கட்டளை என்றாக்கி உழைக்கும் மக்களை பிறவி அடிமைகளாக்கி ஆண்டு வந்தது.
பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கம் இங்கு ஒரு புதிய வகை முதலாளி வர்க்கத்தை உருவாக்கியது. அந்த வர்க்கத்தின் நலனை எதிரொலித்த தலைவர்கள் ஒரு இந்திய தேசியத்தை இந்து பார்ப்பனியத்தையும் அதன் இந்தி மொழியையும் அடிப்படையாக வைத்தே கட்டமைத்துள்ளனர்.
இது குறித்து கார்முகில் அவர்கள் இ.தே.ஜ.பு நூலில் கூறியதை முன் வைக்கின்றேன்.
காந்தி தன்னை ஒரு சனதான இந்து என்றும் தான் வேதங்களை நம்புவதாகவும், வர்ணாசிரமத்தை நம்புவதாகவும் யங் இந்திய இதழில் கூறியுள்ளார்.
"இந்திய சமுதாயத்திற்குப் பொதுவான அம்சம் இந்துத்துவா என்ற உணர்வுதான்" என்றார் திலகர்.
" இந்தியாவில் இன்றுள்ள தேசிய இயக்கத்தின் ஆன்மீக அம்சம் முழுக்க முழுக்க வேதாந்த சிந்தனையிலிருந்து பெறப்பட்டதுதான்" என்றார் லஜபதிராய்.
" இந்து மதம் என்று அழைக்கப்பட்ட பார்ப்பனியமே இந்திய தேசியக் கலாச்சாரம்-அதுவே தேசிய உணர்வுகளுக்கு அடிப்படையாயிற்று. தொன்மையான பார்ப்பனிய சிந்தனைகளும், நம்பிக்கைகளுமே இந்திய தேசிய மறுமலர்ச்சிக்கான அடையாளமாயின" என்றார் பண்டித ஜவர்ஹலால் நேரு.
இதே கருத்துக்களையே அரவிந்தரும், விபின் சந்திரபாலும் முன் வைத்துள்ளனர்.
இந்தத் தலைவர்களின் மேற்கண்ட கருத்துகளை எஸ்.வி. இராஜதுரை அவர்களும் தனது 'இந்து, இந்தி, இந்தியா 'எனும் ஆய்வு நூலில் உறுதி செய்கிறார். இந்தத் தலைவர்கள் அனைவரையும் அரவணைத்து பாதுகாத்தவர்கள் மார்வாடி, பனியா முதலாளிகளே. காந்தி கோவணத்தைக் கட்டிக் கொண்டு பிர்லா மாளிகையில் வாழ்ந்து வந்தது மட்டுமல்ல, தனது குருதியையும் பிரலா மாளிகையில் சிந்தியே உயிர்விட்டார்.
நமது கவலைக்குரிய விசயம் நிகழ்வுகள் இவ்வாறு நடந்தேறிக் கொண்டிருந்த போது கம்யூனிஸ்டுகள் தேசம் என்பது பற்றியோ தேசிய இனம் என்பது பற்றிய பார்வை இல்லாமல் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பதிலேயே விவாதங்களை நடத்தி வந்தனர்.
1930 களில் மொழி வழி மாநிலக் கோரிக்கை வந்தபோதுதான் இந்தியாவிலுள்ள தேசிய இனங்களை ஸ்டாலின் வரையறைப் படி புரிந்து கொள்ள முயன்றனர். எனினும் தேசிய இனமாக இல்லாத இந்தியர்களை உள்ளடக்கி ஒரு தேச விடுதலைப் போராட்டம் நடப்பதாக தவறாக மதிப்பீடுகள் செய்து வேலைத்திட்டங்களை வகுத்து செயல்பட்டுள்ளனர்.
தவிர்க்க இயலாமல் 1947ல் வெள்ளையனிடமிருந்து சமரசமாக பார்ப்பனிய தரகு முதலாளிகளுக்கும், சாதிய நிலப்பிரபுக்களுக்கும் அதிகாரம் கைமாறியதை ஒரு தேசிய விடுதலை நடந்தேறி விட்டதாகவே இந்தியக் கம்யூனிஸ்டுகள் கொண்டாடினர்.
காங்கிரசிலிருந்தும், கம்யூனிஸ்டுகளிலிருந்தும் மாறுபட்டு தமிழகத்தில் இருந்த பெரியார் இது விடுதலை அல்ல, பரங்கியன் கையிலிருந்த அதிகாரம் இனி பார்பான், பனியா, மார்வாடிகள் கையில் இருக்கும் என்றார்.
வரலாறு பெரியாரின் கூற்றை மெய்ப்பித்துவிட்டது.
பாவலரேறு சொன்னார் "நம்மீது இந்தியா இருக்கும்வரை இந்தியும் இருக்கும். எப்படி குதிரை இருக்கும் வரை குதிரைப் பீ இருக்குமோ அது போல "என நல்ல உவமை கொண்டு சொன்னார்.
இந்திய தேசியமும், கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றமும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது முதலாவது காங்கிரஸை 1943ல் நடத்தியது. பி. சி ஜோஷி பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் 1925 ல் கான்பூரில் சத்தியபக்தன் என்பவரின் முன்முயற்சியால் கூட்டப்பட்ட மாநாட்டில் இந்தியப் பொது உடமைக் கட்சி தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி தோன்றுவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்து பார்ப்பனியத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய தேசியத்தை அமைப்பது என்ற இலக்கோடு 1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றியது. அது தன்னை இந்திய தேசிய விடுதலை இயககமாகக் காட்டிக் கொண்டு செயல்பட்டு வந்தது.
கம்யூனிஸ்ட் கட்சி உருவாகும் போது ஏகாதிபத்திய எதிர்ப்பே உலகில் முதன்மையானதாக இருந்தது, தேசிய இனங்கள் எவ்வித எழுச்சியுமின்றி இருந்தன. காலனி ஆட்சி கூட ஒரு தேசிய இன வட்டகை கொண்டதாக இல்லை.
தேசிய இனங்களை கூறுபோட்டு பிரிட்டிசாரின் நிர்வாக அமைப்புக் கட்டப்பட்டிருந்தது. சென்னை ராஜ்தானி, கல்கத்தா பிரசிடென்சி, பம்பாய் பிரசிடென்சி என இருந்தன. இந்த அதிகார வட்டத்துக்குள் பல தேசிய இன மக்களும் அடைக்கப் பட்டிருந்தனர்.
இவ்வாறு இந்திய தேசிய காங்கிரஸ் ஏற்கனவே தோன்றி இருந்ததும், தேசிய இனங்களின் மொழிவழி தேசிய இயக்கமின்மையும், ஏகாதிபத்திய எதிர்ப்பே முகாமையானதாக இருந்ததும் கம்யூனிஸ்ட் கட்சியை இந்திய தேசிய நோய் பற்றிக் கொள்வதற்கான புறச் சூழல்களாக அமைந்தன.
இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் புரட்சி இயக்கத்தின் முதன்மையான எதிரியாக ஏகாதிபத்தியம் இருந்த காலத்தில் கட்சி தோன்றியதால் மொழி, இனக் கூறுகளற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலபிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயக இந்தியா என விளக்கமளித்துக் கொண்டது.
சோவியத்தில் ஒவ்வொரு தேசி்ய இனத்திலும் கட்சிகள் தோன்றி இயங்கி வந்தது. ருசிய தேசிய இனத்தில் தோன்றிய. இலெனின் ருசிய கம்யூனிஸ்ட்கட்சியை பலமாக அமைத்துக் கொண்டு அனைத்து தேசிய இனக்கட்சிகளையும் பொது எதிரியான ஜார் மன்னனுக்கு எதிராக அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய. உரிமை என்ற கொள்கையை முன்வைத்து இணைத்தார். அப்போதும் இலெனின் ருசியதேசியத்தை அமைப்பதை இலக்காகக் கொள்ளவில்லை.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய இன வட்டகையில் தோன்றி வளர்ந்து பின் இணையவில்லை. மாறாக பெரு நகரங்களில் ஆங்கிலம் தெரிந்தவர்களைக் கொண்ட கட்சிக் குழுக்கள் உருவாகி பின் இந்திய அளவில் இணைந்தன.
தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய. உரிமைக் கோட்பாடும், அதை இந்தியக் கம்யூனிஸ்ட்கள் அணுகிய விதமும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1925 ல் தொடங்கும் போதே' இந்திய தேசத்தை உருவாக்குவது' என்ற இலக்கோடுதான் தோன்றியது.
இந்திய தேசியம் என்பது இந்து பார்ப்பனிய அடிப்படையில் உருவாக்கப் பட்டது என்பதையோ அது சாதி ஆதிக்கத்தையும், தேசிய இனங்களின் அரசுரிமையை மறுக்கும் ஒரு அடக்குமுறைக் கோட்பாடு என்பதையோ கம்யூனிஸ்டுகள் உணரவில்லை.
தேசிய இனங்களின் எழுச்சி என்பது பிரிட்டிஷ் இந்தியாவில் 1930-40 களில் ஏற்பட்டது. தமிழகத்தில் பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்தை எழுப்பி இயக்கங்களை மேற்கொண்டார். ஆந்திர மாநிலத்திற்கான கோரிக்கைகளும் வலுப்பெற்றது. ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை மத அடிப்படையில் முன் வைத்தார். எது எப்படி இருந்தாலும் பார்ப்பனிய சக்திகளின் ஏக இந்தியக் கனவு பலிக்காதோ என்ற நிலை வந்தது.
புற நிலையில் தேசிய இனங்கள் மொழிவழி அரசுக்கான கோரிக்கைகளை எழுப்பிய பின் இந்தியக் கம்யூனிஸ்டுகள் தேசிய இனம், தேசம் பற்றிய. மார்க்சியக் கருத்தியலை உணரத் தொடங்கினர்.
ஸ்டாலின் வரையறைப் படி இந்தியாவில் பல் வேறு தேசிய இனங்கள் இருப்பதையும் கட்சி உணர்ந்து கொண்டது. இந்த தேசிய இனங்களின் எழுச்சி ஒன்று பட்ட இந்திய தேசத்தை உருவாக்க பேராபத்தானது என பார்ப்பன சக்திகளைப் போலவே இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர்களும் கவலைப்பட்டனர்.
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கொள்கையை இலெனின் முன்வைத்து ஜார் அதிகாரத்தின் கீழ் இருந்த பல்வேறு தேசிய இனங்களை ஒன்றுபடுத்தியதைப்போல இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்தியாவையும் ஒன்றுபடுத்த சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை ஒரு உத்தியாகக் கையாள முடிவு செய்தனர்.
தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை என்பதை 1943 ல் நடந்த முதல் காங்கிரசில் முடிவு செய்து கட்சித் திட்டத்திலும் முன்வைக்கப்பட்டது. இதனடிப் படையில் மொழிவழி மாநிலக் கோரிக்கைகளை இ.பொ.க உறுதியாக ஆதரித்தது.
மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின் இந்தியாவின் பல பகுதிகளில் தேசிய இன விடுதலைக் கோரிக்கைகள் முன்வந்தன. இது இந்திய ஒருமைப்பாட்டை பாதித்துவிடும் என இ.பொ.கவும் சரி அதிலிருந்து பிரிந்து வந்த இ.பொ.க( மா) ஆகிய இரண்டு கட்சிகளும் சுயநிர்ணய உரிமைக் கொள்கையையே கட்சித் திட்டத்திலிருந்து நீக்கி விட்டன. இந்தக் கொள்கையை வைத்திருந்தால் தேசிய இன விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி கட்சிக்கு வந்து விடக் கூடாது என்றே நீக்கினர்.
சுயநிர்ணய உரிமை என்பது தேசிய இனங்களின் பிறப்புரிமை என்றார் இலெனின். ருசியாவோடு பிற தேசிய இனங்களை இணைத்துக் கொள்வது என்ற நலனிலிருந்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கொள்கையை இலெனின் கையாளவில்லை. மாறாக அது ஒரு ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் அணுகினார்.
ஆனால் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி சுயநிர்ணய உரிமைக் கொள்கையை இந்திய ஒற்றுமையைப் பாதுகாக்கும் ஒரு உத்தியாகவே அணுகியது. எனவே இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலைக் கோரிக்கை எழுந்தவுடன் தனது சுயநிர்ணய உரிமைக் கொள்கைக்கு விசுவாசமாக இருந்து அதை ஆதரிக்காமல் 'இந்திய தேசியத்தைப்'பாதுகாப்பது என்ற கரிசனத்தோடு சுயநிர்ணய உரிமைக் கொள்கையையே நீக்கி விட்டனர்.
இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய இனங்களின் சுயநிர்ணய. உரிமையை மறுத்து இந்திய தேசியத்தின் பாதுகாவலனாக மாறியது.
இதன் மூலம் தரகு முதாலாளியம், மற்றும் பார்ப்பனியத்திற்கு பாதுகாவலனாக மாறிவிட்டது. தேசிய இனங்களின் போராட்டங்கள் அனைத்தையும் காங்கிரசோடும், பாஜகவோடும் சேர்ந்து நின்று ஒடுக்கியது.
காசுமீர் விடுதலை, வடகிழக்கு மாநிலங்களின் விடுதலைப் போராட்டங்கள், தமிழீழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழகத்தின் உரிமைப் போராட்டங்கள் அனைத்தையும்
காங்கிரஸ், பாஜக, இ. பொக, இ.பொ.க (மா) ஆகிய கட்சிகள் ஒரே முகாமில் நின்று அணுகியதற்கு இதுவே காரணம்.
(தொடரும்)
- கி.வே.பொன்னையன்