நிழலின் நிழல்

நிறைய கதவுகள் அடைபட்டிருக்கின்றன
நிறைய கனவுகள் பூக்காது உதிர்ந்திருக்கின்றன
நிறைய கடவுள்கள் பிறந்து கொண்டேயிருக்கின்றனர்
நகத்தைக் கடித்து
மூளையைக் கசக்கி
எழுதினேன் ஒரு கவிதை

காற்று போன பலூன் மண்ணுள் புதையும்
பூவல்ல பெண்
முள் அல்ல பெண்
பூவாகவும் முள்ளாகவும்
இருக்கணும் பெண்

சென்ற இடங்களை சொல்லத் துவங்கினேன்
சுவையானவைகளை விவரித்தேன்
கஷ்டங்களை கண்ணீரை ஏனோ சொல்லவில்லை

நட்சத்திரங்கள் சிரிக்கின்றன
நானும் சிரிக்கிறேன்
நிலவே நீயேன் அழுகிறாய்?
நெருங்குகிறேன் விலகுகிறாய்
விலகுகிறேன் நெருங்குகிறாய்
நீடிக்கிறது ஊடல் விளையாட்டு... விளையாட்டு

காயாம் பூக்கள் பூத்திருக்கின்றன
காடெல்லாம் நீலக்கடல்
காற்றுவெளியிடையே அமுதம்

சிலுவையில் ஏசு தொங்குகிறார்
சாப்பாட்டு மேஜையில் வறுத்த மாமிசம்
கடைசி விருந்து

நியாயம் மெல்லச் சாகுகிறது
அநியாயம் கை கொட்டிச் சிரிக்கிறது
நீதி வேடிக்கை பார்க்கிறது

ஆற்றில் அலையடிக்கிறது
எங்கும் மணல் வெளி
கானல் நீர்

பறவைகள் கூடு அடைகின்றன
அந்தி இருளுக்குள் விழுகிறது
மோனங்கள் மூண்டு எழுகின்றன
நிம்மதியான இடம்
நினைவுகளெங்கும் தொடரும்

தாயின் கர்ப்பகிரகம்
சிட்டுக் குருவிகள் திரிந்த நிலம்
சீதளக்காற்று வீசிய பூந்தோட்டம்
சாம்பல் பறக்கும் சுடலை
சாலையோரம் பூ மரங்கள் சிரிக்கின்றன
நீலவானில் வெண் புறாக்கள் நடனமிடுகின்றன
சாயங் காலத்திற்குச் செல்கிறேன்...செல்கிறேன்
கண்ணில் விழுந்தாள்
நெஞ்சுக்குள் உதித்தது நிலவு
திசையெல்லாம் ஒளிப்பிழம்பு...ஒளிப்பிழம்பு

குழந்தைகள் ஆடிப் பாடுகின்றனர்
கனவுகள் பராமரிக்கப்படுகின்றன
மாற்று வழியில் செல்லுங்கள்...செல்லுங்கள்

பயம் துரத்துகிறது
துணையாய் தனிமை
வாழ்ந்து தீர்க்கணும்...தீர்க்கணும்

இழப்பின் வலி இழந்தவர்க்கு
அவனும் அவளும் ஓடிப்போய்விட்டனர்
இரு குடும்பங்களின்
இதயங்கள் சிதறின
குழந்தைகள் பொம்மைகளாயினர்
பொம்மைகள் குழந்தைகளாயின

கோமாளி கூத்தாடுகிறான்
பட்டம் மேலேறுகிறது
பலூன் கீழிறங்குகிறது

காற்றின் ஊடல்
ஈர ஆற்று மணல்
காலடித் தடங்கள்
சுவரில்லா சித்திரங்கள்...சித்திரங்கள்

மலைக்குள் எம் ஜிய்யான்கள்
கடலில் எம் முப்பாட்டனார்கள்
எம் நிலம் எம் உயிர் எம் உடல்...உடல்
மழைச் சாலையில் யாரும் இல்லை

ஒப்பாரியிடும் காற்று
இறந்து கொண்டிருக்கும்
இணை பிரிந்த புறா.

 ***

உடையும் படிமங்கள்

காகங்கள் அபூர்வமானவை
எடுபிடிகளாய் எவர்க்கும் இருந்ததில்லை
அசிங்கப்படுத்தப்படுகின்றன காலந்தோறும்
நிலவு தீக்கிரையாக்கப்பட்டது
சூரியன் நீருக்குள் மூழ்கடிக்கப்பட்டது
மின்னல் மட்டும்தான்
தப்பித்து விட்டது
புல்லினுள் வேட்டையாடும்
குறு பூச்சிகள்
நாவு நீட்டித் திரியும் மஞ்சள் தவளை
சுழித்தோடிப் பாய்கிறது
எறியபட்ட சிகரெட் தீ
கருவேலஞ் செடி மேல் ஓணான்
கிளையில் ஊரும்
எறும்புகளைத் தின்கிறது
பசி தீர்க்க மேலேறுகிறது
கொம்பேரி மூக்கன்
மரம் வெட்டப் போனான் ஈப்புலி
வனமெல்லாம் பொட்டலாக் கிடந்துச்சு
வேப்பமுத்த புதச்சுட்டு
வீடு வந்து சேர்ந்தான்
இச்சம் புதருக்குள்
ஈன்று கொண்டிருக்கிறது வரையாடு
காவலுக்கு மின்மினிகள்
பூச்சாண்டி வருவான்
பூதம் வரும்
புஸ்ஸூன்னு ஆக்கிருச்சு வீடியோ கேம். 

*** 

அலையின் நுரை 

கடல் கொந்தளிக்கிறது
கவிதையில் ஏறி பயணிக்கிறேன்
கரை காணுவதற்குள்
நான் மூழ்கிப் போகலாம்

பறவையின் நிழல்
நிலமெங்கும் படருகிறது
முட்டையிலிருந்து வெளி வந்த புழுக்களாய் ஜனங்கள்
பறவையை சுட்டு வீழ்த்த கவிதை செய்து கொண்டிருக்கிறேன்

காற்றில் பறந்து வரும்
ஒரு மல்லிகைப் பூ
ஒற்றையடிப் பாதை
மூடு பனி
குதித்தாடுகிறது சிற்றகல்
குலைந்தோடுகிறது இருள்
மனசெல்லாம் வெளிச்சம்

வானவில்லில் கண்கள் விழிக்கின்றன
வண்ணப்பூக்களில்
இதயங்கள் துடிக்கின்றன

வண்ணத்துப்பூச்சியின் முதுகில் மின்மினி பயணிக்கிறது
நட்சத்திரங்கள் தொலைவில் மின்னுகின்றன
ஆசைகள் நெஞ்சுக்குள்
சுற்றித் திரிகின்றன

கல் கரைந்து கொண்டிருக்கிறது
நதியின் புன்னகை
கரையோர புற்களின் குதூகலம்
நறுமணம் கமழும் தனிமை
பூக்களைக் கொளுத்தியது
கொடிகளை எரித்தது
வெயிலின் உக்கிரம்

நானே நல்ல மேய்ப்பன்
நானே தப்பி வந்த ஆடு
எனக்கு நானே மேய்ப்பன்

சீட்டு எடுத்தது கிளி
கிடைத்தது அதற்கு நெல்மணி
பிரித்த சீட்டுள் நரகம்
நாக்குத் துருத்திய காளி
அரிவாள் ஏந்தி நிறை போதை பூசாரி
தலை உலுக்காமல் நடுங்கும் ஆடு
கண்ணீர் கறையுள் தோன்றி மறையும்
நெஞ்சருக்கும் சித்திரங்கள்

- வசந்ததீபன்

Pin It