வாசிங்டன், புதுதில்லி, கொழும்பு புவிசார் அரசியல் அச்சு!

 அண்மையில் இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரணில் விக்கிரமசிங்கேவிற்கும் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மகிந்த இராசபக்சேவிற்கும் இடையில் பிரதமர் பதவிக்கு நேரடி போட்டி நிலவியது. ஆனால் இப்பொழுது இலங்கையின் அதிபராக இருக்கும் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனா, தான் இரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். மேலும் ஒருபடி மேலே சென்று இராசபக்சே தேர்தலில் வெற்றிப் பெற்றாலும் இலங்கையின் பிரதமராக முடியாது என்று அறிவித்தார். இந்தப் பின்னணியில்தான் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இலங்கை தேர்தல் முடிவு குறித்து செய்தி வெளியிட்ட இந்திய ஊடகங்கள் இரணில் மிகப்பெரும் வெற்றியை ஈட்டினார் என அறிவித்தனர். இரணில் இராசபக்சேவைவிட அதிக இடங்களைக் கைப்பற்றினார் என்பது உண்மை. ஆனால் பெரும்பான்மையை நிறுவத் தேவையான 113 இடங்கள் இரணிலுக்கு கிடைக்கவில்லை. தேசியப் பட்டியலுக்கான இடங்களையும் சேர்த்து இரணில் பெற்றது மொத்தம் 106 இடங்கள் மட்டுமே. இது பெரும்பான்மையை நிறுவத் தேவையான 7 இடங்களைவிடக் குறைவு. மேலும் இரணில் சிங்கள மக்கள், மலையகத் தமிழர்கள், இசுலாமியர்கள், கொழும்புத் தமிழர்கள் வாக்கு என அனைவரின் ஆதரவையும் பெற்று 106 இடங்களை வென்றிருக்கும் அதேவேளை பெரும்பான்மையாக சிங்களமக்களின் வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கும் இராசபக்சே 96 இடங்களைக் கைப்பற்றி இருக்கின்றார். சுருக்கமாக, இரணிலுக்கு ஆதரவு பெருகி இருக்கின்றது என்று எடுத்துக் கொண்டாலும் இராசபக்சேவிற்கு ஆதரவு குறையவில்லை என்றுதான் கூற வேண்டும். கடந்த 2010 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளையும் இந்த ஆண்டு 2015 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.

மேலும் பெரும்பான்மை பெறாத ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் இரண்டாவது பெரும் கட்சியும் எதிர்க்கட்சியுமான இலங்கை சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க இராசபக்சே மறுத்த பொழுதும் இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஒன்றுகூடி ஆட்சியமைக்க இரண்டு ஆண்டுகள் ஆதரவளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த சனவரி மாதம் இரணில் தலைமையில் இலங்கையில் ஏற்பட்ட "ஆட்சி மாற்றம்" மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப் போகின்றது.

வடக்கு கிழக்கைப் பொறுத்தமட்டில் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக இடங்களை வென்று மொத்தம் 16 இடங்களுடன் இலங்கையின் மூன்றாவது பெரும் கட்சியாக உள்ளது.

இவ்வாறு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கும் வினோதம் இலங்கையின் இன்றைய அரசியல் பொருளாதார நிலைமையில் நடந்தேறியுள்ளது. கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இலங்கை நாடாளு மன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக அமர்த்தி யுள்ளது சிங்கள ஆளும் வர்க்கம். 37 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழர்களுக்கு இலங்கையில் சம உரிமை வழங்கப் படுகின்றது என்ற செய்தியை உலகிற்கு சொல்லவும் அதேவேளை எந்த தீர்வையும் தமிழர்களுக்கு கொடுத்துவிடக் கூடாது என்பதிலும் இலங்கை அரசு மிகவும் கவனமாக உள்ளது. மெருகேறிய சிங்கள இராஜதந்திரத்தின் உச்சமிது!

கடந்த சனவரி மாதம் பதவியேற்ற மைத்திரி தலைமையிலான புதிய அரசு தமிழர் பகுதியில் இருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்றுதல், தமிழர் காணிகளைத் திரும்ப ஒப்படைத்தல், காணாமல் போனவர்கள் குறித்து விசாரித்தல் என்பது உள்ளிட்ட எந்தக் கோரிக்கைக்கும் இதுவரை தீர்வுகாண எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக இன அழிப்புப் போரின் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு ‘ஃபீல்டுமார்சல்’ பட்டம் கொடுத்தது புதிய அரசு. 57 ஆவது படைப்பிரிவின் இராணுவத் தளபதிக்கு இராணுவ அதி உயர் பாதுகாப்பு அதிகாரி (Field of Staff) என்று பொறுப்பு தந்து அலங்கரித்துள்ளது.

 ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத் தொடர்:

இந்தச் சுழலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தின் 30 ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் 14 ஆம் நாள் முதல் அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் வரை உள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளிவர இருந்த இலங்கை தொடர்பான பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை இந்த செப்டம்பர் மாதம் வருமென ஐ.நா.மனித உரிமை மன்ற ஆணையாளர் அறிவித்திருந்தார். அதன்படி அறிக்கை இந்த மாதம் வர இருந்த சூசழலில் அண்மையில் இலங்கை வந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் அரசு செயலாளர் நிஷா பிஷ்வால் அவர்கள் இலங்கை அரசுத் தரப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கொழும்பில் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு பேசிய அவர் இலங்கை தொடர்பான ஐ.நா. குழுவின் அறிக்கை இந்த கூட்டத்தொடரில் வெளிவந்தாலும் இலங்கை தொடர்பான புதியதொரு தீர்மானத்தை அமெரிக்கா இந்த கூட்டத் தொடரில் கொண்டு வரும் எனவும் அந்த தீர்மானம் புதிதாக அமைந்துள்ள அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்கி இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை வளர்க்க உதவும் எனவும் இத்தீர்மானம் இலங்கை அரசிற்கு ஆதரவாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

கடந்த சனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இராசபக்சே தோற்று மைத்திரி அதிபரானார். அப்பொழுது இலங்கையின் பிரதமராக இரணில் பதவி அமர்த்தப்பட்டார். அது தொடக்கம் இலங்கை அரசு சர்வதேச அளவில் குறிப்பாக மேற்குலக நாடுகளிடமும் இந்தியாவிடமும் இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலை குறித்த பன்னாட்டு விசாரணைக்கான பொறியமைவொன்று ஐ.நா. அளவில் வந்துவிடக்கூடாது என்பதற்கு தொடர்ச்சியான அரசு உறவு நடவடிக்கைகளை உயர்மட்ட அளவில் மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக இலங்கையின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற மங்கள சமரவீர தலைமையிலான குழு சர்வதேச நாடுகளின் உயர்மட்ட தலைவர்களைச் சந்தித்து ஐ.நா. வில் இலங்கையைப் பாதுகாக்கும் வேலையை தொடர்ச்சியாக செய்து வருகின்றது. இவர்களின் பரப்புரையின் தொடர்ச்சியாகவே மார்ச் மாதம் வெளிவர இருந்த அறிக்கை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப் போடப்படும் அறிவிப்பை ஐ.நா.ம.உ.ம. ஆணையாளர் சையது அல் உசேன் அவர்கள் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மூடி மறைக்கவும் அது தொடர்பான விசாரணையில் இருந்து அரசை முழுவதுமாக பாதுகாக்கும்வண்ணம் மேற்குலக நாடுகள், இலங்கை, இந்திய, தமிழர் தரப்புகளுடன் தொடர் சந்திப்புகளையும் பரப்புரைகளையும் மங்கள சமரவீர தலைமையிலான குழு செய்து வருகின்றது. இராசபக்சேவின் மூலம் அடைந்த இராணுவ வெற்றியை இரணில் விக்ரம்சிங்கேவைக் கொண்டு அரசியல் வெற்றியாக மாற்றத் துடிக்கிறது சிங்களப் பேரினவாதம். மேலும் இந்த புதிய அரசு கடந்த எட்டு மாதங்களில் இனப் படுகொலை விசாரணை, குற்றச்சாட்டு குறிந்து எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில் மீண்டும் கால அவகாசம் வேண்டிப் பெற்று இனப்படுகொலையை மறைக்கும் முயற்சியில் மேற்குலகின் ஆதரவையும் இந்திய அரசின் ஆதரவையும் பெற்று வெற்றி அடைந்துள்ளனர்.. அமெரிக்க அதிகாரியின் இலங்கையைப் பாதுகாக்கும் தீர்மானம் குறித்த அறிவிப்பும் அதனை த.தே.கூ தலைமைப் பொறுப்பில் இருக்கும் இரா. சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்டோர் எதிர்க்கவில்லை என்பதும் சிங்கள இராஜதந்திர வெற்றியின் ஓர் அம்சமாகும்.

அமெரிக்காவின் பின்வாங்கல்:

அமெரிக்க அரசைப் பொறுத்தவரை சீன சார்பான இராசபக்சே தலைமையிலான இலங்கை அரசைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும் அதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் தங்கள் ஆளுமையை நிலை நாட்டவும் ஐ. நா. ம. உ.மன்றத்தில் இலங்கை அரசுப் போரில் புரிந்த தமிழினப்படுகொலை தொடர்பான விவகாரத்தை பயன்படுத்தி வந்தது. இராசபக்சே தோற்கடிப்பட்டு மைத்திரி, இரணில் தலைமையிலான மேற்குலக ஆதரவு அரசு இலங்கையில் அமைந்தவுடன் ‘மனித உரிமை மீறல் விசாரணை’ என்ற பிடியினைத் தளர்த்தத்தொடங்கி விட்டனர். இதன்மூலம் இந்தியாவைக் கடந்து இலங்கை விவகாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆளுமையை பெற்றுள்ள அமெரிக்கா, 2009இல் இனப்படுகொலையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த அமெரிக்கா இலங்கையை அணைக்கும்விதமாகஉள்நாட்டுப்புலனாய்வுக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளது; அடுத்தகட்டமான பன்னாட்டுத் தீர்ப்பாயத்தை ஒத்த ஒரு பொறியமைவு ஏற்படுத்துவதைப் பின்னுக்குத் தள்ளப்பார்க்கிறது.

 தமிழர் தரப்பு கடந்த ஆறு ஆண்டுகளாக இலங்கை செய்த இனப்படுகொலை குறித்த பன்னாட்டுப் புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் அதன்மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு ஓர் அரசியல் தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என உலக நாடுகள் மத்தியில் மேற்கொண்டுவந்த அனைத்து நடவடிக்கைகளையும் நீர்த்துப் போகச் செய்யும் எதிர் நடவடிக்கையை இலங்கை அரசு செய்து முடித்துள்ளது.

வடமாகாண சபை இலங்கையில் நடைபெறுவது தமிழினப் படுகொலை என ஒரு தீர்மானத்தை ஏற்கனவே நிறைவேற்றி இருந்தது. இப்பொழுது இலங்கை குறித்த பன்னாட்டு விசாரணையே தமிழர்களுக்கு தீர்வை பெற்றுத் தரும் என உள்நாட்டு விசாரணைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர். எனவே தமிழீழத்தில் போராட்ட வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.புலம்பெயர்ந்த நாடுகளில் இதே கோரிக்கைக்காக அந்த அந்த அரசுகளை நோக்கிப் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கி விட்டனர்.

இந்திய அரசின் நிலைப்பாடும் தமிழகத்தின் கடமையும்:

இந்திய அரசைப் பொறுத்தவரைத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையைத் தாங்களே முன்னின்றுநடத்தியதால் 2009ஆம்ஆண்டும் முதலே இனப்படுகொலை குற்றச் சாட்டுகளை இந்திய அரசு இதுவரை அங்கீகரிக்கவில்லை. "இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போம்” என்று கூறுகிற மோடி அரசும் எதிர்பார்த்தபடியே காங்கிரசு அரசை விட கூடுதலாக இலங்கையைப் பாதுகாக்கும் பணியை செய்து வருகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு பயணம் சென்றது இருவருக்குமிடையேயான நல்லுறவைக் காட்டுகிறது. கடந்த ஆண்டு பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிகோலும் தீர்மானம் வந்த போதுகூட அதற்கெதிராக ஐ.நா. மன்றத்தில் காய் நகர்த்தியது இந்தியா. தமிழகத்தில் காங்கிரசுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கும் ஆளுமைமிக்கத் அகில இந்தியத் தலைவர்கள்கூட பா.ச.க. வுக்கு இல்லை. மேலும் கொள்கையளவிலும் காங்கிரசை விட ‘தேசிய ஒருமைப்பாடு’ பற்றிய வெறித்தனம் கொண்ட கட்சி பா.ச.க.

அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடோ உள்நாட்டுப் புலனாய்வைக் கொண்டு வந்தால் அதை எதிர்ப்பதே தமிழர்களின் நிலைப்பாடு. வட மாகாண சபையும் தமிழக சட்ட சபையும் பன்னாட்டுப் புலனாய்வின்றி வேறொன்றை ஏற்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. தமிழ் மக்களின் இந்த ஆணையை இந்த நிமிடம்வரை புறந்தள்ளியே

வந்துள்ளது இந்திய அரசு. உள்நாட்டுப் புலனாய்வு என்ற ஒன்றை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எதிர்த்து நின்று பன்னாட்டுப் புலனாய்வுக்கான பொறியமைவொன்றைக் கொண்டுவர இந்தியா முயல வேண்டும். இந்திய அரசே தீர்மானம் ஒன்றை முன்மொழிய வேண்டும் என்ற கோரிக்கைக்காக தமிழ்நாடு எழுந்து நிற்பது அவசியமாகும்.

வாசிங்டன் -புது தில்லி -கொழும்பு என்ற அச்சை முறிக்க வேண்டும். கொழும்பை ஈழத் தமிழர்கள் கவனிப்பார்கள். பிரச்சார நோக்கில் அமெரிக்காவை அம்பலப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், செயல் நோக்கில் அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை எதிர்கொள்வதுகூட இந்திய அரசினூடாகத்தான் நம்மால் முடியும். இந்தியாவின் நிலைப்பாட்டை நாம் மாற்றியமைப்பதுதான் ஈழத் தமிழர்களின் கொழும்புக்கு எதிரானப் போராட்டத்திற்கு ஊக்கம் சேர்க்கும். சர்வதேச நாடுகளுக்கு நிர்பந்தம் தரும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்திற்கும் வலுசேர்க்கும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொருத்தவரை தமிழீழம் என்பது கொள்கையளவில் ஏற்க முடியாததல்ல. ஆனால், கொள்கையளவில் சுயநிர்ணய உரிமைக்கு எதிரானது இந்தியா.எனவே,தமிழீழ உருவாக்கத்திற்கு எதிராக நிற்கின்றது. இவ்வண்ணம் இதுவரை பன்னாட்டுப் புலனாய்வுக்கு தொடர்ச்சியாக எதிர்நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது இந்திய அரசு. தெற்காசியாவில் அமெரிக்காவின் நட்பு நாடு என்ற வகையில் இந்திய அரசின் நிலையைச் சார்ந்தே அமெரிக்க நிலைப்பாடு அமைந்து வருகிறது. ஈழ விடுதலையின் புவிசார் அரசியலில் இந்தியாவே முதன்மையானது. ஈழத் தமிழரின் சர்வதேச நட்பில் தமிழ்நாடே முதன்மையானது. எனவே புது தில்லியை வளைத்தாக வேண்டும். அதை தமிழ் நாட்டைத் தவிர உலகில் எந்த சக்தியாலும் செய்ய முடியாது.

இந்திய சிங்களக் கூட்டை முறிப்பதை இலக்காய் கொண்டே போராட்டத்தைக் கட்டியெழுப்புவது தேர்தல் நலனை மட்டும் குறியாய்க் கொண்டு அறிக்கை, கடிதங்களோடு முடித்துக் கொள்ளும் கட்சிகளுக்கு நிர்பந்தம் ஏற்படுத்துவது, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓரணியில் இருந்து நமது குரலைத் தில்லிக்கு கொண்டு செல்ல வைப்பது ஆகியவற்றை நாம் செய்தாக வேண்டும்.

நீதிக்கான பயணத்தில் தடைகளைத் தகர்த் தெறியத் தேவையான பரந்த மனமும் அக வலிமையும் மதிநுட்பத்தையும் உலகத் தமிழினம் பட்டறிவிலிருந்து பெற்றுள்ளதை வெளிப்படுத்த வேண்டிய வரலாற்றுத் தருணமிது.

Pin It