இந்தியாவின் 69 ஆவது சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றி, பதினைந்து நிமிடங்கள் உரை யாற்றினார். விழாவில் கலந்து கொண்ட உயர் அதிகாரிகளுக்கு வணக்கம் சொல்லவும், விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்தபோராட்டத் தியாகிகளை நினைவு கூறவும் முதல் ஐந்து நிமிடங்கள் முடிந்து விட்டது. அம்மா நிச்சயம் "அது பற்றி" அறிவித்து விடுவார் என எஞ்சிய பத்து நிமிடங்களையும் பதற்றத்தோடு, ஊடகவியலாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
விலையில்லா மிதிவண்டி, விலை யில்லா மடிக்கணினி, விலையில்லா ஆடுமாடுகள் என பட்டியல் நீண்டு கொண்டிருந்தது. பிறகு பட்டியல் மாறி, அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் எனத் தம் பொற்கால ஆட்சியின் விவரங்களை அடுக்கிக் களைத்தார். இறுதி வரை "அந்த அறிவிப்பு" வரவேயில்லை. ஐயா சசி பெருமாளின் உயிர்த்தியாகத்தின் பின்னணியில் தமிழகமே மதுக்கடைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது. போராடிய மாணவர்களைக் கொடூரமாக, காவல்துறையைக் கொண்டு ஒடுக்கிக் கொண்டிருந்த ஜெயலலிதா, சுதந்திர தின உரையில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என வெற்றுப்பரப்புரை செய்த ஊடகங்களின் முகத்தில் கரியைப் பூசினார். ஜெயலலிதாவின் அரசியல் மோசடிகளையும், காவல்துறையை ஏவிச் செய்யும் தடித்தனங்களையும் கணக்கில் கொண்டால் இது எதிர்பார்த்த ஒன்றுதான்.
தனது அரசு கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும் மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்க்க பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஐயாயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப் போவதாகவும் அறிவித்தார். மாணவர் சேர்க்கை குறைவதாலும் இடை நிற்றலாலும் ஆசிரியர் நியமனங்கள் அறவே இல்லாததாலும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மூடும் அவல நிலைக்கு அரசுக்கல்வியை இழுத்து வந்த பெருமை இவரையே சாரும். முழுமையாக கல்வியைத் தனியாருக்கு தாரை வார்க்கும் ஒரு திட்டத்தின் பகுதியாக, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த எந்த துரும்பையும் கிள்ளிப் போடாத ஜெயலலிதா அரசு, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, 1319 அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டிருப்பதாகப் பொய்யான அறிக்கையை வாசிக்கிறது.
கடந்த 2011 இல் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய, எண்ணூர் அனல்மின் நிலைய (660 வாட்) விரிவாக்கத்திட்டம்; வட சென்னை காட்டுப்பள்ளி சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் (1600 மெகாவாட்) உப்பூர் அனல் மின் நிலையம் (1600 மெகாவாட்) ஆகிய திட்டங்கள் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. 2012-லேயே உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டிய உடன்குடி அனல்மின்நிலையத் திட்டம் இன்றளவும் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதிமுக கட்சிக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்கிற பேரம் படியாததாலேயே இத்திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை விளக்க வேண்டியதில்லை. இவ் வாறாக அரசின் திட்டங்களை முடக்கி வைத்து விட்டு, சந்தை விலையைக் காட்டிலும் கொள்ளை விலை கொடுத்து அதானி குழுமத் திடமிருந்து 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறது, தமிழக அரசு. இது தவிர, ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளர் த.செல்வராஜ் என்பவர் தமிழக மின்வாரியத்துறையில் ஒரு லட்சம் கோடிக்கு மேலாக ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பதாக, குற்றஞ்சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் திருக்கிறார். சிறுகாற்று மழைக்குக் கூடதாக்குப்பிடிக்காத, ஊழல் முறைகேடுகளால் சீரழிந்து போயிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளின் போதாமையால், ஏற்படும் மின்தடை குறித்தும் இங்கே பேச வேண்டியிருக்கிறது. நிலைமை இவ்வாறிருக்க“மின்வெட்டு என்கிற பேச்சுக்கே இடமில்லை" என்று வெற்றுப் பரப்புரை செய்கிறார் ஜெயலலிதா.
"சாதி பேதமற்ற சமுதாயம் படைக்க, ஏழைகள் வாழ்வு ஏற்றம் பெற" என மேடையில் அவர் முழங்கிக் கொண்டிருந்த நாளின் இரவில் தான், விழுப்புரம் சேச சமுத்திரம் கிராமத்தில் தலித்துகளின் குடிசைகளும் அவர்களுடைய திருவிழாத்தேரும் தீக்கிரையாக் கப்பட்டன. தருமபுரி, மரக்காணம், விழுப்புரம் என தொடர்ந்து தலித்துகளுக்கெதிரான வன்முறை, கலவரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்திய அளவில், தமிழகத்தில் தலித்துகளுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக "தேசிய குற்றவியல் ஆவண மையம்" தெரிவிக்கிறது. இது மட்டுமின்றி, ஆட்சிப் பொறுப்பேற்ற போது சங்கிலித் திருடர்கள் ஆந்திரா ஓடி விட்டதாக வெற்றுச் சவடால் பேசிய ஜெயலலிதாவின் இன்றைய ஆட்சிக் காலத்தில், கொலை, கொள்ளைச் சம்பவங்களும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும் அதிகளவில் நடக்கின்றது. இது மட்டுமின்றி காவல்துறையே ஒரு கூலிப்படையைப் போலச் செயல்படுவதையும், நியாயமான கோரிக்கை களுக்காக மக்கள் தெருவில் இறங்கிப் போராடும் போது, வெறிகொண்ட ரவுடிக் கூட்டத்தைப் போல காவல்துறை பாய்வதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஜெயலலிதாவின் அரசியல் ரவுடித்தனங்களின் ஒரு வால் இது.
வழக்கம்போல, மக்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைப் போல ஜெயல லிதாவின் சுதந்திர தின உரை அமைந் திருந்தது. அதிகப்படியாக, நான்காண்டுகளில் மக்களுக்கு அரசு அளித்த இலவசங்களைப் பற்றிப் பேசுவதையே, மிகப்பெரிய சாதனையாக ஜெயா கருதியிருக்கக் கூடும். மக்களை வெறும் வாக்காளர்களாக, பயனாளிகளாக கருதும் மேட்டிமைத் திமிரின் உச்சம் தான், மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்கே பிச்சை போடும் இலவசங்களைப் பற்றி சிலாகிக்கச் சொல்கிறது. ஜெயாவின் இந்த திமிர் பேச்சை விட மிகப்பெரிய ஆபத்து, அவர் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலையானதற்கு பேருப காரமாக, மோடி அரசின் எல்லா ஆணைகளுக்கும் கட்டுப்பட்டு நிற்பது. அதன் மூலம் அதானி போன்ற பெருமுதலாளிகளுக்கு தமிழகத்தின் வளங்களைத் தாரை வார்க்கத் துடிப்பது, இந்துத்துவ பாசிச சக்திகள் அதிமுக அரசின் நிழலில், தங்கள் வேர்களைப் பரப்ப நினைப்பது. மக்களை முட்டாள்களாகநினைக்கும் ஜெயலலி தாவுக்கு போராட்டக் களத்தில் மக்களின் பதிலடிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அதிமுக அரசோடு கை கோர்க்க விருக்கும் பா.ம.க/பா.ஜ.க போன்ற சாதிய/மதவாத சக்திகளுக்குபாடம் கற்பிக்கப்படும் என்பதே 2015 சுதந்திர தின நாளை முன்னிட்ட நமது பிரகடனம்.