நேர்காணல் : ரமணி

பேரா. சிவக்குமார் (ஓய்வு)

ஐ.ஐ.டி யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்ட நிகழ்வையொட்டி பெற்றோர்கள் பொதுமக்கள் மத்தியில் மாணவர்கள் படிக்கத்தானே செல்கிறார்கள்? இந்த வேலையை செய்யலாமா? ஐ,ஐ.டி போன்ற நிறுவனங்கள் எல்லாம் அரசு கல்லூரி மாதிரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்துகின்ற களமாக இருக்கலாமா? என்ற கேள்விகளை எழுப்பின. அரசு கல்லூரி, தனியார் கல்லூரி மாணவர்கள் ஈழ மக்களுக்கு ஆதரவாகப் போராடியபோதுகூட சில மாணவக் குழுக்கள் அரசியல் கட்சிகளின் தலையீடு வேண்டாம் என்று கூறியதும் இங்கு கவனிக்கத்தக்கது. அரசியல் அகற்றல் நடந்தால் ஆதிக்கச் சக்திகளுக்கு வசதி அல்லவா?.

தில்லியில் உள்ள ஜவகர்லால் பல்கலைக் கழகத்திலோ, கல்கத்தா விலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திலோ, பல்வேறு இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளும் ஏன், பா.ஜ.க, ஏபிவிபி போன்ற அமைப்புகளும்கூட வெளிப்படையாக இயங்குவதும் பல்கலைக்கழக அமைப்புகள் நேரடியாகவே வெளிப்படையாக போட்டியிடுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. இவைதவிர மாணவர் விடுதிகளிலும் பல்வேறு விவாதங்கள் நடத்தக்கூடிய மாணவர் அரங்கங்கள் இயங்கி வருகின்றன. ஆசிரியரும், மாணவரும் இணைந்துப் போராடி அரசு கல்லூரி வளாகத்தில் பல மாற்றங்களை செய்து காட்டிய வரலாறும் நம்மிடம் உண்டு.

1992 ஆம் ஆண்டில் பேரா. அ.மார்க்ஸ் மன்னார்குடி கல்லூரியில் பணியாற்றியபோது தலித் மாணவர்களுக்கு அரசு விடுதி வேண்டும் என்று மாணவர்களை வழிநடத்திப் போராடியதில் விடுதி அமைத்துக் கொடுக்கப்பட்டது, போராட்டம் வெற்றிபெற்றது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுப் பழிவாங்கப் பட்டதும், அவருக்கு ஆதரவாக மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடியதும் அரசு கல்லூரி மாணவர்கள் வரலாற்றில் குறிப்பிடத் தக்கது.

நான் சென்னை மாநிலக் கல்லூரியில் பணி-யாற்றிய போது பேரா. சுதந்திரமுத்து தலைமையில் ‘‘நெய்தல்‘‘  எனும் கவிஞர்கள் கூடுகின்ற மாலைநேர கவியரங்கம், இலக்கிய அரங்கக் கூட்டம் வியாழன் தோறும் கல்லூரி வளாகத்திலுள்ள மரத்தடியில் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. யாழினி முனுசாமி, (எஸ்ஆர்எம் பல்கலை பேராசிரியர்) கஜேந்திரன் (ஊடகவியலாளர்), ஞானவேல் (அகரம்) நா. முத்துக்குமார் (கவிஞர்) சாரோன் (லயோலா கல்லூரி பேராசிரியர்)  விஜயலட்சுமி (பள்ளி ஆசிரியர்) ஆகியோர் பங்குபெற்றதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பாரதிபுத்திரன் முன்முயற்சியில் “வனம்“ என்ற இலக்கிய அமைப்பும் இதே போன்று நடைபெற்றது. இந்த அமைப்புகளெல்லாம் மாணவர்களைச் சரியான அரசியலை நோக்கி சமூகத்தைப் பார்க்கின்ற ஒரு திறந்தவெளி அரங்காக செயல்பட்டதை நினைவுகூர்கிறேன்.

தமிழ்நாடு  அறிவியல்  இயக்கம்  போன்ற அமைப்புகள் மாணவர்களையும், பேராசிரியர் களையும் உள்ளடக்கி அறிவியல் ரீதியான கண்ணோட்டத்தோடு போலி அறிவியலைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. கடந்த பா.ச.க ஆட்சிக்காலத்தில் முரளி மனோகர் ஜோசி மனிதவளத்துறை அமைச்சராக இருந்தபோது ஜோதிடம், வானவியல் இரண்டையும் ஒரு சேரப் பார்க்க வேண்டும் என்று எடுத்த முயற்சியை முறியடித்தது குறிப்பிடத்தக்கது. சமூகத்தில் நிலவும் எந்தவொரு நிகழ்வையும் மாணவர்கள் விவாதிக்கக்கூடாது, அரசியலாக்கக்கூடாது என்று ஐ.ஐ.டி நிர்வாகம் மட்டுமல்ல, அரசு கல்லூரிகளை நிர்வகிக்கின்ற முதல்வர்களும், தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் கடைபிடிப்பதற்கும் பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன.

குறிப்பாக கடந்த மாதத்தில் சென்னைப்  பல்கலைக்கழக மாணவர்கள், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி போராடியபோது அரசியல் துறை பேராசிரியர் மணிவண்ணன் மாணவர்களைத் தூண்டிவிட்டார் என்று குறிப்பாணை வழங்கியதும், மாணவர்கள் போராட்டத்திற்கு பின்னால் அதனை திரும்பப் பெற்றதும் அரசின், நிர்வாகத்தின் சனநாயக விரோதப் போக்கைக் காட்டுகிறது.

மத்தியில் ஆளுகின்ற பா.ச.க அரசாங்கம் இந்த கல்வியாண்டில் பள்ளிக் கல்வி, உயர்கல்வி போன்றவற்றில் குஜராத்தில் அமல்படுத்தியுள்ள ‘பத்ரா‘ மாடல் போலி அறிவியல் மற்றும் வரலாற்றைத் திரித்து எழுதக்கூடிய ஆபத்தையும் நாம் எதிர்நோக்கியிருக்கின்ற இந்தத் தருணத்தில், மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இங்கே முதலீடு செய்ய அனுமதிப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ள சமயத்தில், அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் போன்ற அமைப்புகள், நெய்தல், வனம் போன்ற முற்போக்கு கலை இலக்கிய அமைப்புகளை ஒவ்வொரு கல்லூரிகளிலும் மாணவர்கள் தொடங்குவதும், ஆசிரியர்கள் அதில் கலந்துகொண்டு உரையாடி மாற்றங்களை நோக்கி போராடக்கூடிய சக்தி வாய்ந்த இளைஞர்களை ஊக்குவிப்பதும் அவசியமாகும். இது காலத்தின் கட்டாயமாகும்.

இளையராஜா. சே,

தலைவர், தமிழ்நாடு மாணவர் இயக்கம்

ஐ.ஐ.டி யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை ஒட்டி நடக்கும் சர்ச்சை மாணவர் கருத்துரிமையை மையம் கொண்டிருக்கிறது. கல்லூரி வளாகங்களில் மாணவர்களுக்கு அரசியல் பேச முழு உரிமை வேண்டும், அதற்கான அமைப்பு வேண்டும் எனப் பலரும் பேசி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்பக் கல்வியும், தனியார் கல்வி நிறுவனங்களும் பெருகி கலை, அறிவியல் படிப்புகள் பலவீனப்பட்டப் பின்னர் மாணவர் அரசியலும் முளையிலேயே கருகிப் போய்விட்டது. ஆனால் இன்றைக்கு முற்போக்குள்ள கருத்துகள் துளிர்க்கின்ற வேளையிலும் மாணவர் அமைப்புகள்  உருவாகின்ற சூழலிலும் அதை அடிப்படையிலேயே கிள்ளி எரியத் துடிக்கிறது இந்த ஆளும் வர்க்கம்.

மாணவர்கள் அரசியல் ரீதியில் வளாகத்தில் அமைப்பாய் ஒருங்கிணைய வேண்டுமா என்றால் வேண்டும். கல்லூரி என்பது 3லிருந்து 5 வருடங்கள் படிப்பதற்கான காலம் மட்டுமல்ல, அது பல நட்புகளை உருவாக்கவும், அரட்டையடிக்கவும், புத்தகங்கள், கலை நிகழ்ச்சிகள் என புது அறிமுகங்கள் கிடைக்கும் காலம். இதன் ஒரு பகுதியாய் அரசியல் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கவும், சமூகத்தில் நிலவக்கூடிய பல்வேறு நிகழ்வுகளுக்கு அமைப்பாய் அணிதிரள வேண்டிய அவசியமும் உள்ளது. முந்தைய காலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 பைசா உயர்ந்தால்,முதலில் போராட்டக் களத்தில் குதிப்பது மாணவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய நிலை என்ன? கல்வி நிறுவனங்களில் காவிமயம், அம்பேத்கர் -பெரியாருக்குத் தடை என்று மூச்சுமுட்ட பேசும் இந்த பா.ச.க. கும்பல் மாணவர்களின் கல்வி குறித்தான வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை.

இதனை முறியடிக்கின்ற வகையில் தமிழ்நாடு மாணவர் இயக்கம் சமூக மாற்றச் சிந்தனையை மாணவர்கள் மத்தியில் கொண்டு வரவும், அமைப்பாக்கல் ஒன்றே நமது இலக்கை அடைய வழிவகுக்கும், நமது அடிப்படை உரிமை களைப் பாதுகாக்கும் என்றும் வலியுறுத்தி களத்தில் நின்று களமாடி வருகிறது.

மாணவத் தோழர்களே! சாதி மதங்களைக் கடந்து கல்வியில் சமத்துவத்தினை நிலைநாட்டப் போராடுவோம். சமூகநீதியைத் துடைத்தெறிந்து இந்துத்துவப் பாசிசக் கருத்தியல் வேறூன்றுவதைத் தடுத்திடுவோம். அதற்கு அமைப்பாய் அணி திரள்வோம். மாணவச் சமூதாயத்தின் வலிமையைத் தீர்க்கமாய் உணர்த்தத் துணிவோம்.

Pin It