மதுரை மாநகரில் பாண்டியனிடம் நீதிகேட்டுப் போராடினாள் பத்தினிப் பெண் கண்ணகி எனச் சிலப்பதிகாரக் கதையில் நாம் படித்திருக்கிறோம். பண்டைப் புலவர்கள் மதுரையில்தான் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் என்கிற மரபான செய்திகளையும் நாம் அறிவோம். அதே மதுரையில்தான் தற்போது சிலபேர் சாதிகள் வளர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
கடந்த 6.8.2015 அன்று மதுரையில் ‘தேவேந் திரர் தன்னார்வ அறக்கட்டளை’ என்ற அமைப்பும் ‘சுதேச விழிப்புணர்வு இயக்கம்’ என்கிற அமைப்பும் இணைந்து ஒரு மாநாட்டை நடத்தியுள்ளன, தேவேந்திர குலவேளாளர் சாதியில் குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், பள்ளன், வாதிரியான் என பல உட்பிரிவுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் எல்லோரும் தேவேந்திர குல வேளாளர் என்கிற பொதுப் பெயரில் அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர்.
நாட்டில் சாதி மாநாடுகள் நடப்பதும், அந்தச் சாதியார் தங்கள் சமூகத்தினரின் முன்னேற்றம் கருதி அரசிடம் சில கோரிக்கைகள் வைப்பதும் ஒன்றும் புதிதல்ல.
சாதியொழிப்பையே தன்னுடைய தலையாய பணியாகத் தலைமேல் போட்டுக் கொண்டு போராடிய தந்தை பெரியாரே பல சாதி மாநாடுகளில் பங்கேற்று உரையாற்றி இருக்கிறார். பெரியார், அண்ணா இரு வர்க்குமான முதல் சந்திப்பே செங்குந்தர் மாநாட்டில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோன்ற மாநாடுகளில் பங்கேற்றுப் பெரியார் பேசும்போது “இந்த நாடு பல சாதி, பல வகுப்பார் அடங்கியதாக இருக்கிறது. எப்போது நமது நாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு, அதனுள் உயர்வு தாழ்வு அமைக் கப்பட்டுப் போய்விட்டதோ, அன்று முதலே தனிச்சாதி மாநாடு கூட வேண்டிய அவசியமேற்பட்டுவிட்டது. ஒவ் வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக் கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்றுசேருவது என்று பல பேர் குற்றஞ்சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
சிலர் இத்தகைய மாநாடுகளை வகுப்பு மாநாடுகள் என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன். இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூற முடியாது. இத்தகைய மாநாடுகள் கூட்ட வேண்டியது மிகவும் அவசியமாகவே இருக்கிறது” என 5-10-1929 அன்று திராவிடன் ஏட்டில் பெரியார் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள காலத்தையும் களத்தையும் நாம் கணக்கிட்டு ஆய்வு செய்து பார்க்க வேண்டும். நூற்றுக்கு மூன்றே பேராக இருந்த பார்ப்பனர்கள் பிற உழைக்கும் மக்களின் எல்லா உரிமைகளையும் தம தாக்கிக் கொண்டு, உண்டு கொழுத்துத் திரிந்த கால மது. சமுதாயத்தில் உள்ள எல்லாப் பிரிவு மக்களின் சமநீதியும் காக்கப்பட வேண்டும் என்ற கருத்தில்தான் பெரியார் சாதி மாநாடுகளில் பங்கேற்றார். அங்கும் அவர் சாதியொழிப்பின் தேவையையும் மதமூடநம்பிக் கைகள் மண்ணோடு மண்ணாகத் தொலைக்கப்பட வேண்டியதன் கட்டாயம் பற்றியுமே கடுஞ்சினத்துடன் உரையாற்றியுள்ளார்.
தோழர் வே.ஆனைமுத்து அவர்களால் தொகுக் கப்பட்டுள்ள பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் முதல் தொகுப்பு முதல் கட்டுரையே பெரியார் 29-12-1926 அன்று சென்னிமலையில் நடந்த கோயமுத்தூர் மாவட்ட 14ஆவது செங்குந்தர் மாநாட்டுச் சொற்பொழிவுதான் (குடிஅரசு 9-1-1927).
அவர் உரை முழுவதும் சாதியொழிப்பையும், பார்ப்பனப் புரட்டுகளையும் முன் நிறுத்தியே அமைந் துள்ளது. “மனிதனாகப் பிறந்தவன் எல்லாம் - அதாவது எவனாவது தன்னை இந்து என்று சொல்லிக் கொண் டால் அவனை உடனே பார்ப்பன வரிச்சனியன் பிடித்துக் கொண்டது என்பதுபோல் - கால வரையறை ஒன்றுமே இல்லாமல், கர்ப்பந்தரித்தது முதல் சாகும் வரை - செத்துவிடாமல் - அதாவது கர்ப்பதான வரி, சீமந்த வரி, பிள்ளைப்பேறு வரி, தீட்டுக் கழித்தல் வரி, தொட்டிலிடல் வரி, பேர் வைத்தல் வரி, ஆயுத ஓம வரி, சோறூட்டல் வரி, சாவு வரி, சாக 100 நாழிகை வரி, செத்த பின்னும் வரி, செத்தவர் மக்களைப் பிடித்து வருடாவருடம் வரி - ஆகிய பல துறைகளில் காலாவதி இல்லாமலும் ஒரு நபரைக்கூட விடாமல் 100க்கு 100 பேரிடமும் - பணக்காரன், ஏழை என்ற பாகுபாடே இல் லாமல் கொடுப்போர் முட்டாள் தனத்திற்கும் களிமண் மூளைக்கும் தகுந்தாற்போல் வரி கறந்து விடுகிறார் கள்” (மேற்படி நூல் : தொகுதி 1, சமுதாயம் 1, பக்.9).
நம்மை இழிவாய்க் கருதுபவர்கள் காலிலேயே விழுந்து கும்பிடுவது எவ்வளவு அறிவிலித்தனம் என அதே மாநாட்டில் இடித்துரைக்கிறார்.
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி 1, சமுதாயம் 3, பக்கம் 52-இல், ‘விசுவகர்மா சமூகத் திற்குப் பெரியார் விளக்கம்’ என்ற தலைப்பிலான கட்டுரை கீழ்வருமாறு தொடங்குகிறது :
“தென்இந்திய விசுவகர்ம சங்கப் பொதுக் காரிய தரிசியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவரான நம் பெரியாரிடமிருந்து சில விஷயங்கள் விளக்கப்பட வேண்டுமென்று விரும்பி விடுத்த வேண்டுகோளுக்குப் பெரியார் விளக்கமளித்து அச்சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவ்வேண்டுகோள் 14-2-1940ஆம் தேதி விடுதலையில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. அதைத் தென் இந்திய விசுவகர்ம சமூக மக்கள் எல்லோரும் நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியது இதுசமயம் மிகவும் அவசியமாகும்.
பெரியாரின் பதில் என்னும் வேண்டுகோளானது தென்னிந்திய விசுவகர்ம சமூகத்தினருக்கு என்று விளக்கப்பட்டிருந்தாலும் அது பொதுவாகவே தென்னிந் தியாவில் சாதியின் பேரால் - வகுப்பின் பேரால் உள்ள எல்லாக் கைத்தொழிலாளர் சமூகத்திற்கும் பொருத்த மானதென்றே சொல்லுவோம்.”
இங்கே கைத்தொழிலாளர் சமூகம் என்ற பிரிவில் கைக்கோளர், தேவாங்கர், சாலியர், பட்டுநூல்காரர், விசுவகர்மா ஆச்சாரி வகுப்பைச் சேர்ந்தவர்கள், ஒட்டர், வாணியர், வலையர், குயவர், வண்ணார், நாவிதர் உள்ளிட்ட உட்சாதிப் பெயர்களும் தனியே சுட்டப்பட் டுள்ளன. இவர்கள் எல்லோர்க்குமாகப் பெரியார் வைக்கும் வேண்டுகோள் பின்வருமாறு :
“எல்லோரும் ஒன்றுசேர வேண்டும். பேதமும் இழிவும் கற்பிக்கும் சமயச் சாத்திரங்களை அழிக்க வேண்டும். அரசியலைக் கைப்பற்ற வேண்டும். உயர்ந்த சாதியார் என்பவர்களையோ, சோம்பேறி களாய் உடலு ழைப்பு இல்லாமல் வாழ்கிறவர்களையோ எதிரிகளா கக் கருதி அக்கொள்கைகளை நிர்மூலமாக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலாளி வகுப்பும் தங்களால்தான் உலகம் இருக்கிறது - தங்களால்தான் மக்கள் வாழ முடிகிறது - மனித சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்குத் தாங்களே அ°திவாரமானவர்கள் என்பதை உணர வேண்டும்” என அறைகூவல் விடுக்கிறார் (மேற்படி நூல், பக்.55).
இன்றைய நாடார் சமூகத்தின் வளர்ச்சிபோல், அந்நாளில் அது மேலானதாய் இருந்ததில்லை. சற்றொப்பத் தாழ்த்தப்பட்ட சமூக மக்களைப் போலவே அவர்கள் அந்த நாள்களில் மிகமிக இழிவாக நடத்தப் பட்டனர் என்றாலும் அச்சமூகத்தில் தோன்றிய சில தலைவர்கள் நீதிக் கட்சியோடும், சுயமரியாதை இயக் கத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். அதனால் நாடார் மகாஜன சங்க மாநாடுகளுக்குப் பெரியார் பலமுறை அழைக்கப்பட்டார். எந்தச் சாதி மாநாட்டில் பங் கேற்றாலும் பெரியார் சாதியொழிப்பை வலியுறுத்து வார். சனாதன தருமத்தைக் கடுமையாகக் கண்டிப் பார்.
இவற்றுக்கு அஞ்சிய அதே சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் தங்கள் மாநாடுகளுக்குப் பெரியாரை அழைப்பதை விரும்பவில்லை. ‘சுதேசமித்திரன்’, ‘தமிழ்நாடு’ போன்ற பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பனியப் பிரச்சாரப் பத்திரிகைகளும் பெரியார் மீது பொய்ச் செய்திகள் பரப்பின. நாடார் சமூகம் அவரை வெறுப்பதாகவும், அவர்களின் அடி உதைக்கு அஞ்சி பெரியார் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டதாகவும், நாடார் சமூகம் ‘குடிஅரசு’ இதழைப் பகிஷ்காரம் செய்துவிட்ட தாயும் நச்சுக் கருத்துகளைத் தூவ முயன்றன. ஆனால் அக்கருத்துகள் எடுபடவில்லை. பெரியார் நாடார் மகாஜன மாநாடுகளுக்கு மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டார்.
5-5-1929 நாளிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில் ‘நாடார் மாநாடு’ என்ற தலைப்பில், தஞ்சை மாவட்ட 13ஆவது மாநாடு பற்றிப் பின்வருமாறு செய்தி வெளியிட்டது :
“மகாநாட்டுத் தலைவர் திரு.டபள்யூ.பி.ஏ. சௌந்தர பாண்டியன் அவர்களின் தலைமைப் பேருரையானது, அச்சமூகத்திற்கு ஒரு புத்துயிரளிக்கத் தக்கதென்றே சொல்லலாம். அதாவது, நாடார் சமூகத்தினராகிய நாம் பழைய பெருமைகளை நினைத்துக்கொண்டே இறு மாந்துவிடாமல், தற்காலம் நாம் இருக்கும் நிலை யறிந்து மீறி முயற்சிக்க வேண்டும் என்பதாகவும், சமூக மகிமைப் பணங்களை வீணாகக் கோயில் பூசை, உற் சவம் ஆகிய காரியங்களில் வீணாக்காமால் கல்விக்கே செலவழிக்க வேண்டும்” என்றும் வற்புறுத்திப் பேசினார்.
மற்றபடி மாநாட்டுத் தீர்மானங்களும் வெகுமுற் போக்கானதென்றே சொல்ல வேண்டும். விதவா விவாகம் இந்த மகாநாட்டில்தான் முதன்முதலாக ஆதரிக்கப்படு கின்றது. தவிர, அந்தச் சமூகம் வெகுகாலமாய் பழக் கத்தில் அனுசரித்து வருவதான பூணூல் தரிப்பது, மதக் குறி இடுவது முதலிய வைதிக கர்மங்கள் என்பதைக் கண்டித்துச் செய்த தீர்மானம் மிகமிகப் போற்றத்தக்க தாகும்.
இவைகள் எல்லாவற்றையும் விட, சுயமரியாதை இயக்கத்தை நன்றாக விளக்கி அதன் தத்துவங்களை அப்படியே ஒப்புக்கொண்டது - அதாவது “மனிதர்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்பதும் பெண் களுக்குச் சமஉரிமை அளிக்கப்பட வேண்டும் என் பதும், இயற்கைக்கும் நியாயத்திற்கும் ஒத்தபடி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கொண்ட சுயமரி யாதை இயக்கத்தை இம்மாநாடு ஆதரிக்கின்றது” என்பதாகும்.
மற்றும் வாலிப மகாநாட்டில் திரு. ஈ.வெ. இராம சாமியார் தலைமை வகித்து நடத்திய சொற்பொழிவும், அதில் செய்த தீர்மானங்களும் ஆலயப் பிரவேச இயக்கத்திற்குப் பணஉதவியும், ஜெயில் போக நேரிட் டால் தொண்டர்கள் உதவியும் செய்வதாக வாக் களித்தது முதலிய தீர்மானங்கள் போற்றற்குரியவை யாகும்.
இந்தப் படியே ஒவ்வொரு சமூகமும் முதலில் தனித்தனியாகக் கூடி, இம்மாதிரித் தீர்மானங்கள் நிறைவேற்றி, அவைகளை அமலுக்குக் கொண்டுவந்து விட்டால் வெகுசீக்கிரத்தில் எல்லாச் சமூகமும் ஒற்றுமை அடைந்து ஒன்றுபட அனுகூலமாயிருக்குமென்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் (மேற்படி நூல், பக்.3974, 3975).
இதுபோலவே பெரியார் ஏராளமான ஆதித்திரா விடர்கள் மாநாட்டிலே பங்கேற்றுத் தீண்டாமை ஒழிப்புப் பற்றியும் சாதி இழிவு நீக்கப்பட வேண்டியதன் தேவை குறித்தும் இடிமுழக்கம் செய்துள்ளார். 6-4-1926 அன்று காரைக்குடியை அடுத்த சிராவயல் என்ற சிற்றூரில் நடைபெற்ற காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழாவில் ‘காந்தி கிணறு’ என்ற பெயரில் ஆதித்திராவிடர்க்கென வெட்டப்பட்ட தனிக் கிணறு திறப்பு விழாவில், இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலை தனக்களிக்கப்பட்டது பெருமையில்லை என்றும் இவ்வாறு தனிக்கிணறு வெட்டுவது மற்றவர்களுடன் நாம் கலக்கத்தக்கவர்கள் அல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும், ஞாபகக் குறிப்பும் ஏற்படுவதற்கான அர்த்தமாய் ஆகிவிடும் என்றும் குறிப்பிட்டு வருந்தினார்.
நாம் குளிப்பதில்லை, துணி துவைப்பதில்லை என்று குற்றம் சொல்கிறார்கள். இதற்கு யார் பொறுப்பு? குடிக்கவே தண்ணீர் இல்லை என்றால் குளிப்பதெப்படி? துணி துவைப்பதெப்படி? மகந்துகள் என்போரையும் சங்கராச்சாரிகள் என்போ ரையும் கொண்டுபோய் வீட்டில் அடைத்துவிட்டால் அவர்கள் துணி அழுக்கில்லாமல் இருக்குமா? உடம்பு நாற்றமடிக்காமல் போகுமா? மாடு தின்பதும் மது அருந்துவதும் இழிவென்றால், மாடு தின்று கொண்டும் மது அருந்திக் கொண்டும் இருப்பவர்கள்தான் இப் போது உலகத்தையே ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்றும் கன்னத்தில் அறைவதுபோல் பதில் கூறினார்.
திருச்சி இலால்குடியை அடுத்த களத்தில் வென் றான்பேட்டை என்னும் ஊரில் நடைபெற்ற ஆதித்திரா விட கிருத்துவர்கள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசும் போது, “ஒரு பார்ப்பானையும் ஒரு பறையனையும் கூட்டி வந்து நிறுத்தி, கீழ்ச்சாதி மேல்சாதி என்பது அவர்களிடத்தில் எப்படி விளங்குகிறது என்று பார்த்தால், மேல்சாதி என்பவன் பாடுபடாமல் சோம் பேறியாய் இருந்து - ஊரார் உழைப்பில் வாழ்கிறவன் என்பதும், கீழ்ச்சாதி என்பவன் பாடுபட்டு உழைத்து உழைப்பின் பலனையெல்லாம் அந்நியருக்கே அழுதுவிட்டு, வீடில்லாமல், துணி இல்லாமல், கஞ்சியில்லாமல், கல்வி யில்லாமல் மிருகத்திலும் கேடாய் வாழ்கிறவன் என்பதும் நன்றாய் விளங்கும்.
ஆகவே, கீழ்ச்சாதித் தன்மை ஒழிய வேண்டும் என்று கருதுகிற ஒருவன் - அந்நியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோமென்கிற எண்ணத்தை விட்டுவிட்டு, நமது உழைப்பின் பயனைச் சோம்பேறிகள், பாடுபடாத மக்கள் அனுபவிக்கக் கூடாது என்கிற உறுதிகொண்டு - பிறவியில் நமக்கும் மற்ற வருக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை என்கிற உறுதி யோடு, சோம்பேறிக் கூட்டத்திற்கு எதிராக எவன் போர்த்தொடுக்க முனைந்து நிற்கிறானோ, அவனே இவ்வித இழிவுகளை நீக்கிக் கொள்ள அருகதையுள்ள வனாக ஆகிறான்” என முழங்கினார் (குடிஅரசு 7-5-1933; சிந்தனைகள் நூல், பக்.151).
இப்போது மதுரையில் மாநாடு கூட்டியவர்கள் இந்தச் செய்திகளையெல்லாம் அறிந்திருப்பார்களா என்று தெரியவில்லை. அம்மாநாட்டில் சிறப்பு அழைப் பாளராகப் பங்கேற்ற பா.ச.க. தேசியத் தலைவர் அமித்ஷா சிறுபான்மையர் உடற்குருதியை எடுத்து மார்புச் சந்தனமாய்ப் பூசி மகிழ்பவர். குசராசத் கொலைக் கரங்களில் ஒன்று மோடியுடையது. மற்றொன்று அமித்ஷாக்கு உரியது. அந்தத் தகுதி ஒன்றால்தான் பா.ச.க.வின் தேசியத் தலைவராக அவர் மோடியின் அருகிலேயே உட்கார்ந்துவிட்டார்.
தங்கராசு என்பவரின் முன்னெடுப்பில் கூட்டப்பட்ட இந்த மாநாட்டில் பங்கேற்ற மற்றொரு சிறப்பு விருந்தி னர் பார்ப்பனக் குள்ளநரியான குருமூர்த்தி. இவர் தணிக்கையாளர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அத்தனை தவறுகளுக்கும் தப்புத்தாளம் போடும் தமிழகத் தர்ப் பைப் புல்.
மாநாட்டை முன்நின்று நடத்திய தங்கராசு, அமித் ஷாவுக்குத் தரும் தகுதிச் சான்றுதான் என்ன? “அமித் ஷா மத்தியப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “தேவேந்திரகுலச் சமூகத்தவர்கள் பசுவைத் தெய்வமாக வணங்குபவர்கள். மாட்டிறைச்சியை உண்ணாதவர்கள். இந்திரனை வழிபடுபவர்கள். தென் தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழ்கிறவர்கள்” என்று சொல்லிவிட்டாராம்.”
தீண்டப்படாதவர்கள் என்பதற்கு அன்றைய மனு முதல் இன்றைய காஞ்சி மடத்தலைவன் சங்கராச்சாரி வரை வகுத்து வைத்துள்ள இலக்கணம் என்ன?” கோயிலுக்குள் நுழையக் கூடாதவர்கள். பசுவைத் தெய்வமாக வணங்காதவர்கள். மாட்டிறைச்சியை உண்பவர்கள். தம் இனத்தில் இறப்பவர் உயிரைத் தாமே அடக்கம் செய்பவர்கள். பார்த்தாலோ தொட் டாலோ தீட்டு என்று கருதப்படுபவர்கள் என்பதுதானே?
இவற்றில் ஒரு கூறு கூடத் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு இல்லையாம். எனவே தாழ்த்தப்பட்டவர் களுக்குரிய எந்த இடஒதுக்கீட்டுச் சலுகையும் இவர் களுக்கு வேண்டாமாம். இதுதான் மதுரை மாநாட்டா ளர்களின் முடிவு.
ஆதிக்கச் சாதியார்க்கு ஆலவட்டம் சுற்றும் அமித்ஷாவுக்கு இந்த அறிவிப்பு ஒன்று போதாதா? நெஞ்ச மெலாம் மகிழ்ச்சி நிறைந்து கூத்தாட உடனே அவர் அறிவிக்கிறார் : “நாடு முழுவதும் பல்வேறு சாதி அமைப்புகளும் தங்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக, பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவிக்க வற்புறுத்தி வரு கின்றன. இச்சூழலில் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல.
எங்களைத் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற கவுரவத்துக்காக மாநாடு கூட்டுவது பாராட்டுக்குரியது. தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரும் மதுரைப் பிரகடனம் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்” (தினமணி 7-8-2015).
வகுப்புவாரி இடப்பங்கீட்டு உரிமை என்பது மாபெரும் மக்கள் தலைவர்களாம் அம்பேத்கரும் பெரியாரும் போராடிப் பெற்றுத்தந்த தனி ஏற்பாடு. ‘இடஒதுக்கீட்டுச் சலுகை இனிஎமக்கு வேண்டாம்; நாங்கள் நாங்களாகவே முன்னேறிக் கொள்கிறோம்’ என்று அறிவிக்க இங்கே எவர்க்கும் உரிமை உண்டு. ஆனால் ஒட்டு மொத்தச் சமூகத்துக்குரிய குரலாக அவ்வாறு ஒலிக்க எவருக்கும் உரிமை இல்லை.
“இந்த மாநாட்டை நடத்தியவர்கட்கும், ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேவேந்திரகுல வேளாளர்களைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து எடுக்க வேண்டும் என்பது மாநாடு நடத்தியவர்களின் கருத்து. தேவேந்திரகுல வேளாளர்களின் ஒட்டுமொத்தக் கருத்தல்ல” என்று அதே சமூகத்தைச் சேர்ந்தவரும் தமிழக மக்கள் முன் னேற்றக் கழகத்தின் தலைவருமான ஜான்பாண்டியன் அறிவித்துள்ளார்.
‘சுயசாதிப்பற்று, பிறசாதி நட்பு என்பதே நமது பாரம்பரியம்’ என்று தமிழ்ப் பாரம்பரியம் பற்றி முற்றுமாய் அறிந்த(?) சனாதனி குருமூர்த்தி சந்தடிசாக்கில் சரடு விடுகிறார். அவருக்குப் புதிய அனுமன்களாய்ப் பலர் கிடைத்துள்ளனர். கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலர் ஈசுவரன் ‘சாதி இயற்கையாய் உரு வானது. சாதியை யாரும் அழிக்க முடியாது. சாதியற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்பது தேவையற்றது’ என்கிறார்.
பட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர் பாளர் க. பாலு, “அமித்ஷா சாதியோடு வாழ்வதும், சாதியச் சிந்தனைகளோடு வாழ்வதும் சமூக முன்னேற் றத்திற்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்துள்ளார். இதுதான் உண்மை” என்று அமித்ஷாவுக்குக் குடை பிடிக்கிறார். அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் ந. சேதுராமன், “பா.ஜ.க. நியாயமான அரசியல் செய்கிறது. அமித்ஷாவின் கருத்தை வரவேற்கிறேன்” என்று சாதியாளர்களை வாழ்த்து ரைக்கிறார் (தி இந்து 12.8.2015).
‘உன் நண்பன் யார் எனச் சொல்; உன்னைப் பற்றி நான் சொல்கிறேன்’ என்கிற எப்போதோ கேட்ட மூதுரை நம் மூளையைக் கசக்கிப் பிழிந்துகொண்டே உள்ளது.