Periyar 235அன்புள்ள சகோதரிகளே! சகோதரர்களே!!

நான் இங்கு வந்தது முதல் இதுவரையிலும் எனக்காக வென்று செய்யப்பட்ட ஆடம்பரங்களையும், ஊர்வலங்களையும் என்னைத் தலை வனாக பிரரேபிப்பதன் முகத்தான் என்னைப் பற்றி பலர் பேசிய புகழுரைகளையும் எனக்காக என்று இப்போது வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரங்களில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியங்களையும் கவனித்துப் பார்த்ததில் நான் மிக்க வெட்கப்பட வேண்டியவனாய் இருக்கிறேன்.

ஏனெனில் எந்த மூட நம்பிக்கைகளையும், குருட்டு பக்தியையும் அடியோடு ஒழிக்க வேண் டுமென்று முயற்சி செய்கிறேனோ, அவற்றை அதை யொழிப்பதற்காகக் கூடிய இந்த மகாநாட்டில் உங்களாலேயே என் விஷயத்தில் உபயோகப் படுத்தப்படுவதை நான் பிரத்தியட்சமாகப் பார்க்கிறேன்.

இவற்றை அநு மதித்துக் கொண்டிருக்கிற நான் எந்த விதத்தில் இத் தொண்டில் வெற்றியடைய முடியும்? அல்லது என்னைப் பொறுத்த அளவிலாவது அவற்றிலிருந்து திருத்தமடைகிறேனென்று எப்படிச் சொல்ல முடியும்? ஆகவே இம் மாதிரியான செய்கைகளை தயவுசெய்து அடியோடு இனி விட்டுவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

மக்களுடைய உணர்ச்சிக்காக வும் பிரசாரத்திற்காகவும் செய்யப்படுகிறதென்று சொல்லப்படுவதனாலும் அதற்கும் சிறிதாவது அளவும், பொருத்தமும் வேண்டும். இப்படிச் சொல்வ தற்கு என்னை மன்னிக்க வேண்டுமாய் கோருகிறேன்.

இந்த சிறிய கிராமத்தில் இவ்வளவு பெரிய எதிர்ப்புக்கிடையில் இத்துணை பெரிய கூட்டம் பெண்களும், ஆண்களும், தாழ்த்தப்பட்டவர் களுமாய்க் கூடி இருப்பதானது நமது கொள்கையிலுள்ள உணர்ச்சி சிறிதும் இந்தக் கிராமத்துப் பார்ப்பனர்களின் கிளர்ச்சிப் பெரிதுமாய்ச் சேர்ந்து தான் இவ்வளவுக் கூட்டங் கூட நேர்ந்தது என்று கருதுகிறேன்:

சகோதரர்களே! நான் மகாநாட்டுக்கு வரும் வழியில் கண்ட காட்சி களானது எனது கொள்கையிலும் அபிப்பிராயத்திலும் என்னை மிக்க உறுதிபடுத்தி விட்டது. வழி நெடுக போலீஸ் உதவியின் பேரில் ஒவ்வொரு கிளைப்பாதைக்கும் நூற்றுக்கணக்கானப் பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதார்களும் வேஷ்டியை வரிந்து கட்டிக் கொண்டு கையில் தடியுடன் நின்றதையும், திருவாவடுதுறை கோயிலுக்கு முன்னால் நூற்றுக்கணக்கான பார்ப்பனரல்லாத ஆட்கள் கழிகளுடன் நின்றுக் கொண்டிருந்ததையும், இவைகளுக்கெல்லாம் சர்க்கார் அதிகாரிகளும் பண்டார சந்நிதிகளும் உள்ளூர உடந்தையாயும், சகாயமாகவும் இருப்பதையும் பார்க்க இந்த நாடானது என்றென்றைக்கும் அன்னிய ஆட்சியிலிருப்பதற்கு தகுதியானதே யொழிய இந்த நிலையில் ஒரு நாளும் சுதந்திரத்திற்கு அருகதை இல்லை யென்றே நினைக்கிறேன்.

இன்றைய தினம் இங்கு வெள்ளைக்கார ஆட்சியில்லாமல் பண்டார சந்நிதிகளாட்சியோ, பார்ப்பனராட்சியோ, இவர்களைக் குருவாய்க் கொண்ட இந்துக்கள் ஆட்சியோ இருந்திருக்குமானால் நான் இங்கு வந்து சேர்ந்திருக்க முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். இந்த அதிகாரிகளும் ஏறக்குறைய எல்லாம் பார்ப்பனர்களாகவேயிருந்திருந்ததின் மூலம் வெள்ளைக்கார ஆட்சியின் பயம் அவர்கட்கு இல்லாதிருக்குமேயானால் நம்மை ஒரு நாயை அடிப்பதுபோல் அடித்து இழுத்தெறிந்து இருப்பார்கள்.

என்னுடைய இந்தப் பத்துப்பதினைந்து வருஷத்திய பொது வாழ்வு சுற்றுப் பிரயாணத்தில் ஒரு இடத்திலாவது இந்த மாதிரி பார்ப்பனர்கள் வரிந்து கட்டிக் கொண்டு தடியுங் கையுமாய் நின்று கொண்டிருந்ததை யான் எங்கும் பார்த்ததில்லை. நம்முடன் வந்த கூட்டமானது சற்று நிதானம் தவறியிருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

அதிகாரிகளுடைய சலுகை இல்லாதிருந்திருக்குமானால் அவர்களுக்கு இவ்வளவு துணிவு ஏற்பட்டிருக்க முடியுமா? நாம் என்ன அக்கிரமங்களை செய்ய இந்த மகாநாட்டைக் கூட்டியிருக்கிறோம்? அல்லது இதுவரையில் யாருக்கு எவ்விதமான அநீதி நமது தொண்டால் ஏற்பட்டது? நமது உரிமைகளை நாம் எதிர்பார்ப்பதும், நமது சுயமரியாதையை நாம் அடைய முயற்சிப்பதும், இவ்வளவு பெரிய ஆத்திரத்திற்கும், மூர்க்கத் தனத்திற்கும் இடங் கொடுக்குமானால் இந்த நிலையில் நமது நாட்டின் ஜனநாயக ஆட்சியை எதிர்பார்க்க முடியுமாவென்று யோசித்துப் பாருங்கள்.

இந்த நாட்டில் உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த காலம் முதல் எனக்கு அதனிடம் சிறிதும் அனுதாபமில்லாதிருந்தது உங்கள் எல்லோருக் கும் தெரிந்ததேயாகும். அது விஷயத்தில் எனது அபிப்பிராயத்தையும் சிறிதும் மறைக்காமல் வெளியிட்டு வந்ததோடு அதனால் ஏற்படும் கெடுதிகளையும் துணிந்து விளக்கிக் கொண்டுதான் வந்திருக்கிறேன்.

அதன் மூலம் எனக்கு அனேக கஷ்டங்களும் நஷ்டங்களும் ஏற்பட்டிருப்பதையும் சகித்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன். எங்களூரில் மகாநாடு நடந்த காலத்தில் அதிகாரிகளால் எவ்வளவோ கஷ்டங்கள் ஏற்பட்டன. மற்றும் நான் செல்லுகிற இடங்களிலெல்லாம் பார்ப்பன அதிகாரிகள் இருக்குமிடங்களில் மிக்கத் தொல்லைகள் ஏற்பட்டு வருவதையும் பார்த்து வருகிறேன்.

பல மொட்டைக் கடிதங்களும் வந்து கொண்டு இருப்பதோடு பிரசாரத்துக்கும் பத்திரிகைக்கும் இடையூறுண்டாகும்படி பல முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஊருக்கு வருவதற்கு முன் எனக்கு ஒரு மிரட்டுதல் கடிதம் வந்தது.

ஆகவே இந்த நாட்டுப் பார்ப்பனராதிக்கமும், பார்ப்பனீய உணர்ச்சியும் ஒழியும் வரை இன்றைய அரசாங்கத்தை எப்படி எதிர்க்க முடியும்? அதன் உதவியை எப்படித் தள்ள முடியும்? இந்த நிலையில் நம்மைப் பார்ப்பன ராதிக்கத்தினிடமும், பண்டார சந்நிதிகளாதிக்கத்தினிடமும், பணக்கார ஆதிக்கத்தினிடமும் விட்டு விட்டு இந்த சர்க்கார் போய் விடுகிறோமென்று சொன்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் போக வேண்டாமென்று தான் சத்தியாக் கிரகம் செய்ய வேண்டுமேயொழிய போகச் செய்யும் சத்தியாக்கிரகத்தில் ஒருக்காலும் சேர்த்து கொள்ள முடியாது.

இந்த கிராமத்து அக்கிரகாரமானது தஞ்சாவூர் மகாராஜாவால் தனது முன்னோர்களின் எலும்புகளைக் கங்கை யில் கொண்டு போய் போடுவதை விட பிராமணர்கள் என்பவர்களின் வயிற்றிற்போய் சேரும்படி அரைத்துக் குடிக்க செய்து விட்டால் அதிகப் புண்ணியமென்பதாகக் கருதி “பிராமணர்”களும் அப்படியே அரைத்துக் குடித்ததற்காக அக்காலத்தில் சில பார்ப்பனர்களுக்கு இந்த அக்கிரகாரங்களையும் கட்டிக் கொடுத்து நூறு வேலி (500 ஏக்கர்) நஞ்சை நிலமும் கொடுத்ததாக சொல்லப்படுவதுடன் ஏதோ ஒரு பிராமணன் என்பவன் தீண்டாதான் ஒருவனுக்குத் தன் வீட்டிலழைத்து சாப்பாடு போட்டதின் பயனாய் அவனை இந்த ஊர் “பிராமணர்கள்” எல்லாம் சேர்ந்து ஜாதியை விட்டு விலக்கி கங்கையில் போய் ஸ்நானம் செய்து விட்டு வரும்படி ஊரை விட்டு விரட்டினதாகவும் அந்தப்பிராமணன் கங்கையைத் தன் வீட்டுப் புழக்கடையிலேயே வருவித்துக் காட்டினதாகவும், பிறகு அவனைச் சேர்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆகவே எப்படிப் பார்த்தாலும் இந்த ஸ்தலப் பெருமையின் படி ஒன்று இங்குள்ளவர்கள் எலும்பைத் தூளாக்கிக் கரைத்துக் குடித்தவர்களாயிருக்க வேண்டும், அல்லது பறையனை வீட்டில் வைத்து சாப்பாடு போட்டதின் பயனாய் கங்கை இந்த கிராமத்துக்கு வரத் தகுந்த அவ்வளவு நன்மையடைந்ததாகயிருக்க வேண்டும்.

அப்படியிருக்க இதை நம்புகிற பார்ப்பனர்கள் எப்படி வீதியில் பறையன் நடந்து விடுவான் என்று தடி எடுத்துக் கொண்டு தெருவில் நிற்கிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. இது மூர்க்கத்தனமா? அல்லது ஆச்சாரமா? அந்த வீதி யில் எல்லா மிருகங்களும் செல்வதைப் பார்க்கிறோம்.

இந்துக்களில் ஒரு சாரார் தவிர மற்றவர்கள் எல்லாரும் செல்வதையும் பார்க்கிறோம். மற்றத் தெருக்களில் நடக்கும் போது எவ்வளவோ அசிங்கியங்களை மிதித்துக் கொண்டேதான் காலைக் கழுவாமல் அத் தெருவில் யாவரும் நடப்பதைப் பார்க்கிறோம்.

அந்த தெருவிலுள்ள பார்ப்பனர்களுக்கு அவர்கள் வயலில் வேலை செய்து நெல் விளைத்துக் கொடுத்த அவர்களது மதத்தைச் சேர்ந்த மக்கள் போகக் கூடாதென்றும் அவர்களுடைய “மதத்திற்கெதிராயிருந்து அவர்களது கோயில்களையும், சாமிகளையும் சாஸ்திரங்களையும் உடைத்து இடித்து கொளுத்திய” மகமதியர்களைத் தாராளமாகப் போக விட்டுக் கொண்டும் இருக்கிறார் களென்றால், இதானது மதத்தையும், சாத்திரத்தையும் ஆதாரமாகக் கொண்டு தடுக்கப் படுகிறதாவென்று ஆலோசித்துப் பாருங்கள்.

பறையன் சக்தியற்றவனாக இருக்கிறான். படிப்பில், செல்வத்தில், சுய மரியாதையில் கேவலமாக அழுத்தப்பட்டிருக்கிறான். மகமதியன் சகல சௌகரியத்துடனும் வீரியத்துடனும், சுயமரியாதையுடனுமிருக்கிறான். பறையனை வேண்டாம் என்று சொன்னால் பறையன் பயந்து கொள்வான்.

யோக்கியப் பொறுப்பற்ற சர்க்காரும் அதற்கு இடங்கொடுத்துக் காவலாளை அனுப்பிக் கொடுக்கும். மகமதியனோ தெருவில் நடக்க வேண்டாமென்று சொல்லி விட்டால் உடனே உதை கொடுப்பான். “வேண்டாம் என்று சொல்பவர்களின் பெண்டுபிள்ளைகளையும் கட்டியணைவதோடு மாத்திரம் நில்லாமல் தூக்கிக் கொண்டும் போய் விடுவான்.” அப்போது சர்க்காரும் வாலையொடுக்கிக் கொள்ளும்.

ஆகவே தீண்டாமையும், தெருவில் நடக்காமையும் எதிலே இருக்கின்றதென்று யோசித்துப் பாருங்கள். இந்து மதத் திலும் சுயமரியாதையற்றத் தன்மையிலுந்தானே தீண்டாமை இருந்து வருகின்றது. இந்த கிராமத்தில் மகமதியர்களின் எண்ணிக்கை எவ்வளவு சுருக்கம்.

தாழ்த்தப்பட்டவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு அதிகம்? அப்படியிருந்தும் மகமதியர்களுக்கு சுதந்திரமும், இந்துக்களுக்குத் தடையும் ஏற்பட்டிருப்பது மதம் காரணமா அல்லவா? அப்படிப்பட்ட மதம் எதற்காக இருக்கவேண்டுமென்றால் மக்களுக்கு வெறும் கோபம் வருகிறதே யொழிய மற்றபடி எவ்வித சமாதானமும் சொல்லுகிறவர்களைக் காணோம்.

இப்படிப் பட்டவர்களை நாம் மூடர்களென்றும், மூர்க்கர்களென்றும், அயோக்கியர்கள் என்றும் சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது?

சகோதரர்களே! கண்டிப்பாக நான் ஒன்று சொல்லுகிறேன். இந்து மத மென்பது ஒழிகின்ற வரையில் குறைந்தது வெள்ளைக்காரனுடைய ஆட்சியாவது இருந்துதான் ஆக வேண்டும். இந்த நாட்டில் அநேகருடைய மனதை தேசீயக் கிளர்ச்சி கவர்ந்து இருப்பது எனக்குத் தெரியும்.

அவர்களில் பெரும்பாலோர் பொறுப்பற்றவர்களும், அறியாதவர்களும் சுயநலக்காரர் களும், சிலர் உண்மை யறியாதவர்களுமே யாவார்கள். இந்த ஒரு சிறு கிராமத்தில் தெருவில் நடப்பதைத் தடுப்பதற்காக பார்ப்பனர்களும் அவர்களுடைய கூலிகளாகிய பல பார்ப்பனரல்லாதார்களும் அவர்களைக் காக்க போலீசுகளும், மேஜிஸ்ட்ரேட்டுகளும் நூற்றுக்கணக்காக நின்று கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த நாட்டு மக்களின் ஈனத்தன்மைக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்? இந்தியனும், ஐரோப்பியனும் அல்லாத ஒரு மனிதன் இன்றைய தினம் இந்தியாவுக்கு வந்து திருவிசலூர் அக்கிர காரத்துப் பார்ப்பனர்களின் காட்சிகளையும், நகரங்களிலும், பட்டினங்களிலும் நடக்கும் சட்டமறுப்பு மீட்டிங்குகளின் பேச்சுகளையும் காண்பானேயானால் எள்ளி நகையாட மாட்டானாவென்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

நான் ஏதாவது சத்தியாக்கிரகத்துக்குப் பயந்து கொண்டு பேசு கிறேன் என்று கருதுகிறீர்களா? நானும் ஒரு காலத்தில் சட்ட மறுப்பு மறியலும், சத்தியாக்கிரகமும் செய்து பார்த்து அதற்காக பல தடவை சிறை சென்றுமிருக்கிறேன்.

இந்நாட்டில் எல்லாரையும் விட பெரிய தேசப் பக்தனாகவுமிருந்து பார்த்துமிருக்கிறேன். வருணாசிரம தருமிகளெல்லாம் என்னை ராஜரிஷியென்றும் பிரமரிஷி என்றும் சொன்னதோடு உற்சவங்களில் தேர்களில் கூட எனது படத்தை இழுத்திருக்கிறார்கள்.

ஆகவே ஒரு மாசமோ, மூன்று மாசமோ, ஆறு மாசமோ ஜெயிலுக்கு போவதால் எனக்கொன்றும் ஆபத்து வந்து விடாது. சத்தியாக்கிரகத்தில் சேர்ந்து கொள்வதால் எனக்கொன்றும் மரியாதையுங் குறைந்து விடாது. ஆதலால் நான் எவ்வித சத்தியாக்கிரகத்திற்கும் எந்த ஜெயிலுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

பின்னை ஏன் அதை ஆதரிக்கவில்லை என்றால், அதன் உண்மையும், அனுபவமும் எனக்கு சிறிதாவது தெரியும். சுமார் பத்து வருஷத்திற்கு முன் ஏற்பட்ட ஒத்துழையாமையின்போது முப்பதினாயிரம் பேர்கள் சிறை சென்றோம்; ஒரு கோடி ரூபாய் செலவுஞ் செய்தோம்.

ஒரு வளைந்து போன பின் (pin) ஊசிக்கும் பயன்படவில்லை. நான் அவ்வளவு பாடுபட்டும், எவ்வளவோ தேசீயப் பிரசாரம் செய்தும் இன்றும் திருவிசலூர் அக்கிரகாரத்தில் தடியும் கையுமாய் பார்ப்பனர்கள் நின்று கொண்டிருப்பதை மாற்ற முடியவில்லையென்றால் யோக்கியனுக்கு வேலை அங்கா? இங்கா? என்று பாருங்கள்.

உண்மையில் எந்த வைதீகர்களும் வருணாச்சிரம தருமிகளும் என்னைப் பெரிய ராஜரிஷி என்றும், பிரமரிஷி என்றும், தேசப் பக்தன் என்றும், தேசியவீரனென்றும் அழைத்தார்களோ அவர்களேதான் இன்றைய தினம் என்னைத் தேசத்துரோகி என்றும், மதத் துவேஷி யென்றும் அழைக்கப்படுவதை நான் பார்க்கிறேன்.

ஆகவே இதிலிருந்தே நான் முன் செய்த தொண்டு வைதீகர்கட்கும், வருணாசிரமிகட்கும் அனுகூலமான தென்றும் இப்போது நான் செய்வது அவர்களுக்கு விரோதமானதென்றும் நன்றாய் விளங்கவில்லையா? இவற்றிலிருந்து தான் எனது தொண்டில் எனது அபிப்பிராயத்தில் நாளுக்கு நாள் உறுதிப்பட்டுக் கொண்டு வருகிறது.

என்றையதினம் அரசியல் என்பதாக நம் நாட்டில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டதோ அன்றையதினமே படித்த மக்கள் என்பவர்களிடம் நாணயக் குறைவும் சுயநலமும் ஏற்பட்டு விட்டது. அதன் பயனாய் பாமரமக்கள் ஏமாற்றமடைந்து பழய அரசியல் நிலைமை யைவிட அதிக மோசமான நிலைமை ஏற்பட்டு விட்டது.

நமது நாட்டைப் பொறுத்த வரையில் அன்னிய ஆட்சியையொழிக்கும் அரசியல் கிளர்ச்சி என்பது உதவவே உதவாது; முடியவே முடியாது. ஏனெனில் நமது நாடானது அந்நியராட்சிக்கு அநுகூலமாகவே ஆதியிலிருந்தே அமைக்கப்பட்டு விட்டது. அதற்கு உதாரணமாக நமது நாடு அன்னிய ஆட்சி இல்லாதிருந்த ஒரு காலத்தை நம்மால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

உதாரணமாக இந்தியாவானது ஐரோப்பியராட்சிக்கு முன், துருக்கி யராட்சியிலேதான் சுமார் ஆயிரம் வருஷம் வரை யிருந்து வந்திருக்கிறது. அதற்குமுன் ஆட்சிக்கு சரித்திரங்களையோ புராணக் கதைகளையோ ஆதார மாய் எடுத்துக் கொள்வதாய் இருந்தால் ஆரியர்களுடைய ஆட்சி யாகத்தான் இருந்திருக்கிறது.

அதற்குமுன், அல்லது அதன் மத்தியில் ஏதாவது ஆட்சி சொல்ல வேண்டுமானால் காட்டு ராஜாக்களும், ஆரியக் கொள்கைக்கு அடிமையாயிருந்த மூட ராஜாக்களும் இருந்த ஆட்சியில் தான் நாடு சின்னாபின்னப்பட்டு கிடந்திருக்கிறது.

இந்த நிலையில் எப்பொழுது இந்தியா அந்நிய ஆட்சியின் கீழ் இருந்திருக்கவில்லையா யென்பதை யோசித்துப் பாருங்கள். இவைகளில் எந்த ஆட்சியை நாம் சுய ஆட்சி என்று சொல்லுவது. எந்த ஆட்சியை அந்நிய ஆட்சி என்று சொல்லுவது? என்பவைகளை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

நீதி வழுவாமல் நடந்த இராஜிய பாரங்கள் என்பது மநுதரும சாஸ்திர கொள்கைப்படிக்கு நடந்ததாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. தரும ராஜ்யங்கள் என்று சொல்லுவது இராமனும், அரிச்சந்திரனும் போன்றவர்கள் ஆண்ட இராஜ்ய பாரத்தையும் அவர்களின் கதைகளிலிலுள்ள கொள்கைகளையும் தான் சொல்லப்பட்டிருக்கின்றன.

சாதாரணமாக இராமனைக் கடவுளாக நம்பி இருப்பவர்களையும் இராமன் கதையை உண்மை யென்று கருதிக் கொண்டிருப்பவர்களையும் இராம ராஜ்யத்தை இன்றயதினம் ஒப்புக் கொள்ளுகிறார்களாவென்பதைக் கேட்கிறேன்.

இராம ராஜ்யம் வருணாசிரம ராஜ்யமா அல்லவா? இராமராஜ்யத்தில் மக்களுக்குச் சம சுதந்திரம் இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? அதுபோலவே அரிச்சந்திரன் இராஜ்யத்தில் நீதியோ, நாணயமோ சிறிதாவது இருந்ததாக யாராவது சொல்ல முடியுமா? இந்தக் கதைகள் உண்மையாக இல்லாவிட்டாலும் இதைத்தானே நல்லரசாட்சிக்கு அறிகுறியாய்ச் சொல்லப்படுகிறது.

அரிச்சந்திரன் தன் பெண் சாதியை மற்றொருவனுக்கு விலை கூறி விற்றான் என்பதினாலேயே பெண்கள் விற்கப்படும் சாதனம் என்பதும் அடிமை என்பதும் உறுதிப்பட வில்லையா? பறையனிடம் அரிச்சந்திரன் அடிமையானான் என்பதினாலேயே தீண்டாமையும் சாதி ஆணவமும், அடிமை விற்பனையும் உறுதிப்படுத்தப்படவில்லையா? யாகத்திற்காக முனிவர்களுக்குப் பணம் கொடுத் தார்கள் என்பதும், மற்றும் பிராமணர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்தான் என்பதும் பார்ப்பனராதிக்கத்தையும் அவர்களுக்கு எல்லா

சொத்தும் உரிமை என்பதும் உறுதிப்படவில்லையா? (தொடரும்)

குறிப்பு : 02-08-1930 ஆம் நாள் திருவிசலூரில் நடைபெற்ற கும்பகோணம் வட்ட இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மாநாடு- தலைமையுரை.

(குடி அரசு - சொற்பொழிவு - 10.08.1930)

Pin It