உணவுச் சுதந்திரம் இல்லாத நாடு!

எழுத்தை தடை செய்தால் கொதித்தெழும் சுதந்திரவாதிகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் ஒரே சத்தான உணவை உண்ணக்கூடாது என்று வயிற்றில் அடித்தால் வேடிக்கை பார்க்கிறார்கள்! மகாராட்டிராவில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டதை கண்டித்து காஞ்சா அய்லைய்யா அளித்துள்ள (DNA நாளேடு, 4.3.2015) பேட்டி: “வரலாற்று ரீதியாக பழங்குடியினர், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மாட்டிறைச்சி உண்பதை தங்களின் உணவுப் பண்பாடாகவே கொண்டுள்ளனர். பார்ப்பனியம் மாட்டிறைச்சிக்கு எதிரான செயல்திட்டத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஓர் அரசு குறிப்பிட்ட உணவுப் பழக்கத்தை மக்கள் மீது எப்படித் திணிக்க முடியும்? பார்ப்பனர்கள், பனியாக்கள் மற்றும் சில ஆதிக்க சாதியினருக்கு மாட்டிறைச்சி சாப்பிடுவது பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக, சமூகத்தின் பிற மக்கள் மீது அரசு அதைத் திணிக்க நினைக்கிறது.

இந்த அரசு உண்மையில் ஒரு மத அரசாக (theocratic state) மாறி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.தனது கொள்கைகளை அரசு மூலம் செயல்படுத்துகிறது. சமூகத்தின் கடை கோடி மக்கள் தங்கள் அடிப்படை உணவுத் தேவைக்காக மாட்டிறைச்சியை சார்ந்திருப்பதால், இனி அவர்களுக்கான சத்தான உணவின் அளவு குறைந்துவிடும். இது, கால்நடை பொருளாதாரத்தையே அழித்துவிடும். விவசாயத்திற்கும் உணவுக்கும் பயன்படாத காளை, பசு மற்றும் எருமைகளை யார் பராமரிக்கப் போகிறார்கள்? உழவுக்கு காளை பயன்படுவதில்லை; பசுவும் நிறைய கன்றுகளை ஈணுவதில்லை. தற்பொழுது பசுவும் பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதில்லை. மகாராட்டிராவில் எருமை மாடுகள்தான் அதில் முன்னணியில் இருக்கின்றன.எனவே இனி அதை மட்டும் கொல்ல அனுமதிக்கப் போகிறார்களா?''

ஏனில்லை பிரதிநிதித்துவம்?

இந்தியாவில் உள்ள ஆறு தேசிய கட்சிகளின் முக்கிய முடிவுகள் எடுக்கும் உயர் மட்டக் குழுவில் தலித், மதச் சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் எத்தனை சதவிகிதம் இருக்கிறது என "தி இந்து' (27.4.2015) நடத்திய ஆய்வில், பகுஜன் சமாஜ் கட்சிதான் பல சாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகக் கண்டறியப்பட்டுள்ளது. பா.ஜ.க.வில் மதச்சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவம் அறவே இல்லை.அதை மதவெறிக் கட்சியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சி.பி.எம்.இன் அதிகாரம் நிறைந்த அரசியல் உயர்மட்டக் குழுவில் – கட்சி தொடங்கிய 50 ஆண்டுகளில் – தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவம் அறவே இல்லை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? 

வன்னியப் பாட்டாளி மக்கள் கட்சியின் கவனத்திற்கு...

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர் பி.எஸ் . கிருஷ்ணன், இ.ஆ.ப. (ஓய்வு) அவர் "தி இந்து'வுக்கு 19.10.2014 அன்று அளித்த பேட்டி: “வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 இல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1995 முதல் 2010 வரைக்குமான காலகட்டத்தில் சுமார் ஒன்றரை கோடிப் பேர் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பலர் காவல் நிலையம் வந்து புகார் தரும் வலு கூட இல்லாமல் இருக்கின்றனர். அப்படி தைரியம் வந்து காவல் நிலையத்தில் புகார் தரும் தலித்துகள், பழங்குடிகளின் புகார்கள் எல்லாம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை. அப்படிப் பதிவு செய்ய வைக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. அப்படிப் பதிவு செய்தவர்கள் சுமார் அய்ந்தரை லட்சம் பேர்.

அந்த வழக்குகள் எல்லாம் காவல் நிலையம் தாண்டி நீதிமன்றத்தின் படி ஏறுவதே பெரிய விஷயம். அப்படி ஏறிய வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்று விடுதலை செய்துவிடுவதாகத்தான் இங்கு அதிகம் நடக்கிறது. வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றத்தால் 0.5 சதவிதம் முதல் 8 சதவிகிதம் பேர் வரை மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறார்கள். சாதி சமத்துவம் ஏற்படும் வரை, ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவு மக்களுக்கு தனிச்சட்டம் என்பதுதான் ஜனநாயகம்.

சாதி சமத்துவம் ஏற்படாமல் இந்தியாவில் ஜனநாயகமே மலராது. சாதி சமத்துவத்தின் வழியாக ஜனநாயகத்திற்குள் நாம் பயணம் செய்வதற்கான வழிகளில் ஒன்றாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இருக்கும். இந்தியாவில் அதிசயம் அற்புதங்கள் எதுவும் நடக்கவில்லை என்றால், மிகவும் குறைவாக மதிப்பிட்டாலும் கூட, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் தேவை ஒரு நூற்றாண்டு காலத்திற்கு இருக்கும்.'' அதுவரை (வ)பா.ம.க. மற்றும் இன்னபிற சாதிவெறிக் கட்சிகளும் இருக்குமா?

தீண்டத்தகாத இந்தியா!

அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் சமூக பொருளாதார ஆய்வு மய்யம் இந்திய மனித வள மேம்பாட்டு மய்யத்துடன் இணைந்து – கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற சமூக மாற்றங்கள் குறித்து – அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியாவில் கிராமப்புறங்களில் 30 சதவிகிதமும் நகர்ப்புறங்களில் 20 சதவிகிதமும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகின்றன; 5 சதவிகித இந்தியர்களே சாதி மறுப்புத் திருமணங்களை செய்து கொள்கின்றனர். இந்தியாவில் தீண்டாமையை அதிகமாகக் கடைப்பிடிப்பவர்கள் (54 சதவிகிதம்) பார்ப்பனர்களே என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது ("தி இந்து' 13.11.2014) தீண்டாமை / வன்கொடுமை என்றால் இடைநிலைச் சாதியினரை மட்டுமே குற்றம் சொல்லும் பார்ப்பனர்களும் அவர்களைத் தாங்கி நிற்கும் சூத்திர / பஞ்சம அறிவுஜீவிகளும் இதற்கென்ன பதில் சொல்வார்களோ? 

எச்சிலைத் தின்னும் கோழிக்கு ஏன் தடையில்லை?

மாட்டிறைச்சி உண்பது பற்றி காரைக்குடியில் 6.4.1926 அன்று பெரியார் ஆற்றிய உரையை இன்றளவும் உரத்துச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது : “மாடு தின்பது, மது குடிப்பது என்பதால் நீங்கள் பறையர்களாக இருப்பதற்குக் காரணம் என்று சொல்லுவது கொஞ்சங்கூட யோக்கியமான காரணம் அல்ல. மாடுகளைத் தின்று மது குடிப்பவர்கள்தான் இப்பொழுது உலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மாடு தின்பதின் குற்றம் உங்களைச் சேர்ந்ததில்லை.

ஆடு, கோழி, மீன், பன்றி இவைகளைவிட மாடு என்ன குறைவாய் போய்விட்டது? கோழியும், மீனும், பன்றியும், எச்சில், பூச்சி, புழுக்களோடு அழுக்கோடு கூடிய மலத்தையும் சாப்பிடுகிறது. அதை ருசித்து சாப்பிடுகிற வடநாட்டு பார்ப்பான் முதல் தென்னாட்டு சூத்திரன் வரை நல்ல ஜாதியாகவும், தொடக்கூடியவனாகவும் இருக்கும் போது, புல்லும், பருத்திக்கொட்டையும் புண்ணாக்கும் தின்கின்ற மாட்டிறைச்சி சாப்பிடுவதில் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான்? அப்படிப்பார்த்தால் மாடு சாப்பிடுகிறவர்களை எல்லாம் தொடாதே, தெருவில் நடக்காதே, குளத்தில் குளிக்காதே, கிணற்று நீரைச் சாப்பிடாதே, ஊருக்குள் குடியிருக்காதே என்றா சொல்லுகிறார்கள்? வேண்டுமென்றே உங்களைத் தாழ்த்தி வைப்பதற்காகச் சொல்லும் யோக்கியப் பொறுப்பற்ற காரணமே அல்லாமல் உண்மையான காரணம் அல்ல என்பதுதான் என் முடிவு. மதுவும் மாட்டிறைச்சியும் தள்ளினால்தான் உங்கள் ஜாதி உயரும் என்று சிலர் சொல்லும் அயோக்கியத்தனமான காரணத்தை நான் ஒத்துக் கொள்ள முடியாது.'' 

Pin It