IV
இத்தகையதுதான் காந்தியம், காந்தியம் என்பது என்ன என்பதைத் தெரிந்து கொண்டு விட்ட பிறகு, ‘காந்தியம் நாட்டின் சட்ட மாக்கப்பட்டால் தீண்டப்படாதவர்களின் கதி என்னவாகும்’ என்ற கேள்விக்குப் பதிலளிக்க மனக்குழப்பம் காரணமாக தலையைச் சொரிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. மிகவும் அடிமட்டத்திலுள்ள இந்துவை அது எவ்வாறு பாதிக்கும்? காந்திய சமூக அமைப்பு நடைமுறைக்கு வருமானால் அவனது நிலை எப்படி இருக்கும் என்பது பற்றி எவ்வளவோ கூறப்பட்டுள்ளது. மிகவும் அடி மட்டத்திலுள்ள இந்துவும் தீண்டப்படாதவனும் சொத்துரிமை இழந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாகையால், தீண்டப்படாதவனுடைய நிலைமை ஒன்றும் மேம்பட்டதாக இருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் அவனது நிலைமை மிக மிக மோசமானதாகவே இருக்கும்.
ஏனென்றால் இந்தியாவில் சாதி இந்துக்களில் மிகவும் கீழ்மட்டத்திலுள்ள இந்துவும் கூட, ஏன் பழங்குடியைச் சேர்ந்தவனும், மலைவாழ் குலமரபுக் குழுவைச் சேர்ந்தவனும்கூட கல்வித் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் தீண்டப்படாதவர்களை விட எவ்வகையிலும் உயர்ந்த நிலையில் இல்லாதிருந்தாலும் தீண்டப்படாதவர்களுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட வகுப்பின னாகவே கருதப்படுகிறான். தீண்டப்படாதவர்களை விட மேலான வன் என்ற அவனது உரிமையை இந்து சமுதாயமும் ஏற்றுக் கொள்கிறது.
எனவே தீண்டப்படாதர்கள் இப்போது போலவே மிகவும் மோசமான நிலையில், பெரிதும் கீழ் நிலையில் இருந்து வருவார்கள்; பொருளாதாரம் ஏறுமுகம் காணும் நாட்களில், வளமும் செழிப்பும் கொழிக்கும் நாட்களில் அவன் கடைசியாக வேலைக்கமர்த்திக் கொள்ளப்படுபவனாகவும், பொருளாதார மந்தம் சூமும் காலத்தில் வேலையிலிருந்து முதலில் நீக்கப்படுபவனாகவும் இருந்து வருவான்.
இந்த இழி நிலையிலிருந்து, அவல நிலையிலிருந்து தீண்டப் படாதவர்களை கரையேற்ற, அவர்களுக்குக் கைகொடுத்து மேலே தூக்கிவிட காந்தியம் என்ன செய்கிறது? தீண்டாமையை ஒழிப்போம் என்று காந்தியம் முழங்குகிறது. காந்தியத்தின் மிகச் சிறந்த பண்பாக இது போற்றிப் புகழப்படகிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இந்த மிகச் சிறந்த பண்பின் பொருள் என்ன? காந்தியத்தின் மிகப் பெரிய அம்சமாகக் கருதப்படும் இந்தத் தீண்டாமை எதிர்ப்பின் மதிப்பை எடைபோடுவதற்கு திரு.காந்தியின் தீண்டாமை ஒழிப்புத் திட்டத்தின் முழு வீச்சையும் புரிந்து கொள்வது அவசியம்.
இந்துக்கள் தீண்டப்படாதவர்களைத் தொடுவதைப் பொருட்படுத்த மாட்டார் கள் என்பதற்கும் அதிகமாக எதையும் இது அர்த்தப்படுத்துகிறதா? கல்வி கற்பதற்கு தீண்டப்படாதவர்களுக்குள்ள உரிமைக்கு விதிக் கப்பட்டிருக்கும் தடை அகற்றுப்படுவதை இது குறிக்கிறதா? இந்த இரு விஷயங்களையும் தனித்தனியாகப் பரிசீலிப்பது நலமாக இருக்கும்.
முதல் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். தீண்டப்படாத வர்களைத் தொட நேர்ந்த பிறகு ஓர் இந்து நீராடக் கூடாது என்று திரு. காந்தி கூறவில்லை. தீட்டை அகற்றும் ஒரு தூய்மைச் சடங்கு என்ற ரீதியில் திரு. காந்தி இதனை ஆட்சேபிக்கவில்லை என்றால் தீண்டப்படாதவர்களைத் தொடுவதன் மூலம் தீண்டாமை எப்படி மறைந்து விடுமென்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை, தீண்டுவதால் தீட்டு ஏற்படுகிறது, குளிப்பதன் மூலம் அந்தத் தீட்டை அகற்றி விடலாம் என்ற கருத்தை மையமாகக் கொண்டதுதான் தீண்டாமை என்பது.
இது இந்துக்களுடன் சமூக ரீதியில் ஒன்றுபடுவதைக் குறிக் கிறதா? தீண்டாமையை அகற்றுவது என்பது இந்துக்களும் தீண்டப் படாதவர்களும் சமபந்தி விருந்து அருந்துவதையோ அல்லது தங்களுக்குள் கலப்புத் திருமணங்கள் செய்து கொள்வதையோ எவ்வகை யிலும் குறிக்கவில்லை என்பதை திரு. காந்தி மிகவும் திட்டவட்ட மாக, தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார். தீண்டப்படாதவர்கள் சூத்திரர்கள் என்று வகை பிரிக்கப்படுவதற்குப் பதிலாக ஆதி – சூத்திரர் கள் என்று வகை பிரிக்கப்படுவார்கள் என்பதே திரு. காந்தியின் தீண்டாமை எதிர்ப்பின் பொருளாகும்.
இதைத் தவிர அதில் வேறு எதுவும் இல்லை. ஆனால் பழைய சூத்திரர்கள் புதிய சூத்திரர்களைத் தங்களுடைய அரவணைப்பிற்குள் ஏற்றுக் கொள்வார்களா என்ற பிரச்சினையை திரு. காந்தி சிந்தித்துப் பார்க்கவில்லை. இவ்வாறு அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் தீண்டாமை ஒழிப்பு என்பது ஓர் அர்த்தமற்ற கோட்பாடாகி விடுகிறது; ஏனென்றால் தீண்டப்படாதவர்கள் இன்னமும் ஒரு தனித்த வகுப்பினர்களாகவே கருதப்பட்டு வருவார்கள். தீண்டாமை ஒழிப்பு தீண்டப்படாதவர் களை சூத்திரர்களுடன் இணைத்துவிடாது என்பதை திரு. காந்தி அநேகமாக அறிவார்.
தீண்டப்படாதவர்களுக்கு திரு. காந்தி ஒரு புதிய, வேறுபட்ட பெயரைச் சூட்டுவதற்கு இதுவே காரணம் என்று தோன்றுகிறது. என்ன நிகழக்கூடும் என்பதை முன்கூட்டி அறிந்தே புதிய நாமகரணம் செய்யப்பட்டிருக்கிறது. தீண்டப்ப்டாதவர்களை ஹரிஜனங்கள் என்று அழைப்பதன் மூலம் திரு. காந்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியிருக்கிறார். சூத்திரர்கள் தீண்டப் படாதவர்களை தங்கள் அரவணைப்பில் ஏற்றுக் கொள்ள மாட்டார் கள் என்பதை இதன் மூலம் காட்டியிருக்கிறார். இந்தப் புதிய பெயரின் மூலம் அத்தகைய அரவணைப்புக்கு ஏற்றுக் கொள்ள மாட்டார் கள் என்பதை இதன் மூலம் காட்டியிருக்கிறார். இந்தப் புதிய பெயரின் மூலம் அத்தகைய அரவணைப்புக்கு எதிர்நடவடிக்கை எடுத்து அதனை சாத்தியமற்றதாகவும் ஆக்கிவிட்டார்.
இரண்டாவது விஷயத்தைப் பொறுத்தவரையில், கல்வி கற்ப தற்கு தீண்டப்படாதவர்களுக்குள்ள உரிமைக்கு இந்து சாஸ்திரங்கள் விதித்திருந்த பழைய தடையை அகற்றுவதற்கும், அறிவுச் செல் வத்தை ஈட்ட அவர்களை அனுமதிப்பதற்கும் காந்தியம் தயாராக இருக்கிறது என்பது உண்மையே, காந்திய சித்தாந்தத்தின்படி தீண்டப் படாதவர்கள் சட்டம் படிக்கலாம், மருத்துவம் பயிலலாம், பொறியியல் கற்கலாம் அல்லது விரும்பிய வேறு எதில் வேண்டுமானாலும் போதனை பெறலாம். அதுவரை சரிதான்.
ஆனால் தீண்டப்படாதவர்கள் தாங்கள் கற்ற கல்வியையும் பெற்ற அறிவாற்றலையும் பயன்படுத்திக் கொள்ள சுதந்திரம் இருக்குமா? தாங்கள் விரும்பிய வாழ்க்கைத் தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை இருக்குமா? அவர்கள் வழக்கறிஞராகவோ, மருத்துவராகவோ, பொறி யாளராகவோ ஆக முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு காந்தியம் அளிக்கும் திட்டவட்டமான பதில் ‘இல்லை’ என்பதுதான். தீண்டப் படாதவர்கள் தங்களது பரம்பரைத் தொழில்களையே செய்து வர வேண்டும்.
அந்தத் தொழில்கள் தூய்மையற்றவையாக இருக்கின் றனவே என்பது இதற்கு சமாதானமாகாது: தொழில்கள் பரம்பரையை அடிப்படையாகக் கொண்டிராத காலத்தில் அவை வலிமையின் அடிப்படையில் அமைந்திருந்தன, ஒருவரது விருப்பத்துக்கு அதில் எத்தகைய இடமும் இல்லாதிருந்தது. எனவே ஒரு காலத்தில் முடிவு செய்யப்பட்ட விஷயம் அது தவறாக முடிவு செய்யப்பட்டிருந்தாலும் நிரந்தரமாக முடிவு செய்யப்பட்ட விஷயமே ஆகும் என்பது காந்தி யத்தின் வாதம். காந்திய சித்தாந்தத்தின் பிரகாரம் தீண்டப்படாதவர்கள் என்றென்றும் தோட்டிகளாகவே இருக்க வேண்டும். தீண்டப் படாதவர்கள் இதைவிட பழைய வைதிக முறையில் அமைந்த தீண்டாமையை வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தீண்டப் படாதவர்கள் மீது இந்து சாஸ்திரங்கள் படிப்பின்மையைக் கட்டாய மாகத் திணித்ததால் அப்போது தோட்டித் தொழில் பொறுத்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் நன்கு கல்வி கற்ற ஒரு தீண்டப்படாதவனை தோட்டித் தொழில் செய்யும்படி காந்தியம் நிர்ப்பந்திப்பது கொடுமையிலும் கொடுமையாகும். காந்தியம் ஒரு சாபக்கேடே தவிர வேறல்ல. காந்தியத்தின் தீண்டாமை எதிர்ப்புத் திட்டம் என்பது வெறும் மாயை. அதில் சத்தும் இல்லை சாரமும் இல்லை.
V
தங்களது இறுதி விமோசனத்திற்கு, விடுதலைக்கு வழிவகை செய்யக் கூடியதென தீண்டப்படாதவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியது காந்தியத்தில் வேறு என்ன இருக்கிறது? தீண்டாமைக்கு எதிரான இந்த மாய பிரசாரத்தை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் காந்தியம் என்பது சனாதனத்தின் மற்றொரு வடிவமே தவிர, வேறல்ல என்பது புல னாகும்; தீவிர வைதிக இந்து சமயத்தின் பண்டைக்காலப் பெயரே இந்த சனாதனம் என்பது. வைதிக இந்து சமயத்தில் இல்லாத வேறு என்ன காந்தியத்தில் இருக்கிறது? இந்து சமயத்தில் சாதி இருக்கிறது. காந்தியத்திலும் சாதி இருக்கிறது. பரம்பரைத் தொழில் சித்தாந்தத்தை இந்து சமயம் ஆதரிக்கிறது; அவ்வாறே காந்தியமும் ஆதரிக்கிறது. இந்த் சமயம் பசு வழிபாட்டை மேற்கொள்கிறது. காந்தியமும் அவ்வாறே செய்கிறது. இந்த உலகில் மனிதனது நிலைமையை முன் கூட்டியே நிர்ணயிக்கும் கர்ம சித்தாந்தத்தை இந்து சமயம் விடாப் பிடியாகப் பின்பற்றுகிறது. காந்தியமும் அதையே செய்கிறது. இந்து சமயம் சாஸ்திரங்களின் ஆணை உரிமையை அங்கீகரிக்கிறது. காந்தி யமும் அவ்விதமே செய்கிறது (திரு. காந்தியின் சமயக் கோட்பாடுகள் 1921 அக்டோபர் 6-ஆம் தேதிய யங் இந்தியா இதழில் விவரிக்கப்பட்டுள்ளன.) இந்து சமயம் கடவுளின் அவதாரங்களை ஒப்புக் கொள்கிறது. காந்தியமும் அவ்வாறே செய்கிறது. இந்து சமயம் விக்கிரம் ஆராதனையில் நம்பிக்கை வைத்திருக்கிறது. காந்தி யமும் அவ்விதமே செய்கிறது.
காந்தியம் செய்திருப்பதெல்லாம் இந்து சமயத்துக்கும் அதன் சித்தாந்தங்களுக்கும் ஒரு தத்துவார்த்த அடிப்படையை வழங்கியிருப்பதுதான். இந்து சமயம் சில கண்டிப் பான விதிமுறைகளைக் கொண்ட ஒரு தொகுதியாக சிறப்பற்ற முறை யில் மொட்டையாக அமைந்திருக்கிறது; மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது பண்பற்ற, செப்பமற்ற ஒரு குரூரமான அமைப் பாகவே அது தோற்றமளிக்கிறது. காந்தியம் அதன் கரடுமுரடான மேற்பரப்பை வழவழப்பாக்கி, அதற்கு தகைமையையும் ஆன்ற மதிப் புடைமையையும் அளிக்கக்கூடிய ஒரு தத்துவத்தை வழங்குகிறது; இவ்வாறு அதனை மாற்றி, அதற்குக் கவர்ச்சி அளிக்கும் விதத்தில் அதனை அழகுபடுத்துகிறது. இந்து சமயத்தின் ஆடையற்றா உருவத்தை மூடி மறைக்க காந்தியம் என்ன தத்துவத்தை முன்வைத்திருக்கிறது? இந்தத் தத்துவத்தை இரத்தினக் சுருக்கமாகக் கூறிவிடலாம். அந்தத் தத்துவம் பின்வருமாறு கூறுகிறது: “இந்து மதத்தில் உள்ள யாவும் சாலச் சிறந்தவை, இந்து மதத்திலுள்ள அனைத்தும் பொது நன்மைக்கு இன்றியமையாதவை.” வால்டேரின் கேண்டட்டை படித்தவர்கள்
இது மாஸ்டர் பாங்கீலாசின் தத்துவம் என்பதைத் தெரிந்துகொள்வர், அதனை அவர் நையாண்டி செய்ததையும் நினைவு கூருவர். இந்துக்கள் இந்தத் தத்துவம் குறித்த மன நிறைவு அடைந்துள்ளனர் என்பதில் ஐயமில்ல. இது அவர்களுக்கு இசைவானதாக இருக்கிறது என்பதிலும் அவர்களுடைய நலன்களுக்கு உகந்ததாக இருக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. “பூவுலகின் தெய்வம்” என்று திரு. காந்தியை ஏற்றிப் போற்றியிருக்கிறார் பேராசிரியர் இராதாகிருஷ்ணன்.
இதனை அவர் உணர்வுபூர்வமாகக் கூறினாரா அல்லது இச்சகத்தால் தூண்டப்பட்டுக் கூறினாரா என்பதை இங்கு நாம் விவாதித்துக் கொண்டிருக்கத் தேவை யில்லை. தீண்டப்படாதவர்கள் இதனை எவ்வாறு புரிந்து கொண் டிருக்கிறார்கள்? அவர்கள் பின்வருமாறு புரிந்து கொண்டிருக்கிறார் கள்: “இன்னலுக்கு ஆளாகியுள்ள வகுப்பினர்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றுவதற்காக காந்தி என்ற பெயர் கொண்ட இந்தக் கடவுள் வந்தார். அவர் இந்தியாவைக் கண்டார்; எல்லாம் நல்ல முறையில் இருப்பதாகக் கூறாமல், இந்துக்கள் சாதி விதிமுறைகளை நிறை வேற்றினால்தான் நன்மை பயக்கும் என்று கூறி அதனை மாற்றி னார். பிறகு அல்லற்படும் இனத்தினரிடம் அவர் இவ்வாறு கூறினார்: ‘சாதி விதி முறைகளை நிறைவேற்றுவதற்காகவே நான் வந்திருக் கிறேன்! அவற்றில் இம்மியும் குறைய நான் அனுமதிக்க மாட்டேன்.”
தீண்டப்படாதவர்களுக்கு காந்தியம் என்ன நம்பிக்கை ஒளியை அளிக்கிறது? தீண்டப்படாதவர்களுக்கு இந்து மதம் பெரும் அச்சமூட்டும் ஒரு பயங்கர படுகளமாகத்தான் காட்சி அளிக்கிறது. வேதங்கள், ஸ்மிருதிகள், சாஸ்திரங்கள் ஆகிய இவற்றின் மீறா வொண்ணா புனித்தன்மை, அவற்றின் பிழையாத்தன்மை, சாதி என்னும் இரும்புக் சட்டம், ஈவு இரக்கமற்ற கர்ம சித்தாந்தம், பிறப்பைக் கொண்டு ஒருவனது அந்தஸ்தை நிர்ணயிக்கம் அர்த்தமற்ற விதி முறைகள் போன்ற இவையெல்லாம் தீண்டப்படாதவர்களை நெஞ் சிரக்கமற்று குரூரமாக சித்திரவதை செய்வதற்கு இந்து மதம் வடித் தெடுத்துள்ள கொலைக்கருவிகளாக அமைந்துள்ளன.
தீண்டப்படாத வர்களின் வாழ்க்கையை வெடி வைத்துக் தகர்ந்து முடமாக்கும், வாட்டி வதைக்கும், சுட்டுப் பொசுக்கும் இதே கொடிய ஆயுதங்கள் காந்தியத்தின் பெட்டகத்தில் மெருகு குலையாது அப்படியே இருப் பதைக் காண்கிறோம். இவ்வாறு இருக்கும்போது காந்தியம் இந்து மதத்தைப் போல் ஒரு கொலைக்களம் அல்ல, அது ஒரு சுவர்க்கம் என்று தீண்டப்படாதவர்கள் எவ்வாறு கூற முடியும்? காந்தியத்திட மிருந்து காத தூரத்துக்கு ஓடிவிடுவது ஒன்றுதான் தீண்டப்படாத வர்கள் இதற்கு எதிராக மேற்கொள்ளும் மிகவும் இயல்பான நட வடிக்கையாக இருக்க முடியும்.
நான் கூறுவதெல்லாம் பழைய பாணி காந்தியத்தைப் பற்றித் தான் என்று காந்தியவாதிகள் கூறக்கூடும். புதிய காந்தியம் ஒன்று இருக்கிறது, சாதியில்லாத காந்தியம் அது. சாதி என்பது காலத்துக்கு ஒவ்வாத ஒரு கோட்பாடு என்று திரு. காந்தி அண்மையில் வெளி யிட்ட அறிக்கை இதற்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது (ஹிந்துஸ்தான் டைம்ஸ், 15, ஏப்ரல், 1995.) திரு. காந்தியின் இந்த அறிவிப்பு சீர்திருத்த்வாதிகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது.
இந்துக்களிடம் எல்லையற்ற செல்வாக்கு பெற்றி ருக்கும் திரு. காந்தி போன்ற ஒருவர், ஒரு சமூக பிற்போக்காளரின் மிகவும் திங்கு பயக்கும் பாத்திரத்தை வகித்தவர், சாதி அமைப்பு முறையின் மிகவும் தீவிர ஆதரவாளராக இருந்தவர், நன்மைக்கும் தீமைக்கும் இடையே எத்தகைய பாகுபாடும் காட்டாத வாதங்களை முன்வைத்து சிந்தனையற்றா இந்துக்களை மருட்டி வசியப்படுத்தி யவர், ஏமாற்றியவர் முன்னர் கூறியதை மறுதலிக்க இப்போது முன் வந்தால் யார்தான் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்? ஆனால் உண்மை யிலேயே இது பெருமகிழ்ச்சி அடைவதற்குரிய விஷயம்தானா? காந்தியத்தின் தன்மையையே இது மாற்றிவிட்டதா? முன்பிருந்ததை விட இது காந்தியத்தை புதிய, சிறந்த ‘இய’மாக மாற்றி விட்டதா? திரு. காந்தியின் மறுதலிப்பால் மனமகிழ்ந்து போனவர்கள், உணர்ச்சி வசப்பட்டுப் போன்வர்கள் இரண்டு விஷயங்களை மறந்து விடுகின்றனர்.
முதலாவதாக சாதி அமைப்பு முறை காலத்திற்கு ஒவ் வாதது என்றுதான் கூறியிருக்கிறார், அது ஒரு தீமை என்று அவர் கூறவில்லை, அது ஒரு சாபக்கேடு என்று சொல்லவில்லை. திரு. காந்தி சாதியை ஆதரிக்கவில்லை என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தாம் வருண அமைப்பு முறையையும் எதிர்ப்பதாக திரு. காந்தி கூறவில்லை.
திரு. காந்தியின் வருண அமைப்புமுறை என்பது என்ன? அது சாதி அமைப்பு முறையின் ஒரு புதிய பெயர்; சாதி அமைப்பு முறையி எல்லா மிக மோசமான அம்சங்களையும் அது தன்னுள் கொண்டுள்ளது.
திரு. காந்தியின் மேலே கூறிய பிரகடனத்தை காந்தியத்தில் எத்தகைய அடிப்படையான மாற்றமும் ஏற்பட்டிருப்பதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது. அதால் காந்தியத்தை தீண்டப்படாத வர்களுக்கு ஏற்புடையதாக்க முடியாது. தீண்டப்படாதவர்கள் இன் னமும் பின்வருமாறுதான் கூறிக் கொண்டிருப்பார்கள்: “ஆண்ட வனே! இந்த மனிதர் காந்திதான் எங்கள் ரட்சகரா?”
("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 11)