இது ஒரு தேசிய அவமானம் என்று எல்லோரும் முழு மனதோடும் தாழ்வான குரலிலும் அறிவிக்கிறார்கள். மன்மோகன்சிங், பிரதிபா பாட்டில் முதல் முகேஷ் அம்பானி மற்றும் அமீர்கான் வரை துயரக் கடலில் மூழ்கி எழுவதற்கான வரிசையில் நிற்பவர்களுக்குப் பஞ்சமே இல்லை. இதில் கடைசியில் குறிப்பிடப்பட்டுள்ளவர், அண்மையில் தலித் நலன்களுக்காகப் பாடுபட தன்னைப் புதிதாக அணியமாக்கிக் கொண்டவர். இருப்பினும், கையால் மலம் அள்ளும் சமூகத்தினர் தங்கள் தலையில் சுமந்து கொண்டிருக்கும் எடையைக் குறைக்க இந்த அவமானம் எதையும் செய்துவிட முடியவில்லை.

manual_scavenging_450ஒரு தேசிய அவமானம் என்பது ஒரு தேசத்தின் பொறுப்பு. ஆனால், எவரும் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மனித மாண்புக்கான இப்போராட்டத்தை நாங்கள் தொடங்கியபோது, இப்படியொரு மனிதத்தன்மையற்ற கொடூரம் இருப்பதை பெரும்பாலான மக்கள் அறியவில்லை என்று நாங்கள் நினைத்தோம். தங்கள் வீட்டின் பின்புறம் நாள்தோறும் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் மனிதக் கழிவுகளை தங்கள் கைகளால் சுத்தம் செய்து, தலையில் சுமந்து சென்று வெளியேற்றும் கொடுமை நடக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வின்றி இருக்கிறார்கள் என்று எண்ணியிருந்தோம். விலங்காண்டித்தனமான இவ்வழக்கத்தைப் பற்றிய உணர்வை இம்மக்களிடம் ஏற்படுத்தலாம் என எண்ணியிருந்தோம். எங்கள் பரப்புரையின் நோக்கம் இதுவாகத்தான் இருந்தது.

ஆனால், துயரம் என்னவெனில், நாங்கள் பரந்துபட்ட அளவில் பெரும் எண்ணிக்கையிலான மக்களிடம் அரசியல்வாதிகள், திட்ட வல்லுநர்கள், திட்ட அறிஞர்கள் மற்றும் அறிவாளிகளிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வு எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை. கையில் மலமள்ளுவதை அழித்தொழிக்க வேண்டும் என்ற எங்கள் இலக்கு அப்படியே இருக்கிறது; நடைமுறையில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தகவல்களின் மூலம் உலர் கழிப்பிடங்களின் துல்லியமான புள்ளிவிவரங்கள் இன்று நம்மிடம் உள்ளன. ஆனால், பிற மக்களின் கழிவுகளை சுமப்பதற்காகத் தங்களின் ஆரோக்கியம், கவுரவம் மற்றும் மாண்பையும் சமரசம் செய்து கொண்டு தொடர்ச்சியாக இச்செயலை செய்து கொண்டிருப்பவர்களின் நிலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இனிமேலும் இது பொது அறியாமை சார்ந்த விஷயமில்லை. ஆணாதிக்கச் சிந்தனைகளில் வேரூன்றி இருக்கும் ஆழமான சாதிய மனநிலையில் இத்தகைய விழிப்புணர்வுகள் தோற்கடிக்கப்படுகின்றன. எப்போதும்போல் சுத்தமான பணி, அசுத்தமான பணி என்று பார்க்கப்பட்டு, சாதியப் படிநிலையின் அடியில் இருப்பவர்கள் சுத்தமற்ற வேலைகளையே செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்பட்டு வருகிறது.

நம்முடைய மனநிலையை மாற்றிக் கொள்ளும்போதுதான் நாம் நம் கழிவறைகளையும் மாற்ற முடியும். அதனால்தான் அடுத்தடுத்து வந்த குடியரசுத் தலைவர்களாலும் பிரதமர்களாலும் தாங்கள் அளித்த உறுதிமொழிகளுக்கேற்ப எந்த உறுதியான செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. கையால் மலமள்ளும் அவலத்திலிருந்து எப்பொழுது விடுபட முடியும் என்று இன்றுவரை இந்திய அரசு சொல்லவில்லை. தொடர்ச்சியாக பலகால வரையறைகளை எந்த வெட்கமுமின்றி நாம் கடந்துவிட்டோம். தன்னுடைய சொந்த லட்சக்கணக்கான குடிமக்களுக்கு மாண்புடன் கூடிய வாழ்க்கையை வழங்குவதற்கு இந்த நாடு தவறிவிட்டது.

தற்பொழுதும் முன்பும் இருந்த ஒரே வேறுபாடு, கடந்த காலங்களில் நாம் இது குறித்து பேச விரும்பியதில்லை. இன்று கையால் மலம் அள்ளுவது நாள்தோறும் செய்தியாகிறது. அது தொலைக்காட்சி விவாதங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது. அரசாங்கங்கள் கூட தீவிரத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. ஆனால், இவை எல்லாம் செயலில் எதுவுமின்றி வெறும் உதட்டளவிலேயே முடிந்துவிடுகிறது. மத்திய அரசு கையால் மலமள்ளுவதை ஒழிக்கவும், கையால் மலமள்ளுபவர்களின் மறுவாழ்வுக்காகவும் 2011 2012 நிதியாண்டில் ஒதுக்கிய 100 கோடி ரூபாய் நிதியிலிருந்து ஒற்றை ரூபாய் கூட செலவழிக்கப்படாததை வேறு எப்படி விளக்க முடியும்? இதைவிட மோசமானது என்னவென்றால், கையால் மலமள்ளுபவர்கள் மற்றும் சுகாதாரமற்ற பணிகளை செய்பவர்களின் குழந்தைகளின் தொடக்கக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித் தொகை பயன்படுத்தப்படாமல் இருக்கிறது அல்லது வேறு திட்டங்களுக்காக மடைமாற்றப்பட்டுள்ளது. இத்தகைய திட்டங்களுக்காக நிதி கோரப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி, திட்டக்குழு இம்முறையை ஒழிப்பதற்கான கூடுதல் நிதியை ஒதுக்க மறுக்கிறது. இதனால் எந்த அதிர்வலைகளோ, கேள்வியோ எழுந்துவிட வில்லை. சாதிய அமைப்பை கட்டிக்காப்பாற்றக் கூடிய வகையில் இந்த கட்டமைப்பு எவ்வாறு கட்டுக்கோப்பாக இயங்குகிறது பாருங்கள்!

கையால் மலமள்ளும் தொழிலை ஒழிப்பதற்காக மத்திய அரசு 1993 ஆம் ஆண்டே ஒரு சட்டத்தை இயற்றியது. இன்று, 19 ஆண்டுகள் கழித்து புதிய சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 19 ஆண்டுகளாக என்ன நடந்தது? ஒரே ஒருவர் கூட இச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவில்லை. இச்சட்டத்தில் பல குறைகள் இருந்தன என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், ஒரே ஒருவர்கூட இச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படõததற்கு நிச்சயம் இது காரணமாக இருக்க முடியாது. கையால் மலமள்ளுபவர்களுக்கு ஏன் எந்த மறுவாழ்வும் வழங்கப்படவில்லை? சட்டத்தை உருவாக்குபவர்களுக்கு அதை நடைமுறைப்படுத்தும் உறுதி இல்லை என்பதே உண்மை.

மனித மாண்புக்கு எதிரான ஒரு பழக்கத்தை மக்கள் மீது திணிக்கும் செயலைத் தடுக்க சில உறுதியான வழிமுறைகள் வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் தேவைப்படவில்லை. உறுதியான மக்கள் ஆதரவு சட்டம்தான் உண்மை நிலையை மாற்ற உதவும். ஆனால், முதலில் நமது அரசுகள் கையால் மலமள்ளும் முறை நடைமுறையில் இல்லை என்று மறுப்பதை நிறுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து கால வரையறையுடன் கூடிய ஒரு செயல்திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

2003 ஆம் ஆண்டு, சபாய் கர்மாச்சாரி அந்தோலன் இந்நாட்டில் உள்ள 252 மாவட்டங்களில் கையால் மலமள்ளும் வழக்கம் தொடர்கிறது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்த பிறகும் தங்கள் மாநிலங்களில் கையால் மலமள்ளும் தொழிலாளர்களும் உலர் கழிவறைகளும் இல்லவே இல்லை என்று பல மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் அறிவித்தன. இது ஓர் அப்பட்டமான பொய்யாக இருப்பினும் 2010 வரை இதே பொய்யையே அவை சாதித்தன.

இதற்குப் பிறகுதான் சமூக நீதி மற்றும் அதிகாரப்படுத்தும் அமைச்சகம், நாடு முழுவதும் கையால் மலமள்ளும் வழக்கம் எங்கெல்லாம் இருக்கிறது என்பதைக் கண்டறிய புதிய கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தது. இக்கணக்கெடுப்பின் முறைகளை வகுக்க அமைச்சகம் ஒரு செயற் படையை அமைத்தது. ஆனால், இந்த நடவடிக்கையின் மூலம் அரசு தீவிரமாக இயங்கத் தொடங்கிவிட்டது என்ற முடிவுக்கு வருவது தவறு. இந்த செயற்படையில் நான்கு அமைச்சகங்கள் ஈடுபட்டிருந்தன. இந்த அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் கையால் மலமள்ளுபவர்களை கணக்கெடுக்க ஒருகோடி ரூபாயை நிதி அமைச்சகம் ஒதுக்கியது. அதுவரை எல்லாம் சரி, ஆனால் 13 மாதங்கள் கழித்தும் ஒரே ஒரு கோப்புகூட நகரவில்லை.

இறுதியில், இந்த கணக்கெடுப்பைக் கைவிடுவதாக அரசு அறிவித்தது. இக்கணக்கெடுப்பை நடத்த தொழில்நுட்பமுள்ள ஒரு நிறுவனத்தை கண்டுபிடிக்க முடியாததால்தான் இத்திட்டத்தைக் கைவிடுவதாக அது கூறியது. கையால் மலமள்ளுபவர்கள் நாட்டில் மொத்தம் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கான முதலும் மிக முக்கியமானதுமான நடவடிக்கையே கைவிடப்பட்டது.

தற்பொழுது திடீரென அரசு கணக்கெடுப்பு தகவல்களைக் கண்டறிந்துள்ளது. இது அதைவிட விந்தையாக இருக்கிறது. ஏனெனில், இந்த கணக்கெடுப்பு சுகாதாரமற்ற கழிவறைகளைப் பற்றியது மட்டுமே. நாடு முழுவதும் மனிதக் கழிவுகளை மனிதர்கள் கையால் தூய்மைப்படுத்தும் 7லட்சத்து 94 ஆயிரத்து 390 கழிவறைகள் உள்ளன. இதில், 73 சதவிகிதம் கிராமப்புறங்களிலும் 27 சதவிகிதம் நகர்ப் புறங்களிலும் உள்ளன. பிற 13 லட்சத்து 14 ஆயிரத்து 652 கழிவறைகளில் மனிதக் கழிவுகள் திறந்த சாக்கடையில் தள்ளப்படுகின்றன. கூடுதலாக 4 லட்சத்து 97 ஆயிரத்து 236 கழிவறைகள் விலங்குகளால் சுத்தம் செய்யப்படுவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இந்த விவரங்களில் இருந்து கையால் மலம் அள்ளுபவர்களின் எண்ணிக்கையை நாம் எவ்வாறு கணக்கிடுவது? இந்த முரண் போதாதென்று, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் விவரங்கள் சரியானவை அல்ல என, 2012 அக்டோபர் நவம்பரில் பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தர்காண்ட் அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுக்களை தாக்கல் செய்தன (அதாவது அவர்கள் மாநிலத்தில் அந்த அளவு உலர் கழிப்பறைகள் இல்லையாம்). ஆக, எந்தப் புள்ளிவிவரமும் சரியாக இல்லை. 2010 இல் சபாய் கர்மாச்சாரி அந்தோலன் கொடுத்ததும் வேறு அமைப்புகள் கொடுத்ததும் எதுவும் சரியாக இல்லை. மாநில அரசுகளிடமும் சரியான எண்ணிக்கை இல்லையெனில், எதுதான் சரியான எண்ணிக்கை? சரியான எண்ணிக்கையை எப்படித் திரட்டுவது? மறுவாழ்வுக்கான அடிப்படையாக எது இருக்க வேண்டும்? இவை எல்லாம் சபாய் கர்மாச்சாரி அந்தோலன் போன்ற அமைப்புகளை நிறுவுவதற்காக மட்டுமே மாநில அரசுகளுடன் சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் நிறுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே புதிய சட்டவரைவு நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. பழைய சட்ட வரைவிலிருந்து இது எவ்வாறு வேறுபட்டுள்ளது? இது உதவுமா? அப்படித் தோன்றவில்லை. இந்த சட்டவரைவு முற்றிலும் பாலின அக்கறையற்றதாக உள்ளது. கையால் மலம் அள்ளுபவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் ஆண்கள் என்று கருதியே இதன் மொழி அமைந்துள்ளது. உண்மையில் கையால் மலம் அள்ளுபவர்களில் பெரும்பான்மையினராகப் பெண்கள் உள்ள நிலையில் இது அபத்தமானது. தூய்மைப் பணியாளர்கள் சமூகத்தில் உள்ள பெண்களின் தேவைகள், சிக்கல்கள் ஆகியவற்றிற்கு பதில் சொல்வதாக மறுவாழ்வுத் திட்டங்கள் இருக்க வேண்டும்.

manual_scavenging_600

இரண்டாவதாக, கையால் மலம் அள்ளுபவர்களை அடையாளம் காணுதல் அல்லது புதிதாக ஒரு கணக்கெடுப்பை நடத்தும் பணியை இந்த சட்ட வரைவு ஊராட்சி அமைப்புகள் உண்மையை மறுக்கும் மனநிலையிலேயே இருந்துள்ளன. உண்மையில் இவை உச்ச நீதிமன்றத்திலேயே பொய்த் தகவல்களை அளித்துள்ளன. தங்கள் பகுதியில் கையால் மலம் அள்ளுபவர்களும், சுகாதாரமற்ற கழிவறைகளும் இல்லை என சாதிக்கும் மாநில அரசுகளிடமும் ஊராட்சி அமைப்புகளிடமும் எண்ணிக்கையை கணக்கிடும் பொறுப்பை அளிப்பது எவ்வகையிலாவது அறிவுப் பூர்வமானதா?

சமூக நீதி மற்றும் அதிகாரப்படுத்துதல் அமைச்சகம் மற்றும் குடிமைச் சமூக உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஆகியோருடன் நெருக்கமாகப் பணியாற்றும் ஒரு சுதந்திரமான அமைப்பிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். கணக்கெடுப்பிற்கான ஒரு முறைமையையும் வழிமுறையையும் அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. அது போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

கையால் மலம் அள்ளுபவர்களை விடுவிக்கும் வகையில் சட்டத்தின் நோக்கம் இருக்க வேண்டும். இந்த கோணத்திலேயே, சுகாதாரமற்ற கழிவறைகளை அடையாளம் காண்பதும் இடிப்பதும் மாற்றுவதும் இருக்க வேண்டும். தூய்மைப் பணியாளர் சமூகத்திற்கு பல நூற்றாண்டு காலமாக இழைக்கப்பட்டுவரும் கொடூரமான அநீதிக்காக இந்த நாடு அவர்களிடம் மன்னிப்புக் கோர கடமைப்பட்டுள்ளது.

இது இன்றி நீதி அதன் உண்மையான பொருளில் கிட்டாது. அவசரமான, சரியான, முழுமையானதொரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டாலன்றி எந்தவொரு புதிய சட்டமும் இயங்க முடியாது. இது நடந்தவுடன், இந்த கேவலமான சாதியப் பாரம்பரியத்தை இந்நாட்டிலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்க காலவரையறுக்கப்பட்ட ஒரு செயல் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.

இந்தியாவில் கையால் மலமள்ளும் கழிவறைகளின் எண்ணிக்கை எட்டு லட்சம்

1.            அந்தமான் நிக்கோபார் தீவுகள்  11

2.            ஆந்திரப் பிரதேசம்                10,357

3.            அருணாச்சலப் பிரதேசம்               1,059

4.            அஸ்ஸாம்   22,139

5.            பீகார்  13,587

6.            சண்டிகர்         000

7.            சட்டீஸ்கர்    736

8.            தாத்ரா நாகர் ஹவேலி     168

9.            டாமன் டையூ            16

10.          கோவா            000

11.          குஜராத்           2,566

12.          அரியானா     1,343

13.          இமாச்சலப் பிரதேசம்        310

14.          ஜம்மு காஷ்மீர்        1,78,443

15.          ஜார்கண்ட்     1,836

16.          கர்நாடகா       7,740

17.          கேரளா             3,011

18.          லட்சத்தீவுகள்          000

19.          மத்திய பிரதேசம்  5,664

20.          மகாராஷ்டிரா            9,622

21.          மணிப்பூர்       10,062

22.          மேகாலயா  1,962

23.          மிசோரம்       121

24.          நாகலாந்து    786

25.          டெல்லி           583

26.          ஒரிசா               26,496

27.          புதுச்சேரி       133

28.          பஞ்சாப்            3,465

29.          ராஜஸ்தான்                2,572

30.          சிக்கிம்             000

31.          தமிழ்நாடு     27,659

32.          திரிபுரா             830

33.          உத்திரப் பிரதேசம்                3,26,082

34.          உத்தர்கண்ட்               4,701

35.          மேற்கு வங்கம்        1,30,330 

                 மொத்தம்     7,94,390

Pin It