இந்தியாவில் தமிழ்நாடு உள்பட சில மாநில அரசுகள் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில் மத்திய அரசு 1993 இல் கையால் மலம் அள்ளுவதில் தொழிலாளர்களை ஈடுபடுத்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுமானம் தடை சட்டத்தை நிறைவேற்றியது. இவற்றில் கையால் மலத்தை அள்ளுதல், நீரைப் பயன்படுத்த வழியில்லாத உலர் கழிப்பறைகளைக் கட்டுதல், சுத்தம் செய்தல் ஆகிய பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு ஓர் ஆண்டு வரை சிறைத் தண்டனையுடன் கூடிய இரண்டாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க இச்சட்ட விதிகள் சொன்னது. ஆனால் இச்சட்டம் விதிக்கப்பட்ட 20 ஆண்டுகளில் ஒருவர்கூட தண்டிக்கப் படவில்லை என்பது நிதர்சன உண்மை.

இத்தகைய சூழலில்தான் கையால் மலம் அள்ளும் தொழிலுக்குத் தடைவிதித்தல் மற்றும் அப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு சட்டம் -2013 என்றொரு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றினாலும் இவற்றில் சாக்கடைக் குழிகள், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் அவற்றிலிருக்கும் அடைப்புகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளுக்காக மனிதர்களை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இறக்குவதையும் தடைசெய்தது. இருப்பினும் கையால் மலம் அள்ளுதல் மற்றும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் போது தொழிலாளர்கள் தொடர்ந்து மரணமடையும் அவலம் தொடரத்தான் செய்தது.

இருப்பினும் தொழிலாளர்களை கையால் மலம் அள்ளுதல் மற்றும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்வதற்கான தடைச் சட்டத்திற்குப் புறம்பாக பணி செய்ய நிர்பந்திக்கும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் உள்பட பலர் தண்டிக்கப்படாமல் தப்பித்துக் கொண்டே இருப்பதை உணர்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்தன. அதன் அடிப்படையில் இவற்றை முறைப்படுத்த உரிய சட்டத்திருத்தம் தேவை என்பதை உணர்ந்து 2020 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு மசோதா முன்மொழியப்பட்டது. அவற்றில் பாதாள சாக்கடை குழிகளை சுத்தம் செய்ய முற்றிலும் இயந்திரமாக்குவதற்கு வழிவகை செய்ய சிறு திருத்தம் செய்து பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படாமலே அம்மசோதா இன்னும் கிடப்பில் கிடக்கிறது.manual scavenging 497இத்தகைய நிலையில் பிப்ரவரி 1, 2023 அன்று மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிப் பகுதிகளில் கழிவுநீர்த் தொட்டிகள், சாக்கடைக் குழிகளில் அடைப்புகளை நீக்கும் பணி நூறு சதவிதம் இயந்திரமயமாக்கப்படும் என்றும் இந்தத் தொட்டிகள், குழிகள் அனைத்தும் மனிதர்கள் இறங்குபவை என்பதிலிருந்து இயந்திரங்கள் இறக்கப்படுபவையாக என மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக வரவேற்பைப் பெற்றுள்ளது. சாக்கடை குழிக்குள் இறங்கி வேலை செய்வது சக மனிதர்கள்தான் என்ற பிரஞ்சையை இப்போதுதான் ஒருவாறு மத்திய அரசு பெற்றிருக்கிறது. அதற்கான ஆதாரமாக பாதாள சாக்கடை குழிகளில் மனிதர்களை இறக்குவதிலிருந்து இயந்திரங்களை இறக்குவதற்கான அறிவிப்பை எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவர பாராளுமன்றத்தில் மேன்மை தாங்கிய நபர்களின் ஒப்புதல் இதுவரை கிடைக்க பெறாமல் இருக்கும் பட்சத்தில் இவற்றை நடைமுறைப் படுத்துவது சாத்தியம்தானா? என்ற கேள்வியும் இருக்கத்தான் செய்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் இயந்திர மயமாக்கப்பட்ட துப்புரவுச் சூழல் அமைப்பின் தேசிய செயல் திட்டத்திற்கு (நமஸ்தே) என்ற பெயரில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதை எப்படி மத்திய அரசு செயல் வடிவத்திற்குக் கொண்டு வரப் போகிறது?

ஒருவேளை எந்தத் திட்டமானாலும் அவற்றை செயல்படுத்த பிரதமர் போஸ் கொடுப்பது போல சம்பந்தப்பட்ட துறையின் சார்பில் சில கோடிகள் செலவழித்து விளம்பர பதாகைகள் வைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஒருவேளை தற்போது ஒதுக்கியிருக்கும் இந்த நூறு கோடி ரூபாய் முழுவதும் வெறுமனே விளம்பரப்படுத்துவதற்கான தொகையாகத்தான் இருக்குமோ என்று யூகிக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் 2014-18 வரையிலான காலத்தில் மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்களுக்காக விளம்பரங்களுக்கு மட்டும் 5,200 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என்கிறது புள்ளிவிபரங்கள். அதோடு பிரதமருக்கு நன்றி தெரிவிரிக்கும் விளம்பரங்கள் மட்டும் ஒவ்வொரு திட்டத்திற்கும் பத்து கோடி வரை செலவழிக்கப்படுவதாக சில தரவுகள் சொல்கின்றன. இதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டே இந்தியா முழுவதும் கையால் மலம் அள்ளும் தொழிலை நவினப்படுத்துகிறோம்... இயந்திர மயமாக்குகிறோம் என்ற பெயரில் வெறுமனே நூறு கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கியிருப்பது ஒருவித சந்தேகத்தை எழுப்புகிறது.

கையால் மலம் அள்ளும் இத்தகைய கொடிய நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும்? என்று ஆராய்ந்தால் இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவோருக்குப் பிற வாழ்வாதர சூழல் இல்லாதது, சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் பொறுப்பாளர்களி;ன் அலட்சியம் ஒரு பக்கம் இருப்பினும் பெரும்பாலும் ஒப்பந்த முறையில் துப்புரவுப் பணியை மேற்கொள்வதால் தனியார் அமைப்புகள் அல்லது ஒப்பந்தம் கோரும் தனிப்பட்ட நபர்கள் குறைந்த ஊதியத்திற்கு கொத்தடிமை போல வறுமையில் இருக்கும் நபர்களை அதுவும் தலித் மக்களை ஈடுபடுத்தும் கொடூரம் இன்றும் நிலவுகிறது. இவையெல்லாம் அரசுகளுக்கும் அதை நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கும் தெரிந்தும் ஒருவித ஆதிக்க மனோபாவத்தால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். கையால் மலம் அள்ளும் அல்லது துப்புரவுப் பணியைப் பொறுத்தவரை பலரும் சாதிய மனநிலையோடுதான் நடந்து கொள்கின்றனர்.

இந்தியாவில் கையால் மலம் அள்ளும் தொழிலில் தலித் மக்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள் என்பதற்கு ஆதாரமாக மத்திய அரசே துப்புரவுப் பணியாளர்களிடையே நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 97.25 சதவிதம் பேர் இத்தொழிலில் தலித் மக்களே ஈடுபடுகிறார்கள் என்கிறது. இது எதார்த்த உண்மையும்கூட.

‘யாரெல்லாம் மலம் கழிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் கழிவறை சுத்தம் செய்யும் அல்லது துப்புரவுப் பணியை மேற்கொள்ள கடமைப்பட்டவர்கள் என்ற பொது நியதி இங்கு இல்லாதவரை இத்தகைய சாதிய மனோபாவம் ஆதிக்கம் கொள்ளத்தான் செய்யும்’ என நிகழ்வு ஒன்றில் பேசிய நடிகர் சத்தியராஜ்; அவர்கள் கூறியிருக்கிறார். அவரே மேலும், “வாரம் ஒரு சாதிக்காரன் செப்டிக் டேங்கிற்குள் இறங்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் உடனடியாக மலம் அள்ளுவதற்கு ஆயிரம் மிஷின்கள் கண்டுபிடிக்கப்படும்” என்றார். ஏனென்றால் அத்தகைய கொடூரமான பணியை செய்வது யார்? என்ற கேள்விதான் நாம் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அதோடு இப்பணியில் மட்டும் 97.25 சதவித ஒதுக்கிடு தலித் மக்களுக்கானதாக இருக்கிறது என்பதை பார்த்தால் இத்தொழில் எத்தகைய சாதிய மனோபாவத்தால் கட்டடைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு வேறு உதாரணம் தேவையில்லை. பெரும்பாலும் அரசு அலுவலகங்களில் பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்படும் பணியாளர்களில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையை தாண்டி கூடுதலாகப் பணியில் அமர்த்தப் படுவார்களா? என்றால் அறவே இல்லை என்றிருக்கும் போது துப்புரவுப் பணியில் மட்டும் அரசு திட்டமிட்டு தலித் மக்களை ஒட்டுமொத்தமாக ஈடுபடுத்துவது அரசின் குற்றமல்லவா? அதனால்தான் இதுதொடர்பான சில வழக்குகளில் அரசுகள் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கடுமையாக சாடியுள்ளனர். ஆனால் அதையெல்லாம் அரசு பெரியதாக எடுத்துக் கொள்வது இல்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் இருந்து கொள்கிறது.

துப்புரவுத் தொழில் நவினமயமாக்கப்பட வேண்டும் என்றாலும் சரி, சக மனிதர்கள் இன்னொருவரின் மலத்தை கையால் அள்ளும் அவலம் தொடராமல் இருக்க வேண்டும் என்றாலும் சரி, மலக்குழிக்குள் இறங்கி மனிதர்கள் மூச்சடைத்து சாகக்கூடாது என்றாலும் சரி, துப்புரவுத் தொழில் அரசு வேலை என்றாலும் பிற அரசுத்துறை சார்ந்த சக அரசு ஊழியர்கள் துப்புரவுத் தொழிலாளர்களை சக மனிதர்களாகக்கூட மதிக்காமல் அவர்களை இழிவாக நடத்தும் நிலை மாற வேண்டும் என்றாலும் சரி. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்றால் ஆளும் ஆட்சியாளர்கள், நிர்வாகம் செய்யும் அரசு ஊழியர்கள் உள்பட வெகுஜன மக்களின் மத்தியிலும் மனதளவில் மாற்றம் வர வேண்டும்.

அதோடு மற்ற அரசுத் துறைகளில் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒதுக்கப்பட்ட இடங்கள் என்னவோ அதற்குரிய இடங்களில் அவர்கள் தாராளமாக பணிசெய்யட்டும். அதை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. தற்போது வரை துப்புரவுப் பணியில் குறிப்பாக அருந்ததியர் சமூக மக்கள் இப்பணியில் அதிகம் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பிற அரசுத் துறைகளுக்கு உரிய பணிகளில் மாற்றம் செய்துவிட்டும், அதோடு பிற அரசு அலுவலங்களில் துப்புரவுப் பணியிடங்களுக்கு மாறுதல் அளித்து விட்டும்... அவ்விடத்திற்கும், இனிமேல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சிகளில் புதிதாக துப்புரவுப் பணியில் அமர்த்தப்படக் கூடியவர்கள் எனத் தேவைக்கேற்ப பணியாளர்களை எல்லா சாதியினரையும் உள்ளடக்கி அவரவருக்கு உரிய ஒதுக்கிடு முறையில் பணியில் அமர்த்தினால் எல்லாம் சரியாக விடும். இதை தீவிரமாகச் செயல்படுத்தினால் துப்புரசுத் தொழிலில் நவின முறைகளும் இயந்திரங்களும் எத்தனை விரைவாக நடைமுறைக்கு வரும் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

இப்பொழுது பேச்சு வார்த்தை அளவில் இருக்கும் கையால் மலம் அள்ளும் தொழிலில்... பாதாள சாக்கடைக் குழிகளில்... இயந்திரத்தை உடனடியாக இறக்குவது மட்டுமல்ல, இன்னும் நிறைய கண்டுபிடிப்புகள் விரைவில் வரும் என்றே எதிர்பார்க்கலாம்!

-  மு.தமிழ்ச்செல்வன் 

Pin It