மக்களாட்சி நடைபெறுகின்ற ஒரு நாட்டில், குறிப்பாக நம் போன்ற அதிக மக்கள் தொகையும், பிராந்திய வித்தியாசங்களும், சமூக வேறுபாடுகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் கொண்ட நாட்டில் அரசாங்கம் செயல்படுத்துகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் முறையாக யாருக்குச் சென்று சேரவேண்டுமோ அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில்தான் அந்த அரசாங்கத்தின் சாதனை இருக்கின்றது.
இந்தச் சாதனை என்பது பல தடைகளைத் தாண்டி நடைபெற வேண்டியுள்ளது. இதற்குத் தடைகளாக இருப்பவர்களை அகற்ற அரசாங்கத்தால் இயலவில்லை என்பதுதான் நாம் பார்க்கும் எதார்த்தம். இதை அரசாங்கமே உணர்ந்து ஒப்புக் கொண்டுதான் மக்கள் பங்கேற்புடன் ஒரு ஆளுகை வேண்டும் என்று அரசாங்கமே கூறுகிறது. நம் போன்ற கூட்டாட்சி முறையில் இயங்கும் நாடுகளில் திட்டங்களையும் நிதி ஒதுக்கீடுகளையும் மத்திய அரசு தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கும்.
அந்தத் திட்டங்கள் அனைத்தும் மாநில அரசுகளின் வழியாகத்தான் சென்றடைய வேண்டிய நிர்வாக நடைமுறை கூட்டாட்சி முறையில் இருக்கின்றது. உள்ளாட்சிக்குத் தரவேண்டிய நிதிகூட மத்திய அரசு நேரடியாகத் தரமுடியாது. அந்த நிதியும் மாநில அரசாங்கத்தின் மூலம்தான் உள்ளாட்சிக்கு தரப்பட வேண்டும்.
எனவே மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தச் சாதனையையும் மத்திய அரசால் சாதிக்க முடியாது. இரு அரசாங்கமும் நேர்கோட்டில் செயல்பட்டால்தான் மக்கள் சேவையில் தாங்கள் சாதிக்க வேண்டியவைகளை சாதிக்க முடியும். அதுதான் கூட்டாட்சியின் மாண்பும்கூட.
மாநிலத்திலும் மையத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தாலும் மைய அரசு என்ன நோக்கத்திற்காக திட்டங்களைக் கொண்டு வருகிறதோ, அதை உள்வாங்கிக் கொண்டு மாநில அரசுகள் அந்தத் திட்டங்களை முனைப்புடன் அரசுத் துறைகள் மூலமும், அடித்தள அரசாங்கமாக அமைந்துள்ள உள்ளாட்சிகள் மூலமும் செயல்படுத்தினாலன்றி, திட்டங்கள் உருவாக்க வேண்டிய விளைவுகளை உருவாக்க முடியாது என்பதை இந்திய வளர்ச்சி வரலாற்றை ஆய்வு செய்தவர்கள் அனைவரும் கூறும் செய்தி.
இதை நாம் தென்னிந்திய மாநிலங்களை வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மேற்கூறிய கருத்தின் உண்மை நமக்குப் புரியும். இந்தியாவில் வறுமை மற்றும் ஏழ்மை நிறைந்த மாநிலங்களான உத்தரப் பிரதேசமும் பீகாரும் தான் 100 வேலை வாய்ப்ப்புத் திட்டத்தில் அதிக நிதி வாங்கி செலவு செய்திருக்க வேண்டும்.
ஆனால் கேரளாவும், தமிழகமும்தான் அதிக நிதியை 100 வேலைத் திட்டத்தில் செலவழித்திருக்கிறது. இந்த இரு மாநிலங்களிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பசியால் வேலை தேடி வெளிமாநிலங்களுக்குச் செல்லும் சூழல் இல்லாமல் இருக்கின்றது.
எனவே திட்டச் செயல்பாடுகள் முனைப்புடன் முழுமையாக, கடப்பாடுடன் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல; எதிர்க்கட்சிக்கும் உண்டு, மற்ற அரசியல் கட்சிகளுக்கும் உண்டு, ஊடகங்களுக்கும் உண்டு, பொதுக் கருத்தாளர்களுக்கும் உண்டு.
அத்துடன் பொதுமக்களுக்கும் உண்டு. இந்தக் கண்காணிப்புப் பணிகள் செய்வது, அதுவும் பொதுமக்களின் பங்களிப்புடன் செய்வது என்பது மிகவும் சிரமமான செயல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதற்கு மிகப்பெரிய மக்கள் தயாரிப்பு தேவைப்படும். அந்தத் தயாரிப்பு கேரளத்தில்தான் இந்தியாவிலே சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. இதன் விளைவுதான் அங்குப் பொது நிறுவனங்கள் அனைத்தும் மக்களின் பங்களிப்போடு பாதுகாக்கப்பட்டு, அந்த நிறுவனங்கள் மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளன.
நம் போன்ற ஏழைகள் மிகுந்த நாடுகளில் பொதுமக்கள் அனைவராலும் அந்தப் பணியைச் செய்ய இயலாது. பெரும்பாலான ஏழைகள் தங்கள் வாழ்வாதாரத்தை நோக்கி அலைகின்ற சூழலில் அரசைக் கண்காணிக்கும் பொறுப்பை அவர்களால் நிறைவேற்ற இயலாது. ஆனால் நடுத்தர வர்க்கத்தால் அரசைக் கண்காணிக்க முடியும்.
மேற்கத்திய நாடுகளில் மக்கள் அரசைக் கண்காணிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் என்று கருத்தாளர்கள் கூறுவது உண்டு. உண்மை என்னவெனில் அங்கு ஏழைகள் மிகக் குறைவு, ஏழ்மையும் மிகக் குறைவு, வறுமையும் மிகக் குறைவு. பெரும்பான்மை நடுத்தர வர்க்க மக்களாக இருப்பதால் அரசைக் கண்காணிக்க அவர்களுக்கு நேரம் இருக்கின்றது. அந்த அளவிற்கு அவர்களின் பொருளாதாரம் அவர்களுக்கு இடம் கொடுக்கிறது.
அடுத்து அந்த நாடுகளில் ஆளுகையும் நிர்வாகமும் மிக எளிமையாகவும், மக்களுக்கு எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால் அரசைக் கண்காணிப்பது பொதுமக்களுக்கு மிக எளிது. ஆனால் நம் போன்ற காலனியாதிக்க வரலாறு கொண்ட நாடுகளில் பொது நிர்வாகம் என்பது அரசை சர்வ வல்லமை கொண்டதாக ஆக்கி மக்களை அச்சத்தில் ஆழ்படுத்தி சுரண்டுவதற்காக ஏற்படுத்திய அமைப்பு தொடர்கிறது.
எனவே அப்படி உருவாக்கப்பட்ட ஆளுகை மற்றும் நிர்வாகம் பொதுமக்களுக்கு புரிந்து கொள்ள சிக்கல் நிறைந்ததாகவும் அரசுக் கட்டமைப்புக்களில் உள்ளவர்களுக்கு எளிதில் பயன்படக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பதால் பெரும்பான்மை மக்களுக்கு ஆளுகையும் நிர்வாகமும் புரியாத புதிராகவே இருக்கின்றன.
அத்துடன் இந்த நிர்வாக அமைப்பு இந்தியாவை சுரண்ட, அடக்கியாள உருவாக்கப்பட்ட ஒன்று. எனவே இந்த அமைப்புக்கு இயல்பாகவே சுரண்டல் தன்மை உண்டு. இந்தச் சூழலை மாற்றியமைக்க இந்தியாவில் இரண்டு முறை நிர்வாக சீர்திருத்த ஆணையங்கள் உருவாக்கப்பட்டு இரண்டு முறையும் அறிக்கைகள் தரப்பட்டனவேயன்றி, அந்த அறிக்கைகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசோ, மாநில அரசுகளோ எந்த முனைப்பையும் காட்டவில்லை.
இரண்டு அரசாங்கங்களும் முனைப்புக் காட்டவில்லை என்பது மட்டுமல்ல நமது குற்றச்சாட்டு, நம் அரசியல் கட்சிகளே முனைப்புக் காட்டவில்லை, சீர்திருத்த நடவடிக்கைகள் ஆளுகையிலும் நிர்வாகத்திலும் தேவை என்று அரசியல் அழுத்தத்தை நம் அரசியல் கட்சிகளும் கொடுக்கவில்லை பொதுக் கருத்தாளர்களும் விவாதப் பொருளாக இதை பொதுமக்கள் மத்தியில் கொண்டுவந்து மக்கள் கருத்தையும் உருவாக்கவில்லை.
இதற்கு இங்கு ஒரு உதாரணத்தைக் கொடுத்தால் புரிந்து கொள்ள மிக எளிதாக இருக்கும். இந்தியாவை இந்தியர்களை வைத்தே சுரண்ட உருவாக்கப்பட்ட காலனிய ஆதிக்க நிர்வாக நடவடிக்கைகளில் ஒன்று நில ஆர்ஜிதச் சட்டம். அன்றிலிருந்து இன்று வரை நில நிர்வாகம் என்பது எவருக்கும் புரியாத புதிராகவே இருந்து வந்தது.
இதனை உலக வங்கி இந்தியாவில் ஒரு ஆய்வினை நடத்தி முதலில் நில நிர்வாகத்தை சீர் செய்யுங்கள் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என பரிந்துரை செய்தது, எதுவும் நடக்கவில்லை மாறாக இருந்த குழப்பத்தில் நிலத்தை மிக எளிதாக கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுக்க நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வந்தன.
தற்போது தான் பொதுமக்களின் நிலங்களை வங்கியில் தங்கள் கணக்குக்கு ATM கார்டு கொடுப்பது போல, நிலங்களுக்கு உரிமைக்கார்டு கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மாதிரிச் சீர்திருத்தங்கள் நில அபகரிப்புக்கு தடை போட்டுவிடும் என்பது மட்டுமல்ல, பொதுமக்களின் குறிப்பாக ஏழைகளின் சொத்துக்களுக்கு ஒரு பாதுகாப்புத் தருவதாகும். இதைவிட மிக முக்கியமாக பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதற்கு இந்தச் சீர்திருத்தம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
அரசாங்கம் மக்களுக்காகப் போடுகின்ற நலத் திட்டங்கள் உரியவர்களுக்குச் சென்று சேர கண்காணிப்பு அவசியமாகிறது என்றாலும், அதைச் செய்ய மிகப்பெரிய நிர்வாகச் சீர்திருத்தம் இந்த நாட்டில் செய்தாக வேண்டும். இந்தக் கருத்தை நேருவிடம் உலகப்பிரசித்தி பெற்ற நிர்வாகவியல் நிபுணர் பால் அப்பல்பி (Paul Applyby) நேருவிடம் ஓர் அறிக்கையாகவே கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த அறிக்கையில் மிக முக்கியமான ஓர் கருத்தைப் பதிவு செய்து வைத்தார்.
வெள்ளையர் காலணிய சுரண்டல் நிர்வாகத்தை அவர்கள் வசதிக்காக வைத்திருந்ததை மாற்றியமைக்காமல் நீங்கள் தொடர்ந்து வைத்திருந்தால் நிர்வாகக் கட்டமைப்புக்குள் வருகின்ற இந்தியப் பணியாளர்களும் வெள்ளையரின் மனோபாவத்துக்கு வந்து மக்களைச் சுரண்ட ஆரம்பித்து விடுவார்கள்.
அதுவே பின்பு ஊழலுக்கு வித்திட்டு பொதுமக்களை புறந்தள்ளும் சூழலுக்குக் கொண்டுவந்துவிடும் என்பதனையும் குறிப்பிட்டிருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் இந்தியா என்ற நாட்டை உருவாக்குவது என்பது மிகச் சவாலாக இருந்த காரணத்தால், வெள்ளையர் உருவாக்கி வைத்திருந்த நிர்வாக அமைப்பு புறந்தள்ள முடியவில்லை.
படிப்படியாக நிர்வாக அமைப்புக்கள் சீர்திருத்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு நிலையில் அது மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது, ஏகபோக முதலாளிகளுக்கு நிர்வாக அமைப்பு நெகிழும் தன்மை கொண்டதாக சாதாரண மனிதனுக்கு நெகிழாத்தன்மை கொண்டு கடுமையைக் காட்டக்கூடியதாகவும் செயல்படுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு போட்ட மக்கள் நலத் திட்டங்களை உலக வங்கி ஓர் ஆய்வு நடத்தி ஒரு கருத்தினை ஆய்வு அறிக்கை மூலமாக வெளியிட்டது. “இந்தியா உலகத்திலேயே அதிக மக்கள் நலத் திட்டங்களை தீட்டிய நாடு. 2000க்கும் மேற்பட்ட திட்டங்களை தீட்டிய நாட்டில் மானுட மேம்பாட்டில் மிகவும் பின்தங்கிய ஆப்பிரிக்க தேசங்களைவிட மிக மோசமாக இருப்பதற்கான காரணம் என்ன என்பதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பாக இருந்தாலும், பெண்களின் பிரசவ மரணமாக இருந்தாலும், பிறந்த குழந்தை இறப்பதாக இருந்தாலும், ஊட்டச்சத்து இன்றி வாழும் குழந்தையாக இருந்தாலும், வளர்இளம் பெண்களின் ரத்தசோகையாக இருந்தாலும், தண்ணீர் பாதுகாப்பாக இருந்தாலும், வாழ்விட சுகாதாரமாக இருந்தாலும், கழிப்பறை சுகாதாரமாக இருந்தாலும் அனைத்திலும் ஏன் இந்த பின்னடைவு என்பதை அலசி ஆராய வேண்டும்.
அந்தத் திட்டங்கள் உருவாக்க வேண்டிய விளைவுகளை ஏன் சமூகத்தில் உருவாக்கவில்லை என்று ஆய்ந்திட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது. ஆனால் இந்தியாவில் பல நிறுவனங்கள் இதற்கான காரணத்தை ஆராய்ந்து “திட்டத்தை கைப்பற்றுவது” “programme capture” என்பது இந்திய நடுத்தர வர்க்கத்திலும் அரசுத்துறை அலுவலர் மற்றும் அதிகாரிகளிடமும் கலாச்சாரமாக வந்துவிட்டது.
இங்குதான் ஊழலின் ஊற்றுக்கண் இருக்கிறது. அந்த ஊற்றுக்கண் என்பது இன்று ஆறுபோல ஓடுகிறது என்பதையும் ஆய்வு மூலமாகவே தெரிவித்து விட்டனர் ஆய்வாளர்கள். இந்தப் பெரும்பான்மை மத்தியதரவர்க்கமும் அரசு ஊழியர்களும் அரசியலுக்குள், ஆட்சியில், மற்றும் நிர்வாகத்தில் மையப்பகுதியில் நின்று செயல்பட்டுக் கொண்டு பெரும் பயன் அடைந்து வருகின்றனர். இவர்கள் தான் தடைக்கற்கள்.
இந்தத் தடைக்கற்களை உடைக்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்பதைப் பரிந்துரைத்துள்ளனர் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வறிக்கைகளில்.
இதனைத் தொடர்ந்துதான் முன்னேற்றம் என்பது உரிமை என்று அரசால் பிரகடனப்படுத்தப்பட்டது. ஏனென்றால் உரிமை என வந்துவிட்டால் உரிமையை மீட்டெடுக்க பாதிக்கப்பட்டவர்கள் வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் உணவானாலும் சரி, கல்வியானாலும் சரி, முன்னேற்றச் செய்தியானாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, வாழ்விடமாக இருந்தாலும் சரி அத்தனையும் உரிமைகளாக சட்டங்களின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டன.
உலகத்தில் எந்த நாட்டிலும் இவ்வளவு கட்டாக முன்னேற்றத்தையும் அடிப்படைத் தேவைகளையும் உரிமைகளாகத் தரவில்லை. உரிமைகளாக மட்டுமல்ல, அத்துடன் திட்டங்களாகவும், நிதி ஒதுக்கீடுகளாகவும் தந்துள்ளன மத்திய அரசு.
அது மட்டுமல்ல; ஏழை எளிய மக்களின் பாதுகாப்பு மேம்பாடு அனைத்தும் சட்டங்களின் மூலம் கொண்டு வந்ததை “Weapons of the oppressed” “ஒடுக்கப்பட்டோரின் ஆயுதம்” என்ற ஒரு அறிக்கையினை ஒரு டெல்லி ஆராய்ச்சி நிலையம் தயாரித்து புத்தகமாகவே, ஒடுக்கப் பட்டோருக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும் செயல்படுவோர்களுக்கு வழிகாட்டும் நூலாகப் பயன்படட்டும் என்று வெளியிட்டனர். இருந்தும் சூழல் மாறியதாகத் தெரியவில்லை என்று இந்த உரிமைகளின் தாக்கம் பற்றி ஆய்வு செய்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதைவிட மேம்பட்ட ஒரு ஆளுகைச் சீர்திருத்தம் ஒன்று இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. அதுதான் 73வது மற்றும் 74வது அரசியல் சாசனச் சட்டத்திருத்தச் சட்டங்கள். இதன் வாயிலாக ஒடுக்கப்பட்டோரையும் ஒதுக்கப்பட்டோரையும் உள்வாங்கி பங்கேற்க வைத்து மூன்று அரசாங்கங்களையும் முறையாகக் கவனித்து மக்கள் சேவையை திறம்பட செய்திட முனைந்தது இந்திய அரசு. இந்தச் சட்டத் திருத்தங்கள் உலகை இந்தியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
ஏனென்றால் ஏறத்தாழ 6000 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் சட்ட உறுப்பினர்களாகவும் இருந்து ஆளுகை செய்த நாட்டை இன்று 30 லட்சம் பேருக்கு மேல் மக்கள் பிரதிநிதிகளாக இருந்து இந்திய மக்களாட்சியை பங்கேற்பு ஜனநாயகமாக மாற்ற முனைந்தது மாபெரும் வரலாற்றுச் சாதனை என்று கருதினர்.
இந்தச் சீர்திருத்தத்தில் ஒடுக்கப்பட்ட தலித்துக்களும், ஒதுக்கப்பட்ட பெண்களும் நடுநாயகமாகக் கொண்டுவரப்பட்டுள்ளனர். உலகத்தில் மக்களாட்சி விரிவாக்கத்திற்கும், உரிமைகள் மீட்புக்கும் செயல்படும் அமைப்புகள் அனைத்தும் இந்தியாவை நோக்கிப் பார்க்க ஆரம்பித்தன.
25 ஆண்டுகளைக் கடந்தும் நம் அரசியல் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற அரசியலைக் கடந்து உள்ளாட்சி மன்ற அரசியலுக்குள் செல்ல முயலவில்லை. உள்ளாட்சிக்குள்ளும் ஒரு அரசியல் இருக்கின்றது என்பதைப் பலர் அறியவில்லை. அதற்கான புதிய அரசியல் சிந்தனையை நம் கட்சி அரசியல் உருவாக்கவில்லை.
உள்ளாட்சியில் நடுநாயகமாக்கப்பட்ட தலித் தலைவர்களுக்கும் பெண் தலைவர்களுக்கும் தாங்கள் வந்திருப்பதன் நோக்கம் என்ன என்ற செய்தியைக் கூட கொண்டு சேர்த்து உள்ளாட்சிக்கான ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்க முடியவில்லை அல்லது முனையவில்லை.
தலித்துக்களின் மேம்பாடு, சமூக நீதி, பெண்கள் மேம்பாடு இவைகளை உயிர் மூச்சாக நினைத்து செயல்படுகிறோம் என்று கூறும் கட்சிகள் கூட உள்ளாட்சியை வலுப்படுத்துவது என்பது பெண்களுக்கு அதிகாரமளிப்பது, உள்ளாட்சிக்கு அதிகாரமளிப்பது, தலித்துக்களுக்கு அதிகாரமளிப்பது என்ற புரிதலுடன் உள்ளாட்சியில் ஒரு புதிய அரசியல் சாத்தியம் இருக்கிறது என்பதைப் புரிந்து ஏழைகளையும், தலித்துக்களையும், பெண்களையும் போராட தயார் செய்ய முனையவில்லை.
இந்தச் சூழலை வென்றெடுக்க புதிய அரசியல் ஒன்று நமக்குத் தேவைப்படுகிறது. அதை நோக்கி நாம் நகரவில்லை என்றால் ஏழைகளை வாழ்விக்கும் நாடாக இருக்காது, மாறாக ஏழைகளை சுரண்டும் நாடாக மட்டுமே இருக்கும். இந்த நிலை மாற புது அரசியலை நோக்கிப் பயணிக்க முயல்வோமா? இதற்குத் தேவை ஒரு பொது விவாதம் பொதுத் தளத்தில்.
- க.பழனித்துரை