IX

தீண்டாதவர்கள் கௌரவமான, சுத்தமான ஆடைகளை அணியக் கூடாது. தங்க, வெள்ளி நகைகளை அணியக்கூடாது. தீண்டாதவர்கள் இந்த விதிகளை மீறி நடந்தால் இந்துக்கள் அவர்களைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்கள். தீண்டாதவர்கள் இந்த விதிகளை மீற முயன்றால் என்ன விளைவுகள் நேரும் என்பதைப் பத்திரிகைகளில் வெளியான பின்வரும் நிகழ்ச்சிகள் காட்டுகின்றன:

ambedkar 354“1922 வரை, புண்டியைச் சேர்ந்த பேரார் மாவட்டத்தில் வசிக்கும் டலாய் என்ற தீண்டாத சாதியினர் கோதுமை உண்ணக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்தது. 1922 பிப்ரவரி மாதம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஷகட்கரில் சமார் சாதிப் பெண் ஒருவர் காலில் வெள்ளி நகை அணிந்திருந்ததற்காகத் தண்டிக்கப்பட்டார். உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான் வெள்ளி நகை அணியலாம், கோதுமை உண்ணலாம் என்பது விதி என்று இதற்குக் காரணம் கூறப்பட்டது. தாழ்ந்த சாதி மக்கள் இவற்றைச் செய்யத் துணியக்கூடாது. இப்படிப்பட்ட பழங்கருத்துக்கள் மறைந்து போயிருக்கும் என்று நாம் இதுவரை நினைத்து வந்திருக்கிறோம்.”

மத்திய இந்தியாவில் உள்ள தீண்டாத சாதியினரான பலாய் மக்கள் சுத்தமான உடைகளையும் தங்க நகைகளையும் அணியத் துணிந்தபோது அவர்கள் எத்தகைய கொடுமைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளானார்கள் என்பதை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ 1928 ஜனவரி 4-ஆம் தேதி இதழில் வெளியான பின்வரும் செய்தி தெரிவிக்கிறது:

“(1927) மே மாதம் இந்தோர் மாவட்டம் கனாரியா, பிச்சோலி ஹப்சி, பிச்சோலிமர்தனா மற்றும் 15 கிராமங்களைச் சேர்ந்த உயர் சாதி இந்துக்கள், அதாவது கலோட்டாக்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் பாட்டீல்கள், பட்வாரிகள் உள்ளிட்ட பிராமணர்கள் ஆகியோர், தங்கள் கிராமங்களில் உள்ள பலாய் மக்கள் பின்வரும் விதிகளைப் பின்பற்றி நடக்கவில்லை என்றால் அங்கு வசிக்கமுடியாது என்று தெரிவித்தார்கள்:”

  • பலாய்கள் தங்கச் சரிகை போட்ட தலைப்பாகை அணியக்கூடாது.
  • அவரகள் வண்ணக்கரை போட்ட வேட்டி உடுத்தக்கூடாது.
  • இந்து வீட்டில் ஏற்படும் மரணம் பற்றி அவர்களின் உறவினர்களுக்கு – அவர்கள் எவ்வளவு தூரமான இடங்களில் வசித்தாலும் – செய்தி தெரிவிக்கவேண்டும்.
  • இந்துக்களின் திருமணங்களில் ஊர்வலத்திலும், திருமணத்தின் போதும் பலாய்கள் வாத்தியங்கள் வாசிக்கவேண்டும்.
  • இந்துப் பெண்களின் பிரசவ காலங்களில் பலாய் பெண்கள் உடனிருந்து பணிசெய்யவேண்டும்.
  • பலாய்கள் ஊதியம் கேட்காமல் சேவை செய்யவேண்டும்;

இந்து தாமாக மனம் வந்து கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளவேண்டும்

  • இந்த நிபந்தனைகளுக்கு பலாய்கள் இணங்கவில்லையென்றால் அவர்கள் கிராமங்களைவிட்டு வெளியேறிவிட வேண்டும்.

பலாய்கள் இந்த நிபந்தனைகளை ஏற்று நடக்க மறுத்தார்கள்; இந்துக்கள் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்தார்கள். பலாய்கள் கிராமக்கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது; அவர்கள் தங்கள் கால் நடைகளை மேயவிட அனுமதிக்கப்படவில்லை; இந்துக்களுக்குச் சொந்தமான நிலத்தின் வழியே பலாய்கள் செல்லக்கூடாது என்று தடுக்கப்பட்டனர்; இதனால் ஒரு பலாயின் வயலைச் சுற்றிலும் இந்துக்களின் வயல்கள் இருந்தால் அவர் தமது வயலுக்குப் போகமுடியாது. இந்துக்கள் தங்கள் கால்நடைகளை பலாய்களின் வயல்களில் மேயவிட்டார்கள்.

இந்தக் கொடுமைகளை எதிர்த்து பலாய்கள் இந்தோர் சமஸ்தான அரசுக்கு மனுச் செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை. கொடுமைகள் தொடர்ந்து நடந்தன. எனவே நூற்றுக்கணக்கான பலாய்கள் தங்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாக வசித்து வந்த கிராமங்களை விட்டு மனைவி, மக்களுடன் அருகிலுள்ள வேறு இடங்களுக்கு, அதாவது, தர், தேவாஸ், பாக்லி, போபால், குவாலியர் முதலான சமஸ்தானங்களுக்குச் சென்று குடியேறினார்கள்.

சில நாட்களுக்கு முன் இந்தோர் நகருக்கு வடக்கே 8 மைல் தூரத்தில் உள்ள ரேவ்தி கிராமத்தின் இந்துக்கள், பலாய்களுக்கெதிராக மற்ற கிராமங்களின் இந்துக்கள் உருவாக்கிய விதிகளைக் கொண்ட முத்திரைத்தாள் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுமாறு பலாய்களுக்கு உத்தரவிட்டார்கள். பலாய்கள் மறுத்துவிட்டார்கள். அவர்களில் சிலரை இந்துக்கள் அடித்ததாகக் கூறப்படுகிறது; ஒரு பலாயைக் கம்பத்தில் கட்டி வைத்து, ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால்தான் அவரை விடமுடியும் என்று கூறினார்கள். அவர் கையொப்பமிட்டபின் விடுவிக்கப்பட்டார்.

அடுத்த செய்தி 1928 ஜனவரி 21-ஆம் தேதி ‘ஆர்ய கெஜட்’ இதழில் வெளியானது:

“இதுவரை ஹரிஜனங்கள் கொடுமைப்படுத்தப்பட்டது பற்றிய செய்திகள் பெரும்பாலும் சென்னை மாகாணத்திலிருந்து வந்தன. ஆனால் சிம்லாமலையின் மகாராணா இவர்களை நடத்தும் விதம் காரணமாக இப்போது இம்மாதிரியான செய்திகளுக்கு அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. சிம்லா மாவட்டத்தில் ‘கால்லி’ என்ற ஒரு சாதியினர் வசிக்கிறார்கள். இவர்கள் நல்ல தோற்றம் கொண்டவர்களாகவும், கடுமையாக உழைப்பவர்களாகவும் உள்ளனர். இவர்களை அந்தப் பகுதியின் இந்துக்கள் தீண்டாதவர்களாகக் கருதுகிறார்கள். ஆனால் இந்து சமயத்துக்கு ஆட்சேபமான வேலைகள் எதையும் இவர்கள் செய்வதில்லை. இந்தச் சாதி மக்கள் உடல் வலிமையோடு நல்ல அறிவுத்திறனும் பெற்றுள்ளனர். சிம்லா மலையில் வசிப்பவர்கள் பாடும் பாடல்களில் பெரும்பாலானவை கால்லிகளால் இயற்றப்பட்டவை. இவர்கள் நாளெல்லாம் கடினமாக உழைப்பவர்களாகவும், பிராமணர்களை மிக அதிகமாக மதிப்பவர்களாகவும் இருந்தபோதிலும், இவர்கள் பிராமணர்களின் வீடுகளுக்கருகே நடந்துசெல்ல முடியாது. பஞ்சாபுக்குச் சென்று பணம் சம்பாதித்துத் தங்க மோதிரங்களும் காது வளையங்களும் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இவற்றைத் தங்கள் வீடுகலுக்குக் கொண்டு சென்ற போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அந்த நகைகள் சமஸ்தான அதிகாரிகளின் கைகளுக்குச் சென்ற பின்புதான் அவர்கள் விடிவிக்கப்பட்டார்கள்.”

 பின்வரும் ராமானந்த்ஜி 1926 ஜூன் மாதம் 23-ஆம் தேதி ‘பிரதாப்’ இதழில் வெளியாயிற்று:

 “சுவாமி ராமானந்த்ஜி சன்யாசி எழுதுகிறார்:”

 1926 மார்ச் 23-ஆம் தேதி மாலை ஒரு சமார் என்னிடம் வந்தார். அவர் ஜாட்களின் பிடியிலிருந்து சமீபத்தில்தான் தப்பி வந்திருந்தார். குர்கான் மாவட்டம் பரீதாபாத் அருகே கேரி என்ற கிராமத்தில் தமது சாதி மக்கள் படும் துன்பங்கள் பற்றி அவர் மிக உருக்கமாகக் கூறினார். இதைப் பற்றி நேரில் விசாரிப்பதற்கு மார்ச் 24-ஆம் தேதி காலையில் நான் குர்கான் சென்றேன். நான் கண்டறிந்த விவரங்கள் பின்வருமாறு:

”மார்ச் 5-ஆம் தேதி கோர்க்கி என்ற சமாரின் மகளுடைய திருமணம் நடைபெற்றதும் அவருடைய நிதி நிலைமை ஓரளவு இருந்ததால் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு உயர் சாதியினர் அளிப்பதைப் போன்ற விருந்துபசாரம் நடத்தினார். மேலும் தம் பெண்ணுக்கு அவர் மூன்று தங்க நகைகள் அளித்தார். இந்தச் செய்தி ஜாட் சாதியினரிடையே பரவி அதைப்பற்றி நிறைய விவாதங்களும் நடந்தன. மேல் சாதியினரைப் போலக் கீழ்ச் சாதியினர் நடந்து கொள்வது, மேல் சாதியினரை அவமதிப்பதாகும் என்று தீர்மானிக்கப்பட்டது. மார்ச் 21-ஆம் தேதி காலையில் இந்த விஷயத்தை விவாதிப்பதற்கு ஜாட்கள் பஞ்சாயத்துக் கூட்டினார்கள். அந்தச் சமயத்தில் பெரும்பாலும் பையன்களும் சிறுமிகளும் பெண்களும் அடங்கிய சமார் கூட்டம் ஒன்று தங்களுடைய தினசரி வேலைக்காக பரீதாபாதுக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. அவர்கள் கிராமத்துக்கு வெளியே தர்மசாலாவரை சென்றவுடன் ஜாட்கள் அவர்களைத் தாக்கினார்கள்.

அந்தக் கூட்டத்தில் இருந்த ஆண்களெல்லாம் பலமாக அடிக்கப்பட்டனர்; பெண்கள் செருப்புக்களால் அடிக்கப்பட்டனர். சிலருக்கு முதுகும் மற்றும் சிலருக்குக் கைகளும் ஒடிந்து போயின. அவர்கள் வேலை செய்வதற்கு வைத்திருந்த கருவிகளும் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த வழியாக வந்த ஒரு முஸ்லிமையும் ஜாட்கள் பிடித்து அவருடைய தங்கக் காது வளையங்களையும் 28 ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்தார்கள். மார்ச் 22-ஆம் தேதி ஜாட்கள் சமார்களின் வயல்களில் நுழைந்து நாசம் செய்தார்கள். சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பயிர்கள் நாசமடைந்தன. அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த நன்வா என்பவறையும் ஜாட்கள் அடித்தார்கள். மீண்டும் மார்ச் 22-ஆம் தேதி ஜாட்கலின் கூட்டம் ஒன்று மண்ணெண்ணெயில் தோய்த்துக் கொளுத்திய தீப்பந்தங்களைப் பிடித்துக்கொண்டு சமார்களின் வீடுகளுக்குத் தீவைக்கச் சென்றது; ஆனால் பின்பு திரும்பிச் சென்று விட்டது.

மார்ச் 23-ஆம் தேதி நள்ளிரவில் முன்பு குறிப்பிடப்பட்ட மணப்பெண்ணின் தாத்தாவுக்குச் சொந்தமான வீட்டுக்குத் தீவைக்கப்பட்டது. அந்த வீடு இப்போது சாம்பல் குவியலாகக் கிடக்கிறது. வீட்டில் செருப்புத் தைப்பதற்காக வைத்திருந்த 90 ரூபாய் மதிப்புள்ள 16 தோல்கள் எரிந்து போயின. ஜாட்கள் அந்த ஊரைச் சூழ்ந்துகொண்டு சமார் யாரையும் வெளியே போகவிடாமல் வைத்துள்ளனர். ஜாட்களுக்குப் பயந்துபோய் பனியாக்களும் சமார்களுக்கு எந்தப் பொருளையும் விற்க மறுக்கிறார்கள் மூன்று நாட்களாக சமார்களும் அவர்களுடைய கால்நடைகளும் பட்டினியாயிருக்கிறார்கள்.”

பின்வரும் சம்பவம் சமீபத்தில் நடந்தது. இது மலபாரில் நடந்தது. 1945 ஜூன் 5-ஆம் தேதி செருகன்னுவில் திரு. கே. கண்ணன், எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற முதலாவது சிரகல் தாலுகா ஹரிஜன மாநாட்டில் இயற்றப்பட்ட பின்வரும் தீர்மானம் இது பற்றிய விவரங்களைத் தெரிவிக்கிறது:

“மலபாரில் ஷெட்யூல் சாதி மக்கள் மீது இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரின் மனிதத்தன்மையற்ற ஒடுக்கு முறைச் செயல்கள் அதிகரித்து வருவதை அரசின் மற்றும் பொதுமக்களின் கவனத்துக்கு இந்த மாநாடு கொண்டுவருகிறது. குறிப்பாகப், பொன்னாணி வட்டம் நாட்டிகா உள்வட்டத்தில் மிகக் கொடுமையான ஒடுக்குமுறை சற்றும் கேள்விமுறை இல்லாமல் நடந்து வருகிறது. இதற்குக் காரணம் ஹரிஜனங்கள் தங்க நகைகள் அணியவும், சுத்தமான உடைகள் உடுத்தவும் குடை பிடித்துச் செல்லவும் முயல்வதாகும். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஹரிஜனத் திருமணக்குழு ஒன்று வழிமறித்துத் தாக்கப்பட்டது.

ஆண்களின் சட்டைகளும் பெண்களின் சேலைகளும் பலவந்தமாகப் பறிக்கப்பட்டன. 1945 மே 27-ஆம் தேதி வடன்பிள்ளியில் ஒரு ஹரிஜன மாணவர் கடுமையாக அடிக்கப்பட்டார். முற்போக்கான திய்யா இளைஞர்கள், திருவாளர்கள் சி.எஸ். கோபாலன், எம்.எஸ். சங்கரநாராயணன், பி.சி.ராமகிருஷ்ண வைத்தியர். ஆகியோர் தலைமையில் ஹரிஜனங்களுக்கு உதவும் முயற்சிகளுக்காக அவர்களை மாநாடு பாராட்டுகிறது. உள்ளூர் அதிகாரிகள், குறிப்பாகக் காவல் துறையினர் காட்டும் அலட்சியத்தையும், கொடுமைப்படுத்தப்படும் ஹரிஜனங்களுக்கு அவர்கள் உரிய சமயத்தில் பாதுகாப்பளிக்கத் தவறியதையும் மாநாடு வன்மையாகக் கண்டனம் செய்கிறது.

மேலே கூறப்பட்ட கொடுமைகள் நடந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட ஹரிஜனங்களுக்குக் காவல் துறையினரிடமிருந்து பாதுகாப்போ நீதியோ கிடைக்கவில்லை என்று மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது. இத்தகைய வழக்குகளில் சாட்சியம் அளிக்க முன்வந்த ஹரிஜனங்களின் இந்த நிலை இப்படியே விடப்பட்டால், மலபாரில் சாதித்தளைகளையும் பொருளாதாரச் சுரண்டலையும் உடைக்க முயலும் முற்போக்கான ஹரிஜனங்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இந்த நாட்டில் ஹரிஜனங்கள் ஒரு ஜனநாயக நாட்டின் சுதந்திரமான குடிமக்களாக, யாருடைய தொல்லைகளுக்கும் உள்ளாகாமல், மற்றவர்களால் கொடுமைக்கு உள்ளாக்கப்படும்போது நிர்வாகத்தால் உடனடியாகப் பாதுகாக்கப்பட்டு வாழ்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று இந்த மாநாடு இந்திய அரசுக்கும் மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கும் வேண்டுகோள் விடுக்கிறது.”

 X

தீண்டாதவர்களுக்குப் பொருள் வசதி இருந்தாலும் அவர்கள் உயர்வான உணவுகளை உண்ணக்கூடாது. தீண்டாதவர்கள் வாழ்க்கையில் தங்களுக்கு உள்ள நிலைமைக்கு மேலான வாழ்க்கை வாழ்வது குற்றம். 1928 பிப்ரவரி 26-ஆம் தேதி ‘பிரதாப்’ இதழில் பின்வரும் செய்தி வெளியாகியுள்ளது:

“ஜோத்புர் சமஸ்தானத்தில் சண்டயல் என்ற இடத்தில், ஹரிஜனங்கள் அல்வா சாப்பிடுவதற்குக்கூட உரிமை இல்லாதவர்கள் என்று நினைக்கும் மனிதர்களை இப்போதும் பார்க்கலாம். தீண்டாத சாதிகளில் ஒன்று சர்கரோ, சில நாட்களுக்கு முன் ஒரு திருமணத்தின் போது அல்வா தயாரிக்கப்பட்டது. இதற்கு வேண்டிய மைதா மாவு டாக்கர் சாகிபிடமிருந்து வாங்கப்பட்டது. திருமணவீட்டினர் சாப்பிடப்போன சமயத்தில் சண்டாவாலாவின் கன்வர் சாகிபிடம் இருந்து அவர்கள் அல்வா சாப்பிடக்கூடாது என்று உத்தரவு வந்தது. சில அடிவருடிகள் ஒரு சமரச ஏற்பாட்டைச் செய்தார்கள். கன்வர் சாகிபிற்கு ரூ.200 அளித்தால் அவர்கள் அல்வா சாப்பிட அனுமதி அளிக்கப்படும் என்பது இந்த ஏற்பாடு. இதைக் கேட்ட சர்கரோக்கள் கோபமடைந்தார்கள். அப்படிப் பணம் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார்கள்.”

 XI

கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியே திருமண ஊர்வலம் நடத்திச் செல்வது சாதி இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை. இந்த உரிமை உள்ள சமூகம் மதிப்புக்குரிய சமூகம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தீண்டாதவர்களுக்கு இத்தகைய உரிமை கிடையாது. ஆனால், அவர்கள் தங்களுடைய சமூக அந்தஸ்த்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன், முக்கிய தெருக்கள் வழியே திருமண ஊர்வலம் நடத்தும் உரிமை பெற முயன்று வந்துள்ளனர். இந்தக் கோரிக்கை குறித்து இந்துக்கள் நடந்துகொண்ட விதத்தைப் பின்வரும் சம்பவங்கள் காட்டுகின்றன.

 1927 ஜூலை ‘ஆதி ஹிந்து’ இதழிலிருந்து:

“பெங்களூர், 27 மே 1927: ஏழு பிராமணர்கள், ஒவ்வொருவரும் நூறு ரூபாய் அபராதம் கட்டவேண்டும் என்று முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். பிராமணர்கள் மட்டுமே வசிக்கும் மால்கோட் சாலை வழியாக தீண்டாத சாதியினரான பறையர்கள் நடத்திச் சென்ற ஊர்வலம் ஒன்றைத் தாக்கியதற்காக அவர்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.”

1931 அக்டோபர் 31-ஆம் தேதி ‘பிரதாப்’ இதழிலிருந்து:

“கட்வால் மாவட்டம் ஹர்கான் கிராமத்தில் தீண்டாதவர்களின் திருமண ஊர்வலம் ஒன்று வந்து கொண்டுருப்பதாகவும், மணமகன் பல்லக்கில் உட்கார்ந்திருப்பதாகவும் கேள்விப்பட்ட உயர் சாதி இந்துக்கள், கூட்டமாகச் சென்று, திருமண ஊர்வலத்தைச் சூழ்ந்து கொண்டு அவர்களைக் கடுமையாக அடித்தார்கள். கடுங்குளிரில் அவர்களைத் தடுத்து நிறுத்தி 24 மணி நேரம் உணவில்லாமல் வைத்தார்கள். காவல்துறையினர் வந்துதான் அவர்களைக் காப்பாற்றினார்கள்.”

 1931 நவம்பர் 3-ஆம் தேதி ‘சத்ய சம்வாத்’ (லாஹோர்) இதழிலிருந்து:

“திருமணக் குழு ஒன்று மணப்பெண்ணைப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு தில்லிக்கருகே சென்று கொண்டிருந்தது. உயர்சாதி இந்துக்கள், இது, தங்களை அவமதிப்பதாகும் என்று கருதினார்கள். அவர்கள் திருமணக் குழுவைத் தடுத்து நிறுத்தி இரண்டு நாட்கள் வரை உணவும் தண்ணீரும் இல்லாமல் வைத்தார்கள். கடைசியாகக் காவல்துறையினர் வந்து கொடுமைக்காரர்களை விரட்டியடித்துத் திருமணக் குழுவினரைக் காப்பாற்றினார்கள்.”

‘ஜீவன்’ என்ற இந்து பத்திரிகையில் 1938 ஜூனில் வெளியான செய்திகள்:

”சேவ்ரா கிராமத்தில், தங்களை காங்கிரஸ்காரர்கள் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் கோலாக்கல் (பூர்வ டாக்குர்கள்) ஆயுதம் இல்லாத ஜாடவ்களைத் தடிகளாலும் ஈட்டிகளாலும் இரக்கமில்லாமல் அடித்தார்கள். இவர்களில் ஐந்து பேர் கைகளும் நெஞ்சு எலும்பும் உடைந்து மருத்துவமனையில் கிடக்கிறார்கள். பன்சி என்பவருக்கு மண்டை எலும்பு உடைந்துபோய் இன்னமும் நினைவுதிரும்பாமலிருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணம், அந்தக் கிராமத்துக்கு வந்த திருமணக் குழு ஒன்றில் மணமகன் அலங்காரமான தலைப்பாகை அணிந்திருந்ததுதான். டாக்குர்கள் இதனால் கோபமடைந்து திருமணக் குழுவைத் தாக்க விரும்பினார்கள். ஆனால் குழுவினரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் தாக்குதல் நடத்தவில்லை.

அந்தச் சமயத்தில் ஜமீன் எல்லைக்குள் அவர்களை அவமானம் செய்ததோடு நிறுத்திக்கொண்டார்கள்.”

”ஆக்ரா மாவட்டம் பதேசந்த் வட்டம் டோரா கிராமத்தில் மோதி ராம் ஜாடவ் என்பவரின் வீட்டிற்கு ராம்புர் கிராமத்திலிருந்து திருமணக் குழு ஒன்று வந்தது. மணமகன் அலங்கார கிரீடம் ஒன்று அணிந்திருந்தார். திருமணக்குழுவினர் வாத்தியக்குழுவுடனும் வாணவேடிக்கையுடனும் வந்தார்கள். வாத்தியக்குழு இசையுடனும் வாணவேடிக்கையுடனும் திருமணக்குழு செல்வதைச் சாதி இந்துக்கள் ஆட்சேபித்தார்கள். மோதிராம் இதை எதிர்த்துத் தாங்களும் மற்றவர்களைப் போலவே நல்ல மனிதப் பிறவிகள் தான் என்று கூறினார். உடனே சாதி இந்துக்கள் குழுவையும் தாக்கினார்கள். மோதிராமின் தலைப்பாகையில் முடிந்து வைத்திருந்த ரூ 15-1-0 தொகையையும் எடுத்துக் கொண்டார்கள்.”

“அலிகர் மாவட்டம், சகினி காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த குர்வா கிராமத்தைச் சேர்ந்த பிரேம் சிங், கிர்வர் சிங் ஆகிய ஜாடவ்களின் வீட்டிற்குத் திருமணக் குழு ஒன்று சென்று கொண்டிருந்த போது சாதி இந்துக்கள் அதைத் தடுத்து நிறுத்தி, வாத்தியக்குழு இசையை நிறுத்தினால் தான் தொடர்ந்து செல்லலாம் என்று கூறினார்கள். இசையை நிறுத்தவில்லை என்றால் அவர்களைக் கொன்று விடப்போவதாகவும் பொருள்களைக் கொள்ளையடிக்கப் போவதாகவும் இந்துக்கள் அச்சுறுத்தினார்கள். திருமணக் குழுவினர் இசையை நிறுத்தமறுத்தார்கள். கோபமடைந்த இந்துக்கள் அவர்கள்மீது கற்களையும் கட்டிகளையும் வீசினார்கள்.”

 1945 மார்ச் 24-ஆம் தேதி ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ இதழில் பின்வரும் சம்பவம்பற்றிச் செய்தி வெளியாகியுள்ளது:

“லாண்ட்ஸ்டெளன் துணைக்கோட்டத்தில் உள்ள தனுரி கிராமத்தைச் சேர்ந்த ஷில்பகார் திருமணக் குழு ஒன்று மணமகனைப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு மால் தங்கு கிராமத்தில் உள்ள பெண்வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தது. மால் தங்குவின் பட்வாரியின் முகவர் என்று தம்மை அறிமுகம் செய்து கொண்ட ஒருவர், திருமணக்குழு சாதி இந்துக்களால் தொல்லைக் குள்ளாகாமலிருக்க அது ஒரு சுற்று வழியாகச் செல்லவேண்டும் என்று யோசனை சொன்னார்.

அதற்கிணங்க, திருமணக் குழு ஒரு காட்டு வழியில் சென்றது. அது ஒரு தனிமையான இடத்தை அடைந்தபோது அரு விசில் ஒலி கேட்டது. அதைத் தொடர்ந்து சுமார் 200 சாதி இந்துக்கல் அந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்கள் திருமணக் குழுவைத் தாக்கிப், பல்லக்கை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஷில்பகார் குழு இரண்டு நாட்களுக்குப் பின் மணப்பெண்ணின் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தது. சப்-டிவிஷனல் மாஜிஸ்ரேட் முன்னிலையில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் திருமணம் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக அந்தப் பட்வாரி தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.”

‘லாஹோர் சிவில் அண்ட் மிலிட்டரி கெஜட்’ 1945 ஜூன் 24-ஆம் தேதி இதழில் பின்வரும் செய்தியை வெளியிட்டுள்ளது:

“குவாலியர் சமஸ்தானத்தின் ஒரு கிராமத்தில் நேற்று ராஜபுத்திரர்களின் குழு ஒன்று கோடரிகள், தடிகள், கத்திகள் முதலான ஆயுதங்களுடன் சென்று ஹரிஜனங்களைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார், நான்கு பேர் கடுமையாகக் காயமடைந்தார்கள்.

குவாலியர் மகாராஜாவுக்கு வாரிசு பிறந்ததைக் கொண்டாடுவதற்கு ஹரிஜனங்கள் ஊர்வலம் நடத்தியதிலிருந்து அந்த கிராமத்தின் ராஜபுத்திரர்களுக்கும் ஹரிஜனங்களுக்கும் இடையில் பகைமை இருந்து வருகிறது. ஹரிஜனங்கள் இவ்வாறு கொண்டாட்டம் நடத்துவதற்கு உரிமை இல்லை என்று கூறி ராஜபுத்திரர்கள் அதை எதிர்த்தார்கள்.

சென்ற மாதம், ஹரிஜனங்களுக்குச் சம உரிமை அளிக்கும் பிரகடனம் ஒன்றை மகாராஜா வெளியிட்டார்.”

தீண்டாதவர்கள் இந்துக்களின் நடத்தை முறைகளைத் தாங்களும் பின்பற்றித் தங்களைப் பற்றிச் சிறிது பெருமைபட்டுக்கொள்வதற்குச் செய்யும் முயற்சிகளை இந்துக்கள் வன்முறை மூலம் எதிர்த்து வருகிறார்கள். இதற்குச் சில உதாரணங்கள் கீழே தரப்படுகின்றன. பின்வரும் செய்தி ‘பம்பாய் சமாசார்’ 1936 நவம்பர் 4-ஆம் தேதி இதழில் வெளியிடப்பட்டது:

“மலபாரில் உள்ள ஒத்தப்பாலம் என்ற இடத்தில் ஈழவ சாதியைச் சேர்ந்த சிவராமன் என்ற 17 வயது இளைஞர், சாதி இந்து ஒருவரின் கடைக்குச் சென்று உப்பு வேண்டும் என்று கேட்டார். அவர் ‘உப்பு’ என்ற மலையாள வார்த்தையைப் பயன்படுத்தினார் மலபாரில் உள்ள வழக்கப்படி ‘உப்பு’ என்ற சொல்லைச் சாதி இந்துக்கள்தான் பயன்படுத்தலாம். அந்த இளைஞர் ஹரிஜன் என்பதால் அவர் ‘புளிச்சாட்டன்’ வேண்டும் என்றுதான் கேட்டிருக்கவேண்டும். இதனால் கோபமடைந்த உயர் சாதிக் கடைக்காரர், சிவராமனை பலமாக அடித்ததால் அவர் இறந்துபோனார்.”

பின்வரும் உதாரணங்கள் ‘சமதா’ இதழிலிருந்து தரப்படுகின்றன:

  • புனா மாவட்டம் காத்தி என்ற இடத்தில் தீண்டாதவர்கள் ‘ராம் ராம்’ என்றும் ‘நமஸ்கார்’ என்றும் சொல்லத் தொடங்கியிருப்பதால் உயர்சாதி மக்கள் அவர்களைத் துன்புறுத்துகிறார்கள். வணக்கம் தெரிவிப்பதற்கான இந்தச் சொற்களைப் பயன்படுத்தும் உரிமை உயர்சாதியினருக்குத்தான் உண்டு; மாஹர் முதலான சாதியினர் ‘ஜோஹர்’ என்று அல்லது ‘பாயா லாகு’ (தங்கள் பாதங்களைத் தொடுகிறேன்) என்றுதான் சொல்லவேண்டும்.
  • புனா மாவட்டம் தானூ என்ற இடத்தில் தீண்டாதவர்கள் ‘தீண்டத்தக்க இந்து மக்களைப் போல’ நடந்துகொள்ள முயன்றார்கள். வரம்பு மீறிய இந்தச் செயலின் விளைவாக அவர்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டியதாயிற்று.
  • ஷோலாப்புர் மாவட்டம் வலப்புர் என்ற இடத்தில் மாஹர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் தீண்டத்தக்கவர்களை ‘சாஹப்’ என்று அழைக்கவும் ‘பாயா லாகு’ என்று கூறி வணக்கம் தெரிவிக்கவும் மறுக்கத் துணிந்ததே இதற்குக் காரணம்.
  • ஷோலாப்புர் மாவட்டம் ஜாம்பாதில் தீண்டாதவர்கள் தங்களுடைய எஜமானர்களான தீண்டத்தக்கவர்களின் உல்லாசத்துக்காக ’நாச்’ மற்றும் ‘தமாஷா’ நிகழ்ந்த மறுத்துவிட்டார்கள். இதன் காரணமாகத் தீண்டாதவர்கள் அடிக்கப்பட்டார்க்ள்; அவர்களுடைய குடிசைகள் எரித்தும் இடித்தும் நாசமாக்கப்பட்டன. அந்த மக்கள் கிராமத்தின் எல்லைக்கு அப்பால் விரட்டியடிக்கப்பட்டார்கள்.
  • புனா மாவட்டம் பாவ்டாவில் தீண்டாதவர்கள் சிலர் தங்கள் சாதி மக்களிடம் உயர் சாதி மக்கள் உண்டுவிட்டுப் போடும் மிச்சங்களையோ, இறந்த மிருகங்களையோ உண்ணக்கூடாது என்றும், அசுத்தமான வேலைகளைச் செய்ய மறுக்கவேண்டும் என்றும் எடுத்துக் கூறினார்கள். கிராமத்தின் முதியவர்கள் புதிய கருத்துக்களைக் கூறிய அந்த மாஹர்களிடம், அவர்கள் எப்போதும் உண்டுவந்துள்ளபடியே உண்பதும், செய்துவந்த வேலைகளைச் செய்வதும் அவர்களின் ‘தர்மம்’ என்று கூறினார்கள். இந்தப் புராதனமான, என்றுமுள்ள ‘தர்மத்தை’ப் பின்பற்றாத மாஹர்களை ஊர் மக்கள் அடித்து, ஊரை விட்டு வெளியேற்றிவிடுவதாக அச்சுறுத்தினார்கள்.

 XII

தீண்டாதவர்கள் இந்து சமுதாயத்திற்குச் சேவை செய்வதற்காகவே பிறந்திருப்பதுபோல இந்துக்கள் அவர்களை நடத்துகிறார்க்ள். சேவை செய்வது தீண்டாதவர்களின் கடமை ஆதலால், இந்துக்கள் எப்போது கூப்பிட்டாலும் அவர்கள் ஓடிவந்து பணிசெய்ய மறுக்கக்கூடாது. கிராமத்தின் இந்துக்கள்; தாங்கள் தீண்டாதவர்களின் உழைப்பைப் பெற எப்போது வேண்டுமானாலும் கட்டளையிடலாம் என்று நம்புகிறார்கள். இந்த முறைமைக்கு ‘பேகார்’ அல்லது கட்டாய உழைப்பு என்று பெயர். தீண்டாதவர்கள் இந்த முறைமைக்குப் பணிந்து நடக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்பதைக் காட்டுவதற்குச் சில உதாரணங்களைக் குறிப்பிடலாம்.

 1938 டிசம்பர் ‘ஜீவன்’ இதழில் பின்வரும் நிகழ்ச்சிகள் பற்றி செய்தி வெளியிடப்பட்டுள்ளது:

“1938 நவம்பர் 29-ஆம் தேதி மத்ரா மாவட்டம் கோஹனா கிராமத்தின் ஜாடவ்கள் ‘பேகார்’ என்ற கட்டாய உழைப்புக்கு உட்பட மறுத்ததற்காக ஜாட்களும் பிராமணர்களும் அவர்களைக் கடுமையாகச் சித்திரவதை செய்தார்கள்.

கிராமத்தின் டாக்குர்களும் பிராமணர்களும் ஜாடவ்களிடம் கட்டாய வேலை வாங்குவதும் அவர்களைத் தொல்லைப் படுத்துவதும் வழக்கமாயிருந்தது. ஜாடவ்கள் கட்டாய இலவச வேலை செய்வதில்லை என்றும், ஊதியம் கொடுக்கப்படும் வேலைகளை மட்டுமே செய்வதென்றும் தீர்மானித்தார்கள். சமீபத்தில் அந்தக் கிராமத்தில் ஒரு மாடு இறந்தபோது, அதைத் தூக்கிச் செல்ல ஜாடவ்களைக் கட்டாயப்ப்டுத்த டாக்குர்களும் மற்ற சாதி இந்துக்களும் முயன்றார்கள்.

ஆனால், ஜாடவ்கள் அந்த வேலைக்குத் தங்களுக்கு ஊதியம் கொடுத்தால்த்தான் செய்ய முடியும் என்றார்கள். இதனால் சாதி இந்துக்கள் மிகவும் கோபமடைந்து ஒரு துப்புரவுத் தொழிலாளியைக் கூப்பிட்டு ஜாடவ்களின் கிணற்றுகளில் மலத்தை அள்ளிப் போடச் சொன்னார்கள். அந்தத் துப்புரவுத் தொழிலாளி கிணற்றில் மலத்தைப் போடவிடாமல் ஜாடவ்கள் தடுத்தபோது அவர் ஜாட்களையும் டாக்குர்களையும் பிராமணர்களையும் அழைத்தார். அவர்கள் ஜாடவ்களைத் தடிகளால் அடித்துத் தாக்கினார்கள்; அவர்களின் வீடுகளுக்கும் தீ வைத்தார்கள். ஆறு வீடுகள் எரிந்து சாம்பலாயின. 18 ஜாடவ்கள் கடுமையாகக் காயமடைந்தார்கள். அவர்களுடைய வீடுகளிலிருந்து ஏராளமான பொருள்களை ரௌடிகள் எடுத்துச் சென்றார்கள்.”

பத்திரிகையின் 1939 பிப்ரவரி இதழில் வெளியான செய்தி:

“ஆக்ரா மாவட்டம், கிர்வாலி வட்டம், அபய்புரா கிராமத்தின் ஜாட்கள் ஷெட்யூல் சாதி மக்களிடம் கட்டாய வேலை வாங்குவதும், வேலைக்கு ஊதியம் கேட்டால் அவர்களை அடிப்பதும் வழக்கம். மூன்று மாதங்களுக்கு முன் சிக்கி ஜாட்கள் சுக்ராம், கனஷ்யாம், ஹும்கா ஆகிய ஜாடவ்களிடம் கட்டாய வேலை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஊதியம் எதுவும் கொடுக்கவில்லை. இத்தகைய கொடுமைகளால் மனம் வெறுத்துப்போய் அவர்கள் தங்கள் கிராமங்களைவிட்டு வெளியேறி வேறு கிராமங்களில் தங்கள் உறவினர்களுடன் வசித்தார்கள். அப்போது ஜாட்கள் அவர்களின் வீடுகளிலிருந்து பாத்திரங்களையும் மற்ற வீட்டுப் பொருள்களையும் எடுத்துச் சென்று ஒளித்து வைத்துவிட்டார்கள்.”

‘சாவதான்’ பத்திரிகையின் 1945 ஜூன் 3-ஆம் தேதி இதழில் பின்வரும் சம்பவம் பற்றிச் செய்தி வெளியிடப்பட்டது:

“மேஹர்ஜி கேரி என்ற ஷெட்யூல் சாதிப் பெண், நகர மாஜிஸ்ட்ரேட் திரு. மஹ்பூப் ஆலமின் நீதிமன்றத்தில், காபி காவல் நிலையத்தைச் சேர்ந்த பிரமா சிங், சுலேமான், அப்டாப் ஆகிய காவலர்கள்மீது 376, 341 மற்றும் 354-ஏ பிரிவுகளின் கீழ் புகார் பதிவு செய்திருக்கிறார். 1945 மே 2-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு இந்த மூன்று காவலர்களும் மற்றும் சிலரும் அவரது வீட்டைச் சோதனையிட்டு, அவரைக் காவல் நிலையத்திற்குக்கூட்டிச் சென்று இரவு முழுவதும் அங்கே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாலையில் இந்த மூன்று பேரும் அந்தப் பெண்ணை ஒரு சிறிய அறைக்குக் கூட்டிச் சென்று, அவரை மானபங்கம் செய்தார்கள். பிறகு அவரை மற்றொரு அறைக்குக் கூட்டிச் சென்று அவருடைய பெண் குறியில் கரியையும் காகிதத்தையும் வைத்து அடைத்தார்கள். அவருடைய வாயில் தங்களுடைய ஆண்குறிகளை வைத்தார்கள். அவருடைய ஆடைகள் கிழிந்துபோய் இரத்தத்தில் நனைந்து போயின. மறுநாள் முழுவதும் அவருடைய தாயார் கட்டாய வேலை செய்யவைக்கப்பட்டார். அதன்பின் இரவு 10 மணிக்கு இருவரும் விடிவிக்கப்பட்டார்கள்.”

மகாராஜியின் கணவரின் தம்பி மனைவியான முரலாவும் இதே போன்ற புகார் பதிவு செய்திருக்கிறார். அதே காவலர்கள் அதே இரவில் தம்மையும் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றதாகவும் பின்பு வீட்டில் திரும்பக் கொண்டுவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். வழியில், குமார் தோலா அருகே மதாரி தேலி அவரைப் பிடித்து ஓர் இடிந்த வீட்டிற்குக் கூட்டிச் சென்று மானபங்கம் செய்தார். வழக்கறிஞர்கள் திரு. முன்னாலால், திரு. பூஷன், திரு. ராம் பரோஸ் ஆகியோர் இவருடைய வழக்கில் ஆஜராகிறார்கள்.

‘இந்துஸ்தான் டைம்ஸ்’ 1945 ஏப்ரல் 15-ஆம் தேதி இதழில் பின்வரும் செய்தி வெளியாகியுள்ளது:

“அம்பாலா மாவட்டம் துக்கேரி கிராமத்தில் கட்டாய வேலை செய்ய மறுத்ததற்காகப் பல ஹரிஜனங்களை ராஜபுத்திரர்களின் குழு ஒன்று சமீபத்தில் தாக்கியது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஆகிய இரண்டு ஹரிஜனங்கள் கொல்லப்பட்டார்கள். ஹரிஜனங்களுக்குச் சொந்தமான பல வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் பற்றி விசாரிக்கும்படி காவல்துறை ஆணையருக்கும் துணைத் தலைமை ஆய்வாளருக்கும் தந்திகள் அனுப்பப்பட்டுள்ளன.”

 இந்த உதாரணங்களிலிருந்து, தீண்டாதவர்களை ஒடுக்கிவைப்பதற்கும் நிறுவப்பட்ட முறைமையைப் பாதுகாப்பதற்கும் இந்துக்கள் வன்முறையைப் பயன்படுத்தவும், கொலைகூடச் செய்யவும் தயங்கமாட்டார்கள் என்பதை யாரும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

திரு. லாஜ்பத் ராய் ‘மகிழ்ச்சியற்ற இந்தியா’ என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். மிஸ் மேயோ ‘மதர் இந்தியா’ என்ற தம்முடைய புத்தகத்தில் கூறியுள்ள குற்றச் சாட்டுகளை அவர் தமது புத்தகத்தில் மறத்துக் கூறியிருக்கிறார். அமெரிக்காவில் நீக்ரோக்கள் அடித்துக் கொல்லப்படுவது பற்றியும் ‘கு க்ளக்ஸ் க்ளான்’ அமைப்பின் உறுப்பினர்கள் நீக்ரோக்கள் மீது இழைக்கும் கொடுமைகள் பற்றியும் அவர் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கிவிட்டுப் பின்வரும் வினாவை எழுப்புகிறார்:

“கேட்க வேண்டிய பொருத்தமான கேள்வி இதுதான்: பிராமணர்கள் பறையர்களிடம் காட்டும் நியாயமற்ற கொடுமையான மனப்பான்மை, அமெரிக்காவின் குக்ள்க்ஸ் க்ளான் உறுப்பினர்கள் நீக்ரோக்களிடம் காட்டும் மனப்பான்மையைவிட அதிக நியாயமற்றதாகவும் அதிக கொடுமையானதாகவும் உள்ளதா?”

“இந்தியாவின் சாதி கொடுமைகள், வெள்ளையர்கள் வெள்ளையரல்லாதவர்களுக்குச் செய்த கொடுமைகளுடன் ஒப்பிடும்போது எம்மாத்திரம்?”

லாலா லாஜ்பத் ராய் கவனமாக ஆராய்ந்திருந்தால், தீண்டாதவர்களுக்கு எதிராக இந்துக்கள் செய்யும் கொடுமைகள், நீக்ரோக்களுக்கெதிராக அமெரிக்கர்கள் செய்யும் கொடுமைகளைவிடக் குறைந்தவை அல்ல என்பதைக் கண்டிருக்கலாம். நீக்ரோக்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளைப் போல இந்தக் கொடுமைகள் பற்றி உலகுக்கு அதிகமாகத் தெரியவில்லை என்றால் இந்தக் கொடுமைகள் இல்லை என்று பொருளல்ல. இந்துக்களின் வெட்ககரமான செயல்களை மறைப்பதற்கு ஒவ்வொரு இந்துவும் தம்மால் முடிந்ததனைத்தையும் செய்வதால் தான், இந்தக் கொடுமைகள் பற்றித் தெரியாமல் உள்ளது.

சிலர் நினைக்கலாம் – நிறுவப்பட்ட முறைமை பற்றியும், அதன்கீழ் செய்யப்பட்ட விதிகள் பற்றியும் இங்குத் தரப்பட்டுள்ள விவரங்கள் கடந்துபோய்விட்ட பண்டைக்காலத்தைச் சேர்ந்தவை என்று. ஆனால் உண்மையில், நிறுவப்பட்ட முறைமை இன்றும் நடப்பில் உள்ளது; அதன்கீழ் செய்யப்பட்ட விதிகள், அன்று போலவே இன்றும் செயல்பாட்டில் உள்ளன. தீண்டாதவர்களின் நிலை பற்றி ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான பின்வரும் இரண்டு அறிக்கைகள் இதைத் தெளிவாக்குகின்றன. முதல் அறிக்கையை உதய்பூரில் உள்ள வித்யா பவன் என்ற பள்ளியின் தலைமையாசிரியரான கேசரிலால்ஜி போர்டியா எழுதியிருக்கிறார். அது பின்வருமாறு:

“மேவாரில் வசிக்கும் ஹரிஜனங்கள் பற்பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் கோவில்களில் நுழையமுடியாது; பொதுக் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்கமுடியாது. திருவிழாக்களிலும் ஊர்வலங்களிலும் அவர்கள் சாதி இந்துக்களுடன் சேரமுடியாது. அவர்கள் தங்களுடைய தேரோட்டத்தையும் ‘டோல்’ ஊர்வலத்தையும் வேறு பாதைகளிலும் வேறு நாட்களிலுமே நடத்தவேண்டும். அவர்கள் கிராமத்தின் வழியே சவாரி செய்து போகமுடியாது.”

அவர்கள் வெள்ளி நகைகளை அணிவதைக்கூட சாதி இந்துக்கள் பொறுப்பதில்லை என்றால் தங்க நகைகளைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. இதனால் அவர்கள் ஈயத்தாலும் பித்தளையாலும் செய்த பொருள்களைப் பயன்படுத்துவதோடு திருப்தியடைய வேண்டியது தான். அவர்களின் திருமண விருந்துகளில் வெண்ணெய் அல்லது வெல்லம் பயன்படுத்தப்படுவதையும் காலங்காலமாக உள்ள வழக்கம் தடைசெய்கிறது.

“பள்ளிக்கூடங்களிலும் மற்ற பொது இடங்களிலும் ஹரிஜனச் சிருவர்கள் சாதி இந்துக்களின் குழந்தைகளுடன் சேர்ந்து உட்காரமுடியாது. பள்ளி ஆய்வாளர் வரும் நாட்களில் அவருக்குச் சங்கடத்தைத் தவிர்ப்பதற்காக அவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்று கூறப்படுகிறது.

சமஸ்தான அரசுக்கு இதுபற்றி மனுக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடுமைகளை அரசு உறுதியாகக் கண்டனம் செய்தால் தீண்டாமையை எதிர்த்துப் போராடிவரும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் கைகளை அது வலுப்படுத்தும்.”

இரண்டாவது அறிக்கையை ஹரிஜன சேவக் சங்கத்தின் தலைவர் வெளியிட்டுள்ளார். மேவார் சமஸ்தானத்தில் ஹரிஜனங்களின் நிலைமையை அவர் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:

“மேவார் சமஸ்தானத்தில் ஹரிஜனங்கள் அனுபவிக்கும் அல்லல்களைப் பற்றி மேவார் ஹரிஜன சேவக் சங்கம் சமஸ்தான அரசுக்கு ஒரு மனு சமர்ப்பித்துள்ளது. சாதி இந்துக்களின் பழமை மனப்பான்மையினாலும் பாரபட்சப் போக்கினாலும் ஹரிஜனங்களின் சிவில் உரிமைகள் எவ்வாறு பலவகைகளிலும் பாதிக்கப்படுகின்றன என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.”

இந்த சமஸ்தானத்தில் இன்னமும் காணப்படும் நியாயமற்ற நடைமுறைகள் சிலவற்றைக் கீழே குறிப்பிடுகிறேன். இவற்றை ஒழிப்பதற்கு சமஸ்தான அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. இவை வருமாறு:

  • ஹரிஜனங்கள் தாங்கள் விரும்பும் உடையை அணிந்து கொள்வதற்குச் சுதந்திரம் இல்லை. காலங்காலமாக இருந்து வரும் வழக்கப்படிதான் உடை அணியவேண்டும். ஒருவரின் தனிப்பட்ட விருப்பப்படி உடைகளைத் தெரிந்தெடுக்க இடமே இல்லை.
  • திருமண விருந்துகளில் என்ன உணவுகளை வழங்குவதென்று அவர்கள் தெரிந்தெடுக்க முடியாது. அவர்கள் பணம் செலவிட்டால் கூட விலை உயர்ந்த பொருள்களைப் பயன்படுத்த முடியாது.
  • அவர்கள் கிராமத்தில் குதிரையில் அமர்ந்து போகமுடியாது.
  • பொது வாகனங்களில் அவர்களுக்கு இடம் அளிக்கப்படுவதில்லை.
  • சமய விழாக்களில் அவர்கள் தங்களுடைய சுவாமி ஊர்வலங்களை குறிப்பிட்ட பாதையில் மட்டுமே நடத்தவேண்டும்.
  • அவர்கள் கோவில்களுக்கும் கிணறுகளுக்கும் செல்ல அனுமதியில்லை. அறிக்கை மேலும் கூறுகிறது:

“மூன்றாண்டுகளுக்கு முன் டாக்குர் பாபாவுடன் நான் சமஸ்தானம் எங்கும் பயணம் செய்து நான் கண்ட நிலைமைகளை அரசுக்கும் மக்களுக்கும் எடுத்துக்கூறி சீர்திருத்தங்கள் செய்யக் கேட்டுக் கொண்டேன்.”

 ஆண்டுகள் சில சென்றபின் இப்போதும் நிலைமையில் மாற்றம் ஏதும் இல்லை. நிலைமைகள் அநேகமாக அப்படியே நீடிக்கின்றன.

“காலம் சென்றுகொண்டேயிருந்தாலும், நம்மிடம் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்பது உள்ளம் உடையச்செய்கிறது. காலங்காலமாக இருந்து வரும் வழக்கங்களும் பாரபட்ச நடத்தைகளும் மாற்றமின்றி நீடிக்கின்றன. நாம் செய்யும் கொடுமைகளையும் அநீதிகளையும் நாம் காணாமல் நம் கண்களை மறைக்கும் விபரீத மனப்பான்மையே, இவற்றின் விளைவாக நமக்கு ஏற்பட்டுள்ள கணக்கிடமுடியாத தீங்கையும் நாம் உணரமுடியாமல் செய்கிறது. சாதாரண மனிதர்களின் அறியாமையின் விளைவான பாரபட்ச உணர்வுகளை அசைக்க முடியவில்லை என்றாலும் இருபதாம் நூற்றாண்டின் அறிவு விளக்கம் பெற்ற அரசுகளேனும் தங்கள் கடமைகளை உணரவேண்டும்.”

இந்த அறிக்கைகளின் தேதி குறிப்பிடத்தககது. இவை 1945 – இல் வெளியிடப்பட்டுள்ளன. இந்துக்களின் நிறுவப்பட்ட முறைமை புராதனமான பழங்காலத்துக்கே உரியது என்று யாரும் கூறமுடியாது. இங்குக் கூறப்பட்ட விவரங்கள் இந்திய சமஸ்தானங்களில் உள்ள நிலைமைகளைக் குறிப்பிடுகின்றன என்பதால், பிரிட்டிஷ் இந்தியாவில் இந்த நிறுவப்பட்ட முறைமை மறைந்து விட்டதாகப் பொருள்கொள்ளக் கூடாது. இதே நிறுவப்பட்ட முறைமை பிரிட்டிஷ் இந்தியாவிலும் நடப்பில் இருப்பதைக் காட்டும் சான்றுகள் பின்வரும் அத்தியாயங்கள் தரப்படும்.

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ 1950 ஆகஸ்ட் 31-ஆம் தேதி இதழில் பின்வரும் செய்தி வெளியாகியுள்ளது:

“அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு ஒன்றில் வெளிப்பட்ட பின்வரும் விவரங்கள் கிராமப்புறங்களில் தாழ்ந்த சாதியினரின் சமூக, பொருளாதார நிலைமைகளை எடுத்துக்காட்டுகின்றன:”

“ஏட்டா மாவட்டம் சராஸ் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்ஜி என்ற சலவைத் தொழிலாளி, சென்ற உலகப்போரில் ராணுவத்தில் வேலையில் சேர்ந்து நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கிராமத்துக்கு வெளியே இருந்தார். ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டபின் ஊருக்குத் திரும்பி வந்தார். அவர் துணி வெளுக்கும் வேலையை நிறுத்திவிட்டார். தம்முடைய ராணுவச் சீருடையை அணிந்து கொண்டு கிராமத்தில் செல்வது அவருடைய வழக்கமாயிருந்தது. அவருடைய இந்தச் செயலும், கிராமத்தின் ஜமீந்தாரன சராஸ் ராஜாவுக்குக் கூடத் துணி வெளுக்க அவர் மறுத்ததும் கிராமத்தினருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் சிரஞ்ஜியை ராஜாவின் இல்லத்திற்குக் கூட்டிச் சென்று அடித்தார்கள். அவருடைய தாயாரும், தாயாரின் சகோதரியும் குறுக்கிடச் சென்றபோது அவர்களும் தாக்கப்பட்டார்கள்.”

“தாக்கியவர்கள் சிரஞ்ஜியை ராம் சிங் என்பவரின் காவலில் வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். அவர் தனி ஆளாக இருப்பதைப் பார்த்து சிரஞ்ஜி அவரை அறைந்துவிட்டு ஓடிப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. ராம் சிங்கும், ராஜாவின் மற்ற வேலைக்காரர்களும் அவரைத் துரத்திக் கொண்டு அவருடைய வீட்டிற்குச் சென்றார்கள். அவர் வீட்டுக் கதவைத் திறக்க மறுத்ததால் அவர்கள் வீட்டுக்குத் தீவைத்தார்கள். வேறு பல வீடுகளும் கூடத் தீயில் எரிந்துபோயின.”

சிரஞ்ஜி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவலர்கள் அவர் கூறியதை நம்ப மறுத்துப், பொய்ப் புகார் கொடுத்தற்காக அவர் மீது வழக்குப் போட விரும்பினார்கள். பின்பு அவர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் அளித்த தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

பின்வரும் செய்தி ‘இந்தியன் நியூஸ் கிரானிக்கிள்’ 1950 ஆகஸ்ட் 31-ஆம் தேதி இதழில் வெளியிடப்பட்டது:

‘பெப்சு’ வில் ஹரிஜனங்கள் மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள்: தாழ்த்தப்பட்ட வகுப்புகள் லீக், அரசுக்கு மனு, படியாலா, ஆகஸ்ட் 1950: “பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் காரணமில்லாமல் அடிக்கப்படுதல், அவர்களின் பெண்களுக்கு மனிதத் தன்மையற்ற அவமதிப்புகள் இழைக்கப்படுதல், ஹரிஜனங்களை நிலங்களிலிருந்து வரைமுறையின்றி வெளியேற்றுதல், ஹரிஜனங்களையும் அவர்களின் கால்நடைகளையும் நாட்கணக்கில் வீடுகளிலேயே அடைத்து வைத்தல் – இவையெல்லாம் ஹரிஜனங்கள்படும் அல்லல்களின் அலைகளாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன.” ‘பெப்சு’ மாகாண தாழ்த்தப்பட்ட வகுப்புகள் லீக் மாநில அரசுக்கு அளித்துள்ள ஒரு மனுவில் இவ்வாறு கூறியுள்ளது.

’பெப்சு’ வில் காவல் துறையினரின் தீவிர நடவடிக்கைகள் காரணமாகப் பொதுவாகக் குற்றங்கள் குறைந்து வருகின்றன. ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு சமூக விரோத சக்திகளிடமிருந்து பாதுகாப்புக் கிடைக்கவில்லை. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிற்பட்ட வகுப்பு மக்கள், தாங்கள் அன்றாடம் படும் அல்லல்கள் பற்றிச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறி அவர்களின் பாதுகாப்பைப் பெற முடியாதவர்களாக உள்ளனர். எனவே அவர்கள் தங்களுடைய துன்பங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த நிலை அவர்களைக் கொடுமைப்படுத்துவோருக்கு ஊக்கமளித்து மேலும் அத்தகைய செயல்களைச் செய்யத்தூண்டுகிறாது,” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஹரிஜனங்களுக்கு எத்தகைய மனிதத்தன்மையற்ற கொடுமை இழைக்கப்படுகிறது என்பதைக் காட்டுவதற்கு ஒரு சம்பவத்தை மாகாணத் தாழ்த்தப்பட்ட வகுப்புகள் லீக் எடுத்துக்காட்டியுள்ளது. பெர்னாலா மாவட்டத்தில் ‘குடு’ என்ற கிராமத்தில் சாந்த் சிங் என்ற ஹரிஜன் உயர்சாதி ஜமீந்தாருக்குச் சொந்தமான கிணற்றில் தண்ணீர் குடித்ததற்காக அவரது முகத்தில் கரிபூசி, கழுதைமேல் ஊர்வலம் விட்டார்கள். “சுதந்திர இந்தியாவின் மாறிய சூழ்நிலையிலும் ‘பெப்சு’ வில் உள்ள ஷெட்யூல் சாதி மக்கள் உயர்சாதியினரால் நடத்தப்படும் எல்லையற்ற ஒடுக்குமுறைச் செயல்களுக்கு ஒவ்வொரு நாளும் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள்.”

மாநிலத்தில், மாவட்ட மற்றும் மத்திய சிறப்புக் கமிஷன்களை அமைக்க வேண்டும் என்றும் மாகாணத் தாழ்த்தப்பட்ட வகுப்புகள் லீக் யோசனை கூறியுள்ளது. ஹரிஜனங்கள் கூறும் புகார்களின் பேரில் அந்த இடத்திலேயே நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு உதவியளிப்பதற்கு இந்தக் கமிஷன்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது.

இறுதியாக, இந்த விஷயத்தில் அகில இந்திய அளவில் சட்டம் இயற்றப்படும் வரை, இப்போது நிலைமை மேலும் சீர்கெடாமல் தடுப்பதற்கு, மாநில அரசு தற்காலிகமாக கிராமப் பொதுவசதிகளில் ஹரிஜனங்களுக்குச் சம உரிமை அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று லீக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

Pin It