உறவுமுறை என்பதையும், அதில் என்ன தொக்கியுள்ளது என்பதையும் பின்வரும் வார்த்தைகளில் பேராசிரியர் ராபர்ட்சன் சுமித் விவரிக்கிறார் : “ஓர் உறவுமுறை குழு என்பது வாழ்வில் ஒன்றாகப் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிற நபர்களின் குழுவாகும். இதை இயற்பியல் ஒற்றுமை எனலாம். அவர்கள் ஒரே பொதுவான வாழ்க்கையின் பகுதிகளாகக் கருதப்படலாம். உறவுமுறைக் குழுவின் உறுப்பினர்கள், ஒன்றாக வாழக்கூடிய ஒருவராகவே தங்களைக் காண்கின்றனர். ரத்தம், சதை, எலும்புகளைக் கொண்ட ஓர் உயிருள்ள மனிதத் திரளாகவே கருதுகின்றனர். இதில் அனைத்து உறுப்பினர்களையும் பாதிக்காமல் எந்த உறுப்பினரையும் தொட முடியாது.''

இந்த விஷயத்தை தனிநபர் என்ற நிலையிலிருந்தும், அதைப் போன்றே குழுவின் கண்ணோட்டம் என்ற நிலையிலிருந்தும் காண முடியும். குழுவின் கண்ணோட்டம் என்ற நிலையிலிருந்து காணும்பொழுது, உறவுமுறை குழு என்பது ஒருவரை வெறும் தனிநபராகப் பார்க்காமல் – அவர் முதலாவதாகவும், முதன்மையாகவும் ஒரு குழுவின் உறுப்பினர் என்றே உணரப்படுகிறது. தனிநபர் நிலையிலிருந்து காணும்பொழுது, அந்தக் குழுவுடன் அவருக்குள்ள உறவால் கிடைக்கும் நன்மையானது, ஒரு குடும்பத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்த உறுப்பினருக்கு என்னென்ன நன்மைகள் கிட்டுகின்றனவோ அவற்றைவிடக் குறையாத, அவற்றிலிருந்து வேறுபடாத அளவுக்கு குழுவிடமிருந்தும் கிடைக்கின்றன. குடும்ப வாழ்க்கையானது, பெற்றோருடைய பாசம் மற்றும் பரிவினால் குணாம்சப்படுத்தப்படுகிறது.

சமுதாயம் என்பதிலிருந்து சமூகம் என்பதைத் தனித்து வைத்துப் பார்த்தால், அது ஒரு விரிவடைந்த குடும்பமாகவே இருக்கும். அவ்வாறான நிலையில், ஒரு குடும்பத்தில் காணப்படும் அனைத்து நல்ல குணங்களையும் கொண்டதாகவே அந்த சமூகக் குழு குணாம்சப்படுத்தப்படும். ஒரு சமூகக் குழுவினுள் உறவுமுறை காரணமாக உறவினர்கள் என்று அங்கீகரிக்கப்பட்டவர்களிடையே எவ்விதப் பாகுபாடும் கிடையாது. அதற்குள் இருக்கிற ஒவ்வொருவரும் பிறருக்கு உள்ளதைப் போன்றே அனைத்து உரிமைகளிலும் சரி சமமானவர்கள் என்று சமூகக் குழு அங்கீகரிக்கிறது...

...உறவுமுறை என்பது, இன்று தாழ்த்தப்பட்டவர்கள் தன்னந்தனியாக அனுபவிக்க வேண்டியுள்ள இந்துக்களின் கொடுங்கோன்மையையும் ஒடுக்குமுறைகளையும் சந்திப்பதற்காக உறவுமுறைப்பட்ட சமூகக் குழுவின் ஆதரவைப் பெற துணைபுரிகிறது. மற்றொரு சமூகக் குழுவுடன் உறவு என்பது சிறந்த பாதுகாப்பாகும். தாழ்த்தப்பட்டவர்கள் இந்து கொடுங்கோன்மை மற்றும் இந்து ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

உறவுமுறை என்பதன் பொருள் என்ன, அது என்ன செய்கிறது என்று மேலே தரப்பட்டுள்ள விளக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் எவரொருவரும் இக்கருத்துரையை ஏற்றுக் கொள்ளுவதற்கு எவ்விதச் சிரமமும் இருக்காது. அதாவது, தாழ்த்தப்பட்டவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கு முடிவு கட்ட வேண்டுமென்றால், சாதியை அங்கீகரிக்காத மற்றொரு சமூகக் குழுவுடன் சேர்ந்தாக வேண்டும் என்பதே அந்தக் கருத்துரை.

உறவுமுறை என்பது தனிமைப்படுத்துதலுக்கு நேர் எதிரானது. மற்றொரு சமூகக் குழுவுடன் தாழ்த்தப்பட்டவர்கள் உறவுமுறையை நிறுவிக் கொள்வது என்பது, தங்களுடைய தற்போதைய தனிமைபடுத்தலுக்கு முடிவு கட்டுவது என்பதையே குறிக்கும். அவர்கள் இந்துக்களாக இருக்கும் வரை, அவர்களுடைய தனிமைப்படுத்துதல் என்பது ஒருபோதும் முடிவடையாது. இந்துக்கள் என்ற முறையில் அவர்களுடைய தனிமைப்படுத்துதலானது, அவர்களை முன்னாலும் தாக்குகிறது; பின்னாலும் தாக்குகிறது.

அவர்கள் இந்துக்கள் என்றபோதிலும்கூட அவர்கள் முஸ்லிம் மக்களிடம் இருந்தும், கிறித்துவர்களிடம் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனென்றால், இந்துக்கள் என்ற முறையில் அவர்கள் இந்துக்களுக்கும் அதைப் போன்றே இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் அந்நியமானவராகி விடுகின்றனர். இந்தத் தனிமைப்படுத்துதலுக்கு முடிவு கட்ட ஒரேயொரு வழிதான் உள்ளது. இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. இந்து அல்லாத ஏதாவதொரு சமூகக் குழுவுடன் இணைந்து அதனுடைய உறவுமுறையாக ஆகிவிடுவது என்பதுதான் அந்த வழி.

தனிமைப்படுத்தப்படுதல் என்பதன் சாதகமற்ற தன்மைகளையும், உறவுமுறை என்பதன் சாதகத் தன்மைகளையும் புரிந்துள்ள அனைவரும் இந்த முயற்சி ஒரு பொருளற்ற முயற்சி அல்ல என்பதை ஏற்றுக் கொள்வர். தனிமைப்படுத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? தனிமைப்படுத்தப்படுதல் என்பது, சமூக இன ஒதுக்கல், சமூக அவமரியாதை, சமூக பாரபட்சம் மற்றும் சமூக அநீதி என்றே பொருள் படும்.

– தொடரும்

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 414)

Pin It