தீண்டத்தகாத ஒருவர் ஓர் இந்துவின் கழுத்தை வெட்ட மாட்டார். ஆனால், தான் தீண்டத்தகாதவர் என்றும், அவ்வாறு இருப்பது சரியே என்றும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க சம்மதிப்பார் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. இந்து மதத்தில் இருந்து கொண்டு, இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் தரும் அளவுக்கு தீண்டத்தகாத மக்களின் "ஆன்மா' செத்துப் போய்விடவில்லை. இந்து மதக் கோட்பாடுகள் தீண்டத்தகாதவர்களுடைய சுயமரியாதைக்கும், கவுரவத்திற்கும் முரணானவை; தீண்டத்தகாதவர்கள் மற்றொரு கண்ணியமான மதத்துக்கு மாறிக்கொள்வதை நியாயப்படுத்துவதற்கான பலமான ஆதாரம் இது.

மத மாற்றம் என்பது தர்க்க ரீதியாக மறுக்கப்பட முடியாதது என்றபோதிலும், மத மாற்றத்தின் எதிர்ப்பாளர்கள் இத்துடன் நிறைவடைந்துவிடாதிருக்க உறுதி பூண்டிருக்கிறார்கள்; மேற்கொண்டும் கேள்விகள் கேட்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். கேள்வி கேட்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஏனென்றால், தங்களின் கேள்விகள் பலமான, பதிலளிக்க முடியாதவை என்று அவர்கள் கருதுகிறார்கள். மதம் மாறுவதன் மூலம் பொருளாதார ரீதியில், தாழ்த்தப்பட்ட மக்கள் அப்படி என்ன ஆதாயம் பெற்றுவிடப் போகிறார்கள்? இதுதான் அந்தக் கேள்வி. இந்தக் கேள்வி பலமான கேள்வியே அல்ல. இதற்கு பதிலளிப்பது எளிது. மதமாற்றம் என்பதை பொருளாதார ஆதாயத்துக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வது, தீண்டத்தகாதவர்களின் நோக்கமும் அல்ல. தீண்டத்தகாத மக்கள் மதமாற்றத்தின் மூலம் செல்வத்தை அடைய முடியாது என்பதே உண்மை.

அதே நேரத்தில், இது அவர்களுக்கு எத்தகைய இழப்பையும் ஏற்படுத்திவிடாது. ஏனென்றால், அவர்கள் இந்துக்களாக இருக்கும்வரை – ஏழையாகவே இருக்கும்படி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் ரீதியாகப் பார்த்தால், தீண்டத்தகாத மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் உரிமைகளை இழக்க நேரிடும். எனினும், இது உண்மையான இழப்பு அல்ல. எவ்வாறென்றால், மதமாற்றம் மூலம் அவர்கள் இணையக்கூடிய சமூகத்திற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள அரசியல் உரிமைகளின் நலன் அவர்களுக்கு கிடைக்கும். அரசியல் ரீதியாகப் பார்த்தால் லாபமும் இல்லை; இழப்பும் இல்லை. சமூக ரீதியாகப் பார்த்தால் தீண்டத்தகாத மக்கள் முற்றிலும் பயன் பெறுவார்கள்; ஏராளமான பலன் பெறுவார்கள்.

எவ்வாறென்றால், தீண்டத்தகாத மக்கள், தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப் போகும் மதம், வாழ்க்கையின் அனைத்து மதிப்புகளையும் பொதுமைப்படுத்தியுள்ள, சமத்துவமாக்கியுள்ள மதம். இதன் மூலம் அவர்களுக்கு இந்தப் பலன் கிடைக்கும். இந்து மதத்தின் பிடியில் அவர்கள் இருக்கும்வரை, இத்தகையதொரு நன்மையை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

இவ்வாறு நாம் முழுமையாக, திட்டவட்டமாக பதிலளித்து விட்டோம். எனினும், பதில் சுருக்கமாக இருப்பது மதமாற்ற எதிர்ப்பாளர்களுக்கு நிறைவளிக்காது. தீண்டத்தகாதவர்களுக்கு மூன்று விஷயங்கள் தேவைப்படுகின்றன. முதலில் அவர் களுக்கு தேவைப்படுவது, அவர்களுடைய சமூகத் தனிமைப்படுத்துதலுக்கு முடிவு கட்டியாக வேண்டும். அவர்களுக்கு தேவைப்படும் இரண்டாவது விஷயம், அவர்களுடைய தாழ்வு மனப்பான்மைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். மதமாற்றம் என்பது அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுமா? மதமாற்றத்தின் ஆதரவாளர்களின் வாதத்தில் அத்தனை வலுவில்லை என்று, மதமாற்றத்தை எதிர்ப்பவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் அவர்கள் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

உண்மையில் மதமாற்றத்திற்கு ஆதரவான காரணம், வலுவினும் வலுவானதாகவே இருக்கிறது. இருப்பினும், இந்தத் தெள்ளத் தெளிவான, கண்கண்ட உண்மையை நிலைநாட்டுவதற்கு சில நீண்ட வாதங்களை முன்வைக்க வேண்டியிருக்கிறது. எனவே, அனைத்து அய்யப்பõடுகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்பதால், இந்தப் பணியை மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனியாக அலசுவோம்.

தீண்டத்தகாத மக்கள், தங்களுடைய சமூகம் தனிமைப்படுத்தப்படுவதற்கு எவ்வாறு முடிவு கட்ட முடியும்? தங்களுடைய சமூகம் தனிமைப்படுத்தப்படுவதற்கு ஒரு முடிவுகட்ட, தீண்டத்தகாத மக்களுக்கு உள்ள ஒரேயொரு வழி சாதிய உணர்விலிருந்து விடுபட்டு, இருக்கிற மற்றொரு சமூகத்துடன் உறவு கொண்டு, அதிலேயே கலந்து விடுவது என்பதுதான். இந்த விடையானது மிகவும் எளிதானது என்றபோதிலும், அதனுடைய செல்லுபடியாகும் தன்மையை இன்னும் பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. உறவு என்பதன் மதிப்பையும், முக்கியத்துவத்தையும் ஒரு சிலரே உணர்ந்து உள்ளனர் என்பதே இதற்குக் காரணம். எவ்வாறு இருந்த போதிலும் அதனுடைய மதிப்பும், முக்கியத்துவமும் மிகவும் மகத்தானவை ஆகும்.

– தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 412

Pin It